Saturday, September 13, 2014

வாசிப்பும் சமூக மேம்பாடும்

வாசிப்பும் சமூக மேம்பாடும்



அறிமுகம்  
ஆய்வுக்கட்டுரைகள், அன்றாடச் செய்தி இதழ்கள், சுவரொட்டிகள், பொது அறிவுப் போட்டிகள், மேடைச் சொற்பொழிவுகள் என்று கல்விசார் நடவடிக்கைகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு வாசகம் 'வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்' என்பதாகும்.  இந்த வாசகம் ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதும் மனித சமூகத்தை நீண்டகாலம் ஆக்கிரமித்திருந்ததும் விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை மூலவளமாகவும் கொண்டதுமான நிலபிரபுத்துவ சமூக அமைப்பு நிலைகொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் தான் தோற்றம் பெற்றது என்பதும் ஆச்சரியத்துக்குரியதொன்று. இந்த வாசகமும் 'அறிவே ஆற்றல்' என்ற புகழ் பெற்ற வாசகமும் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ மேதை பிரான்ஸிஸ் பேகனுக்குரியவை. இரண்டு வாசகங்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புண்டு.
உலகின் அதிவளர்ச்சியுற்ற சமூகங்களுக்கிணையான எழுத்தறிவு வீதத்தைக் கொண்டவர்களும் மிக நீண்டகாலக் கல்விப்பாரம்பரியத்தை உடையவர்களுமான ஈழத் தமிழ்ச் சமூகத்தில் மேற்குறிப்பட்ட வாசகங்களினது முழுமையான அர்த்தம் 21ம் நூற்றாண்டுக்குள் நுழைந்தபின்னர்தான் உணரப்பட்டிருக்கிறது என்பதையே 2003ல் தொடங்கப்பட்ட பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்களின் தோற்றம், நூலக வாரங்கள், தேசிய நூலக ஆவணவாக்க சபையினால் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வாசிப்பை ஊக்குவிப்பதற்கான சகல வழிமுறைகளும் முடுக்கிவிடப்பட்டிருத்தல் போன்ற தேசிய ரீதியிலான, நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தராதரப் பத்திரங்களைக் குவிக்கும் கல்விச் சமூகமாக மட்டும் தான் நாம் இருக்கின்றோம், அறிவுடைய சமூகமாக இல்லை என்ற கசப்பான யதார்த்தம் அறிவுக்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாய நிலைக்கு எம்மை இட்டுச் சென்றிருக்கிறது.

அறிவே ஆற்றல்
ஆளுமை மிக்க மனித சமூகத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகின்றது. பலம் என்பது இயற்கை வளத்தாலோ, பணபலத்தாலோ அளவிடப்படுவதில்லை. உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு.
கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும்.. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலை தகவலாகவே வைத்திருக்காது அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு' , 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய  குறள்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. கல்லுதல் என்ற பொருள் கொண்ட கல்வி என்பதும் இதையே உணர்த்தி நிற்கிறது.
தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை அறிவே. இந்த அறிவுங்கூட தன்னை வளர்ப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாது தனது சமூகத்தையும் வளர்க்கும் உணர்வைத் தரும்போது மட்டுமே சமூக மேம்பாடு என்பது சாத்தியமாகும்.
    
கல்வியும் அறிவும்
'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும் . கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகிறது.
கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. 'மனிதனை மனிதனாக உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம்' என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனை 'உடல் உள்ளம் ஆன்மா என்பவற்றின் சிறப்பு மிக்க பண்புகளை வெளிக் கொணர உதவுவது கல்வி' என்ற காந்தியின் சிந்தனை வெறும் சுலோகங்களாக மட்டுமே படிக்கப்படுகின்றன. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை, வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உன்மையான பயன்பாடு என்ன---?  இதன் நன்மைகள் தீமைகள் எவை....? போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.
போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும்.

வாசிப்பு
'அமெரிக்க சனத்தொகையில் 25வயதுக்கு மேற்பட்டோரில் 50வீதமானோர் குறைந்தது நாளாந்தம் ஓரிரு சஞ்சிகைகள் படிக்கின்றனர் வாரமொருதடவை செய்தித்தாள் வாசிக்கின்றனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களில் ஒரு புத்தகத்தை மட்டும் வாசித்திருக்கின்றனர்' என 1999ஆம் ஆண்டில் தேசிய வீட்டுக் கல்வி ஆய்வின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. இதன் கருத்து அமெரிக்க சனத்தொகையில் மீதி 50 வீதம் ஒரு நூலைக்கூடப் படிக்கவில்லை என்பதே. இதன் மறுபுறத்தில் ஒருவருடத்தில் 10 நூல்கள் படித்தால் வாசகர் உலகின் உயர்மட்டத்தில் இருப்பீர்கள் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.(நுமைநnடிநசசல -2002). ஆசியான்(யுளுநுயுN) நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தைத் தடுக்கும் காரணிகளில் மிக முக்கியமானது அவர்கள் வாசிக்கும் சமூகமாக இல்லாது அரட்டையடிக்கும் சமூகமாக இருப்பதே என அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.(ஐகுடுயு- 1999). பழம்பெருமை பேசுவதிலேயே காலத்தின் பெரும்பகுதியைக் கழிக்கின்ற எமது சமூகத்தக்கும்  இது பொருந்தக்கூடியதொன்று.

வாசிப்பின் அடிப்படையில் எமது சமூத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
•    வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிக்காதவர்கள்: வாசிப்பு முக்கியம் என்ற உணர்வு இருந்தும் சோம்பல் காரணமாகவோ அல்லது நேரமின்மை காரணமாகவோ வாசிக்காதவர்கள்.
•    வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாதவர்கள்: எமது சமூகத்தின் கணிசமான பகுதி இப்பிரிவைச் சார்ந்தவர்களே. வாசிப்பின் முக்கியத்துவம் உணராமலேயே பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு பலரகப்பட்ட தொழில்களிலும் அமர்ந்துவிடுபவர்கள்.
•    வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிப்பின் முக்கியத்துவமும் அறிந்தவர்கள்: பேரறிஞர் என எம்மால் போற்றிக் கொண்டாடப்படுபவர்களும், மிகக் குறைந்தளவு தொகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் இவர்களே. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இந்த வகையில் உள்ளனர்.
•    வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆனால் வாசிப்பதற்கான வளங்களோ வசதிகளோ அற்றவர்கள்: பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களில் நூலகங்கள் கூட இவர்களின் அறிவுப்பசிக்குத் தீனி போடும் வல்லமையுள்ளனவாக இல்லை என்பது கசப்பான உண்மை.
•    வாசிக்கத் தெரியாதவர்கள் ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள்: அனேகமான நூலகங்களில் செய்தித்தாள் வாசித்துக்காட்டும் பணியும் தெருத்திண்ணைகளில் ஒருவர் வாசிக்க சுற்றியிருந்து கேட்கும் மக்கள் கூட்டமும் எமக்கு உணர்த்துவது இதைத் தான்.
•    வாசிக்கத் தெரியாதவர்கள் அதேசமயம் வாசிப்பின் முக்கியத்துவமும் அறியாதவர்கள்: ஏழ்மை, எழுத்தறிவின்மை, அறியாமை போன்ற பலதரப்பட்ட அமைப்புசார் வன்முறையையும் ஒருங்கே அனுபவிக்கும் இத்தகைய மக்களுக்கு வாசிப்பு என்ற கருத்துநிலை புதிது.

வாசிப்பைத் தூண்டும்; காரணிகள்
வாசிப்புச்சூழல்
பிறக்கும் எந்தக் குழந்தையும் தாயிடமிருந்தே பெரும்பாலானதைக் கற்கிறது. மனித வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பம், சுற்றுப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழிகிறது. 'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கைத் தெளிவாகக் காட்டப் போதுமானது.(சந்தானம்- 1987). பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது.
காலைப் பேப்பர் படிக்காது விட்டால்  பொழுதே புலர்வதில்லை என அங்கலாய்க்கும் அப்பாமார்கள், வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்குத் தேனீர் கொடுக்கவேண்டும் என்ற அந்த அவசரத்திலும் கூட தண்ணீர் கொதிப்பதற்கிடையில  சீனி சுற்றி வந்த பேப்பர் துண்டில் என்ன இருக்கின்றது என்று; பரபரப்புடன் கண்களை மேயவிடும் அம்மாக்கள், பரீட்சை அவசரத்தின் மத்தியிலும் கையில் புதிதாக அகப்பட்ட கதைப்புத்தகத்தை பள்ளிப் பாடப்புத்தகத்துக்குள் மறைத்து வைத்து வாசிக்கும் அக்காக்கள், நாட்டு நடப்புப்பற்றி அலசிக்கொண்டிருக்கும் 'எல்லாம் தெரிந்தவர்கள்' குழாம் ஒன்று தமக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பின்றித் திணறிக்கொண்டிருக்கும்போது, தேனீர் கொடுத்துவிட்டுத் திரும்பும் சாக்கில் இரத்தினச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தீர்வைக் கொடுத்துவிட்டுப்போகும் குறுகிய காலப் பள்ளிவாழ்க்கைக்குரிய அன்ரிமார்கள் என்று  குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வாசிக்கும் உணர்வைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் விதைத்து விடுகின்றனர். எனவே வாசிக்கும் சூழல் என்பது மிக முக்கியமான காரணி.
ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய தகவல் தொழினுட்ப யுகம் மேற்குறிப்பிட்ட சூழலை அடியோடு மாற்றியமைத்து விட்டது.  ஒரு புறம் நேரம் இல்லை என்ற கோஷமும் மறுபறத்தில் நேரம் போவதே தெரியாமல் தொலைக்காட்சியே கதி என்று கிடப்பதும் தான் குழந்தைகளுக்கு நாம் தரும் சூழலாக மாறிவிட்டது. வாசிக்க விருப்பம்;;! ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை என்பதெல்லாம் வெறும் நொண்டிச் சாக்கு. கிணற்றடியில் செலவழிக்கும் நேரம், வேலிப்பொட்டில் மினைக்கெடும் நேரம், மதிய உணவின் பின்னர் குறட்டைவிட்டுத் தூங்கும் நேரம், தொலைக்காட்சித் தொடர்களுக்குள் இம்மை மறுமையின்றி ஆழ்ந்து அமிழ்ந்திருக்கும் நேரம், போன்றவற்றில் சிறிதளவு மிச்சப்படுத்தினாலும் போதும் நேரம் தாராளமாகக் கிடைத்துவிடும். மிக முக்கியமானது வாசிக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே. எம்மைச் சுற்றி எப்போதும் நூல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல், நூல் எதுவும் வாசிக்காமல் வீட்டை விட்டு எக்காரணம் கொண்டு வெளியே போவதில்லை என்று பிடிவாதமாக இருத்தல்,  படுக்கைக்கு அருகில், கைப்பையில், குசினி இறாக்கையில் என்று முக்கியமான இடங்களில் படிக்க விரும்பும் நூலை வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம்  இத்தகைய உணர்வை உருவாக்கிக் கொள்ளலாம்.

வாசித்தல் இலக்கு
•    ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிப்பதற்கு ஒதுக்குவது என்பது மட்டுமன்றி குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு நூல்களை வாசிப்பது என்பது தொடர்பான இலக்கு ஒன்றையும் அமைத்துக்கொள்ளுவது வாசிப்பைத் தூண்டக்கூடியது. இந்த இலக்கானது ஒரு நாளில் ஒரு மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்குதல் என்பதாகவோ, மாதத்துக்கு ஒரு நூல் என்பதாகவோ அல்லது வாரம் ஒரு நூல் என்பதாகNவுh இருக்கலாம்;. இலக்கை அமைக்கும் வரையில் கடும் சிரமமாகவே இருக்கும். இலக்கை உருவாக்கிவிட்டால் வாசிக்காமல் விடுவது வாழ்க்கையையே தொலைத்துவிடுவது என்பதாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. வாசிப்பை மேம்படுத்துவதற்கான முதலாவது படிநிலை இதுவே. வாசித்த நூல்களுக்கான பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொள்வது இதில் முக்கியமானது. பதிவை மேற்கொள்ளும் செயற்பாட்டில் சிலருக்கு நாட்குறிப்பேடு, சிலருக்குக் குறிப்பெழுதும் கொப்பி, இன்னும் சிலருக்குப் படிப்பு மேசைக்கு எதிரே இருக்கும் சுவர், இன்னும் சிலருக்கு குளிர்சாதனப்பெட்டி--- பதிவை எங்கே சேமிப்பது என்பது முக்கியமன்று. பதிவைத் தயாரிக்கும் உணர்வே முக்கியமானது.
•    இனி வாசிக்கப் போகும் நூல்களுக்கான பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொள்ளுதல். நல்ல நண்பர்கள், சக அலுவலர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் போன்றோர் நல்ல நூல்களின் தெரிவுக்கு எப்போதும் உதவுவார்கள், பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் வெளிவரும் நூல்விமரிசனங்கள், நூல்வெளியீட்டு விழாவின் மதிப்புரைகள் போன்றன நல்ல நூலைத் தெரிவு செய்ய உதவும்.

'வாசிப்பு என்னை அப்படியே நிறுத்தி வைக்கின்றது. அந்தச் சக்தி நல்ல கருத்தை வலியுறுத்தும் ஒரு புத்தகத்துக்கே உண்டு என்று தான் சொல்வேன். வாசிக்காத நேரங்களில் நிறைவு, மகிழ்ச்சி சுவாரஸ்யம் அனைத்தும் குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. சோம்பல் உணர்வு ஏற்படுகின்றது. வேகமாக செயற்பட முடியாத ஒரு சோர்வும் இடையிடையே தெரிகின்ற மாதிரி ஒர் உணர்வு. ஏதோ இழந்து விட்டோம் என்பது மாதிரியும் நல்ல நட்பை இழந்து விட்டது போலவும் கூடச் சில சமயம் உணர முடிகின்றது. எதையாவது வாசித்துக் கொண்டிருப்பது மனதுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவல்லது என்பதை வாசிக்கப் புத்தகம் இல்லாத நேரங்களில் தான் அதிகம் உணர முடிகின்றது. வாசிக்க இன்னும் புத்தகங்கள் இருக்கின்றன என்னும் போது தான் வாழ்க்கையில் பிடிப்பும் மகிழ்ச்சியும் கூடுதலாக இருப்பதை உணர முடிகின்றது. வீட்டு வேலைகளை ஆர்வத்துடனும் வேகமுடனும் செய்ய மனம் வருகின்றது. எப்படியும் ஏதோ ஒரு விதத்திலாவது எனக்கு நல்ல புத்தகங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவறாமல் முதல் வேலையாகக் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு வாசிக்கத் தொடங்கி விடுவேன். நித்திரையைக் கூட நிறுத்தி விடுவேன் வாசிப்பதற்காக' என்கிறார் கொழும்புவாழ் இல்லத்தரசி ஒருவர் (கனகலிங்கம்,ரதி 2005).

வாசிக்கும் இடம்
வாசிக்கும் இடத்தைத் திட்டமிடுதலும் வாசிப்பைத் தூண்டும் முக்கிய காரணியாகும். சிலருக்குப் படுக்கையில்--- பலருக்குக் காலைப் பொழுதில் கோப்பி அருந்தும் நேரத்தில்,--- இன்னும் சிலருக்கு மதியம் சாப்பிடுகையில்.--- பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான மக்களுக்கு  பேரூந்துகள், புகைவண்டிகள், போன்றவையே  வாசிக்கும் இடங்கள். வேலைக்குப் போகும் அவசரத்திலும்கூட கைப்பையில் புத்தகம் எடுத்துவைக்க அவர்கள் மறப்பதே கிடையாது. அதேசமயம் ஒற்றைக்காலில் நின்று பயணம் செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே தரும் எம்மூர் வண்டிகளில் இத்தகைய கருத்துநிலை நகைப்புக்கிடமானதொன்று எனினும் அலுவலகத்தின் மதிய உணவு வேளையை நாம் எவ்வாறு செலவிடுகின்றோம் என்பதையும் மீட்டுப்பார்ப்பது பயன்தரத்தக்கது.
வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது.  'கடலைப் போன்றது நூலகம். மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்;;;. சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்;. குளிப்போர் குளிக்கலாம்;.  காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்;. மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்;. வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்;. முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.;; செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்ற தேர்ந்த வாசகர்களுள் ஒருவரான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் கூற்று இங்கு கருத்திற் கொள்ளப்படக்கூடியது. (சண்மகலிங்கம்,ம,2005).
வாசகர் வட்டங்களுடன் இணைந்து கொள்வது வாசிப்பைத் தூண்டக்கூடியதொன்று. வாசகர் வட்டம் என்னும்போது பொதுவான பொருட்துறைகளில் ஆர்வமுள்ளோரை ஒன்று சேர்த்து அவர்களுக்கென வாசிப்பு வட்டங்களை உருவாக்குதல் ஆகும்;. வாசிப்பு வட்டங்களுக்குத் தேவையான நூல்களையும் வாசிப்பு வட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வாசிப்பு வட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்கலாம். வாராந்த மாதாந்த ரீதியில் நடைபெறும் இத்தகைய கருத்தூட்டல்களுக்கு உதவுமுகமாக நூலகங்கள் தமக்கென சிறியளவிலாவது கருத்தரங்கு மண்டபம் ஒன்றையும் கொண்டிருக்குமாயின் வாசிப்பு வட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பேயே அவற்றுடன் தொடர்பான நூல்களை அம் மண்டபத்தின் ஒரு பகுதியிலேயே காட்சிப்படுத்தின் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும். பெரும்பாலான பொதுநூலகங்கள் வாசகர் வட்டங்களை சிறப்பாக நடத்திவருவதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

வாசிக்கும் நேரம்
ஒவ்வொரு நாளும் ஒரு ஒழுங்கில் குறித்த நேரத்தை அமைதியாக வாசிப்பதற்கு ஒதுக்குவது அவசியமாகும். வாசிக்கும் காலமானது தினமும் 10-15 நிமிடங்களாக இருக்கலாம்.  அல்லது கூடிய நேரமாக கிழமைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களாக அமையலாம். தேர்ந்த எழுத்தாளர்களிடம் கேட்டால் குறைந்தது இரண்டு மணி நேரம் வாசிப்பில் செலவிடுவதாகக் கூறுவார்கள். அதேசமயம் புத்தகத்துக்குள் நுழையாமலேயே 24 மணிநேரமும் புத்தகமும் கையுமாகத் திரிபவர்களும் எம்மிடம் உண்டு. பாடசாலை மட்டத்தில் மாணவர்களைத் தாமாகவே தமக்கு விரும்பியவற்றை தெரிவு செய்து தத்தமது விருப்பப்படி வாசிக்க அனுமதிக்க வேண்டும்.  வாசிப்பதற்கு போதிய புத்தகங்கள் இல்லாத பிரச்சனையைத் தீர்ப்பதற்கு .வேறுபட்ட வகுப்புகளிற்கு வௌ;;வேறு நேரத்தில் வாசிப்பதற்குரிய நேரத்தை ஒதுக்கலாம்;. 
சுதந்திரமாக வாசிப்பதற்கான நேரத்தை நாம் தேடிக்கொள்ளாதுவிடின் அல்லது பாடசாலை மட்டத்தில் வாசிப்பதற்கான நேரத்தை ஒதுக்குதலை ஒரு முக்கிய விடயமாகக் கருதாவிடின்; வாழ்நாள் பூராக வாசிக்கும் பழக்கத்தை விருத்தி செய்வதை நாம் இழந்துவிடுவோம். பெற்றோரைப்பொறுத்து இருவருமே வேலைக்குச் செல்பவர்களெனில் பிள்ளைகளின் வாசித்தலை மேற்பார்வை செய்வதற்கான நேரம் அரிதாகவே இருக்கும்.  இன்னொரு வகையில் மாணவர்களின் பெரும்பாலான நேரம் தனியார் வகுப்புகளிலும் பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டு வேலைகளிலும் செலவழிக்கப்படுவதனால் மாணவர்களிற்கு மனச் சந்தோசத்திற்காக வாசிக்கக் கிடைக்கும் நேரம் அற்றுப் போகிறது. 

வளமான வாசிப்பு
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணி எதை வாசிப்பது என்பது தான்.. நூல்கள் வியாபாரமயப்படுத்தப்பட்டிருப்பதும், ஏனைய பொருட்களை விடவும் நூல்களின் விலை ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு போவதும், ஓரே நூலைத் தரங்குறைந்த தாளில் அச்சிட்டுப் பெருந்தொகையில் மலிவுப்பதிப்புகளாக விற்கக்கூடிய வசதியும், படித்து முடிந்ததும் குப்பைக்கூடைக்குள் போடக்கூடியளவுக்கு உடனடித்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நூல்களின் உற்பத்தியும், புத்தகங்கள் புனிதமானவை என்ற கருத்துநிலையைத் தகர்த்துவிட்டன. குப்பைக்குள் குன்றிமணிகளைத் தேடிப் பொறுக்கவேண்டிய நிலையிலிருக்கும் இன்றைய தலைமுறையினருக்குக் கண்டதும் கற்கப் பண்டிதனாவான் என்ற பழமொழி பொருத்தமற்றதொன்று. கருத்துக் கொவ்வாத கதைப்புத்தகங்களே கதியென்று கிடப்பவர்கள் கூட  வாசிப்பில் முழு நாளையே தாம் செலவிடுவதாகத் தான் வாதிடுகின்றனர். இங்குதான் வளமான வாசிப்பு என்பதன் முழுமையான அர்த்தம் கிடைக்கிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் இணைந்த முயற்சியினால் மட்டுமே தரமான நூல்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பை இளைய தலைமுறையினர் பெற்றுக்கொள்ளமுடியும். சமூகங்களை வடிவமைத்த சிற்பிகள், சமூகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்ற வழிகாட்டிகள், சமூகத்தில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்திய  அவதார புருஷர்கள் போன்ற  பெரும் தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள், பொது அறிவு நூல்கள் போன்றவை  முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் மாணவப்பருவத்துக்கு மிகப்பொருத்தமானவை. உலக சமூகங்களின் வாழ்நிலையைக் காட்டும் கண்ணாடிகளாக இருக்கும் மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகவும்; பயன்தரத் தக்கவை.
எனக்கு இப்படி வாய்க்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தருவதற்குப் பதில் மற்றவரை விட நான் மேல் என்ற மனோநிலையைத் தருகின்ற நூல்கள்---, தான் வாழுகின்ற சமூகத்துக்குப் பொருத்தமான புதுப்புது ஆய்வு முயற்சிகளைத் தூண்டும் நூல்கள்--, விரக்தியால் விழுந்து கிடப்பவரைத் தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நூல்கள்---, பற்றிப் பிடித்து ஏறுவதற்கு கொழுகொம்பாக இருக்கும் நூல்கள் இவை தான் வளமான வாசிப்புக்குத் தேவைப்படுபவை. இத்தகையதொரு வாசிப்புத் தான் 'நான்' என்ற உணர்வை இல்லாதொழித்து 'நாம்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். நாம் என்ற உணர்வு தோன்றிவிட்டால்  சமூக மேம்பாடு தொடர்பாகக் கவலைப்பட வேண்டிய அவசியமேயிருக்காது.

குறிப்புதவு நூல்கள்

1.    அருளானந்தம், ஸ்ரீ. சனசமூகநிலையங்கள்: சமூகமேம்பாட்டின் குவிமையங்கள். பாரதிதாசன் கட்டிடத் திறப்புவிழா மலர். 2003.
2.    கனகலிங்கம், ரதி. 'இல்லத்தரசி ஒருவரின் வாசிப்பு அனுபவங்கள்'. அறிவாலயம் சிறப்பு மலர். இணுவில்: இணுவில் திருவூர் ஒன்றியம், 2005. பக்.98-99
3.    சண்முகலிங்கம், ம. 'நுழைபுலம்'. மேற்படி நூல் பக்.98-99.
4.    சந்தானம், எஸ். கல்வியின் தத்துவ சமூக அடிப்படைகள். சென்னை: பழனியப்பா, 1987. பக்.605.
5.  International Federation of Library Associations and Institutions.1995-2000
www.ifla.org.


ஸ்ரீ. அருளானந்தம்,
முதுநிலை உதவி நூலகர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
10-08-2006.


1 comment:

abnerableman said...

Harrah's Cherokee Casino & Hotel - MapYRO
Harrah's 태백 출장마사지 Cherokee 파주 출장마사지 Casino & Hotel locations, rates, amenities: expert Cherokee research, only at Hotel and Travel 나주 출장마사지 Index. 경기도 출장샵 Realtime driving directions to 용인 출장샵 Harrah's Cherokee