@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

கருத்தூண்

Sunday, September 11, 2005

நான் ஒரு புதினம்......

என் வீட்டு மாட்டுக்கும்
தன் மானம் பெரிது
கழுநீர் என்றாலும்
தன் வீட்டுத் தண்ணீரே குடிப்பதாய்.....

என் வீட்டு நாய்க்கும்
பண்பு அதிகம்
படலை திறந்தாலும்
பக்கத்து வீட்டுள் நுழைவதில்லையென்று.....

என் வீட்டுத் திண்ணைக்கும்
அத்தனை பெருமிதம்
இன்முகங் காட்டி
இருப்பதைக் கொடுத்து உபசரிப்பதாய்......

என் எழுதுகோலுக்கும்
சற்றே தலைக்கனம்
நல்லதை மட்டுமே
தான் எப்போதும் பேசுவதாய்........

போகுமிடமெல்லாம்
என்னுடன் மிதிபடும்
என் செருப்புக்கும் கூட
கர்வம் அதிகம்
மதியாதார் முற்றம் தானும் மிதிப்பதில்லையென......

என் மனைவிக்கும் கூட
நான் ஒரு புதினம்
பிழைக்க தெரியாதவன் என்று.....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

உயிர்க் கூடொன்றுள் உறுதியாய் ஒரு வீடு

அவளுக்குள் இருக்கும்
அந்த வீடு
அப்பனின் சீதனமோ
ஆத்தாளின் முதுசமோ அன்று
அது......
அவளே அவளுக்காய்
அவளே கட்டியது.
அழகு நிறைந்தது
அளவில் பெரியது
எனினும்.....
எளிமையானது
எவரையும் ஈர்ப்பது.



மெத்தப் படித்தவர்
மேதினிக்காகாதவர்
செப்படி வித்தையில்
தேர்ந்த விற்பன்னர்
திரிசங்கு சொர்க்கமாய்
தினமும் திரிபவர்
ஏட்டுப் படிப்பதில்
கோட்டை விட்டவர்

ஏனென்று கேட்கவும்
நாதியற்றவர்
அத்தனை பேரும்
எத்தனமின்றி
எப்போதும் நுழைய
ஏற்றத் தாழ்வின்றி
எவருடனும் அமர
அன்பெனும் தேனீர்
அளவின்றி அருந்த
அறிவெனும் அமுதை
தெளிவுடன் புசிக்க
அளவறிந்து பழக
ஆறுதலாய் உரையாட
அளவில் பெரிதாய்
வரவேற்கும் அறையொன்று.



சம்பாசனைச் சந்தையில்
சகஜமாய் கிடைக்கும்
சங்கதி அனைத்தையும்
தனியனாய் தரம் பிரித்து
வேண்டியது எடுத்து
வேண்டாதது தவிர்த்து
அழுகல் நீக்கி
அழுக்கைத் துடைத்து
அறுசுவை உணவாக்கி
அடுத்தவருக்குக் கொடுக்க
அழகாய், அடக்கமாய்
அடுக்களையும் அதற்குண்டு.



அவனும் அவளும்
அவர்களின் வாரிசும்
அடுத்தவர் இடைஞ்சலின்றி
அமைதியாய் பள்ளிகொள்ள
குடும்ப உலகமதில்
குது}கலமாய் விளையாட
நாளுபேர் அறியாமல்
நாலும் கதைக்க
தொந்தரவின்றி
அந்தரங்கம் பேச
பள்ளியறை யொன்றும்
பாங்காய் அதற்குண்டு.



அடுத்தவர் அறியாமல்
அடிக்கடி வந்துபோக
தனிமையில் தன்னை
கூறுபோட்டு ஆராய
அறிந்தவர் கருத்தனைத்தும்
ஆழமுடன் பகுத்துணர
கற்பனை வானில்
களிப்புடன் சிறகசைக்க
அவளுக்கே அவளுக்கென
அந்தரங்க அறையொன்று
அடக்கமாய் அதற்குண்டு.



அப்பனின் ஆக்கிரமிப்பில்
ஆத்தாளின் அறிவீனத்தில்
அடுத்துப் பிறந்தவரின்
அசண்டையீனத்தில்
தேடுவாரின்றி
தினந்தினம் வரண்டு
காரைக்கும் நெருஞ்சிக்கும்
தொட்டவுடன் முகஞ்சுருக்கும்
தொட்டாற் சுருங்கிக்கும்
கட்டின்றி உள்நுழையும்
கட்டாக் காலிகளுக்கும்
களமாய் இருந்த
அவளது நிலத்தில்
இப்படி வீடெழுப்ப
எப்படி முடிந்ததோ...?



கட்டற்ற காணிக்கு
பட்டறிவால் வேலியிட்டு
கண்டவரும் நுழையாமல்
கண்ணியத்தால் கதவுசெய்து
முற்போக்குத் தனத்தால்
முட்கள் அகற்றி
தன் மான உணர்வே
நல் உரமாக
கண்ணுங் கருத்துமாய்
மண்ணைப் பண்படுத்தி
பக்குவமாய் அதை
பசுந் தோட்டமாக்கி
அறிவு வேட்டையில்
அங்கங்கே கிடைத்ததெல்லாம்
அடித்தளமாய் அமைய
வாழ்க்கைப் பாதையில்
விழுத்திய கற்களெல்லாம்
கற்சுவராய் எழும்ப
தன்னம்பிக்கையால் ஒரு
வன் கூரையிட்டு
இத்தனை உறுதியாய்
இல்லம் எழுப்பிவிட்டாள்.



தன்னினிய தாய் மண்ணை
அன்னியனின் கணைகள்
சன்னமாய் துளைத்தபோதும்
அங்கத்தை இழந்துவிட்டு
அவலத்தை சுமந்தபோதும்
தளராது நின்று
இத்தனை உறுதியாய்
தன் வீட்டைக் காத்த அவள்
இப்போதும் கூட
சக்குப் பிடிதத்து வரும்
சமுதாய சகதிதனில்
சரிந்து விடுமோ....?
வக்கிர மனங்களின்
துக்கிரிப் போக்கினால்
ஆட்டங் காணுமோவென
நித்தங் கலங்கி
கண்ணும் கருத்துமாய்
காக்கும் பணியதில்
நாளும் பொழுதும்
வாழ்வே அதுவாக.......

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஏக்கமும் தாக்கமும்-----

பக்கத்து வீட்டு எலுமிச்சை மரத்திற்கும்
எனக்கும் வயது பத்துக்குள் தான்.
மினுமினுத்த மேனியும் மேதகு வாழ்வுமாய்
அதுவோ வீட்டின் முற்றத்தில்……
குட்டை சொறியுடன் கோலங்கெட்டு
நானோ ஒதுக்குப் புறத்தில்…….
வேலி ஓட்டைக்குள் தினமும் அதைப் பார்த்து
பொங்கும் என் மனது -
அதனுடன் உறவாட அதுவாகவே நானாக
ஏங்கும் பல பொழுது -

வேண்டும் போது பசிதீர்க்க
விரும்பும் போது தாகந் தணிக்க
வட்டில் பாத்தி தனில்
வளமாய் உணவு
நிதமும் தயாராக…..
சிந்தாமல் சிதறாமல்
அடுத்தவர் தீண்டாமல்
கதியால் கூடொன்றோ
மிகவும் கவனமாக…..

காதல் து}துக்கு
எறும்புத் து}தர்களை
எளிதாய் வரவழைக்க
சக்கைத் தேங்காய்ப் ப10
குளியல் இடையிடையே
வந்த து}தர்
தங்கி ஓய்வெடுக்க
மட்டை மாளிகைகள் அங்கங்கே

நான் மட்டும் இங்கு
உணவளிக்க யாருமின்றி
அரவணைப்புக்கு தினமேங்கி
விதைத்து மட்டும் விட்டுவிட்டு
விட்டேற்றியாக
விலகும் மனத்திடம்
விடியலைத் தேடி….

அடுத்த வீட்டு வாய்க்கால்
பல பொழுது மனமிரங்கித்
தன் வரம்பை மீறி
என் தாகம் தணிக்கும்
வானம் சிலசமயம்
குமுறிக் கொந்தளித்து
எனக்காக விடுங் கண்ணீர்
எனக்குத் தெம்ப10ட்டும்.
தெம்படையும் போதெல்லாம்
பக்கத்து வேலியால்
எட்டியே நிதம் பார்ப்பேன்
நித்தமும் மனங் குமைவேன்.
விதைப்புடன் நின்றுவிட்டு
விளைச்சலுக்காக மட்டும்
வெறித்து வெறித்து நோக்கும்
ஈரமற்ற இதயங் கண்டு
வெட்கித் தலைகுனிவேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, August 31, 2005

சனசமூக நிலைய நூலகங்கள்: சமூக மேம்பாட்டின் குவி மையங்கள் - 3

எப்படித் தொடங்குவது?

சமூக மேம்பாட்டை எப்படித் தொடங்குவது என்ற வினா எழுப்பப்படும் போது
மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்
இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை
புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்


என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் அர்த்தம் பொதிந்த வரிகள் இங்கு உயிர் பெறுகின்றன.

சிதைந்துகொண்டு போகும் மனிதப் பண்பை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டினூடாக ஒரு பொருட்துறை பற்றி ஒரு மனிதன் மூளையில் பதிந்து வைத்திருக்கின்ற அல்லது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் பொருட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற தகவலும் அது தொடர்பான புரிதலும் அறிவு எனப்படுகிறது. இந்த அறிவை அடக்கிக்கொண்டிருப்பவை நூல்கள். ஒரு நூலானது கல்வியறிவு தந்து நடைமுறைநிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து, பொருளாதாரத்தை வளர்த்து கலாச்சாரத்தைக் காக்கும் செயற்பண்புகள் கொண்டது என்கிறார் இந்திய நூலகவியல் விற்பன்னர் வே. தில்லைநாயகம். ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் தகவலைத் தருபவை, மன ஆறுதலைக் கொடுப்பவை, புத்துயிர்ப்பூட்டுபவை, அறிவைத் தருபவை என பலதரப்பட்டவையாக அமைகின்றன. இவை அனைத்தும் களிமண் பதிவுகள் முதற் கொண்டு இன்றைய கணினிப் பதிவுகள் வரை மனித வரலாற்றுக் கட்டங்களில் பல வளர்ச்சிப் போக்குகளைச் சந்தித்திருக்கினறமையை நூலகங்களில் குவிந்து கிடக்கும் தகவல் சாதனங்கள் மூலம் கண்டு கொள்ள முடியும்.

நூல்கள் இருக்கும் இடம் நூலகம். நூலகங்களை அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் கல்வி சார் நூலகங்கள் பொது நூலகங்கள் சிறப்பு நூலகங்கள் என மூன்று பெரும் பிரிவாக வகைப்படுத்த முடியும். இவற்றில் பொது நூலகங்கள் மக்களால் மக்களுக்காக மக்களே முன்னின்று நடத்துவது பொது நூலகம் எனப்படுகிறது. எமது சமூகத்தில் பொது நூலகப் பணியை மேற் கொள்வதில் மாநகர சபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள் கிராம நூலகங்கள் சனசமூக நிலைய நூலகங்கள் என்பன உள்ளடங்குகின்றன.மாநகரசபை பிரதேசசபை நூலகங்களின் பரப்பெல்லை விரிவடைந்ததன் காரணமாக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயனபடுத்தக்கூடியவகையில்; ஒழுங்கமைப்பதற்கு மிகப் பொருத்;தமான இடம் சனசமூக நிலையங்களினால் உருவாக்கப்படும் நூலகங்களாகவே இருக்க முடியும். எனவே சனசமூக நிலையம் ஒன்றின் நூலக உருவாக்கமானது அறிவு பரப்பும் மிகச் சிறந்த சாதனமாக இருக்கக்கூடிய வாய்ப்புண்டு. இந்த அறிவை பாடசாலைகள் வழங்கமுடியாதா என்ற கேள்வி எழுகிறது.

பாடசாலைகளும் சனசமூக நிலையங்களும்.

கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். கல்வி என்பது உயர்குடியினருக்கு மட்டுமே சொந்தமானது என்ற காலகட்டத்தில் ஆரம்பித்த குரு குலக்கல்வி முறையிலிருந்து தொடங்கி அனைவருக்கும் கல்வி என்ற கோஷம் முன்வைக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்த நிறுவனமயப்பட்ட கல்வி முறையில் நடை பயின்று குழந்தை மையக்கல்வி என்ற கருத்து நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூக மையக் கல்வியில் கல்விச் சிந்தனைகள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ள இன்றைய கால கட்டத்தில் மனிதனை மனிதனாக உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனை உடல் உள்ளம் ஆன்மா என்பவற்றின் சிறப்பு மிக்க பண்புகளை வெளிக் கொணர உதவுவது கல்வி என்ற காந்தியின் சிநதனை போன்ற பலதரப்பட்ட உயர் சிந்தனைகளையும், தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உன்மையான பயனபாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவறறை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்நோம்.

போட்டி மிக்க தொழில் சநதையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டிபோடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளை பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித்திட்டங்கள் அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் சமூக மையக்கல்விக்குரிய மையத் தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்திய மற்றதொன்றாகும். மாறாக தொழில் நோக்கம் உச்சநிலையடைந்து நாம் என்ற உணர்ச்சிக்குப் பதில் நான் என்ற உணர்வு மனிதனுக்குள் வேரோடி தான் பிறந்த தவழ்ந்த ஓடித்திரிந்த மண்ணையே மறந்து விடும் இயல்பையே நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

மனித வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பம் சுற்றுப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேளே கழிகிறது. ஷகுழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லைஷ எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பம்மும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கை தெளிவாகக் காட்டப் போதுமானது. எனவே இவற்றுக்குள் இருந்து உருவாக்கப்படும் சன சமூக நிலையங்கள் சமூக மேம்பாட்டின் அடித்தளங்களாக உருவாக்கப்பட வேண்டியதன அவசியம் பற்றிய கருத்துமுரண்பாட்டிக்கு வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும்.. அறிவுத் தேடல் இங்கிருந்து தொடங்கவேண்டும். பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்து அமைவதே பொருத்தமானது. பாடசாலைக்கு செல்வதற்கு முன்னுள்ள குழந்தைப் பருவத்தின் ஆராய்வூக்கத்திற்கு களம் அமைத்து கொடுக்கக் கூடிய வாய்ப்பு சனசமூக நிலையங்களினால் நடத்தப்படும் பாலர்கல்வியும் சிறுவர் நூலகமும் சரியான முறையில் செயற்படுவதனூடாக அடையப்பட முடியும்.

நடைமுறை நிலை

தமது பலம் தமது முக்கியத்துவம் எத்தகையது என்பது தமக்கே தெரியாத நிலையில்; இன்றைய சனசமூக நிலையங்கள் இருப்தையே நாம் கண்கூடாகக் காண்கிறோம். பெரும்பாலான சனசமூக நிலையங்கள் ஓரிரு பத்திரகைகளை வாசிப்பதற்கான வாசிகசாலைகளாக மட்டுமே தமது பணியைக் குறுக்கி விடுகின்றன. சில சனசமூக நிலையங்கள் வாசிக சாலையுடன் பாலர் பாடசாலை விளையாட்டுக் கழகம் என்று ஓரளவிற்கு தமது பணியை விரிவுபடுத்தியிருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு சனசமூக நிலையங்கள் மட்டும் நூலகம் என்ற எண்ணக்கருவிற்கு ஓரளவுக்கு வடிவம் கொடுத்திருப்பதுடன் தற்போதைய தகவல் சமூகத்தின் இரு கண்கள் எனப்படுகின்ற கணனிப்பயிற்சி, ஆங்கிலக் கல்வி என்ற இரண்டையும் நோக்கி தமது பணிகளை விரிவுபடுத்தியிருக்கின்றன. நிதி பெறும் நோக்கத்துக்காக நூலகம் என்ற அமைப்மை உருவாக்கி அதனமூலம் பெற்றுக்கொண்ட நூல்களையே அலுமாரிகளில் பூட்டி வைத்திருக்கும் சனசமூக நிலையங்களையும் இங்கு மறந்துவிட முடியாது.

.வாசிக சாலை என்பது மிக ஆழமான உட்பொருளைக் கொண்ட ஒரு சொற்பதம் என்பதை உணர்ந்து கொள்ளாமலேயே சனசமூக நிலையங்களில் பெரும்பாலானவை வாசிக சாலை என்ற பெயராலேயே இன்றும் இனங்காணப்படுகின்றன. வாசிப்பு மனிதனைப் பூரண மனிதனாக்குகிறது என்ற புகழ்மிக்க வாசகத்தின் உட்பொருள் எதுவோ அந்த உட்பொருளைத் தருவதே வாசிகசாலையாகும். ஆனால் நடைமுறையில் நாம் காணும் வாசிக சாலைகள் ஓரிரு புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் இடமாகவே இன்றும் இருக்கின்றன. எவ்வளவுதான் கல்வியறிவு வீதத்தில் உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக எமது சமூகம் இருப்பினும் எம்மிடையே வாசிப்புப் பழக்கம் என்பது மிக மிகக் குறைவு. இது எமது எண்ணங்களைக் குறுக்கி எம்மிடையே நான் என்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது. இதுவே சமூக மேம்பாட்டின் தடைக்கல்லாகவும் அமைந்து விடுகிறது. சனசமூக நிலைய நூலகங்களினால் வழங்கப்படும் சேவைகளினூடாக ஷநாம்! என்ற உணர்வை தோற்றுவிக்க முடியும்.

கனவு மெய்ப்பட

எம்மவர் மத்தியில் நூலகம் என்பது ஏதோ நெருங்க முடியாத இடம், மேதாவிகள் பெரிய மனிதர்கள் மட்டுமே செல்லக்கூடிய இடம் என்ற உணர்வு உண்டு. அதேபோல் நூலகம் செல்வது வேலை மினைக்கேடு என்று எண்ணுபவர்களும் எம்மிடையே உள்ளனர். நூலகத்திற்கு விருமபிச் செல்பவர்களின் அறிவுத் தேடலை அப்படியே நசுக்கிவிடக்கூடியளவுக்கு சில நூலகர்களின் மனப்பாங்கு இருப்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும்.

நூல்கள்,வாசகர்,நூலகர் என்ற மூன்று கூறுகளும் ஒன்றுடன் ஒன்று சரிவர இணையும் போதே நூலகம் ஒன்றின் நோக்கமானது நிறைவேறுகிறது. இதில் நூலகர் என்பவரின் பங்கே பிரதான ஊக்கியாக செயறபட வேண்டும். நூலகத்தினால் வழங்கப்படக்கூடிய சேவைகளை இங்கு கணிசமானளவுக்கு பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். ஆனாலும் வாசிப்புப் பழக்கத்தை சமூக உறுப்பினர் அனைவரிடையேயும் ஏற்படுத்தலே எல்லாவற்றிலும் பிரதான பணியாகும்.இலாப நோக்கம் உள்ள நிறுவனம் ஒன்று தனது வாடிக்கையாளரை கவருவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் நூலகர் என்பவர் இலாபம் எதுவுமற்ற நூலக சேவையில் மேற்கொள்ளுவதன் மூலமே சமூக உறுப்பினரிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முடியும். கவர்ச்சியான நூலகக் கட்டிடமோ வசதியான நூலக தளபாடங்களோ, பெருந்தொகையான நூல்களோ இலகுவான நூலக ஒழுங்கமைப்போ வாசிப்புப் பழக்கமற்ற சமூகத்தில் பயனபாடற்றது. நூலகத்தை மக்கள் நாடாத ஒரு சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கு நூலகம் தான் மக்களை நோக்கி நகர வேண்டிய தேவை உருவாகிறது. களைத்து வழுந்து வேலையால் வரும் குடும்பத் தலைவன், குழந்தைகள் குடும்பம் என்று நாள் முழுவதும் போராடும் குடும்பத் தலைவி, ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க வகை தெரியாமல் திண்டாடும் முதியோர்களை நோக்கி நூலகமே நகர வேண்டும். ஓரு தடவை அவர்களுக்கு நூலுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறின் பின்னர் தாமாகவே அவர்கள் நூலகத்தை பயன்; படுத்தத் தொடங்கி விடுவர். ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதிக்கென சேவையாற்றும் சனசமூக நிலைய நூலகங்களுக்கு ஒவ்வொரு உறுப்பினரிடையேயும் தனிப்பட்ட தொடர்பைப் பேணும் வாய்ப்பு உண்டு.

நூலக சேவை பற்றிப் பேச்செடுத்தாலே முதலில் வருவது நிதிப்பற்றாக்குறை என்ற அம்சம் தான். தமது சமூகத்தை தாம் மேம்படுத்துவதற்கு சமூக உறுப்பினர்கள் தம்மில் தான் தங்கியிருக்கவேண்டுமேயன்றி அரசாங்கத்தையல்ல. சமூக உறுப்பினரின் உணர்புபூர்வமான பங்குபற்றுதலின்றி எந்த வொரு சமூக மேம்பாடும் சாத்தியமில்லை என்பதையே சமூக அபவிருத்திக்கு கோடிக்கணக்கில் செலவழி;த்துக் கொண்டிருக்கும் அரசோ அல்லது உதவி தரும் நிறுவனங்களோ கண்டுள்ள அனுபவபூர்வமான உண்மை.

நெருக்கடிக்குட்படும் மனிதர்களிடம் தான் மேம்பாடு தொடர்பான சிந்தனை உருப்பெறுவது இயல்பு என்பதையே வரலாறு எமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. வசதியான சூழல்கள் எப்போதுமே வலிமையான மனிதர்களை வளர்த்தெடுப்பதில்லை. அரசியல் சூழலோ பொருளாதாரச் சூழலோ எதற்குமே இது பொருந்தும்.

முற்றும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சனசமூக நிலைய நூலகங்கள்: சமூக மேம்பாட்டின் குவி மையங்கள் - 2

இன்றைய மனிதனும் சமூகமும்:

இன்றைய சமூகம் தகவல் சமூகம் எனப்படுகிறது. அறிவே ஆற்றல் என்ற கோஷம் முன்வைக்கப்பட்ட கைத்தொழில் சமூகத்திலிருந்து தகவலே ஆற்றல் என முழங்கும் தகவல் சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். குடும்பம், சுற்றுப்புற சமூகம், கிராமம் போன்றவற்றின் வரையறைகள் உலகக் கிராமம் என்ற கருத்து நிலைக்குள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. உலகின் வேகத்தோடு ஒட்டி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு இருப்பதால் பம்பர வேகத்தில் சுழலும் இன்றைய உலகில் மனிதனின் உதடுகள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை 'நேரமில்லை' என்பதே. நேரமில்லாத உலகில் தன்னுணர்வையும், சமூக உணர்வையும் தக்கவைப்பதற்கு பாரிய பிரயத்தனம் தேவை. சாதனைப் படிகளின் உச்சியில் நிற்கும் மனிதனால் மனிதன் தலையை நிமிர்த்தும் தடவைகளை விட அம்மனிதனால் உருவாக்கிவிடப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார ஏற்றத்தாழ்வுகளின் அபாயகரமான விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மனித சமூகத்தைப் பார்த்து மனிதன் தலைகுனியும் தடவைகள் அதிகமானவை.

அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றின் அடிப்படையில் உருவான குடும்பம் என்ற ஆதார நிறுவனம் இன்று அவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகிறது. தைரியம், பற்றுறுதி, பரந்த மனப்பாங்கு, பொதுநலப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு உதவும் விளையாட்டுக் குழுக்களுடன் குழந்தைகள் செலவிட்ட காலம் மாறி, தனியார் கல்வி நிலையங்களில் கூடுதலான நேரம் முடக்கப்பட எஞ்சியுள்ள நேரத்தில் கணனி விளையாட்டுக்களும், வியாபார ரீதியான வர்த்தக மையங்களும் முக்கியப்படுத்தப்படுவதனால் குழந்தைகளை பிரதான அங்கத்தவராக கொண்ட விளையாட்டுக்குழு என்ற வலுமிக்க ஆதார நிறுவனம் நகர்ப்புற சமூகங்களில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டு போகிறது. வாழ்க்கைப் படிப்பை புறந்தள்ளி ஏட்டுப்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்ற நிறுவனம், விரும்பத்தகாத மனவெழுச்சிகளை மனிதரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் தூண்டிவிடும் திரைப்பட ஊடகங்கள், நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்து செயற்பட நேரமற்ற பம்பர உலகில் தொகை ரீதியாகவும் தரரீதியாகவும் பெருத்துக்கொண்டு போகும் தகவல் வெள்ளத்துக்குள் நல்லதை, பொருத்தமானதை தெரிவு செய்வதற்கான நேரமோ, பொறுமையோ, அறிவோ அற்ற மனித சமூகம் இப்படி இன்றைய சமூகத்தின் எதிர்க்கணியப் போக்கை விவரித்துக்கொண்டே போகலாம்.

உலகம் கிராமமாக சுருங்கிவரும் இன்றைய காலத்தில் ஒவ்வொரு சமூகமும் தமது தனித்தன்மையை வெளிக்கொணர்வதற்கு தம்மாலான வகையில் முயற்சி செய்கின்றன. கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க, கூடி வாழ முற்பட்ட மனித சமூகம் இன்று மனிதர்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டிய தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வலியது மெலியதை நசுக்கும் என்ற இயற்கையின் விதி மனிதனுக்கு விதிவிலக்கானதொன்றல்ல. எனவே நசுக்கப்படும் சமூகம் தன்னை காத்துக்கொள்ளவும், தனித்தன்மையை பேணிக்கொள்ளவும் சமூக மேம்பாடு அவசியமானது


சமூக மேம்பாடு:

சமூக மேம்பாடு என்பது சமூகத்தின் நலனை மேம்படுத்தும் பொருட்டு சமூகத்தின் ஆதார நிறுவனமான குடும்பம் என்ற நிறுவனம் முழுமையான வளர்ச்சி பெறவும், குடும்பத்தின் உறுப்பினரான தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னிறைவும் திருப்தியும் பெறவும் வேண்டிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டது. தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை அறிவே. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட நிலபிரபுத்துவ சமூகமொன்றில் 'வரப்புயர' என்ற ஒற்றைச் சொல்லின் மூலமே சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழவுத்தொழிலின் அவசியத்தை அவ்வைக்கிழவி வெளிக்கொணர்ந்தது போன்று, தகவலை முதன்மையாகக் கொண்ட இன்றைய சமூகத்தில் 'அறிவுயர' என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தனி மனித அறிவு குடும்பத்தின் மேம்பாட்டையும்; குடும்ப உறுப்பினர்களது மேம்பாடு சுற்றுப்புறச் சமூகத்தின் மேம்பாடு; அதன் வழியில் சமூக மேம்பாட்டையும்; எவ்வாறு வளர்கக முடியும்; என்பதை வெளிக்கொணர முடியும். ;.எந்தவொரு சமூகமும். சமூக, பொருளாதார துறைகளில் முன்னேற வேண்டுமாயின் பிற நாடுகளில் தங்கியிருக்கும் நிலை மாறி நாட்டின் இயற்கை வளங்களும் மனித வளங்களும் பூரணமாகப் பயனபடுத்தப்பட வேண்டும் பொது மக்களின் நலனையும் வளர்ச்சியையும் அதிகரிக்க உதவும் வகையில் அவ்வளங்களை பயனபடுத்தி அதிக பொருட்களை உற்பத்தி செய்வதும் சிறந்த சேவையை அளிப்பதுமே அபிவிருத்தியின் முக்கிய நோக்கமாகும். எந்தவொரு அபவிருத்தி முயற்சியின் இலக்கு மனிதனே. அபவிருத்திக்கான கருவியும் மனிதனே. அபிவிருத்தியின் கர்த்தாவும் மனிதனே. மனிதனுக்காக மனிதனைக் கொண்டு மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே அபிவிருத்தியைத் தரும்.


எங்கிருந்து தொடங்கலாம்?

.சமூக மேம்பாட்டை எங்கிருந்து தொடங்கலாம் என்ற வினா எழுப்பப்படும்போது நாட்டு மக்களில் முக்கால் பகுதிக்கு அதிகமாக வசிப்பது கிராமங்களில்தான் என்பதற்கமைய கிராமம் தேசத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோலாக பொருளியல் வல்லுனர்கள் கண்டனர். ஆனால் உலகமயமாக்கல், நகரமயமாக்கல், போன்ற சிந்தனைகள் காரணமாக கிராமம் என்ற கருத்துநிலை மெல்ல மெல்ல தனது வரையறைகளை இழந்து வருவதும் கிராமமா நகரமா என்று தெளிவாக வரையறுக்க முடியாதபடி இரண்டும் கெட்டான் நிலையில் கிராமங்கள் இருப்பதும் இதன்காரணமாக பட்டின சபைகள், கிராம சபைகள் என்பன இல்லாமல் ஆக்கப்பட்டு இரண்டையும் இணைத்து பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருப்பதும் கிராமத்திலும் பார்க்க குறுகிய வரைவெல்லை ஒன்றினை அபிவிருத்திக்கான அளவுகோலாக தெரிவு செய்யவேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது.

கிராமங்களை முன்னேற்றுவதற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக சமூக பொருளாதார, கல்வி, சுகாதார, கலாச்சார அபிவிருத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றதெனினும் கிராம மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றல் இல்லாத எதுவுமே அபிவிருத்தியை கொண்டுவராது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக இவை காணப்படுவது கண்கூடு. இத்தகைய சங்கங்கள் உள்ளுர் சுய உதவியிலேயே பெரிதும் தங்கியிருப்பதும் சனசமூகநிலையங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய சபைகள், பெற்றோர் ஆசிரிய சங்கங்கள், சமய நிலையங்கள், மக்கள் சபைகள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டே கிராம அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியிருப்பதும், ஒரு கிராமமானது ஒன்றிற்கு மேற்பட்ட சுற்றுப்புற சமுதாயங்களை உள்ளடக்கியிருப்பதனால் இவர்களிடையே காணப்படும் சமூக பொருளாதார, கலாச்சார ஏற்றத்தாழ்வுகள் கிராம அபிவிருத்தி என்ற கருத்துநிலைக்கு சரியான பங்களிப்புச் செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே குடும்பத்திற்கு அடுத்ததாக சுற்றுப்புற சமுதாயத்தினின்றும் தோற்றம் பெறும் சனசமூக நிலையங்கள் கிராம அபிவிருத்திக்கான தள மையமாக உருவாக்கப்படக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

யார் தொடங்குவது.?

சமூக மேம்பாட்டில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழமையான சமுதாய ஈடுபாட்டின் மூலமே முழமையான சமுதாய உயர்வு ஏற்பட முடியும். சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இளைஞருக்கும் வயது வந்தோருக்கும் பாரி பங்குண்டு. வருங்கால சமூகத்தைத் தாங்கப்போகும் இன்றைய குழந்தைகளின் ஆராய்வூக்கத்துக்கு களமமைத்துக் கொடுத்தல், இறுதிக் காலத்தை அமைதியாக கழிக்க விரும்புகின்ற முதியோர்களின் ஓய்வு நேரத்தைப பயனள்ளதாக்கல், இயறகை செயற்கைக் காரணிகளின் தாக்கத்தால் உடல் உளத் தாக்கமுற்ற சமூக உறுப்பினர்களை அரவணைத்துக் காத்தல், எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு சமூக உறுப்பினரிடையேயும் நாம் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதனூடாக சமூகத்தில் தனது பங்கு பற்றிய சிந்தனையை உருவாக்குதல் போன்ற பாரிய பணிகளை ஏற்று நடத்தும் பொறுப்பு சமூகத்தின் இளைய தலைமுறையிடமும் வயது வந்தவர்களிடமுமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது பொதிந்த. செயலூக்கமும் உற்சாகமும் எதையும் கேள்விக்குட்படுத்தும் அறிவு வேட்கையும் மிக்க இளைஞர் சமுதாயத்தின் ஒத்துழைப்பும், பொறுமையும் அனுபவ அறிவும் நிரம்ப்பெற்ற வயது வந்தோர்களின் ஒத்துழைப்பும் சரியான வகையில் ஒன்றணையும் போதே சமூகத்தின் எந்த வொரு நோக்கமும் செயலுருப்பெறும் வாய்ப்பு உண்டாகிறது. இவ் வாய்பபை கொண்டுள்ள ஒரேயொரு அமைப்பு சனசமூகநிலையமாகவே அமைய முடியும்.

தொடரும்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சனசமூக நிலைய நூலகங்கள்: சமூக மேம்பாட்டின் குவி மையங்கள் - 1

மனிதன்:

இயற்கை என்னும் பரந்த விளைநிலத்தில் உருவாகி, இயற்கையுடன் இசைந்து போகவும், தனது பகுத்தறிவின் துணைகொண்டு சிலசமயம் இயற்கையைத் தனக்கு இசைவாக்கவும் ஆற்றல் பெற்ற இனம் என்ற வகையில் இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்குள் உயர்வான ஓர் உயிரி. இயற்கையின் ஆற்றல்களுக்கு எல்லை காணமுடியாதது போன்றே மனிதனது ஆற்றல்களுக்;கும் எல்லை காணமுடியாது என்பதை நித்தமும் உணர்த்திக்கொண்டிருப்பவன். அன்பு, இரக்கம், கருணை, பாசம், காதல், ஈடுபாடு, மரியாதை, பக்தி போன்ற உயரிய மனிதப் பண்புகளை தன்னகத்தே கொண்டமையால் மனிதன் என அழைக்கப்படுபவன். அதேசமயம் ஏமாற்றங்களின்பாற்பட்டு கோபம், வெறுப்பு, குரோதம் போன்ற எதிர்மறைப் பெறுமானங்களுக்கு இலகுவாக ஆட்படக்கூடியவன். சிறு முகமலர்ச்சியில் கண்களின் பாவத்தில், இலேசான தலையசைப்பில்கூட தனது உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தத் தெரிந்தவன். கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை என புலன்களால் பெற்ற அறிவை புலனுக்கு புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றல் பெற்றவன் என்பதால் மனிதனுக்கு நிகர் மனிதனே. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு.

சமூகம்:

மனிதன் தனித்து இயங்கமுடியாத ஒரு சமூகப் பிராணி. அவனது தேவைகள் வரையறுக்கப்பட முடியாதளவுக்கு எண்ணிறைந்தவை. மேடும் பள்ளமும், கற்களும் முட்களும், வெளிச்சமும் இருட்டும் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் தனித்து நடைபோடும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. சூழலுக்கு தன்னை சரிசெய்து கொள்ளாத எதுவுமே நிலைகொள்வது கடினம் என்பதை உணர்ந்து, அதற்கமையக் கூடி வாழும் பண்பு கொண்டவன். தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு பலரையும் நாடவேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு ஏற்படும்போது அது மனித சமூகத்தின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கின்றது. தன்னைச் சுற்றியுள்ளவைகள் மீதான அவதானிப்புகளும், அவ் அவதானிப்புகளைப் பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காணமுயலும் மனித மூளையின் ஆற்றலுமே மனிதகுல வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பதனால் சமூகம் என்பது தனிமனிதனுக்கும் முற்பட்டது. 'ஒருவருடன் ஒருவர் கலந்து, இணைந்து எல்லோருக்கும் பொதுவான சில நோக்கங்களை அடைவதற்காக கூடிச் செயற்படும் பல மனிதர்களின் கூட்டே சமூகம்' என்கிறார் கிட்டிங்ஸ்ஜபுனைனiபௌஸ என்ற அறிஞர். ஷபாதுகாப்பு, புதிய அனுபவங்களைப் பெறல், பிறரது தூண்டல்களுக்கு ஏற்ப நடத்தல், பிறர் தம்மைப்போல் ஒருவராக எம்மை ஏற்றுக்கொள்ளல் ஆகிய நான்கு ஊக்கிகளே சமூகத் தொடர்புகளுக்கு அடிப்படைஷ என்கிறார் தோமஸ் என்ற அறிஞர். ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கும் சமூகம் இன்றியமையாதது. உணவு, உடை, உறையுள் போன்ற உடல் தேவைகளும், அன்பு போன்ற உளத்தேவைகளும், பாதுகாப்பு, பொழுதுபோக்கு போன்ற சமூகத் தேவைகளும் நிறைவு பெறுவதற்கு சமூக வாழக்கை மனிதனுக்கு அவசியமானது.


மனிதனும் சமூகமும்:

ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே மனிதனின் முன்னேற்றம் தங்கியுள்ளது. அதேசமயம் தனித்தன்மை மிக்க மனிதர்கள் இன்றி சமூகம் வேரூன்றி நிலைத்து நிற்கமுடியாது. தனிமனித வளர்ச்சியை சமூக முன்னேற்றத்தினின்றும் பிரிக்கமுடியாதளவுக்கு அவை நெருங்கிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனவே மனிதனின்றி சமூகமில்லை. சமூகமின்றி மனிதப் பண்புள்ள மனிதன் இல்லை.

சமூகமும் பண்பாடும்:

மனிதனது குழு வாழ்க்கையினின்றும் எழுவது பண்பாடு. எனவே சமூகம் என்பது பண்பாடு இன்றி நிலைகொள்ள முடியாதது. ஷஎந்தவொரு மக்கள் குழுவிலும் உள்ள மக்களினதும் வாழ்க்கை முறை, பழகும் விதம், ஏனைய மக்கள் குழுவுடன் பழகும் தன்மை, அவர்களின் மொழி, எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அம் மொழியைப் பயன்படுத்தும் விதம், பொருட்கள் கருவிகளை உருவாக்கும் முறை, அவற்றைப் பயன்படுத்தும் முறை, அவர்களின் சிந்தனைகள் அனைத்துமே பண்பாடு என்பதற்குள் உள்ளடங்கும்! என்கிறார் போல் சியர்ஸ் என்ற அறிஞர்.
பண்பாடு உயிர்வாழ்வதற்கு பின்வரும் மூன்று அம்சங்களுக்கிடையில் இசைவுத்தன்மை அவசியமாகும்

1. கற்கோடரி முதற் கொண்டு இன்றைய கணினி வரை மனிதனால் உருவாக்கப்பட்ட பௌதிக உபகரணங்கள். பண்பாட்டின் முதிர்ச்சியானது இவ் உபகரணங்களின் பரந்த பயனபாட்டினால் அளக்கப்படுகிறது. கருவிகள் வளர்வதற்கமைய அதனைப் பயன்படுத்துவதற்கான அறிவும் வளர வேண்டும்.

2. கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு கருவியும் எவ்வாறு, எந்தளவிற்கு, என்ன நோக்கத்துக்கு பயனபடுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக சமூக உறுப்பினர்களிடையே உருவாக்கப்படும் கோட்பாடுகள் நம்பிக்கைகள், அனுபவங்கள், கட்டுக்கதைகள், புனைகதைகள், கற்பனை உருவாக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த அறிவு என்னும் புலமைத்துவம். இந்த புலமைத்துவத்திலிருந்து பெறப்படுகின்ற தத்துவம் ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் தொடர்புபடுத்துவதுடன் உலகம் எங்கணும் தொடர்புபடுத்துகின்றது

3. .இவற்றை செயலுருப்படுத்துகின்ற, பண்பாட்டுக்கு யதார்த்தத்தைத் தருகின்ற சமூக நிறுவனங்கள். உபகரணங்களைப் பயனபடுத்துவதற்கு சமூக உறுப்பினர்களால் ஒன்று திரட்டப்பட்ட அறிவு என்னும் இந்த புலமைத்துவமே மக்களின் நடைமுறைகள் பழக்க வழக்கங்களாக உருவாகி நிறுவனங்களினூடாக செயலுருப் பெற்று சமூக நடத்தையாக உருவாகிறது. எந்தவொரு சமயத்திலும் இந்த புலமைத்துவமானது பௌதிக உபகரணங்களில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். சமூக நிறுவனங்களின் எல்லைப் பரப்பையும் வரையறுக்கும்.


மேற்கூறிய மூன்று அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று இசைந்து போவதன் மூலமே பண்பாடு என்பது உயிர் வாழ முடியும்.

சமூக நிறுவனங்கள்:

சமூகம் தனிமனிதர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டது எனினும் அது பலதரப்பட்ட நிறுவனங்களின் கட்டமைப்பாலானது. சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள் ,முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். மனிதரின் தேவையைப் பூர்த்தி செய்யவென மனிதரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்கள் இன்று சமூக உறுப்பினர்கள் மீது தமது விருப்பங்களை அமுல்படுத்துகின்ற ஒரு கருவியாக வளர்ந்தது மட்டுமன்றி, இவற்றில் சில தமது சமூகத்தின் பரப்பெல்லைக்கும் அப்பால் சென்று ஏனைய சமூகங்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு பாரிய சக்திகளாகவும் உருவெடுத்திருக்கின்றன.

சமூக நிறுவனங்களின் ஆதாரஜிசiஅயசலஸ நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே முழுக்க முழுக்க நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலைஜஐவெநசஅநனயைவநஸ நிலையங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலைஜளுநஉழனெயசலஸ நிலையங்கள் எனக் கூறப்படுகின்றன. மனித வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் இச் சமூக நிறுவனங்களின் செல்வாக்கு அளப்பரியதாகும். கருவறை தொடங்கி கல்லறைவரை ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச் சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச் சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.

சனசமூக நிலையங்கள்:

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருங்கிச் சேர்ந்து வசிக்கும் பல குடும்பங்கள் தமக்குள் எண்ணங்கள், குறிக்கோள்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், தொழில்கள் போன்ற ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ சில பொதுப் பண்புகளைக் கொண்டிருக்குமாயின் அது சுற்றுப்புறச் சமூகம் என்ற ஆதார நிறுவனமாக உருப்பெறுகிறது. இந்த ஆதார நிறுவனத்திலிருந்து சேவை மனப்பான்மை மிக்க உறுப்பினர் தமக்குள் ஒன்றுசேர்ந்து தமது மக்களுக்கு சேவை புரிவதற்கென உருவாக்கும் நிலையங்களே சனசமூக நிலையங்களாகும். மனிதர் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் தோழமை கொள்வதற்கும், ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தமக்குள் நேரடித் தொடர்பைப் பேணுகின்ற சிறிய எண்ணிக்கையுள்ள உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பே சனசமூக நிலையங்களாகும். இவை விவசாய சமுதாயங்களாகவோ, கடற்தொழிலை சிறப்பாகக் கொண்ட கடற்தொழில் சமுதாயங்களாகவோ அல்லது தொழிற்துறைச் சமுதாயங்களாகவோ இருக்க முடியும். மனித வாழ்வின் பெரும்பகுதி சுற்றப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழிகின்றது. மனிதப் பண்புகளை விருத்தி செய்யும் இத்தகைய ஆதார நிலையங்களை மனிதப்பண்புகளின் 'வளர்ப்புப் பண்ணைகள்' என சமூகவியலாளர் அழைக்கின்றனர்.

தொடரும்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 18, 2005

கடைத்தேற வழி எங்கே------?

ஆரம்பம் அதிவிஷேசம்;
மூன்று வருடங்கள்------- சமாதானத்துக்கான கதவு திறக்கப்பட்டு.-------- அகலத் திறந்தது என்னவோ ஏ 9 பாதை மட்டுமே. உலகின் அறிவியல் தொழினுட்ப வளர்ச்சி தொடர்பான அறிவு எதுவுமின்றி 15ம் நு}ற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரமையுடன் வன்னி வாழ் மக்கள். உலகின் வேகமும் விவேகமும் கண்ணுக்கு அப்பட்டமாகத் தெரிந்தும் என்ன--? தமிழனுக்குச் ~சகல விதத்திலும் ~ உதவி புரியவும் ஒத்தாசையாக இருக்கவும் அரசுக்கு விருப்பம். ஆனாலும் நினைத்ததையெல்லாம் அள்ளிக் கொண்டு வர ~இவன்கள்~ விடுகிறான்களில்லையே என்ற எரிச்சல், ஆவேசம், ஆத்திரம், குரோதம் யாழ் மக்களிடம்---- யாருடையதைக் கேட்பது ? யாருக்குக் கட்டுப்படுவது? என்ற இரண்டுங்கெட்டான் நிலையில் கிழக்கு வாழ் மக்கள்----. 2002 ஏப்ரலில் சமாதானத்தின் கதவுகள் திறந்ததாக நினைத்துக்கொண்டு ஏ 9 பாதை திறக்கும் வரை வடக்குக்கிழக்கின் யதார்த்தநிலை இதுதான்.

ஏ 9 பாதை திறந்ததும்------ யுத்தம் என்ற கொடிய அரக்கனின் கோரப்பிடிக்குள்ளிருந்து மீண்டு விட்ட நிம்மதி அனைத்து மனங்களிலும். எமதர்மனின் வாசற்கதவு இறுக்கி அடைக்கப்பட்டு விட்டது என்ற ஆசுவாசம் மக்களிடம்-----. அபிவிருத்திக்கான கதவு திறக்கப்பட்டுவிட்டதான மகிழ்வு பொருளாதார மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்களிடம்--- ஆய்வு முயற்சிகளுக்கான அடிப்படைகளைத் தரும் உலக ஆய்வுகள் இங்கு வந்திறங்குவதில் இனியென்ன தடை என்ற இறுமாப்பு ஆய்வாளர்களின் மனதில்---- எலி வளை என்றாலும் தனி வளையில் குடியிருக்கும் கனவு அப்பாக்களின் மனதில்--- வளவுத் தடியில் அடுப்பெரிக்கலாம், இளம் தேங்காய் துருவிக் குழல் பிட்டு அவிக்கலாம் என்ற பேராவல் அம்மாக்கள் மனதில்---- தம்மூர்ச் சுடலையிலேயே ஆறடி மண்ணைத் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற ஆறுதல் அப்பு ஆச்சிகளின் மனதில்--- உலகத்து இன்பங்கள் ஊர்க்கோடிக்குள் அனுபவிக்கலாம் என்ற குது}கலம் இளசுகள் மனதில்---- எமக்கு வேண்டியது கிடைக்கும் வரை எங்கிருந்தால் எமக்கென்ன என்று எதையுமே ஆழமாக யோசிக்காமல் சிறகடித்துத் திரியும் நிலையில் சின்னஞ்சிறுசுகள்; ;---

இன்று வரைக்கும் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், கொழும்பு, திருகோணமலை போன்ற பகுதிகளிலிருந்து இத்தகைய மனநிலைகளுடன் யாழ் மாவட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்தக்குள்ளேயே அடிக்கடி மாறி மாறிக் குடியிருக்கும் 16,000 குடும்பங்களும் இதற்குள் உள்ளடங்குவர்.

இன்றைய யாழ் நகர் --------

குடும்ப ரீதியில் பார்க்கும் போது, பக்கத்து வீட்டானைப்பார்த்து தமது வீட்டையும் மதிலையும் இடித்து இடித்துப் புதுப்புதுத் தினுசுகளில் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. வேலி போடுகின்றோமோ இல்லையோ புதிய விதமாக இரும்புக் கேற் போட்டேயாகவேண்டும் என விரதமிருப்பவர்கள் மிக அதிகம். புலம்பெயர் உறவகள் கொண்டு வந்து அன்பளிப்புச் செய்யும் கணினிகளில் பெரும்பாலானவற்றை அறிவுத்தேடலுக்கு உதவும் வகையில் பாவிக்கும் அறிவு இன்றி சீடீக்களைப் பயன்படுத்தித் திரைப்படங்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளாகப் பயன்படுத்துகின்றனர் எம் மக்கள். குடும்பங்களை முழுநேரம் தமக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கும் சின்னத் திரைகள் மனித உறவுகளையும் தொடர்பாடல்களையும் தொலைது}ரம் விலகிச் செல்ல வைத்திருக்கின்றன. வீட்டுக்கு வருபவர்களை ~ஒரு வாய் தேத்தண்ணி குடியுங்கோ~ என வற்புறுத்தித்தன்னும் உபசரிக்கும் விருந்தோம்பல் மெல்ல மெல்ல விடுபட்டுப் போகின்றது. புதிதாக வீட்டுக்குள் வந்திறங்கியிருக்கும் குளிர்சாதனப் பெட்டி குளிர்கால இரவுகளிலும் கூட தேத்தண்ணிக்குப் பதிலாகச் சோடா கொடுத்து உபசரிக்கும் விசித்திர மரபை உருவாக்கியிருக்கிறது.
தீப்பெட்டிக்கு வேலை கொடுக்காது முதல் நாள் தணலில் அடுத்தநாள் காலை அடுப்பு மூட்டும் தமது சாமர்த்தியத்தை எண்ணித் தாமே பெருமைப்பட்டுக்கொள்ளும் அம்மாக்களை மாலை ஐந்துமணியுடன் சமையல் கட்டை இழுத்து மூடப்பண்ணும் வல்லமையை எரிபொருள் விலையேற்றமோ மின்சார வெட்டோ சாதிக்காத அளவுக்குச் சின்னத்திரை சாதித்திருக்கின்றது. குழந்தையைப் பெறுதல், அவர்களின் பசியை ஆற்றுதல் போன்றவற்றை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு ~என்ரை பிள்ளை தங்கப்பவுண்~ என்ற அறுதியான முடிவில் பிள்ளைகளின் எண்ணங்கள், அவர்களது நண்பர்கள், அவர்களின் போக்கு வாக்கு எதையும் நோண்டாத அப்பிராணி அம்மாக்களாக, சமைத்துப்போடுவதே தம் ஒரே பணியெனச் சமையல் கட்டே சகலதுமாய் இருந்த அம்மாக்கள் படிக்கும் தன் பிள்ளைகளுக்குச் சின்னத்திரை எத்தகைய தாக்கத்தை விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவின்றி சமையல்கட்டின் கணிசமான நேரத்தைச் சின்னத் திரைக்கு மாற்றியிருக்கின்றனர். தொலைக்காட்சித் தொடர்களின் இடையில் சேர்க்கப்படும் விளம்பர நேரங்களைக் கூட வீணடிக்க விரும்பாது, கச்சிதமாகக் கணித்து வேறொரு அலைவரிசையில் காண்பிக்கப்படும் இன்னொரு தொடரைப் பார்ப்பதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு அம்மாக்களிடம் தேர்ச்சி கூடியுள்ளது. தொடர்கள் பார்க்கும் நேரம் குழம்பாமல் இருப்பதற்காக கோவில் கும்பிடும் நேரத்தைக்கூட மாற்றியமைத்திருக்கன்றனர் சில அம்மாக்கள் என்றால் நம்ப முடிகிறதா?. படிக்கும் பொறுப்புணர்வைக் கணிசமாகக் கொண்டிருந்துங் கூட, சற்று நேரம் சின்னத் திரையின் முன் தாமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமக்குத்தாமே சமாதானம் கூறிக்கொண்டு அல்லது ~அதையும் இதையும்~ தன்னால் கொண்டிழுக்கமுடியும் என நம்பிக் கொண்டு ~றிமோட் கொன்றோல்~ இல் உலகை வலம் வரும் நிலையில் பிள்ளைகள் மட்டுமல்ல அம்மாக்கள், அம்மம்மாக்கள் கூட. பொழுதுபோக்குச் சாதனமான தொலைக்காட்சி கல்வியாகவும் மாணவனை வடிவமைக்கும் கல்வி பொழுதுபோக்காகவும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஆரோக்கிய சமூகத்துக்காக ஏங்கும் மனித மனங்களில் புகுந்துள்ளது.
மாணவர்களைப் பரீட்;சைக்குத் தயார்படுத்தும் பொறுப்பைத் தாமே தனிய ஏற்றுக்கொண்ட தோரணையில் தனியார் கல்விநிலையங்கள். தனது நிலையை, தனது சூழலின் நிலையை, நாட்டின் நிலையை, தனது இலக்கை, பெற்றோர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாத அளவில் அதற்குள் சிறைப்பட்டிருக்கும் இளைய சமுதாயம். ஆங்கில வகுப்புக்களைத் து}க்கிச் சாப்பிட்டுவிட்டதோ என எண்ணுமளவிற்குக் கணிணிப் பயிற்சி நிலையங்கள். 2003ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பதிவிலுள்ள தனியார் கணினிப் பயிற்சி நிலையங்கள் மட்டும் 3630 ஆகும். து}ரத்து உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஆரம்பத்தில் தொலைபேசிக்கடைகளால் நிரம்பி வழிந்த யாழ்ப்பாணம் இன்று கையடக்கத் தொலைபேசிகளினால் நிரம்பி வழிகின்றது. வகுப்பறைகள், நு}லகங்கள், கூட்டங்கள், மரண வீடுகள் போன்ற அமைதி காக்கும் இடங்களுக்காவது கையடக்கத் தொலைபேசியின் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் அடிப்படை நாகரீகத்தைக் கூட கைகழுவிவிட்ட அவலம் எம்மிடம். அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போன்று மரண நிகழ்வின் ஒப்பாரி ஓலங்களுக்கு மத்தியிலுங் கூட விடாமல் தொடரும் தொலைபேசி ஊடான துக்க விசாரிப்புகளும் அழுது குளறி ஆற்றல் இழந்து சோகத்தால் துவண்ட நிலையில் இருக்கும் கணவனை இழந்த மனைவியை, பிள்ளையை இழந்த தகப்பனைக் கூட தொலைபேசிக்கூடாக அழு என்னும் அன்புக் கட்டளைகளும், நேரடியாகத் துக்கம் அனுஷ்டிக்க வருபவர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. போக்குவரத்துக்கு வீதிகளை அகலப்படுத்தியே ஆகவேண்டிய இக்கட்டான நிலையை வாகனங்களின் அதிகரிப்பு ஏற்படுத்தியிருக்கின்றது. மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், லொறி உட்பட 2000ம் ஆண்டில் பதினாலாயிரத்துச் சொச்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை தற்போது இருபத்திஐயாயிரத்துச் சொச்சமாக உயர்ந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிள்களின் தொகையே மிக அதிகம். தனியார் பஸ்களுக்கு மினைக்கெடும் எண்ணத்தை இளசுகள் அறவே விட்டுவிட்டார்களோ என எண்ணும் அளவிற்கு மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை. 2000ம் ஆண்டு 11592 ஆக இருந்த யாழ்ப்பாண மோட்டார் சைக்கிள்களின் தொகை 2003ல் இருமடங்காகி 23065 ஆக உயர்ந்திருப்பதைப் புள்ளிவிபரக் கையேடு உறுதிப்படுத்துகின்றது. விடலைத்துடிப்பும் வேகமும் மோட்டார் சைக்கிள்களில் உருவேற ஒதுங்கிப்போகின்றவர்களின் தலைவிதி கூட இவர்களின் கரங்களில் தான். 2003ல் மட்டும் 1632 வீதி விபத்துகள் இடம் பெற்றுள்ளன. தகவல் தொழினுட்ப உலகத்துக்குள் கணிசமாக மூழ்கிவிட்ட நிலை கிராம நகரமா அல்லது நகரக் கிராமமா என வரையறுக்க முடியாத சிறுசிறு கிராமங்களுக்கே என்றால் மாநகரைச் சொல்லவும் வேண்டியதில்லை.

சான்றோனாக்குவது எங்கனம்?
~அதிகரித்து வரும் உள்நாட்டு வெளிநாட்டுக் குளிர்பானங்கள், இனிப்புப்பண்டங்கள், நவீனபாணியிலான பாடசாலைப் பைகள், சப்பாத்து, உடுபிடவை மாத்திரமன்றி ஆடம்பர சொகுசு பஸ்கள், மோட்டார் கார்கள் போன்ற யாவும் பிள்ளைகளின் மனங்களில் அதிக ஆசையை விதைத்துள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் உறவினர்கள் கொடுக்கும் அன்பளிப்புகள் எமது பிள்ளைகளையும் ஆசை என்ற வலைக்குள் சிக்க வைத்துள்ளன. ~எனது நண்பனின் மாமா வெளிநாட்டிலிருந்து கம்பியூட்டர் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்திருக்கிறார். எனக்கும் வாங்கித் தா இல்லாது போனால் நான் பள்ளிக்குப் போகமாட்டன்~ என அடம்பித்து அழுதுபுரளும் பிள்ளையைச் சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது. சினிமாவிலுள்ளதைப் பொழுதுபோக்காகக் கருதாது அதிலுள்ளனவற்றை - அதே நடிப்புப்பாணி, அதே வார்த்தைப் பிரயோகங்கள், அதே தோற்ற அமைவு என்பவற்றை - நடைமுறைப்படுத்த வெளிக்கிட்டு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதப்படுவதும் அடிபடுவதும்---- வீட்டுச் சுமை, தொழில் களைப்பு என்பவற்றுடன் உழைக்கும் அனைத்தையும் கல்வி என்ற மூலதனத்தக்குள் போடும் எம் போன்ற குடும்பங்களுக்கு அக் கல்வியும் பாழாகும் நிலையில் இப்படிப்பட்ட நிம்மதி தேவைதானா என்று சிந்திக்கும் அளவுக்கு நிலைமை படுமோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

வெறும் 10 ஏ, 9 ஏ எடுக்கும் 0ஃடு உம் இ 3 ஏ எடுக்கும் யுஃடு உம் எனக்கு வேண்டாம். குப்பி விளக்கில் கற்று ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் மரியாதை செலுத்தி, பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னரும் தனக்குக் கற்பித்த ஆசிரியரைத் தெய்வமாக மதிக்கும் மாணவனாகத் தான் எனது பிள்ளை இருக்க வேண்டும். ஒழுக்கமுள்ள, தன்னலமற்ற, கட்டுப்பாடான, அன்பான, இலட்சியம் நிறைந்த, பொருளாதாரத்தில் மேம்பட்ட ஒரு சமூகத்தின் உருவாக்கத்துக்கு இத்தகைய மாணவன் தான் முதுகெலும்பாக முடியும். யுத்த காலத்தில் எங்கே எமது பிள்ளைகளை இழக்க நேரிடுமோ என்ற பயம் மட்டும் தான். வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்டால் வீட்டை மறந்து வேலையில் ஈடுபடுமளவிற்கு தமது வேலைகளை ஓர் ஒழுங்கான முறையில் அமைதியாக மேற்கொள்ளவும் தாம் என்ன செய்யவேண்டும் என்பதை தாமே தீர்மானித்து நடக்கக்கூடிய சுய ஆற்றலும் அதிகமாகக் காணப்பட்டது. இன்று பிள்ளைகளின் உயிரைப் பாதுகாக்க முடியும் என்ற ஒன்றைத் தவிர சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பிள்ளையாக அவர்களை வளர்க்க முடியுமா------ ?

என ஆதங்கப்படுகின்றார்.. முறையே ஆண்டு பத்து, ஆண்டு ஆறு, ஆண்டு மூன்று வகுப்பில் படிக்கும் மூன்று குழந்தைகளின் தாய்.
இவரின் ஆதங்கம் நியாயமானது தான். ஆனாலும் முன்பைப் போன்று பிள்ளைகள் ஆசிரியரையோ பெற்றோரையோ மதிக்காத தன்மைக்குப் பிள்ளைகளை மட்டும் குறை சொல்ல முடியுமா என்ற வினா எழுகிறது. நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பாங்கு, உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களுக்கு இடந் தந்து நிற்கும் புலவர் மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையின் ~ஆசிரியர் என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர்~ என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் மாறிவரும் புதிய உலகுக்கு ஏற்ப தம் அறிவுத் தளத்தை செப்பனிடாத ஆசிரியர்கள் எங்கே? ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விமேல் கேள்வியால் துளைத்தெடுக்கும் மாணவப் பருவத்தின் மதிப்பைப் பெற்றுக்கொள்வது எங்கனம்?

புதிய கலாச்சாரம்--?
பாதை திறப்பின் பின்னர் தம்முடன் தற்போது தாம் தங்கியிருக்கும் சூழலின் கலாச்சாரத்தையும் சேர்த்துக் கொண்டு வரும் புலம் பெயர் உறவுகளின் நடை உடை, பாவனை மட்டுமன்றி அவர்களின் பழக்கவழக்கங்களும் இங்குள்ளவர்களுக்கு அடிப்படையற்ற புதிய கலாச்சாரம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதன் பிரதான வெளிப்பாடு மற்றவர்களை விடவும் இளைய சமுதாயத்தையே பெரிதும் பாதித்திருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
~வீட்டுக்குப் பொய் சொல்லிவிட்டு நண்பர் நண்பிகள் சேர்ந்து யாழ் குடாநாட்டுக்குள்ளேயே சுற்றுலாச் செல்வது. பிறந்த நாள் விழாவை குளிர்பான நிலையங்களில் பெரும் எடுப்பில் கொண்டாடுவது எங்களிடம் இப்போது தோன்றியிருக்கும் புதிய கலாச்சாரம். இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாவது பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் பெற்றோர்கள் தான் என்பதை எம்மில் மிகக் குறைந்த அளவினரே உணர்கின்றோம். பொருளாதார நிலையில் பின் தங்கிய பெற்றோரின் பிள்ளைகள் தமது நண்பர்களின் முன்னே தாம் கொண்டு செல்லும் சிறு பரிசுப் பொருள் பரிகசிக்கப்படுவதை விரும்பாது நண்பர்களின் நிலைக்கேற்ப உயர் பரிசுப் பொருள் வாங்கித் தருமாறு பெற்றோரை நிர்ப்பந்திக்கின்றனர். பரிசுப் பொருள் மட்டுமன்றிக் குளிர்பான நிலையங்களில் பிறந்த நாள் விழா என்ற பெயரில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நாம் எதை நோக்கிப் போகின்றோம் என்ற குழப்பத்தையே ஏற்படுத்துகின்றது. சனப்புழக்கம் மிக்க யாழ் நகருக்குள் இருக்கும் பிரபல்யம் மிக்க குளிர்பான நிலையங்களை விட நல்லு}ர் கோவிலின் பின்புறம் இருக்கும் ஒரு குளிர்பான நிலையம் பள்ளி மாணவர்களின் கொண்டாட்டத்துக்குப் பொருத்தமான இடமாக அவர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் எதுவெனப் புரியவில்லை.
வீட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான கையடக்கத் தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டு பிடித்து அவர்கள் அனுப்பும் செய்திகள் பெற்றோரிடம் எம்மைப் பற்றிய தேவையற்ற சந்தேகத்தை உருவாக்கி வீட்டை அல்லோல கல்லோலப்படுத்துகின்றன. எதிர்த்தால் வீதியில் போகமுடியாது.
ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்கமுடியாத நிலை பாடசாலையில் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆகக் குறைந்தது பத்து நிமிடங்களே வகுப்பு நேரத்தில் அமைதி காக்கப்படுகின்றது. ஆசிரியர்களுக்கே கொச்சைத்தனமாகப் பகிடிவிடும் அளவுக்கு நிலைமை மிகச் சீர்கெட்டுப் போகின்றது. நேருக்குநேர் தம்மைக் கேலி செய்தாலும் கூட ஏன் என்று கேட்க ஆசிரியர்கள் பயப்படுகின்றனர். சிவப்புக்கோடு அடித்து பள்ளிப்படிப்புக்கே முற்றுப்புள்ளி வைக்கும் வல்லமை இவர்களுக்கு இருக்கும் போது இவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை. பாடசாலையில் காது கொண்டு கேட்கமுடியாத வக்கிரமான வார்த்தைகளை அள்ளி வீசும் அதே மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் மட்டும் சிறு சிரிப்புடன் ஒதுங்கிப்போய்விடுகின்றனர்.. எங்களுடைய முழக்கல்வித்தேவையையும் தனியார் கல்வி நிலையங்களே வடிவமைக்கின்றது. பணத்தைக் கொடுக்கின்றோம் கல்வியை பெறுகின்றோம் அவ்வளவு தான். பாடசாலையில் கிடைக்கக்கூடிய ஒற்றுமை உணர்வு, கூட்டு முயற்சி, அனுசரித்துப் போகும் தன்மை விளையாட்டின் மூலம் கிடைக்கககூடிய விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, கலை நிகழ்ச்சிகள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய உருவாக்கத் தன்மை போன்றவற்றின் இழப்பு எமக்கு ஏற்பட்டுள்ள பாரது}ரமான இழப்பு ~

என ஆதங்கப்படுகின்றார் உயர்தர வகுப்புப் பள்ளி மாணவி ஒருவர்.

குறிப்பாக 2002ன் பின்னர் யாழ் குடாநாட்டில் விஸ்தரிக்கப்பட்ட சக்தி ரீவியின் வரவு சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வன்முறைகளின் நிலைக்களன்களாகவும் ஆபாசங்களின் உச்ச நிலைகளாகவும் அமையும் திரைப்படங்கள் மாணவர்கள் மத்தியில் விபரீத எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. திறந்த போக்குவரத்துக் காரணமாகப் பலதரப்பட்டோரும் குடாநாட்டினுள் சுதந்திரமாக உலா வருகின்றனர். போதை வஸ்துப் பாவனை, குடி, சிகரெட் பாவனை எமது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல பாடசாலை மாணவர்களிடமும் அதிகரித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மிக அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் ~தேவையான சகல வசதிகளுடனும்~ விடுதி ஒன்று இயங்குகின்றது. இதுபற்றிய நியாயமான கவலையை எழுப்புபவர்களிடம் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர் அறையில் நடப்பதைவிட பெரிதாக எதுவும் நாம் இங்கு செய்யவில்லை என தங்களது செயற்பாட்டுக்கு நியாயமும் சொல்கின்றனர் இவர்கள். கட்டுப்படுத்தப்படாத அளவில் திரைப்படங்களின் வரவானது மாணவர்களைக் ஹீரோக்களாக்கி அவர்கள் மூலம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. என்றுமில்லாதவாறு பத்திரிகைச் செய்திகளில் வாள்வெட்டுகள், குழுமோதல்கள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் சமூகத்தில் அதிகரித்துச்செல்வதும், குறிப்பாகக் குழு மோதல்கள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டமையும் எதிர்கால சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது~

என ஆதங்கப்படுகின்றார் பல்கலைக்கழக மாணவி ஒருவர்.

மேம்பாடு இதுவல்ல
புலம் பெயர் உறவகளினால் எமது பொருளாதார வளம் மேம்பட்டுள்ளது தான். மேல்வர்க்கத்தினரை எதிர்க்க வழியின்றி அவர்களிடம் தங்கி வாழும் நிலையில் கூலிகளாக, அடிமை, குடிமைத் தொழில் செய்பவர்களாக, படியில் மாத்திரம் நின்று கையேந்தும் நிலையில் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளையும் மேல் வர்க்கத்தினரிடம் வேலைக்கு விட வேண்டியவர்களாக இருந்த எம்மவரை வெளிநாட்டு வருமானம் அடிமைத்தொழில் செய்வதிலிருந்து விடுவித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்மையை மறுக்க முடியாது. மேல்வர்க்கத்தினரின் காணிகளை வீடுகளைக் கூட விலை கொடுத்து வாங்குமளவிற்கு, அவர்களின் உறவுகளைக் காதலித்துத் திருமணம் செய்யுமளவிற்கு, கூலிக்கு வேலை செய்வதை மறுக்குமளவிற்கு, பரம்பரைத் தொழிலையே கைவிடும் நிலைக்கு எம்மவர் முன்னேறியிருப்பதும் மகிழ்வுக்குரியது தான். என்றாலும் கல்வியை மேம்படுத்தும் போக்கைவிட, வாழ்க்கைக்கு வேண்டிய வழிகளை அறியும் அறிவை அடைவதைவிட வீடு வாங்குதல் அல்லது உடைத்துக் கட்டுதல், ஆடம்பர நகைகள்;, நவீன உடைகள் களிப்பூட்டும் சுற்றுலாக்கள் என்று அர்த்தமற்ற செலவுகளிலேயே இவ்வளம் வீணாகின்றது. இந்த வளர்ச்சி நிலையானதொன்றல்ல. அர்த்தம் பொதிந்ததுமல்ல.

அறிவை வைத்துத்தான் ஆளை அளவிட வேண்டுமேயன்றி வீட்டை வைத்தல்ல--- கல்விக்குரிய மதிப்பை, தொழிலுக்குரிய மதிப்பை பெறும் வகையில் உழைக்க வேண்டும். கஷ்டப்பட்டுப் படித்து சொந்தமாக உழைத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தும் கூட நல்ல நாள் பெருநாள்களில் திடீர் பணத்தால் வேஷம் கட்டி நிற்கும் இவர்களின் தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கூனிக் குறுகி மூலையில் ஒதுங்கி ஒதுக்கப்படவேண்டியிருக்கிறதே~
என அங்கலாய்க்கிறார் பின்தங்கிய சமூகத்திலிருந்து படித்து முன்னுக்கு வந்து பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்திலும் இpருக்கும் குடும்பப் பெண் ஒருவர்.

சமாதானத்தின் கதவுகள் அறிவுத்தேடலை இந்தளவுக்கு விரிவுபடுத்த உதவக்கூடியதா என இங்கு வருகை தரும் புலம் பெயர் உறவுகளோ அன்றி வெளிநாட்டுப் பயணிகளோ மூக்கில் விரலை வைக்கும் அளவுக்குக் கிராமங்களின் கோடிப்புறங்களில் கூட முளைத்திருக்கும் இணைய மையங்கள் உண்மையில் அறிவுப் பசியாற்றும் மையங்களாகத் தொழிற்படுவதை விடவும் கிளி ஜோசியம் பார்ப்பதற்கும், அரட்டை அடிப்பதற்கும், ஆபாசப்படங்கள், சினிமாப் படங்களைப் பார்ப்பதற்கும், மலினமான கட்டுரைகளைப் படிப்பதற்குமே பயன்படுத்தப்படுகின்றது. 30 அல்லது 40 ரூபா கொடுத்துப் பயன்படுத்தும் இணைய மையங்களிலிருந்து அதி உச்சப்பயன்பாட்டைப் பெறும் ஒரே வழி நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை உடனுக்குடன் சீடீக்களில் பதிவு செய்து அல்பங்களாக அவற்றை வீட்டில் அடுக்கிவைப்பது தான் என இளைய தலைமுறையினர் கருதுகின்றனரோ என எண்ணத் தோன்றுகின்றது. கருவியாக மட்டுமே கணினியைப் பயன்படுத்திய மனித சமூகம் தகவல் யுகம் ஒன்றிற்குள் காலடி எடுத்து வைத்த கையுடனேயே கணினியைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பவும், வர்த்தகம் செய்யவும், உடனுக்குடன் உலகின் எந்த மூலையிலும் நடக்கும் சம்பவங்களை அறிந்து கொள்ளவும் இயலக் கூடிய நிலைக்கு வளர்ந்து நிற்கின்றது என்பதும், எமக்குத் தேவையான ஒரு நு}லைத் தேடுவதற்குக் கால் கடுக்கப் பேரூந்துக்குக் காவல் இருந்து, வேர்த்து விறுவிறுக்க நு}லகத்துக்குள் நுழைந்து, அங்கு தேடிக் களைத்து, அங்கே இல்லாத போது இன்னொரு நு}லகத்துக்கு அலைந்து--- சிரமப்படாது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே நாம் விரும்பிய எதுவாயினும் - அறிவியல் ஆக்கங்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், அரிய நு}ல்கள், குழந்தை இலக்கியங்கள், புகழ் பெற்றவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள், எரிமலை, கல்கி, குமுதம் போன்ற சஞ்சிகைகள், உதயன், புதினம், வீரகேசரி போன்ற பத்திரிகைகள் - அவற்றை எமது விருப்பப்படி பார்க்க, படிக்க, குறிப்பு எடுக்க, விரும்பினால் ஒளிப்படப் பிரதி எடுத்துக் கொண்டு செல்ல, பல தகவல்களை ஒலி, ஒளி வடிவில் பயன்படுத்த, பி.பி.சி தமிழோசைச் செய்தியை கேட்க, ரி.ரி.என், தமிழ், தீபம், சிகரம், சக்தி போன்ற தொலைக்காட்சிச் சேவைகளைக் கண்டு களிக்க- முடியும் என்பதும் வாசிப்புப் பழக்கம் குறைந்த, நு}லகப் பக்கமே எட்டிப் பார்க்காத ஒரு சமூகத்திற்குத் தெரிவதற்கு நியாயமில்லைத் தான்.

வழி உண்டா?
சமூக ரீதியில் நோக்கும்போது, சமாதானத்திற்கான கதவு திறந்த பின்னர் வீடு கட்டுமானத்தில் சர்வதேச நிறுவனங்கள் கணிசமாகச் செலவழித்திருக்கின்றன. புனரமைப்பு எனப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் மொத்தமாக உள்ள 512 குளங்களில் 53 குளங்கள், சிறிதும் பெரிதுமாக 42 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. எரிந்த வடுக்கள் எதுவும் தெரியாமல் 20 மில்லியன் செலவழித்துக் கச்சிதமாகப் பூசி மெழுகப்பட்டிருக்கிறது யாழ்ப்பாணப் பொதுநு}லகம். 4.3 மில்லியன செலவழித்து சாவகச்சேரியில் புதிய பல்பொருள் அங்காடி கட்டப்பட்டிருக்கிறது. அதையும் விட அதிகமாக அதாவது 7 மில்லியன் செலவழித்துக் கல்வியங்காட்டிலுள்ள பழைய சந்தையும் 3 மில்லியன் செலவழித்துக் குருநகரின் சந்தையும் புனரமைக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயம் சொந்தக் காணியில் குடியேறும் நம்பிக்கையை இன்னும் தக்க வைத்துக் கொண்டு நலன்புரி நிலையங்களில் இன்றும் மக்கள் அடிப்படை வசதி எதுவுமின்றிச் சிரமப்படுகின்றனர். 2003ம் ஆண்டுப் புள்ளி விபரங்களின் படி யாழ்ப்பாணத்திலுள்ள 70 நலன்புரி நிலையங்களில் கிட்டத்தட்ட 2138 குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. வாழ்க்கைக்கான அத்திவாரம் இடப்பட வேண்டிய முன்பள்ளிகள்; இன்றும் தற்காலிக ஆசிரியர்களையே கொண்டுள்ளது. இங்குள்ள 659 முன்பள்ளிகளில் படிக்கும் 22128 குழந்தைகளுக்குப் படிப்பிக்கும் 1109 ஆசிரியர்களில் 1100 பேர் இன்றும் தற்காலிக நியமனத்திலேயே இருக்கின்றனர்.

எனவே அபிவிருத்தி என்பது என்ன? வெறும் கட்டிட உருவாக்கமா? அல்லது கட்டிடப் புனரமைப்பா? மனித விழுமியங்கள் அனைத்தையும் அடக்கம் செய்து விடும் ஊடக வளர்ச்சியா? அபிவிருத்தி என்பதன் உண்மையான கருத்தை அடிக்கொருதரம் படித்தவர்கள் நினைவில் மீட்க வேண்டிய அவசியம் மிக அவசரமானதும் அவசியமானதுமானதொன்று.

அனைத்துக் கதவுகளையும் இறுகப் பூட்டிய பின்னரும் சிறுசத்தத்துக்கும் அடிக்கொருதரம் திடுக்கிட்டு எழும்பிப் பயத்துடனும் சஞ்சலத்துடனும் வாழும் இந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சைக்கிளைக் கூட பூட்டாது அப்படியே வெளியில் விட்டுவிட்டு நிம்மதியுடன் து}ங்கிய அந்தப் பழைய சூழலுக்குத் திரும்புவது சாத்தியமா என அங்கலாய்க்கின்றனர் சிலர். வெளிநாட்டிலிருந்து சரமாரியாக வந்திறங்கும் இனிப்புப் பண்டங்கள், குளிர்பானங்களால் ஏற்படும் தேவையற்ற ஆசைகளை விடவும் முடியாமல் குறைந்த வருமானத்தில் அவற்றை வாங்கவும் முடியாமல் அல்லலபடும் மனதுக்கு தீர்வு கிடைப்பது எப்போது என மனம் குமைகின்றனர் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து ஆடம்பரச் செலவுகளை அறவே நீக்கி தெளிந்த நீரோடை போன்ற மனதுடன் உள்ளதுக்குள் உயர்வாய் வாழ விரும்புவோர். மின்சார வெட்டு அமுலில் இருந்த காலத்தில் விளையாட்டு, வீட்டு வேலைகளில் கவனம், உறவுகளுடன் நல்ல தொடர்பைப் பேணிய, மனிதனை மனிதனாக வாழவைப்பதே கல்வி என்பதை உணர்ந்து படிக்க வாய்ப்பளித்த அந்தப் பழைய சூழலுக்குப் போக மாட்டோமா என ஏங்குகின்றனர் மக்களைச் சான்றோர் என மற்றவர் வாயால் கேட்க ஆசைப்படும் பெற்றோர்கள். இந்தத் தனிமனித ஆசைகள் எல்லாம் சமூக ஆசைகளாக மாறும் காலம் ஒன்று இருக்குமாயின் இந்த அங்கலாய்ப்புகளுக்குச் சிலசமயம் வழி பிறக்கலாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, August 03, 2005

மாற்றம்......?

வரிச்சுத் தடிகள் உடுத்து
வடலிப் பனையோலை சுமந்து
நிற்கும்
என் சிறிய சமையல் அறையில்
எனக்கு அத்தனை பிரியம்.

வேலைக்குச் செல்லும் என் கணவன்
பள்ளி செல்லும் என் பிள்ளைகள்
ஆனாலும்....
காலைப் பொழுதுகள்
மின்னடுப்பில் சமைக்கும்
என் அம்மாவுக்கு இருப்பது போல்
ஓட்டமும் நடையுமாய்
என்றுமே இருந்ததில்லை.

முதல் நாள் பொழுதில்
நான் குழப்பி விட்டவைகள்
அதனதன் ஒழுங்கில் அமர்ந்திருக்கும்
கரி மூடிய கேத்தல்...
அடிப்பிடித்த சோற்றுப்பானை...
பால் காய்ச்சும் சட்டி...
சுத்தமாய் துலங்கியிருக்கும்
சாம்பல் அகற்றி
மூட்டுவதற்கு வாகாய்
சுள்ளித் தடிகளுடன்
அடுப்பு
என் வரவுக்காய் காத்திருக்கும்

சமயலறையின் சுத்தம் தொடர்பாய்
அந்தச் சுத்தத்திற்குரியவன்
என்மீது வைத்திருக்கும்
ஆழமான பற்றுதல் தொடர்பாய்
எனக்குள் எப்போதும் வியப்பு...
அடுப்பு மூட்டுவது மட்டும்
எனக்குரியது என்ற
அவனின்
ஆழமான நம்பிக்கையுட்பட-------
மார்கழி, 1998

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வாய் திறந்து பேசு........

பெண்மை பற்றிய
உனது புரிதல்களுக்கு
உருவமாய் நான்
இல்லாது போனாலும்
எனது அசைவு
உன்னை
வியக்க வைப்பதை
உன் பார்வை சொல்லும்.

ஆண்மை பற்றிய
எனது கணிப்பீடுகளும்
சற்றும் உன்னிடம்
பொருந்தாத போதும்
உனது பண்பு
என்னை
நெகிழ வைப்பதை
என் இதயம் உணரும்.

அமைதியான உன் போக்கு
ஆழமாய் நீ பேசும் வார்த்தைகள்
எனக்கென்றே நீ உதிர்க்கும் புன்னகை
என்னை நலங்கேட்கும் பார்வை
எனக்குள் நிழலாடும் போதெல்லாம்
எனது எண்ணம் -
எனது எழுத்து -
எனது து}க்கம் -
என் உத்தரவின்றி
ஓய்வெடுத்துக் கொள்ளும்.
உண்மை நட்பை
உன்னிடம் பகிரவும்
உயிர்க்கடை வரை
உறவைத் தொடரவும்
எனக்குள் இருந்து
ஏதோவொன்று
உந்தித் தள்ளும்.

நண்பனே!

என் மீதான உனது மதிப்பை
கொண்டாடுவதை விட்டுவிடு
தோழனாய் வந்து கதை பல சொல்லு.
உனக்குள் நான் உயர்ந்திருப்பதில்
எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை.
மனதிற்குள் ப10ஜிப்பதால்
மாற்றம் வந்துவிடாது.
எனது முன்னோர்களை
உனது முன்னோர்கள்
தெய்வமாய் ஏற்றியும்
தேவைப் பொருளாய் மாற்றியும்
ஊமையாக்கியது போதும்.
மற்றவர் முன் வாய் திறந்து பேசு
நட்பின் ஆற்றலை நாற்றிசையும் அறியட்டும்.
பங்குனி, 1998

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 01, 2005

மழை எனக்குப் பிடித்தமானது...

மழை எனக்குப் பிடித்தமானது...

எறிகணைத் துண்டொன்று
ஏற்படுத்தித் தந்த
'யன்னல்' வழி
எங்கள் ஓட்டுக் கூரையிலிருந்து
தடித்த கம்பிகளாய் நீளும்
மழை யன்னலுக்குள்
விழி நுழைத்து
மழையை ரசிப்பது எனக்கு பிடித்தமானது.

மழை எனக்குப் பிடித்தமானது...

வாசல் நனைத்தோடும் மழைநீரில்
கப்பல் விட்டு மகிழும்
எதிர்வீட்டுப் பள்ளிச் சிறுவனுக்கும்,
திண்ணையில் ஒரு காலும்
இறப்பில் ஒரு கையுமாய்
தெறிக்கும் நீர்த்திவலைகள்
உடலை நனைக்க
மழைநீரை ஏந்தி மகிழும்
அவன் தங்கைக்கும்
கிடைத்த வாய்ப்பு
இளமைக் காலமதில்
எனக்கு மறுக்கப்பட்டதெனினும்...

மழை எனக்குப் பிடித்தமானது...

வன்னி மண்ணுக்கு விரைந்து ஓடி
அகப்பட்ட இடமொன்றில்
அவசர அவசரமாய் போட்ட
சிறுகுடிலின்
'வரிச்சுத்தடி யன்னல்' ஊடாக
மழையை ரசிப்பதும் பிடித்தமாய் தான் இருக்கிறது.

ஓலைக் கூரையின்
எண்ணற்ற கீற்றுக்களிலிருந்து
ஒரே சமயத்தில், வௌ;வேறு அளவுகளில்
நின்றும், நிதானித்தும்,
விரைந்தும் வேகமெடுத்தும்
விழும் மழைநீரின்
பரிமாணங்களை
என் தாயின் விழிகள்
நினைவ10ட்டுவ தெனினும்
மழை எனக்கு பிடித்தமானது.

மழை எனக்கு பிடித்தமானது

செம்மணியின் உப்புவெளியில்,
தலை திருப்ப முடியாத நெரிசலின் அவிச்சலில்,
அங்குல அசைவு தந்த அசதியில்,
குளிர்ச்சி தேடி அந்தரித்த உடல்களின்
உச்சி குளிர்வித்த பொழுதில்...
நெற்றி மேடு பாய்ந்து,
விழி இடுக்குகளில் நுழைந்து,
நாசியின் பக்கவாட்டாய் பயணித்து
உதடுகளின் வெடிப்பை மேவிய போதில்...
குடை கவிழ்த்து ஏந்திய நீர்
வதங்கிச் சுருண்ட
பச்சிளம் பாலகனின் தாகம் தணித்த போதில்
மழை எனக்கு இன்னமும் பிடித்துப் போயிற்று.

மழை எனக்கு பிடித்தமானது...

நினையாப் பிரகாரமாய் நீடித்த பெருமழையில்
வாழ்ந்த சிறுகுடில் அள்ளுண்ட போதும்…
மிதக்கும் சட்டிகளை பிடிக்கும் வலுவின்றி
வெறித்த பார்வையுடன் மரத்து நின்ற போதும்…

விறைத்த உடலுக்கு விசைய10ட்ட
அடுப்புக்கு குடைபிடித்தவர்கள்
மதகுகள் மர அடி வேர்கள்
லொறிகள், டிராக்டர்களின் கீழ்
ஒதுங்க முண்டியடிப் போரென
மாதக் கணக்காய் நீண்ட
மரங்களின் கீழான மழைக்காலமொன்றை
இடம் பெயர்வாழ்வு எமக்கு பரிசளித்த போதும்…
குண்டும் குழியுமாய் நிரம்பிய தெருக்களில்
பாய்ந்து செல்லும் வண்டிகள்
கனம் கூடி அல்லது கண்மூடித்தனம் கூடி
சேற்று வெள்ளத்தை வாரியிறைத்த போதும்...
மழை எனக்கு இன்னமும்
பிடித்தமாய் தான் இருக்கிறது.


யுத்த மேகம் பொழியும்
குண்டு மழையின்
நீங்காத வடுக்களைச்
சுமக்கும் எவருக்கும்
மழை என்னைப் போல்
பிடித்தமாய் தான் இருக்கும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

எத்தனமின்றி ஏது வாழ்வு...?

வேரொன்று தன் விழுதை
வேண்டாது விலக்கிவிட
தனியனாய் நின்று
தழைத்தோங்கும் வலுவின்றி
விழுந்து பின் எழுந்து...


அறியாச் சிறுவயதில்
அடைக்கலந் தந்த மாமன்
தன் வேட்கை தீர்க்க வர
விவரம் தெரியாது
விழுந்து பின் எழுந்து...


போதிக்கும் மனங்களின்
பட்சபாதப் போக்கினால்
கற்கும் வித்தைதனில்
காலு}ன்றும் திறனின்றி
விழுந்து பின் எழுந்து...


காலச் சுழலில்
கோலம் அழிந்ததும்
விரும்பிப் படுத்தவன்
விரைந்து விலகிவிட
விழுந்து பின் எழுந்து...


உழைத்துச் சேர்த்ததை
உறுஞ்சித் தீர்த்துவிட்டு
நயவஞ்சக உறவுகள்
நாசூக்காய் விலக
விழுந்து பின் எழுந்து...


தன் உதிரங் குடித்து
தளிர்த்த தன் விழுதும்
தன் வாழ்வு வேண்டி
தன் வேரை விலக்கிவிட
விழுந்து பின் எழுந்து...

ஓ...
விழுவதும் பின் எழுவதும்
வாழ்வாகிப் போனதால் தான்
உரமேறி உரமேறி
அவள் உறுதியாய் நிற்பதுவோ..?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 31, 2005

புனிதங்களிலிருந்து...

புனிதங்களிலிருந்து...


சாணம் புனிதமானது
என்ற
தனது நம்பிக்கை ஒன்றைத் தவிர
அம்மாவுக்கு
அது பற்றி வேறெதுவும் தெரியாது.
தெரிந்து கொள்ளவும் அவள் விரும்புவதில்லை
புனிதமும் புது மண்ணும்
ஒன்றாகக் கலந்து மெழுகாத வரை
புனிதம்
ஒரு போதும்
மண்ணுடன் ஒட்டாது
என்ற உண்மையை
நான் தெரிந்து கொண்ட பின்னரும்
அம்மா மாறத் தயாராய் இல்லை
பொருக்காய் வெடித்துக் கிளம்பும் புனிதத்தின் மீது
புனிதத்தால்
மீண்டும் மீண்டும் பூசிக் கொண்டே இருப்பாள்
அம்மா மாறவே மாட்டாள்
ஆனால்---
என்னைப் போல்
என் பிள்ளைகளும்
அவர்களின் பிள்ளைகளும்
புனிதங்களிலிருந்து
புதிது புதிதாய்
கற்றுக் கொள்வர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தேடலுடன்...

பறந்தது சிறகசைத்து
என்
முதற் பத்து வருடங்கள்
வண்ணத்துப் ப10ச்சியின் வாழ்வாய்....

உருண்டது முனைப்புடன்
என்
இரண்டாவது பத்துக்கள்
பொய்மைகளே உண்மைகளாய்...
போர்வைகளே நிஜங்களாய்...
வாடகைக் கூடுகளே எனது கூடுகளாய்;...

அலைந்தது திசையின்றி
என்
மூன்றாவது பத்துக்கள்
சுமைகளின் அழுத்தங்களுக்குள்
தப்பிப் பிழைத்தலுக்கான
உபாயங்களைத் தேடுவதில்...

கழிகின்றது மெல்ல மெல்ல
என்
நாலாவது பத்துக்கள்
ஒவ்வாமைகளை விலக்கிக் கொள்வதில்...
ஒத்ததுகளைப் பிணைத்துக் கொள்வதில்
எனக்குள் என்னைத் தேடுவதில்...
எனக்கென்று ஒரு கூடு கட்டுவதில்...

உழைத்துக் களைத்த போது
மடியில் தாங்கவும்
உணர்வில் களைத்த போது
மனதில் ஏந்தவும்
எனக்காயும் தனக்காயும்
என்னுள் நுழையவும்
எனக்கென்று ஒரு துணையைத் தேடுவதில்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கழற்றும் நாளுக்காய்...

தனக்கு
ஒரே புழுக்கமாய் இருப்பதாய்
அவள் தான் சொல்கிறாள்
கழற்றிவிடு
உன் போர்வைகளை என்றேன்
உதடுகளின் சிரிப்பில்
உண்மை வலி இருந்தது.
அடக்கம் போனதென்று
அம்மா பாய்வாளாம்---
தெருவில் தலைகாட்ட வழியில்லை என்று
தம்பி குதிப்பானாம்---
வேலை செய்யும் இடத்தில் கூட
வேதம் மாறவில்லையாம்---
சற்று நேரம் கழற்றி வைக்க
இருட்டுக் கூட
தன் பக்கம் இல்லை என்ற
அவள் குமுறலில் சிந்திய
நீர்த்திவலைகள்
நிலம் நோக்கிய விழிகளிலிருந்து
மண்ணை முத்தமிட்டன.

மனதின் மூலையில்
சிறு ஒளிக்கீற்று---
வண்ண வண்ணமாய்---
வகைவகையாய்---
போர்த்திக் கொண்டு
புழுக்கமே புண்ணியம் என்றானோர்க்குள்ளும்---
புழுக்கத்தின் காரணம் புரியாமல் தவிப்போர்க்குள்ளும்---
புழுக்கம் போர்வைகளால் தான்
என்பதை
அவள் உணர்ந்து கொண்டதற்காய்----


நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
போர்வைகளை
அவளாகவே கழற்றும் நாளுக்காய்---

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.