Saturday, September 13, 2014

வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு

 வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு

'வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்' என்பது பதினாறாம் நூற்றாண்டின் தத்துவமேதை பிரான்சிஸ் பேகனின் புகழ்பெற்ற வாசகங்களில் மிக முக்கியமானது. வெறும் வாசிப்பே மனிதன் பூரணமடைய வழிசெய்யும் என இவ்வாசகம் கூறும்போது, வாசிப்பு என்பதற்கு  'வளமான' என்ற அடைமொழி  தேவைதானா என்ற வினாவுக்கு பதிலளிப்பதே  அதாவது அதன் உட்பொருளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தனி மனிதனும் மானுடமும் ...
மனிதன் ... உயிரி என்ற வகையில் சிந்தித்தால் இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்குள் உயர்வான ஓர் உயிரி. சமூகவியல் ரீதியில் சிந்தித்தால் தனித்து வாழமுடியாத ஒரு சமூகப் பிராணி.  பொருளாதார ரீதியில் சிந்தித்தால் இவ்வளவு தான் என்று வரையறுக்க முடியாதளவுக்குத் தேவைகளும் பிரச்சனைகளும் கொண்டவன்.  அரசியல் ரீதியில் சிந்தித்தால் நாட்டின் எதிர்கால வாரிசு. அறிவியல் ரீதியில் சிந்தித்தால் உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்குமளவிற்கு அறிவியல் தொழினுட்ப சாதனைகளின் உச்சிப்படியில் வீற்றிருப்பவன். மனிதப்பண்புகளின் அடிப்படையில் சிந்தித்தால் அறிவை ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதை விடவும் அழிவுக்குப் பயன்படுத்துவதில்  ஆர்வம் அதிகமுள்ளவன்.

மனிதன் மனிதத்தன்மையுள்ளவனாக இருக்கும் நிலை மானுடம் எனப்படுகின்றது. மனித இனம் அனைத்தையும் கூட்டாகக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொதுப்பதமாகவும் இது பார்க்கப்படுகின்றது. மனிதன் ஒரு விலங்கு தான் என்பதை அடிக்கொருதரம் நினைவூட்டிக்கொண்டிருக்கும்  கோபம், வெறுப்பு, குரோதம் போன்ற எதிர்மறைப் பெறுமானங்களைப் பகுத்தறிவின் துணை கொண்டு கூடியவரை தவிர்த்து அன்பு, இரக்கம், கருணை, பாசம், காதல், ஈடுபாடு, மரியாதை, பக்தி போன்ற உயரிய மனிதப் பண்புகளை வளர்த்துக்கொள்வதே மனிதத்தன்மைக்கு அடிப்படை. தன்னைச் சுற்றித் தான் போட்டுக்கொள்ளும் குறுகிய வட்டத்தைவிட்டு வெளியே வந்து, உலகை அகலக் கண்கொண்டு பார்க்கும் தன்மையை வளர்த்து, நான், எனது என்ற குறுகிய மனப்பான்மைகளை விலக்கி, 'நாம்' என்ற உணர்வை வளர்ப்பதனூடாக அடுத்தவரை நேசிக்கும் தன்மையை அடுத்தவருக்கு உதவும் தன்மையை உருவாக்கிக்கொள்ளும் பண்பு மானுடம் எனப்படுகின்றது.  மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு மேலாகப் பகுத்தறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பரிசீலிக்கும் ஒரு சித்தாந்தப் போக்கே மனித நேயம் என ஒக்ஸ்போட் அகராதி குறிப்பிடுகின்றது.


இன்றைய மானுடம்
மனிதத்தன்மை குறைந்து விலங்குத்தன்மை அதிகரித்துக் கொண்டு போகும் இன்றைய உலகில் மானுடம் என்பதன் உண்மையான அர்த்தத்தை மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றது மகிழினியப்பன் என்ற பெயரில் கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் வடித்த  மானுடம் வாழ்கிறது என்ற கவிதையில் உள்ள பின்வரும் வரிகள். 

மானுடம் ஒன்று வன்முறையால் வழிய குருதி புண்படுத்த
மானுடம் ஒன்று வன்முறையால் வழியக் குருதி புண்படவே
மானுடம் ஒன்று மனம் பதைத்து மருத்துவமனையில் அதைச் சேர்க்க
மானுடம் ஒன்று மருந்து கட்டி மரணம் தடுத்துக் காக்கிறது.

ஒன்றாய் பலவாய் மானுடங்கள் ஒன்றையொன்று கெடுத்துவர
ஒன்றாய் பலவாய் மானுடங்கள் ஒன்றையொன்று காப்பதனால்
ஒன்றை அழித்த பழிதீர ஒன்றுக்குதவ முனைவதனால்
இன்று மட்டும் மானுடங்கள் இணக்கம் மண்ணில் வாழ்கின்றது.

பம்பர வேகத்தில் சுழலும் தகவல் சமூகத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வலுவின்றி விவேகமின்றியே அதனுடன் இழுபட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன இன்றைய  மானுடங்கள். பக்கத்து வீட்டில் என்ன நடக்கின்றது என்பதை அறியும் விருப்பமோ அதற்கான நேரமோ இல்லாத மானுடங்கள்;. தனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் சில மானுடங்கள். அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகின்ற குடும்பம் என்ற அமைப்பின் வார்ப்புகள்.  கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க, கூடி வாழ முற்பட்ட மானுடங்கள்  இன்று மானுடங்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டிய தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சிதைந்துகொண்டு போகும் மனிதப் பண்பை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. விலங்குத்தன்மையை கூடியவரை தவிர்த்து மனிதத்தன்மையை தக்கவைப்பதற்கு மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு, ஆறுதல், இன்பம், ஈடுபாடு, உறுதிப்பாடு, ஊக்கம் போன்றவை. மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு. தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டினூடாக ஒரு பொருட்துறை பற்றி ஒரு மனிதன் மூளையில் பதிந்து வைத்திருக்கின்ற அல்லது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் பொருட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற தகவலும் அது தொடர்பான புரிதலும் அறிவு எனப்படுகிறது. மனித வாழ்வைச் சரியான முறையில் கொண்டு நடத்துவதற்கு முக்கியமானது சிந்தனைகள். செயலுக்கு அடிநாதம் சிந்தனைகள். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு அத்திவாரமாக இருப்பது அவனது எண்ணங்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதற்கு அவசியமானது வாசிப்பேயாகும்.

மானுடத்தின் மேம்பாடு
மேம்பாடு என்ற கருத்துநிலை வெறுமனே பொருளாதார மேம்பாட்டை மட்டும் மையப்படுத்தியதொன்றல்ல. அது பரந்துபட்ட ஒரு கருத்து நிலையாக சமூக அரசியல், நிறுவன அழகியல் ஒழுக்க அம்சங்களில் மாற்றத்தை வேண்டுவதொன்றாக உள்ளது என்பதையே 'சிறந்த கல்வி, உயர்ந்த போசாக்கு, சுகாதாரம், குறைந்த வறுமை, சுத்தமான சூழ்நிலை, மக்கள் யாவருக்கும் சம சந்தர்ப்பம் கிடைத்தல் அதிகளவு தனிமனித சுதந்திரம், செழிப்பான கலாசார வாழ்க்கை என்பவற்றை உள்ளடக்கியதொன்றாக பல்பரிமாணத் தன்மை நிறைந்ததொன்றாக, சமூக மேம்பாட்டை மையப்படுத்தியதொன்றாக உள்ள 1991இன் உலக வங்கி அறிக்கையானது எடுத்துக்காட்டுகின்றது. ஜ றழசடன டியமெ 1991ஸ

சமூக மேம்பாட்டுக்கு அடிப்படை மானுட மேம்பாடு. மனித இன முன்னேற்றம் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டையும் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் ஆராய்ந்து இரண்டும் வௌ;வேறானவை அல்ல மனித முன்னேற்றத்தினூடாகவே சமூக முன்னேற்றம் நிகழ்கின்றது என்கிறார் சமூகத்தை அறிவியல் முறையில் ஆய்வு செய்த 19ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சமூகவியலாளர் ஒகஸ்ட் கோம்த் (யுரபரளவந ஊழஅவந). மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே மனிதனின் முன்னேற்றம் தங்கியுள்ளது. அதேசமயம் தனித்தன்மை மிக்க மனிதர்கள் இன்றி சமூகம் வேரூன்றி நிலைத்து நிற்கமுடியாது. தனிமனித வளர்ச்சியை சமூக முன்னேற்றத்தினின்றும் பிரிக்கமுடியாதளவுக்கு அவை நெருங்கிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

எவனொருவன் தன்பால் அன்பு கொள்கின்றவனாக, தன்னை மதிப்பவனாக, தன்னை நேசிப்பவனாக  விளங்குகின்றானோ அவன் பிறருக்குத் தொல்லை தரமாட்டான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அளப்பதற்கு தன்னையே  அளவுகோலாகக்  கொள்கிறான். கவனக்குறைவு, அலட்சியப்பாங்கு, தான்தோன்றித்தனம், அக்கறையின்மை போன்றவற்றை தனது நடையுடைபாவனை, நடத்தை, பண்பு, சமூக ஒழுக்கம் அனைத்திலும் நிறைத்து வைத்திருக்கும் ஒருவன் தன்னை அளவுகோலாகக் கொண்டு அடுத்தவனை அளக்கும்போது அது எத்தகைய அபாயகரமான போக்குக்கு இட்டுச்செல்லக்கூடியது என்பது அனுபவித்தவருக்குத் தான் தெரியும். அதிலும் யுத்தம், வறுமை, பண்பாட்டுப் படையெடுப்புகள் போன்றவற்றால் தனது அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்துவரும் ஒரு சமூகத்தில் மானுடத்தின் இருப்புத் தொடர்பான வினா எழுவது இயற்கையானது. இதற்கு எமது சமூகமும் விதிவிலக்காக முடியாது.
மானுட மேம்பாட்டுக்கு வழி என்ன? மிக அழகாக எடுத்தியம்புகின்றது புரட்சிக் கவியின் அர்த்தம் பொதிந்த பின்வரும் வரிகள்
மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்
இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை
புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்

ஆம் ! மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு என்றால் அதை அடக்கிக் கொண்டிருப்பவை நூல்கள். நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் நூலகம். ஒரு நூலானது கல்வியறிவு தந்து, நடைமுறைநிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து, பொருளாதாரத்தை வளர்த்து, கலாசாரத்தைக் காக்கும் செயற்பண்புகள் கொண்டது என்கிறார் இந்திய நூலகவியல் விற்பன்னர் வே. தில்லைநாயகம்.

நூலகம் என்பது ஆத்மாவுக்கான மருத்;துவம் என்ற வாசகம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நூலகங்களின் வரலாறு என்பது நாகரீகங்களின் தொட்டில் எனப்படும் சுமேரியர் காலத்திலேயே ஆரம்பித்திருக்கக்கூடும் எனினும் யூலியஸ் சீசர் காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் னுழைனழசரள ளiஉடைல என்ற கி;மு 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் கிரேக்க வரலாற்றாசிரியர்; எகிப்தில் உள்ள திபிஸ் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசத்தில் நினைவுச்சின்னங்களை விபரிக்கும்போது  இச்சின்னங்கள் அமைந்துள்ள இடத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்ற இந்த வாசகமே நூலகங்களின் தொன்மையைக் குறிப்பிடப் போதுமானதென்றால் நூல்களின் தோற்றமோ அதற்கும் பல நூற்றாண்டுகளுக்குமுன் களிமண் பலகைகளிலிருந்து தோற்றம் பெறுகின்றது. (ளூநசயஇ 1976)  இயலாமை என்பதையே இல்லாமல் செய்வேன் என்று முழங்கிய மாவீரன் நெப்போலியன் கூட தான் செல்லும் போர்க்களங்கள் அனைத்துக்கும் தன்னுடன் ஒரு நூலகத்தையே கொண்டு செல்வானாம்.  உறங்கக்கூட நேரமின்றி ஓடுகின்ற குதிரை மீதமர்ந்து கொண்டே உறங்கி ஓய்வெடுக்கும் இவன், பதட்டம் தரும் போர்ச்சூழலிலும் நூல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கும்போது நாகரிகத்தில் வளர்ச்சியடைந்து இருக்கும் இன்றைய மனிதர்களிடம் நூலுணர்வு இல்லாமல் போனது ஏன்?

வாசிப்பு
1940 ம் ஆண்டு அழசவiஅநச யுனடநச என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூலை வாசிப்பது எவ்வாறு? (ர்ழற வழ சநயன ய டிழழம ) என்ற நூலானது  சிறந்த புகழ்பெற்ற நூல்களை தருக்க ரீதியாக வாசிப்பதற்கான வழிகாட்டுதலை உள்ளடக்கியது எனினும் மேற்கத்தைய பாரம்பரியத்துக்குள் உட்படாத எந்த நூலையும் வாசிக்குமாறு அது பரிந்துரை செய்யவில்லை.  (றமைipயநனயை)

வாசிப்பு என்பது பல கருத்துக்களை தனக்குள் உள்ளடக்கியிருப்பது. படித்தல், கற்றல், சொல்லுதல் போன்றவை மட்டுமன்றி இசைக் கருவியை வாசித்தலும் வாசிப்பாகவே கொள்ளப்படுகிறது. எழுதப்பட்ட அல்லது அச்சடிக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட  வாசகங்களை கண்ணால் பார்த்து அல்லது கரங்களால் தொட்டுணர்ந்து வாயாலோ மனதாலோ உச்சரித்து அறிவால் பொருளுணரும் ஒரு செயலே வாசிப்பு எனப்படுகிறது.
அறிவுத்திறம், மொழித்திறம், பார்வை நலம், கேள்விநலம், உடல்நலம், மனநலம், சூழல்நலம் ஆகியன வாசிப்புக்கு இன்றியமையாததாக உள்ளன. ஜஅழலடந  1976ஸ

பரந்த ரீதியில் நோக்கின் வாசிப்பை பாடத்திட்ட வாசிப்பு பரந்துபட்ட வாசிப்பு என இருவகைப்படுத்தலாம்.
கற்றல் கற்பித்தல் நோக்கங்களின் அடிப்படையில் வாசிப்பு என்பது பல்வேறு செயல்களை உள்ளடக்கியதொரு நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.

1.    வரிவடிவத்தைப் புரிந்து கொள்ளுதல்
2.    புதிய சொற்களின் பொருளை ஊகித்தறிதல்
3.    வெளிப்படையாகக் கூறப்படும் செய்திகளைப் புரிந்துகொள்ளல்
4.    வெளிப்படையாகக் கூறப்படாத செய்திகளைப் புரிந்துகொள்ளல்
5.    வாக்கியங்களுக்கிடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ளல்
6.    பகுதியின் பல்வேறு கூறுகளின் இணைப்பைப் புரிந்து கொள்ளல்
7.    மையக் கருத்தைக் காணுதல்
8.    மையக்கருத்து துணைக்கருத்தின் வேறுபாட்டை உணர்ந்து கொள்ளல்
9.    முதன்மைச் செய்திகளைத் தொகுத்துப் பார்த்தல்
10.    படிக்கப்பெறும் பகுதி தரும் நீதியையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ளல் ஆகிய பத்து அம்சங்களை உள்ளடக்கியது வாசிப்பு என்கிறார் யோகவதி பாலகிருஸ்ணன். பக். 225.)

வாசிப்பின் நோக்கங்கள்

கற்றல் நோக்கம் (டுநயசniபெ)
படிக்கும் பருவத்திலிருப்போருக்கு நாட்டு நடப்புப் பற்றி அறியும் ஆவல் பெரிதாக இல்லை. தூக்கத்துக்கு முன்னரும் பின்னரும் அவர்கள் கையில் பெரும்பாலும் பாடப்புத்தகங்களையே பார்க்க முடியும். சிலர் காலை 4.00 மணிக்கே எழுந்துவிடுவர். சிலர் இரவு 11மணிக்கும் அரைத்தூக்கத்துடன் படித்துக்கொண்டிருப்பர். புத்தகத்தைப் பிரித்துப் படிக்காமலேயே 24 மணிநேரமும் புத்தகமும் கையுமாகத் திரிவோரும் எம்மிடையே உண்டு. பரீட்;சையில் வெற்றிபெறும் ஒரு நோக்கத்துக்காகவே பாடப்புத்தகங்களை இவர்கள் வாசிக்கின்றனர். பாடப்புத்தகங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள புத்தகங்களையும் பரீட்;சை வினாத்தாள்களையும் இவர்கள் வாசிக்கின்றனர். இதை வாசிப்பு என்று கருதுவதை விட படிப்பு என்றே கொள்ள வேண்டும். இந்த வாசிப்பு மனனம் செய்தலாகக் கூட இருக்கலாம். பரீட்சை முடிவடைந்ததும் படித்தவையும் விலகிவிடும். இவர்களை வைத்துக்கொண்டு எம்மை ஒரு வாசிக்கும் சமூகமாகக் கற்பனை பண்ணுதல் பொருத்தமானதல்ல.
குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் சார்ந்த தகவல் வளங்கள்;, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்கள் , ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படைத் தகவல் வளங்கள், தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணைத் தகவல் வளங்கள் என்பன கற்றல் நோக்கத்தை பூர்த்தி செய்பவை. 
குறிப்பிட்ட ஒரு பொருட்துறையை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கென உருவாக்கப்படும் நுல்களே பாட நூல்கள் ஆகும். இவை பொதுவாக பரந்த பொருட்துறையை உள்ளடக்குபவை. வாசிப்பு நோக்கம் என்பதே இங்கு முக்கியமானதாக இருப்பதனால் தகவல் வழங்கப்படும் விதம் இங்கு மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. வண்ணப்படங்களும் போதிய விளக்கப்படங்களும் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் வாசிப்பில் தூண்டலை ஏற்படுத்துபவை. நல்லதோர் பாடநூலானது வாசிப்பை மட்டுமன்றி நல்லதோர் கற்பித்தலுக்கும் வழிகாட்டக்கூடியது. புதிய அபிவிருத்திகள், மாறிவரும் கற்பித்தல் முறைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இவை அடிக்கடி மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளன.

கற்பித்தல் நோக்கம் (வுநயஉhiபெ)
பாடசாலை ஆசிரியர் முதற்கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர் வரை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு வாசிக்கின்றனர். கல்வித்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும் போக்குக்கு அமைய இத்தகைய வாசிப்பின் தன்மையில் மாற்றங்கள் கூடவோ குறையவோ இடமுண்டு. இத்தகைய வாசிப்பையும் ஆழமான வாசிப்பு என்று கருதமுடியாது. இதையும் ஒருவகைப் படிப்பு என்றே கொள்ள இ.டமுண்டு

கருத்தைத் தெரிவிக்கும் நோக்கம் (அழவiஎந ழக நஒpசநளளழைn)
புதிய ஆக்கம் ஒன்றைப் படைப்பதற்காகவோ சொற்பொழிவாற்றுவதற்கோ ஒரு நூலுக்கான மதிப்பீட்டுரையை எழுதுவதற்காகவோ வாசிப்பு என்ற செயற்பாடு இடம்பெறுகின்றது. நூல்கள் எதையும் வாசிக்காமலேயே இத்தகைய செயற்பாடுகள் வெற்றிகரமாக நிறைவேறுகின்றன என்பதும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது. ஒரு நூலிலிருந்து ஒரு நூலகத்தையே அலசுமளவிற்கு இத்தகைய வாசிப்பு நீண்டு கொண்டு போகும். 'எழுத்தாளர்களின் நேரத்தின் பெரும்பகுதி வாசிப்பிலேயே கழிகின்றது. ஒரு நூலை எழுதுவதற்கு ஒரு நூலகத்தின் அரைப்பங்கு நூல்களின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன' என்கிறார் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பொருளியல் மேதையான சாமுவேல் ஜோன்சன் அவர்கள். நூல்களை வாசிக்கும் போது ஏற்படும் நன்மையைப்போன்று நூல்களிலிருந்து பெறப்படும் விரிவுரைகள் நன்மையைத் தருவதில்லை என் இவர் வாசிப்புக்கு மிகவும் அழுத்தம் தருகின்றார்.

ஆய்வு நோக்கம் (சுநளநயசஉh)
ஆய்வு நோக்கத்துக்கான வாசிப்பானது பல படிநிலைகளைக் கடந்த பின்னரேயே முழுமை பெறக் கூடியது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருள் தொடர்பான கலைச்சொற்களை அறியும் ஆரம்பப் பணியில் முதலாவது படிநிலையான துறை சார்ந்த கலைச் சொல் அகராதிகள், இக்கலைச்சொற்களின் பொருளைத் தருகின்ற அகராதிகள், எடுத்துக் கொண்ட பொருள் தொடர்பான பின்னணித் தகவல்களைத் தருகின்ற கலைக்களஞ்சியங்கள் என்பவற்றைக் கடந்து  உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் முதல்நிலைத் தகவல் வளங்கள்  அனைத்துமே இங்கு வாசிப்புக்குரிய மூலங்களாக கொள்ளப்படுகின்றன. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இதனைப் பயன்படுத்துவது எளிதல்ல. ஆய்வு முறையியல், மற்றும் மொழி அறிவு,  தேடுதல் திறன்கள் போன்ற அனைத்துத் திறன்களும் தேவைப்படுகின்ற வாசிப்பாக இது கருதப்படுகிறது.

மனமகிழ்வு நோக்கம் (சுநஉசநயவழைn)
இத்தகைய வாசிப்பானது உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வைத் தருவதாக உள்ளது. நூல்கள் சஞ்சிகைகள் நாளிதழ்கள் என்பன பொழுதுபோக்கு நோக்கத்தை பூர்த்தி செய்வன என்றாலும் சிறப்பாக  கவிதை, நாடகம், நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்களும், ஓவியம், சிற்பம், போன்ற கலைத்துவ ஆக்கங்களும், வாசிப்பவருக்கு அமைதியையும் நிறைவையும் தருகின்ற ஆன்மீக வளங்களும், பழம்பெரும் இலக்கியங்களான புராண இதிகாசங்கள், திருமுறைகள் போன்றவை மனமகிழ்வு நோக்கத்தை பூர்த்தி செய்பவை.
 ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விடலைப்பருவத்தினருக்கான வாசிப்பை பாலூக்கத்தை அதிகம் தூண்டும் மலினப்பட்ட காதல் கதைகள்  பெருமளவில் ஆக்கிரமித்திருக்கின்றன.  வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய எத்தனையோ புனைகதைகளை மிகச் சிறந்த எழுத்தாளர்கள் தமிழ்ச்சமூகத்திற்குத் தந்திருந்தும் கூட ரமணிச்சந்திரன் என்ற ஒரேயோரு எழுத்தாளரின் கதைகளில் விடலைப்பருவம் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கவில்லை. திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றெடுத்த நடுத்தர வயது குடும்பப் பெண்களையும் இவை தான் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றன. எண்டமூரி வீரேந்திரநாத், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்துமதி, லட்சுமி என இவர்களின் தெரிவுகள் குடும்பக் கதைகளைத் தவிர்த்து காதல் கதைகளை நோக்கியே நகர்கின்றன. மனமகிழ்விற்கென்று நாடும் இத்தகைய நூல்கள்  'நூல்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்களாகின்றன.  துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன' என்ற மறைந்த பேராசிரியர் நந்தி அவர்களின் கூற்றுக்கு மாறாக படித்து முடித்ததும் ஏக்கத்தையும் விரக்தியையும் நிரந்தரமாகவே வாசிக்கும் மனங்களிடம் ஏற்படுத்தி விடுவதே நடைமுறை யதார்த்தமாக உள்ளமை கண்கூடு. 

தகவல் பெறும் நோக்கம் (ஐகெழசஅயவழைn)
நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறியும் ஆவல் பலரை வாசிக்கத் தூண்டுகின்றது. இந்த வாசிப்புக்கு உதவும் வளமாக நாளிதழ்களும் வார இதழ்களும் கருதப்படுகின்றன. தூக்கம் விட்டு எழுந்ததும் காலைநேரக் கோப்பியுடன் செய்தித்தாளை வாசித்தால்தான் சிலருக்குப் பொழுது நன்கு விடியும். காலைக் கடனை முடிக்கப் போகும்போதே செய்தித்தாளுடன் கழிவறைக்குப் போகின்றவர்கள் எம்மிடையே பலர். ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தவர் பலரையும் காலைநேரத்தில் வீட்டின் முன்புற வராந்தாவில் மூக்குக் கண்ணாடியுடன் செய்தித்தாளில் மூழ்கியிருக்கும் நிலையை பரவலாகப் பார்க்க முடியும். எம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆவல் பொதுவாக வயது வந்தோர்களுக்கே இருக்கிறது என்பதையே இது காட்டுகின்றது. இதற்காகவே இவர்கள் பணம் கொடுத்து நாளிதழை வாங்குகின்றனர். பணம் கொடுத்து வாங்க விருப்பம் இல்லாதவர்களும் வாங்கும் வசதியற்றவர்களும் காலை எழுந்ததும் வாசிகசாலை நோக்கி ஓடுவதை அவதானிக்க முடியும். அலுவலகம் செல்பவர்கள் அலுவலகத்தின் தேனீர் இடைவேளையின் போது செய்தி  தாளை வாசிக்கின்றனர். நேரம் இல்லை என்று தமக்குள் முடிவெடுப்பவர்கள் மாலையில் வாசிக்கின்றனர். தூர இடங்களுக்குப் பயணம் செய்பவர்கள், வீட்டில் வெட்டியாக பொழுதைக்கழிக்கும் வாய்ப்புள்ளவர்கள் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளையும் கற்கண்டு முத்தாரம் போன்றவற்;றையும் வாசிக்கின்றனர்.
நாளிதழ்களில் பெரும்பாலானவை வார இறுதியில் ஞாயிறு சிறப்பிதழைக் கொண்டுள்ளன. தமிழ்ச்சமூகத்தின் மிக முக்கியமான வாசிப்புச் சாதனமாகக் கருதப்படுவது நாளிதழாகும். நேற்றைய நாட்டு நடப்புகளை இன்றைய நாளிதழில் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்பதால் காலையில் எழுந்ததுமே நாளிதழும் கையுமாக இருப்பவர்களை எம்மிடையே அதிகம் பார்க்கலாம். நாளிதழ்களை சாப்பாடு கட்டப் பயன்படுத்தும் குடும்பங்களும் எம்மிடம் உள்ளன. ஓரிரு நூலகங்களைத் தவிர மற்ற எல்லாப் பொதுநூலகங்களுமே மாத முடிவில் நாளிதழ்களை மொத்தமாக விற்றுக் காசாக்குவதுமுண்டு. ஆனால் எமது சமூகத்தில் இன்றைய செய்தித்தாள் நாளைய குப்பைத் தாள் என்ற மேலைத்தேய கருத்துநிலை பொருத்தமானதல்ல. ஏனெனில் இத்தகைய செய்தித்தாள் உடனே படித்துவிட்டுப்போகும் செய்திகளை மட்டுமன்றி மாணவரின் பாடவிதானம் சார்ந்த தகவல்களையும் ஆய்வு முயற்சிகளுக்கு உதவுகின்ற பலதரப்பட்ட பொருட்துறை சார்ந்த கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கும் தகவல் வளமாகவே காணப்படுகின்றன. எனவே இவற்றை கிழித்து எறியாது இவற்றிலுள்ள முக்கியமான தகவல்களையும் செய்திகளையும் வெட்டியெடுத்து பொருட்துறை சாரந்து ஒழுங்குபடுத்தி வைக்கும் போது இதனது ஆய்வுப் பெறுமதி அதிகரிக்கும் என்பது சிலருக்கே தெரிந்த உண்மையாக இருக்கிறது.

சிந்தனை விருத்தி நோக்கம் (ஐnளிசையவழைn)
வாசிப்பு நோக்கங்களில் மிக உன்னத நிலையிலான வாசிப்பாக இதைக் கருத இடமுண்டு.  மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற, சிந்திக்க செய்கின்ற, மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற நூல்களின் வாசிப்பாக இதைக் கருத இடமுண்டு. பொருளாதார தத்துவத்தைப் புகுத்திய அடம்ஸ்மித்தின் 'தேசங்களின் செல்வம்', பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல்மாக்ஸின் 'மூலதனம்', உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் 'பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு', மக்கள் தொகைப் பிரச்சனையை விளக்கிய மால்தசின் 'மக்கள் தொகைக் கோட்பாடு', மனித மனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிய சிக்மண்ட் பிராய்டின் 'மனித மன சிந்தனை', சத்திய வாழ்க்கையை எடுத்தியம்பிய அரிச்சந்திரன் கதை, அதர்மத்துக்கும் தர்மத்துக்குமிடையிலான யுத்தத்தில் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்தும் பாரத இராமாயணக் கதைகள். ராகுல சாங்கிருத்தியானின் வால்காவிலிருந்து கங்கை வரை போன்றவை இவ்வகைப்படுவன.


இன்றைய வாசிப்புச் ழல்
வாசிப்பு என்ற கருத்துநிலை தொடர்பாக எமது சமூகத்தில் நிலவுகிறது. ஆரம்ப வகுப்பில் வரிவடிவத்தைப் புரிந்து கொள்வதற்காக எழுத்துக்கூட்டி வாசித்தல் என்பதை வாசிப்பாகக் கருதும் போக்கே ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. குமரப்பருவத்தில் விரிவுரைக் குறிப்புப் புத்தகத்தின் நடுவிலோ அல்லது அனைவரும் படுத்து உறங்கிய பின்னர் விளக்கு வெளிச்சத்திலோ படிக்கப்படுகின்ற பாலியல் உணர்ச்சியைத் தூண்டுகின்ற நூல்களை வாசிப்பதும் வாசிப்பாகத் தான் கருதப்படுகின்றது.

வாசிப்புக்கு அடிப்படை தரமான நூல்களின் தேர்வு.  நூல்கள் தொகையாலோ தரத்தோலோ அதிகரித்துச் செல்லும் தன்மை இல்லாத ஒரு காலப்பகுதியில், நூல்கள் புனிதமானவை என்ற கருத்துநிலை மேலாதிக்கம் செய்த ஒரு காலப்பகுதியில் நூல்கள் அனைத்துமே அறிவுப் பொக்கிசங்களாகவே இருந்தன. கோவில்கள் மடாலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்ட எத்தனையோ பதிவேடுகளை இதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். நூல்களின் தொகை விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலும் நூல் உருவாக்கத்தில் நீண்டகால அறிவும் அனுபவமும் பிரயோகிக்கப்பட்ட ஒரு  காலத்திலேயே நூலைத் தேர்ந்து கற்க வேண்டும் என்ற பொருள் தரும் 'கல்வி கரையில கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கிற் பிணி பல - தௌ;ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, பாலுன் குருகிற றெரிந்து'  என்கிற அடிகளை மிகப்பழமை வாய்ந்த இலக்கண நூலான நாலடியார் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. அதாவது நீருடன் கலந்துள்ள பாலை அன்னம் எவ்வாறு பிரித்துப்பருகுகின்றதோ அவ்வாறே நூல்களின் சாரத்தைக் கிரகிக்க வேண்டும் என்கிறது. நூல் அழகுகள் மட்டுமன்றி நூல் குற்றங்களையும் பட்டியலிட்டிருக்கிறது தொல்காப்பியம்.
ஆனால் இன்றைய உலகம் அப்படிப்பட்டதல்ல. நிமிடத்துக்கு மில்லியன்கணக்கில் உருவாகும் இன்றைய நூல் உலகில், கணனி அறிவே நூலுருவாக்கத்துக்குப் போதுமானது என்ற கருத்துநிலையில் இருக்கும் சமூகத்தில் குப்பைக்குள் குன்றிமணியைத் தேடிப் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வாசகனுக்கு.
'தரமான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு அரிய கலை. தரமற்ற புத்தகங்களை ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பது அதைவிடப் பெரிய கலை. நம்மை ஏமாற்ற வீசப்படும் தந்திர வலைகளுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு மிக மேலான புத்தகங்களைத்தேடி, அவற்றைப் படைத்திருக்கும் உன்னத ஆசிரியர்களைத் தேடி நாம் செல்ல வேண்டும் என்கிறரர் எழுத்தாளர் சுந்தரராமசாமி.
'அரிசியில் கல்லைக் கலந்துவிட்டால் பிரித்துவிடலாம். ஆனால் அறிவிலே நஞ்சைக் கலந்துவிட்டால் பிரிப்பது கடினம். எனவே நூல்தேர்வு கருத்தில் கொள்ளப்படவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்கள் நூலகங்களுக்கு கிடைக்க வழிசெய்யப்படவேண்டும்' என்கிறார் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா.
'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்றவாறு எதுவித நோக்குமில்லாது நூல்களை வாசிப்பதில் பயனில்லை. நோக்கத்தோடு வாசிக்கும்போது தான் எமக்கு வேண்டியவற்றை நூல் எங்களுக்குக் காட்டும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது புத்தகங்களுக்கும் பொருந்தும்' என்ற நாடறிந்த நாடகாசிரியர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மேற்கண்ட வரிகள் வாசிப்புக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது.
'சில நூல்கள் ருசிக்கப்படவேண்டும். சில விழுங்கப்படவேண்டும். இன்னும் சில சப்பிமென்று சமிக்கச் செய்யப்பட வேண்டும். என்ற புகழ்பெற்ற தத்துவமேதை பிரான்சிஸ் பேகனின் மேற்கண்ட வரிகள் நூல்களை எப்படிப் படிப்பது என்ற அம்சத்தை மிக ஆழமாக கோடிட்டுக் காட்டுகின்றன.
வாசிப்பு அனுபவத்தை வார்த்தைகளில் வரைய முயற்சி செய்யலாம். வாசிக்கத் தொடங்குமுன்பு மனசுக்குள் ஒரு உலகம் இருக்கிறது. உயிரோடும் சுறுசுறுப்போடும் இயங்கும் புற உலகம் போல் இதுவும் இன்னொரு உலகம். மரபு, நம்பிக்கை, லட்சியங்களால் உருவாகும் உலகம். வாசிக்க வாசிக்க வாசிக்கப்படுகின்ற விடயம் மனசில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு கரைந்துகொண்டே இருக்கிறது. மன உலகத்துக்கும் வாசிப்புக்குமான உறவு இது. இந்த உறவு தான் வாசக அனுபவத்தை உன்னதமாக்கவோ அருவருப்பாக்கவோ செய்கிறது என்கிறார் தினமணி தமிழ்மணி இதழில் கட்டுரையாளர் பாவண்ணன்.

வளமான வாசிப்பு
ஒருவனுக்குத் தேவையான கருவிகள், ஆற்றல்கள், அதிகாரம் அனைத்தும் வாசிப்பின் மூலம் கிடைக்கக்கூடியது என்பதையும் இவற்றைப் பிரயோகித்தலும் கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்தும் பெறுவதும் மனிதனை முழுமையாக்கும் என்பதையும் குறிப்படுவதுதான் 'வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்' என்ற பிரான்சிஸ் பேகன் அவர்களது சுலோகத்தின் உட்பொருள். இந்த சுலோகமானது இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில் 'வளமான' என்ற அடைமொழியை யாசித்து நிற்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.

வியாபாரமயப்படுத்தப்பட்டிருக்கும் நூல் உற்பத்தி, படித்து முடிந்ததும் குப்பைக்கூடைக்குள் போடக்கூடியளவுக்கு உடனடித்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நூல்களின் உற்பத்தி, தரங்குறைந்த தாள்களில் உருவாகும் மலிவுப் பதிப்புகளின் அதிகரிப்பு  ஆகியவை நூல்கள் புனிதமானவை என்ற கருத்துநிலையைத் தகர்த்துவிட்டன. குப்பைக்குள் குன்றிமணிகளைத் தேடிப் பொறுக்கவேண்டிய நிலையிலிருக்கும் இன்றைய தலைமுறையினருக்குக் கண்டதும் கற்கப் பண்டிதனாவான் என்ற பழமொழி பொருத்தமற்றதொன்று. கருத்துக்கொவ்வாத கதைப்புத்தகங்களே கதியென்று கிடப்பவர்கள் கூட  வாசிப்பில் முழு நாளையே தாம் செலவிடுவதாகத் தான் வாதிடுகின்றனர். இங்குதான் வளமான வாசிப்பு என்பதன் முழுமையான அர்த்தம் கிடைக்கிறது.

வளமான என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையாக ஆங்கில மொழியில் சiஉhநௌளஇ நnhயnஉநஅநவெஇ நசெiஉhஅநவெ எனப் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன எனினும் இவற்றுக்கிடையில் சிறுசிறு  வேறுபாடுகள் உண்டு. ஒன்றின் மதிப்பு, தரம், கவர்ச்சி என்பவற்றை மேம்படுத்துதல் எனப் பொருள்படுவது நுnhயnஉநஅநவெ. இதனை மேலும் வளப்படுத்துவதுவதன் மூலம் பெறப்படுவது நுசெiஉhஅநவெ.ஜழுஒகழசன 1995ஸ

வளமான வாசிப்புக்கு அத்திவாரம் இடும் பயனுள்ள முயற்சியில் ஒன்று சிறுவயதில் கதை சொல்லல் ஆகும். கதை சொல்லல் என்பது காதினால் வாசித்தல் என்ற பொருளில் ஜப்பானின் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வதற்கான சிறந்த செயற்திட்டமாகப் பின்பற்றப்படுகிறது. பாடசாலைக்குச் செல்லுமுன்னரே குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளை பெற்றோர்கள் அவர்களுக்கு முன்பு உரத்து வாசிப்பார்கள். தனக்குப் பிடித்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் கூட ஆர்வமாகக் கதை கேட்பர். பாடசாலைக்குப் போகத் தொடங்கியதும் அங்கிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை இக் குழந்தைகள் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த கதை கேட்கும் பழக்கமே அடிப்படையாக இருக்கிறது.
வளமான வாசிப்புக்கு உதவும் இன்னொரு உத்தி வாசிப்பில் பாய்ந்து செல்லல் என்பதாகும். எல்லா நூல்களையும் எவரும் படிக்க முடியாது. 'ஒரு தினசரியின் வார வெளியீட்டில் இருபத்திநாலு பக்கங்களுக்கு மேல் கண்ணைக்கவரும் வண்ணப்படங்களுடன் பல்துறையிலும் கட்டுரைகள் வெளியாகின்றன. நோயியல், மருத்துவம் எல்லா வார வெளியீடுகளிலும் காணலாம்; அரசியல் அலசல், போர்நிலைகள், சினிமா இப்படிப் போகின்றது. இப்படியான நீர்ப்பாலில் பாலைத்தெரிவது ஒரு கலை. வாசிப்போர் இந்தக் கலையைக் கற்க வேண்டும். ஒரு பந்தியில் இரண்டொரு சொற்களை, வசனங்களை வாசித்தவுடன், என்ன சொல்லப்படுகின்றது என்று விளங்குவது ஒரு அறிவுக்;கலை. அந்தக்கலை கைவந்தவர்கள் ஒரு நூலில் பக்கம் பக்கமாகப்புரட்டி அந்த நூல் முழுவதிலும் என்ன சொல்லப்படுகிறது என்று சொல்லுவார்கள். ளுமippiபெ in சுநயனiபெஇ 'வாசிப்பில் பாய்ந்து செல்லல்' என்று சொல்லலாம் என்கிறார் பண்டிதர் சச்சிதானந்தம் அவர்கள். ஜசச்சிதானந்தம் 2005ஸ

எனக்கு இப்படி வாய்க்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தருவதற்குப் பதில் மற்றவரை விட நான் மேல் என்ற மனோநிலையைத் தருகின்ற நூல்கள்---, தான் வாழுகின்ற சமூகத்துக்குப் பொருத்தமான புதுப்புது ஆய்வு முயற்சிகளைத் தூண்டும் நூல்கள்--, விரக்தியால் விழுந்து கிடப்பவரைத் தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நூல்கள்---, பற்றிப் பிடித்து ஏறுவதற்கு கொழுகொம்பாக இருக்கும் நூல்கள் இவை தான் வளமான வாசிப்புக்குத் தேவைப்படுபவை. இத்தகையதொரு வாசிப்புத் தான் 'நான்' என்ற உணர்வை இல்லாதொழித்து 'நாம்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். நாம் என்ற உணர்வு தோன்றிவிட்டால்  சமூக மேம்பாடு தொடர்பாகக் கவலைப்பட வேண்டிய அவசியமேயிருக்காது.

References
1.    Hornby, A.S Oxford Advanced learner’s   Dictionary. 5th ed. London: Oxford, 1995.
2.    Moyle.D.[1976] The Teaching of Reading. 4th ed. London: Ward Lock Educational, 1976.
3.    Shera,Jesse.H. (1976) Introduction to Librarary Science:Basic elements of Library science. Littletone:Libraries unlimited. p14.
4.    Sodex, Elle Benetti. What is reading?. A joint position paper of the international Reading Association and National middle school association. www.reading.org
5.    Worl Bank [1991 Annual worl bank conference on development economics. ed by Boris Pleskovic and Joseph E.Stiglitz. key note address by Joseph E. Stiglitz.- Wachington:world bank.p17-31.
6.    www. Wikipedia.org.
7.   சுச்சிதானந்தம்,க. 'புத்தகங்களே சிறந்த தோழர்கள்'அறிவாலயம் திறப்புவிழாச்சிறப்புமலர், இணுவில் : இணுவில் திருவூர் ஒன்றியம,; 2005.
8.    யோகவதி பாலகிருஸ்ணன். முதல் உலகத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டு மலர். பக்கம் 225.)


No comments: