முப்பரிமாண நூலகம்
சுயகற்றலுக்கான புதிய ஊடகம்
சுயகற்றலுக்கான புதிய ஊடகம்
Three Dimensional Library: an emerging Medium for Self Learning
சுருக்கம்
(தற்போது நிலைகொண்டிருக்கும் நூலக முறைமைகளினூடாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடாக கருக்கொண்ட புதிய கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும். 'சிந்தனைப் பதிவேடுகள் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் யாழ் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடமாடும் நூலகக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தியதன் வாயிலாக சான்றாதாரக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் தெளிவாகக் கண்டுணர்ந்ததன் விளைவாக முப்பரிமாண நூலகம் என்ற புதிய கருத்துநிலையினூடாக வாசிப்பை மேம்படுத்தும் புதிய உத்தி இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இக்கட்டுரையானது இச்செயற்திட்டத்தினை பாடசாலை நூலகங்கள் ஒவ்வொன்றிலும் அறிமுகப்படுத்தும் நோக்கில் அதன் ஒவ்வொரு அம்சங்களையும் விபரிக்கின்றது.)
அறிமுகம்
கல்வி என்பது கற்றல் கற்பித்தல் ஆகிய இருபெரும் மூலக்கூறுகளைக் கொண்டது. கற்றல் மாணவனுடனும் கற்பித்தல் ஆசிரியருடனும் தொடர்புடையது. மாணவரோ ஆசிரியரோ தாமாக விரும்பாதவரை இரண்டு செயற்பாடுகளுமே முழுமை பெறாது. ஆசிரியரின் சொந்த அபிப்பிராயங்களுக்கு முதன்மை கொடுக்கும் மரபுரீதியான கற்பித்தலிலிருந்து சான்றாதாரங்களுக்கு முதன்மை கொடுக்கும் சான்றாதாரக்கல்வி என்ற நவீன மாதிரி இன்றைய கற்பித்தல் உலகில் அதிகம் செலுத்துகின்றது. அது போன்று கற்றலை முறைசார் கற்றல் முறைசாராக் கற்றல், சுய கற்றல் என வகைப்படுத்துவர். அறிவு மூலவளமாகி, அனைத்து மூல வளங்களையும் இயக்கும் உந்துசக்தியாகத் தொழிற்படும் இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில், மனித சமூகமானது, தனது தேடல்களைப் பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சமூக முன்னேற்றம் என்பது அவ்வச்சூழலில் அமைந்துள்ள தேடலுக்கான வாய்ப்புகளையும் வசதிகளையும்; பயன்படுத்தும் நிலையிலேயே சாத்தியப்படும். இத்தகைய பயன்பாடு; என்பது சுயசிந்தனையின்பாற்பட்டது. சுய சிந்தனைக்குக் களமாக இருப்பது பரந்துபட்ட வாசிப்பே ஆகும்;.
வாசிப்பால் தன்னை நீண்ட காலம் வளப்படுத்தி கல்வியில் உயர்ந்த சமூகம் என்ற பெருமையை உலகளாவியரீதியில் பெற்ற நமது தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வாசிப்பு நிலை கேள்விக்குறியாகி நிற்கிறது. குறைந்தது கடந்த இரு தசாப்தங்களாவது மனித மனங்கள் ஒவ்வொன்றிலும் தேடலுக்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்ட பரிதாபகர நிலையானது கல்விச் சமூகத்தின் பார்வைக்கு எட்டியதோ இல்லையோ நூலக சமூகத்தின் கண்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும் காலப்பகுதி இது. அதிலும் தகவல் தொழினுட்பத்தின் நல்ல அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து கருத்துக்கு இனிமை தரும் அம்சங்களைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கைவிட்டு கண்ணுக்கு இனிமை தரும் கவர்ச்சிகளை மட்டும் தேடியலையும் நிலையும், வலைத் தளம் இருக்க வாசிப்பு ஏன் என்ற வாதங்களும், வாசிப்புப் பழக்கத்தை இல்லாமலாக்குவதில் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு கணிசமான பங்குண்டு என்ற நொண்டிச் சாக்குகளும், தகவல் தேடலுக்கான அனைத்து தேவைகளையும் இல்லாமலாக்குவதில் ஒருபடி கூடவே ஒத்துழைக்கும் இன்றைய நிலையில் தமிழ்ச் சமூகத்தை வாசிப்பை நோக்கி மீண்டும் திசைதிருப்பும் பாரிய கடமையைக் கொண்டனவாகவே நூலகங்களின் பணி உணரப்படுகின்றது.
பாடசாலைகள் தோறும் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம் என்ற புதிய பெயருடன் பாடசாலை நூலகங்களை உருவாக்கும் பணி, இருக்கும் நூலகங்களை புது மெருகூட்டும் முயற்சிகள், கூடுதலானவரை பாடசாலை நூலகத்துக்கு பட்டதாரி ஆசிரியர் ஒருவரை ஆசிரிய நூலகர் என்ற பெயருடன் நியமிக்கும் முயற்சிகள், ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தி; அந்த நாட்களில் பொதுசன நூலகம் பாடசாலை நூலகம் என்ற பேதமின்றி கருத்தரங்குகள் கண்காட்சிகள் போட்டிப்பரீட்சைகள் என்று நடத்துதல் ஆசிரிய நூலகர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்குபடுத்துதல் என வாசிப்பை மேம்படுத்துவதற்கான பலவித முயற்சிகளில் இறங்கியிருக்கிறது இலங்கைச் சமூகம். 5நு மாதிரி போன்று வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதிய பல அணுகுமுறைகள், வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாசிப்பு மூலை, வாசிப்புப் பெட்டி போன்ற புதிய பல செயற்திட்டங்கள் வாசிப்பின் அவசியத்தை மேலும் வெளிப்படுத்தி பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போன்று 'யாம் இருக்கப் பயமேன்' என்று அபயக்கரம் கொடுத்து தனியார் கல்வி நிலையங்கள் சமைத்த உணவை அதாவது தயார்நிலைத் தகவலை மூளைக்குள் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் வாசிப்பின் தரம் படுமோசமாகப் பின்தள்ளப்படுவதில் ஆச்சரியத்துக்கு இடமில்லை. இதன் ஒருபடியாக வாசிப்பைத் தூண்டுவதற்கான நீண்டகாலத் தேடலில் பிறந்த புதிய உத்தியே இந்த முப்பரிமாண நூலகம்.
குறிப்பிட்ட பாடத்துறை சார்ந்த உருக்களை கற்றலுக்கான அடிப்படையாகவும் உருக்கள் சார்ந்து வெளியிடப்படும் ஆய்வு வெளியீடுகளை மேலதிக வாசிப்பிற்கான அடிப்படையாகவும் பாடத்துறை சார்ந்து சுருக்கம், விளக்கம், தெளிவு என்பவற்றை மாணவனுக்கு வழங்கக் கூடிய தகவல்களை சுயகற்றலுக்கான அடிப்படையாகவும் கொண்ட புதிய மாதிரியே முப்பரிமாண நூலகம் என்ற கருத்துநிலையாகும்.
வரைவிலக்கணம்
சுயகற்றல் செயற்பாட்டை இலக்கு வைத்து தகவலைக்; கண்டறியும் பொருட்டு குறித்த பாடத் துறையில் பொருள் தரும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட உருக்கள், ஆவணங்கள், தகவல்கள் என்ற மூன்று முக்கிய மூலகங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட புதிய ஒரு கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும்.
தூரநோக்குகள்
1. பிரதேச வரலாற்றினை ஆவணப்படுத்தும் உருநிலை வளங்களின் சேர்க்கை ஒன்றினை கட்டியெழுப்புதலுக்கான அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குதல்.
2. நூலகங்களை அதிகார பூர்வமான பண்பாட்டுக் காப்பகமாகத் தொழிற்பட வைத்தல்.
3. மாணவர்களிடையே தகவல் வளப்பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வையும் தகவல் அறிவு (ஐடு) விருத்தி நிலையையும் ஏற்படுத்தல்.
இலக்குகள் அல்லது நோக்கங்கள்
1. வாசிப்பினை மாத்திரம் மையப்படுத்தாத வகையில் கண்டும் தொட்டும் உணரத்தக்க சான்றுகளுடன் கூடிய கற்றல் சூழலினை உருவாக்குதல்
2. அறிவின் பதிவகங்களாக தொழிற்படும் நூலகங்களை அனுபவங்களையும் அறிவின் மாதிரிகளையும் வெளிப்படுத்தும் கலையகங்களாக தொழிற்பட வைத்தல்.
3. பாடசாலைக் கல்வியில் களப்பயணங்கள் மூலம் பெறும் கல்வி அனுபவங்களை மாதிரிகளின் ஊடாக நூலக மட்டத்திலேயே எற்படுத்த உழைத்தல்.
4. எமது பண்பாட்டு புலம் தொடர்பான மாற்றங்களையும் புதுமைகளையும் மாதிரிகளின் ஊடாக ஆவணப்படுத்தவும் வெளிப்படுத்தவும் பாடுபடுதல்.
5. பல்லூடகக் கல்வி அறிவின் முழுமையான அனுபவத்தினை மாணவர்களுக்கு வழங்குதல்.
மூலக்கூறுகள்
முப்பரிமாண நூலகமானது ஒன்றுக்கொன்று தொடர்புடைய படிநிலைத்தன்மை வாய்ந்த மூன்று கூறுகளைக் கொண்டது. இந்த மூன்று கூறுகளும் 'பிரமிட்' வடிவ கட்டமைப்பில் ஒழுங்கமைக்கப் படுகின்றன. முதலாவது கூறானது குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த உருக்களுடன் தொடர்புடையது. இவை தொகை ரீதியான பண்பை அதிகம்; கொண்டிருக்கும் பிரமிட்டின் அடிப்பகுதியில் வைக்கப்படுகின்றன. இரண்டாவது கூறானது உருக்கள் சார்ந்து நூலகத்தில் காணப்படக்கூடிய தகவல் சாதனங்களுடன் தொடர்புடையது. இது பிரமிட்டின் நடுப்பகுதியில் வைக்கப்படுகிறது. மூன்றாவது கூறானது உருக்கள் மற்றும் ஆவணங்கள் சார்ந்த தகவலுடன் தொடர்புடையது. இவை தர ரீதியான பண்பை அதிகம் கொண்டிருக்கும் பிரமிட்டின் உச்சிப் பகுதியை அலங்கரிக்கின்றன.
உருவும் அதன் பொருளும் (1வது பரிமாணம்)
முப்பரிமாண நூலகத்தின் முதலாவது பரிமாணமாக உள்ள இந்த உருக்கள் முதல்நிலைத் தகவலாக சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்கள் வழி வாசகனை வந்தடைகின்றன. ஒரு பாடத்துறையின் முழுமையான கற்றலுக்கு புலன்கள் அனைத்தையும் பயன்படுத்தும் வாய்ப்பை இந்த உருக்கள் கொண்டிருக்கின்றன. கற்பித்தல் செயற்பாட்டில் உருக்களின் பயன்பாடு இன்று நேற்று உருவானதொன்றல்ல. அச்சு ஊடகங்கள் புழக்கத்திற்கு வராத ஆரம்பகால கற்பித்தற் செயற்பாட்டில் ஐம்புலன்களில் செவிகளும் வாயும் அதிக பயன்பாட்டைக் கொண்டிருந்தன. அச்சு ஊடகங்களின் அதிக பயன்பாட்டுடன் செவிகளின் இடத்தை கண்கள் பிடித்துக் கொண்டது. கற்பித்தல் சார்ந்த ஆய்வுகளின் பரவலாக்கத்துடன் கற்பித்தற் செயற்பாட்டில் ஒரு விடயத்தை விளக்குதலுக்கு கேட்டல், பார்த்தல், வாசித்தல் ஆகிய மூன்று புலன்களும் போதாது என்பது உணரப்பட்டபோது நான்காவது புலனான உடலை முக்கியமாகக் கரங்களைப் பயன்படுத்தி ஒரு பொருளை விளக்கும் தன்மை முக்கியம் பெறத் தொடங்கியது. இவை நான்கும் ஒரு விடயத்தை விளக்க போதாது என்பது உணரப்பட்டபோது உருக்களின் பயன்பாட்டின் தேவை கற்பித்தற் செயற்பாட்டில் அதிகம் உணரப்பட்டது. ஆரம்பகாலத்தில் உருக்கள் கிடைக்கும் தன்மை குறைவாக இருந்தபோது படங்கள் மிக அதிகம் உதவின. இன்றைய காலங்களில் உருக்களள் ஊடான கற்பித்தல் அதிக பயன்பாடுள்ளதாக உணரப்பட்டிருக்கிறது. குறிப்பாக முன்பள்ளிக் கற்பித்தலில் கற்பித்தல் உபகரணங்கள் முழுக்க முழுக்க உருக்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் உபகரணங்களே. ரூசோ மற்றும் பெஸ்ரலோசி போன்ற தலைசிறந்த கல்வியாளர்களும் கற்பித்தற்செயற்பாட்டில் உருக்களின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கின்றனர்.
குறிப்பிட்ட பொருள் சார்ந்து உருவாக்கப்பட்ட அல்லது உருவாக்கப்படுகின்ற உருக்கள்; அனைத்தும் முப்பரிமாண நூலகத்தில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ் உருக்கள் உண்மை உருக்களாகவோ அல்லது மாதிரிகளாகவோ இருக்கலாம். வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும் சக்தி கலைப்பொருட்களுக்கு அதிகம் இருப்பதன் காரணமாக அரும் பொருட்களை கூடியவரையில் சேகரித்து உருக்கள் என்ற நிலையில் பயன்படுத்துவது பயன்தரக்கூடியது. எடுத்துக்காட்டாக சிற்பக் கலை என்ற பொருட்துறையை எடுத்துக் கொண்டால் ஆதிகால கற்சிற்பத்திலிருந்து இன்றை வரைக்கும் சிற்பக்கலைக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சார்ந்து உருக்களை காட்சிப்படுத்தலாம். அதுமட்டுமன்றி வார்ப்புச் சிற்பங்கள், செதுக்குச் சிற்பங்கள் இரண்டும் இணைந்து உருவான சிற்பங்கள் என சிற்பக்கலைக்கு பிரயோகிக்கப்படும் முறைகளின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்திக் காட்சிப்படுத்தலாம்.
உருநிலைக் காட்சிப்படுத்தலானது சமூக சமநிலையாக்கம் என்ற இன்னொரு பண்பையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. பொதுசன நூலகங்களோ அல்லது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவன நூலகங்களோ இத்தகைய உருநிலைக் காட்சிப்படுத்தலின் போது அறிவுக்கு மட்டுமன்றி திறனுக்கும் வாய்ப்பு வழங்குவதன் காரணமாக சமூகத்தில் படித்தவன், படிக்காதவன் என்ற பேதங்களுக்குமப்பால் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களது திறன்வழி உருவான வளங்களுக்கும் இடம் கொடுப்பதன் காரணமாக தகவலைத் தாங்கி நிற்கும் மனித வளங்களின் கணிசமான ஒத்துழைப்பு இந்த உருநிலைக் காட்சிப்படுத்தலினூடாக நூலகங்களை வந்தடைகின்றது. கிராமத்திலுள்ள விவசாயி முதற்கொண்டு மரவேலை, இரும்பு வேலை என்று பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும் அனைத்து உறுப்பினர்களது பங்களிப்பு இந்த உருநிலைக் காட்சிப்படுத்தலுக்கு தேவைப்படுவதன் காரணமாக வாசக சமூகத்தின் உருவாக்கம் பலதரப்பட்ட நிலைகளிலும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
நூலும் அதன் வடிவங்களும் (2வது பரிமாணம்)
முப்பரிமாண நூலகத்தின் இரண்டாவது பரிமாணமாக உருக்கள் சார்ந்து வெளியிடப்படும் நூல்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. தகவலைப் பொதிந்து வைத்திருக்கும் எழுத்து வடிவிலுள்ள அனைத்து வளங்களும் இங்கு கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவை நூல்கள், பருவ இதழ் கட்டுரைகள், சிறு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என நூலுருவிலோ அல்லது ஒலி ஒளி நாடாக்கள், நுண் வடிவங்கள், இணையத்தளங்கள் என நூலுருவற்ற வடிவிலோ இருக்கலாம். இவை அனைத்தும் இரண்டாம் நிலைத் தகவலாக வாசகனை வந்தடைகின்றன. நூலக இறாக்கைகளில் ஒளிந்திருக்கும் நூல்கள், முறிந்த ஒழுங்கு என்ற உத்தியின் அடிப்படையில் வாசகனுக்குப் புரியாது பலதரப்பட்ட இடங்களில் சிதறிக்கிடக்கும் நூல்கள் ஓரிடத்தில் காட்சிப்படுத்தப்படுவதானது வாசகனின் இலகுவான பாவனைக்கு உதவுகின்றது.
சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான இடத்தை வழங்குவதாக உரு நிலைக் காட்சிப்படுத்தல் இருக்க அந்த உறுப்பினர்களில் அறிவுசார் ரீதியில் தனது பங்களிப்பை வழங்கும் எழுத்தாளனுக்கு மட்டும் இந்த இரண்டாம் நிலைத் தகவலுக்கு பங்களிக்கும் வாய்ப்பு இருப்பது இதன் சிறப்பம்சமாகக் கருதத்தக்கது.
தகவலும் அதன் தரங்களும் (3வது பரிமாணம்)
முப்பரிமாண நூலகத்தின் மூன்றாவது பரிமாணமாகக் கருதத்தக்கது தகவல் உருவாக்கமாகும். உருக்களிலிருந்து நேரடியாக உருவாக்கப்படுவதாகவோ அல்லது இரண்டாம் நிலைத் தகவலாக நூல்களிலிருந்து அதன் முக்கிய அம்சங்களை சாரமாக பிரித்தெடுப்பதாகவோ இது இருக்கும். ஆய்வுகூடங்களிலுள்ள செய்முறைகள் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் இங்கு காட்சிப்படுத்தப்படலாம். மனித வளங்களுடன் மேற்கொள்ளப்படும் நோர்காணல் மூலமாகப் பெறப்படும் தகவல்கள் இங்கு காட்சிப்படுத்தப்படலாம். பலதரப்பட்ட நூல்களிலிருந்து தேடித் தொகுப்பாகவும் இவை இருக்கலாம். அதுவுமன்றி குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்து ஒருவரியால் மேற்கொள்ப்படும் ஆய்வு முடிவுகளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகவும் இவை இருக்கலாம். இந்த மூன்றாம் நிலைத் தகவல் உருவாக்கத்திற்கு பொறுப்பானவர்களாக நூலகர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அறிவுப் பிரபஞ்சத்தில் ஏற்கனவே உருவாகிய, இன்றும் உருவாகிக்கொண்டிருக்கின்ற பொருட்துறைகளுககு உரிய இடத்தை தீர்மானிக்கும் பெரும்பணி நூலகர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பதும், நூலகத்தை நாடும் அனைத்துத் துறை சார்ந்த வாசகனது தகவல் தேவையை பு}ர்த்தி செய்ய வேண்டிய கடப்பாட்டுக்கான அறிவுத் தேடலை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதும் மூன்றாம்நிலைத் தகவல் உருவாக்கத்தில் நூலகர்களுக்கான பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும்.
உருவாக்கமும் அதன் படிநிலைகளும்
ழ எந்தவொரு நூலகமும் இத்தகைய ஒரு காட்சிப்படுத்தலைப் பின்பற்றமுடியும்.
ழ நூலகத்தின் வாசகரது கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிறு இடம் இத்தகைய காட்சிப்படுத்தலுக்குப் போதுமானது. அது உசாத்துணைப் பகுதியின் ஒரு மூலையாகவோ அல்லது மையப்பகுதியாகவோ இருக்கலாம். வகுப்பறையின் ஒரு மூலை கூட வாசிப்பு மூலையாக மாறி இந்த எண்ணக்கருவிற்கு முழுமை கொடுப்பது மிகப்பயன்தரத் தக்கது.
ழ வாரம் ஒரு பொருட்துறை என்ற வகையில் பாடத்திட்டத்துடன் இணைந்தவகையில் இக்காட்சிப்படுத்தலை மேற்கொள்ளமுடியும்.
ழ எல்லாப் பொருட்துறைகளுக்கும் உருக்கள் இருக்க முடியாது. அதே போன்று அருகி வரும் பொருட்களைத் தேடும் பணியும் சிரமமானது. உருக்கள் இல்லாத சமயங்களில் வாசகனின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதில் உருக்களுக்கு அடுத்தபடியாக உருக்கள் தொடர்பான படங்கள் செல்வாக்குச் செலுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு படங்களை வைக்கலாம். இலக்கியம் மெய்யியல் போன்ற மனிதப்பண்பியல் துறைகளில் உருக்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இந்நிலையில் படங்களின் பங்களிப்பு பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக கவிதை என்ற பொருட்துறையை முப்பரிமாண நூலகம் ஒன்றுக்கு தெரிவு செய்யும் போது அங்கு உருக்களுக்கு வாய்ப்பிருக்காது. எனினும் உலகப் புகழ் பெற்ற கவிஞர்களது உருக்களை சேகரிக்க முடியுமா என்பதை கவனத்தில் கொள்வதும் அது இல்லாத போது அவர்களின் படங்களை காட்சிப்படுத்துவதும் பயன்தரக்கூடியது.
ழ ஒவ்வொரு நூலகமும் உருக்களை சேமித்து வைப்பதற்கு சேமிப்பகம் ஒன்றை உருவாக்குதல் அவசியமானது. இதற்கு ஒரு கண்ணாடி அலுமாரி போதுமானது. நூலகத்தின் மையப்பகுதியில் பாதுகாப்பான வகையில் கலைக்கூடம் போன்றும் இவ்வுருக்கள் பாதுகாக்கப்படலாம். தேவைப்படும் போது இவற்றில் பொருத்தமானவை முப்பரிமாண நூலகத்தின் உருநிலைக்காட்சிப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும்.
முக்கிய பொருட்துறைகளும் அவைசார்ந்த உருக்களும்
பாடசாலை நூலகங்கள் ஒவ்வொன்றும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்குரிய பாடத்திட்டம் சார்ந்த பாடத்துறைகளுக்கென தனியாகவும் இடைநிலைக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாடத்துறைகளுக்கெனவும் தனித்தனியாக முப்பரிமாண மாதிரியை உருவாக்குவது பொருத்தமானது. தெரிந்தெடுக்கப்படும் உருக்கள் வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் அதன் உருவமைப்பிலோ இயலளவிலோ பலதரப்பட்ட மாற்றங்களைச் சந்திக்கக்கூடும் என்பதைக் கருத்திற் கொண்டு உருக்களின் சேகரிப்பில் பழைய பொருட்கள் முதற்கொண்டு புதிய பொருட்கள் வiர் தேடிக்கண்டுபிடித்துக் காட்சிப்படுத்துவது சிறந்தது.
தெரிந்தெடுக்கப்பட்ட சில பாடத்துறைகள் இங்கு தரப்படுகிறது.
• தாவரவியல் - மரத்துண்டுகள், இலை வகைகள், பூக்கள் போன்றன(உண்மை உருக்கள்)
• விலங்கியல் - வீட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள், பறவைகள், (மாதிரி உருக்கள்) பூச்சி வகைகள் (உண்மை உருக்கள்)
• பௌதிகவியல் - ஒலிவாங்கிகள், மின்கலங்கள்
• தொழினுட்பம் - தொலைபேசித் தொழினுட்பம், வானொலித் தொழினுட்பம், தொலைக்காட்சித் தொழினுட்பம், அச்சுத் தொழினுட்பம், கணினித் தொழினுட்பம், பிரதியாக்கத் தொழினுட்பம் போன்றவை.
• கருவிகள் - தொழிற்பாடுகளின் அடிப்படையில் வெட்டும் கருவிகள், துளையிடும் கருவிகள் அளக்கும் கருவிகள், இசைக் கருவிகள் போன்றவை
• உபகரணங்கள் - வீட்டு உபகரணங்கள் ( சமையல் உபகரணங்கள், உணவு பதனிடும் உபகரணங்கள், உணவு சேமிக்கும் உபகரணங்கள், உணவு பாதுகாக்கும் உபகரணங்கள் போன்றவை- உண்மை உருக்களாக இவை காட்சிப்படுத்தப்படலாம்), வேலைத்தல உபகரணங்கள் (பெரும்பாலும் இவை மாதிரிகளாகவே சேகரிக்க முடியும்)
• வீடமைப்பு மாதிரிகள்
• காலாசாரம் - தாம்பூலம், ஆடையணிகள்
• கைவினைப் பொருட்கள்- (மூலப்பொருள் சார்ந்து பலதரப்பட்ட கைவினைப் பொருட்களுக்கான முப்பரிமாண மாதிரியை வடிவமைக்கலாம்)
• பொருளாதாரம் - உலோக நாணயங்கள், தாள் நாணயங்கள், தபால் தலைகள் போன்றவை
• நுண்கலைகள்
இன்றைய தேவை
எம்முன் காலக்கடமையாய் விரியும் பாரிய இப்பணிக்காக பாடசாலைச் சமூகம் தரக்கூடிய முதன்மையான பங்களிப்பு உணர்வுபூர்வமான ஒத்துழைப்பேயாகும். நம்பிக்கையுடன் நாம் முன்னெடுக்கும் இப்பணியில் இணைய நீங்கள் செய்ய வேண்டியது.
• துறைசார் புலமையாளர்களாயின் காத்திரமான ஆலோசனைகளையும் கருத்தாடல்களையும் வழங்குதல்;.
• மாணவர்களாயின் பயன்பாட்டின் பெறுமதியை உணர்த்தும் வகையில் அமைந்த உங்கள் தேவை அதன் நிரம்பல் குறித்து எமக்குத் தெரியப்படுத்துதல்.
• சமூக விஞ்ஞானிகளாயின் ஆவணப்படுத்தப்படவேண்டிய உருநிலைச் சேகரிப்புக்களை வழங்குதல்;.
• ஆர்வலர்களாயின் உருநிலைச் சேகரிப்புக்களை சேகரிககும் பாரிய பணியில் தோள்கொடுத்தல்;.
• பொதுமக்களாயின் வீட்டில் பயன்பாடற்றுக் கிடக்கும் பாரம்பரியக் கலைப் பொக்கிசங்களை பாடசாலை நூலகங்களுக்கு நம்பிக்கையுடன் வழங்குவதன்மூலம் சேகரிப்புக்களை முழுமைப்படுத்த உதவுதல்.
மானுடத்தை நேசிக்கும் அனைத்து மனங்களின் ஒன்றிணைந்த சக்தியே இச் செயற்திட்டத்தின் வெற்றி. ஒட்டுமொத்த சமூகப்பங்களிப்பையும் ஒத்துழைப்பினையும் முழுமையாக நம்பி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆளணியினரின் செயற்பாடுகள் யாவும் சமூக மேம்பாட்டை மாத்திரமே மையங்கொண்டு சுழல்கின்றன.
முப்பரிமாண நூலகக் கண்காட்சியை தங்கள் நிறுவனங்களில் நடாத்துவதுற்கு விரும்புவோரை நூலக விழிப்புணர்வு நிறுவகம் இரு கரங் கூப்பி வரவேற்கிறது. உங்களின் மனப்பூர்வமான பங்கேற்புடன் இவற்றை ஒழுங்கு செய்ய விரும்புகின்றது.
உங்கள் கனிவான ஒத்துழைப்புக்கள் வளமான வாசிப்பை மேம்படுத்துவதினூடாக மானுடத்தின் மேம்பாடாக மலரும் என்ற நம்பிக்கைகளுடன் ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றோம்.
நன்றிகளுடன்
ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்
பிரதம நூலகர்
யாழ். பல்கலைக்கழகம்
22-003-2012
No comments:
Post a Comment