Monday, January 04, 2016

முரண்களுக்குள் தொலையும் முழுமை - 2


முரண்களுக்குள் தொலையும் முழுமை -2
 ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்;
நுழைவாயில்
ஒரு சமுதாயம் மதித்துப் போற்றும் வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றையும் வழிவழியாக அதனுள் பரவிக் காணப்படும் திறன்களையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிக்க ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாகவோ அல்லது அறிவு, விழுமியங்கள், திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் செய்முறையாகவோ அதுவுமன்றி அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறையாகவோ கல்வி என்ற கருத்துநிலை பல்வேறு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. கல்வி என்ற எண்ணக்கரு தொடர்பாக தமிழர்களிடம் உள்ள தகவல்கள் எண்ணற்றவை. கல்விக்கு தமிழ்ச் சமூகம் வழங்கியிருக்கும் இடம் மிகவும் உன்னதமானது. கல்விக்கென இலங்கை அரசு செலவழிக்கும் தொகையோ மிகவும் அளப்பரியது. கல்விக்கு அரசு வழங்கும் முன்னுரிமை, உலகின் கல்விக்கொள்கைளின் சிறப்பம்சங்களை பிழிந்தெடுத்து உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள், திறமைகளை வடித்தெடுத்து பொருத்தமான இடங்களில் பொருத்தக் கூடிய வகையில் தரம்பிரிக்கப்பட்ட பாடசாலைகள், சர்வதேச உதவு நிறுவனங்களின் அளப்பரிய கவனம் என கல்வியின் புறவயப்பட்ட விரிவாக்கமானது ஆச்சரியமும் பிரேமையும் தரத்தக்கதாக அமையும் அதே சமயம் கற்றல், கற்பித்தல் உட்பட  சமூகப் பிரஜை ஒன்றை உருவாக்குவதற்கான கல்வியின் அகவயப்பட்ட விரிவாக்கமானது அவலமும் பிரமையும் தரத்தக்கதாக அமைந்திருக்கிறது. உலகமயமாக்கம், அறிவியல் கண்டுபிடிப்புகள், தகவல் சுனாமி, பொருளாதார வளர்ச்சி போன்றவை கல்வியை அறிவுநுட்பத்திற்கான அடித்தளம் என்ற நிலையிலிருந்து மாற்றி பொருளீட்டுவதற்கான முதலீடாக தரமிறக்கியுள்ளன. அதுமட்டுமன்றி கல்வி பொருளாக மாற்றப்பட்டு எழுத்தறிவிக்கும் இறைவர்களான ஆசிரிய சமூகமே அதன் விற்பனையாளராக மாறியிருக்கும் பரிதாபம், விற்பனையை மேம்படுத்துவதற்கான விளம்பரதாரர்கள், இடைத்தரகர்கள் என கல்வி வியாபாரம் களைகட்டி பறக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். இதனால் ஏற்படும் விசனமும் 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, போன்றோரின் சிந்தனைகள்; வழி சென்று மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதை அறிவுறுத்தி உண்மைக்கல்வியை எமது மக்களுக்கு நாம் வழங்குவதில் தடையாக இருக்கின்ற எண்ணற்ற பல காரணிகளில் ஒன்றிரண்டை ஆவணப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கற்றல் என்ற கருத்துநிலை 
கற்றல் என்பது ஒரு அறிவை புதிதாகப் பெறுதல் அல்லது ஏற்கனவே உள்ள அறிவை இற்றைப்படுத்தல் அல்லது மெருகூட்டுதல் அல்லது வலுவூட்டுதல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. செய்முறை சார்ந்து நோக்கும்போது படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது.  பிறப்புமுதல் நம்மிடம் இயற்கையாக அமைந்து காணப்படாமல் நாம் பின்னர் பெறும் அனுபவங்களும் அவற்றின் விளைவுகளும் கற்றல் என்பதில் அடங்குவதாக இந்திய கல்வியியலாளர் சந்தானம் குறிப்பிடுகிறார்.  இவ்வனுபவங்கள் அறிவு சார்ந்தவையாகவோ, மனவெழுச்சிகள் சார்ந்தவையாகவோ, உடலியக்கங்கள் சார்ந்தவையாகவோ அல்லது இவை யாவற்றுடனும் ஒருங்கே தொடர்புடையதாகவோ இருக்கலாம். கற்றல் பாங்கு என்பது மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளினூடாக நடைபெறும் பார்த்தல், கதைத்தல், கேட்டல், தொட்டுணர்தல், முகர்தல் ஆகிய செய்முறைகளில் நடைபெறுகின்றது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியது கற்றல் என்பது வாழ்நாள் முழுமைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு செய்முறையாகும். கற்பதற்குரிய இடம் கல்வி நிறுவனங்களான முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்ற  தவறான பார்வை எம்மிடையே உண்டு. இக்கல்வி நிறுவனங்கள் வாழ்க்கைக்கான கற்றலின் ஒரு பத்து வீதத்தையாவது தருமா என்பது கேள்விக்குரியது. அவ்வாறாயின் கற்றலின் களங்கள் வேறு எவை?
கற்றலின் ஆரம்பம் கருவறையாகும். வாழ்வின் பெரும்பாலான கற்றல் குடும்பம் என்ற ஆதார நிறுவனத்திலிருந்து தான் நடைபெறுகின்றது. குடும்பமும் சுற்றுப்புறச் சூழலும் தான் கற்றலின் பிரதான களங்கள்.

கருவறை என்னும் கற்றலறை
மனிதனின் வாழ்க்கைக் காலம் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என்ற நான்கு பிரதான பருவங்களைக் கொண்டது. இந்த வாழ்க்கைக் காலத்தில் முதல் 18 வருடங்கள் குழந்தைப்பருவம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிமனித நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான ஆணிவேருக்கும் இந்தக் குழந்தைப்பருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனடிப்படையில் தான் குழந்தை வளர்ப்பு, குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் இன்று தீவிர கவனம் பெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வில் இறங்கும் போது குழந்தைப் பருவத்திற்கு முந்திய 10 மாதங்கள் தாயின் கருப்பையில் வளரும் ஒரு உயிரின் வாழ்நிலை தொடர்பான கேள்விகளும் ஆய்வுகளும் மனித சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பியாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது.
குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் முனைப்புப் பெற்ற காலத்திலேயே மானுட வளர்ச்சியைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகளா? சூழல் காரணிகளா? என்ற விவாதமும் தொடங்கிவிட்டது. 'சூழலுக்கும் பரம்பரை அலகுகளுக்கு மிடையிலான தொடர்பு போட்டித்தன்மை அதாவது ஒன்றை ஒன்று அழித்தல் வாய்ந்ததல்ல. இது நடனம் போன்ற நேர்த்தியான அசைவுத் தன்மை வாய்ந்தது. இந்த அசைவானது கரு உருவாகி மூன்றாவது வாரத்திலிருந்தே தோன்றிவிடுகின்றதெனவும் சூழல் காரணமாக கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள் ஆளுமை மிக்க பரம்பரை அலகுகளின் வழி உருவாகிக் கொண்டு வரும் கருவின் போக்கையே திசை திருப்பிவிடும்' என்ற ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழக உளநோயியல் ஆய்வாளரான ஸ்ரான்லி கிரீன்ஸ்பான் (ளுவயடெநல புசநநnளியn) அவர்களது கூற்று சூழலா, பரம்பரையா என்ற தனிக்கட்சி விவாதங்களுக்கான கருத்துநிலையை தகர்த்;து இரு காரணிகளதும் பரஸ்பர செல்வாக்குத் தொடர்பான கருத்தொற்றுமை நிலையை ஆய்வாளர்களிடையே ஏற்படுத்திவிட்டது. எடுத்துக் காட்டாக மூளைத்திறன் அதிகம் வாய்த்த பெற்றோரின் மரபணுக்களின் வழி உருவான குழந்தையை தாய் எதிர்கொள்ளும் சூழல் பாதிப்புகள் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக மாற்றும் வல்லமை வாய்ந்தவையாகும். இதனால் தான் இன்றைய தந்தைவழி சமூக அமைப்பிலும் சரி இதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த தாய் வழி சமூக அமைப்பிலும் சரி தாய்மை நிலை என்பது கொண்டாடப்; படுவதற்குரியதாகவே இருந்து வருகிறது. தம்மிடம் இருக்கும் பொருளாதார வசதிகளுக்கமைய கருவுற்றிருக்கும் பெண்ணின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவதும், உடல், உள ஆரோக்கியத்தில் குடும்பத்தவர் அதிக கவனம் எடுப்பதும், சடங்குகள் மூலம் தாய்மை நிலை கொண்டாடப்படுவதும் இயல்பாகவே இருந்து வருகிறது.

கருவறைக் கவலையீனங்கள்
கருவறையிலேயே கற்றல் செயற்பாடு நடைபெறுவதை ஆய்வுகள் மெய்ப்படுத்தியிருக்கின்றன.  பெற்றோர் மற்றும் சூழலால் குழந்தை வடிவமைக்கப்படுகிறது. தாயின் குரலிலிருந்து அது ஒலியைக் கற்கிறது. ஏனைய ஒலிகள்; கருவறையைக் கடந்து தெளிவான முறையில் கருவை வந்தடைதல் சாத்தியமற்றது. பிறக்கும் குழந்தைகள் தாய் பேசும் மொழியின் சாடையிலேயே அழுகின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒலியை மட்டுமன்றி சுவையையும் மணத்தையும் கூட கருவறையில் சிசு கற்கின்றது. இது உண்மையெனில் கருவறையில் கேட்டல் அல்லது செவிமடுத்தலூடாக சிசு கற்கின்றது. தாயின் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் குழந்தையிடம் போய்ச் சேருகின்றது. குறிப்பாக கரு உருவாகிய நாளிலிருந்து 2-6 வார காலங்களில் தான் குழந்தையின் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தையின் இருதயம் துடிப்பதும் கைகள், கால்கள், விரல்கள் என்பன தோன்றுவதும் உள்ளுறுப்புகள், நரம்பமைப்புகள் உருவாவதும் இக்காலப்பகுதியிலேயேதான். இக்காலத்தில் தாயின் உடலில், மனநிலையில், உணர்வுநிலையில் ஏற்படும் மாற்றமானது கருவை நேரடியாகவே தாக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
வறுமையை அடிப்படை பண்பாகக் கொண்ட சமூகங்களில் பசியால் வரும் அனைத்து எதிர்க்கணிய மன எழுச்சிகளையும் செல்வச் செழிப்பைப் பிரதான பண்பாகக் கொண்ட சமூகங்களில் உடலுழைப்பின்மையால் ஏற்படும் நோய்கள் சார்ந்து பெண்ணுக்கு ஏற்படும் மன எழுச்சிகளையும் குழந்தை கற்கின்றது. இன ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்ப் பெண்ணுக்கு உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்பும் அதிகமாகும். அகதி வாழ்வு, சொத்துக்களின் இழப்பு, பொருளாதார கஷ்டங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு, திடீர் மரணங்களால் ஏற்படும் அதிர்ச்சி, எறிகணைத் தாக்கங்கள் போன்றவற்றை கருவறையில் குழந்தையும் எதிர்கொள்கின்றது. இன்றைய சமூகத்தில் பரக்கப்பரக்க பஸ் எடுத்து வேலைக்குப் போகும் கர்ப்பிணிப் பெண்ணின் பரபரப்பு, பதட்டம், இயலாமை, வேதனை, விரக்தி அனைத்தையுமே குழந்தை அனுபவிக்கின்றது.

சமூக நிறுவனங்களின் ஆதிக்கம்
சமூகம் தனிமனிதர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டது எனினும் அது பலதரப்பட்ட நிறுவனங்களின் கட்டமைப்பாலானது. சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். சமூக  நிறுவனங்களின்  ஆதார (pசiஅயசல) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை (ஐவெநசஅநனயைவந) நிலையங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை (ளுநஉழனெயசல) நிலையங்கள் எனக் கூறப்படுகின்றன. கற்றல் செயற்பாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் இச் சமூக நிறுவனங்களின் செல்வாக்கு அளப்பரியதாகும். கருவறை தொடங்கி கல்லறைவரை ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச் சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச் சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.

குடும்பம் என்னும் முதல் நிறுவனம்
உழைப்பு, தாராள மனப்பாங்கு ஒத்துணர்வு, அழகுணர்ச்சி, கட்டுப்பாடு, கீழ்ப்படிவு போன்ற நற்பண்புகளின் பிறப்பிடமாக அமைவது குடும்பம். கருவறையை விட்டு குழந்தை வெளியே வந்ததும் பார்த்தல் அல்லது அவதானிப்பு மூலமான கற்றல் செயற்பாடு இங்கிருந்துதான் தொடங்குகின்றது. பிறக்கும் எந்தக் குழந்தையும் தாயிடமிருந்தே பெரும்பாலானதைக் கற்கிறது.
பார்த்துக் கற்றலில் கூர் நோக்கு அல்லது அவதானிப்பு என்ற அம்சம் முக்கியம் பெறுகின்றது. தான் வாழும் சூழலின் ஒவ்வொரு அம்சமும் அதில் காணப்படும் முரண்களும் குழந்தையின் கற்றல் செயற்பாட்டில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றன. சமூகத்திலுள்ள ஏனைய மனிதர்களைப் பற்றி ஒருவன் கொண்டுள்ள மனப்பான்மை, தான் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்பது தொடர்பாக ஒருவனது குறிக்கோள்கள், ஒருவனது வாழ்க்கை நடை என்பவை குடும்பத்திலிருந்தே வருகின்றது. 'நான்' என்னும் உணர்வையும் 'நாம்' என்னும் உணர்வையும் குழந்தைகளில் விதைப்பதில் குடும்பத்திற்குப் பெரும் பங்குண்டு. ஒத்துழைப்பு, பரந்த மனப்பான்மை, உதவும் பாங்கு கொண்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் வளரும் பெற்றோரின் குழந்தைகள் முழு ஆளுமை வளர்ச்சியுடன் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கருவறை விட்டு வெளியே பிரவேசிக்கும் குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் முழுமையாக வீட்டுச் சூழலால் வடிவமைக்கப்படுகினறது.
குழந்தையின் ஆளுமை வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் பிரதான சக்தி அக்குழந்தை வாழும் குடும்பச் சூழலே. குடும்பத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையில் ஏற்படக்கூடிய புறக்கணித்தல்-ஏற்றுக்கொள்ளல், அசட்டை செய்தல்-அதிக கவனமெடுத்தல், கட்டுப்படுத்தல்-முழுச்சுதந்திரமளித்தல், பணிந்து போதல்-அதிகாரம் செய்தல், ஒதுங்குதல்-ஒன்றிப்போதல் ஆகிய தொடர்புகள் குழந்தைகளது ஆளுமை வளர்ச்சிப்போக்கையும் சமூக மனப்பான்மைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதைக் கல்விசார் ஆய்வுகள் மெய்ப்படுத்துகின்றன. 'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள். அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கைத் தெளிவாகக் காட்டப் போதுமானது. பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. நகர்ப்புறக்குடும்பங்களில் நெருக்கமான வசிப்பிடங்களில் வாழ்க்கை, பணம் சேர்ப்பதில் நாட்டம், பெற்றோர் இருவரும் வேலை பார்த்தல், விவாகரத்து போன்ற அம்சங்கள் அதிகமாக இருக்க கிராமப்புறக்குடும்பங்களில் அறியாமை, வறுமை, போன்ற அம்சங்கள் அதிகமாக உள்ளன.

குழப்பமுறும் குடும்பச் சூழல்
 'முதல் மூன்று ஆண்டுகளில் ஒருவன் கற்கும் அளவு அவனது வாழ்க்கையில் வேறு எந்த மூன்று ஆண்டுகளிலும் கற்பதில்லை' எனக் கூறும் யோன் டூவி என்ற கல்வியியலாளரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு எமது வீடுகளில் நடப்பதை ஒருமுறை நினைவில் கொண்டு வருவோமெனில் 'பிறந்த இரண்டு வயது குழந்தை எழுப்பும் வினவல்களுக்கு பேராசிரியர்களே விடையைத் தேடிடும் காலம் இது. முந்திய தலைமுறைக் குழந்தைகளைப் போலன்றி இன்றைய குழந்தைகள் மிக்க அறிவுடன் பிறக்கிறது அல்லது வளர்கிறது என்று பெருமிதம் கொள்ளும் பெற்றோருக்கும், இதனை ஆய்வின்றியே அறுதியாகக் ஏற்றுக்கொள்ளும் இன்றைய உயர் தகவல் தொழி;ல்நுட்பச் சூழலுக்கும் மட்டும் இது பொருத்தமானது என்ற தவறான பார்வை எம்மிடையே உண்டு. இன்று நேற்றல்ல! குழந்தையின் வினவல்கள் என்றுமே பதிலளிக்க மிகவும் கடினமானவை. சில பெற்றோர் முடிந்தளவிற்கு பதிலளிக்க முற்படுகின்றனர். பலரோ அடக்கிவிடுகின்றனர்.  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் ஆயாவின் பராமரிப்பில் வாழும் குழந்தையின் வினவல்களுக்கு பதிலளிக்க யாருமே இருப்பதில்லை. பல குழந்தைகளின் வினவல்கள் பதிலளிக்கப்படமுடியாத சந்தர்ப்பங்களில் கிழட்டுக் கதையாக உருவகப்படுத்தப்பட்டு பெற்றோரால் அல்லது வீட்டிலுள்ள பெரியோரால் முடக்கப்பட்டுவிடுகின்றது.
இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் பூசல்நிறைந்த குடும்பங்களாகவே காணப்படுகின்றன. பெற்றோர் இருவருமே வேலை பார்க்கும் குடும்பங்களில் உள்ள காலை நேரப் பதட்டம், பரபரப்பு, சண்டை, அதனால் வெளிப்படுத்தப்படும் விரக்திநிலை அனைத்தையுமே குழந்தை ஆழ்ந்து அவதானிக்கின்றது என்பதை பெற்றோர் மறந்துவிடுகின்றனர். குடும்பங்களில் நாம் காணும் இன்னோர் பண்பு தொடர்ச்சியான நச்சரிப்பு. நச்சரிப்புக்கு பேர் போனவர்கள் பெண்கள் என்பதை பெண்களே ஏற்றுக்கொள்வர். மனைவி என்ற வகிபங்கில் அதைக் கொண்டா, இதைக் கொண்டா என கணவனை நச்சரிப்பதும், தாய் என்ற வகிபங்கில் சிறிது நேரம் கூட விளையாட விடாது படி, படி என பிள்ளைகளை நச்சரிப்பதும் குடும்பத்திலிருந்து சற்றேனும் ஓடி ஒளிந்து கொண்டால் என்ன என்ற எண்ணத்தை குடும்ப உறுப்பினர்களிடம் இந்த நச்சரிப்பு ஏற்படுத்துகின்றது. உலகத்தின் புகழின் உச்சியில் ஏறியிருந்தபோதும் மனைவியின் நச்சரிப்பால் மணவாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களில் உலகப் புகழ் பெற்ற பிரான்சின் மன்னன் நெப்போலியன் ரஷ்யாவின் இலக்கிய மேதை லியோ ரோல்ஸ்ரோய், அமெரிக்க  அதிபர் ஆபிரகாம் லிங்கன் போன்றோர் உள்ளடங்குவர்.

மாறும் உறவு மனப்பாங்குகள்
மனப்பொருத்தமுள்ள குடும்ப வாழ்க்கையே நல்ல குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாகவும் தொடக்கமாகவும் அமையும் என்ற உளவியலறிஞர்களின் கூற்றுக்கு அமைய தமிழ்ச்சமூகங்களின் வாழ்க்கை இல்லை என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர். 'அப்பா லீவில் வந்தால் நாம் வீட்டின் முன்புற வாயிலால் நுழைய முடியாது. ஏனெனில் அப்பாவும் அம்மாவும் தனிமையில் இருந்து பேசும் இடமாக அது மாறிவிடும். அப்பாவின் பெட்டியில் கணிசமான இடம் அம்மாவிற்குரிய பொருட்களாகவே இருக்கும். யாரும் அதற்கு உரிமை கோர முடியாது. எங்களுக்கென்றும் அப்பா கொண்டு வருவார் ஆனாலும் அம்மாவிற்குரியதைவிட ஒருபடி குறைவாகவே அவை இருக்கும்' என மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாய் தந்தையர் ஒன்றாக அமர்ந்து பேசுவதைக் காண்பதே மிக அரிதாக இருந்த ஒரு காலகட்டத்தில் ஐந்து குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் தொலைதூரத்தில் வேலை பார்த்து இடையிடையே வீட்டுக்கு வரும் தகப்பனின் நடவடிக்கைகளையும் தாய் தந்தையரின் அந்நியோன்னியத்தையும்  பெருமையுடனும் நகைச்சுவையுடனும் விவரிக்கும் மனப்பாங்கு கொண்ட ஒரு பல்கலைக்கழக மாணவனை தற்போது எம்மால் தரிசிக்க முடியுமா?. வீடு பெரிதாக, பல அறைகளைக் கொண்டமைந்தாலும் சிறு குழந்தைகளுக்கெதிரிலேயே ஒன்றாக படுத்துறங்குவது இன்றைய தலைமுறைப் பெற்றோருக்கு மேற்கத்தைய பாணியாக இருக்கக்கூடும். ஆனால் குழந்தை தூங்கியிருக்கும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு அசண்டையீனமாக குழந்தை எதிரிலேயே குடும்பம் நடத்தும் சில பெற்றோரையும் அதனை இரகசியமாக அவதானிக்கும் குழந்தைகளையும் மேற்கத்தைய சமூகம் நிச்சயம் கொண்டருக்கவில்லை என்ற கசப்பான யதார்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்?.
குழந்தை பேசக் கற்றுக்கொள்ளும் ஆரம்பக்கட்டங்களிலேயே 'நீ அம்மா பிள்ளையா அப்பா பிள்ளையா' என்ற தாய் அல்லது தகப்பனின் அதுவுமன்றி உறவினரின் 'செல்லங்கொஞ்சும்' வினவல்கள் குழந்தையை ஒன்றில் ஏதாவது ஒரு கட்சியில் சேரும் மனப்பாங்கைக் கற்றுக்கொடுக்கின்றது அல்லது இருவரையும் தனித்தனி திருப்திப்படுத்தும் கெட்டித்தனத்தைக் கற்றுக் கொள்;கின்றது. கணவன் மனைவி உறவு தங்கியிருத்தல் உறவாக இருக்கும் பண்பு அதிகமாக இருக்கும் குடும்பங்களில் கட்சிகட்டிப் பிரிக்கும் பண்பையே குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.

வலுவற்ற 'வளர்ப்புப் பண்ணைகள்'
கற்றல் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வலுமிக்க நிறுவனங்களாக இருப்பவை கல்வி நிறுவனங்கள். மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனமாக முன்பள்ளிக்கல்வி நிறுவனங்கள் கருதப்படுகின்றன. உடல், உள, சமூக, மனவெழுச்சி விருத்தி, பாடசாலைக்கான தயார்படுத்தல் உள்ளடங்கிய ஒட்டுமொத்த விருத்திக்குப் பொருத்தமான வாய்ப்புகளையும் அனுபவங்களையும் வழங்குவது கிட்டத்தட்ட 3-5 வயது வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும். முன்பள்ளிப்பருவக் கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்குமான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப்பருவத்தின் வளர்ச்சி மிக முக்கியமானது.
மனிதப்பண்புகளின் 'வளர்ப்புப் பண்ணை'களாகக் கருதப்படும் இந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்குரியது. இந்நிறுவனங்களின் கற்பித்தற்பணி எமது சமூகத்தில் பெரும்பாலும் அடிப்படைக்கல்வித் தகுதியற்றவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தனது பிள்ளை ஆங்கிலத்தில் தான் கற்க வேண்டுமென்ற பெற்றோரின் அவாவானது வருவாய் நோக்குடன் இயங்கும் பல முன்பள்ளிகளின் உருவாக்கத்திற்குக் களமமைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் முன்பள்ளியே தெரியாது வீட்டின் அருகிலுள்ள பாடசாலையில் தாய்மொழியில் கல்வி கற்று பொறியியலாளராகவும் மருத்துவராகவும் உயர்ந்து நடமாடும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மவரிடம் இன்றைய பெற்றோர் கற்றுக்கொள்வது என்ன?. பெரும்பாலான முன்பள்ளிகள் பிள்ளை பராமரிப்பு நிலையங்களாக இயங்குகின்றன. குழந்தையின் தொல்லையிலிருந்து பெற்றோர் சற்றுநேரமாவது ஒளிந்திருக்கக்கூடிய புகலிடங்களாகவும் இவை மாறுகின்றன. முன்பள்ளியின் நேரத்தைச் சற்றுக்கூட்டினால் என்ன என்று அங்கலாய்க்கும் தொழில்பார்க்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இதற்கு மாற்றுவழியாக முன்பள்ளிப் பிள்ளைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களை உருவாக்கினால் என்ன என்ற கருத்துநிலையும் தோற்றம் பெற்றிருக்கின்றது.

ஆட்டங்காணும் அத்திவாரம்
மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற  மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை பாடசாலைகள் என்ற கல்வி நிறுவனங்கள். குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. மொழித்திறன் விருத்தி, ஆக்கவேலை, சூழலுக்கேற்ற தொழில், பாடசாலையையும் சமூகத்தையும் இணைத்தல் போன்றன 6-10 வயது வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கும் ஆரம்பக் கல்வியின் நோக்கமாக இருக்கிறது. 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்கிறார் ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலி. குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்க முடியும் என்ற இவரது  கூற்று ஆரம்பக்கல்விப்; பருவத்தின் அத்தியாவசியத்தையும் வீட்டுச் சூழல் ஒன்றிலிருந்து முதன்முதலான பாடசாலை என்ற நிறுவனத்திற்குள் நுழைகின்ற ஆறு வயது குழந்தையின் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டப் போதுமானது.
ஆரம்பக் கல்வியின் முதல் மூன்று ஆண்டுகளோ அல்லது ஐந்து ஆண்டுகளோ ஒரே ஆசிரியரின் கீழ் விடப்படுவதும் ஆசிரியர்கள் குழந்தை விரும்பும் பாடத்தை அதனது போக்கில் விளங்கப்படுத்துவதற்கேற்ற சூழலும் எமது கல்விமுறையில இல்லை. புத்தகச் சுமையால் கேள்விக்குறி போல் வளைந்து நிற்கும் குழந்தைகள் உலகில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் இடமின்றி ஆண்டு ஒன்றிலிருந்தே புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளைத் தயார்படுத்துவதும் ஐந்து ஆண்டுகள் வரை குழந்தையின் கற்றல் மகிழ்ச்சிகரமானதாகவன்றி அவலம் நிறைந்ததாக மாறியிருப்பதும் பரிதாபத்திற்குரியதொன்று. பரீட்சையில் சித்தியடைவதைவிட முதற்தரத்தில் தேறுவதற்கான தயார்படுத்தல்களே முனைப்புப் பெற்றிருக்கின்றன.

தொழிற்கல்வியின் ஆக்கிரமிப்பு
குடியாட்சிப்பண்பு நிறைந்த எதிர்கால மக்களை உருவாக்குதலும், உயர்கல்விக்கோ அல்லது ஏதாவது ஒரு தொழிலுக்கோ செல்லக்கூடிய தகுதியை உண்டாக்குவதுமே 10-16 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் இரண்டாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இடைநிலைக் கல்வியின் கிட்டத்தட்ட 20 வீதமாவது தொழிற்கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டிய கட்டமாக இது உணரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் சமூக வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ச்சியாக ஒரு மாதமாவது பங்குபெற வைக்கப்படல் வேண்டும். மரவேலை, உலோக வேலை, அச்சடித்தல், கணினித் தொழினுட்பம்  போன்றவற்றுக்கான தொழிற்கூடங்களை ஒவ்வொரு பாடசாலையும் கொண்டிருத்தலின் அவசியத்தை இது உணர்த்துகிறது. 17-18 வயது வரையான இரண்டு வருடங்களை உள்ளடக்கும்  உயர்கல்வியானது பல்கலைக்கழகக் கல்விக்கான தயார்படுத்தலில் முழுக்கமுழுக்க ஈடுபடவைக்கும் அதேசமயம் தொழிற்கல்வியையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. கிட்டதட்ட 80 வீதம் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பருவமாக இது உணரப்பட்டிருக்கிறது. உயர்கல்விக்குள் நுழையும் வாய்ப்பற்ற மாணவர்கள் தொழிற்கல்வியில் பயிற்சியைப் பெறுவதற்கு ஏற்றவகையில் பல்தொழினுட்பக் கல்லூரிகளின் உருவாக்கத்தை இது வேண்டிநிற்கிறது.

ந்தஸ்து நோக்கிலான அழுத்தங்கள்
தமிழ்ச் சமூகத்தின் கல்வி நோக்கம் வெறும் தொழில் நோக்கமாக இருந்திருப்பின் மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்விக் கொள்கையை சிரமேற்கொண்டு பாடசாலைக்கொரு கைப்பணி நிலையங்களால் எமது பாடசாலைகள் நிரம்பியிருக்கும். அந்தஸ்து மிக்க தொழில் நோக்கி பிள்ளைகளை வலிந்து செலுத்தும் ஆதிக்க சக்தியாகவே இன்றைய தமிழ்க் குடும்பங்களை இனங்காண முடிகிறது. தமது ஆறேழு பிள்ளைகளில் ஒன்றை பொறியிலாளராகவோ அன்றி மருத்துவராகவோ ஆக்குவதற்கு எமது முந்தைய தலைமுறை அவ்வளவு சிரமப்படவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தனது தேவைகளை மட்டுமன்றி குடும்பத்தின் தேவைகளை அதுவும் கூட்டுக் குடும்பத்திலுள்ள பேரன் பேத்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தமது பிள்ளைகளைப் பழக்கிய பெற்றோரிடமிருந்து தான் மிகச் சிறந்த கல்வியாளர்களை மருத்துவர்களை, பொறியிலாளர்களளை இச்சமூகம் உருவாக்கியிருக்க இன்றைய தலைமுறையோ ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் தம்மை மட்டுப்படுத்தியிருப்பது மட்டுமன்றி தனது தேவைகளைக்கூட தனித்து நிறைவேற்றமுடியாதளவிற்கு குழந்தைகளை அனைத்திலும் தங்கியிருப்போராக மாற்றியிருக்கிறது.  தமது கரங்களால் தமது வயிற்றை நிரப்புவதற்குக்கூட நேரமின்றியோ அல்லது விருப்பமின்றியோ அதுவுமன்றி பெற்றோரின் அதீத கவனிப்பின் தன்மையாலோ  பெற்றோரில் தங்கியிருக்குமளவிற்கு ஆக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் அம்மாவின் கரங்களினால் செலுத்தப்படும் உணவை இயந்திரத்தனமாக உள்வாங்கும் அதே பிள்ளை கொத்து ரொட்டிக் கடையில் தட்டு நிரம்ப கொத்தும் பெப்சி சோடாவுமாக எத்துணை மகிழ்ச்சியாக தனது கரங்களினால் அத்தனை உணவையும் சாப்பிட்டு முடிக்கின்றது என்பது எத்தனை அன்னையருக்குத் தெரியும்?. உண்ணும் உணவின் சத்துக்களை கூடுமானவரையில் உணவுக் கலங்கள் உறுஞ்சுவதற்கு உமிழ்நீரின் உதவி தேவையென்பதையும் சொந்தக்கரங்களால் உண்ணுவதன் மூலமே உமிழ்நீர் சுரப்பிகள் இயங்கும் என்பது படித்த அம்மாக்களுக்கே தெரியவில்லை.

வெறுவாய் மெல்லும் மூன்றாம் நிலைக்கல்வி
மூன்றாம்நிலைக் கல்வியின் நோக்கம் மாணவரிடையே உண்மை அறிவை வளர்ப்பதும் அதைப் பரப்புவதுமாகும். சமூகத்தை தாங்கக்கூடிய தலைவர்களையும் சமூகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துறைசார் வல்லுனர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகத்தின் பங்கு அளவிடற்கரியது. பல்கலைக்கழகக் கல்வியின் உண்மையான நோக்கம் ஆய்வும் அந்த ஆய்வின் பெறுபேறை சமூகத்தில் பிரயோகிப்பதுமாகும். பல பேராசரியர்களைச் சுடச்சுட உருவாக்கியிருக்கும் பல்கலைக்கழகம் இதுவரை சமூகத்திற்கு தேவையான எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறது?  பல்கலைக்கழக சமூகமே தமது பணியிடத்தை அரிவரிப் பள்ளிக்கூடம் என ஏளனம் செய்யுமளவிற்கு இது தரமிறங்கியுள்ளது. மாணவர்களை பாலியல் இம்சை செய்தல், மாணவர்களின் ஆக்கங்களை தமது ஆக்கமாக வெளியிடுதல், தமது வசதியை கருத்திற்கொண்டு பாடவேளைகளை வடிவமைத்தல், போன்ற ஊடகங்களின் எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள கற்பித்தற் சமூகமும், பணம், பதவி, சமூகச் செல்வாக்கு போன்றவற்றுக்கு உறுதுணையாக அமையும் தராதரமற்ற நியமனங்களை ஊக்குவிக்கும் நிர்வாகக் கட்டமைப்பும் மாணவ சமூகத்தின் பிரதான கற்றல் களங்களாக மாறியிருக்கின்றன.  

உளத்தூண்டல் அற்ற உடற்கல்வி 
தலைமைத்துவப் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, குழுப்புரிந்துணர்வு மற்றும் சமூக மென்திறன்களைத் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குவதில் உடற்கல்விக்கு பாரிய பண்புண்டு. வீட்டுக்குள் விளையாடும் பாண்டிக்குண்டு, தாயம், முற்றத்தில் விளையாடும் கிட்டிப்புல், தாச்சி, போளை அடித்தல்  போன்றவை முதற்கொண்டு நிறுவனமயப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் வரை உள்ளடங்கும். இது மட்டுமன்றி மன ஒருமைப்பாடு, புலனடக்கம், போன்றவற்றைத் தரவல்ல உளப்பயிற்சிகளையும் உள்ளடக்கும். ஆனால் நடைமுறையில் இந்த உடல் உள பயிற்சிகள் வெறும் சம்பிரதாய விளையாட்டுப் போட்டிகளாகவும், அரசியல், சமூக குழு முரண்பாடுகளை ஊக்குவிக்கும் களமாகவுமே எமது சமூகத்தில் முளைவிடத் தொடங்கியிருக்கிறது. தைரியம், பற்றுறுதி, பரந்த மனப்பாங்கு, பொதுநலப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு உதவும் விளையாட்டுக் குழுக்களுடன் குழந்தைகள் செலவிட்ட காலம் மாறி, தனியார் கல்வி நிலையங்களில் கூடுதலான நேரம் முடக்கப்பட எஞ்சியுள்ள நேரத்தில் கணனி விளையாட்டுக்களும், வியாபார ரீதியான வர்த்தக மையங்களும் முக்கியப்படுத்தப்படுவதனால் குழந்தைகளை பிரதான அங்கத்தவராக கொண்ட விளையாட்டுக்குழு என்ற வலுமிக்க ஆதார நிறுவனம் நகர்ப்புற சமூகங்களில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டு போகிறது. சமூக உறுப்பினர்கள் அனைவருமே பங்குகொள்ளக்கூடிய விளையாட்டுகளை கைவிட்டு பதின்மூன்று பேர் கொண்ட கிரிக்கெற் உலகிற்குள் மாய்ந்து போய்க்கிடக்கின்றது இன்றைய பெரும்பான்மை இளைய சமூகம்.

சிறுவர் உரிமை மீறல்கள்
குழந்தையின் தன்மையும் முதிர்ச்சியடைந்த ஒரு மனிதனின் இயல்பும் வேறு பட்டவை என்ற சிந்தனை அறவே எழாத 16ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து விடுபட்டு குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்கப்படவேண்டியவர்கள் என்ற சிந்தனைத் துடிப்பு தோற்றம் பெற்ற மத, இலக்கிய மலர்ச்சிக் காலத்தை மெல்லக் கடந்து, குழந்தையின் மூளை வளர்ச்சி, உளவியல் தாக்கம், குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையிலான தொடர்பு, குழந்தைக்கும் சகல குழந்தைகளுக்குமிடையிலான தொடர்பு, குழந்தையின் நடத்தை மாற்றம், அதற்கான சமூக சூழல் பற்றிய அதிகளவிலான கேள்விகளும் ஆய்வுகளும் அக்கறைகளுமாக ஒரு நூற்றாண்டைச் செலவழித்து சிறுவர் உரிமைகளும் நலன் பேணும் திட்டங்களும் வெறும் உபதேசமாகப் போய்விடுமோ என்ற வினா எழுப்பும் நிலையில் 21ம் நூற்றாண்டில் காலடி வைத்திருக்கிறது மனித சமூகம். 15 வயதிலேயே குழந்தைக்கு தாயாகும் சிறுமியரையும் குடும்பப் பாரத்தைச் சுமக்கும் பொறுப்புள்ள சிறுவர்களையும் தம்முன்னே காணும் சிறுவர் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு 18 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருமே 'குழந்தைகள்' என கணிக்கப்படவேண்டியவர்கள் என்ற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகடனம் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவே கருதப்படுகிறது.

சமூக நெறிபிறழ் நடத்தைகள் 
'ஒருவருடன் ஒருவர் கலந்து, இணைந்து எல்லோருக்கும் பொதுவான சில நோக்கங்களை அடைவதற்காக கூடிச் செயற்படும் பல மனிதர்களின் கூட்டே சமூகம்' என்கிறார் கிட்டிங்ஸ் என்ற அறிஞர்.  ஷபாதுகாப்பு, புதிய அனுபவங்களைப் பெறல், பிறரது தூண்டல்களுக்கு ஏற்ப நடத்தல், பிறர் தம்மைப்போல் ஒருவராக எம்மை ஏற்றுக்கொள்ளல்  ஆகிய நான்கு ஊக்கிகளே சமூகத் தொடர்புகளுக்கு அடிப்படைஷ என்கிறார் தோமஸ் என்ற அறிஞர். ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. உணவு, உடை, உறையுள் போன்ற உடல் தேவைகளும், அன்பு போன்ற உளத்தேவைகளும், பாதுகாப்பு, பொழுதுபோக்கு போன்ற சமூகத் தேவைகளும் நிறைவு பெறுவதற்கு சமூக வாழக்கை மனிதனுக்கு அவசியமானது. தனிமனிதனையும் அவன் வாழும் சமூகத்தையும் பிரித்துப் பார்ப்பது சாத்தியமற்றது. கற்றல் செயற்பாடானது ஒரு சமூகத்தின் சூழலால் வடிவமைக்கப்படுகின்றது. மனிதனும் சமூகமும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பது போன்றே தனிமனித வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றுடனொன்;று பின்னிப்பிணைந்தது. மனித வளர்ச்சியானது சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது போன்று மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு மனிதனின் ஆளுமை பண்புகள் அவன் வாழுகின்ற சமூகத்தின் தன்மையினால் நிர்ணயிக்ககப்படுகின்றது என்பது உண்மையெனில் தற்போதைய எமது சமூகம் பற்றிய தௌ;ளிய அறிவு எமக்கு அவசியமானதாகும்.  ஒன்றுக்கொன்று முரண்பட்ட நடத்தைகளைக் கொண்டமைந்த மிகமிகச் சிக்கல் வாய்ந்த ஒரு சமூகமாக, எங்கும்; எதிலும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் அதேசமயம் தனிமனிதர்களிடமிருந்து அதிகளவு கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் சமூகமாக, இன ஒடுக்குமுறையை பூரணமாக அனுபவிக்கும் சமூகமாக,. தமது தனித்தன்மைகளை, பாண்பாட்டுக்கோலங்களை மெல்லமெல்ல கைவிட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அலையும் சமூகமாக, நெறிபிறழ் நடத்தைகள் மெல்ல மெல்ல தலையெடுத்தாடுகின்ற சமூகமாக, சமூகச்சிந்தையற்ற கல்வியாளர்களை மிக அதிமாகக் கொண்டிருக்கும் சமூகமாக இனங்காணப்பாட்டிருக்கும் இன்றைய எமது சமூகத்தில் மாணவர்களை சமூக இயல்பினராக்குவது எவ்வாறு என்பது ஒரு கசப்பான யதார்த்தமாகவே உள்ளது.

மறைந்து கொண்டு வரும் அனுபவக்கல்வி
கற்றலின் பிரதான களங்களில் முக்கியமானது பிறரது பட்டறிவு எமக்கு படிப்பறிவாவது ஆகும். முந்தைய தலைமுறை சேர்த்து வைத்திருக்கும் அனுபவங்கள் கல்வி நிறுவனங்கள் தரும் கற்றலின் பிரயோகங்கள் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்விலிருந்து கருக்குடும்ப வாழ்விற்கு எமது சமூகம் மாறியகையுடன் மூத்தவர்களது அனுபவங்களைப் பகிரும் அரிய வாய்ப்பும் மறைந்து விட்டது. நிலைகொண்டிருக்கும் ஓரிரு குடும்பங்களில் அது தலைமுறை இடைவெளி என்ற  பார்வையில் புறக்கணிக்கப்படுகின்றது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து சுயமாக உழைத்து முன்னேறிய ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பின்னர் ஊதாரித்தனமாக மாறிய மனைவியை 'ஆபத்துக்குதவாப்பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாகத்தைத் தீராத்தண்ணீர், தரித்திரமறியாப் பெண்டிர்'; என்ற விவேகசிந்தாமணியின் பாடல்களில் பொருத்தமான ஒன்றை மேற்கோள் காட்டும் அன்றைய அப்பாக்கள் பள்ளிக்கூட வாசல் மிதிக்காது வெறும் திண்ணைப் பள்ளியில் கற்றவர்கள் மட்டுமே. திருக்குறள் போன்ற நீதி நூல்களை அதன் பொருளுடன் சொல்லும் வல்லமையை இன்று எத்தனை அப்பாக்கள் கொண்டிருக்கின்றார்கள். குளிக்கும் இடம், கூட்டும் இடம், ஏன் கழிக்கும் இடம் கூட திருவெம்பாவையின் இருபது பாடல்களையும் மனப்பாடம் செய்வதற்கு அன்றைய தலைமுறை பயன்படுத்தியதால் தான் இன்றும் புத்தகம் இன்றியே அவற்றை நினைவில் இருத்திப் பாடும் வல்லமையை அது கொண்டிருக்கின்றது. இன்றைய எமது நிலை...?. மனனப் போட்டியில் மதிப்பெண் வாங்குவதுடன்  அது மறந்துவிடுகின்றது. வள்ளுவர் சொல்லும் கசடு அறக்கற்றலும் கற்றபின் அதற்கு அமைய நடத்தலும் ஏட்டுப்படிப்பாகவே நின்றுவிடுகின்றது.

முன்னணி வகிக்கும் முகஸ்துதிகள்
சமூகத்தின கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மனிதனின் மற்றுமோர் முக்கிய கற்றல் களங்களில் ஒன்றாகும். பரந்த கல்வி, ஆழமான அறிவு,  அனுபவ முதிர்ச்சி, ஒழுக்கமான வாழ்க்கை போன்றவற்றால் உயர்ந்து நிற்கும் பெரியவர்களை சமூகத்தின் நிகழ்வுகளுக்கு அழைத்து அவரது வகையால் பெருமையும் பெருமிதமும்; அடைந்த தமிழ்ச்சமூகத்தின் விழாக்கள் உண்மையான பாராட்டுக்களால் அன்று நிரம்பி வழிந்தன. மேடையில் இருப்பர் தொடர்பான மரியாதை அவையில் இருக்கும் அனைவருக்கும் இருந்தது. அவர் முன்னால் விழுந்து வணங்கி ஆசி பெறுவதும் கூட பெரிய விடயமாகப் போற்றப்பட்டது. ஆனால் இன்றைய சமூகத்தின் நிகழ்வுகள் எமக்குக் கற்றுக்கொடுப்பது உண்மையான பாராட்டுக்களை அல்ல. முகத்துக்குப் புன்னகைத்து முதுகுக்கும் புறங்கூறுவது எப்படி என்பதையே. இன்றைய அழைப்பிதழ்களில் வெறும் பிரதம விருந்தினரை உள்ளடக்கிய எம்மவரின் அழைப்பிதழ்கள் இந்த முதுகு சொறியும் போக்க்pனால் சிறப்பு விருந்தினர், பின்னர் கௌரவ விருந்தினர் என தமக்கு படிப்பிலோ, பதவியிலோ அல்லது பொருளுதவியோ செய்வார் என நம்புபவர்களையெல்லாம் அழைப்பிதழில் உள்ளடக்கும் பரிதாபம் கடந்த இருதசாப்த வளர்ச்சி மட்டுமே. இது அண்மையில் ஒரு நிகழ்வு இரு பிரதம விருந்தினர்களை உள்ளடக்குமளவிற்கு இன்னொரு படி மேற்சென்றுள்ளதை செய்தி ஊடகங்கள் ஆவணப்படுத்தியிருக்கிறன.

தொலையும் பண்பாட்டு அடையாளங்கள்
செழிப்பும், பொருளாதார வளர்ச்சியும், குழந்தை வளர்ப்பு தொடர்பான அதீத கவனமும் ஏற்படுத்தும் அதிக வாய்ப்பு வசதிகளின் காரணமாக போதைப் பொருட் பாவனை, குடி, கொலை, கொள்ளை, சிறுவர் விபச்சாரம் போன்ற வன்முறைக்குற்றங்களில் சிறுவர்கள் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் போக்கு ஒரு புறமிருக்க இதற்கு நேர் மாறாக வசதி வாய்ப்புக்கள் எதுவுமி;ன்றி வறுமை, பசி, பட்டினி, போசாக்கின்மை, கல்வி அறிவின்மை என்பவற்றின் காரணமாக குழந்தையிலேயே குடும்பப் பாரத்தை சுமக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஏழைக்குடும்ப சிறுவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். தொலைக்காட்சிப் படங்கள் விளையாட்டுக்கள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளை பார்த்ததும் 'உலகமே இப்படித்தான், இதையே தான் ஒவ்வொருவரும் செய்கின்றனர் எனவே நாமும் செய்யலாம்' என்ற தோற்றப்பாட்டை சிறுவர்கள் பெறுவதும் வன்முறை இங்கு அதிகரிக்க காரணம் எனப்படுகிறது.
ஏனைய பல சமூகங்களுக்கு இல்லாத அளவு போட்டி மனப்பான்மையை தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தின் வியாபார சந்தையில் அதிக கேள்வியுள்ள பொருளாக காணப்படுவது கல்வி என்ற வியாபாரப் பண்டம். கல்வியின் விற்பனையாளர்கள் ஆசிரியர்கள். விளம்பரமின்றியே மிக அதிகளவில் விற்பனையாகும் பொருளும் கல்வியே. தனக்கென தனித்துவப் பண்புகளை தக்க வைத்துக்கொண்ட தமிழ்ச்சமூகத்தின் இன்றைய பண்பு மயப்படுதல். ஏனைய சமூகங்கள் தம்மை அடுத்தவரிலிருந்து வித்தியாசப்படுத்த ஏதாவது ஒரு அடையாளத்தை, ஆகக் குறைந்தது தமது ஆடையணிகளிலாவது (அது சீக்கியர்களின் தலைப்பாகையாகவோ, முஸ்லிம்களின் தொப்பியாகவோ) பேணுவதாக இருக்க எமக்கென தனித்த அடையாளம் இன்றி உலகில் எதுவெல்லாம் புழக்கத்திற்கு வருகின்றதோ அவற்றை காட்சிப்படுத்தும் பொம்மைகளாகவே எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. கல்விச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் ஆரம்ப காலங்களில் நாம் வாத்தியார் என அழைக்pன்ற அன்றைய உபாத்தியாயர்களை பாடசாலைக்குள் மட்டுமன்றி பாடசாலைக்கு வெளியிலேயே சமூகத்தின் எந்தவொரு நிகழ்விலும் அதே கோலத்தில் இனங்காணக்கூடிய ஒரு வாய்ப்பும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மையையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று சீருடைகள், ஒழுக்க அம்சங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் மாணவர்களிடம் மட்டும் திணிக்கப்படும் தன்மையே பெரும்பாலும் உண்டு. இதிலிருந்து தெரிவது என்ன ?.  மாணவ சமூகத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளோ ஒழுங்கு நடவடிக்கைகளோ பாடசாலையுடன் மட்டும் தான் என்ற ஆழமான உணர்வும் அதனை கழற்றி எறிந்து சுமையிலிருந்து விடுபடும்; தருணத்தை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற உணர்வும்  மிக அதிகளவில் உண்டு. சமூகத்தின் நேர்க்கணிய மாற்றத்தை கற்பதன் மூலமே சமூக அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்கலாமேயன்றி எதிர்க்கணிய மாற்றங்களினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் ஒரு மனிதனை சமூக இயல்பினராக்குதல் சாத்தியமற்றது.

அதிகரிக்கும் விலகல்களும் இடைவெளிகளும்;
பிள்ளைகளை தேடல் உணர்வு அதிகமாக இருக்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களிடம் போடும் கட்டளைகளில் பிரதானமானது மேலதிக பாடத்திட்ட செயற்பாடுகளில் பிள்ளைகளை சேர்க்கவேண்டாம் என ஆசிரியர்களுடன் சண்டை பிடிக்கும் பெற்றோர்கள், தனியார் கல்வி நிலையங்களில் மட்டுமன்றி அதற்கும் மேலாக தனிப்பட்ட வீட்டு ரியூசனில் அதிகம் செலவழிக்கும் பெற்றோர்கள் பள்ளி நிகழ்வுகளில் அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றின் அடிப்படையில் உருவான குடும்பம் என்ற ஆதார நிறுவனம் இன்று அவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகிறது. வாழ்க்கைப் படிப்பை புறந்தள்ளி ஏட்டுப்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்ற நிறுவனம், விரும்பத்தகாத மனவெழுச்சிகளை மனிதரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் தூண்டிவிடும் திரைப்பட ஊடகங்கள், நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்து செயற்பட நேரமற்ற பம்பர உலகில் தொகை ரீதியாகவும் தரரீதியாகவும் பெருத்துக்கொண்டு போகும் தகவல் வெள்ளத்துக்குள் நல்லதை, பொருத்தமானதை தெரிவு செய்வதற்கான நேரமோ, பொறுமையோ, அறிவோ அற்ற மனித சமூகம் இப்படி இன்றைய சமூகத்தின் எதிர்க்கணியப் போக்கை விவரித்துக்கொண்டே போகலாம்.
வீட்டுக்கும் வீட்டுக்கு வெளியேயான வாழ்க்கைக்குமிடையிலான விலகல்களும் இடைவெளிகளும் அதிகரித்துச் செல்லும் ஒரு சமூகமாக எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. பாடசாலையில் அறஞ்செய விரும்பு எனப் படிக்கும் குழந்தை வீட்டில் பிச்சைக்காரன் வந்ததும் படலையைச் சாத்தும் அப்பாவையோ அல்லது அம்மாவையோ பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் குழப்பமடைகின்றது. பாடசாலைக் கல்வியை ஊக்குவிப்பதைவிடுத்து தனியார் கல்வி நிலையங்களுக்கு வரத் தூண்டும் ஆசிரியர்கள், போதைவஸ்து பாவனைக்கு தண்டனை கொடுத்துவிட்டு வீட்டிலோ களியாட்ட நிகழ்விலோ அவற்றை நுகரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், வீட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் காரணங்காட்டி ஒருசிலரை ஒதுக்கும் கூட்டாளிக் குழுக்கள் அனைத்துமே இந்த இடைவெளிகளை மேலும் ஆழமாக்குகின்றன. இத்தகைய குழப்பங்கள் நடைமுறைமுறை வாழ்க்கைக்கும் பாடசாலைக் கல்விக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்ற ஆழமான உணர்வை சிறுவயதிலிருந்தே குழந்தையிடம் விதைத்துவிடுகின்றது.

முடிவுரை
சவால்;களைப் பட்டியலிட்டுவிட்டு தீர்வை தராமல் விடுதல் எந்தவொரு பயனுமற்றது. தனக்கென தனித்தன்மையைக் கொண்ட சமூகங்களாக ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சியடையுமெனில் முரண்கள் குறைவதற்கு பெருமளவு வாய்ப்புண்டு. வெறும் அரசியல் பிரகடனமோ அல்லது நனவாக்க முடியாத கனவோ எதுவாக இருப்பினும் 'அயல் பாடசாலையை சிறந்த பாடசாலையாக்குதல் எண்ற கல்வியமைச்சரின் பிரகடனம் சமூக சிந்தையுள்ள மனிதனை உருவாக்க நினைக்கும் அனைத்து உள்ளங்களிற்கும் தெம்பு தரும் ஒரு செய்தியாகும். தாய்மைநிலையுடன் மிக தொலை தூர பணியிடத்திற்குச் செல்தலின் சிரமம், சக விளையாட்டுத் தோழரை விட்டு சமூக பொருளாதார கலாசார அம்சங்களில் வேறுபட்ட குழுக்களுடன் தன்னை இசைவாக்கம் செய்வதில் ஒரு மாணவனுக்கு இருக்கும் சிரமம். ஓய்வு நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்வதன் சிரமம் போன்றவை சொந்தப் பாடசாலையில் கற்பதன் மூலமோ வேலை பார்ப்பதன் மூலமோ குறையுமெனில் சமூக இயல்பினராக்குவதிலுள்ள சவால்களும் குறைவதற்கு இடமுண்டு. எமக்கு முந்திய தலைமுறையின் ஐக்கியப்பட்ட ஒழுக்க, பண்பாட்டு அம்சங்களும் இன்றை தொழில்நுட்ப வசதி வாய்ப்புகளும் இணையுமெனில் தனித்தன்மையும் சமூக சிந்தையுமுள்ள மேதைகளை இச்சமூகம் அதிகளவில் கொண்டு சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் எண்பது திண்ணம்.

உசாத்துணைகள்
1.  Eshleman, Adam(2009).  Probing Question: Can babies learn in utero?. http://news.psu.edu/ story/ 141254/2009/02/23/research/probing-question-can-babies-learn-utero
2. சந்தானம்,எஸ். (1987). கல்வியின் சமூக தத்துவ அடிப்படைகள். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.-
3. அமனஷ்வீலி,ச. (1987) குழந்தைகள் வாழ்க. மொழிபெயர்ப்பு. இரா.பாஸ்கரன். மொஸ்கோ: முன்னேற்றப்பதிப்பகம்.
4. சந்திரசேகரம்,சோ. (2006). முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம். அகவிழி. 2(22). யூன் 2006. ப13-15.
5. நவாஸ்தீன்,ப.மு.(2006). இடைநிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கலைத்திட்டச் சீர்திருத்தங்கள். அகவிழி. 2(23). யூலை. 2006. ப12-17.

No comments: