Tuesday, February 04, 2014

நிறையவே இருக்கிறது இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள!



சிவப்பு வெள்ளை நிறங்களில் சரிகைச் சோடனை, நுழைவாயிலில் நிறைகுடம் குத்துவிளக்கு, வீட்டின் முன்னே பெரியதொரு பந்தல், பக்திப்பாடல்களும் துள்ளல் பாடல்களும் கலந்து ஒலிக்கும் ஒலிபெருக்கி அல்லது பாட்டுப் பெட்டி,  சுபமுகூர்த்தம், மங்கள இசை, தீப தூப ஆராதனை, வயிறு நிறைய அறுசுவை உண்டி......

'அன்புடையீர்
நிகழும் கர வருடம் ஆனி மாதம் 30ம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிமுதல் வரும் சுபவேளையில் எமது இல்லத்தில் நடைபெறவிருக்கும் ......... வைபவத்தில் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.' என்று கண்கவர் வண்ணங்களில் அழைப்பிதழ் கூட.......

இத்தனை ஆரவாரமும் திருமண வீட்டுக்கோ அல்லது புதுமனைப் புகுவிழாவிற்கோ, அதுவுமன்றி பிறந்தநாள் மற்றும் பூப்புனித நீராட்டு விழாவிற்கோ அல்ல. பொருளாதார மேம்பாட்டை இலக்கு வைத்து பணத்திற்கு கொண்டாடப்படும் ஒரு விழா இது.

தென்மராட்சிப் பிரதேசத்தில் வரணி மற்றும் குடத்தனைப் பகுதிகள், வடமராட்சி பிரதேசத்தின் இமையாணன், ஆதியாமலை, இலைகடி, நாவலடி, சமரபாகு, பொலிகண்டி, கொற்றாவத்தை, வல்வெட்டி, கம்பர்மலை, அல்வாய், கொம்பந்தறை, கரணவாய் தெற்கில் அண்ணாசிலையடி, செல்வாபுரம், மேற்கில் வல்லியாவத்தை, கலட்டி, அறிவாலயம், கேணியடி வடக்கில் நவிண்டில் ஆகிய இடங்களில் செறிவாகவும் கொழும்புத்துறை போன்ற கரையோரப்பகுதிகளில் பரவலாகவும் வாழுகின்ற   தலித்; சமூகத்தின் ஒரு பகுதியினரால் கொண்டாடப்படும் பணவரவு நிகழ்வில் தான் இத்தனை அமர்க்களமும்.

வளவு துப்பரவாக்குதல் ஒரு புறம், வீடு அலங்கரித்தல் ஒரு புறம், தமக்கு விரும்பிய குடும்பத்தினருக்கு  'நாள் நோட்டீஸ்' எனப்படும் முதலாவது அழைப்பிதழ் கொடுத்தல் இன்னொரு புறம் என ஒரு வாரத்துக்கு முன்னரேயே பணச்சடங்கு கொண்டாடப்படும் வீடு களைகட்டத் தொடங்கிவிடும். வைபவத்திற்கென முதல்நாளே வீட்டின் முற்றத்தில் ஒரு பிரதான பந்தல், சமையல் செய்வதற்கு ஒரு சிறு பந்தல்.  வீட்டு நுழைவாயிலில் ஒரு நிறைகுடம் பிரதான பந்தலின் முன்புறம் இன்னொரு நிறைகுடம். பணவரவு நடக்கும் வீட்டை அடையாளப்படுத்தும் பொருட்டு வீட்டுக்கு முன்னால் வீதிக்குக் குறுக்கே பலவண்ண  நிறங்களில் 'பட்டத்தாள்' எனப்படும்; சரிகைச் சோடனை அல்லது செயற்கைப் பூமாலை.  ஒலிபெருக்கி மூலமோ அல்லது வேறு வடிவிலோ முதல்நாள் மாலை பக்திப்பாடல்களுடன்  தொடங்கும் நிகழ்வு நடுஇரவு வரை தென்னிந்திய சினிமாவின் துள்ளல் பாட்டுகளால் நிரம்பி வழியும். அடுத்தநாள் காலை மீண்டும் பக்திப்பாடல்களுடன் தொடங்கி மதிய நேரம் வரை புதிய துள்ளிசைப் பாடல்களுடன் தொடரும்.
பெரும்பாலும் நெருங்கிய உறவினருக்கே முதழ் அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்வு உண்டு. ஊருக்குள் அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்விற்கு ஆண் பெண் இருவரும் இணைந்து செல்லும் வழக்கம் உண்டு. அயலூர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது நிகழ்வைக் கொண்டாடுபவர் சார்பில் ஒருவர்  அழைப்பிதழ் கொடுக்கப்படும் ஊர்சார்ந்து ஒருவர் என அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். முதல்நாள் மாலையில் சமையல் பாத்திரங்கள் உறவினரிடமிருந்து சேகரிக்கப்படுவதுடன் காலையில் ஊர்ப் பெண்கள் சத்தகத்துடன் காற்கறி நறுக்குவதற்கு வருவர். ஆண்கள் தேங்காய் துருவுதல், கிடாரங்களில் சோறு சமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவர்.


அடிப்படையில் சொந்த நிலத்தில் அல்லது குத்தகை நிலத்தில் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகவும், கூலித்தொழில், தச்சுவேலை, வியாபாரம், கட்டிட வேலை, போன்றவற்றை கணிசமாகவும், அரச உத்தியோகங்களை மிகச் சிறு அளவாகவும் கொண்ட இம்மக்களின் கலாசாரத்தில் பணச்சடங்கு என்ற அம்சம் மிக முக்கியம் பெற்றதொன்றாகக் கருதப்படுகிறது. பணச்சடங்கு, பணவரவு மற்றும் விருந்துபசார அழைப்பு  போன்ற சொற்கள் பரவலாகத் தமிழில் வழங்கப்பட்டாலும், யவ hழஅந என்ற ஆங்கிலப்பெயர் மருவித் தமிழில் 'அற்றொம்' என்ற பெயரே மிகப் பிரபலம் பெற்றதொன்றாகக் கருதப்படுகிறது. இச்சடங்கின் பொருளாதார முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில்  கடந்த மாதம் கரணவாய் தெற்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு 'சமூக பொருளாதார மேம்பாட்டு வைபவ அழைப்பு' எனப் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  பணவரவு நிகழ்விற்கான அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்வில் சொந்த பந்தங்களுக்கு முன்கூட்டியே அறிவித்து அவர்கள் வந்ததும் சிறு சிறு குழுக்களாக அவர்களைப் பிரித்து அழைப்பிதழ் விநியோகிக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் ஒரு வைபவமாகக் கொண்டாடும் அளவிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் வைபவத்தின் முக்கியத்துவம் தற்போது குறைந்திருக்கிறது.

பணவரவு என்பது குடும்பம் ஒன்றின் பொருளாதார மேம்பாட்டிற்கான பணக் கொடுக்கல் வாங்கல் முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். ஆகக் குறைந்தது ஐந்து ரூபாவில் தொடங்கி நூறு ரூபா வரை ஆண்களுக்கு மட்டுமே இந்நிகழ்வு ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டிருக்கிறது என்றும் பெண்கள் இதில் பங்களிக்கவில்லை என்றும் 58 வயதான பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்

நாட்காரியம்

சுப முகூர்த்தத்தில் மங்கள இசையுடன் தொடங்கும்  கைவிசேட நிகழ்வானது பந்தலின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சாமிப்படங்களுக்கு தீபம் காட்டுவதில் தொடங்கி பணவரவுப் பதிவுப் புத்தகத்திற்கு திருநீறு, சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு முதலாவது அழைப்பிதழ் பெற்றவரிடமிருந்து முதல் கைவிசேடம் வாங்கப்பட நாட்தேங்காய் உடைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கைவிசேடமாகத் தொடர்ந்து, பெற்ற பணம் ஒவ்வொன்றும் வரவுப் புத்தகத்தில் பதியப்பட்டு பின்னர் பொதுவாக பணவரவு நிகழ்வாக மாறி இரவு பத்து மணி வரையில் நிறைவுபெறும். ஆணுக்கு இரு வரவுப் புத்தகம் பெண்ணுக்கு இரண்டு என தொகை தனித்தனியாக வரவுப் பதிவேட்டில் பதியப்படும் ஒவ்வொரு பதிவேடும் ஊர் வாரியாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த ஊருக்குரிய பணம் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பதியப்படும். பணவரவு நிகழ்வு முடிவடைந்த அரை மணி நேரத்தில் பணவரவில் பெறப்பட்ட பணம் அனைத்தும் எண்ணப்பட்டு மொத்தத் தொகை அறிவிக்கப்படும்.

பெட்டி திறப்பு நிகழ்வு 
பணவரவு வைபவத்தின் போது சேரும் பணத்தை புதிய பெட்டியொன்றில் வைத்துப் பூட்டியபின்னர் அது சாமியறையில் சாமிப் படத்திற்கு முன்னால் வைக்கப்படுகிறது. பின்னர் நல்லநாள் பார்த்து சுப வேளையில் இது திறக்கப்பட்ட பின்னரேயே அது பயன்பாட்டுக்கு எடுக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

பணச்சடங்கைக் கொண்டாடும் நபரின் சமூக அந்தஸ்தையும் அவர் மற்றையோருக்கு வழங்கத் தயாராக இருக்கும் பணத்தின் அளவையும் பொறுத்து அவரது பணத்தின் வரவு ஆகக்குறைந்தது  7 இலட்சத்திலிருந்து கூடிக்குறையும். எடுத்துக்காட்டாக வடமராட்சிப் பிரதேசத்தில் இதன் தொகை 8 இலட்சத்திலிருந்து 8 மில்லியன் வரை இருக்கும். பெண் தலைமைக் குடும்பங்களில் இத்தொகையின் அளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமை காரணமாக சீட்டுக் கட்டுபவர்கள் அதிக கழிவில் சீட்டை எடுப்பதும், வங்கியில் கடனெடுத்துப் பணச்சடங்குக்கு போடுபவர்கள் நகை அடைவு வைத்தல், நண்பர்களிடம் வட்டிக்குப் பணமெடுத்தல் என சுமைக்கு மேல் சுமையைக் கூட்டி வாழ்க்கை முழுவதும் கடனில் வாழ்பவர்களும் உண்டு. அக்கம் பக்கம் வீடுகளிலுள்ள குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒலிபெருக்கியின் அலறல், சமூக அந்தஸ்தைப் பேணும் தன்மையால் வட்டிக்குப் பணமெடுத்து பணச்சடங்குக்கு பங்களிப்புச் செய்யத் தூண்டும் தன்மை என ஒருசில குறைபாடுகள் இருப்பினும் பணச்சடங்கு பொருளாதார ரீதியாக இம்மக்களை உயர்த்தியிருக்கும் தன்மையே எங்கும் இனங்காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக இடம் பெயர் வாழ்வின் மூலம் அனைத்தையும் தொலைத்துவிட்டு வன்னியிலிருந்து திரும்பிய எத்தனையோ குடும்பங்களை பணச்சடங்கு பொருளாதார ரீதியாக மீண்டும் நிமிர்த்தியிருக்கின்றது. திருமணங்கள், காணி வாங்குதல், வீடுகட்டுதல், திருத்துதல், புது வியாபாரம் தொடங்குதல், ஏற்கனவே வாங்கிய கடன்களைக் கட்டுதல் வாகனம் எடுத்தல், இவை அனைத்திலும் நம்பிக்கை வைக்காது வங்கியில் பணத்தைப் போட்டு வட்டியில் சீவிப்பவர்கள் என பொருளாதார ரீதியான நிமிர்வு பலதரப்பட்டதாக உள்ளது.

களஆய்வு 1

இமையாணன் கலைமகள் வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தவரான சி.நவரத்தினம் என்பவரது கருத்து.
இருஆண்கள், இருபெண்களைப் பிள்ளைகளாகக் கொண்ட இவரது குடும்பத்தில் 26 வருட இடைவெளியில் மூன்று தடவைகள்  பணவரவு நிகழ்வு நடைபெற்றிருப்பதுடன் 1986இல் முதல் தடைவை பணவரவைக்கொண்டபடியபோது பெற்ற தொகை 60,000 ரூபாவும் . 2002இல் இரண்டாவது தடைவை 8 லட்சம் ரூபாவும், 2008இல் மூன்றாவது தடைவ 14 லட்சம் ரூபாவும் இவருக்கு கிடைத்திருக்கிறது. . முதல் தடைவ பெற்ற தொகையை நிலம் வாங்குவமற்கும் இறுதி இரு தடவைகளும் பெற்ற தொகையை இரு பெண்களுக்கு சீதனம் கொடுப்பதிலும் செலவழித்திருப்பதாகத் தெரிவித்தார். பொதுவாக பணவரவு நிகழ்விற்கான கால இடைவெளி 3-6 வருடங்களாக இருக்கும் போது கிட்டத்தட்ட 16 வருடங்கள் நாட்டின் சுமூகமற்ற நிலைமை காரணமாக இந்நிகழ்வைக் கொண்டாடவில்லை எனத் இவர் தெரிவித்திருப்பதை நோக்கும் போது சமூகத்தின் சூழல் பணவரவுக் கொண்டாட்டத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது.

பொதுவாக வகுப்பினால் ஏற்றத்தாழ்வு பெற்ற சமூகங்கள் கல்வியறிவு, நாகரீக வளர்ச்சி மற்றும் பொருளாதார அந்தஸ்து காரணமாக உயர்வகுப்பினர் எனச் சொல்லப்படுபவர்களுக்கு இணையாக தம்மைக் காட்டிக் கொள்ளும் பொருட்டு தம்மை அடையாளப்படுத்தும் சடங்குகள் சம்பிரதாயங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுவதே நடைமுறையாக இருக்கும் தமிழ்ச்சமூகத்தில் பணச்சடங்கு என்ற இந்த அம்சம் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தனது வேர்களை ஆழஅகலப்படுத்தி வருவது குறித்து நோக்கத்தக்கது. தமது வகுப்பினரை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடாக  பணச்சடங்கு கருதப்படுகின்றது என்றளவில் பாமர மட்டத்தில் மட்டுமன்றி படித்த மட்டத்திலும் இது தனது கம்பீரத்தை இன்னும் இழந்துவிடவில்லை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு செய்தியாகவே கருதப்படுகின்றது. ஆசிரியத் தொழிலில் நுழைந்திருக்கும் அநேக குடும்பங்கள் இன்றும் பணச்சடங்கைக் கொண்டாடுகின்றன என்பதும் இவர்களின் இந்த நிகழ்வின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இவர்களைச் சூழ உள்ள ஏனைய வகுப்பினரையும் இச்சடங்கு கவர்ந்திருக்கின்றது என்பதும் சுவையான ஒரு செய்தியே.

களஆய்வு 2

உடுப்பிட்டி சந்தை வீதியிலுள்ள நிறைந்தன் நகைமாட உரிமையாளர் இ.விக்னேஸ்வரன் என்ற 55 வயது நபர்.

இவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று பிள்ளைகள் திருமணம் முடித்துவிட்டனர். 2004ம் ஆண்டிலிருந்து தனது பிரதேசத்தைச் சூழவுள்ள பகுதிகளில் இதுவரை 6,25,000 ரூபா பணவரவுக்கு கொடுத்திருக்கிறார். அடுத்தவருடம் முதன்முதலாக பணவரவு நிகழ்வைக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார். இவரைப் பார்த்து இவரது வகுப்பைச் சேர்ந்த மற்றையோரும் இந்நிகழ்வைத் தொடரும் விருப்பில் இருப்பது களஆய்வில் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

  கல்வியறிவு அதிகரிக்கும் வேகத்துக்கமைய பாரம்பரியச் சடங்குகளில் ஏற்படுகின்ற நாகரீக மாற்றங்களில் ஒன்றாக வீதிகளில் அலறும் ஒலிபெருக்கிகள் வீட்டுக்குள் அதிரும் பொக்ஸ்ஆகவும், இருநேர சாப்பாடாக இருந்த விருந்தினர் உபசாரம் ஒருவேளையாகவும், பணவரவு என்ற பதம் சமூக பொருளாதார மேம்பாட்டு வைபவ நிகழ்வாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது.


களஆய்வு 3

இமையாணன் மலையன் தோட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழில் புரியும் உதயகுமார் சந்திரா என்ற 44 வயதுக் குடும்பத்தலைiவி.
கடந்த காலங்களில் பணவரவுக்கு அவர் கொடுத்த பணத்தின் மொத்தத் தொகை 75,000 ரூபாவாக இருந்தளவில் கடந்த வருடம் பணவரவு நிகழ்வைக் கொண்டாடும் போது இவருக்கு கிடைத்த மொத்தத் தொகை 2,50,000 ரூபா. ஏனையோருடன் ஒப்பிடுமிடத்து பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் பணவரவுக்கு விழும் தொகையானது மிகவும் குறைவுதான் என்பது இனங்காணப்பட்டபோதும் கூட ஒரு நபர் கொடுக்கும் அளவிற்கு ஏற்பவே பெறும் அளவின் வீகிதம் இருக்கும் என்பதற்கமைய இவருக்கு விழுந்த தொகை குறைவாக இருப்பினும் இவர் கொடுத்த தொகையின் வீதத்துக்கேற்ப இவர் பெற்ற தொகை அமைந்திருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.


ஒவ்வொரு வருடமும் ஆறு மாதங்கள் அதாவது பங்குனியிலிருந்து ஆவணி வரை தொடர்ச்சியாக பெரும்பாலும் தினந்தோறும் மூன்று நான்கு குடும்பத்தினரால் இது கொண்டாடப்படுகிறது. மழைகாலங்களில் உழைப்பின்மை, பாடசாலைப் பரீட்சைகள் போன்ற காரணங்களை முன்னிட்டு இது தவிர்க்கப்படுகிறது. பணச்சடங்கைக் கொண்டாடுபவர்களின் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக  ஆரம்ப காலங்களில் நாளாந்தம் மதிய உணவும் இரவுப் பலகாரம் என்றளவில் மூன்று தொடக்கம் ஐந்து நாள் கொண்டாட்டமாக இருந்த இவ்வைபவம் தற்போது ஒரு நாளாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொடுக்கல்வாங்கல் முறைகள்
பொதுவாக யு என்பவரது பணச்சடங்கில் டீ என்பவரால் வழங்கப்படும் பணத்தின் இரட்டிப்பு மடங்கு பணம் டீ என்பவர் பணச்சடங்கைக் கொண்டாடும் சமயம் வழங்கப்படும். இத்தொகை 100 ரூபாவிலிருந்து பல ஆயிரங்கள் வரை வேறுபடும். பொதுவாக ஒவ்வொரு குடும்பமும் சாராசரி ஐந்து வருடங்களுக்கொருமுறை இச்சடங்கைக் கொண்டாடுகின்றனர். எனினும் பலகாரணங்களால் பணச்சடங்கு கொண்டாடுவதில் கால தாமதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஒழுங்குமுறையில் கொண்டாடும் நபருக்கு அதிக இலாபமும் ஒழுங்குமுறையில் கொண்டாடத் தவறும் நபருக்கு நட்டமும் ஏற்பட வாய்ப்புண்டு. நீண்ட காலம் பணச்சடங்கைக் கொண்டாடாத நபரின் பணம் ஏனைய இடங்களில் முதலீடாக மாறி வழங்கப்பட்டவருக்கு இலாபமாக மாற வழங்கியவர் பகுதிக்கு அது நட்டமாக மாறுகிறது. அதுமட்டுமன்றி நீண்டகாலம் கொண்டாடாது இருக்கும் சமயங்களில் பணம் வழங்கியவர் இறத்தல், வெளிநாட்டு பயணங்கள், இடப்பெயர்வு போன்ற காரணங்களால் கொடுத்தபணம் மீளவும் கைக்கு வந்து சேராமல் போவதுமுண்டு.  ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவனுக்கு மட்டுமோ அல்லது குடும்பத்தலைவிக்கும் சேர்த்தோ அதுவுமன்றி வளர்ந்த ஆண்பிள்ளைகளின் பெயரிலுமோ இச்சடங்கு நடத்தப்படுகிறது. இச்சமயம் ஆண்களுக்கு வழங்கப்படும் தொகை ஆகக் குறைந்தது 500 ரூபாவிலிருந்து மேல் நோக்கி ஆயிரங்களுக்கு அதிகரிக்கும் அதேசமயம் பெண் பெயரில் இடப்படும் தொகையானது 100 ரூபாவிலிருந்து தொடங்கி சில ஆயிரங்களுள் மட்டுப்படுத்தப்படுகின்றது. பெண்தலைமைக் குடும்பங்களின் பணச்சடங்குக் கொண்டாட்டத்தின்போது அவர்களுக்கு வழங்கப்படும் பணமோ, அல்லது பணச்சடங்கைக் கொண்டாடிய நபரின் திடீர் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட வறுமையோ கொடுத்த பணத்தை மீள வாங்கிக்கொள்ளாது அவர்களுக்கே அன்பளிப்பாக விடும் தன்மை பாராட்டப்படவேண்டியதொன்று.

பெண்ணின் உழைப்பில் நம்பிக்கையீனம், உழைப்புச் சக்தியில் பொதுவாகவே நடைமுறையில் உள்ள பால்நிலை சார்ந்த பாரபட்சம், பணவரவில் பால்நிலை சார்ந்து நடைமுறையில் இருக்கும் வேறுபட்ட பண வீதங்கள் போன்ற பல காரணங்களால் பெண்தலைமைக் குடும்பங்களில் பணவரவின் அளவு மிகக் குறைவாக இருப்பதே நடைமுறையாக உள்ளது.

No comments: