Monday, August 01, 2005

மழை எனக்குப் பிடித்தமானது...

மழை எனக்குப் பிடித்தமானது...

எறிகணைத் துண்டொன்று
ஏற்படுத்தித் தந்த
'யன்னல்' வழி
எங்கள் ஓட்டுக் கூரையிலிருந்து
தடித்த கம்பிகளாய் நீளும்
மழை யன்னலுக்குள்
விழி நுழைத்து
மழையை ரசிப்பது எனக்கு பிடித்தமானது.

மழை எனக்குப் பிடித்தமானது...

வாசல் நனைத்தோடும் மழைநீரில்
கப்பல் விட்டு மகிழும்
எதிர்வீட்டுப் பள்ளிச் சிறுவனுக்கும்,
திண்ணையில் ஒரு காலும்
இறப்பில் ஒரு கையுமாய்
தெறிக்கும் நீர்த்திவலைகள்
உடலை நனைக்க
மழைநீரை ஏந்தி மகிழும்
அவன் தங்கைக்கும்
கிடைத்த வாய்ப்பு
இளமைக் காலமதில்
எனக்கு மறுக்கப்பட்டதெனினும்...

மழை எனக்குப் பிடித்தமானது...

வன்னி மண்ணுக்கு விரைந்து ஓடி
அகப்பட்ட இடமொன்றில்
அவசர அவசரமாய் போட்ட
சிறுகுடிலின்
'வரிச்சுத்தடி யன்னல்' ஊடாக
மழையை ரசிப்பதும் பிடித்தமாய் தான் இருக்கிறது.

ஓலைக் கூரையின்
எண்ணற்ற கீற்றுக்களிலிருந்து
ஒரே சமயத்தில், வெவ்வேறு அளவுகளில்
நின்றும், நிதானித்தும்,
விரைந்தும் வேகமெடுத்தும்
விழும் மழைநீரின்
பரிமாணங்களை
என் தாயின் விழிகள்
நினைவுட்டுவ தெனினும்
மழை எனக்கு பிடித்தமானது.

மழை எனக்கு பிடித்தமானது

செம்மணியின் உப்புவெளியில்,
தலை திருப்ப முடியாத நெரிசலின் அவிச்சலில்,
அங்குல அசைவு தந்த அசதியில்,
குளிர்ச்சி தேடி அந்தரித்த உடல்களின்
உச்சி குளிர்வித்த பொழுதில்...
நெற்றி மேடு பாய்ந்து,
விழி இடுக்குகளில் நுழைந்து,
நாசியின் பக்கவாட்டாய் பயணித்து
உதடுகளின் வெடிப்பை மேவிய போதில்...
குடை கவிழ்த்து ஏந்திய நீர்
வதங்கிச் சுருண்ட
பச்சிளம் பாலகனின் தாகம் தணித்த போதில்
மழை எனக்கு இன்னமும் பிடித்துப் போயிற்று.

மழை எனக்கு பிடித்தமானது...

நினையாப் பிரகாரமாய் நீடித்த பெருமழையில்
வாழ்ந்த சிறுகுடில் அள்ளுண்ட போதும்…
மிதக்கும் சட்டிகளை பிடிக்கும் வலுவின்றி
வெறித்த பார்வையுடன் மரத்து நின்ற போதும்…

விறைத்த உடலுக்கு விசையுட்ட
அடுப்புக்கு குடைபிடித்தவர்கள்
மதகுகள், மர அடி வேர்கள்
லொறிகள், டிராக்டர்களின் கீழ்
ஒதுங்க முண்டியடிப் போரென
மாதக் கணக்காய் நீண்ட
மரங்களின் கீழான மழைக்காலமொன்றை
இடம் பெயர்வாழ்வு எமக்கு பரிசளித்த போதும்…
குண்டும் குழியுமாய் நிரம்பிய தெருக்களில்
பாய்ந்து செல்லும் வண்டிகள்
கனம் கூடி அல்லது கண்மூடித்தனம் கூடி
சேற்று வெள்ளத்தை வாரியிறைத்த போதும்...
மழை எனக்கு இன்னமும்
பிடித்தமாய் தான் இருக்கிறது.


யுத்த மேகம் பொழியும்
குண்டு மழையின்
நீங்காத வடுக்களைச்
சுமக்கும் எவருக்கும்
மழை என்னைப் போல்
பிடித்தமாய் தான் இருக்கும்.

2 comments:

Chandravathanaa said...

சிறீகாந்தலக்சுமி

அருமையாக இருக்கிறது கவிதை.
ஏதோ ஒரு சோகம் கவிதைக்குள் இழைந்திருக்கிறது.

யாழில் இருக்கும் உங்களின் கவிதையை ஜேர்மனியிலிருந்து வாசிக்கும் போதுதான்
இணையஉலகத்தைக் கண்டு பிடித்தவர்களுக்கு மனசு நன்றி சொல்கிறது.

எனக்கும் மழை பிடிக்கும்.

Suka said...

அருமை. மழை ஒரு அற்புதமான நிகழ்வு. அதைப்பற்றிய நினைவுகள் கூட நரம்புகளை சிலிர்க்கவைத்து விடுகிறது. ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் உங்கள் கவிதை கொஞ்சம் ஆறுதலளிக்கிறது

வாழ்த்துக்கள்
சுகா