Wednesday, February 05, 2014

"யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள் 2

பக்கத்து வீட்டுப் பூமணியின் மூன்று வயது மாறனுக்கு கொஞ்ச நாளாய் உடல், உள நிலையில் கோளாறு. இரவில் தூக்கம் அடியோடு இல்லை. சிரித்து விளையாடிக்கொண்டு இருப்பவன் திடீரென வீரிட்டுக் கத்துவான். பயத்தில் தேகம் பதறும். எதைக்கண்டு இப்படிப் பதறுகிறான் என்று எல்லோருக்கும் ஒரே கவலை.

'அம்புலி' யைக் காட்டி சோறு தீத்தும் தந்திரம் இவனிடம் மட்டும் நடக்கவில்லை. நிலவைக் கண்டாலே வீரிட்டுக் கத்தத் தொடங்குவான். அதுவும் வளர்பிறை தொடங்கிவிட்டால் இது ஒரு பிரச்சனை. அன்பாகச் சொல்லி அரவணைத்துக் கேட்டும் எதுவுமே விளங்கவில்லை.கடைசியில் மிரட்டியும் தூங்க வைக்க முயற்சித்தாகிவிட்டது.

நடு இரவு 'அம்மா யன்னலை மூடுங்கோ' பயத்தில் குளறிய குரல். யன்னல் ஊடாக பூரண நிலவு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்ததை பார்த்த பூமணிக்கு நிலைமை விளங்க யன்னலை மூடிவிட்டு குழந்தையை அணைத்துக் கொண்டவள் நிலா நிலா ஓடி வா எனக் குதூகலிக்கும் குழந்தை இப்படி அலறக் காரணம் என்ன? என்பது புரிய மறுக்க யோசனையுடன் கிடந்தாள். சில நிமிடம் கழிந்த பின்
'அம்மா நாளைக்கும் இப்படி பரா லைற் வருமே' -  மெல்ல காதில் கிசுகிசுத்தான் குழந்தை.

பரா லைற் அடிக்குது ஆமி வரப்போறான் என்று அலறித்துடித்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் பூமணியும் அவள் மகன் மாறனும் அடங்குவர்.


No comments: