Tuesday, February 04, 2014

கல்வி Vs அறிவு: சில சிந்தனைகள்


கல்வி
முறைமை (system) என்ற அடிப்படையில் கல்விசார் நிறுவனங்களான பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மக்களுக்கு கற்பித்தலை மேற்கொள்கிற முறைமை கல்வி எனப்படுகிறது. செய்முறை (process) என்ற வகையில் ஒரு சமுதாயம் மதித்துப் போற்றும் வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றையும் வழிவழியாக அதனுள் பரவிக் காணப்படும் திறன்களையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிக்க சமுதாயம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாகவோ அல்லது அறிவு, விழுமியங்கள், திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் செய்முறையாகவோ அதுவுமன்றி அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறையாகவோ பல்வேறு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது.  அறிவு (Knowledge)  என்ற வகையில் முறைசார்ந்த படிப்பினூடான அடையப்படுகின்ற அறிவு எனக் கருதப்படுகிறது. கற்கை நெறி (study) என்ற வகையில் கற்பித்தல் தொடர்பான கோட்பாடுகளையும் முறைகளையும் உள்ளடக்கிய ஒரு துறையாக கல்வி என்பது பொருள் கொள்ளப்படுகிறது.

அறிவு 
கல்வி மற்றும் அனுபவம் ஆகிய இரண்டினூடாகவும் தனிநபரால் பெறப்படுகின்ற புலமைத்துவமும் திறனும் அறிவு எனப்படுகிறது. தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டினூடாக ஒரு பொருட்துறை பற்றி ஒரு மனிதன் மூளையில் பதிந்து வைத்திருக்கின்ற அல்லது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் பொருட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற தகவலும் அது தொடர்பான புரிதலும் அறிவு எனப்படுகிறது. சிதைந்துகொண்டு போகும் மனிதப் பண்பை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. விலங்குத்தன்மையை கூடியவரை தவிர்த்து மனிதத்தன்மையை தக்கவைப்பதற்கு மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு. மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு.
கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலை தகவலாகவே வைத்திருக்காது அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து சொல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு', 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய  குறள்களின் வரிகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை அறிவே. இந்த அறிவுங்கூட தன்னை வளர்ப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாது தனது சமூகத்தையும் வளர்க்கும் உணர்வைத் தரும்போது மட்டுமே சமூக மேம்பாடு என்பது சாத்தியமாகும்.

அறிவு என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். எமக்கு நிச்சயம் என்று தெரிந்தவை தொடர்பான அறிவாதார அனுபவங்களையும் இவை தொடர்பான தகவலையும் இது உள்ளடக்கும். எடுத்துக்காட்டாக நூலகம் என்ற எண்ணக்கருவை எடுத்துக்கொண்டால் சாதாரண நபரைப் பொறுத்து நூலகம் என்பது நூல்களைக் கொண்டுள்ள இடம். இதுவே படிக்கும் மாணவரைப் பொறுத்து மேலதிக வாசிப்புக்கான வாய்ப்பைத் தரும் இடம். நூலக அறிவைப் பெற்ற ஒருவரைப் பொறுத்து அது அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம். இதுவே ஆய்வாளர்களைப் பொறுத்து தமது ஆய்வுகளுக்கான தரவுகளைத் தரும் ஒரு இடம். நூல்களைக் கொண்டுள்ள இடம் நூலகம் என்ற கருத்து நூலகத்தைப் பயன்படுத்தாத ஒருவரைப் பொறுத்து அவதானிப்பினூடாகப் பெறப்பட்ட ஒரு அறிவாதார அனுபவம். இந்த அறிவாதார அனுபவம் எவ்வித செய்முறைகளுக்கும் உட்படுத்தப்படாது நேரடியாக மனித மூளைக்குள் கருக்கொள்ளும் அறிவாகலாம். நூலகத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வாசகனைப் பொறுத்து இந்த அறிவாதார அனுபவம் மேலதிக அவதானிப்பினூடாகவோ தொடர்புச் செய்முறையினூடாகவோ பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படின் அது இன்னொருவருக்கு செய்திக் குறிப்பாகப் போய்ச் சேரலாம் அல்லது பெருத்த எண்ணிக்கையுடைய மக்களுக்கு பொதுசனத் தொடர்பு ஊடகம் ஒன்றினால் செய்தி வடிவில் பரப்பப்படலாம். உறுதிப்படுத்தப்படாத போது  இக்கருத்துநிலை தொடர்பான மேலதிக தேடல்கள் தரவாகத் தோற்றம் பெற்று இத் தரவுகள் செய்முறைப்படுத்தப்பட்டு தகவலாகத் தோற்றம் பெறலாம்.  இத் தகவலிலிருந்து அகநிலையில்  கருக்கொள்வதே அறிவாகின்றது.
அறிவு பலதரப்பட்ட உட்பொருட்களில் (நவெவைவைநள) நிலை கொண்டிருக்கும். தனிநபர் ஒருவரின் உள்ளக அறிவாற்றல் அமைப்பின் ஒரு மூலக்கூறாக நிலை கொண்டு தனிநபர் நுண்ணறிவாகத் தீர்மானம் எடுத்தல் செய்முறைக்கு இது அவருக்கு உதவலாம். சமூக நினைவகத்தில் நிலை கொண்டு சமூக நலனுக்கு உதவலாம். நூலக தகவல் நிறுவனங்களில் பதிவேடுகளின் வடிவில் நிலைகொண்டு நூலக தகவல் நுண்ணறிவாக அங்குள்ள தொழிற்திறன் சார்ந்த, சாராத அலுவலர்களின் அனுபவம் நுண்ணறிவு என்பவற்றின் தொகுப்பாக நிலைகொண்டிருக்கலாம். கணினி என்று வரும்போது  நிபுணி அமைப்பில் நிலை கொண்டு அறிவுத் தளத்தின மூலக்கூறாக  இயங்கி அவற்றின் அபிவிருத்திக்கு உதவலாம்.

கல்வி-அறிவு
கல்வி ஒரு செய்முறை. இது முறைசார்ந்தது.  அதேசமயம் அறிவு என்பது அனுபவம். இது முறைசாராதது. பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்விசார் நிறுவனங்களின் வழி கல்வியைப் பெற்றுக்கொள்ளலாம். அறிவு என்பது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்படுவது. பயனுள்ள சில பிரயோகங்களுக்காக அறிவைப் பெற்றுக்கொள்ளும் செய்முறை கல்வியாக இருக்க நல்ல கல்வி, நல்ல தோழர்கள், நல்ல கலந்துரையாடல்கள், தீவிர வாசிப்பு என்பவற்றினூடாக அடையப்பெறுவதே அறிவாக இருக்கிறது.
கல்வி என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது. அறிவோ தானாக உருவாவது. சுயமாக அடையப்பெறுவது. கல்வி என்பது கற்றல் செயற்பாட்டினூடாக அடையப்படுவது. பலதரப்பட்ட உண்மைகள், கருத்துகள், கோட்பாடுகள் போன்றவற்றை கல்வி மூலம் அறிய முடியும். இவற்றை பிரயோகிப்பதே அறிவு எனப்படுகிறது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சட்டங்கள், ஒழுங்குவிதிகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றை கல்வி கொண்டிருக்கும் அதேசமயம் அறிவைப் பெறுவதற்கென எந்தவொரு வழிகாட்டுதல் கொள்கைகளும் கிடையாது. மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், வாழ்க்கையில் வலியை அல்லது மகிழ்ச்சியை  ஏற்படுத்தும் கணங்கள், குழந்தைகள் போன்ற எதனூடாகவும் அறிவைப் பெறமுடியும்.
பாடநூல்களிலிருந்து பெறப்படுவது கல்வி. வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெறப்படுவது அறிவு. கல்விக்கு வயதெல்லை உண்டு. வயது அதிகரிக்க அதிகரிக்க கல்வி மட்டமும் அதிகரிக்கும். அறிவுக்கு வயதெல்லை கிடையாது. கல்வித் தகுதியில் கூடிய நபர் ஒருவரைவிட குழந்தை ஒன்று அதிக அறிவுள்ளதாக இருக்கலாம்.
இதிலிருந்து தெரியவருவது கல்வி  என்பது முதற் பொருள் அறிவு என்பது முடிவுப் பொருள். கல்விக்கு அடிப்படை கற்பித்தல் அறிவுக்கு அடிப்படை கற்றல். கல்விக்கான பிரதான தளம் கல்விக்கூடங்கள். அறிவிற்கான பிரதான தளம் நூலகங்கள்.

கல்வி-அறிவு =கற்பித்தல்-கற்றல்
கல்வி என்பது பெரும்பாலும் கற்பித்தலுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது. ஒரு விடயம் தொடர்பாக ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையில் நடக்கும் இடைவினைத்தொடர்பே கற்பித்தல் எனப்படுகிறது. மாணவரின் தொகை  வயது, பால், நுண்ணறிவு, உடலாற்றல், கற்றலுக்கான ஊக்கம், பொருளாதாரநிலை போன்றவற்றில் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கக்கூடும். அதே போன்று ஆசிரியரின் உதவியுடனோ, அது இன்றியோ, கற்பித்தற் துணை சாதனங்களின் உதவியுடனோ  கற்பித்தல் நிகழலாம். விடயம் இலகுவானதாகவோ, சிக்கல் வாய்ந்ததாகவோ இருக்கலாம் கற்பிக்கும் இடமானது பாடசாலைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ இருக்கலாம். கற்பித்தலுக்குத் தேவையான மூன்று முக்கிய கூறுகளான ஆசிரியர் மாணவர், விடயம் என்ற மூன்றும் மாற்றமுறுவதில்லை. கற்பித்தல் என்பது ஆசிரியரால் யாருக்கோ, எதைப்பற்றியோ எங்கேயோ கற்பிக்க முயற்சி செய்வதுடன் சம்பந்தப்படும் ஒன்றாகும்.
அறிவு என்பது பொதுவாக கற்றல் என்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது. படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது. கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்கிறார் ஸ்கின்னர் அவர்கள். மனதின் சக்தியால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவன் பெறும் மாற்றங்களையே கற்றல் என நாம் கூறுகின்றோம்.
வெறும் உற்றறிவு மட்டும் கற்றலுக்குப் போதுமானதல்ல. அனுபவங்களிலிருந்து ஒருவன் பெறுகின்ற அறிவைத் தீர்மானிப்பது அவனிடம் ஏற்கனவே இருக்கின்ற அறிவு. இந்த முன்னறிவின்றி கற்றல் சாத்தியமில்லை. இந்த முன்னறிவானது கற்றலை கருத்துநிலை மாற்றமாக  நோக்குவதற்கான கோட்பாடு ரீதியான புறப்பாடாக நிர்ப்பந்திக்கிறது. முன்னறிவு என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அறிவாக இருப்பதனால் மனித ஆர்வத்துறைகள் அனைத்திலும் ஒருவருக்கு இருக்கக்கூடிய முன்னறிவை பட்டியலிடுவது சாத்தியமற்றது. ஏனைய துறைகளை விடவும் அறிவியல் மற்றும் கணிதத்துறைக்கு இந்த முன்னறிவு மிக அவசிமானது. அறிவியல் அறிவு என்பது நாளாந்தம் நாம் பெறும் அறிவைவிட வேறுபட்டது. நாளாந்த அறிவு என்பது உருவகங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் அடங்கிய பெரிய சேமிப்பகத்தைக் கொண்டது. இந்த அறிவை அறிவியல் அறிவாக மாற்றுவதற்கு தொடர்ந்து எம்மிடையே தேடல் இருத்தல் அவசியமானது. தேடலுக்குக் களமாக அமைபவை நூலகங்கள். அறிவியலாளர்கள் முன்னறிவிலிருந்து பெறப்படுகின்ற உருவகங்களையும் எண்ணக்கருக்களையும் மீள பயன்படுத்துவதன்மூலம் அறிவியல் அறிவைப் பெற்றுக்கொள்கின்றனர்.

கல்வியும் அறிஞர்களும் 
'குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டுமானால் அவர்களை நேசிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இதயத்துக்கும் வழி கண்டு பிடிக்க வேண்டும். குழந்தையின் நெருக்கத்தை ஆசிரியர் உணரவேண்டும். குழந்தையின் குதூகலத்தையும் வருத்தத்தையும் அனுபவிக்கவேண்டும். குழந்தையின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். தானும் ஒரு குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை ஆசிரியர் மறக்கக்கூடாது' ரஷ்ய எழுத்தாளர் வசீலி சுகம்வீனஸ்கி அவர்களின் கருத்து இது.
 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்ற  வாசகத்தின்  உண்மையை, பயனைச் சரிபார்த்து குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்கலாம்' இது ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலியின் கூற்று.
ஐம்புலன்களில் கண், காது, வாய் ஆகிய மூன்று புலன்களையும் பறிகொடுத்தவர் ஹெலன் ஹெல்லர். '19ம் நூற்றாண்டின் பெரியவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இருவர். நெப்போலியனும் ஹெலன் ஹெல்லரும்' என 20 வயதை அடையமுன்னரேயே உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வெயினால் போற்றப்படும் அளவிற்கு பெருமைபெற்றவர்.  மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக வைத்தெண்ணப்படுபவர். கல்வி பற்றிய இவரது கூற்று இது.
'கல்வி என்பது கரடுமுரடான கற்கள் நிறைந்த ஆற்றுப்படுகை. அதன்மேல் ஓடுகின்ற தெளிந்த நீரோட்டத்தைப் போல ஆழமற்றதும், தெளிவானதும் தான் குழந்தை மனம். ஆற்றைப் போலவே குழந்தையின் மனமும் ஒரு இடத்தில் மேகத்தைப் பிரதிபலிக்கும். இன்னொரு இடத்தில் ஒரு மலரைப் பிரதிபலிக்கும். வேறொரு இடத்தில் புதரைப் பிரதிபலிக்கும். ஆறு பெருகி உபயோகப்படுவதற்கு கண்ணுக்குப் புலப்படாத ஊற்றுக்கள் தேவை, மலை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் தேவை. இவையனைத்தும் அந்தந்த இடத்தில் வந்து கலக்கவேண்டும். இல்லாவிடில் குழந்தை மனம் என்ற சிற்றாறு கலங்கிவிடும். கரைபுரண்டு தண்ணீர் வீணாகிவிடும். மலைகளையும், மடுக்களையும் நீலவானையும் மலரைப் போல் பிரதிபலிக்கக்கூடிய திடம் ஏற்படவேண்டும் அந்தச் சிற்றாறுக்கு'
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள்  கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' என்னும்  நாலடியார் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

பிறப்புமுதல் நம்மிடம் இயற்கையாக அமைந்து காணப்படாமல் நாம் பின்னர் பெறும் அனுபவங்களும் அவற்றின் விளைவுகளும் கற்றல் என்பதில் அடங்குவதாக இந்திய கல்வியியலாளர் சந்தானம் குறிப்பிடுகிறார். இவ்வனுபவங்கள் அறிவு சார்ந்தவையாகவோ, மனவெழுச்சிகள் சார்ந்தவையாகவோ, உடலியக்கங்கள் சார்ந்தவையாகவோ அல்லது இவை யாவற்றுடனும் ஒருங்கே தொடர்புடையதாவோ இருக்கலாம். பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கையில் கற்றல் தொடர்ந்து நிகழ்கிறது.

அறிவும் அறிஞர்களும்
 அறிவு பற்றி மிகத் தெளிவாக முன்வைத்தவர்களில்; பிரான்சிஸ் பேக்கன் முக்கியமானவர். ஒரு நாட்டின் அபிவிருத்தியின் ஆதாரமாக அறிவு விளங்கும் என்பதை 16ம் நூற்றாண்டிலேயே மிகச் சரியாகக் கணித்து 'அறிவே ஆற்றல்' என்று விளம்பியது மட்டுமன்றி வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்ற இன்னொரு வாசகத்தின் மூலம் அறிவுக்கு அடிப்படை வாசிப்பு என்பதை தீர்க்கமாக முன்வைத்த பெருமைக்குரியவர். 'அறிவு என்பது இருவகை. எமக்குத் தெரிந்த அறிவு ஒரு வகை, எமக்குத் தெரியாத தகவலை எங்கே பெறலாம் என்ற அறிவு இன்னொரு வகை' என 18ம் நூற்றாண்டிலேயே  அறிவு அகநிலைப்பட்டது, தகவல் வெளிநிலைப்பட்டது என அறிவையும்  தகவலையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார் அறிஞர் சாமுவேல் ஜோன்சன். மேற்படி வரிகளின் உட்பொருளை நன்கு அறிந்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே 'கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு' என்ற அவ்வையின் வரிகளின் உட்பொருளை நன்கு புரிந்து கொள்வர். மிக நீண்ட காலம் உறுதியுடன் நீடித்து  நிலைத்திருக்கின்ற தகவலே அறிவு என்கிறார் வெயிஸ்மன்.
 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி  நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு' என்னும் திருக்குறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது அறிவின்; முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே.

தேடல்கள்
கல்வித் தகுதிக்கான கற்றல் செயற்பாட்டிலிருந்து அறிவு ஊறுவதற்கான கற்றல் செயற்பாட்டுக்குள் என்னை நுழைத்துக் கொண்ட காலம் முதலாய் கல்விக்கும் அறிவுக்கும் இடையில் ஒரு இணைப்பைத் தேடித் தான் எனது பெரும்பாலான தேடல் இருந்திருக்கிறது. கற்கக் கற்க அறிவு ஊறும் என்ற வள்ளுவன் வாக்கு உண்மையானால் கற்றல் கற்றலாக மட்டும் ஏன் நிற்கிறது என்ற வினவல் இந்தத் தேடல் நோக்கி என்னை உந்தித் தள்ளியது. படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட கல்வியா அறிவா பெரிது என்ற வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில்; அறிவைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பொய்மைகளே உண்மைகளாய் திசையின்றி அலைந்த எனது மனத்தைச் செப்பனிட்ட பாடசாலைகள் மற்றும் இன்றுவரை எனது  மனதில் பூசிக்கும் பேறு பெற்ற எழுத்தறிவித்த இறைவர்களையும், சுமைகளின் அழுத்தங்களுக்குள் தப்பிப் பிழைப்பதற்கான உபாயங்களைத் தந்த பல்கலைக்கழகங்களையும் அடியோடு ஒதுக்கிவிடவோ அல்லது கல்வியைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஒத்ததுகளைப் பிணைத்து ஒவ்வாமைகளை விலக்கும் அறிவுக்கு ஆணிவேராக இருந்த நூலகத்தை ஒதுக்கிவிடவோ நான் தயாராக இல்லை. எனவே இரண்டுக்குமிடையிலான சமநிலையைத் தேடி ஓடிய எனது முயற்சி வீண் போகவில்லை.
கல்வி அறிவு என்ற இரண்டு அம்சங்களும் முறையே கற்பித்தல், கற்றல் என்ற இருபெரும் செய்முறையில் தங்கியிருப்பினும் 'கற்பதற்கான கற்றல்' என்ற அம்சமும் 'கற்பதற்கான கற்பித்தல்' என்ற அம்சமும் அனைத்தையும் விட முக்கியமானது என்பது தெளிவாகின்றது. எனவே குடும்பம் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் விட கற்றல் கற்பித்தல் பணியின் பெரும் பொறுப்பு ஆசிரிய சமூகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்க முடியாததாகிறது.
துரதிருஷ்டவசமாக எமது கல்விமுறையானது சுயகற்றலுக்கு வழிப்படுத்தத் தவறுகின்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. பாடசாலைகள் மட்டுமன்றி பல்கலைக்கழகங்கள் கூட தயார்நிலைக்கல்வியிலேயே கருத்துச்செலுத்துகின்றன. இதன்காரணமாக கற்பித்தல் என்ற செய்முறை மேலோங்கி இருப்பது மட்டுமன்றி ஆசிரியர்களின் மிகப் பெரும் சுமையாகவும் பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வித்திட்டங்கள் மாணவர்களுக்கான கற்பித்தற் செயற்பாட்டிலிருந்து கற்றற் செயற்பாடு நோக்கி வழிப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க ஆசிரியருக்கான கல்வித்திட்டங்கள் அவர்களின் சுயகற்றலை மழுங்கடித்து  கற்பித்தல் செயற்பாடு நோக்கி வழிப்படுத்துகின்றதோ என எண்ணுமளவிற்கு ஆசிரிய சமூகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. ஆசிரியர்களின் அறிவை உயர்த்தும் நன்நோக்குடன் முனைப்புப்படுத்தப்பட்டிருக்கின்ற இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள்  மூலமான ஆசிரியர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் வார இறுதிநாட்களில் கூட ஓய்வின்றி அலையுமளவிற்கு ஆசிரியர்களின் சுமையை  இன்னும் அதிகமாக்கியிருக்கின்றமையானது  கற்பித்தல் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்குப் பதில் அதில் தொய்வு நிலையைத் தான் ஏற்படுத்தியிருக்கின்றது. கசடு அறக் கற்பதற்கு தம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் மாணவ சமூகத்திடமிருந்து ஆசிரிய சமூகத்திற்கும் ஆசிரிய சமூகத்திடமிருந்து ஆசிரி நிர்வாகத்திற்கும் எப்போது வரத் தொடங்குகின்றதோ அப்போது தான் கற்றலும் கற்பித்தலும் மனதார விரும்பி மேற்கொள்ளும் ஒரு பணியாக இருக்கும்.
தேடலுணர்வு கணிசமாக மழுங்கடிக்கப்பட்ட இரண்டாம்நிலைக் கல்வியைக் கடந்து தேடலுணர்வுக்கு களமமைக்காத பல்கலைக்கழகக் கல்வியில் புகுந்து வெளிக்கிளம்பும் ஆசிரிய சமூகத்திடம் நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களை உள்ளடக்கிய புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் 'ஆசிரியர் என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர்' என்ற வரைவிலக்கணத்தையோ  '21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள், பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்'  என்ற  யுனெஸ்கோ நிறுவனத்தின் கொள்கையையோ எதிர்பார்க்க முடியாது. உலகளாவிய ரீதியில் நடைமுறையிலிருக்கும் சிறந்த திட்டங்களின் தொகுப்பாக இலங்கையின் கல்வித் திட்டங்கள் அமைந்திருந்தபோதும் கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக்குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது.
அதுமட்டுமன்றி ஆசிரியத் தொழிலின் பின்னரான பட்டப்பின் கல்வித் தகைமைகளோ அல்லது வேறு தகைமைகளோ ஆசிரியர் என்ற தனிநபரின் தகுதியை நிர்ணயிக்கும் பத்திரங்களாகத் தொழிற்படுகின்றனவேயன்றி ஆசிரியத் தொழிலின் மேன்மையை வெளிப்படுத்தும் ஒன்றாக அமையாமை காரணமாக முழுக்க முழுக்க வகை மாதிரி (சுழடந அழனநட) தேவைப்படும் பாடசாலையின் மாணவப்பருவ வாழ்க்கையில் கல்விசார் தலைமைத்துவம் என்பது இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளமையை மறுக்கமுடியாது.

அனுபவங்கள்
நூலகர் என்ற வகையில் கல்விக்கும் அறிவுக்குமிடையிலான இணைப்பில் அறிவுக்கு அடித்தளமான சுயகற்றல் செயற்பாட்டுக்கு வழிநடத்திய ஓரிருவரைப்பற்றி குறிப்பிடுவது இங்கு பொருத்தமானது.
'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்பதிலும் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. இந்த வாசகங்களை நான் பாடப்புத்தகத்தில் படிக்கவில்லை. நூலகத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை. வீட்டு முன்புறம் உள்ள போட்டிக்கோவில் அமர்ந்திருக்கும் இரண்டாம் வகுப்புப் படித்த அப்பாவிற்கும் வீட்டின் பின்புற அறையில் மரியாதை நிமித்தம் மருமகன் பார்வையிலிருந்து தவிர்த்திருக்க விரும்பும் பாலபண்டிதையான எனது ஆச்சிக்கும் (அம்மாவின் தாய்) இடையில் இடையிடையே நடைபெறும் இலக்கியத் தூதுகளிலிருந்து பொறுக்கியெடுத்தவற்றில் ஒன்று இது. பொறுக்கியெடுத்தவற்றை அப்படியே அணியும் எண்ணமும் கூட எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. 'எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு, பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் படிப்பு என்ற நூலில் படியாதவன் கூறும் விளக்கத்தின் எடுத்துக்காட்டாக இருக்க நான் விரும்பியமையால் ஐம்புலன்வழி பெறும் உற்றறிவு, ஊடுருவறிவு, படிப்பறிவு, காண்பறிவு, தொட்டுணர் அறிவு, அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க விழைகிறேன்.
கற்பித்தலானது பாடப்புத்தகத்தை நெட்டுருப் போடுவதற்குப் பயிற்றுவித்தல் அல்ல என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. மனிதப்பண்புகளின் வளர்ப்புப் பண்ணைகள் எனக் கருதப்படும் குடும்பம், கூட்டாளிக்குழுக்கள் மற்றும் சனசமூகநிலையங்கள் ஆகிய மூன்றிலும் குடும்பம் என்னைச் செதுக்குவதற்குப் பெரிதாக உதவவில்லை. மற்றைய இரண்டினதும் அருகாமைகூட எனக்கு இருந்ததில்லை. அதுபோன்று பாடசாலைக்காலத்தின் முதற் பத்து வருடங்கள் கூட உற்றறிவின் (ழுடிளநசஎயவழைn)  வழியே தான் எனது பெரும்பாலான கற்றல் இருந்திருக்கிறது எனினும் அந்தக்காலத்தில் இந்த உற்றறிவினூடாக பல மாதிரிகள் (அழனநடள) எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆணோ பெண்ணோ 'தலைமை வாத்தியார்'  என்ற பெயருக்கே உரித்தான சகல அம்சங்களுடனும் உள்ள அதிபர்களின் காலம் கிட்டத்தட்ட 1970களின் இறுதிப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டது என்ற கசப்பான யதார்த்தத்தை உள்வாங்கும் இத்தருணத்தில் இந்தத் தலைமை வாத்தியார்களின் அகத் தோற்றத்தை விடவும் அவர்களின் நடத்தைக் கோலங்கள்; எனக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது.
 கற்பதற்கான கற்றல் நோக்கி வழிப்படுத்திய முதலாவது ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் 'குஞ்சக்கா' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த எனது மதிப்புக்குரிய ஆசிரியர் திருமதி யோகலட்சுமி இராசரத்தினம் அவர்கள். க.பொ.த உயர்தர வகுப்பில் புவியியல் பாட ஆசிரியையாக இருந்தபோது அவரது வகுப்பில் பாடக்;குறிப்பு எதுவும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. உலகப்படத்தில் இடங்களின் அமைவிடத்தை அவர் கற்பித்ததாகவும் எனக்கு ஞாபகமில்லை. மாறாக நாளாந்தம் வெளிவரும் ஆங்கில செய்தித்தாள்களில் உள்ளடக்கப்படுகின்ற வெளிநாட்டுச் செய்திகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிடப்படும் நாடுகள் ஒவ்வொன்றையும் உலகப்படத்தில் குறித்து வந்து அவரிடம் ஒப்படைப்பதே எமது பணி. பௌதிகப் புவியியல் கற்பித்த முறை இன்னும் அலாதியானது. மொங்கவுசின் பௌதிகப் புவியியல் தத்துவங்கள் என்னும் நூல் நூலகத்தில் இருக்கும் இடத்தை அறிந்து வந்து அவரிடம் சொல்லுதல், ஊசியிலைக் காடுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி ஒப்படைத்தல் இப்படித்தான் ஒவ்வொரு வகுப்பும் நகரும். இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விடயம் வகுப்புப் பரீட்சைகள் நடந்து முடிந்ததும் பரீட்சைத்தாள்களில் உள்ள வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் அவர் அளிக்கும் விளக்கத்துக்கமைய அவரவர் பரீட்சைத்தாள்களை அவரவர்களே திருத்தி தமக்குரிய புள்ளிகளைப் போட்டு அவரிடம் ஒப்படைப்பது. பயிற்சிப்பட்டறைகள் நிரம்பி வழியாத 1980களின் ஆசிரிய சமூகத்தின்;  கற்பதற்கான சிறந்த கற்பித்தல் முறையாக நான் இதைக் கருதுகின்றேன். இதன் வெளிப்பாடுதான் பல்கலைக்கழகக் கல்விக்காலத்தில்  சுய கற்றலுக்கு அடித்தளமான நூலகத்தில் அதிக பொழுதுகளைக் கழிக்கவும் பாடசாலையில் வகுப்பிலேயே மிகக் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்த ஒரு பாடத்துறைசார்ந்து என்னால் சிறப்புத் தேர்ச்சி பெறவும் உயர் புள்ளிகள் எடுக்கவும் முடிந்தது.

எமது புரிதல்கள் தொடர்பாக எம்மிடையே மாற்றம் வேண்டும். 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாதுவிடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக்கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்துமுரண்பாட்டுக்கும் இடம் இருக்காது. மனித வாழ்வைச் சரியான முறையில் கொண்டு நடத்துவதற்கு முக்கியமானது சிந்தனைகள். செயலுக்கு அடிநாதம் சிந்தனைகள். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு அத்திவாரமாக இருப்பது அவனது எண்ணங்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதற்கு அவசியமானது வாசிப்பேயாகும்.


29-11-2011

1 comment:

Anonymous said...

I do not agree with this. Please read "அறிவின் அடிநாதம்" at:

http://intellectualexpress.wordpress.com/terms-conditions/

They have given a clear view!!!