நடத்தைக் கோலங்கள் 1
'அம்மா தம்பி எனக்கு விஸ்கற் தரமாட்டானாம்' இது 8 வயது குமணனின் ஏக்கம் தொனிக்கும் குரல்.
'அவற்றை படிப்பின்ரை வள்ளல்லை அவருக்கு விஸ்கற்'. 'தம்பி முதலாம் பிள்ளை. அதுதான் வாங்கிக் கொடுத்தது' ' நீ முதலாம் பிள்ளையாய் வந்தால் உனக்கும் வாங்கித்தரலாம்'. இது தாய் மாதவியின் குரல்.
பிஸ்கற் மட்டுமல்ல வீட்டில் சமையல், விருப்பமான இனிப்புப் பண்டங்கள் , வெளியில் உலாத்து எல்லாமே இளையவன் ரமணன் விருப்பப்படிதான். இத்தனை செல்வாக்கும் அவனுக்கு இருக்கக் காரணம் வகுப்பில் முதலாம் பிள்ளையாக இருத்தல் என்ற தாயின் அபிலாசையை நிறைவேற்றியமைதான்.
திறமைக்கு அதிக கவனம் கொடுத்த அந்தத் தாய்மை பகிர்ந்துண்ணும் பழக்கத்தை மட்டும் தனது பிள்ளைக்கு கற்றுக் கொடுக்க மறந்தது ஏன்? அன்பையும் மனித நேயத்தையும் வளர்க்க வேண்டிய தாய்மை அந்தஸ்து எனும் போர்வைக்குள் ஏன் முடங்க வேண்டும்?.
எனக்குத் தா என்று அழுது அடம்பிடித்து தனக்குரியதை மூத்தவன் பெற்றிருந்தால் இங்கு கலங்க வேண்டிய தேவை இல்லை. அல்லது குழந்தைமைக் குணங்களில் ஏதோ ஒன்றாவது அவனிடம் இருந்தாலும் வருந்த வேண்டியதில்லை. ஆனால் அந்த முகம் என்ன சொல்கிறது?.
ஆழமான அமைதியும் ஏக்கமும் விரவிக் கிடக்கும் அந்தத் தளிர் அப்படி ஒன்றும் மொக்கன் இல்லை. வகுப்பில் பத்துக்குள் வருவான். பள்ளிக்கூடத்தில் போடும் புள்ளிகள் திறமையை நிர்ணயிக்க முடியுமா?.
வெரித்தாஸ், பி.பி.சி என்றால் எங்கிருந்தாலும் ரேடியோ முன்வந்து செய்தி கேட்பவன்.
மை முடிந்த ரெனோல்ட் பேனையில் ' ஏவுகணை' விடத் தெரிந்தவன்.
யார் எது கொடுத்தாலும் தம்பிக்கு கொடுத்து தின்பவன்.
விழுந்து அடிபட்டு அழும் பக்கத்து வீட்டுச் சிறுவனை சமாதானப்படுத்தி சிரிக்க வைப்பவன்.
விளையாட்டு, பேச்சு என்று எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்பவன் மொக்கன் என்றா அந்தத் தாய்மை நினைக்கிறது. தனது அலுவலக நண்பர்கள் முன் பெருமையடித்துக் கொள்வதற்கு அந்தக் குணங்களை விடவும் ' முதல் இடம்' என்ற முத்திரை அவசியமாய்ப் போய்விட்டதா?.
No comments:
Post a Comment