Monday, January 04, 2016

நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்

நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்


0.முன்னுரை

           ஓவ்வொரு நாட்டிலும் உள்ள எந்தவொரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் - அரச நிறுவனங்கள், தொழில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் வேறு எவ்வகையான ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ளும் நிறுவனங்கள் - அங்கு முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் செயற்பாடுகளை நாம் கண்கூடாகக் காண முடியும். நிறுவனத்;தின் பல மட்டங்களிலும் கண்காணிப்பாளர்களையும், மேற்பார்வையாளர்களையும், நிர்வாகிகளையும், இயக்குநர்களையும் நாம் காண்கின்றோம். இவர்களது சிறப்புப் பணி என்பது நிறுவனத்தில் பணி புரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அமர்த்தி, அவர்கள் பணிகளை வரையறுத்து அப்பணிகளை அவர்கள் செவ்வனே முடிக்கும்படி செய்து எல்லோருடைய பணிகளும் நிறுவனத்தின் பொதுக் குறிக்;கோளை நிறைவேற்றப் பயன்படுமாறு செய்வதேயாகும். இத்தகையதொரு பணி தான் முகாமைத்துவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

          பொதுவாக முகாமைத்துவம் என்ற பதம் மேலாட்சி, மேலாண்மை, செயலாட்சி, நிர்வாகம் என்ற பல பெயர்களில் வௌ;வேறு ஆசிரியர்களால் உபயோகிக்கப்பட்டாலும் அதன் உண்மையான, பொரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதம் முகாமைத்துவம் ஆகும்.

          இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை முகாமைத்துவம் என்பது ஒரு கலையாகவே கருதப்பட்டது. தனிப்பட்டவர்களின் செயல் திறமாக, சிலருக்கே கைவந்த ஒரு கலையாக எண்ணப்பட்டது. ஆனால் முகாமைத்துவம் ஒரு கலையன்று; அது அறிவியல் துறையின் பாற்பட்டது தான் என்ற நிலை அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முகாமைத்துவம் அறிவியல் துறையின் பாற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளாத பலர் இன்றும் உள்ளனர் என்பதும் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஓரளவு பொருத்தமாகவே உள்ளதென்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

           முகாமைத்துவம் சிலர் பால் கலைத்திறனாகவே மிளிர்கின்றது எனினும் எண்ணற்ற நிர்வாகிகள் தேவைப்படும் நவீன காலத்தில், பயிற்சியின் மூலம் நிர்வாகிகளை உருவாக்கிக் கொள்ள உதவுவது முகாமைத்துவ அறிவியல் முறையே எனலாம்.

           வீட்டை நிர்வகிக்கும் இல்லத்தரசி முதற்கொண்டு நாட்டை நிர்வகிக்கும் அரசு வரை முகாமைத்துவம் இன்றியமையாததாகின்றது. இந்த வகையில் ஒரு சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட நூலகமும் இதற்கு விதி விலக்கல்ல. சுருங்கக் கூறின், எத்துறையாயினும், எத்தொழிலாயினும், பணியாளர்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்படும் போது, அங்கெல்லாம் முகாமைத்துவம் என்ற செயல்முறை தோன்ற வேண்டியுள்ளதுடன் அதுவே தவிர்க்க முடியாத ஒரு செயற்கருவியாக உருவெடுப்பதையும் நாம் காணலாம்.

          முகாமைத்துவக் கொள்கைகளை செம்மைப்படுத்தவும், விரிவு படுத்தவும், ஒவ்வொரு நாடும் முயன்றாலும், முகாமைத்துவத் துறையின் இத்துணை வளர்ச்சிக்கு அமெரிக்க நாடு தான் காரணம் என்றால் அது மிகையாகாது. டேலர் Taylor கில்பெர்த் Hilberth மேரி பார்க்கர் ஃபாலட் ஆParker and Ballet போன்ற வல்லுநர் இத்துறையை விரிவு படுத்தவும், செம்மைப்படுத்தவும் பெரிதும் உதவினர் என்பதும் இவ்வளர்ச்சியின் வாயிலாக முகாமைத்துவ கொள்கைகள் உலகெங்கும் பரவி பல்வேறு நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.


1.முகாமைத்துவம் - வரைவிலக்கணம் 

           'செய்து முடிக்க வேண்டிய எந்தப் பணியையும் அதற்குரிய பணியாளர்களைக் கொண்டு செய்து முடிப்பதே முகாமைத்துவம் ஆகும்.'

            பொதுவாக முகாமைத்துவம் என்ற சொல்லுக்கு சரியான வரைவிலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். அப்படிக் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் கூட எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், முகாமைத்துவம் என்பது தனிப்பட்ட ஒரு முகாமையாளர் (Manager) புரியும் பணிக்கு மேற்பட்டதாகும். முகாமைத்துவம் ஒரு செயற்பாங்கு. அதன் மூலம் ஒரு நிறுவனத்தின் சிறந்த நோக்கங்களை முகாமையாளர் அந்நிறுவனத்தின் பணி புரியும் பணியாளர்களின் பணிகள் மூலம் பெறுகின்றார். எனவே, எந்தவொரு நிறுவனம் தனது பணியாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் தன்னுடைய முக்கிய நோக்கங்களை சிறிதும் மாற்றமின்றி பெற விரும்புகின்றதோ அந்நிறுவனத்திற்கு முகாமைத்துவம் அவசியமாகின்றது. முகாமைத்துவக் கோட்பாடுகளைத் தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, தொழில் சார்பற்ற சாதாரண நிறுவனங்களும் அரசு துறைகளும் சமூக சேவை கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். இதையே முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அவர்கள், 'முகாமைத்துவக் கோட்பாடுகளைக் கடைப்பிடியாத ஒரு அரசு மணலால் கட்டப்பட்ட வீடு போன்றது' எனக் குறிப்பிட்டார். முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகளை விளக்கும் வகையில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு வரைவிலக்கணங்களை நோக்குவோம்.


(1) ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவினுடைய நோக்கங்களை முடிவு செய்து, அலசியாராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதன் மூலம், அந்நோக்கங்களை அடையும் நுணுக்கமே முகாமைத்துவம் ஆகும்.
- பீட்டர்சனும் பிளாமனும்.

(2) நிறுவனத்தின் பணியாளர்களையும், வளங்களையும் கொண்டு தகுந்த திட்டங்கள் மூலமாகவும், ஒழுங்கமைப்பு மூலமாகவும், உரிய ஊக்குவிப்பு மூலமாகவும், தகுந்த கட்டுப்பாட்டின் படியும் அந்நிறுவனத்தின் நோக்கங்களை அறுதியிட்டு அவற்றை அடையவிழையும் ஒரு தனிப்பட்ட செயல்பாங்கே முகாமைத்துவமாகும்.
        - இராம முத்தையன்.


2.நூலக முகாமைத்துவம். 

          நூலகம் என்பது சேவை ரீதியானதும் சிக்கல் நிறைந்ததுமான ஒரு அமைப்பாகக் கருதப்படுகின்றது. தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக மனிதனுடைய அறிவு விரிவடைந்தால், அந்த அறிவுப் பசியைப் போக்குவதற்கு நூலகம் ஒத்துழைப்பு நல்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நூலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்களும் உயர் கல்வித்தரம் உடையவர்களாக Academic Background அல்லது கல்வித் தரம் உடையவர்களாக Educational background இருப்பதால் நூலக அமைப்பின் முகாமைத்துவப் பாங்கு மற்றைய தொழில் ரீதியான அமைப்பில் இருந்தும் வேறுபட்ட தொன்றாக உள்ளது. முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் வரைவிலக்கணங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் யாவும் எல்லாவகையான நிறுவனங்களுக்கும் பொதுவானவையாக இருப்பதனால் இவை சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனமாகக் கருதப்படும் நூலகத்துக்கும் பொருத்தமானவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வகையில், நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்கு அளிக்கப்படும் வரைவிலக்கணங்களும், விளக்கங்களும் கூட பொது முகாமைத்துவக் கோட்பாடுகளை General management Principles  அடிப்படையாகக் கொண்டவையே. இதன் அடிப்படையிலேயே கரட்டினுடைய நூலகவியல் கலைச்சொல் அகராதியில் நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

          'நூலக சேவையில் இருந்து மிக உயர்ந்த நன்மையையும் பயன்பாட்டையும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய முன்னுரிமைகளை ஒழுங்குபடுத்துதல், அலுவலர்களை ஊக்குவித்தல், நூலக வளங்களைப் பாதுகாத்தல், செயற்பாடுகளை மதிப்பிடுதல் முதலிய தொழில் நுட்பங்களின் செயல்திறன் முகாமைத்துவம் எனப்படும்.'

          எனவே நூலகத்தில் பணியாற்றும் சகல அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, தகுந்த திட்டமிடல், ஒழுங்கமைப்பு, ஊக்குவிப்பு, கட்டுப்பாடு என்பவற்றினூடாக நூலகத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு வாசகனையும் திருப்திப்படுத்தும் மிக உயர்ந்த நோக்கத்தை அடைய முயற்சி செய்யும் ஒரு செயற்பாடே நூலக முகாமைத்துவம் எனக் கூறலாம்.


3.முகாமைத்துவமும் நிர்வாகமும். 

         நூலக முகாமைத்துவம் பற்றி ஆராய்வதற்கு முன் முகாமைத்துவத்திற்கும் நிர்வாகத்;துக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது. ஏனெனில் முகாமைத்துவம், நிர்வாகம் ஆகிய இரு சொற்களும் பெருமளவில் ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டாலும் அதற்குரிய தெளிவான இலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். பெரும்பாலான ஆசிரியர்கள் இவ்விரு சொற்களையும் ஒரே பொருள்பட பயன்படுத்துகின்றார்கள். ஆனால் இரு சொற்களும் மிகவும் வேறு பட்டவை. நிர்வாகம் மனிதர்களுடைய நடவடிக்கைகளை பொதுவாகக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால் முகாமைத்துவம் தொழிலில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் நடவடிக்கைகளை மட்டும் கட்டுப்படுத்துகின்றது. நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் முடிவு செய்வதாகும். செயல்முறைப்படி வகுக்கின் நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தி;ன் நோக்கங்களை அடைவதற்கான எல்லா வழிமுறைகளையும் நிர்ணயம் செய்வதாகும். அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட நோக்கங்களை மனிதத் திறமையினை இயக்குவதன் மூலம் அடைய முற்படுவதே முகாமைத்துவமாகும். சுருங்கக்கூறின் நிர்வாகம் என்பது முடிவாக்கலில் ஈடுபடுகிறதென்றும், முகாமைத்துவம் அம்முடிவுகளை செயல் படுத்துகிறதென்றும் குறிப்பிடலாம். ஒரு சில நிறுவனங்களில் இவ்விரு பணிகளும் ஒரே நபரால் செய்யப்படினும் இவ்விரு பணிகளும் தனித்தனித் தன்மை வாய்ந்தவை.


4.நூலக முகாமைத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.    

           பண்டு தொட்டே முகாமைத்துவம் மனித நடவடிக்கைகளை செம்மையாக நடத்திட உறுதுணையாக இருந்திருக்கின்றது. பிறரை வேலைக்கமர்த்தி, தாம் விரும்பிய திட்டங்களை நிறைவேற்றும் போதெல்லாம், சமூகத் தலைவர்களும், குழுத்தலைவர்களும், நிறுவனத் தலைவர்களும், தொழில் முதலாளிகளும் முகாமைத்துவம் என்ற கருவியையே கையாள வேண்டியிருக்கின்றது. பணியில் ஈடுபடுத்தப்படு;ம் ஆட்களின் எண்ணிக்கை அதிகரி;க்க முகாமைத்துவத்தில் சிக்கல்களும் நுண்முறைகளும் வளரத் தொடங்கின. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் ஆரம்ப காலத்தையும் நோக்குதல் நன்று.

          ஆதி காலத்தில் நூலகம் என்பது வெறுமனே நூல்களைப் பாதுகாத்து வைக்கும் களஞ்சியம் எனப்பட்டது. நூல்கள் பாவனைக்குட்படுத்தப்படுவதைப் பற்றிய உணர்வு நூலகருக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கவில்லை. அது மட்டுமன்றி நூல்கள் யாவும் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டோ அல்லது மேசையுடன் சங்கிலி மூலம் பிணைக்கப்பட்டோ காணப்பட்டன. ஆனால் மனிதனது சிந்தனா சக்தி வளரத் தொடங்கவும் நூல்களைப் பற்றிய அறிவும் அவற்றைப் பாவிப்பதற்குரிய உணர்வும் மனிதனிடத்தில் வளர்ந்த போது தான் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த நூல்களைத் திறந்த தட்டுகளில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன் வாசகர் நூல்களைத் தாமே தெரிவு செய்யவும் அதனை இரவல் எடுத்துச் செல்லவும் முடிந்தது. எனினும் நூலகர் வெறுமனே இரவல் கொடுத்து மீளப் பெறுதலையே கடமையாகக் கொண்டிருந்த நிலையில் நூலக முகாமைத்துவத்தின் அவசியம் அங்கு உணரப்படவில்லை. தற்காலத்தில் நூலகமானது சமுதாய, கலை, கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற ஒரு நிறுவனமாக விளங்குவதுடன் வாசகர்களுக்கு வேண்டிய சகலவிதமான சேவை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரித்ததுடன் நவீன நுண்ணிய ஆய்வுகளையும் பரிசோதனைகளையும் அவன் மேற்கொண்டதன் விளைவாக நூல்களின் எண்ணிக்கையிலும் தரத்திலும் மிகப்பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

           ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு விதமான நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பரிசோதனை முயற்சிகள் வெளியாகத் தொடங்கியதுடன் நூல்களைத் தட்டுக்களில் பிரித்து வகைப்படுத்தி அடுக்குவதிலும் அதனை வாசகர் எந்த சிரமமுமின்றித் தெரிவு செய்து உபயோகிப்பதிலும் சிக்கல் ஏற்படத் தொடங்கியது. அத்துடன் வாசகரிடமிருந்து வெளிப்படும் பல்வேறு வகையான வினாக்களுக்கு விடையிறுக்கும் பொறுப்பும் நூலகருக்கு ஏற்பட்டது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சி நூலகத்துறையில் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் நூலக முகாமைத்துவத்தின் அவசியத்தையும் உணர வைத்தது. நூலகம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (பகுப்பாக்க, பட்டியலாக்கப்பகுதி, பருவ இதழ் பகுதி, நூல் கொள்வனவுப்பகுதி, அரசாங்க ஆவணப்பகுதி, வாசகர் சேவைப்பகுதி போன்ற) செயல்படத் தொடங்கவும் நூலக அலுவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவும் நிர்வாகத்தை திறம்பட நடாத்துவதில் நூலகர் சிரமப்பட வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் மற்றைய தொழில்துறைகளைப் போன்று முகாமைத்துவக் கோட்பாடுகளை நூலகத்துறைக்கும் பயன்படுத்த முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் வளர்ச்சியை நூலகங்களில் பண்டு கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் வாசகரின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நூலகத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் அமுல் படுத்தவும் நூலக முகாமைத்துவம் மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளமையை நாம் காணலாம்.


5.நூலக முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகள்.

           ஓவ்வொரு முகாமைத்துவத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். அந்நோக்கம் வெளிப்படையாகக் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிடப்படாமலும் இருக்கலாம். இந்த வகையில் நூலக முகாமைத்துவத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். நூலக முகாமைத்துவத்தின் வெற்றி, அது தனது நோக்;கங்களை எந்தளவிற்கு அடைந்து கொள்கின்றது என்பதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. அன்றி நூலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கையில் அல்ல. தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொள்ளாது, இருக்கின்ற அலுவலர்களைக் கொண்டு சிறந்ததொரு சேவையை ஒரு நூலகமானது அதனுடைய வாசகர்களுக்கு வழங்க முடியுமானால் அது வெற்றி என்றே கூறலாம்.

           மனிதனுடைய முழுத் திறமையையும் பயன் படுத்துவது முகாமைத்துவம் ஆகும். ஒரு நூலகர் சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் நூலகத்தில் பணி புரியும் அலுவலர்களை அவர்கள் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி நன்முறையில் ஊக்குவித்து அவர்களது திறமையைப் பெருக்கிச் செயலாற்றும்படி செய்ய முடியும்.

           ஒரு நூலகத்தின் நோக்கங்கள் அந்நூலகத்தில் பணி புரியும் சகலரதும் ஒருங்கிணைந்த பணிகளின் மூலம் தான் அடையப்பட முடியுமே தவிர, தனிப்பட்ட அலுவலர் ஒருவரது பணியால் அல்ல. இவ்விதம் நூலக அலுவலர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதன் மூலம் அலுவலர்களின் திறன் மிகுதியடைந்து பணிகள் திறமையாகச் செய்யப்படுகின்றன. எனவே தான் நூலக முகாமைத்துவம் அலுவலரின் ஒருங்கிணைந்த குழுவிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

           ஒரு நூலகத்தின் பணிகள் எல்லாவற்றையும் அந்த நிறுவனத்தின் தலைவரே செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நூலகர் தானே நேரடியாகச் செயற்படாது அப்பணிகளை பிற அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் செம்மையாகச் செய்யும்படி இயக்குவித்தல் வேண்டும். ஒரு நூலகரினது வெற்றி, பிற ஊழியர்களின் மூலம் நூலகத்தின் நோக்கங்களை அவர் எந்த அளவில் அடைகின்றார் என்பதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது எனக் கூறலாம்.

          ஒரு பணியை நூலகர் தாமே செய்வதற்கும் பிறரை செய்வதற்குத் தூண்டுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு தொழில்நுட்ப அறிவு தேவை எனினும் அது முகாமையாளர்களுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுவதில்லை. தங்களின் கீழ் பணியாற்றும் இதர அலுவலர்களின் தொழில்நுட்ப அறிவை செம்மையான முறையில் பயன்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாகும். எனவே சிறந்த முகாமைத்துவம் என்பதும் பிறருடைய திறமையை உரிய முறையில் பயன்படுத்துவதேயாகும்.

          முகாமைத்துவம் என்பது தொட்டுணர முடியாததொரு நடவடிக்கை. இதனை யாரும் பார்க்கவோ தீண்டவோ முடியாது. முகாமைத்துவத்தின் இருப்பு, அந்நிறுவனத்தின் செம்மையான செயற்பாட்டின் மூலமே அறியப்பட முடியும்.

           முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லர். ஒரு சில நிறுவனங்களில் ஒருவரே முகாமையாளராகவும் உரிமையாளராகவும் இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்;களில் இவர்கள் வௌ;வேறு ஆட்களாகவே இருக்கின்றனர்.


6.நூலக முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்.   

          நூலக பாவனைக்காக ஒவ்வொரு வாசகனிடமிருந்தும் அறவிடப்படும் ஒவ்வொரு ரூபாவிற்குமான மிக உயர்ந்த பங்களிப்பை வழங்குவதன் மூலம், ஒரு நூலகமானது வாசகனைத் திருப்திப்படுத்தும் பொறுப்பு வாய்ந்ததாகவுள்ளது. நூலகமானது வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு நிறுவனமாகவிருப்பதனால் அதற்கு வருடாந்தம் மேலதிக நிதி தேவைப்படுகின்றது. நூலகத்தின் மேலதிக நிதித் தேவைக்கான காரணத்தை ஒவ்வொரு வாசகனும் அறிந்து கொள்வதில் விருப்பமுடையவனாக இருக்கலாம். அவன் மட்டுமன்றி அனுபவம் வாய்ந்த நூலகத்துடன் தொடர்புள்ள அதிகாரிகள் கூட வெறுமனே புகழ் மாலைகளை விடத் தொகை ரீதியாகவும் உண்மையானதுமான தரவுகளிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான முகாமைத்துவம் என்பது ஒரு நூலகர் மேலதிக நிதியை அவர் விரும்பியவாறு பெறுவதற்குரிய உண்மையானதும், தொகைரீதியானதுமான தரவுகளை வழங்கக் கூடிய அறிவை, அபிவிருத்தி செய்வதற்கு உதவுகின்றது எனலாம்.

          வழமையான வேலை முறைகளைச் சிறப்பாகச் செய்யக் கூடிய திறமையை அதிகரிப்பதற்கு நூலக முகாமைத்துவம் உதவுகின்றது. சாதாரணமாக ஒரு நூலகத்தினுடைய பெரும்பாலான வேலைகள் இயந்திரத் தன்மையுடையதாகவும் செய்வதையே திரும்பச்செய்தல் (ஒப்பித்தல்) என்ற தன்மை உடையதாகவும் இருப்பதுடன் அவை தொகை ரீதியான ஆய்வுக்கு வழிப்படுத்தப்படக் கூடியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக, கட்டளை அனுப்புதல் Ordering பட்டியலாக்கம், அட்டைகளைக் கோவைப்படுத்தல், நூல் கட்டுதல், சுழற்சி Circulation நூல் இருக்கைகளில் நூல்களை முறையாக வைத்தல் என்பன இதற்குள் அடங்கும். நூலக முகாமைத்துவம் என்பது இவ்வேலைகளை சிறப்பாகச்; செய்யக் கூடிய ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றது.

          விஞ்ஞான முகாமைத்துவம் என்பது, நவீன வேலைப்பகுப்பாக்கத்தின் திறவுகோலாகக் கருதப்படும் வேலைப்பகுப்பாய்வை Work analysis தருகின்றது. இதன் விளைவாக நூலகர் ஒரு அலுவலரிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும். எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைப் புத்தி சாதுரியத்துடனும் தெளிவுடனும் அறிந்து கொள்ள உதவுகின்றது.

           விஞ்ஞான முகாமைத்துவம் ஒரு நூலகர் நூலகத்தின் நிதி முறையை சிறப்பாகக் கொண்டு நடாத்த உதவுகிறது. ஓவ்வொரு பிரிவுக்குமுரிய தொழிற்பாடுகளுக்குமான நிதித்தேவையினை அவர் நன்கு அறிந்தவர் என்பதால் அவர் புத்தி சாதுரியத்துடன் வீண் விரயங்களைத் தவிர்க்கக் கூடியவராக இருப்பதுடன் சேவைப் பயன்பாட்டை அதிகரிக்கவும் அதன் மூலம் தன் வாசகருக்கு பூரண திருப்திகரமான சேவையை வழங்குவதற்கும் நூலக முகாமைத்துவம் உறுதுணையாக உள்ளது எனலாம்.

          நூலகருக்கும் அவரின் கீழ் கடமையாற்றும் இதர அலுவலர்களுக்கு மிடையேயான கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் களைந்து, உளமார்ந்த உறவினை உருவாக்க முகாமைத்துவம் அவசியமாகின்றது.

          முகாமைத்துவக் கோட்பாடுகள் வளர்ச்சியடைந்ததன் காரணமாக நூலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு உரியமுறையில் பயிற்சி அளிக்கப்படுவதனால் நூலக சேவையைத் திறம்பட நடத்த நூலக முகாமைத்துவம் உதவியாகவுள்ளது.

          எல்லாவற்றிற்கும் மேலாக நூலகம் என்பது சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஒரு நிறுவனம் ஆகும். தனிப்பட்ட மனிதர்களின் சேவை என்பது இங்கு மிக முக்கியமானது. தனிப்பட்ட மனிதர்களின் திறமையை சமுதாய முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த நூலக முகாமைத்துவம் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.


7.நூலக முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள். 

          முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் பற்றிப் பல்வேறு ஆசிரியர்களாலும் பல்வேறு கருத்துக்களும் விளக்கங்களும் முன்வைக்கப்பட்டிருப்பினும், லூதர் கூலிக் டுருவுர்நுசு புருடுஐஊமு என்பவரது முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் பற்றிய விளக்கம் நூலக முகாமைத்துவத்திற்கு பொருத்தமாகவுள்ளது. இவர் குறிப்பிடும் முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்ததுடன் தேவைக்குத் தகுந்த வகையில் இவற்றை மாற்;றியமைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வடிப்படைக்கூறுகளை கூலிக் ஆங்கிலத்தில் Pழுளுனுஊழுசுடீ என்ற ஒரு சொல்லி;ல் ஒழுங்கு படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:

1. திட்டமிடல்  Planning
2. ஒழுங்கமைத்தல் Organising
3. அலுவலர்களை நியமித்தல் Staffing
4. இயக்குவித்தல் Directing
5. ஒருங்கிணைத்தல் Coordinating
6. அறிக்கை அனுப்புதல் Reporting
7. திட்டப்பட்டியல் தயாரித்தல் Budgeting

         மேற்கூறப்பட்ட முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் மட்டுமன்றி, கட்டுப்படுத்தல் Controlling செயலூக்கமளித்தல் Motivatingஎன்பனவும் நூலக முகாமைத்துவத்தின் சிறப்புக் கூறுகளாக அமைய முடியும்.


7.1.திட்டமிடல்

         முகாமைத்துவப் பணிகளில் மிக முக்கியமானது திட்டமிடல் ஆகும். ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை ஒழுங்கான முறையிலும் திறமையான வகையிலும் அடைய வேண்டுமெனின் அக்குறிக்கோளை எவ்வாறு சிறந்த வகையில் அடைவது என்பது பற்றி மிக ஆராய்ந்து திட்டம் ஒன்று வகுக்கப்படல் வேண்;டும். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திட்டமிடல் என்னும் சொல்லுக்கு வரைவிலக்கணம் கொடுத்தல் இயலாது. எனினும் ஜோர்ச் டெரி என்பவரது கீழ்க்காணும் வரைவிலக்கணம் ஓரளவிற்கு சிறந்ததாகவுள்ளது.

          'நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு முகப்படுத்தி ஊகத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடைய, செய்ய வேண்டிய நடவடிக்கைகளைத் தீட்டுவது திட்டமாகும். எனவே திட்டமிடல் என்பது முக்கியமாக செயல்முறையை தேர்ந்தெடுத்தலையே குறிக்கின்றது. நோக்கங்களை அடைய பல மாற்று வழிகள் இருக்கும் நிலையில் தான் திட்டம் தீட்டலுக்கு அவசியம் எழுகின்றது. இவ்வகையில், ஒரு நூலகத்திலும், தலைமை நூலகரின் பிரதான கடமைகளில் ஒன்றாக திட்டமிடல் அமைகின்றது. நூலகத்திற்கு வரும் பல்வேறு தரப்பட்ட வாசகர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய சேவையை வழங்கும் மிகப் பொறுப்புள்ள கடமையைச் செய்யத் திட்டமிடல் உதவுவதால் நூலகத் திட்டமிடலுக்கு பரந்து பட்ட அறிவும் அனுபவமும் தேவைப்படுகின்றது.


திட்டத்தின் கூறுகள்.

திட்டத்தின் கூறுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

1. நோக்கங்கள்  ழுடிதநஉவiஎநள
2. கொள்கை முறைகள்    Pழடiஉநைள
3. வரையளவு  ளுவயனெயசன
4. செயல்முறை  Pசழஉநனரசந
5. நிகழ்ச்சிமுறை  Pசழபசயஅஅந
6. திட்டப்பட்டியல்  டீரனபநவ
7. முறை  ஆநவாழன
8. நடைமுறைத் திறம்  ளுவசயவநபல

திட்டமிடலில் அடங்கியுள்ள படிகள்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.
2. நோக்கங்கள் ஏன் செய்யப்பட வேண்டும்.
3. அதை எப்படி, எங்கே, எப்போது, யார் செய்தல் என்பதைத் தீர்மானித்தல்.
4. திட்டத்தின் காலம், திட்டத்திற்குத் தேவையான பணியாளர், எதன் மூலம் திட்டத்தினை செயற்படுத்த வேண்டும், திட்டத்தின் சாதனங்கள் ஆகியவற்றை நிர்ணயம் செய்தல்.
5. செயலின் விளைவை எவ்வாறு மதிப்பீடு செய்தல் என்பதை நிர்ணயித்தல்.

7.2.ஒழுங்கு அமைத்தல்.

          ஒரு நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடையும் வகையில் அந்நிறுவனத்தின் உள்துறைகளை உரிய முறையில் அமையச் செய்வதே ஒழுங்கு அமைப்பு ஆகும். திட்டம் தீட்டியபின், அதைச் செயற்படுத்தும் வகையில் தேவையான நூல், உபகரணங்கள் வாங்குவதும், பணியாளர்களை வேலையில் அமர்த்துவதும் நிறுவனத்தைப் பல துறைகளாகப் பிரிப்பதும் இன்றியமையாதவையாகும். உதாரணமாக, ஒரு நூலகத்தில் பல்வேறு வகையான பிரிவுகள் உண்டு. அவ்வாறே ஊழியர், நூலகக் கவனிப்பாளர், நூலக உதவியாளர், உதவி நூலகர், சிரேஷ்ட உதவி நூலகர் எனப் பலதரப்பட்ட அலுவலர்களும் உள்ளனர். எனவே நூலகத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்தல் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஏற்ற வகையில் அலுவலர்களை நியமித்தல் என்ற பல்வேறு பணிகளையெல்லாம் ஒன்று திரட்டிச் சுருக்கமாகக் கூறுதலே ஒழுங்கு அமைப்பாகும்.

7.3.அலுவலர்களை நியமித்தல்.
          இது அலுவலர்களை நூலகத்திற்குச் சேர்த்துக் கொள்வதனையும் அவர்களை நூலகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் சேவைக்கு அமர்த்துவதனையும் குறிக்கும். உதாரணமாக, நூலகத்தின் ஒரு பிரிவான பட்டியலாக்கம் பகுப்பாக்கப் பிரிவை எடுத்துக் கொண்டால் அங்கு துறைக்குப் பொறுப்பான உதவி நூலகர் அவரின் கீழ் கடமையாற்றும் நூலக உதவியாளர், நூலகக் கவனிப்பாளர், தொழிலாளர் எனப் பல தரப்பட்ட பிரிவினர் உள்ளனர். இவ் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான பணிகளை வரையறுப்பதும் அவர்;களுக்குரிய பயிற்சியளிப்பதும் அவர்களின் அடிப்படைக் கல்வித்தகைமைகளுக்கு ஏற்ப அவர்களது உத்தியோகத்தை வரையறுப்பதும் நூலக நிர்வாகத்தின் கடமையாக இருப்பதனால் அலுவலர்களை நியமித்தல் என்ற முகாமைத்துவ அடிப்படை கூறு நூலக முகாமைத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம்.

7.4.இயக்குவித்தல்.

           இயக்குவித்தல் என்னும் செயல்முறை நூலகருக்குக் கீழ் கடமையாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதலையும் அவர்களின் பணிகளை மேற்பார்வை செய்தலையும் குறிக்கின்றது. இதனை மேல் நோக்காகப் பார்க்கும் போது எளிமை வாய்ந்ததாகத் தோன்றினாலும் நடைமுறையில் சிக்கல் வாய்ந்ததாகும். ஓவ்வொரு நிறுவனத்தின் முகாமையாளரும், தன் கீழ் கடமையாற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் நிறுவனத்தின் சட்டம், ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் வகையில் வழிகாட்டல் வேண்டும். அலுவலர் ஒவ்வொருவரும், தாம் பணி புரியும் நிறுவனத்தின் அமைப்பு முறையையும், துறைகளுக்கு இடையே உள்ள உறவு முறையையும், ஒவ்வொரு துறையினதும் பணிகளையும், தமது பணிகளையும், ஆணை உரிமைகளையும் நன்கு அறிந்து கொள்வார்களேயானால் முகாமையாளரின் இயக்குவிக்கும் பணி என்பது இலகுவானதாகின்றது.

7.5.ஒருங்கிணைத்தல்.

           ஒரு செயலுக்கான திட்டத்தை வகுத்து விட்டால் மட்டும் குறிக்கோளை நிச்சயமாக அடைந்து விட முடியும் என்ற உறுதி ஏற்பட்டு விடாது. ஒரு நிறுவனத்தில் உள்ள அலுவலர்களின் கூட்டான ஒருமித்த முயற்சியின் மூலமே குறிக்கோளை அடைய முடியும். தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படும் போது தான் இவர்கள் ஒவ்வொருவரின் முயற்சியும் மற்றவரின் முயற்சிக்கு ஆதரவாக அமைவதாக இருக்கும். தனி நபர்களின் தனி முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படாவிடில் இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட பணிகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றும் போது தங்களது சக அலுவலர்களின் முயற்சிகளை இழக்கவோ தடுக்கவோ கூடும். ஆகவே ஒவ்வொரு அலுவலரும் ஒரு குழுவாகக் கூட்டார்வத்துடன் செயலாற்றுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

7.6.அறிக்கை அனுப்புதல். (சுநிழசவiபெ)

           அறிக்கை அனுப்புதல் என்ற செயல்முறையின் கீழ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அவ்வப்போது நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி அறிவித்தல், நிறுவனத்தின் நடவடிக்கைகளை பதிவேடுகள் மூலமும், ஆய்வுகள் மூலமும், தெரியப்படுத்துதல் என்பன அடங்கும். பதிவேடுகளின் மூலம் தலைமை நூலகர் நூலகத்தின் சிறந்த செயல்பாடுகளைத் தனது பொறுப்பதிகாரிக்குத் தெரியப்படுத்த முடியும். அது மட்டுமன்றி  இத்தகவல்களைக் கொண்டு நூலக சேவையின் பயன்பாட்டையும் அவரால் மதிப்பிட முடியும்.

7.7.திட்டப்பட்டியல் தயாரித்தல்.

            திட்டப்பட்டியல் தயாரித்தல் என்பது மிகவும் பயன்பாடுடைய முகாமைத்துவக் கருவியாகும். கவனமாகத் திட்டமிடல், கணக்கியல், கட்டுப்படுத்தல் என்பன திட்டப்பட்டியலில் மிகவும் அவசியமானது. தலைமை நூலகர் என்பவர் நூலகத்தின் தேவைகளைத் தொடர்ச்சியான அடிப்படையில் பரீட்சிக்க வேண்டியிருப்பதுடன் அதற்கேற்ற நிதியையும் பெறுவதற்கு முயற்சி செய்தல் அவசியம்.

7.8.கட்டுப்படுத்தல்.

            கட்டுப்பாடு செய்தல், திட்டப்படி நடைபெற வழிவகுக்கின்றது. ஒரு முகாமையாளர் இதர பணிகளை உரிய முறையில் செவ்வனே செய்வாரானால், அவரைப் பொறுத்த வரை இப்பணி தேவையற்றது. ஆனால் தவறு செய்வது மனித இயல்பு என்பதற்கேற்ப பணியாட்கள் ஒரு சில தவறுகள் புரியலாம். புணியாளர்களுக்கிடையே உள்ள மன வேற்றுமை காரணமாகத் திட்டம் சரியாகச் செயற்படுத்தப் படாமல் போகலாம். திட்டம் பழைய தன்மை வாய்ந்தாக மாறலாம். இவை யாவும் தடுக்கப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்படாவிடில் நிறுவனம் மிக அதிமாகப் பாதிக்கப்படலாம். எனவே தான் கட்டுப்பாடு ஒவ்வொரு நிறுவனத்தின் ஆரம்பப் பகுதியிலும் மிக அவசியமாகின்றது. கட்டுப்பாட்டின் மூலம் திட்டத்தின் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பதையும் அத்தவறுக்குப் பொறுப்பானவர் யார் என்பதையும் அறிந்து, தவறுகள் திருத்தப்படுகின்றன. இன்றைய நிலையில் கட்டுப்பாடு என்பது இன்றியமையாதது ஆகின்றது.


7.9.செயல் ஊக்கம் அளித்தல்.
           மற்றவர்களின் பணியை மேற்பார்வை செய்வதென்பது அதிகாரம் செலுத்துவது என்பதன்று. அவர்களுக்கு உரிய ஒத்தாசை வழங்கி, ஊக்கமளித்து அவர்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டி அவற்றை தீர்ப்பதற்கு தக்க ஆலோசனை கூறி வழிகாட்டியாயிருந்து, அவர்களுக்குத் தலைமை ஏற்கும் பணியே நிர்வாகத்தினர் செய்ய வேண்டிய பணிகளிலெல்லாம் தலையாயது. தொழிலாளர் உயிருள்ள இயந்திரங்களல்லர். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் மனித உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் உண்டு என்பதை உணர்ந்து அவற்றுக்கு மதிப்பளித்து, தனக்குக் கீழப் பணிபுரிவோரின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொண்டு அவர்கள் தங்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுமாறு ஊக்குவித்தால் தான் உயர்ந்த பட்சமான உற்பத்தியைப் பெற இயலும். தொழிலாளர்களின் மிகச் சிறந்த ஆற்றலையும் உழைப்பையும் பெறுவதற்கு ஊக்கம் நிறைந்த குழுக்களாக அவர்களை மாற்றுவது அவசியம். இந்த வகையிலேயே ஊக்குவித்தல் என்பது நூலக முகாமைத்துவத்தின் முக்கியமான மூலகமாக இருப்பதுடன் சிறந்த ஒரு சேவையை வாசகருக்கு வழங்குவதற்கு மிக உதவியான காரணியாகவும் கருதப்படுகின்றது.

8.நூலக முகாமைத்துவத்தின் படி நிலைகள். (டுநஎநடள ழக டுiடிசயசல அயயெபநஅநவெ)

           ஏனைய நிறுவனங்களைப் போன்றே நூலகத்திலும் மூன்று விதமான முகாமைத்துவப் படிநிலைகளை நாம் காண முடியும். அவை பின்வருமாறு:

1. மேல்நிலை முகாமைத்துவம்  Top level management
2. இடைநிலை முகாமைத்துவம்  Middle level management
3. கடைநிலை முகாமைத்தவம்  Low level management
                  மேல்நிலை முகாமைத்துவத்துக்குள் தலைமை நூலகர், நூலகத்தின் தலைவர், இயக்குநர், முதுநிலை அலுவலர்கள் என்போர் தரம் ஒன்றிலும், உதவித் தலைமை நூலகர், முதுநிலை உதவிநூலகர்கள் தரம் இரண்டிலும் அடங்குவர். இவர்களது பணி நிறுவனத்தின் நோக்கங்களை தனக்குக் கீழ் கடமையாற்றும் ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பான உதவி நூலகர்களை இயக்குவித்தல் ஆகும். இடைநிலை முகாமைத்துவத்துக்குள் நூலகத்தில் காணப்படும் ஒவ்வொரு துறைகளுக்கும் பொறுப்பான உதவி நூலகர்கள் அடங்குவர். இவர்களது பணி துறைகளுக்குரிய பணிகளை தமக்குள் கடமையாற்றும் அலுவலர்களை நேரடியாக மேற்பார்வை செய்வதன் மூலம் பெற்றுக் கொள்வதாகும். கடைநிலை முகாமைத்துவத்திற்குள் முதுநிலை நூலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் என்போர் அடங்குவர்.

9.நூலகமும் அதன் நிர்வாகியும்

           நூலகம் என்பது குறிக்கப்பட்ட சில எதிர்பார்ப்புகளுடன் கட்டி எழுப்பப்படுகின்ற, குறிக்கப்பட்ட சில தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை வழங்குகின்ற, குறிக்கப்பட்ட உண்மையான உள்ளுறவுள்ள (ஊநசவயin யஉவரயட யனெ pழவநவெயைட) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு நிறுவனமாகக் கருதப்படுகின்றது. நூலகங்கள் செயல்படு பிரிவுகளாக அமைக்கப்படும் போது அங்கே நூலகர் என்பவர் இச்செயல்படு பிரிவுகளின் தொழிற்பாடுகளுக்கும் அங்கு கடமையாற்றும் அலுவலர்களுக்குமிடையில் ஒரு பாலம் போல் செயல்படுகின்றார். அது மட்டுமன்றி நூலகர் நூலக அமைப்பின் மிக உயர்ந்த அளவிலான குறிக்கோளை அடைவதற்காகத் தங்களுக்குக் கீழ்க் கடமையாற்றும் அலுவலர்களுக்கு ஊக்கமும் செயல்திறனும் அளிப்பவர்களாக இருப்பதுடன் அதற்கான உந்து சக்தியை வழங்குபவர்களாகவும் உள்ளனர். எனவே நூலகர் நூலகத்திற்கும் அதன் அலுவலர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதன் மூலம் அமைப்பு ரீதியான கடமையில் அவர்கள் தமது சக்தியை செலவு செய்வதற்கு விருப்பப்படும் படி செய்ய முடியும்.

10.நூலகமும் அதன் அலுவலரும்.

            நூலகத்தினை ஒரு கட்டுமான அமைப்பாகவும் அதே நேரம் தனிப்பட்ட ஒவ்வொரு அலுவலரையும் இன்னொரு கட்டுமான அமைப்பாகவும் நாம் கருதுவோமாயின் இந்த இரு வேறுபட்ட அமைப்புக்களையும் ஐக்கியப்படுத்துகின்ற அல்லது ஒருங்கிணைக்கின்ற வேலையை செய்யும் நூலகர் மிகப் பிரதானமான ஒரு இடத்தை வகிக்கின்றார் எனலாம். நூலக அமைப்பானது சில குறிக்கப்பட்ட நோக்கங்களையும் கொள்கைகளையும் குறிக்கோளையும் இலக்காகக் கொண்டது. அது போல் அந்த நூலகத்தில் கடமையாற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் தமக்கென்று சில குறிக்கப்பட்ட தேவைகளைக் கொண்டிருக்கின்றார். இந்த வேறுபட்ட இருவகையான கட்டுமான அமைப்புகளும் தங்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் தான் இணைந்த, கூட்டுறவு முறையிலான துழiவெ ஊழழிநசயவழைளொip  ஒரு அமைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு இல்லாவிடில் ஒரு நிறுவனமானது அதன் குறிக்கோள், நோக்கம், இலக்குகளை அடைவதற்கு தனிப்பட்ட ஒருவனது சேவை அவசியம் என்பதற்காக அவனைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துகின்றது என்றோ அதே போல ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் அவரது சொந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு நிறுவனம் உதவும் பட்சத்தில் தனது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றான் என்றோ நாம் கொள்ள முடியும். எனவே, இங்கு ஒரு நிறுவனத்திற்கும் அதன் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலர்களுக்குமிடையில் ஒரு பரஸ்பர உறவுமுறை சுநஉipசழஉயட சநடயவழைளொip   நிலைபெற்று இருப்பதை நாம் காணலாம். ஒரு நூலகத்துக்கும் அதன் ஒவ்வொரு அலுவலர்களுக்குமிடையிலான இந்த பரஸ்பர உறவுமுறை உளவியல் சார்ந்ததொன்றாகும். ஏனெனில் இது எழுத்தில் வடிக்கப்பட்டதோ அல்லது பேச்சில் சொல்லப்படுவதோ அல்ல. நூலகமும் அதன் அலுவலரும் இந்த பரஸ்பர உறவு முறைக்குள் உட்பரவேசிக்கும் போது, இரு அமைப்புகளும் ஒவ்வொருவரும் எதை வழங்குவார்கள், எதைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற சில எதிர்பார்ப்புகளை முன்வைத்துக் கொண்டு இந்த உறவுமுறையை அணுகுகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

(அ) ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படக் கூடியதாக இருப்பதும் ஒரு தனிப்பட்ட அலுவலரினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புகள்.
1. ஊதியம்.
2. சொந்த அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள்.
3. சிறந்த சேவையை இனங்காணலும் அதற்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்தலும்.
4. அத்தியாவசியமான பாதுகாப்பு.
5. சினேகபூர்வமானதும் ஒருவருக்கொருவர் உதவி அளிக்கக் கூடியதுமான சூழல்.
6. நல்ல முறையில் நடாத்தும் தன்மை.
7. கருத்தாழம் மிக்கதும் குறிக்கோளை உடையதுமான சேவை.

(ஆ) ஒரு  தனிப்பட்ட அலுவலரினால் வழங்கப்படக் கூடியதும் ஒரு நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புக்கள்.
1. நேர்மையான நாளாந்த உழைப்பு.
2. அமைப்புக்கு விசுவாசமாக இருத்தல்.
3. தன்முயற்சித்திறன் ஐnவையைவiஎந  
4. நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படல்.
5. வேலைப்பயன்பாடு துழடி நககநஉவiஎநநௌள
6. அலுவலர் புதிதாக ஒன்றைப் பயில்வதற்கும், அதனை அபிவிருத்;தி செய்வதற்குமான விருப்பமும் இணக்கமும்.

முடிவுரை.
           அரச நிறுவனங்களாயினும், தனியார் நிறுவனங்களாயினும் சமூக சேவை, கல்வி நிறுவனங்களாயினும் அங்கு முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியமான ஒரு கருவியாக கையாளப்படுகின்றது. முனித சமூகத்தின் இயற்கையான தொழிற்பாடுகளுடன் இது தொடர்புடையதாக இருப்பதன் காரணமாகவே இதன் முக்கியத்துவம் அளவிறந்து காணப்படுகின்றது எனலாம். இந்த வகையில் சேவையை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஒரு சமூக நிறுவனமாக நூலகமும் கூட. அது பொதுசன நூலகமாயினும், பாடசாலை, பல்கலைக்கழக நூலகமாயினும் முகாமைத்துவக் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் அதனது அளப்பரிய நோக்கமான நூலக சேவையை திறம்பட நடாத்த முடியும். சுpக்கலானதும் நுண்முறைகளுடன் கூடியதுமான நூல்களின் தொகை ரீதியானதும், அடிப்படையிலானதுமான வளர்ச்சி நூலக முகாமைத்துவக் கோட்பாடுகளிலும் மிகப் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் விஞ்ஞான முறை சார்ந்த நூலக முகாமைத்துவத்தின் தோற்றத்திற்கு அடி கோலியிருப்பதை வளர்ந்து வரும் எமது நூலக சேவையில் இருந்து நாம் கண்கூடாகக் காண முடியும்.

உசாத்துணை நூல்கள்.

  1. முத்தையன், இராம. மேலாண்மைத் தத்துவங்கள், சென்னை: தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1976.
  2. GARLISLE, Howard  M. Management: Concept and situations. Chicage: Science Research Associates, 1976.
  3. HARROLD’s Librarian’s Glossary and Reference Book. Comp. by. R. Prythereh. England: Gower Publishing, 1987.
  4. Herald of Library Science. Vol. 24, No. 3, 1985,July.
  5. KUMAR, Krishan. Library Manual. NowDelhi: Vikas, 1982.
  6. MITTAL, R.L. Library Administration: Theory and Practice. New Delhi : Metropolitan, 1964.
  7. SHARMA, J.S. Library Organization. New Delhi: Vikas, 1978.

No comments: