Sunday, July 31, 2005

கழற்றும் நாளுக்காய்...

தனக்கு
ஒரே புழுக்கமாய் இருப்பதாய்
அவள் தான் சொல்கிறாள்
கழற்றிவிடு
உன் போர்வைகளை என்றேன்
உதடுகளின் சிரிப்பில்
உண்மை வலி இருந்தது.
அடக்கம் போனதென்று
அம்மா பாய்வாளாம்---
தெருவில் தலைகாட்ட வழியில்லை என்று
தம்பி குதிப்பானாம்---
வேலை செய்யும் இடத்தில் கூட
வேதம் மாறவில்லையாம்---
சற்று நேரம் கழற்றி வைக்க
இருட்டுக் கூட
தன் பக்கம் இல்லை என்ற
அவள் குமுறலில் சிந்திய
நீர்த்திவலைகள்
நிலம் நோக்கிய விழிகளிலிருந்து
மண்ணை முத்தமிட்டன.

மனதின் மூலையில்
சிறு ஒளிக்கீற்று---
வண்ண வண்ணமாய்---
வகைவகையாய்---
போர்த்திக் கொண்டு
புழுக்கமே புண்ணியம் என்றானோர்க்குள்ளும்---
புழுக்கத்தின் காரணம் புரியாமல் தவிப்போர்க்குள்ளும்---
புழுக்கம் போர்வைகளால் தான்
என்பதை
அவள் உணர்ந்து கொண்டதற்காய்----


நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
போர்வைகளை
அவளாகவே கழற்றும் நாளுக்காய்---