Wednesday, February 05, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'



நடத்தைக் கோலங்கள் 3

பரமசிவத்தின் மனைவி பவளத்துக்கு இது நான்காவது பிரசவம். உறவுகளின் சுத்துமாத்துக் குணங்கள் பிள்ளைகளுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற அதீத கவனத்தில் மனைவியின் வீட்டாரை மட்டுமன்றி தன்வீட்டாரையும் அண்டவிடாமல் சொந்தபந்தத்துக்கு எட்டவாக ஒரு வீடு கட்டி தனிக்குடித்தனம் வந்து இப்ப எட்டு வருசமாச்சு. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மூத்தவள் ஆரபிதான். இந்தக் கார்த்திகையுடன் அவளுக்கு எட்டு வயது பூர்த்தியாகிறது. குதுர்கலம் பொங்கவேண்டிய அவளின் குழந்தமைப் பருவம் குழந்தைகளைப் பராமரிக்கும் துயர நிகழ்வாக மாறிவிட்டது. பிரசவத்தைக்கூட ஆள் வைத்துப் பராமரிப்பதில் நாட்டமில்லாத மனிசன் அவர்.

தேநீர் வைத்தல், தேங்காய் துருவுதல், காய்கறி நறுக்குதல் போன்ற துணை வேலைகள் மட்டுமன்றி தாய் குளிப்பதற்கு இலை குழை தேடிப் பிடுங்கிக்கொண்டு வருதல், தம்பி தங்கைகளின் ஆடைகளைத் துவைத்தல் போன்ற பெருவேலைகளையும் செய்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போகவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.

பிள்ளை பெற்ற பெண் ஓடியாடித் திரிவது உடலுக்கு நோக்காடு என்று பரமசிவம் மட்டுமன்றி பவளமும் ஆழமாக நம்புபவள். அதனால் அவள் அதிகம் எழும்புவதில்லை. எனினும் சமையல் வேலைகளில் ஆலோசனை சொல்லும் பொருட்டு குசினியை அடுத்துள்ள அறையைத்தான் பிரசவத்தின் பின்னர் அவள் பயன்படுத்தினாள்.

அன்று மாலை நேரம். அப்பாவை இன்னும் காணவில்லை. அம்மா பசிக்குது என்ற அழுகையுடன் தம்பி வண்ணனும், தங்கை கீதாவும் அம்மாவை அரியண்டப்படுத்திக் கொண்டிருப்பதைப் பொறுக்காத ஆரபி,
'அம்மா நான் புட்டு அவிக்கிறன். நீங்கள் எப்படியென்று காட்டித் தாங்கோ' என்று தாயின் சம்மதம் கேட்காமலேயே களத்தில் இறங்கிவிட்டாள்.

அடுப்பில் தண்ணீர் சுட வைத்தாள் ஆரபி. அம்மாவின் ஆலோசனைப்படி ஐந்து பேருக்கு அளவான மாவை பாத்திரத்தில் போட்டுக் கொண்டுபோய் அம்மாவின் அருகில் வைத்தாள். நீர் கொதித்ததும் கைத்துணியைப் பயன்படுத்தி கேத்திலையும் கொண்டுபோய் அருகில் வைத்தாள். மாவிற்குள் அளவாக அம்மாவைக்கொண்டு சுடுநீர் விட்டு, புட்டு மா குழைத்தாகிவிட்டது. இப்போது அதனைக் கொத்த வேண்டும்.

நிலத்தில் அமர்ந்தபடி தனது இரு கால்களையும் அகலப் பரப்பி கால்களின் நடுவில் சுளகை வைத்து பேணிச் சுண்டைக் கவிட்டுப் பிடித்தபடி தனக்குத் தெரிந்தமாதிரி கொத்தத் தொடங்கினாள் ஆரபி. புட்டு கொத்துப்படுவதைவிட மிக அதிகமாக அவளது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வடிவதை கண்கள் கலங்க அந்தத் தாயுள்ளம் பார்த்துக் கொண்டிருந்தது.  குதுகலித்து விளையாட வேண்டிய இந்தப் பருவத்தில் இப்படி கடினப்படுகின்றேனே என்ற கவலை ஆரபியின் முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக தாய்மைக்குரிய பொறுப்பு இருந்தது. செய்யும் பணியில் நேசம் இருந்தது. தம்பி தங்கைகளுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற வேகமும் இருந்தது.

'பிள்ளை அம்மான்ரை துவாயால் நெற்றியைத் துடையுங்கோ', சொல்லிக்கொண்டே துண்டை பிள்ளையின் அருகில் எறிந்தாள் தாய். துவாயால் தனது நெற்றியைத் துடைத்துக்கொண்டே தாயை பெருமிதம் பொங்கப் பார்த்தாள் ஆரபி. பெரிய பொறுப்புள்ள பணியில் தான் ஈடுபடுகின்றேன் என்ற மகிழ்வு அவள் கண்களில். பணி மீண்டும் தொடர்ந்தது. நெற்றி வியர்வை ஓடுமளவிற்கு புட்டு கொத்துப்படவில்லை. குழந்தையை உற்றுப் பார்த்தாள் தாய். குழந்தை முழுதாகக் களைத்துவிட்டாள். ஆனாலும் கை கொத்துவதை நிறுத்தவில்லை. கைகளில் தளர்ச்சி மட்டும் தெரிந்தது.; வாயிலிருந்து வாய்நீர் ஒழுகிப் புட்டின்மீது விழுவதைக்கூட உணர முடியாதளவிற்கு மகள் களைத்துவிட்டதும் தெரிந்தது.

' அம்மா.. குஞ்சு.... கொத்தினது காணும். தேங்காய்பூவைக் கலந்து  நீத்துப் பெட்டியிலை புட்டை வைத்து அடுப்பில வையுங்கோ'.

'என்ர பிள்ளையின்ரை வாய்நீர் அம்மன் கோவில் தீர்த்தத்தை விட மேல்' மனதிற்குள்  சொல்லிக் கொண்டே கலங்கிய கண்களை மகளுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள் பவளம்.

No comments: