Saturday, September 13, 2014

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்



ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்

1.அறிமுகம்
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. நிகழ்வு வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வௌ;வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது.  
ஒரு சமூகத்தை அடையாளத்தை உறுதி செய்வது அந்த சமூகத்தின் எழுத்துருவப் பதிவேடுகள். இது வெளியிடப்பட்டதாகவோ வெளியிடப்படாததாகவோ இருக்கலாம். தனிமனிதனின் அடையாள அட்டை, தகுதிச் சான்றிதழ்கள், அவனது நாட்குறிப்பேடு, காணி உறுதி போன்றவை வெளியிடப்படாத ஆவணம். தனிமனிதனின் சிந்தனையிலிருந்து உருவாக்கம் பெற்று அது அச்சு வடிவம் பெறும்போது அது வெளியிடப்பட்ட ஆவணம். தனிமனிதன் போன்றே இந்த ஆவணங்கள் குடும்பம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, நாடு சார்ந்தவை எனப் பரந்;துபட்டதாகவும், தொடர் செயற்பாடு கொண்டதாகவும் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்;
இலங்கைத் தமிழர் என்ற சொற்பதம் உள்நாடு சார்ந்து இலங்கைத் தீவின் வட  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வாழும்; தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரையும் வெளிநாடு சார்ந்து உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழரையும்  உள்ளடக்குகின்றது.   ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர் 3000 ஆண்டு கால பழமையை கொண்டிருந்தபோதும் கடந்த இரு நூற்றாண்டு கால வரலாறே எமது கைக்கும் கிடைக்கும் வரலாறாக உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு ஈழத் தமிழ்ச் சமூகம் ஆவணப்படுத்தல் செயற்பாட்டில் மிகப்பலவீனமான சமூகம் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு. ஈழத்தமிழர் வாழ்வியலில் தனிநபரை விட சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தகவலைப் பதிந்து வைப்பதற்கு ஏற்ற நிரந்தர மற்றும் நீடித்துழைக்கக்கூடிய சாதனங்களின் இல்லாமை, வாய்மொழிப் பாரம்பரியத்தில் அதிகம் தங்கியிருக்கும் பண்பு போன்றவை ஆவணவாக்கச் செயற்பாடு சார்ந்து பலவீனமான சமூகம் என்ற கருத்துநிலைக்குள் ஈழத்தமிழ்ச்சமூகத்தை சுலபமாக தள்ளியிருப்பதும், கடந்த இரு நூற்றாண்டு கால வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே அதன் ஆவணவாக்கச் செயற்பாட்டை அறிவதும் சாத்தியமாகிறது.

ஆவணவாக்கம் என்ற கருத்துநிலை ஈழத்தமிழ்ச்சமூகத்திற்குப் புதியதொன்றல்ல. பதப்படுத்திய பனையோலைகள் மட்டுமே தாள்களின் கண்டுபிடிப்புக்கு முந்திய ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஒரேயொரு  பதிவு ஊடகமாக இருந்தவகையில் படியெடுத்தல் மூலமான ஆவணவாக்கச் செயற்பாடு பரவலாக இருந்திருக்கிறது என்பதையே நாவலர் மற்றும் சி.வை.தாவின் பதிப்புரைகளில் ஒரே விடயம் தொடர்பாக பல ஏட்டுப் பிரதிகள் பயன்பாட்டில் இருந்தமை புலப்படுத்துகின்றது. ஆரம்பகாலத்தில்  அரச குடும்பத்துடன் மட்டுமே  மட்டுப்படுத்தப்பட்டிருந்த சிந்தனைப் பதிவேடுகளின் பயன்பாடு, இலவசக் கல்வி, தாள்களின் அறிமுகம் மற்றும் அச்சின் கண்டுபிடிப்பு போன்றவற்றால்  பொதுசனமயப்படுத்தப்பட்ட காலமுதற்கொண்டு இன்றுவரை பல பண்புகளைக் கொண்டிருக்கிறது.

1.1 ஆவணவாக்கம்: வரைவிலக்கணம்
ஆவணவாக்கம் அல்லது ஆவணப்படுத்தல் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் கொண்டது. பொதுவான நோக்கில் தரவுகள் நிகழ்வுகள் தகவல்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பதிகின்ற ஒரு செயற்பாடே ஆவணவாக்கம் (னுழஉரஅநவெயவழைn) என்ற பெயர் கொண்டழைக்கப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் ஆவணங்களை பெறுதல் கையாளுதல், தொடர்புபடுத்தல் போன்ற செயல்முறைகள் உள்ளடங்கிய கற்கையாக இது பொருள் கொள்ளப்படுகின்றது. (ர்யசசழன 1987). நிகழ்நிலை நூலகத் தகவல் அறிவியல் அகராதி ஒன்று ஆவணவாக்கம் சார்ந்து பொதுநோக்கு, நூலகவியல், தகவல் அறிவியல், புலமை சார் வெளியீடுகள், தரவுச் செய்முறை மற்றும் ஆவணக்காப்பகம் என ஆறு வகையான வரைவிலக்கணங்களைத் தருகின்றது. பொதுவான நோக்கில் எந்தவொரு செய்முறை சார்ந்த முறையான எழுத்துவடிவ விளக்கம் ஆவணவாக்கம் என பொருள் கொள்ளப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் நிறுவன வளங்களை பாதுகாக்குமுகமாகவும் ஆய்வுக்கு உதவும் வகையிலும் விசேட ஆவணங்களை குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சட்டம் சார்ந்த ஆவணங்களை முறைப்படி சேகரித்தல் ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை உள்ளடக்குகின்றது. தகவல் அறிவியல் சார்ந்து புலமைசார் வெளியீடு என்ற வகையில் ஆய்வு முயற்சிக்கு துணை போகின்ற தகவல்களை மேற்கோள் காட்டும் நடைமுறை ஆவணவாக்கம்; எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆவணக் காப்பகங்களில் உசாத்துணை நோக்கத்துக்காகவும் பாவனையாளருக்கான தேடுதல் கருவியாக உதவும் வகையிலும் பதிவேடுகளுக்கு விபரங்களைத் தயாரித்து ஒழுங்கமைக்கும் செயற்பாடாக கருதப்படுகின்றது. தரவுச் செய்முறையில் பொறிமுறை வாசிப்பு தரவுக் கோவைகளை உருவாக்குதல், செயற்படுத்தல், பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவைப்படுகின்ற விரிவான தகவல்களாக இது பொருள் கொள்ளப்படுகின்றது.(சுநவைண  2004).
ஆவணவாக்கம் என்ற பதம்  அது பயன்படுத்தப்படும் தகுதியினடிப்படையில் வௌ;வேறுபட்ட பொருள் கொண்டதென்று கூறும் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர் இரங்கநாதன்; நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக  விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரினநுண்ணினக் கருத்துப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப்பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் (சுயபெயயெவாயn 1974). 

ஆய்வும் ஆவணவாக்கமும்
ஈழத்தமிழ் இலக்கிய உருவாக்கங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆய்வுக்கும் ஆவணவாக்கத்துக்கும் இடையிலான தனித்தன்மைகள், வேறுபாடு மற்றும் உறவுநிலைகளைத்  தெளிவாகப் புரிந்து கொள்ளாமையாகும். இதனால் ஆவணவாக்கப் பண்புகளை மிகுதியாகக் கொண்ட இலக்கியங்கள் ஆய்வு நூல் எனப் படைப்பாளரால் விதந்துரைக்கப்படுவது பொதுவான போக்காக உள்ளது. ஆய்வு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அறிவின் இருப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டு புதிய அறிவை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது. ஆவணவாக்கம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அறிவை உள்ளது உள்ளபடியேயோ, சுருக்கியோ, விரித்தோ, குறை களைந்தோ, தொகுத்தோ மீள உருவாக்கப்படுவது. ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்பாகவோ, ஏற்கனவே கண்டுபிடித்த ஒன்றின் தொடர்ச்சியாகவோ அன்றி அதன் இற்றைப்படுத்தலாகவோ அமையலாம். ஆவணவாக்கம் இன்றேல் ஆய்வு இல்லை. ஆய்வுக்கு மூலமே ஆவணவாக்கம். இதன்காரணமாகவே ஆவணவாக்கம் அறிவியல் துறையாக (னுழஉரஅநவெயவழைn ளுஉநைnஉந) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தனி நிறுவனமாகவோ அல்லது நிறுவனத்தின் ஒரு பகுதியாகவோ இயங்கி தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்ளுதல், செய்முறைப்படுத்துதல், பாதுகாத்தல், சுருக்கப்படுத்தல், சாராம்சம் தயாரித்தல், சொல்லடைவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையங்கள் ஆவணவாக்க நிலையங்கள் என  அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட துறை சார்பாக வெளியாகின்ற அண்மைக்காலத் தகவல்களைச் சேகரித்து முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் சாதாரண நூல்விவரப்பட்டியல் முதற்கொண்டு  குறிப்பிட்ட துறை சார்பாக வெளியிடப்படுகின்ற அண்மைக்கால வெளியீடுகளை தேடிக் கண்டுபிடித்துச், சேகரித்து, ஒழுங்குபடுத்தி, அத்துறையின் வளர்ச்சிநிலை பற்றிய மதிப்பீட்டை புதிய ஆக்கமாக ஆய்வாளருக்கு வழங்கும் பொருட்படிநிலையறிக்கைகள் (ளுவயவந-ழக-வாந-யசவ-சுநிழசவ)  வரை இவற்றின் ஆவணவாக்கச் செயற்பாடுகள் பரந்து பட்டதாகவும் ஆழமானதாகவும் அமையும். ஆவணவாக்கத்தின் மிகச் சிறந்த பெறுபேறாக உருவாக்கப்படும் பொருட்படிநிலை அறிக்கைகள் ஆய்வுக்கான அத்திவாரமாக அறிவியல் சார்ந்த துறைகளில் முக்கியத்துவப்படுத்தப்படுத்தப்படுவதுடன் இதற்கான உருவாக்கச் செலவு ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை கூடிக் குறையும்.  துரதிருஷ்டவசமாக ஈழத்தமிழ்ச்சமூகத்தின் பட்ட மற்றும் பட்டப்பின்படிப்பு சார்ந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை ஆவணவாக்கச் செயற்பாடுகளுடன் மட்டுப்படுத்தபட்டுவிடுகின்ற, ஆய்வுக்கான ஆரம்ப முயற்சிகளாக இருப்பதே கண்கூடு. 

1.2 ஆவணவாக்கம் - வகைகள்
பரந்த நோக்கில் ஆவணவாக்கத்தை மூலவகை ஆவணவாக்கம் (ளுழரசஉந னுழஉரஅநவெயவழைn) கருவி வகை ஆவணவாக்கம்; (வுழழட வலிந னழஉரஅநவெயவழைn) என இருபெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். மூல வகை ஆவணவாக்கத்தில் தரவு, நிகழ்வு மற்றும் தகவல்கள் கூடியவரை உள்ளது உள்ளபடியே பதியப்படுகின்றன. இது அன்றைய சுவடிப்படியெடுப்பு முதற்கொண்டு இன்றைய முழுப்பாட ஆவணப்படுத்தல் (குரடட வநஒவ னுழஉரஅநவெயவழைn) செயற்பாடுவரை உள்ளடக்கும். ஏற்கனவே உள்ள மூல ஆவணத்தை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு கருதி படியெடுத்தல், குறிப்பிட்ட ஒரு ஆவணம் பல பிரதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசோதித்து, ஒப்பு நோக்கி மூல ஆவணத்தை இனங்கண்டு பதிப்பித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களை அல்லது குறிப்பிட்ட துறைசார்ந்த ஆவணங்களைத் தேடிச் சேகரித்து தொகுத்து வெளியிடுதல், கள ஆய்வின் மூலம் வாய்மொழி வரலாறுகள் மற்றும் பாடல்களைப் பதிதல், பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் போன்றவை மூலவகை ஆவணவாக்கத்தில். கருவி வகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதல் என்பதாகும். இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விபரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு, சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும்.

ஆவணவாக்கத்தின் பண்புகளின் அடிப்படையில் பதிப்புசார் ஆவணவாக்கம் தொகுப்புசார் ஆவணவாக்கம் என்ற இருபெரும் பண்புகளாக வகைப்படுத்தலாம். பொதுவான நோக்கில் தொகுப்புப் பணி என்பது பரந்த பொருள் கொண்டது. குறிப்பிட்ட பொருள் சார்ந்த தரவுகள், தகவல்கள் நிகழ்வுகள் போன்றவற்றை பலதரப்பட்ட ஆவணம் சார்ந்த மற்றும் ஆவணம் சாராத தகவல் வளங்களிலிருந்து தேடிச் சேகரித்து பதிதலை இது குறிக்கின்றது. நூலகவியல் நோக்கில் தொகுப்புப் பணி என்பது படைப்புகளின் தொகுப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது. இது தனித்த ஒரு படைப்பாளரின் பல ஆக்கங்களை தொகுத்தலாகவோ அல்லது பல படைப்பாளரின் ஆக்கங்களின் தொகுப்பாகவோ அமையக் கூடியது. மூல ஆவணத்தில் எந்தவொருமாற்றத்தையும் செய்யாது இது மேற்கொள்ளபடுவது. பரந்த நோக்கில் குறிப்பிட்ட கால வரையறையில் குறித்த துறை சார்நத அல்லது குறித்த படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற செயற்பாடும் தொகுப்புபணியாகவே பார்க்கப்;படுகின்றது. பதிப்புப் பணி என்பது தமிழ்ச் சூழலில்; பலதரப்பட்ட வகையில் பொருள் கொள்ளப்படுகின்றது. நூல் ஒன்றை புதிதாக உருவாக்கி அதனை வெளியிடும் செயற்பாடு மற்றும் அச்சிடுதல் செயற்பாடு போன்றவையும் பதிப்புப் பணி என்றே பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு அச்சிடுதல் (pசiவெiபெ)இ பதிப்பித்தல் (நனவைiபெ)இ வெளியிடுதல் (Pரடிடiளாiபெ)இ மீள்பதிப்பு (சுநிசiவெ) ஆகிய நான்கு பதங்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு தொடர்பான தெளிவு அவசியமானது.  பதிப்பு வேறு. வெளியீடு வேறு. ஏற்கனவே உள்ள ஒன்றை திருத்தம் செய்தோ அன்றி செய்யாமலோ மீள வெளியிடுவது பதிப்புப் பணி. ஆக்கம் ஒன்றை அந்த ஆக்கத்தின் படைப்பாளரோ அல்லது வேறு தனிநபரோ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்று வெளியிடுவது வெளியீட்டுப் பணி. வெளியிடுவதற்கான அச்சிடுதல் பணிகளை மேற்கொள்வது அச்சிடுதல் பணி. வெளியிட்ட பிரதிகள் போதாதபோது அதனை இற்றைப்படுத்தாமலோ, மீளாய்வு செய்யாமலோ அப்படியே மீள வெளியிடுவது மீள்பதிப்பு.  சமூகத்தில் குறிப்பிட்ட ஆக்கத்தின் ஆசிரியர் அறியப்படாதவிடத்து பாதுகாப்பு நோக்கங்கருதியும் பயன்பாடு கருதியும் அதனைப் மீளப்படியெடுத்தல், பருவ இதழ்களில் அல்லது மாநாட்டு வெளியீடுகளில் வெளியிடும்பொருட்டு பதிப்புக்குழு ஒன்றினூடாக ஆய்வுக் கட்டுரைகளை அதன் ஆசிரியரைக் கொண்டே திருத்துவித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட துறைசார்ந்த அல்லது குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களை தேடிச் சேகரித்து ஒழுங்குபடுத்தி வெளியிடுதல் போன்றவை பதிப்புப் பணிகளில் உள்ளடங்கும். பதிப்புப் பணியானது பலதரப்பட்ட பண்புகளையும் பல படிநிலைகளையும் கடந்து வந்திருக்கிறது. சுவடிகள் மற்றும் நூல்களிலிருந்து எழுதி எடுத்து பாதுகாத்தல், சுவடிகள் கையெழுத்துப் பிரதிகளாக தாள்களில் அல்லது சுவடிகளில் இருப்பவற்றை அப்படியே அச்சு வடிவத்துக்கு மாற்றுதல், பல சுவடிகளை ஒப்பு நோக்கி பாடவேறுபாடுகளை உள்ளடக்கி மீள வெளியிடுதல்இ ஒரு ஆக்கம் சார்ந்து எழுதப்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை தொகுத்து வெளியிடுதல், ஒரு ஆக்கத்தை பயன்படுத்துவதற்கான பல்வேடு தேடல் வழிமுறைகளை ஆக்கத்தின் முன்னே அல்லது பின்னே  உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பதிப்புப் பணியில் உள்ளடங்குகின்றன.

ஆவணத்தின் உருவமைப்பு சார்ந்து இது சுவடிகள், பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், இலத்திரனியல் வளங்கள் போன்ற நூலுருச் சாதனங்களை ஆவணப்படுத்தலை குறிக்கிறது. தொழிற்பாடு சார்ந்து நிகழ்வுகள் தரவுகளைப் பதிதல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இலக்கியங்களை பதிப்பித்தல், தொகுத்தல், சொல்லடைவுபடுத்தல், சாராம்சப்படுத்தல் போன்றன உள்ளடங்குகின்றன. ஆவணப்படுத்தலின் வியாபகத் தன்மை சார்ந்து தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு என்ற வகையில் இந்த ஆவணவாக்கச் செயற்பாடு நடைமுறையில் உண்டு.


2. ஆய்வின் நோக்கம், பிரச்சனை மற்றும் ஆய்வுமுறைமை
இந்த ஆய்வின் நோக்கம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணலும் முறைப்படி வகைப்படுத்தலுமாகும். இவ்வாய்வானது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கம் தொடர்பான பேணப்பட்டுவரும் தகவல்களின் அடிப்படையிலான விரிவான இலக்கியமீளாய்வின் வழி பெறப்பட்டு, நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் செவ்வைபார்க்கப்பட்ட  தரவுகளைத் தேவைக்கேற்ப வரலாற்று, விவரண உத்திகளைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்து ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணவும் முறைப்படி வகைப்படுத்தவும் முனைந்து நிற்கிறது.

ஆய்வில் சரியான தகவல்களைச் சேகரித்து அவற்றை பரிசோதித்துப் புதிய நோக்குகளையும் வெளிப்படுத்தல்களையும் ஒப்பீடுகளையும் இனங்காணும் வகையில் ஆய்வு முறைமை அமைவது இன்றியமையாதது.     இந்த ஆய்வினைப் பொறுத்த வரையில் ஆய்வுமுறைமையானது. தரவுகளை அடிப்படையாகக் கொண்டமைந்த வரலாற்று ரீதியான நிரற்படுத்தல்களையும்,  கோட்பாட்டு ரீதியான வகையீடுகளையும், எளிதில் விளக்கிக்கூறும் வகையில் தொடர்புபடுத்தி; விளக்கிக்கூறும் விவரண முறைமையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனித்து விவரண முறைமையினை மாத்திரம் பின்பற்றின் அது பண்புகளை வகைப்படுத்தத் தவறிவிடும் என்பதாலும், வரலாற்று ரீதியான பார்வை தகவற் சேகரிப்பு என்ற வட்டத்தினுள் ஆய்வை முடிவுறுத்;த முனையும் என்ற காரணத்தினாலும் ஆராய்ந்து பெறப்பட்ட ஒத்திசைவான முறைமைகள் பலவற்றை இணைத்து ஆய்வின் முழுமையான பரிமாணத்தை வெளிக்கொணரும் வகையில் ஆய்வு முறைமையானது நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

4. இனங்காணப்பட்ட ஆவணவாக்கப்பண்புகள்
கீழே குறிப்பிடப்படுகின்ற ஆவணவாக்கப்பண்புகள் குறித்த ஆவணத்திற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பண்பு அல்ல. ஏனெனில் குறித்தவொரு ஆக்கம் கீழே குறிப்பிடப்படும் பண்புகளில் ஒன் றையோ அல்லது பலவற்றையோ கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது எனினும் அந்த ஆக்கத்தில் எந்தப் பண்பு மேலோங்கியிருக்கின்றதோ அந்தப் பண்பினடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சில ஆக்கங்களில் ஆய்வுத்தன்மை அதிகமாக இருக்கக்கூடும் எனினும் பிரதான பண்பு ஆவணவாக்கமெனில் அதுவே இங்கு கருத்திற்கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எழுந்த அத்தனை ஆக்கங்களையும் இங்கு பட்டியல்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாதிரிக்கு சில எடுத்துக்காட்டுக்களைத் தருவதும் கூடியவரையில் ஆரம்பகால இலக்கியங்களை எடுத்துக்காட்டுகளாக கையாள்வதும் இதன் நோக்கமாகும். அவை கிடைக்காத போது தற்போதைய ஆக்கங்களின் மாதிரிகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிட்ட இனம், மதம், மொழி பண்பாடு மற்றும் பொருட்துறை சார்ந்தவை என பலதரப்படும். இவை தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்படுபவை. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் முன்னோடி என்ற பெருமை சைமன் காசிச்செட்டி அவர்களையே சாரும். இவரது 'தமிழ் புளுராக்' என்ற தமிழ்ப் புலவர் சரிதமும் சிலோன் கசற்றியரும் (1834) ஆய்வுடன் இணைந்த மிக முக்கியமான ஆவணவாக்கப் பணிகளாகும். சிலோன் கசற்றியர் நாடு சார்ந்த வகையில் இலங்கை பற்றிய புவியியல் ரீதியான தகவல் அனைத்தையும் அகர ஒழுங்கில் தொகுத்து தருகின்றது. இதற்கான தரவுகளை நொக்ஸ், கோர்டின், பேர்சிவல், டேவி முதலியோர் எழுத்துக்களிலிருந்தும் சுதேசிய நூல்களிலிருந்தும்  பாரம்பரியச் செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது. (பூலோகசிங்கம் 1970). ஊர் சார்ந்த வகையில் ஆத்மஜோதி நா. முத்தையாவின் ஏழாலை(1977), எங்களுர் ஏழாலையூர்(1994) சீர் இணுவைத் திருவூர் (2004), புங்குடுதீவு மான்மியம் (2012) போன்றன புவியியல் அம்சங்களை மட்டுமன்றி ஊர் தொடர்பான தகவல்களை கூடுதலான வரையில் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. கலாநிதி பாலசுந்தரத்தின் இடப்பெயராய்வு: காங்கேயன் வட்டாரம்(1988) வடமராட்சி தென்மராட்சி (1989) போன்றவை மற்றும் ஊர்ப் பெயர் தோன்றிய வரலாற்றை ஆவணப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நாவலர் அச்சகத்தினால் 1902இல் வெளியிடப்பட்ட அபிதானகோசம் ஈழத்தின் முதலாவது கலைக்களஞ்சியம்  என்ற பெருமையைப் பெறுவது. வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.

வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள் தனிநபர் சார்ந்ததாகவோ அன்றி குடும்ப வரலாறாகவோ அமையலாம். இதுதவிர தனிநபர் ஒருவரை மையப்படுத்திய விரிவான ஆவணவாக்கமாகவோ அல்லது பல நபர்களை உள்ளடக்கிய தொகுப்பாக்கமாகவோ இருக்கலாம். தமிழ் இலக்கியத் துறையில் தமிழ்ப்புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை ஒரே நூலில் உள்ளடக்கி வெளியிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமையைப் பெறும் சைமன் காசிச்செட்டி அவர்களின் 'தமிழ் புளுட்டாக்'(1859) என்னும் தமிழ்ப்புலவர் சரிதம் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றியும் அவர்களின் ஆசிரியர்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ஒரு தொகுப்பு நூலாகும். 197 தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேற்படி நூல் உருவாக்கத்திற்கான தகவல் சேகரிப்பானது ஒரு தசாப்பதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது என்பதை 1840ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த சிலோன் மகசின் என்ற சஞ்சிகையில் சைமன் காசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட முப்பத்தியிரண்டு அறிஞர்களின் செய்திகள் சான்றாக உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்(1886) முதலாவது தமிழ் நூல் என்ற பெருமையைப் பெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வெளிவந்த குமாரசுவாமிப் புலவரின் தமிழ்ப் புலவர் சரிதம்(1916), கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1933) போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.

முத்துக் குமாரசுவாமிப்பிள்ளையால் எழுதப்பட்ட குமாரசுவாமிப்புலவர் வரலாறு (1970), வைத்திலிங்கத்தின் சேர். பொன் இராமனாதனின் வரலாறு(1971), கனக செந்திநாதனின் கவின் கலைக்கு ஒரு கலாகேசரி (1974) போன்றவை மிக விரிவான வகையில்  தனிநபர் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதற்குப் பின்னரான காலங்களில் தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்படும் மணி விழா மற்றும் வைர விழா சார்ந்தோ அன்றி அவர்கள் நினைவாக கொண்டாடப்படும் நூற்றாண்டு விழா சார்ந்தோ வெளியிடப்படும் சிறப்பு மலர்களினூடாகவோ தனிநபர் வரலாறுகள்  எண்ணிறந்த அளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

1901இல் வெளியிடப்பட்ட விநாசித்தம்பி அவர்களின் 'அயnயைஅpயவாயைச ளுயவொயவாiஅரசயi' என்ற ஆங்கில நூலானது குடும்ப வரலாறை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதே போன்று தமிழில் எழுதப்பட்ட குடும்ப வரலாற்று நூலாக காசிநாதனின் 'எமது உற்றார், உறவினர் முறை' (1963) அமைகிறது. சில்லாலை இன்னாசித்தம்பி வைத்திய நிலையத்தால் 1983இல் வெளியிடப்பட்ட காக்கும் கரங்கள் என்ற நூலானது இன்னாசித்தம்பி வைத்திய மரபின் பத்துப் பரம்பரையை இரத்தினச்சுருக்கமாக எடுத்துக்கூறுகிறது.

அனுபவங்களை ஆவணப்படுத்தும் பண்பு
தனிநபர் அனுபவங்கள் பெரும்பாலும் நேர்காணல்கள், சொற்பொழிவுகள், மற்றும் கடிதங்கள் வாயிலாகவோ அன்றி பயண இலக்கியங்களாகவோ ஆவணப்படுத்தப்படும் பண்பு பொதுவானதாகும்.  சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட சுவாமி சச்சிதானந்தாவின் கைலாசம் கண்டேன் என்ற தலைப்பிலான  பயண அனுபவங்கள்; பின்  1960இல் கண்டி திவ்விய ஜீவன சங்கத்தால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர் போராட்டவரலாற்றில் தனது நூறு நாள் சிறையனுபவங்களை 'தடுப்புக்காவலில் நாம்'(1961) என்ற தலைப்பில் புதுமைலோலனால் தனது மகள் அன்பரசிக்கு மடல்களாக வரையப்பட்டிருக்கிறது. 

மொழிசார் சொற்களை வரிசைப்படுத்தித் தரும் பண்பு
சொற்களின் தொகுப்பு சார்ந்த ஆவணவாக்கப் பணியில் நூல்களின் சொல்லடைவாக நூலில் கையாளப்படும் முக்கிய சொற்களையும் அதன் அமைவிட பக்கத்தையும் நூலின் இறுதியில் உள்ளடக்குதல், அருஞ்சொல் அகராதியாக துறை சார்ந்த அருஞ்சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் தருகின்ற வகையில் குறித்த நூலின் ஆரம்ப அல்லது இறுதிப்பகுதியிலோ அன்றி தனிநூலாகவோ உருவாக்கப்படல், மொழியின் சொல்வளத்தை அகர ஒழுங்கில் தரும் ஒரு மொழி, இரு மொழி மற்றும் பலமொழி அகராதி வடிவத்தில் தொகுக்கப்படல், குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அருஞ் சொற்களுக்கான விளக்கங்களைப் பட்டியலிடுகின்ற பொருள் அகராதியாக உருவாக்கப்படல் போன்ற பண்புகளை இனங்காண முடியும்.  

ஜி.யூ போப் அவர்களால் 1900 ம் ஆண்டு திருவாசகத்துக்குச் செய்யப்பட்ட ஆங்கில தமிழ்ச் சொல்லடைவு நூலின் பகுதியாக உருவாக்கப்படும் சொல்லடைவுப் பண்பைக் கொண்டது. தமிழ்மொழியின் சொல்வளத்தை அகர வரிசையில் முழுமையாகத் தரும் முதல்முயற்சியாக 58,500 சொற்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண அகராதியானது (1842),  ஒரு மொழி அகராதிக்கான பண்பைக் கொண்டது.  சங்க இலக்கியங்களிலும், சங்க மருவிய இலக்கியங்களிலும் பிற்றைச் சான்றோர் இலக்கியங்களிலும் வருகின்ற அருஞ்சொற்களாகிய இலக்கியச் சொற்களை தொகுத்து உருவாக்கப்பட்ட குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச் சொல்லகராதி, சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தும் புதிய பண்பை உள்ளடக்கி  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான தமிழ்ச்சொல் அகராதி, ந.சி கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதி(1950) தமிழ்ப்புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி (1953) காலக்குறிப்பு அகராதி 1960, திருக்குறள் அகராதி (1961) போன்றன ஒரு மொழி அகராதிப்பண்பு கொண்டவை.

நூல்விபரத்தரவுகளைத் திரட்டித்தரும் பண்பு
நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம்.

முறைப்படுத்தப்பட்ட வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. இது படைப்பாளர் நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது பொருள் சார் நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம். பொருள் சார் நூல்விவரப்பட்டியலானது நாடு, மொழி, இனம், பொருட்துறை என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையையும் சைமன் காசிச்செட்டியே பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் திகதி இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 82 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம் தத்துவம் பற்றிய பகுதியில் 153 நூல்களும் ஆக மொத்தம் 309 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை பதினான்கு பொருட்தலைப்புகளின் கீழ்  பட்டியல்படுத்துகின்ற தனிநாயகம் அடிகளின் 'சுநகநசநnஉந பரனைந வழ வுயஅடை ளுவரனநைள'(1966)இ 1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த நூல்களின் விவரங்களை பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி'(1971)இ இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) என்பன முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டவை. 

அப்புத்துரையின் 'காங்கேயன் கல்விவட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற நூல்விபரப்பட்டியலும், 'டியவவiஉயடழnயை' என்ற பெயரில் மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான செல்வராஜாவின் நூல்விவரப்பட்டியலும் பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது.

இலண்டனிலிருந்து 2000ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' குறிப்புரைப் பண்பையும் உள்ளடக்கிய தொன்று.  இலங்கை எழுத்தாளர்களால்,  தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை ஆறு தொகுதிகளில் 6000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' விளக்க நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. 1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைச் செய்திகளின் பதிவு பேணும் பண்பு
பத்திரிகைச் செய்திகளை வெட்டிப் பொருத்துமான தலைப்புகளில் ஒழுங்குபடுத்தும் பணியானது ஆவணப்படுத்தலின் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. இந்த வகையில் ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை பத்திரிகைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இரண்டும் இனைந்த வகையில் ஆவணப்படுத்தி வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் ஆவணவாக்கப்பணியாக கடந்த 45 ஆண்டுகளாக குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தின் பத்திரிகை துணுக்குச் சேகரிப்பைக் கொள்ள முடியும். இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது, உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை வாழ்க்கை வரலாறுகள், சமய வரலாறுகள், பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக - இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர் கலைகள், தமிழர் கலையும் பண்பாடும், உலகளாவிய தமிழர் ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புகளில் ஏறத்தாழ 7000 கட்டுரைகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு.

இதேபோன்று சுனாமி: பத்திரிகை நறுக்குகள்; என்ற தலைப்பில் சங்கானையைச் சேர்ந்த கணேஷ் அவர்களால் பலதரப்பட்ட பத்திரிகைளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்டு 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளை யு3 அளவுள்ள 338 தாள்களில் ஒட்டி 34 பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளும் குறிப்பிடப்படவேண்டியதொன்று..

இலங்கையில் வெளியிடப்பட்ட பலதரப்பட்ட பத்திரிகைகளையும் மையப்படுத்தி 2005இல் பொது நூலகராக தனது பணியை வரித்துக் கொண்ட அனலைதீவு சௌந்தரராஜனின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தொடங்கப்பட்ட பத்திரிகை நறுக்குகளை உருவாக்கும் பணியானது சுனாமி, வடக்கின் வசந்தம், தேச அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி, கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தலைப்புகளின் உடுவில் மற்றும் சுன்னாகம் பொது நூலகங்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது. இது பத்திரிகையில் வெளியாகின்ற கட்டுரைகளை மட்டும்;  வெட்டிப் பொருத்தமான தலைப்புகளின் கீழு; ஒழுங்குபடுத்திச் சேகரிக்கும் பண்பாக இனங்காணப்படுகின்றது. இந்தவகையில் இசை, நடனம், அரங்கு எனக் கலைத்துறையை மட்டும் முதன்மைப்படுத்தி கணிசமான பத்திரிகைத் தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கும் ஆசிரியர் குகதாசனின் பணியும்; குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தகவல்களைத் தொகுத்தளிக்கும் பண்பு
ஈழத்தமிழ்ச சமூகத்தின் அண்மைக்காலங்களில் அதிகம் இனங்காணப்படும் பண்பாக இது உள்ளது. சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ஆக்கங்களையோ தகவல்களையோ ஒரு தொகுப்பாக ஆவணப்படுத்தும் பண்பு ஈழத் தமிழ் இலக்கியங்களின் முக்கிய போக்காக இனங்காணப்படுகிறது. இந்த வகையில் த.இராமநாதபிள்ளையின் இலக்கிய இலக்கண ஆய்வுரைகள்(1965), சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதிப்புரைகளை தொகுத்து வெளிவந்த 'தாமோதரம்' (1971), ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் தொகுப்பான  ந. சபாரத்தினத்தின் 'ஊரடங்கு வாழ்வு(1985), சற்றடே றிவியூ ஆங்கலப்பத்திரிகைகளின் தலையங்கம் உட்பட பல பதிவுகளை உள்ளடக்கிய சிவநாயகத்தின் ' Pநn யனெ வாந புரn'இ தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பாக தனபாலசிங்கத்தின் நோக்கு மற்றும் ஊருக்கு நல்லது சொல்வேன் போன்றவை, பத்தி எழுத்துகளின் தொகுப்பான யேசுராசாவின் தூவானம் போன்றவை இத்தகைய பண்பைக் கொண்டவை. இதே போன்று சஞ்சிகைகளில் வெளிவந்த கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடு.

சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு
சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு ஈழத்து இலக்கியங்களில் மிக குறைவாக இனங்காணப்படினும் நாட்டார் பாடல்கள் கணிசமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. முல்லைத்தீவைச் சேர்ந்த த.கைலாயபிள்ளையின் கதிரையப்பபள்ளு(1927), முள்ளியவளையைச்சேர்ந்த சி.ச. அரியகுட்டிப்பிள்ளையின் அருவிச்சிந்து, கதிரையப்பபள்ளு, பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு என்ற தலைப்பிலான அருவி வெட்டுப்பாடல்கள் (ஆண்டு இல்லை) கீழ்கரவையம்பதி வ.கணபதிப்பிள்ளையின் வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி(1934), முல்லைமணியின் கமுகஞ்சண்டை(1979); கல்விவெளியீட்டுத் திணைக்களத்தின் நாட்டார் பாடல்கள்(1976), யாழ்ப்பாணம் மு. இராமலிங்கத்தின் வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்(1961), தி. சதாசிவ ஜயரின் மட்டக்களப்பு வசந்தன் திரட்டு (1961), சு. வித்தியானந்தனின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்(1960) குறிப்பிடத்தக்கவை.
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் அலங்காரரூபன் நாடகம்(1962), மூவிராசாக்கள் நாடகம்(1966), ஞானசவுந்தரி நாடகம்(1967) போன்றவை கூத்துச் சாந்த ஆவணப்படுத்தல் முயற்சியாகும்.
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் திருட்டாந்த சங்கிரம் (1843) பழமொழி சார்ந்து 1823 பழமொழிகளை தொகுப்பாகும். சச்சி மாஸ்ரரின் மக்கள் வாழ்வில் பழமொழி என்பது விளக்கக் கட்டுரைப் பாங்கைக் கொண்டது. சி. பத்மநாதனின் இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூல் சமூகத்தின் சட்டநெறிகளைத் தொகுத்துத் தரும் ஒரு தொகுப்பு ஆவணப் பண்பு கொண்டது.

உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் பண்பு
நூலகமொன்றின் முக்கிய தகவல் வளமாகக் கருதப்படும் உருநிலைச் சேகரிப்புகளில் கலைப்பொருட்கள், கருவிகள், உபகரணங்கள் போன்றவை உள்ளடங்கும். இவை 1. கலை பிரயோக அறிவியல் சார்ந்தவை. (எ-டு விளையாட்டுப் பொருட்கள்) 2. மனிதப்பண்பியல் சார்ந்தவை (எ-டு இசைக்கருவிகள்)  3. அறிவியல் சார்ந்தவை (எ-டு மனித எலும்புத் தொகுதி) 4. சமூக அறிவியல் சார்ந்தவை (நாணயங்கள், தபால் தலைகள்) என நான்கு வகைப்படும். உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் தன்மையில் பொழுதுபோக்கு நோக்கம், பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்கும் நோக்கம் ஆகிய இரண்டும் முக்கியம் பெறுகின்றன. இந்த வகையில் அருள்சந்திரனின் 'யாழ்ப்பாணப் பெட்டகம்' கணிசமானளவு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கட்டிட அமைப்புகள், கலைகள், பண்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட உருநிலைச் சேகரிப்புகளை 32 பொருட்தலைப்புகளில் 3250 புகைப்படங்களினூடாக ஆவணப்படுத்தியிருக்கிறது. தபால்தலைகள் மற்றும் நாணயங்களை அதன் உண்மை வடிவத்தில் ஆவணப்படுத்துவதாக  அனலைதீவு தர்சனின் பணி அமைகிறது. ஆயிரம் மூலிகைத் திட்டத்தினூடாக தமிழர்பிரதேசத்தில் காணப்படும் அரிய மூலிகைகளை ஓரிடத்தில் சேகரித்து பராமரிப்பது மட்டுமன்றி அது தொடர்பான விவரக்குறிப்புகளைப் பட்டியல்படுத்துவதாகவும் மூலிகை பாதுகாப்புச் சபையின் ஸ்தாபகர் வைத்தியர் சந்திரமோகனின் பணி அமைகிறது.

படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு
மூல ஆவணத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது அதனை பாதுகாப்பு நோக்கங்கருதி மீள வெளியிடும் இப்பணியானது எழுதிப் படியெடுத்தல், கையெழுத்துப் பிரதியை அச்சுக்கு மாற்றுதல், கையெழுத்துப் பிரதியை பரிசோதித்து அச்சுக்கு மாற்றுதல், அச்சுப்பிரதியை மீள அச்சிடுதல், அச்சிலுள்ளதை அதன் வடிவத்திலேயே ஆவணப்படுத்தல் போன்ற பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டது. எழுதிப் படியெடுக்கும் பணியானது அச்சின் கண்டுபிடிப்பிற்கு முன்னரான பொது வழக்கிலிருந்த ஆவணவாக்கச் செயற்பாடாகும். நாவலர் மற்றும் பதிப்புப் பணியில் ஈடுபட்ட 19ம் நூற்றாண்டுப் புலமையாளர்களின் பதிப்புப் பணிக்கு மூலமாக இருந்தது எழுத்துமூலத்திலிருந்த மூல ஆவணத்தின் பிரதிகளேயாகும்.  இது சுவடிகளில் எழுதப்பட்ட ஆக்கங்களை பல்வேறு பிரதிகளாக ஆக்கும் செயற்பாட்டைக் குறிக்கிறது. பஞ்சாட்சரசர்மாவின் 'அஷரபோதினி', விவிக்த பதாவலி போன்ற கிரியா பத்ததிகள் படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு கொண்டவை.(கோப்பாய் சிவம் 1980)

இதுதவிர அச்சிடப்பட்ட ஆவணமொன்றின் பிரதிகள் அனைத்தும் அழிந்தநிலையிலோ எடுக்கமுடியாத நிலையிலோ இருக்கும் அதேசமயம் மீள்பதிப்புச் செய்வதற்கான வாய்ப்பும் இல்லாத போது அச்சுப் பிரதியை மீண்டும் கையெழுத்துப் பிரதியாக ஆவணப்படுத்திய முயற்சியொன்றும் இவ்வாய்வில் இனங்காணப்பட்டிருக்கிறது. குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச்சொல்லகராதியானது அவரது மகன் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையால் 1965இல் நான்கு தொகுதிகளாக எழுதித் தொகுக்கப்பட்டு குமாரசுவாமிப்புலவர் நூலகத்தில் பேணப்படுகிறது.

அச்சுப்பதிப்பின் வழி பாதுகாக்கும் பண்பு
ஈழத்தமிழரின் பெரும்பாலான ஆரம்பகால இலக்கியங்கள் சுவடிகளில் பதியப்பட்டு பின்னர் கையெழுத்துப்பிரதிகளாக தாள்களில் பேணப்பட்டு அதன் பின்னர் அச்சு வடிவம் பெற்றவை. சித்தமருத்துவத்தின் முக்கியத்துவத்தை உய்த்துணர்ந்து அது தொடர்பான சுவடிகளை தேடிச் சேகரித்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏழாலை க.  பொன்னையா அவர்களின் பதிப்பில் உருவான பரராசசேகரத்தின் ஏழு தொகுதிகள்(1930-36), சொக்கநாதர்தன்வந்திரியம்(1933), செகராசசேகர வைத்தியம், அமிர்தசாகரம்(1927), பதார்த்தசூடாமணி(1927), வைத்தியசிந்தாமணி((1932),, வைத்திய புராணம்((1933), அங்காதிபாதம், வைத்தியதெளிவு(1930) போன்றவை சுவடிநிலையிலிருந்து நேரடியாக அச்சுப்பதிப்பாகவும் முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையின் கவித்திரட்டு(1964) கையெழுத்துப் பிரதிநிலையிலிருந்து அச்சுப்பதிப்பாகவும் மாற்றம் பெற்றவை.

மீள்பதிப்பினூடாக தகவலைப் பரவலாக்கும் பண்பு
தமிழ்மண் பதிப்பகம், ஆசிய கல்விச் சேவை நிறுவனம் ஈழத்தமிழரின் ஆரம்பகால இலக்கியங்களை அழியவிடாது பாதுகாக்கும் நோக்குடன் மீpள்பதிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழ் இலக்கியம் சார்ந்து மீள்பதிப்புப் பணிகள் எண்ணிறந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இதற்கான எடுத்துக்காட்டுகளை இங்கு பட்டியலிடுவது தேவையற்றது எனினும் ஒருசில ஆரம்ப கால நூல்களின் மீள்பதிப்பு பணிகளை குறிப்பிடுவது பொருத்தமானது. மீள்பதிப்புப் பணிகளில் சுன்னாகம் குமாராமிப் புலவரால் பதிப்பிக்கப்பட்ட இதோபதேசம்(1886), சகுலமலைக்குறவஞ்சி நாடகம்(1895) இரண்டும்; குறிப்பிடத்தக்கவை (முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை 1970). கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939), சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பாடபேத ஆய்வுடன் கூடிய குறை களையும் பண்பு
சுவடி வடிவில் கவனிப்பாரற்றுக் கிடந்த பழம்பெரும் இலக்கியங்களின் பிரதிகளை தேடிச் சேகரித்து பதிப்பிக்கும் பணியாகவே ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஆரம்பகால ஆவணப்படுத்தல் முயற்சிகள் இனங்காணப்படுகின்றது. இத்தகைய பதிப்பு  முன்னோடிகளாக ஆறுமுகநாவலரையும் (நாவலர்) சி.வை.தாமோதரம்பிள்ளையையும் (சி.வை.தா) குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. பதிப்புத் துறையில் 19ம்  நூற்றாண்டின் மத்திய பகுதி நாவலர் காலம் எனப்படுகின்றது. 'நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதி எங்கே' சி.வை.தாவினால் புகழப்படுமளவிற்கு நாவலரின் பணி மகத்தானது. சிறந்த உரையாசிரியர், நூலாசிரியர், சொற்பொழிவாளர், பிரசங்கி என்பதற்கும் மேலாக அழிவுறும் நிலையிலிருந்த பெரும்பாலான சுவடி நூல்களை மீளத் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்த ஆவணவியலாளர் என்பது அனைத்திலும் மேலானது. நாவலரின் பதிப்பு முயற்சிகள் 1849இல் சௌந்தியலகரி மூலமும் எல்லப்பநாவலர் உரையும் என்ற நூலுடன் தொடங்குகின்றன. தொடர்ந்து நாவலர் சூடாமணிநிகண்டு (1849), நன்னூல் விருத்தியுரை மூலமும் உரையும்(1851), திருக்கோவையார் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்(1860), கொலை மறுத்தல் (1860), மறைகையந்தாதி(1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861), உபமான சங்கிரகமும் இரத்தினச் சுருக்கமும் (1866) சேதுபுராணம்(1866), இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி (1866), அருட்பா(1866), சிதம்பரமும்மணிக்கோவை(1867), அருணகிரிநாதர் திருவகுப்பு (1867), பதினொராம்திருமுறை(1869), கோயிற்புராணம், நால்வர் நான்மணிமாலை, பெரிய கோயிற்புராணம், பெரியநாயகி கலித்துறை, முதலான எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் பிழையறப் பதிப்பிக்கப்பட்டது ( கனகரத்தினம் 2007).

பதிப்புப் பணியில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி சி.வை.தா காலம் எனப்படுகின்றது. சி.வை.தாவின் பதிப்புகளில் இறையனார் களவியலுரையும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் தமிழ் அன்னையின் இரு கண்கள் என்றும் இந்த இரண்டையும் பதித்துவியதே சி.வை.தாவுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது என்கிறார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. (கணபதிப்பிள்ளை) இவரின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. பதிப்புப் பணியிலே நாவலரை தனது குருவாகக் கொண்ட சி.வை.தா நாவலரின் மறைவுக்குப் பின்னர் பதிப்புப் பணியையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார். இவரது பதிப்பு முயற்சிகள் 1853இல் தொடங்குகின்றன. நீதிநெறி விளக்கம் (1853), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- சேனாவரையம் (1868), வீரசோழியம் - பெருந்தேவனாருரை(1881), தணிகைப் புராணம், இறையனாரகப்பொருள்- நக்கீரருரை(1883), தொல்காப்பியப் பொருளதிகாரம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம், சூளாமணி(1889), தொல்காப்பியச் சொல்லதிகாரம்(1892) முதலான நூல்களைப் பதிப்பித்து வழங்கியதன் மூலம் சிறந்ததொரு ஆவணவியலாளராக இனங்காணப்படுகின்றார். குமாரசுவாமிப்புலவரின் யாப்பருங்கலக் காரிகை உரை(1900), ஆசாரக்கோவை(1900), நான்மணிக்கடிகை(1900), ஆத்திசூடி வெண்பா மற்றும் சிசேத்திர விளக்கம்(1901), உரிச்சொனிகண்டு, பழமொழி விளக்கம், திருவாதவூரர் புராணம்(1902) ஆகியனவும் இத்தகைய பண்பைக் கொண்டது. 

தொழினுட்பத் துணையுடன் எண்ணிமப்படுத்தும் பண்பு
ஈழத்தமிழர் இலக்கியங்களை எண்ணிமப்படுத்தும் பணியில் நூலக நிறுவனத்தின் பணி அளப்பரியது. இதனால் உருவாக்கப்பட்ட எண்ணிம நூலகமானது நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள் உட்பட்ட 12,000க்கும் மேற்பட்ட ஆக்கங்களை முழுமையாக எண்ணிமப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவுரை
மூலவகை ஆவணப்படுத்தலானது பொருட்துறைசார்ந்த புலமையில் முழுக்கமுழுக்க தங்கியிருக்கும் அதேசமயம் கருவிசார் ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை,  ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. 
உசாத்துணைகள்


1. Harrod, Leonard Montague. Harrod’s librarians’ glossary of terms used in librarianship, documentation and the book crafts and reference book. 6th ed. London: Gower.pp254.
2.    Ranganathan,S.R(1974). Physical bibliography for librarians. 2nd ed. Bombay: Asia publishing house.. p21.
3.      Reitz, Joan.M. ( 2006). Online Dictionary for Library and Information Science. http://www.abc-clio.com/ ODLIS/ odlis b.aspx
4.      Selvarajah,S.J (1988). Batticaloania: a bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council. 81p
5.      Simon Casie Chitty (1949). The Tamil Plutarch. Colombo: General publishers.135p
6. Thani Nayagam, Xavier S.(1966).  A Reference guide to Tamil Studies: books.Kuala Lumpur:University of Malaya Press.122p.
7. Vali North Cultural society (2008). Yarlppanap pettakam kankardchi-01(The Exhibition on Treasure House of Jaffna-01) Yarl Thinakkural. 14th.Oct.2008. p3.

8.    அப்புத்துரை, சி.(1985). காங்கேசன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள். காங்கேசன் கல்விமலர். காங்கேசன்துறை: காங்கேசன்துறை கல்விவலய அதிபர்கள் சங்கம். பக் 209-223.
9.    கணேசையர், சி(1939). ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம். சென்னை தமிழ்மண் பதிப்பகம். 156ப.
10.    கனகரத்தினம், இரா,. கனகரத்தினம்இ பி(1996). உலகத் தமிழர் ஆவணக் காப்பகம். கண்டி: ஆசிரியர். 26ப.
11.    கோப்பாய் சிவம்(1980). கிரியா பத்ததிகள் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளின் விளக்கப் பட்டியல்.(வெளியிடப்படவில்லை). 
12.    சண்முகதாஸ்,மனோண்மணி (2007). சி.வை.தாமோதரம்பிள்ளை. கொழும்பு: குமரன். ப20.
13.    சதாசிவம்பிள்ளை,அ.(1886) பாவலர் சரித்திர தீபகம்.மானிப்பாய்: ஸ்றோங்அஸ்பரி இயந்திரசாலை.
14.    சந்திரகுமார், எம் (2009). பழைய வரலாறுகள் எதிர்கால ஆவணங்கள்: கணேசுடனான நேர்காணல். யாழ்தீபம்.   றறற.எசையமநளயசi.டம.
15.    நடராசா, எவ்.எக்ஸ்,சி(1970). ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு. கொழும்பு: அரசு வெளியீடு
16.    பூலோகசிங்கம், பொ (1970). தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம். 276ப.
17.    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை,கு(1970). குமாரசுவாமிப்புலவர் வரலாறு. சுன்னாகம்: புலவரகம். ப.43
18.    ஜமீல்,எஸ்.எச்.எம் (1994). சுவடி ஆற்றுப்படை. 4 தொகுதிகள். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுக் கழகம். 



http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2015/T/31_2001_(x)_(t).pdf



No comments: