Tuesday, February 04, 2014

மீண்டும் துளிர்க்கும் வசந்தம் பார்வையும் பதிவும்


மீண்டும் துளிர்க்கும் வசந்தம்--- ஈழத்துப் போராட்ட வாழ்வியல் மீதான அவதானிப்புகளையும் அனுபவங்களையும்  படம் பிடித்துக் காட்டும் இலக்கியங்களுள் ஒன்று. இளம் படைப்பாளியாக உள்ள அதே சமயம் இளம் படைப்பாளிகளுக்குள்ளேயே மூத்த படைப்பாளியாக அறியப்பட்ட அம்புலி என்ற  பெண் போராளிக் கவிஞரின்  பல கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு. ஒரு பெண்ணாக , பெண் என்ற அடையாளத்துக்குள்ளேயே இளம் பெண், போராளி, போராளி மனைவி, போராளித் தாய் என்று பல படிநிலைகளைக் கடந்து நிற்கும் அம்புலி, கவிஞர் பாடலாசிரியர் என்ற இரு தளங்களிலும் ஆழமாக தனது தடயங்களைப் பதித்து நிற்பவராகப் பேசப்படுபவர்.

மனிதனைப் போன்றே உடலும் உயிரும் கொண்டது கவிதை. கவிதைக்கு உடல் அதன் உருவமைப்பு என்றால் அதன் உயிராக கருதப்படுவது அதன் பாடுபொருள். அம்புலியின் கவிதைகள் கொண்டுள்ள கருத்தியல் தளம் நேரடியானது. தெளிவானது

'இவை மகிழ்வில் பூத்த மலர்கள் அல்ல-- 
வசந்தத்தில் வீசுகின்ற தென்றலும் அல்ல--- 
தீக்குளித்துக் கொண்டிருக்கும் எனது தேசத்தின் நெஞ்சிலெழுந்த நெருப்புகள். என்னையும்
எனது தோழிகளையும் காலம் போர்க்களம் நோக்கித் தள்ளியபோது அக் களவெளிகளில் 
நாம் பெற்ற அனுபவங்களும் உணர்வுகளுமே எனது குரலாக இங்கு வெளிவந்துள்ளன.

என வெளிப்படையாகவே தனது தளம் எதுவென்பதை உணர்த்தும் அம்புலி காலப் பயணத்தில் தான் சுமந்த சிறு மணல்களாகவே வீரியம் நிறைந்த இக் கவிதைகளை எண்ணுகின்றார்

இன்றைய இலக்கியம் அதன் பாடு பொருளில் இரண்டு தெளிவான போக்குகளை முன் வைத்து நகர்கிறது. ஒன்று தன்னுணர்வு, மற்றது சமூக உணர்வு. இலக்கியம் இலக்கியத்துக்காகவே என வாதிடுபவர்கள் பட்டியலில் இவர் இல்லைப் போல் தெரிகிறது. அரசியல், பொருளாதார, சமுதாய, கலாச்சார, விஞ்ஞான, தொழினுட்ப அம்சங்கள் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தது இன்றைய சூழல்--- அதிலும் சமூக விடுதலையுடன் இணைந்த தேச விடுதலை என்ற பணியில் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் ஈழத்துப் போராட்ட வாழ்வியல் சூழலை முற்று முழுதாக உள்வாங்கி கொண்டு புதிய சிந்தனையை, புதிய மனிதரை, புதிய சமுதாயத்தை படைக்க வேண்டிய காலத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது எம் தமிழ்ச் சமூகம். இது உயிர்களுக்கு மட்டுமன்றி உயிர்களின் உயிர் நாடியாக இருக்கும் இலக்கியத்துக்கும் மிகப் பொருந்தக் கூடியது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பும் சரி இப்போதும் சரி சூழலுடன் தன்னைச் சரி செய்து கொள்ளாத எதுவுமே நிலைத்து நிற்பதில்லை என்ற இயற்கையின் நியதியை முற்றாக புரிந்து கொண்டவராக இருப்பதால் தான் தற்போதைய சூழலை முழுதாக உள்வாங்கி உணர்வும் உயிர்ப்புமாக தனது கவிதைகளை இவரால் உலவ விட முடிகிறதோ என்னவோ--? தனக்குள் தொடங்கி தனக்குள்ளேயே பூரணத்துவம் பெறுவது இலக்கியம் என்ற கொள்கையிலிருந்து விடுபட்டு தன்னுணர்வு முழுவதையும் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் உணர்வாக்கி இக் கவிதைகளை சமூகத்தின் சொத்தாக்கி விடுகிறார் அம்புலி. இவரது கவிதைகள் உண்மையைப் பேசுகின்றன. வாழ்வை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கின்றன. சமூக நலன் நோக்கி மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

கவிதைக்கு அழகு எளிமை. அம்புலியின் கவிதைகள் எளிமையானவை, நிதானமானவை, யதார்த்தமானவை, தீவிரமானவை, சுயமரியாதைத்தனம் நிறைந்தவை. வெறுமனே உணர்வு நிலைப்பட்டு பிதற்றிக் கொண்டிருக்காது அறிவு மயப்பட்டு சமூகத்தின் பணியை எடுத்தியம்ப இக் கவிதைகள் முயன்றிருக்கின்றன. போராட்டமும், போராட்ட வாழ்வுமாய் மண் கட்டுண்டிருக்கையில் எனக்கு வேறேது சிந்தனை. மண் சிறைப்பட்டிருக்க மனவெளியில் சிறகடிக்கும் சுயநலம் எனக்கில்லை என சொல்லாமல் சொல்கின்றன அம்புலியின் கவிதைகள். தனி மனித சோகங்களை தூக்கி ஒருபுறம் வைத்து விட்டு, இந்த பழமை மிக்க சமூகக் கட்டுக்கோப்புக்குள் இருந்து எப்படி வெளிவந்தேன் என்ற வீரப்பிரதாபங்களைக் கூட சற்று அடக்கி வாசித்து, பால் நிலைக்கும் அப்பால் சென்று மனிதம் என்ற பொது நிலையில் போரும் அவலமும் நிறைந்த வாழ்வில்; எமது அடையாளம் என்ன என்பதை காட்டும் தெளிவுத் தன்மை இவரின் கவிதைகளுக்குண்டு.

போரே வாழ்வாகிய ஒரு சூழலில் புதிதாய் வெளிக்கிளரும் பெண்ணின் புதிய விம்பம் ஒன்றை பதிவு செய்கின்றன இவ்வரிகள்

பூமிச் சுழற்சியில் புதிய குழந்தையாய் 
பிறப்பெடுக்கப் போகும்
என்னை வரவேற்றுக் கொள்ளுங்கள்
அஞ்சியும் கெஞ்சியும்
பணிந்தும் குனிந்தும் 
வாழ்வதல்ல என் விதி
எனக்கு திணிக்கப்பட்ட வாழ்வைத் திருத்தி 
புதிதாய் எழுதும் கதையைப் படியுங்கள்  (பக்- 13)

கருவறையிலிருந்து வெளிவர தயாராக இருக்கும் ஒரு சிசுவின் குரலாய் ஒலிக்கின்றது வாழ்க்கை ஒரு இனிய பாடலாகட்டும் என்ற கவிதை. சூழலுக்கு தன்னை இசைவித்து கொண்ட இளைய தலைமுறையின் குரலாய் அவளே எழுதுவாள் எம் அழகிய காலம், நலமேயுள்ளேன், அம்மா அழாதே போன்ற கவிதைகளும்; தாயின் குரலாய் வெளிப்படுத்தப்படும் நான் தடுக்க மாட்டேன் தாயின் குரல் என்ற கவிதைகளும் ஒலிக்கின்றன. சூழலிலிருந்து அந்நியப்பட்டுப்போனதால் அழிந்த ஆத்மாவின் ஆதங்கக் குரலாய் வெளிவருகிறது நான் ஏன் தாமதித்தேன்,வெளிக்கிளரும் ஒரு மௌனக் குமுறல் என்ற கவிதைகள்..

போராட்ட சூழல் ஒன்றில் போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பிலக்கியவாதியிடம் இரத்த வெறியும், நிண வாடையும், குரோத உணர்வும் தவிர வேறென்ன தான் இருக்க முடியும் என நினைப்பவர்களிடம் இயல்பினை அவாவும் ஒரு உயிரின் உணர்வை அழுத்தமாக இப்படிப் பதிக்கிறார்.

குண்டு மழைக் குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிண வாடை கலந்த சுவாசிப்புகளில்
வெறுப்படைகிறேன்

சிவந்து கனியும் சுடுகலன் குறிகாட்டியினூடே

குண்டுகளின் அதிர்வோசை கேட்காத
ஒரு தேசத்தை இங்கே தேடுகின்றேன்  (பக் 14)

முற்றத்துப் பூச்செடியை ஆடு கடித்தபோது கூட

அலறித் துடித்தது தான் எம் மனது
விட்டில் பூச்சி தானாய் வந்து விளக்கில் விழுந்தபோது கூட 
விம்மியது தான் எமதுள்ளம்  (பக் 91)

கரம் பற்றிக் காலாற நடந்து கனவுகள் சுமந்த கதை கேட்க அவாவும்---
கூடிச் சிரித்து மகிழ்ந்து ஒரு வாய் சோறூட்ட விரும்பும்---
யாரையும் பற்றியிருக்காச் சீவியச் செழிப்பில் வாழ்ந்த தடயங்களை எண்ணிப் பெருமைப்படும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ விரும்பிய என்னை மாற்றியது எது? என்பதற்கு அவர் கூறும் காரணம் இது தான்;

'எங்கள் அடிவயிற்றில் இடி விழுந்தபோது
உடன்பிறப்புகளைப் பலி கொண்டபோது
அன்போடு வாழ்ந்த இன்பக் கூட்டைக் கலைத்து
காடு மேடெல்லாம் எம்மை அலைக்கழித்த போது -- (பக் 91)

சாவையும் மீறி வயது வேறுபாடற்று

அவர்களைச் சந்திக்க வரும் 
ஏதோ ஒன்றிற்காய்
நித்தியமும் அச்சத்தில் அமிழும் போது-- (பக் 64) 


எப்படி நாங்கள் மனிதர்களாக இருப்போம் என எம்மை நோக்கியே வினவும் அம்புலி ஷகனிந்த மனதில் பெற்றோல் ஊற்றி எரிய விட்டது நாமல்ல என சாடுகிறார். இயல்பான வாழ்வு எமக்கு மறுக்கப்பட்டபோது

'சுட்டுப் பொசுக்க முடியாத 
ஏவகணையின் வாய்களாய்
கனன்றது மனது
தோட்டாக்களாகிச் சென்று துடைத்தழிக்க மாட்டோமாவென
ஆற்றாமைப்பட்டு அவிந்தது மனது.
உடல் சிதறிக் கிடந்த 
இரத்த பூக்களை எரிக்கையில்---புதைக்கையில்
எம் விழி வழி வழிந்தது கண்ணீரல்ல--- நெருப்பு---  (பக் 89)

என குமுறும் அம்புலி சாது மிரண்டால் எப்படி இருக்கும் என்பதை பல வரிகளில் உணர்த்துகிறார்.

மாதிரிக்கு இங்கே ஒரு சில--
முற்றத்துப் பூத்திருந்த பூ வெடிக்கும்---  (பக் 39)

நெஞ்சில் கனலேந்தி எரிநெருப்பில் தீக்குளித்து

வஞ்சம் தீர்க்க வரும் வெஞ்சினத்தில் விழி சிவந்து---  (பக்  41)

துடிப்புகள் நிறுத்தப்பட்ட
இதயங்களில் எரியும் தீயைச் சுமந்த காற்று
எப்படி தம்மைத் தகித்ததென
கயவர்கள் உணரட்டும் ---   (பக் 67)

ஏனைய விடுதலை அமைப்புகளைப் போலவே விடுதலைப் புலிகள் அமைப்பிலும் பெண் என்பவள் ஒரு துணைக் கருவியே  என ஆழமாக வேரோடிப் போயிருக்கும் முதலாளித்துவக் கருத்துநிலை ஒன்றை--- போராட்ட சூழலை உள் வாங்கும் திறனோ அல்லது விருப்போ இன்றி மண்ணிலிருந்து விலகி எங்கோ சுகமான சீவியம் நடத்திக் கொண்டே யுத்த வெறி பிடித்தவாராக,  சமூக தளையிலிருந்து விடுவிக்கின்றேன் என ஆசை காட்டி நரி வாயிலிருந்து புலி வாய்க்குள் தள்ளிய கதை தான் இது என போராட்ட வாழ்வியலை கொச்சைப்படுத்துபவர்களின் கண்டனங்களை எவ்வித படபடப்புமின்றி இலாவகமாக உடைக்கின்றன போரின் அவலம் சுமந்து போரே வாழ்வாக இயங்கும் ஒரு போராளியின் இவ் அனுபவ வரிகள்.

'எனக்காய் இரங்குமாறும் கண்ணீர் வடிக்குமாறும்
யாரையும் நான் கேட்கப்போவதில்லை--  (பக் 11)

'எனக்காய் விடியும் ஒரு பொழுதில்

பிணமாய் இருப்பினும் அது போதும்--  (பக் 11)

மலம் தின்று வாழ்வதை விட நாம் 

தீ தின்று சாவோம்
ஒரு உன்னதமான வாழ்வு எங்களுக்கில்லை எனில்
சாம்பல் மேடுகளே எமக்கு சொந்தமாக இருக்கட்டும்  (பக் 62)

போன்ற வரிகளில் ஒரு பெண்ணின் மனவுணர்வுகள், அவளுக்குள் தலைதூக்கியிருக்கும் சுயமரியாதைத் தனம், ஆழ வேரோடியிருக்கும் மன உறுதி, வாழ்க்கை தொடர்பான நேர்ப்பார்வை அனைத்தும் விரவிக் கிடக்கின்றன.
இக் கவிதை நூலுக்குள் இனங் காணப்படும் இன்னோர் சிறப்பம்சம் நிச்சயமற்ற வாழ்விடையேயும் தலைதூக்கி நிற்கும் நம்பிக்கை உணர்வு. கவிதைகளின் பாடுபொருள் எத்தகையதாய் இருப்பினும் -- துன்பம், விரக்தி, அவலம், கோபம், பழிக்குப்பழி -- கவிதைகளில் பெரும்பாலானவை நம்பிக்கையுணர்வு என்ற நூலிலேயே கோர்க்கப்பட்டிருக்கின்றன. கவிதைத் தொகுப்பின் தலைப்பே நம்பிக்கையுணர்வை ஊட்டுவது தான். துன்ப துயரங்களுக்குள் மனிதனை அமிழ்ந்து போகச் செய்யாது தூக்கி நிறுத்தி துணிவு தரும் நம்பிக்கையுண்ர்வை கணிசமானளவுக்கு பதிவு செய்கின்றன இக் கவிதைகள்

சாக்குரலின் மத்தியிலும்
எழுதப்படும் இச் சரிதத்தை
பூமி ஒரு நாள் படிக்கும்--  (பக் 10)

பட்டுப்போன இடத்திலிருந்து வேர் பாய்ச்சினேன்

புது விதையாய் முளை விடுவேன்
சிதைவுகளில் முகந்துளிர்ப்பேன்  (பக் 13)

சரித்துச் சரித்து நான் விழுத்தப்பட்ட போதெல்லாம்

எழவேண்டும் என்றெனக்குள் எழுந்த சிலிர்ப்பு
என் கனவுள் எரிந்து உருகியபோது
பீறிட்டுத் தெறித்த கொதிப்பு --- (பக் 103)

இவை தான் இன்று வரை என்னை வாழ வைத்தன என தனது நிமிர்வுக்கு காரணம் கூறும் அம்புலி

'குஞ்சென்றும் மூப்பென்றும் பேதமின்றி
ஊரிருந்தெழுந்து இவர்கள்
அணிவகுத்துச் செல்லும் திசை நோக்கிப் பாருங்கள்
உதயம் தெரிகிறது  (பக் 19)

என தனக்கு மட்டுமன்றி தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நம்பிக்கை உணர்வை ஊட்டுகிறார.; இது போன்றே புதிய தோழி என் பின்னால் வருகிறாள், காலம் பதிலுரைக்கும், இவளே எமுதுவாள் எம் அழகிய காலம் போன்ற கவிதைகள் நம்பிக்கை உணர்வை அதிகம் வெளிப்படுத்தும் கவிதைகளாக காணப்படுகின்றன. நிச்சயமற்ற வாழ்விடையே கூட தன்னையும் தன்னைந் சார்ந்தவர்களையும் நிமிர்த்தும் இப் பண்பு புதியது மனதில் கொள்ளப்பட வேண்டியதொன்று. இயற்கைக்கும் பெண்ணிற்குமிடையிலான ஒற்றுமைத் தன்மையை இங்கு பாருங்கள்.

போரிடை வாழ்விலும்
வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில் என்னை மறக்கவும்---
ஒரு குழந்தையை மென்மையாகத் தாலாட்டவும்

முடியும் என பிரகடனம் செய்பவர் அதன் அடுத்த அந்தத்துக்கு சென்று

என் சந்ததியைக் கசக்கும் கரங்களைக் கிழித்து
அதன் வெறி கலந்த குருதியை கருக்க --
என் சோதரிகளைக் குதறும் கொடிய நச்சுப் பற்களை உடைத்து
பூமிக்கு உரமாய் புதைக்க--- ஆவேசப்படுவதும்
உங்களுக்கான தலைவிதிகளை இது தான் என திணித்தவர்கள் மீது
நான் உமிழும் வெடியதிர்வில்
இத் தீவு ஒரு முறை குலுங்கும் என சூளுரைப்பதும் பெண்ணின் இருபக்க அந்தங்கள்.

இனிய தென்றலைப் பொழிபவளே சுழன்றடிக்கும் புயலாக மாறுவதும், பனிமலையாய் குளிர்பவளே எரிமலையாய் தகிப்பதும், அன்பைப் பொழிபவளே அரக்கியாய் மாறுவதும்--- பெண்ணிணதும் இயற்கையினதும் இவ் இருபுற அந்தங்களும் இட்டுக் கட்டுவன அல்ல அவை இயல்பானவை.
கள அனுபவத்தை பேசும் கவிதைகளில் ஷகால இடைவெளிக்குள்ஷ என்ற கவிதை முதற் கள அனுபவத்தின் பக்குவமின்மைக்கும் தழும்புகளை எண்ண விரல்கள் போதவில்லையே என்ற ஏக்கத்துக்கும் இடையிலான போராளியின் அனுபவ வளர்ச்சியை பதிவு செய்கிறது. வெற்றியைப் பற்றி மட்டுமே புழுகிப் பிரலாபிக்கும் இலக்கியங்களுக்கும் வெல்லப்பட்டவர்களின் வரலாற்றையே பதிவாக்கும் இலக்கியங்களுக்கும் மத்தியில் தனது இயலாமையையும் அதனால் குமுறும் மனத்தையும் எரிமலைக் குமுறல் என்ற கவிதை மூலம் வரலாறாக்க முனைந்திருப்பது பெண்ணிலை நோக்கிலமைந்த இலக்கியங்களில் இனங் காணும் ஒரு புதிய உயரிய பண்பு. ஒரு போராளியின் கள வாழ்வு எத்துணை இயல்பாய் உயிர்ப்புடன் இயங்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் ஷநலமேயுள்ளேன்ஷ என்ற கவிதை துப்பாக்கி தூக்கினால் வேட்டொலியும் பிண வாடையுமே அன்றாட சீவியம் என்ற பொதுக் கருத்து நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.
கள வாழ்வு மட்டுமன்றி களத்துக்கு வெளியேயான சமூக வாழ்வு பற்றியும் தனது தளத்தைப் பதிக்கும் அம்புலி  

'எங்களுரின் நடுவில் திடீரென ஒரு மயானம் 
பாய் விரித்துக் கிடக்கிறது

நரக வெளியில் பல மிருகக் கரங்களால்

குதறப்பட்ட பின்பு
சாவலியுடன் துடித்திறந்த என்னிதயம்---  (பக் 52)

சுடுகாட்டு நிசப்தத்தில் நிலவற்ற இரவுகளாய்

காவலிடப்பட்ட வேலிக்குள்
கண்கள் எல்லாம் எனை விழுங்குவதாய் ---  (பக் 55) 

போன்ற வரிகளில்
ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணின் அவலத்தை பதிவு செய்கிறார். அதேபோன்று மீட்கப்பட்ட மண்ணில் சமூகச் சூழலின் யதார்த்தத்தை புறக்கணிக்காத குரலாக பதியப்படுகின்றன நான் தடுக்க மாட்டேன், தாயின் குரல் என்ற கவிதைகள்

'பத்து மாதம் சுமந்த கருவறையின் இதயத்தை
காலால் மிதிக்கும் பலம் எனக்கில்லை --(பக் 74)
என்று பிள்ளையை போரிற்கு அனுப்ப விரும்பாத அதே சமயம் எனது சிறகுகள் உங்களை இறுதிவரை காப்பாற்றப் போவதில்லை என்ற யதார்த்;தம் மனதில் உறைக்க
ஷபோ என்று சொல்ல மாட்டேன்- ஆனால்
போவதைத் தடுக்க மாட்டேன்--- (பக் 75)

என தனது மன உளைச்சலுக்கு தீர்வு காணும் தாயை இனங் காட்டும் கவிஞர் இன்னும் ஒருபடி மேலே சென்று இரும்பு முகங்களின் அருவருத்த வருகைக்காய்

'புற்களையும் பூக்களையும் நசித்துச் சிதைக்கும்
நாளெல்லாம் அச்சமுற்று
சன்னங்கள் துப்பிய துப்பாக்கிக் குழல்களாய்
உளம் வெந்திருப்போம்;--  (பக் 61)

என பூமித் தாயின் குரலாக சமூக வாழ்வின் யதார்த்தத்தை படம் பிடித்திருக்கிறார்.
கடந்த இரு வருட காலமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கும் விட்டுக் கொடுப்பதற்கும் உதவக் கூடிய கருமையின் விளிம்பும் வெண்மையின் விளிம்பும் ஒன்றிக் கலக்கும் சாம்பல் நிறப் பகுதிக்குள் நின்று
அம்புலி சிந்தித்தவை தான் ஏ9 வீதி பற்றிய பதிவு, தாய் நிலம் உங்களை வரவேற்கிறது என்ற இரு கவிதைகளும்.

பெண்ணிலை நோக்கில் பார்க்கும் போது கருத்தியலிலும் சரி மொழிப் பயன்பாட்டிலும் சரி பெரும்பாலான பெண்ணிலைவாத இலக்கியங்கள் போன்று அம்புலியும் பழமையையும் விட்டு விடாமல் புதுமைக்குள்ளும் முற்று முழுதாக சிக்குப்பட விரும்பாத ஒரு இடைமாறல் கட்டத்திற்குரியவராகவே தென்படுகிறார்;. முழுக்க முழுக்க உணர்வுத் தளத்தில் நின்று எடுத்துக் கொண்ட புதிய பொருளை சொல்லும் முனைப்பில் மொழிப் பயன்பாட்டைக் கவனிக்கத் தவறுவதும், முழுக்க முழுக்க பெண் மொழியே பேசப்பட வேண்டும் என்ற முனைப்பில் பொருளை விட்டுவிடுவதும் இந்த இடை மாறல் கட்டத்தின் பண்புகள்; பெண்ணிய ஆதரவாளர்களாக உள்ள ஆண் படைப்பாளிகள் கூட பெண் பற்றிய மரபுரீதியான பார்வையையும் மொழிப் பயன்பாட்டையும் இன்னும் கைவிட விரும்பவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் படைப்பில் அது நுழைந்து விடுகிறது. அதுபோல் பெண்ணிலை நோக்கில் சிந்திக்கின்ற படைப்பாளிகளிடமும் மரபு ரீதியான பார்வைக்குள்ளிருந்து முற்று முழுதாக வெளியே வராத அல்லது தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்கிக் கொள்கின்ற தன்மையே பெரிதும் காணப்படுகின்றது. இந்த வகையில் பெண் என்ற தளத்தில் நின்று பெண்ணின் பார்வையில் பெண் மொழியில் பேசிய அம்புலியின் கவிதைகளில் ஆங்காங்கே காணப்படும் 'காத்திருப்புகளுடன் இன்னும் விடியாதிருக்கிறது ஒரு முதிர் கன்னியின் கூடு(28), மெலிந்த கரங்களுக்குள் வலிமை(106), அழகெல்லாம் மிளிர ஒரு காலம் ஒதுங்கிச் சிரிப்பாளென எண்ணியிருந்தேன்(ஈ நான் கசக்கப் பட்டிறந்தேன் என எவர்க்குச் சொல்ல(52), காவலிடப்படாத நாட்களில் நான் களவாடப்பட்டேன்ஷ போன்ற சொற்பதங்கள் பெண் ஒரு பொருள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சொத்து என்ற பழைய மரபின் எச்சங்களை உள்வாங்கியிருக்கின்றன.
அதே சமயம்;.  

'எனது முகம் கரும்புகை மண்டிய மூச்சுடன்
சந்திரத் தரையான கோரத்துடன்  
என  அழகு முகத்திற்கு ஒப்பிடப்படும் நிலவின் உண்மையுருவம் பதியப்படுவதும், அழகே பாடுபொருளாக இருக்கும் பெரும்பாலான இலக்கிய போக்கிலிருந்து மெல்ல விடுபட்டு
ஷசற்றே வளைந்து தழும்புகள் பட்டுக் கறுத்த கால்களுக்கும் 
எண்ணையின்றி வெயில் படிந்து வெட்டப்பட்ட கூந்தலுக்கும் சொந்தக்காரியை பாடு பொருளாக்கி அவளே எம் அழகிய காலத்தை எழுதுவாள் என நம்புவதும், சமாதானத்தின,; அன்புருவின் குறியீடாம் வெண்புறாவின் உருவம் கூட 
வெண்புறாவின் இறக்கை மறைப்பில்
சூரியன் இருண்டு கிடக்க
அதன் அலகுக் கூரும்
நகங்களின் கோரமும்
நரகத்தின் பயங்கரத்தைச் சுமந்த அதன் முகமும்
சாவிலும் கொடியதாய் --- (பக் 59) 

இவருக்குத் தெரிவதும் முழுக்க முழுக்க பெண் மொழியின் இருப்பை எடுத்துக் காட்டும் காத்திரமான வரிகளாகும். உணர்வுத் தளத்திலிருந்து முழுக்க முழுக்க அறிவுத் தளத்துக்கு மாறும் போது இடைமாறல் கட்டத்தின் இத்தகைய பண்புகள் விடுபட்டுப் போகும் வாய்ப்புண்டு.

சொல்வளம் என்ற அடிப்டையில் நோக்கின் அவலமும் அடக்குமுறையும் நிச்சயமற்ற தன்மையும் நிரம்பிய ஒரு மண்ணின் சூழலில் இருந்து கிளம்பும் அம்புலியின் சொற்பிரயோகங்களில் வேகமும் ஆவேசமும் சூளுரைப்பும் அதிகமாய் தெரிகின்றன. நேரே சென்று நெஞ்சிலே தைக்கின்றன. பொருட்செறிவும் உணர்ச்சி ஊட்டும் ஆற்றலும் இவற்றுக்கு அதிகம். உணர்ச்சிகளுக்கேற்ப கவிதை தென்றலாக, புயலாக, சூறாவளியாக, எரிமலைக் குமுறலாக வடிவெடுக்கிறது. வேதனை அல்லது வெப்பிசாரத்தில் ஆரம்பிக்கும் கவிதைகள் இறுதியில் இடியாக வந்து இறங்குகின்றன இம் மண்ணின் மைந்தர்களைப் போல. கோபம், தீவிரம், பழிவாங்கும் உணர்வு போன்றவற்றை வெளிப்படுத்தக் கூடிய அக்கினி, நெருப்பு, இடி, எரிமலை போன்ற சொல்லாட்சிகளும், போரின் அவலத்தையும் ஒடுக்குமுறையின் அவலத்தையும் வெளிப்படுத்தும் பேய்கள,; இடுகாடு, சாக்குரல், ஓலம் போன்ற சொல்லாட்சிகளும் கவிதைகள் முழுவதும் ஆட்சி செய்கின்றன. சன்னங்கள் துப்பிய துப்பாக்கிக் குழல்களாய் வெந்திருக்கும் உள்ளம், அக்கினிக் குஞ்சு, இறக்கைகளில் நெருப்பைச் சுமந்து, கருகுதற்கே முகையவிழ்ந்து போன்ற உவமை உருவகங்கள் போராட்ட வாழ்வியல் தமிழ் மொழிக்கு அளித்த புதிய சொற்பதங்கள். இவற்றை ஆற்றாமையின் பாற்பட்டு வெளிப்படும் உணர்ச்சிக் கோஷங்களாக நாம் பார்ப்பது சரியல்ல. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலாய் போராட்ட வாழ்வுடன் தன்னைப் பிணைத்து, இடப்பெயர்வின் அவலம் சுமந்து, இழப்பின் கனத்தை அனுபவித்து, மனைவி, தாய் என்ற பாத்திரங்களை வகித்துக் கொண்டே போராட்ட வாழ்வின் ஆழ அகலங்களை இன்றும் தேடும் ஒரு பெண் போராளியின் உணர்வுத் தளத்திலிருந்து எக்கி எழும்பி அறிவுத் தளத்தினூடாக வடிகட்டப்பட்டு விழும் இவ் உண்மை வரிகள் நிதானத்துடனும் கட்டுக்கோப்புடனும்  போரின் அவலம் சுமக்கும் வாழ்வியல் இப்படி இல்லாது பின் எப்படி இருப்பதாம் என்ற வினவலுடனும் தான் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளன. அவளே எழுதுவாள் எம் அழகிய காலம், மீண்டும் துளிர்க்கும் வசந்தம் போன்ற கவிதைகளில் உறுதி, அசாதாரண தன்னம்பிக்கை, துணிவு என்பன நிரம்பி வழிகின்றன. யார் புரிந்தார் அவர் வரட்டும்,காலம் பதிலுரைக்கும், எம்மை அழிக்க எவரேனும் நினைக்கும் வரை போன்ற கவிதைகளில் பழிக்குப்பழி, சூளுரைப்பு என்பன பொதிந்து நிற்கின்றன. என் தீ எங்கும் பற்றியெழ, மனந் திறந்த மலைகள் போன்றவற்றில் ஆவேசம் கொப்பளித்து நிற்கிறது.

பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் பலவீனம் வெற்றுச் சொற்கள். மாதிரிக்கு இது

'சதா சிந்திக்கும் விழிகளுக்கும் நிதானித்து வெளிவரும் சொற்களுக்கும் சற்றே வளைந்து தழும்புகள் பட்டு கறுத்த கால்களுக்கும் வெயில் படிந்து சிவந்கு வெட்டப் பட்ட கூந்தலுக்கும் அவளை சொந்தக்காரியாக்கியதுஷ என்ற வரிகளிலேயே அவள் போராளி என்ற செய்தியை மிக அழகாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தத் தெரிந்த கவிஞருக்கு மேலும் அதை விவரணமாக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதோ? பெரும்பாலான கவிதைகளில் இனங்காணப்படும் கதை சொல்லும் பாங்குதான்  இவ் வெற்றுச் சொற்களின் பாவனைக்கு காரணமாக இருக்கக் கூடும்.
பாடு பொருளில் இனங்காணும் சிறு பலவீனம் இது. பெண் பாலிலேயே இழிவுநிலைப்பட்டிருக்கும் ஒரேயொரு பெண்பால் மனிதப்பிறவி மட்டுமே. ஏனைய உயிரினங்களில் அவை தான் முடிசூடா ராணிகள். அப்படியிருக்க ஈழத்தில் பிறந்ததற்காய் பெருமைப்படக் கூடியது மனிதப் பெண்பால் மட்டுமேயன்றி உயிர்வாழ்வனவற்றின் பெண்பாற்கள் எல்லாமும் அல்ல. அதேபோன்று போருக்குள்ளும் போர் அனுபவங்களுக்குள்ளும் நனைந்து தோய்ந்து எழும்பி அதையே கருத்தியலாக்கி பாடும் வல்லமையை பெற்ற எத்தனையோ போராளிகளைத் தமக்குள்ளே வைத்துக் கொண்டும் தங்களைப் பாட சயங்கொண்டார்களைக் கூவி அழைப்பதானது தங்கள் திறனில் தமக்கே நம்பிக்கையின்மையைக் காட்டுவதன் வெளிப்பாடாக இருக்கக்கூடுமோ?
பெண்விடுதலை தேச விடுதலை என்ற இரு பெரும் கிளைகளைக் கொண்ட ஈழத்துப் போராட்ட வாழ்வியலில் பெண் பற்றிய பார்வை கணிசமானளவு மாற்றமடைந்து கொண்டு வருவதை பல கவிதைகள் வெளிக்காட்டியிருக்கின்றன. கடந்த நூற்றாண்டு இப் பார்வையை கணிசமானளவுக்கு உச்சத்துக்கு கொண்டு போய்விட்டிருக்கிறது. பாரதியால் தொடக்கி வைக்கப்பட்ட பெண்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைப்போக்குக்கு முழு உருவம் கொடுக்கும் முயற்சியில் போராட்ட வாழ்வியல் அனுபவங்களினூடே பிறந்த ஈழத்து கவிதை இலக்கியங்களுக்கு கணிசமான பண்புண்டு. அந்த வகையில் உயிரிலும் உடலிலும் கணிசமானளவுக்கு கவனம் செலுத்திய அம்புலி கற்பனைகள் இன்றி பிறக்கின்ற கவிதைகளை சொற்களினால் சுவரிடுதல் முடியாது போன்றே யதார்த்தத்தின் வரிகளுக்கு அலங்கரித்து அழகு பார்ப்பதும் அர்த்தமற்றது என கருதியதால் தானோ என்னவோ தன்னைப் போன்றே புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சொல்லடுக்குகளோ அலங்காரமோ இன்றி, புதையலைத் தேடுவதில் சாமர்த்தியமும் சாகசங்களும் நிறைந்த  அலிபாபாக்களாக வாசகர்களை அலைக்கழிக்காது தனது பாடு பொருளை நிர்வாணமாகவே உலவ விட்டு கருத்தாழத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தளம் பதித்திருக்கிறார்.

உயிரூறிக் கிடக்கும் வரிகளுக்குள்ளே அவளின் முகம் தெரிகிறது
களமாடும் புலி மகளின் கைகளிலே
துப்பாக்கியைப் போல் பேனாவும்
போராடுகிறது.
செல்வழித் தெளிவே சிறந்தது
மனமே அனல் மூட்டும்
இரண்டுமே உதயலட்சுமியிடம் இருக்கிறது.
பிறகென்ன?
போர்மகள் புகுந்து விளையாடுகிறாள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கருத்தில் மிகையுணர்ச்சி இல்லை என்று தான் தெரிகிறது.

No comments: