Monday, November 09, 2015

'கலாசுரபி' யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரி ஆண்டு மலர்

'கலாசுரபி'
யாழ்ப்பாண தேசிய  கல்வியியல் கல்லூரி ஆண்டு மலர் 
ஆய்வுரை  21-08-2008

குறித்த ஒரு நோக்கத்தை அல்லது பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பே நிறுவனம் எனப்படுகின்றது. நிறுவனங்களிடமிருந்து பின்வரும் வழிமுறைகளினடிப்படையில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.. நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள், நிறுவனத்திற்குள்ளே இயங்கும் நூலகங்கள் போன்ற சேவை அமைப்புகள் மற்றும் உள்ளக அறிக்கைகள், நிறுவனத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகள். வேண்டுகோளின் அடிப்படையில் நிறுவனத்தினால் வழங்கப்படும் வசதிகள் (எ-டு. உபகரணங்களை வாடகைக்கு விடுதல்)

பாடசாலைகள், கல்லூரிகள், தொழினுட்பக் கல்லூரிகள், பல்தொழினுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், கல்வியியில் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு அபிவிருத்தி நிறுவனங்கள் போன்றவை இதற்குள் உள்ளடங்கும். தொழில் நுணுக்கங்கள், உபகரணப் பாவனை தொடர்பான நிபணத்துவ ஆலோசனையை பெறுதல், மிகவும் முன்னேற்றகரமான, ஆழமான பொருட்துறைகள் தொடர்பான தகவலை வழங்குதல்., குறிப்பிட்ட துறை சார்ந்த மிக அண்மைக் கால கல்விசார் ஆய்வுகளின் விபரங்களை வழங்குதல்., ஒப்பந்தப் பணிகள் அல்லது கிடைக்கக்கூடிய வசதிகள் மூலம் தகவலை வழங்குதல், நூலக சேவைகளை வழங்குதல் இவற்றின் பயன்பாடாகும்.

நிறுவன வெளியீடுகள் பொதுவில் முழுக்க முழுக்க ஆழமான பொருட்துறை சார்ந்த ஆய்வுகளின் விபரங்களை அல்லது புலமைத்துவ தகவல்களை வழங்குகின்ற துழரசயெட என ஆங்கிலததில் குறிப்படப்படும் பொருளின் அடிப்படையில் அமைந்த ஆய்வுப் பருவ இதழாகவோ அல்லது நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பருவரீதியாக அதாவது மாத ரீதியாகவோ அல்லது காலாண்டு ரீதியாகவோ தாங்கிவரும் செய்திக் கடிதங்களாகவோ அதுவுமன்றி இது நூல் வடிவிலோ அல்லது பருவ இதழ் ஒன்றில் கட்டுரை வடிவிலோ அதுவுமன்றி கையெழுத்துப் பிரதி வடிவிலோ இருக்கக்கூடிய நிறுவனத்தின்  சந்திப்புகள் அல்லது கூட்டங்களின் அறிக்கையாகவோ அல்லது சுருக்கமாகவோ வழங்கப்படுகின்ற அல்லது படிக்கப்படுகின்ற கட்டுரைகளின் வெளியிடப்பட்ட பதிவேடு எனச் சொல்லப்படும் மாநாட்டுக் குறிப்பேடாகவோ அதுவுமன்றி  நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம்.

வெளி உடல், உள்ளுறுப்புகள், ஆத்மா என மனிதனது உடலமைப்பை வகைப்படுத்துவது போன்று  உருவம், உள்ளடக்கம், உட்பொருள்; என்ற மூன்று கூறுகளும் இணைந்ததே சிந்தனைப் பதிவேடு  என்ற கோட்பாட்டுக்கு அமைய இப் பதிவேடுகளை அவற்றின் உருவமைப்பு, உள்ளடக்கம், உட்பொருள், தரம், பயன்பாடு, தேவை, தகவல் வெளிப்படுத்தப்படும் விதம், தகவல் பெறும் முறை, ஒழுங்கமைப்பு ஆகிய பின்வரும் ஒன்பது அம்சங்களின் அடிப்படையில்  வகைப்படுத்துவது பொருத்தமானது.

உருவமைப்பின் அடிப்படையில் இவை உபகரணத் தேவையற்ற ஒரு ஊடகம் என்ற பார்க்கப்படுகின்றது. கைத்தொழிலை பிரதான தொழிலாகவும் இயந்திரத்தை பிரதான மூலவளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகத்தின் பிரதான பதிவுகளாக நூல்கள், பருவ இதழ்கள், செய்தித்தாள்கள் போன்ற அச்சுப் பதிவுகள் கருதப்படுகின்றன. தாள்களின் கண்டுபிடிப்பும் தொழினுட்ப வளர்ச்சியும் இணைந்து மிகப் பெருந்தொகையான நூல்கள் பருவஇதழ்களை  உற்பத்தி செய்யும் சமூகமாக கைத்தொழில் சமூகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்துறைத் தகவல்களும் சுரக்கும்  என்ற பொருளைத் தருகின்ற பெயர் கொண்ட வெளியீடு, கலாசுரபி என்ற இந்த வெளியீடு ஒரு கல்விசார் நிறுவனத்தின் ஆண்டு மலர் என்ற வகைப்பாட்டுக்குள் வருகின்ற ஒரு தொடர் வெளியீடு. ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக, பகுதிகளாகவோ, தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் தொடர் வெளியீடுகள் எனப்படும். செய்தித்தாள்கள், பருவஇதழ்கள், வருடாந்த வெளியீடுகள், தொடர் நூல்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள், நிறுவன வெளியீடுகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.

 '20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும் 
என்ற லிக்லைடர் என்ற அறிஞரின் கூற்றும்,

அன்றும் இருந்தேன்,  இன்றும் இருக்கின்றேன், என்றுமிருப்பேன் எங்குமிருப்பேன் கந்தலுமாவேன் கனகமும் கொள்வேன் வந்தனை செய்வார் வசமாய் விடு வேன் 
என்ற தில்லைநாயகம் அவர்களின் கூற்றும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லாத நூலுருச் சாதனமான இது உள்ளது..

கல்லில் தொடங்கி காலப் போக்கில் களிமண் கட்டியில் கருத்துக்கள் ஈந்தேன்
பப்பிரசுத் தாளில் பன்னாள் வாழ்ந்தேன்,
தோலாம் தாளிலும் துவண்டு இருந்தேன்
மெழுகாம் ஏட்டிலும் மெதுவாய்த் தவழ்ந்தேன்
ஓலையை மட்டும் விட்டேனா நான்?
எல்லாம் படிக்க எழிலார் தாளிலும் உருவம் கொண்டேன்
அறிவியலோட்ட அணைப்புச் சிறப்பால் மைக்ரோ உருவிலும் மறைந்து நிற்கின்றேன். என்னும் வே. தில்லைநாயகம்,

கருத்தினில் பிறந்து மக்கள் காதினில் தவழ்ந்து தாளிக்
குருத்தினில் வளர்ந்து தோலில் குன்றினில் துள்ளியோடி
அருங்கலை அள்ளி அள்ளி அளிக்கின்ற வள்ளலாகி
விருந்தூட்டுகின்றாய் இன்று வெள்ளைத்தாள் கோட்டைக்குள்ளே என்று எழிலோவியத்தில் தீட்டும் வாணிதாசன்

உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்த மலரானது முதல்நிலைத் தகவல் வளமாக அல்லது அடிப்படைத் தகவல் வளமாகக் கருதப்படத்தக்கது. உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் எனப்படுகிறது. மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ் வளங்கள் புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல், ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல், புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் என்ற வடிவில் ஆய்வாளர்களுக்குப் உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல்நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது.

முதல்நிலைத் தகவல் வளங்களில் முதல்நிலையில் வைத்து எண்ணப்படுவது பருவ இதழ்கள். நூல் உருவாக்க முயற்சிக்கு காலம் அதிகம் தேவைப்படும் என்பதனால் ஆய்வு முயற்சிகள் தொடர் வெளியீடுகளைக் களமாகக் கொண்டு அவ்வப்பபோது வெளிவருவதற்கு ஏதுவாக பருவ இதழ்களின் வெளியீடு அமைகின்றது.

ஆராய்ச்சி நோக்கில் பார்க்கும்போது தொடர் வெளியீடுகளில் பருவ இதழ்களே  வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் உள்ளுர் சார்ந்த முக்கிய வளமாக இயங்குகின்றன. பருவ இதழ்களை வார இதழ், மாத இதழ், காலாண்டு இதழ் என  கால அடிப்படையில் வகைப்படுத்தின் இது ஒரு ஆண்டிதழ். பொதுவாக ஏனைய நிறுவனங்களைவிட கல்வி சார்ந்த நிறுவனங்களே ஆண்டிதழ் உற்பத்தியில் அதிகம் ஈடுபடுகின்றன. கலாசுரபியின் முதலாவது இதழ் தேசிய கல்வியியில் கல்லூரியின் முதலாவது ஆண்டு நிறைவை யொட்டி வெளியிடப்பட்ட மலராகத் தோற்றம் பெற்று பின்னர் நிறுவனத்தின் ஆண்டு வெளியீடாக மாறியதா அல்லது ஒவ்வொரு வருடமும் ஆண்டு நினைவுப் பூர்த்திக்காக வெளியிடப்படும் ஒன்றாக உள்ளதா என்பது ஆய்வுக்குரியது.
ஆண்டு மலர்கள்  தனிப்பட்ட மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன. ஆண்டு மலர்கள் பலதரப்பட்ட அறிஞர்களது கட்டுரைகளையும் உள்ளடக்கி யிருப்பதனால் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படுவதாய் உள்ளன. பெருந்தொகை செலவழித்து அச்சுவடிவில் கொண்டு வருவதற்கான பொருளாதார மார்க்கமோ அதைச் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்போ குறைவாக இருத்தல், தனது ஆய்வு முயற்சி ஒன்று அந்த ஆய்வுத்துறை சார்ந்த பருவ இதழ்களில் வெளியிடப்பட்டால் தான் அதற்கு மதிப்பு உண்டு என்ற கருத்துநிலை கட்டுரையாசிரியருக்கு இல்லாதிருத்தல், தத்தமது துறைசார்ந்த செயற்பாடுகளைப் பட்டியற் படுத்துவதிலும் பார்க்க சமூகத்தின் மதிப்பு மிக்க அறிஞர்களின் ஆக்கங்கள் தமது சிறப்பு மலரில் வருவது தான் தமக்குச் சிறப்பு என்ற கருத்துநிலையில் சிறப்பு மலர்களின் வெளியீட்டாளர் விடாப்பிடியாக இருத்தல் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கின்ற சமூகம் ஒன்றின் ஆய்வு முயற்சிகளில் கணிசமான அளவைப் பதிவாக்கும் வாய்ப்பை இத்தகைய சிறப்புமலர் வெளியீடுகளே வழங்குகின்றமையால் இவற்றைத் துறை சார்ந்தவை என ஒதுக்கிவிடுவது பயன்பாட்டு நோக்கில் பாதகமானது. எடுத்துக்காட்டாக பாடசாலை ஒன்றின் சிறப்புமலர் பாடசாலையின் கற்றல் கற்பித்தல்  செயற்பாடுகளைத் தான் பேசும் என்று அதனை ஒதுக்கிவிடமுடியாது. அதில் பட்டப்பின்படிப்புக்கு உதவக்கூடிய ஆய்வுக் கட்டுரைகளே அதிகம் காணப்படும்.  எனவே இவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய வளமாக நூலகத்துறையால் இனங்காணப்பட்டிருக்கின்றன.

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்போர்க்கின்மை, நல்ல சொற்களை அமைத்தல், இனிய ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், பொருளை முறையும் அமைத்தல், உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை, சிறந்த பொருளுடைத்தாதல், விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல் என நூல் அழகுகள் பத்து' என கூறுகின்றது எமது பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம். (தொல்காப்பியம் பொருள் 665)

நூல் குற்றங்கள்: கூறியது கூறல், மாறுபட்டுக் கூறல், குறைபடக் கூறல், மிகைப்படக் கூறல், பொருளில்லாமல் கூறல், மயங்கக் கூறல், இனிமையில்லாதன கூறல், இழி சொற்களால் புனைந்து கூறல், ஆதாரமின்றி தானே ஒரு பொருளைப் படைத்துக் கூறல், எவ்வாறாயினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு கூறல் பொருள் (663)

அடிப்படையில் ஒரு தகவல் வளமானது வாசகனுக்கு ஒட்டு மொத்தமாக எதைச் சொல்ல விழைகின்றது என்பதன் அடிப்படையில் இவற்றைப் புத்துயிர் தருபவை தகவலைத் தருபவை உயிர்ப்பூட்டுபவை என மூவகைப்படுத்தலாம். அந்த வகையில் கலாசுரபி என்ற இந்த மலர் தகவலைத் தரும் நூல் வகைக்குள் உள்ளடங்குகின்றது. வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் வளங்கள் எனப்படும். குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் சார்ந்த தகவல் வளங்கள்;, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்கள் , ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படைத் தகவல் வளங்கள், தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணைத் தகவல் வளங்கள் இவ்வகைக்குள் அடங்கும்

கல்வி என்பது கற்றல் கற்பித்தல் பற்றிய தெளிவான இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். கற்பிப்பவருக்கு அந்தஸ்தை வழங்காமல் கல்வியை வளச்க்கவோ வழங்கவோ முடியாது. பாடசாலைகளில் அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறை கல்வி எனப்படுகின்றது. படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது. (ழுஒகழசன னiஉவழையெசல) கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்கிறார் ஸ்கின்னர் அவர்கள். மனதின் சக்தியால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவன் பெறும் மாற்றங்களையே கற்றல் என நாம் கூறுகின்றொம்..  இதிலிருந்து தெரியவருவது அறிவு என்பது முடிவுப் பொருள் கல்வி  என்பது முதற் பொருள்.
மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் புதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது. இந்த வகையில் மாணவர்களைவ வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்காகப் பண்படுத்தும் பெரும் பணியை ஏற்றிருக்கும் இந்தக் கல்லூரியின் ஒரு வெளியீடு உயிர்ப்பு உள்ளதாக மாறவேண்டும் அதற்குஉழைப்பதற்கு சகலரும் முன்வரவேண்டும்.


நூலகர் நூலகர் என்கின்றீர் நுவலும் நூலகர் யாரையா ?

நூலகர் நூலகர் என்கின்றீர் 
நுவலும் நூலகர் யாரையா ?


இந்திய நூலகவியல் அறிஞர் திரு.வே. தில்லநாயகம் அவர்களின் மேற் சொல்லப்பட்ட கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கக் கூடிய ஒருவரை அறிவாலயம் சிறப்பு மலரை அலங்கரிப்பதற்குத் தேட மனது தீர்மானித்து,  தேடிப் பலனேதுமற்றுக், களைத்து,  வெறுமையில் முடிவுறத் தயாரானபோது மனதில் ஏற்பட்ட திடீர் ஒளிக்கீற்றில் வியாபித்து நின்றவர்  திரு.ஆ. சபாரத்தினம் அவர்கள். ஆசிரியத் தொழிலில் நெடுங்காலம் நிலைத்திருந்து ஓய்வு பெற்ற இவருக்கும் நூலகத் தொழிலுக்கும் என்ன தொடர்பு?

15 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் நூலகத் தொழிலுக்குள் நான் நுழைந்த காலத்தில் நூல் அடுக்குகளினூடே குடுகுடுவென ஓடித் திரியும் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். நூலகத்தின் உண்மையான வாசகர் யார், இடையிடையே எட்டிப் பார்க்கும் வாசகர் யார் என்ற தேடலில் முனைப்புற்றிருந்த அந்தக் காலத்தில் நுலகத்தில் என் கண்ணில் அடிக்கடி பட்ட ஓரிருவரில்; திரு.ஆ. சபாரத்தினம் ஒருவர்.  இவர் தொடர்பான வெறும் அவதானிப்புத் தேடலாக முனைப்புப் பெற்றதைத் தவிர்க்க முடியவில்லை. எனவே காண்பவர் அனைவரிடமும்  இவரைப் பற்றிய தகவலைத் தேடுவதில் கவனம் சென்றது. அதிருஷ்டவசமாக எனக்குக் கீழ் சிறிது காலம் பயிலுனராகப் பணிபுரிந்த அவரது பேர்த்தி முறையானவரின்; உதவியுடன் நான் பெற்றுக் கொண்டவை இவை.

'நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சைவ ஆசாரமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். அரிவரி வாத்தியாராக ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கி 33 வருடங்கள் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றாசிரியராகத் தொடர்ந்திருந்து அதிபராக உயர்ந்து ஓய்வு பெற்றவர்;. வரலாறு, சமயம் போன்ற துறைகளில் புத்தகம் எழுதுபவர். தான் வாசித்து மற்றவர்களுக்கும் கொடுப்பது மட்டுமன்றி மற்றவர்கள் கேட்கும் புத்தகங்கள் எங்கிருந்தாலும் அதைத் தேடியெடுத்துக் கொடுக்கும் பண்பு கொண்டவர். சிறு பிள்ளை என்றாலும் கூட மதித்து, அந்தஸ்து பேதமின்றி அனைவருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர். புத்தகங்களுடன் நெருங்கிப் பிணைக்கப்பட்டவார். புத்தகம் இன்றிச் சபாரத்தினம் இல்லை.'

உண்மை தான்! எமது சமூகத்தில் நூலகம் பற்றியும் நூலகத்தின் உண்மையான வாசகர் பற்றியும் பேச விழையும் எவரும்:
'எந்த நேரமும் புத்தகமும் கையுமாகத் திரிபவர்;; ஆங்கிலம், தமிழ், வடமொழிப் புலமையுடையவர்; லத்தீன் மொழியில் ஓரளவு பரீச்சயம் உடையவர்; சிறு வயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்து கலை, இலக்கியம் வரலாறு, மொழிபெயர்ப்பு போன்ற  துறைகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்; காந்தியச் சிந்தனைகளிலும் அகிம்சையிலும் நம்பிக்கையுடையவர்; சொல்லும், செயலும் ஒன்றாக வாழ்ந்து காட்டுபவர்;; தீண்டாமையைச் சிறு வயதிலிருந்தே எதிர்த்தது மட்டுமன்றிச் சாதி பேதம் இன்றி எல்லா மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்து இலவசக் கல்வி வழங்கியவர்'

என்றெல்லாம் போற்றப்படும் இவரை மறந்து விட்டுப் பேசமுடியாது. இத்தகைய பெருமைகளைச் சுமந்து கொண்டும் 'தலைப்பாரமின்றித';; திரியும் வல்லமை பெற்ற இந்த அறிஞர் 76 அகவையைக் கடந்த பின்னரும் எறும்பு போல் மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தும், நடந்தும், படுத்தும், என்றும் புத்தகமும் கையுமாக நம்மிடையே  உலா வருபவர்;.

இவரை நூலகத்தின் ஒழுங்கான  வாசகராக மட்டும் பார்த்த மனம் சற்று முன்னேறி எழுதுவதற்காக வாசிப்பவரா? வாசிப்பதால் எழுதுகின்றாரா? என்ற  ஆய்வுக்கு இட்டுச்  சென்றமைக்கு இன்னொரு காரணம் வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவருடன் இவரை எந்நேரமும் காணக்கூடியதாக இருந்தமையே.  இவர் பற்றி மற்றவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று அறியும் ஆவலில் அச்சு வடித் தகவலை நோக்கி தேடல் மீண்டும் தொடர்ந்தது.

'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோன்;,  நுண்மாண் நுழைபுலமுடையோன்; வையத்துள்; வாழ்வாங்கு வாழ்வோன், நடமாடும் பல்கலைக்கழகம் என்றெல்லாம் கூறக்கூடிய ஒருவர் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அவர் கரம்பனூர் திரு ஆ. சபாரத்தினம் அவர்களே. இவர் மேடையில் ஏறிப்  பிரசங்கம் செய்வதில்லை. ஆனால் வாழ்ந்து காட்டுவதன் மூலமே சமுதாயத்தைத் திருத்தலாம்  என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் போன்றவர்கள் ஆயிரத்தில் ஒருவரே இருக்க முடியும்'

என்கின்றார் இவரின் மாணவர்களில் ஒருவரும் மூத்த எழுத்தாளருமான திரு காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள்.

'சிறு வயதில் இவர் சிறந்ததோர் பேச்சாளர்,  பேச்சால் அனைவரையும் கவர்ந்து  தனக்கென ஒரு தனித்துவமான கூட்டத்தை வைத்திருந்தார். எந்நேரமும் புத்தகமும் கையுமாகக் காணப்படும் இவர் சிறந்ததொரு நாடக அறிஞராகவும் அறியப்படுகின்றார்'

என்கிறார்  இவரின் நண்பரும் இலக்கிய வட்டத் தலைவருமான த. பரமானந்தம் அவர்கள்.

'இனிமையானவர், அமைதியான சுபாவமுடையவர், மரபு இலக்கியத்தில் மட்டுமன்றி நவீன இலக்கியத்திலும் பாண்டித்தியம் பெற்றவர், மேனாட்டு இலக்கியப் பரிச்சயம் இவருக்கு நன்றாகவே உண்டு என்பதை மல்லிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் நிருபிக்கின்றன'

என்கிறார் இவருக்குக் 'காவல் நகரோன்'; எனப் புனை பெயரிட்ட  இன்னொரு நடமாடும் நூலகமான திரு ஏ.ஜே. கனகரட்னா அவர்கள்.

'1958ம் ஆண்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் இலங்கை வரலாறு, உலக வரலாறு, வரலாற்றில் இலக்கியம் சமயம், அரசியல், அறிவியல் எனப் பல விடயங்களைக் கற்பித்தவர் இவர். இவரின் மூலமாகத்தான் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய், அரவிந்தர், தாகூர் போன்று மேலும் பலரை அறிந்து கொண்டேன். நூலகத்தில் புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் இவரே'

என்கின்றார் இவரது இன்னோர் மாணவரும் நவீன சிந்தைகளைக் கொண்டவர் என அறியப்படுபவருமான  திரு ஜீவகாருண்யம்.

';என் இனிய நண்பரான ஆசிரியரும் நூலகருமான திரு சபாரட்னம் அவர்களுக்கு அந்த மறக்க முடியாத சில அனுபவங்களுக்காக  நன்றி செலுத்த விரும்புகின்றேன். மிகக் கடினமான சூழலில் கூட எனக்கு உதவ அவர் பின் நின்றதில்லை. போர்க் காலச் சூழல் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தும் ஒரு துவிச் சக்கர வண்டியில் நாம் இருவரும் அனைத்தையும் சாதித்தோம். எம்மைச் சுற்றி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்கும்போது  அவர் மிர்சியா இலியாட்சின் ஆக்கம் தொடர்பாக தனது மதிப்பீட்டை வழங்கிக் கொண்டிருந்தார்.  எல்லாவற்றுக்கும் மேலாக தனது சொந்த உதாரணத்தின் முலம் சைவத்தின் மிகச் சிறந்த அம்சங்களை எனக்கு உணர்த்தினார். அவற்றை அவர் தமது நீண்ட வாழ்க்கையினூடாக தம் உள்ளத்தில் ஒன்றிணைத்திருக்கின்றார்'

2002ல் உப்சாலாவில் வெளிவந்த 'குடியேற்ற காலத்துக்கு முற்பட்ட தமிழகத்திலும் ஈழத்திலும் பௌத்தம்'. என்ற நூலின் முகவுரையில் மேற் கண்டவாறு குறிப்பிடுகின்றார் உப்சாலாப் பல்கலைக் கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள்.

'அவர் ஒரு குடத்திலிட்ட விளக்கு, சைவசித்தாந்தத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு ஊரறியாப் பேரறிஞர். தமது ஆத்ம திருப்திக்காகக் கற்று இலைமறை காயாக வாழும் ஒரு சில அறிஞர்களுள் சபாரத்தினமும் ஒருவர்'

என்கிறார் யாழ் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரான  திரு சுசீந்திரராசா அவர்கள்.

அறிஞர் என்பதை அப்பட்டமாகக் காட்டிய ஊடகங்கள் அறிஞரானதற்கான அடித்தளத்தை மட்டும் காட்டாமல் விட்டது ஏன் என்று மனதிற்குள் எழுந்த  வினா  இவரிடம் நேரடியாகவே அணுகும் தூண்டலை ஏற்படுத்தியது. இந்த அடிப்படையில்


 'சிறு வயதிலிருந்து எனக்கு இருந்த வாசிப்புப் பழக்கமே என்னை மற்றவர்கள் அறியும் நிலைக்கு உயர்த்தியது. வெறும் கல்வித் தகைமை மட்டும் இருந்திருந்தால் நானும் ஆசிரியத் தொழிலுடன் என்னை மட்டுப்படுத்திக் கொண்டு சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்திருப்பேன். வாசிப்புப் பழக்கம் எனக்குக் கிடைத்த அரிய சொத்து என்றே எண்ணுகின்றேன்'.

வாசிப்புப் பழக்கத்துக்கு முதல் அடியிட்டவர் எனது தாய் தான். தன் பிள்ளைக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்ட வேண்டும் என்ற அறிவியல் நோக்கில் அவர் எதையும் செய்யவில்லை. அவர் தன்னையறியாமலேயே செய்த மகத்தான பணி கதை சொல்லுதல். நாள்தோறும் கதை சொல்லும் அந்தப் பழக்கமே எனது வாசிப்புக்கு அடிகோலியது என்றே நான் நினைக்கின்றேன்.

கிராமத்தில் நான்காம் வகுப்புப் படிக்கும் போதே தட்டுத் தடங்கலின்றி விரைந்து வாசிப்பதைப் பார்த்த ஆசிரியர் வித்துவான். இ. பொன்னையா அவர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களுடைய 'பாண்டவர் லீலை' என்ற பாடநூலை என்னைக் கொண்டு வாசித்துக் காட்டுவார். அப்போதிருந்தே பொழுது போகாத நேரங்களில் வீட்டிலிருந்து இலங்கை நாவல்களை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். புதுப்புது வெளியீடுகளான சுத்தானந்த பாரதியின் யோகசித்தி, திருமந்திர விளக்கம் போன்றவற்றை அவர் படிக்கும் போது நான் பின்புறமாக நின்று எட்டி எட்டிப் பார்ப்பேன். படிக்க விருப்பமா என்று கேட்பார். ஆம் என்று தலையாட்டுவேன். ஓரிரவு மட்டும் தான் தருவேன் என்பார். 300 பக்கம் என்றாலும் குப்பி விளக்கில் இரவிரவாகப் படித்து முடித்துவிட்டுக் கொடுத்து விடுவேன்.  ஆறாம் வகுப்பில் கணித பாட ஆசிரியர,; சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த இளிச்ச வாயன், ஏழை படும்பாடு போன்ற பிரெஞ்சு நாவல்களைத் தந்தார். வாசிக்கும் பழக்கம் கூடியது. ஆனந்த போதினி, ஆனந்த விகடன், பின்னர் கல்கி, கலைமகள் போன்றவற்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

1944ல் நான் புனித அந்தோனியார் கல்லூரியில் 8ஆம் வகுப்புப் படித்த காலத்தில்  ஆங்கில இலக்கியம் படிப்பித்த ஆசிரியரான வி.அரசன் 'வாசிப்பு மனிதனைப் பூரண மனிதனாக்கும், பேச்சு ஆயத்த நிலையில் வைத்திருக்கும், எழுத்து சரியாக நுட்பமாகச் சிந்திக்க வைக்கும்'என்ற பிரான்ஸிஸ் பேகனின் வாசகத்தைக் கத்திக் கத்திச் செவிகளில் திணித்துவிட்டார். பெரும்பாலும் எமது முதல் பாடவேளை ஒழுக்க அறிவியலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அப்பாடவேளையில் பெரிய பெரிய தொகுதிகளாக உள்ள சிறுவர் கலைக்களஞ்சியம், புக் ஒவ் நொலேட்ஜ் போன்றவற்றில் ஒவ்வொரு தொகுதியாகக் கொண்டு வந்து ஒரு பாட வேளைக்கு ஒரு விடயம் என்ற அடிப்படையில் எமக்கு ஒவ்வொன்றாக வாசித்து விளக்குவார். எத்தனை வேலைகளுக்கிடையிலும் படுக்கப் போகுமுன்னர் பத்து நிமிடமாவது ஒரு புத்தகம் வாசித்துவிட்டுப் படுக்க வேண்டும் என்பார்.

என்னுடன் படித்த நண்பர் திரு.இ.கிருஷ்ணபிள்ளை அவர்கள்  நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும், உண்டும், என்றும் புத்தகங்களுக்கிடையில் இருக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்துவார். இச் சூழலால் வாசிக்கும் பழக்கம் மேலும் கூடியது. ஒருவரிடம் நூல் இருந்தால் 5 மைல் தூரம் நடந்து போய் என்றாலும் இரவல் வாங்கிப் படிக்கும் அளவுக்குப் புத்தகத்தில் ஒரு வேட்கை உருவாகியது.

1947இல் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 20 கண்ணாடி அலுமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானம் கணிதம் போன்றவற்றைக் கண்ணாடிக்குள் பார்த்தும் பிறவற்றை கையிலெடுத்துப் பொருளடக்கத்தைப் பரிச்சயம் செய்தும் கொள்வேன். நான் படிக்காத பாடமானாலும் அவற்றில்; என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று அவர்களுக்குக் காட்டிக் கொடுக்குமளவிற்கு நினைவு கூர்மையாக இருந்தது.


 'தற்போதைய யாழ். மாநகரசபைப் பொது நூலகம் 1951ஆம் ஆண்டு முற்றவெளி நகர மண்டபத்துக்குக் கிழக்கே வாடி வீட்டுக்குத் தெற்கிலுள்ள கட்டடத்தின் மேல் மாடியில்  இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே அங்கத்தவராகச் சேர்ந்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை இந்த நூலகத்தில் அங்கத்தவராக இருக்கின்றேன். 1960-64 இலண்டன் பேராதனைப் பல்கலைக்கழகப் பரீட்சைகளுக்குப் படிக்க இது உதவியது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி போன்றோருக்குத் தேவையான கிடைத்தற்கரிய நூல்கள் கூட இங்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். ஐசக் தம்பையா, கு. வன்னியசிங்கம் போன்றோரின் நூற்றொகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. 1965இல் சரித்திர நூல்கள் எழுதும் போது சிறிதும் அனுபவமில்லாத எனக்கு இங்குள்ள நூல்களே கை கொடுத்துதவின. நூலகம் எரிந்தபோது வேறு எவரையும் விட அதிகம் கவலைப்பட்டவன் நான் தான்';. என்று இன்றும் அதே கவலையுணர்வுடன் கடந்த காலத்தை நினைவு கூருகின்றார் இவ்வறிஞர்.


தனது பழைய மதிப்பைக் கணிசமாக இழந்து விட்டபோதும் கணினி போன்ற நவீன துறை சார்ந்த புதிய நூல்கள் மட்டுமன்றி சிறந்த கலை நூல்களையும் கொண்டிருக்கின்றது யாழ்.மாநகரசபைப் பொது நூலகம். வரலாற்றுத்துறை சார்ந்த முக்கிய புத்தகங்களை கொண்டிருக்கின்றது யாழ். பல்கலைக்கழக நூலகம். என தனது கருத்தைக்; கூறுகின்றார்


வாசிப்புப் பழக்கம் ஒன்றில் வீட்டிலிருந்து அல்லது படிப்பிக்கும் ஆசிரியரிடமிருந்து தான் பிள்ளைக்கு ஊட்டப்பட வேண்டும். நடைமுறையில் வாசிப்புப் பழக்கத்துக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளாமலேயே தனது படிப்பை முடித்துவிட்டு பெற்றோராகவோ அல்லது ஆசிரியராகவோ மாறும் பண்பு இச் சமூகத்தில் இருக்கும் வரை இந்த பலவீனம் தொடர்ந்து நிலை கொள்வது தவிர்க்க முடியாதது.

இருபதாவது வயதிலேயே தன்னுடன் கூடப் படித்தவர்களால் ஏழசயஉழைரள சநயனநச எனப் புகழப்படுமளவிற்குத் தீவிர வாசிப்புக்காரராக இருக்கும் இவர் வாசகர் மட்டுமல்லர். இவரது நடவடிக்கைகளை மிகக் கூர்ந்து அவதானிக்கும் எவரும் மற்ற எல்லாத் தொழில்களையும் விட நூலகத் தொழில் இவருக்கு மிகப் பொருத்தமானது என்று அறுதியிட்டுக் கூறுமளவிற்கு நூலகரால் கூடச் செய்ய முடியாத எத்தனையோ உதவிகளை இவரிடமிருந்து பெற்ற பெரியவர்கள் மிக அதிகம். தனக்குத் தேவைப்படும் நூல்களை விடப் பிறருக்குத் தேவைப்படும் நூல்களைத் தேடி அலையும் பண்பு தான் இவரிடம் அதிகம். 74 அகவையைத் தாண்டிய பின்னரும் கூட எறும்பு போன்று மிகவும் சுறுசுறுப்பாக நூலக இறாக்கைகளுக்குள் நூல் தேடித் திரியும் இவரைப் பார்த்தால் புரியும்இ இவர் தேடும் நூல்களில் பெரும்பாலானவை இவருக்கு வேண்டிய எவரினதோ அறிவுத் தேடலுக்கு உதவப்போகின்றன என்று. சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீற்றர் சார்க் அவர்களுக்குத் தேவைப்படும் பெரும்பாலான நூல்களை எங்கிருந்தாலும் தேடி எடுத்து உதவுவதில் முன்னிற்பவர் இவர் என்பது இன்று நாம் நேரே கண்டுணரும் ஒன்று. நல்லதோர் வாசிப்புப் பழக்கமே நல்லதொரு நூலகராகவும் இயங்கும் ஆற்றலைக் கொடுத்திருக்கின்றது.

உங்களின் இறுதி இலட்சியம் எது வென வினவியபோது பொ. கைலாசபதியின் சிந்தனைகள் என்ற 700 பக்க நூலுக்கு குறிப்பு விளக்கம் எழுதி அதை வெளியிடுவதே தனது பெருவிருப்பம் என்கின்றார்.

நூலகத் துறை சார்ந்த இவரது பங்கு அளப்பரியது. மாணவப் பருவத்திலேயே நாரந்தனை இளைஞர் சங்கத்தை அமைத்து 23 சஞ்சிகைகளை இந்தியாவிலிருந்து தருவித்து வாசிகசாலை ஒன்றைப் பத்து ஆண்டுகள் வரை நடத்தியவர். கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையங்கள் போன்றவற்றுக்கு கணிசமான பங்களிப்பு வழங்கியவர்.

யாழ்ப்பாணப் பொதுநூலகராக இருந்த கலாநிதி வே.இ. பாக்கியநாதனிடமும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூலகராக இருந்து பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக இருந்த திரு.ஆர். தம்பையாவிடமும் நூலகவிஞ்ஞானம் படித்திருக்கிறார்;. அக்காலத்தில் பரீட்சைக்கு  தோற்றிய 17 பேரில் தாம் மட்டுமே சித்தியடைந்ததாகக் கூறுகிறார். கீழைத்தேச நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர். இரங்கநாதன் யாழ். பொது நூலகத்தின் வடிவமைப்புத் தொடர்பாக ஆலோசனை வழங்கும் பொருட்டு இங்கு வந்திருந்தபோது அவரை  நேரில் சந்தித்து உரையாடி தான் பிறந்த மண்ணுக்கே அழைத்துச் சென்று அங்கு  அனைவருக்கும் ஒரு விரிவுரையையும் ஒழுங்குபடுத்தி மூன்று மணி நேரம் அவருடன் கழித்ததையும் அவரின் அறிவை நினைத்துத் தான் பிரமித்ததையும் பெருமையுடன் நினைவு கூறுகின்றார்.

சுவீடன் உப்சாலாப் பல்கலைக்கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறையில் மூன்று மாதம் தங்கியிருந்து பேராசிரியரின் தொகுப்புக்களைச் சுவீடன் முறையிலான நூலக விஞ்ஞான முறையிலான பகுப்பாக்க முறையில் ஒழுங்குபடுத்தியவர். நூலகத் துறை சார்ந்து இவர் ஆற்றிய மாபெரும் பணியாக நாம் கருதக் கூடியது யாழ்ப்பாணத்தில் வெளி வந்த சமயம் சம்பந்தமான நூல்கள், கட்டுரைகள் போன்றவை தொடர்பாக இவர் தொகுத்த 150க்கும் மேற்பட்ட ஆக்கங்களுக்கான குறிப்புதவு நூல் விபரப் பட்டியலாகும். 1986ல் இவரால் தொடங்கப்பட்ட இப் பணியானது தற்போது தான் அச்சுருப் பெறுவதற்கான ஆயத்த நிலையில் இருக்கின்றது. இதைத் தொகுப்பதற்கு யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், யாழ். பல்கலைக் கழக நூலகம் மட்டுமன்றி தனிப்பட்டவர்களது வீட்டில் வைத்துப் பேணப்படும் நூல்களும் பயன்படுத்தப்பட்டாக இவர் சொல்கின்றார்.

நடமாடும் இந்த நூலகம் ஒரு நூலகத்தையே நிர்வகிக்கும்; வாய்ப்பு இல்லாது போனது இந்தச் சமூகத்தின் இழப்பு என்பது நிதர்சனமான உண்மை.

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
ஈழத்தின் நெருக்கடி காலத்து இலக்கிய ஆளுமை

அன்பும் அறநெறியும் ஆன்மீக வாழ்வும் இணைந்ததோர் அற்புதமான ஊர் இணுவையூர். போட்டதெல்லாம் பொன்னாக மிளிரும் வளங்கொழிக்கும் செந்நிறப் பூமி-- மனிதனதும் மண்ணினதும் தாகம் தீர்க்கும் வற்றாத இனிக்கும் கிணறுகள்-- பணம் பண்ணுவதற்கு புகையிலைக் கண்டு-- பதமாக உண்பதற்கு மரவள்ளிக் கிழங்கு--  வீட்டு நிகழ்வோ ஊர்ப் பொது நிகழ்வோ  அடுத்த ஊருக்கு உதவி தேடிப் போகத் தேவையில்லை என்னுமளவிற்கு மாலை கட்டவா, மங்கல முழக்கம் செய்யவா, மணங்கமிழச் சமைக்கவா, அபிஷேகம் செய்ய இளநீர் பறிக்கவா என தொழிலுக்கொரு தெருவென மக்களைக் கொண்ட நல்லதொரு பொருளாதாரச் சூழல்--
முகங்கழுவி உடுத்த உடுப்புடனேயே கும்பிட்டு வந்து தேத்தண்ணி குடிக்க வாகாய்,  வீட்டு வளவுக்குள் வயிரவர், கையொழுங்கைகளின் முகப்பில், தெருவோரங்களில்; கல்லுப்பிள்ளையார்கள், கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கு என்று அனைத்துத் திசையிலும் சமூக ஒருங்கிணைப்பு மையங்களாய் தேரோடும் வீதியுடன் கூடிய ஆகம விதிக்குட்பட்ட அம்மன் பிள்ளையார், முருகன் ஆலயங்கள், கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது என்ற வகையில் மச்சம் அளையாதவர்களையும் தமது சக்தியால் மடை வைக்கத் தூண்டுகின்ற பத்திர காளி என்று, தடுக்கி விழுந்து எழும்பிப் பார்த்தால் முன்னே ஒரு தெய்வம் அமர்ந்திருக்கும் என்று சொல்லுமளவிற்கு நல்லதொரு ஆன்மீகச் சூழல்---
சமய ஞானத்துடன் தாய்மொழி, அயல்மொழி இரண்டிலும் பாண்டித்தியம் பெறும் வகையில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது இந்து மகளிர் கல்லூரி என்ற பெருமையைச் சுமக்கின்ற இராமநாதன் கல்லூரி என்னும் முதலாம்தர பாடசாலை, இலங்கைத் தீவில் வயதில் மூத்த இரண்டாவது சைவப் பாடசாலை என்ற பெயர் தரித்த அன்றைய சைவப்பிரகாச வித்தியாசாலை, சைவம் தழைக்கவென உருவாக்கப்பட்ட சைவமகாஜன வித்தியாசாலை என்று பள்ளிப் படிப்புக்கென இந்தச் சிறிய ஊருக்கு மூன்று பாடசாலைகள், சாதிக்கு மட்டுமன்றி குறிச்சிகளுக்கென்றும் வாசிகசாலைகளாய் இயங்கும் ஏழெட்டுப்பத்து சனசமூக நிலையங்கள்,  பாடசாலைப் பக்கம் எட்டிப்பார்க்காதவர்கள் அல்லது எட்டிப்பார்க்கும் வசதியற்றவர்கள் கூட திருக்குறள் போன்ற நீதி நூல்களையும் பாரதம் போன்ற காப்பியங்களையும் கந்த புராணம் போன்ற சமய நூல்களையும் செவிவழி பெறுவதற்கான சிறந்த சொற்பொழிவுக் கூடங்களாக அமைகின்ற கோவில் மண்டபங்கள், சுருட்டுக் கொட்டில்கள், அரசியல் முதற்கொண்டு அடுத்தவரின் அந்தரங்கங்கள் வரை அலசப்படும் வீட்டுத் திண்ணைகள், வேலிப் பொட்டுகள், கௌரவிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்த பின்னர்தான்  கல்விப் பின்னணியை அறிய ஓடுமளவிற்கு அறிவில் சிறந்த அறிஞர்கள், பேரறிஞர்கள், சித்தர்கள், சாத்திர விற்பன்னர்கள், பரியாரிகள், விஷக்கடி வைத்தியர்கள், விவசாய விஞ்ஞானிகள், கலைஞர்கள், கைப்பணி செய்வோர் என்று அறிவு சார்ந்தவர்களும் கல்வித் தகைமையின் அடிப்படையில் மட்டும் கௌரவம் பெறும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், எனப் பல தொழில் சார்ந்தவர்களும் ஒருங்கே வசிக்கின்ற பேறு பெற்ற நல்லதொரு பட்டறிவும் பகுத்தறிவும் நிரம்பிய சூழல்.
ஒரு காலத்தில் தூர இடங்களில் இருந்து வந்து பிள்ளை பெற்றுத் துடக்குக் கழிவும் செய்துவிட்டு திரும்பும் வசதி படைத்த புகழ் பூத்த மகப்பேற்று ஆஸ்பத்திரி,  இட்ட இடைஞ்சல்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் விழுந்தடித்து ஓடிவரப்பண்ணுமளவிற்கு சக்தி வாய்ந்த சாத்திர விற்பன்னர்கள், உள வைத்தியத்துக்குப் பேர் போன காரைக்கால் சுவாமியார், விஷக் கடிக்கு பேர் போன முருகையா வாத்தியார், ஆயுள் வேத வைத்தியத்துக்குப் பேர் போன செல்லப்பாப் பரியாரியார் என்று நல்லதொரு மருத்துவச் சூழல்---
தூங்கி எழுந்தால் பண்ணிசையோ பாட்டிசையோ வாத்தியக் கருவிகளின் ஓசையோ என்று கலைகளின் சங்கமமம், நாடகக் கலைஞர்கள், சங்கீத விற்பன்னர்கள், புலவர்கள், கவிஞர்கள், பல்கலை வேந்தர்கள் என இயல் இசை, நாடகம் என முத்தமிழ் சார்ந்த அறிஞர்கள், கலைகளைக் கற்பிக்க ஒரு நுண்கலைப்பீடம், கலைகளை வளர்க்க கோவில் விழாக்கள், ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை போதிக்காமல் செயற்படுத்திக் காட்டுமளவிற்கு வேட்டியும் நசனலுமாக இன்றும் உலாவிக் கொண்டிருக்கின்ற எமது அன்றைய வாத்தியார்கள், இன்றைய அம்மாக்களின் கோலம் கணிசமாக மாறிவிட்டபோதும் ஒரு அம்மா எப்படி இருந்தா, இருப்பா என்பதற்கு அத்தாட்சியாக தட்டுடுப்பும் வகிடெடுத்த குடும்பியுமாக இன்றும் உலவும் அம்மாக்கள், என்னதான் தொலைக்காட்சியின் ஊடுருவல் இருந்தாலும் ஊர்ப் பொது நிகழ்வில்  தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்கள் அனைத்தையும் பேணும் வகையில் பட்டுப் புடவை, தலை நிறைய மாலை, என்று ஒன்று கூடும் மக்கள் என  நல்லதொரு கலாசார சூழல்--
இணுவை மண் உண்மையில் இணையிலி தான். உலகப் புகழ் பெற்ற இணுவில் கந்தனின் மஞ்சம் இந்த மண்ணுக்குரியது. சுடலையுடன் இணைந்த வகையில் மூலஸ்தானத்தில் பஞ்சலிங்க வடிவில் அமர்ந்திருக்கும் காரைக்கால் சிவன் காலத்தால் முந்தியது.  வேதத்தில் சேர்க்கவென்று வலிது முயன்றும் பயனடையாது தோல்வியின் சின்னங்களாக இன்றும் இருக்கும் அன்றைய அமெரிக்கன்மிசன் பாடசாலைக் கட்டிடமும் ஆஸ்பத்திரி வளவிலுள்ள தேவாலயமும்... இது மட்டுமா! பட்டறிவும் படிப்பறிவும் இணைந்து உருவாகின்ற ஞானம் (றளைனழஅ) என்ற சொல்லின் அத்தாட்சிகளாக  பல ஞானிகளை கொண்ட பெருமை பெற்றது இந்த மண்.
இந்த மண் பற்றி இத்தனை பீடிகை ஏன்?. ஒரு மனிதனைச் செதுக்குவதில் அவன் வாழும் சூழல் மிக முக்கியமானது. இந்த மண்ணுக்குரிய சகல அம்சங்களதும் வார்ப்பாகத் தான் நான் இருக்கின்றேன். இருக்கவும் விரும்புகின்றேன். நீங்களும் கூட விரும்பியோ விரும்பாமலோ உங்கள் சூழலிடமிருந்து தப்பிக்கவே முடியாது. பொதுவாகவே தமிழ்ச் சமூகத்தில் போதனைகள் எடுபடுவதில்லை. முக்கியமாக இணுவை மண்ணில் இந்த எடுபடாத தன்மை சற்று அதிகம். இங்கு ஒவ்வொருவரும் தாம் நடந்து கொள்ளும் முறையினு10டாக அடுத்தவருக்கு வழிகாட்டலை மேற்கொள்ளலாமே தவிர வேறு எந்த வகையிலும் அறிவூட்டலை மேற்கொள்வது சாத்தியமில்லை. நான் பிறந்து வளர்ந்த இச் சூழல், இச்சூழலுடன் அடிக்கடி நான் முரண்படும் சந்தர்ப்பங்கள், இந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள், மீண்டும் இந்தச் சூழல் என்னை தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலுடன் நான் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே இன்னொருவர் பற்றிய எமது பார்வையில் செல்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.  ஏனெனில் அடுத்தவரை அளப்பதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் அளவுகோல் நாமேயன்றி வேறெதுவும் இல்லை. இணுவையூரில் அதிகம் பார்த்து வன்னி மண்ணில் அதிகம் பழகிய ஒரு இலக்கியவாதி, ஊடகவியலாளன், திறனாய்வாளன் என்ற பல்பரிமாணத் திறன் மிக்க சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களைப் பற்றிய எனது மதிப்பீடும் கூட இவற்றை அடிப்படையாககக் கொண்டே அமையும் என்பது தவிர்க்கமுடியாதது.
ஜேம்ஸ்பொண்ட் பாணியில் அல்லது அன்றைய முன்னணி நடிகர் ஸ்ரீகாந்தை நினைப்பூட்டும் வகையில் டிங்டொங் பெல்பொட்டம், சகிகட்டோ, ஹிப்பியோ-- இந்திய பாஷையில் சொல்வதானால் பாகவதர் கால கிராப்பு முடி, பெரிய கறுத்தக்கண்ணாடி என இணுவில் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத ஒரு உருவமாகவே எழுபதுகளின் பிற்பகுதியில் இவரைப் பார்த்திருக்கின்றேன். இவரது தந்தையுடன் ஸ்நேகம் கொண்ட அளவிற்கு இவரைப் பார்த்து சிரிக்கக்கூட எண்ணாத பருவம் அது. எழுபதுகளின் ஆரம்பத்திலேயே எழுத்துத் துறையில் இவர் பிரவேசித்துவிட்டபோதும், கதைப்புத்தகமே கண்ணாக எனது பருவம் இருந்தபோதும் இவரை இலக்கியவாதியாக அறிவதற்கான எந்தவொரு சூழலும் எனக்கு இருக்கவில்லை என்பதை நான் ஒத்துக்கொண்டேயாகவேண்டும். சிறுகதை உலகில் இவருடன் பழகக்கூடிய வாய்ப்பு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தான் ஏற்பட்டது எனினும் இவரை ஒரு ஊடகவியலாளனாகவே முதலில் சந்தித்திருக்கின்றேன். இந்தச் சந்திப்பானது இவரது வாரிசுகளில் முதன்மையானவர் என்று சொல்லக்கூடிய பு.சத்தியமூர்த்தியால் மேலும் வலுவூட்டப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று அறிவூட்டல் நிகழ்வுகளை மேற்கொண்ட அந்தக்காலப்பகுதியில் இவரின் சமூகப்பணிகளை இவருடன் இணைந்து பணிபுரிந்த பல இளம் படைப்பாளிகள் ஊடாக இனங்கண்டிருக்கின்றேன்.
எல்லாச் செயற்பாடுகளிலும் மூக்கை நுழைத்து தனக்குத் தானே கிரீடம் சூட்டிக்கொள்ளும் பண்போ அல்லது தனது வால்களை தூண்டிவிட்டு தனக்கு முகமன் தேடும் பண்போ இவரிடம் நான் கண்டதில்லை என்பதற்கு நானே சாட்சியாக அமைந்திருப்பது விந்தை தான். மூன்று சந்தர்ப்பங்கள் இவரை எடைபோடுவதற்கு போதுமானது என நினைக்கின்றேன். முதலாவது சந்தர்ப்பம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளில் பல இடங்களில் கலந்துரையாடலில் பங்கேற்றிருக்கின்றேன்.  தாம் முன்பே அறிந்திராத மனிதர்களின் ஆற்றலை ஒருவருக்கு எடுத்துரைத்து அவரை அம்மனிதர்களிடம் சுயமாக அணுகச் செய்து அவர்களை ஒரு  நிகழ்வில் பங்கேற்றச் செய்வது பொதுவாக சராசரி மனிதரிடம் காணமுடியாததொன்று. சமூகப் பணி ஆற்றுவதற்கும் 'பெரிசுகள்' வந்துதான் அழைக்கவேண்டும் என்ற வர்க்கத்தில் நான் இல்லை என்பதை உணர்ந்து சிறிசுகளை என்னிடம் அனுப்பினாரா அல்லது சிறிசுகளிடம் தலைமைத்துவப் பாங்கை வளர்த்துவிடுவது என்ற நோக்கில் திரைமறைவில் இருந்துகொண்டே அனைத்தையும் செயற்படுத்தினாரா என்பதை மதிப்பிடும் முதிர்ச்சி அந்த நேரத்தில் என்னிடம் இருக்கவில்லை. எனினும்கூட முகத்துக்குப் புன்னகைத்து முதுகுக்குப் புறங்கூறும் பண்பினராக அன்றி இன்றுவரை என்னுடன் அதே அன்புடனும் மதிப்புடனும் இருக்கக்கூடிய ஒரு இளைய தலைமுறையொன்று அவரால் வளர்க்கப்பட்டிருப்பது அவர் இந்த மண்ணுக்கு விட்டுச்செல்லப்போகும் சொத்து என்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு.
 மற்றிரு சந்தர்ப்பங்களும் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்டவை. பொதுவாகவே இலக்கியச் சூழலில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்கமுடியாததது. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மாற்றுக்கட்சியைப்பற்றிய பிரலாபமே மேலாங்கியிருக்கும். புதுக்குடியிருப்புக்கு வரும்போதெல்லாம் அவருடன் அடிக்கடி கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடுத்தவரை விமர்சிக்கும் பண்பை நான் இவரிடம் கண்டதில்லை. பார்த்தவுடன் ஒரு சிரிப்பு. மாதமலருக்குரிய படைப்பை நேரத்திற்குள் தந்துவிடுமாறு பணிவான ஒரு வேண்டுகோள். அத்துடன் நாம் திரும்பவேண்டியது தான். மாதமலரை விமர்சிப்பவர்கள் தொடர்பாக ஏதாவது கேட்டால் ஒரு சிறுசிரிப்புடன் பதில் முடிந்துவிடும். மனிதர்களை விமர்சிப்பதை  விடுத்து விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் எனது பண்பை உணர்ந்து தான் இத்தகைய போக்கை இந்த இலக்கியவாதி பின்பற்றுகின்றார் என்று தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இவர் பற்றிய எனது தேடலில் நான் சந்தித்த அனைவரிடமும் இக்கேள்வியை எழுப்பியிருந்தபோதும் அடுத்தவர் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் பண்பு இவரிடம் இல்லை என்பதை அனைவருமே வலியுறுத்தியிருந்தனர். தான் பார்ப்பது, நினைப்பது அனைத்தையும் தனது படைப்பில் புகுத்திவிடுவதாலோ என்னவோ இவரிடம் அலட்டல் குறைவு அல்லது இல்லை.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் என்னை ஒரு இலக்கியத் திறனாய்வாளராக சமூகத்திற்கு இனங்காட்டிய நிகழ்வின் பின்னணியிலும் திருச்செந்திநாதனது பங்கு அளப்பரியது. தனது கவிதைத் தொகுதிக்கு மதிப்பீட்டுரை தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் என்னிடம் வந்த அந்த இளைஞனை இப்போதும் நினைவு கூருகின்றேன். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றும் அரைகுறையாகத் தன்னும் கிடைக்கப்பெற்றவனுக்குத்தான் கலை இலக்கியத்திற்கு நேரம் இருக்கும் என்ற ஆழமான நம்பிக்கை உடையவளாகத்தான் இன்றும் இருக்கின்றேன். இந்த எண்ணத்தை எனக்குள் உருவாக்கிவர் இணுவிலிலேயே மிக வசதி படைத்தவர்களில் ஒருவராக இருந்த எனது தந்தைதான். 'புக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பவன்தான் தேவாரம் பாடுவான். இல்லையேல் தனது வயிற்றுப்பாட்டுக்கு வழியைத் தேடுவதே அவன் முதல் பணியாக இருக்கும்' என்று நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டே அடுத்தவருக்கு உதவுவதில் முன்னிற்கும் அவரது பண்பு இத்தகைய ஒரு சிந்தையை எனக்குள் ஏற்படுத்தியதோ தெரியவில்லை. இலக்கியத்தை சுவைப்பது என்ற ஒன்றைத்தவிர ஏழ்மையில் உழல்வோருக்கு என்ன செய்யலாம் என்று பெண்கள் புனர்வாழ்வு நிலையம் ஒன்றின் தலைவராக இருந்து அவர்களின் அடிப்படை வசிகளுக்கு எங்கே போய் எப்படி இறைஞ்சலாம் அங்கலாத்துக்கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் வந்தது தான்  முல்லைக்கமல் என்ற அந்த இளைய கவிஞனின் இந்த வேண்டுகோள். வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணில் எங்கள் அனைவரையும் முகஞ்சுழிக்காது உள்வாங்கிய அந்த மண்ணின் வாரிசு ஒன்றை ஊக்குவிக்கவேண்டிய அனைவருமே? கைவிரித்தநிலையில் முகந் தெரியாத அந்த கவிஞனுக்கு நம்பிக்கையூட்டி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அவனை என்னிடம் அனுப்பியவர் இந்த மனிதர். போராட்ட சூழல் ஒன்றில், வயிற்றுப்பாட்டுக்கு வழியற்றவர்களுக்கு வழிதேடுவதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டிருந்த எனக்கு இலக்கிய விமர்சனத்தில் எனக்கு இருந்த ஆர்வமின்மையை எடுத்துக்கூறினேன். கவிதை சரியில்லை என்றால் மேடையிலேயே வேண்டிக்கட்டுவாய் எனப் பயமுறுத்தியும் பார்த்தேன் அவன் மசிந்து கொடுக்காமல் நீங்கள் வந்தாற் போதும் என சிறு பிள்ளை போல் கண்கள் கலங்க வேண்டியது இன்றும் பசுமையாக இருக்கிறது. இறுதில் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்துவிட்டு யார் உன்னை என்னிடம் அனுப்பியது எனக் கேட்டேன். 'மிஸ்ஸிடம் போ 'அவர் சம்மதிக்காவிட்டால் யார் போய்க் கேட்டாலும் சரிவராது. அவரைச் சம்மதிக்கச் செய்வது உனது கெட்டித்தனத்தில் தான் உண்டு. எனக்கூறி 'அண்ணை' தான் அனுப்பியவர் என்று சிறு புன்னகையுடன் கூறினான். அந்த வெளியீட்டு நிகழ்வில் எவ்வளவிற்கு அவனது கவிதை வெற்றியீட்டியதோ அதைவிட மேலாக நடுநிலைவாய்ந்த ஒரு திறனாய்வாளராக சமூகம் என்னைக் கொண்டாடியது. அந்தத் தருணத்தில் கூட 'என்னால் தானே எல்லாம்' என்ற மிடுக்கோ, மிதப்பான பார்வையோ இன்றி அல்லது 'எப்படி என்ரை விளையாட்டு' என்று இன்றைய இலக்கியவாதிகளின் பாணியில் தனது காலில் விழுந்து கும்பிடப்பண்ணும் மனிதராக அவரது வாரிசுகள் அவரை இனங்காணவில்லை என்றே படுகின்றது. பள்ளிப்பருவத்தில் நான் படித்த முதல் நாவலான பார்த்தசாரதியின் பொன்விலங்கில் தொடங்கி, ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் சமூக எழுத்துக்களில் மனதைப் பறிகொடுத்து மேத்தாவின் கவிதைகளில் முக்குளித்து ஒரு சிறுவட்டத்துக்குள் திருப்திப்பட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு பெரிய வட்டத்துக்குள் தள்ளி உலக இலக்கியத்தின் நெழிவு சுழிவுகளை ஆழ ஆராயத் தூண்டிய ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இதனைப் பார்க்கின்றேன்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தங்கள் படைப்புகளுக்கு சரியான தளமின்றி வாய்ப்புகள் கிடைக்காது விரக்திநிலையில் இருந்த இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் விரக்தியும் சமூக எழுத்துக்களைப் புறந்தள்ளி தன்னுணர்வு எழுத்துக்களை மோகிக்கும் சூழலுக்கு ஒரு எதிர்ச்சூழல் உருவாக வேண்டும் என்ற வேகமும் இணைந்து தோற்றம் பெற்ற 'எழு' கலை இலக்கியப் பேரவையின் காப்பாளர்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்ற இவரது விருப்பத்தைக்கூட இவரது வாரிசுகளை விட்டே செயற்படுத்தினார். நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலும் மனந்தளராது ஆற்றல்மிக்க புதிய படைப்பாளர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி வெளிவந்த எழு சிறுகதைகள், முல்லைக் கமரின் மனதும் மனதின் பாடலும் கவிதைத் தொகுப்பு இந்த எழு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடுகளே.
 'ஒருவனின் எழுத்து அவனது செயற்பாடு, சமூகம் மீதான அவனது கரிசனை எல்லாவற்றும் நெருங்கிய தொடர்புண்டு. இவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரித்துப் பார்க்கமுடியாது' என வெட்டுமுகம் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவர் கூறிய  கூற்றுக்கு முரணாக  இவரது எந்தவொரு படைப்பும் இல்லை என்பதை இவரது படைப்புகளை வாசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர் என நினைக்கின்றேன். தனது சுற்றாடலை, தனது சமூகத்தை, தனது இனத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு விடயமும் தன்னை எழுதத் தூண்டுகிறது என்ற இவரது கூற்றுக்கமையவே இவரது படைப்புகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த அவதானிப்பும் அனைத்து நடவடிக்கைகளில் கைகொடுக்கும் மனப்பான்மையுமின்றி மக்கள் எழுத்து சாத்தியப்படாது.
'நவீன தமிழிலக்கியத்துறைகளில் சமூகப் பொறுப்புணர்வுடனும் அயரா ஊக்கத்துடனும் செயற்பட்டு வரும் ஈழத்து எழுத்தாளர்களில் தனிக்கவனத்துக்குரியவர்களுள் ஒருவராக திகழ்பவர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் என கூறும் கலாநிதி நா. சுப்பிரமணியன் (வெட்டுமுகம் அணிந்துரை), திருச்செந்திநாதனின் படைப்பாற்றலின் முனைப்பு தன்னைச் சூழ உள்ள மக்கள் திரளின் நலனை முதன்மைப்படுத்தும் ஒன்று என்பது பற்றி யாருக்கும் ஐயத்துக்கு இடமில்லை எனக்கூறும் பேராசிரியர் சி.சிவசேகரம் (மணல்வெளி அரங்கு மதிப்பீட்டுரை), இந்த மண்ணில் நடைபெறும் வாழ்க்கைச் சிதறல்களுக்கு இதற்குள் நின்றுகொண்டே முகங்கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்துணிபு திருச்செந்திநாதனிடத்து துல்லியமாக காணப்படுகின்றது எனக் கூறும் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகிய மூன்று திறனாய்வாளர்களது கூற்றுகளுக்கிடையிலான ஒற்றுமை இதற்கு மேலும் வலுவூட்டுகின்றது.
சிதம்பர திருச்செந்திநாதன் என்ற மனிதர்
சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் இணுவை மண்ணின் சராசரி வார்ப்பில் ஒன்று. என்னைப் போன்றே இவரது வாழ்நிலையிலும் இவர் பிறந்து வளர்ந்த இணுவை மண்ணின்; சூழல், இச்சூழலுடன் அடிக்கடி இவர் முரண்படும் சந்தர்ப்பங்கள், இந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள், மீண்டும் இந்தச் சூழல் இவரை தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலுடன் இவர் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றன அதிக செலுத்துகின்றன என்பதை இவரது படைப்புகள் வெளிக்கொணர்கின்றன. கோவில்களால் நிரம்பப்பெற்ற இணுவை மண்ணின் கோவில் உற்சவங்களில் இறை நம்பிக்கை அதிக உள்ள இவரைக் காண்பது மிக அரிது. சமூக ஒன்றிணைப்பு மையங்கள் என்ற பணியிலிருந்து விலகி சமூகத்தின் செல்வாக்கு மிக்க ஒருசிலரின் ஆட்சி மையங்களாக கோவில்கள் இருப்பதில் இவருக்கு சம்மதமில்லை. எனினும் யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்ற வகையில் இவர்களுடன் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கட்டாமல் மௌனமாக ஒதுங்கிவிடும் சுபாவம் இவருடையது. படைப்புலகம் என்று வரும்போது கூட எதிரும் புதிருமான இலக்கியவாதிகள் அனைவருடனும் ஒரேமாதிரியான உறவு வைத்திருக்கக்கூடிய மனதராகவே இவரை இனங்காண முடிகிறது. 'பல்வேறு பிரச்சினைகளுடன் கூடிய சமூகத்தின் வெட்டுமுகத்தைக் காட்டும் சிதம்பரதிருச்செந்திநாதன் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் போதகராக தம்மைக்காட்டிக்கொள்ளவில்லை. இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள் என வாசகர்களை அழைக்கும் அளவோடு நிற்கின்றார் என வெட்டும் முகம் சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கிய அணிந்துரையில் நா.சுப்பிரமணியன் கூறுவதில் மிகையேதுமில்லை.
கிட்ட இருந்து பழகியவர்களுக்கு திருச்செந்திநாதன் ஒரு மனிதத்;தன்மை மிக்க மனிதர். அளவோடு பேசி அன்போடு உபசரித்து அதிகமாக ஊக்குவிக்கும் ஒரு பண்பாளர். இலைமறை காயாக இருந்து இளைய தலைமுறையின் படைப்பாற்றலை ஊக்குவித்தது மட்டுமன்றி அதற்கு களமமைத்தும் கொடுத்த ஒரு பண்பாளர் என்பது வன்னி மண்ணில் இவரோடு பழகும் வாய்ப்புக் கிட்டிய 'பெரிசுகள்' பலரினதும் ஒருமித்த கருத்து.
 'காய்தல்' இன்றி 'உவத்தலை' மட்டும் மூலமாகக் கொண்டு இவரால் உருவாக்கப்பட்ட இளைய தலைமுறைப்படைப்பாளிகள் மிக அதிகம். சிறுகதை என்றால் இது தான் இலக்கணம். கவிதைக்கு இலக்கணம் இது என்று குருகுலக்கல்வியின் மனப்பாடம் செய்விக்கும் போக்குக்கு மாறாக இன்றைய குழந்தைக்கல்வி போல் எதையும் எந்தவடிவத்திலும் உருவாக்குவதை ஊக்குவிப்பவர் இவர் என்பது இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளது ஒருமித்த கருத்து.
'அவரது கதைகள் ஒவ்வொன்றும் கவனமாகச் செதுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கும் போது தான் சொல்வது வாசகரைத் தெளிவாகச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகின்ற படைப்பாளிகள் நடுவே அவரை அமர்த்துகின்றது'.
நெருக்கடிக்கால ஊடகவியல் பங்களிப்பு
நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளடக்கத்தைவிட வடிவமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய மேலைத்தேய பாணியிலான  வெளியீட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகள் நொடிந்து போன நிலையில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்துக்கு முதன்மை கொடுத்து  வெளியீட்டு முயற்சிகளை மேற்கொண்ட ஒருசிலரில் சிதம்பர திருச்செந்திநாதனின் பங்கு அளப்பரியது. 80 களிலேயே வெளியீட்டு முயற்சிகளில் இணைந்து பணியாற்றிய அனுபவத்துடன் 90களில் வெளிவந்த ஈழத்து வெளியீடுகள் அனைத்தினது வடிவமைப்பிலும்; முற்றுமுழுதாக இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. கற்றறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வெளியீட்டின் உருவமைப்பில் அக்கறை செலுத்திய ஊடகவியலாளர்கள் உணவு மருந்து மட்டுமன்றி புத்தகத் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்பட்ட நெருக்கடி காலத்தில் சோர்ந்து ஒதுங்கியபோது கொப்பித் தாள்களில் உள்ளுர் கறுப்பு மைகளைப் பயன்படுத்தி ஏராளமான வெளியீடுகளை உருவாக்க அயராது பாடுபட்டவர் என்ற பெருமையை ஈழத்தின் கடந்த முப்பது ஆண்டு கால போராட்ட வாழ்வியலை ஆவணப்படுத்த முயலும் எவருமே பதிவர்.
தேர்ந்த திறனாய்வாளர்

மக்கள் இலக்கியத்தின் சார்பாளர்
இவரது இலக்கியப் பயணத்தினூடாக இவரைப் பார்க்க முனையும்போது தனது சூழல் மீதான ஆழ்ந்த அவதானிப்பு இவரது படைப்புகளுக்கு ஆதாரம். அடுத்தவர் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளாக நினைத்து அதனை அனுபவித்து சேர்த்த அனுபவங்கள் இன்னொரு முதலீடு. பொய்மை, பொறாமை, பொருளாசை, சீதன வழக்கம், இனப்பிரச்சினையின் கொதிநிலைச் சூழலின் அவலங்கள் முதலியன சமூகத்தில் நிகழ்த்தி வந்துள்ள பாதிப்புகளைச் சிதம்பரநாதனின் கதைகள் சித்தரிக்கின்றன என்ற நா. சுப்பிரமணியன் அவர்களின் கூற்றுக்கேற்ப
 'சூழவும் வாழ்வியல் தொடர்பான பல்வேறு நெருக்கடிகளும் பொருண்மியச் சுமைகளும் இருந்தாலும் எங்கள் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுள் ஒருவனாக நானும் இருப்பதையிட்டு சந்தோசப்பட முடிகின்றது என என்னுடையதும் அம்மாவினுடையதும் என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவரது கூற்றின் எதிரொலிகளுக்கான ஓரிரு எடுத்துக்காட்டுகள் இவை.
'நிவாரண வெட்டால் ஒடுங்கிப்போன பொதுசனம் போல விளக்கு வெளிச்சம் துடித்துக் கொண்டிருந்தது'
 'மேலே பாரத்தால் வானம் எங்கள் எதிர்காலம் போல் இருக்கவில்லை. துலக்கமாகப் பிரகாசித்தது'.
'சமகால நிகழ்வுகளைப் போலவே வெய்யில் அகோரமாக எறித்தது' என்றெல்லாம் எழுதுவதற்கு சூழலுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே உண்டு. அக்கறையின்றி சீர்கெட்டுப்போன வளவுப் பயிர்களை ஆட்சியில் உள்ளவர்கள் மறந்து போன தமிழ்ப்பிரதேசங்களுக்கு ஒப்பிடவும், 'வேலைக்குப் போட்ட அப்ளிகேஷனை கவனிப்பாரற்றுக் கிடக்கும் அரசாங்கத்துக்கு அனுப்பும் மகஜருக்கு ஒப்பிடவும் முடியும்.
'நகரத்து அழுக்கினை கையில் தாங்கிக் கொண்டிருந்த பெண்மணி' என பிச்சைக்காரியை வர்ணிப்பதற்கும் நமது செம்பாட்டு மண்ணை ரத்தம் ஊறிய மண் என்று சொல்வதற்கும் சூழல் தொடர்பான சமூகப் பிரக்ஞை அவசியமானது. மினிபஸ் நெரிசலிலிருந்து விடுபடும் குதூகலத்தை பாடசாலை முடிந்து வெளியேறும் சிறுபிள்ளைகளின் குதூகலத்திற்கு ஒப்பிடுவதற்கு அது தொடர்பான ஆழ்ந்த அனுபவம் வேண்டும். 'உடல் களைக்க, மனம் களைக்க, தாகமும் பசியும் இணைந்து இம்சைப்படுத்த கிளாலிக்கடற்கரையில் படகுக்காகக் காத்திருந்த வன்னி இடப்பெயர்வைக்கூட இனிமையான பயணம் என்று சொல்வதற்கு நான்கு தசாப்தங்களைக் கடந்த ஒருவருக்கு முடிகிறது எனில் சூழலுடன் பொருந்தி வாழும் மனப்பாங்குக்கும் மேல் சூழலை நேசிப்பும் தன்மையால் மட்டுமே சாத்தியமாகும்.
'எதிரில் வருவோர் எல்லோரையும் விழியாலே எறிந்து கலைத்து, அந்தக்கணத்தில் அவர்களிடம் ஏற்படும் அதிர்வுகளை ரசிக்கும் பெண்ணின் பருவத்தை (எனக்காக?) வெறும் அவதானிப்பால் மட்டும் வெளிக்கொண்டு வரமுடியாது. அந்த அவதானிப்பை தனக்குள் போட்டுப்பார்த்து தனது அனுபவமாக்கினால் மட்டுமே அவ்வாறு எழுத வரும்.
'செம்மண் தரை தோசைக்கல்லாய் சுட்டது' என்று எழுதுவதற்கு அம்மாவிற்கு கூடமாட ஒத்தாசை புரியும் மகனின் அனுபவமாகவோ அல்லது வேலைக்குப் போகும் மனைவிக்கு ஒத்தாசை புரியும் வேலைக்குப் போகும் ஒரு கணவனின் அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியாது. சூழலை தனக்குள் முழுமையாக உள்வாங்கி, அதனுடன் ஒன்றிணைந்து அதனுடன் இரண்டறக் கலந்து வாழும் தன்மையின் ஊடாக பெற்ற அனுபவத்தின் மூலமே இத்தகைய உவமைகளை எழுத்தில் படைக்க முடியும்.
'வெறுமனே விரக்தியும் புலம்பலும், இருப்புத் தொடர்பான அச்சமும் அதனால் எழும் அகமனத்து உளைவுகளுமே நல்ல இலக்கியங்களாக அமைந்துவிடுவதில்லை. வாழ்வு பற்றிய தேடலும், அக்கறையும், எதிர்கால நம்பிக்கையுமே இலக்கியத்தின் கருப்பொருளாக அமைவது சிறப்பானது என்பதுடன் இவையே மனிதனை சூழலுடனும் சக மனிதர்களுடனும் பிரக்ஞை பூர்வமான உறவுகளை பேணத் தூண்டுகின்றன' என்பது இலக்கியம் தொடர்பான சிதம்பரநாதனது கருத்தியல்.  நான் வேறு எனது படைப்பு வேறு என்றோ, ஒரு இலக்கியவாதியின் படைப்பை மட்டும் மதிப்பிடுங்கள் அவரின் பின்னணியைப்பற்றி ஏன் அலட்டிக்கொள்கின்றீர்கள் என்றோ கோஷமெழுப்பும் இலக்கியப் பரம்பரையினராக சிதம்பர திருச்செந்திநாதன் இருந்திருப்பாராயின்  இந்த எழுத்துக்களை எழுத வேண்டிய தேவையே எனக்கு இருந்திருக்காது. ஓரிரு எழுத்துக்களைப் படைத்தவுடனேயே முதுகு சொறிவதற்கும், முகஸ்துதிக்கும் ஆள் தேடி அலையும் வேகத்தில் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற சத்திய வாக்கை காற்றில் பறக்கவிடும் பச்சோந்தி எழுத்தாளர்கள் மத்தியில் இவர் மிக வித்தியாசமானவர். எழுதின ஒரு எழுத்துக்கு சுவீப் அடித்தமாதிரி பவுசு வந்த கையுடனேயே தம்மைத் தாமே மூத்த எழுத்தாளராக பிரகடனப்படுத்தி இளைய தலைமுறையை தமக்கேற்ற வகையில் முது சொறிவதற்குப் பழக்கும் எழுத்தாளர் வட்டத்துக்குள் அடங்காமல் எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டபின்னரும் குடத்திலிட்ட விளக்காக ஆரவாரமின்றி அணையாத தீபமாக இன்றும் இருப்பவர். எமது எழுத்தும் எமது தனிப்பட்ட வாழ்வியலும் ஒன்றிலொன்று பிரிக்கமுடியாதளவிற்கு நெருக்கமாகப் பிணைந்திருப்பவை எனத் தீர்க்கமான முடிவுடன் வாழும் இந்த மனிதரை இவரது எழுத்துக்கள் தான் அறிமுகப்படுத்துகின்றது. இவரின் வாழ்வியலுக்கும் எழுத்துக்குமிடையிலான பிணைப்பை ஊரவள் என்ற முறையில் உறுதிப்படுத்தவேண்டிய அவசியமில்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

Sunday, November 08, 2015

முரண்களுக்குள் தொலையும் முழுமை



குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும், இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று.


இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு. குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப் பட வேண்டியது.

பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனூடாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப் போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும்.



கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப் படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத் தூண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர்.



'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக் கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வு உணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது.



சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். தேடலுக்கு ஒரு வேட்டு தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப் படுவதேயில்லை. ஆனால்தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப் பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை.



குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக் குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். (பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நூல்கள் நூலகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.) ஆனால் பெரும்பாலும் நடப்பது.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், பூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.



துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப் பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை தூண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத் திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

முரண்களுக்கும், முரண்களுக்குமிடையே குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நூறாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியூரோன்களில் பயன்படுத்தப் படாதவற்றை உடனே மூளை தூக்கி வீசிவிடுமாம். தூண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, தூண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள கால கட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பது, '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்து விட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "ரீச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்க வேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காண முடிகின்றது.

இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறி விடுகின்றது. குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும் குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப் பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்ற வகையில் களைதலே முதல் மேற் கொள்ளப்பட வேண்டியது.



ஆனால் எப்படிக் களைவது.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்கும் இடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது. தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும்.

கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலூட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப் படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குதூண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி ஆராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப் படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.



இரண்டாம் உலகின் முரண்கள் குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.



"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ்வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்"

"தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நூலை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர். இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நூல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலை நரைத்த மேதைகள்தான் என்பது "இவ்வளவு படித்துப் போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.



முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாற வேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.