Monday, January 04, 2016

பாடசாலை நூலகங்கள்

பாடசாலை நூலகங்கள் 

புதுயுகம் தரும் பெரும் பொறுப்புகள்



புது யுகம்

இது ஒரு தகவல் தொழினுட்ப யுகம். எல்லோர்க்கும் எல்லாம் என்ற ஆதிப் பொதுவுடமைத் தத்துவத்தின் அடிப்படையில் ஆரம்பித்த மனிதனது சமூக வாழ்வு விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்கு முற்பட்ட சமூகம் ஒன்றையும், கைத்தொழிலை முதன்மையாகவும் இயந்திரத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகம் ஒன்றையும், ஆய்வு நடவடிக்கைகளை முதன்மையாகவும் அறிவை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்குப் பிற்பட்ட சமூகம் ஒன்றையும் கடந்து முழுக்க முழுக்க தகவலைச் சுற்றியே பின்னப்பட்ட, தகவல் தொழிற் துறையை முதன்மையாகக் கொண்ட தகவல் சமூகம் ஒன்றில் தற்போது நடைபயில்கிறது.ஷ அறிவே ஆற்றல் என்ற புகழ் பெற்ற வாசகம் கைத்தொழில் சமூகத்துக்கு உரியதெனில் ஷதகவலே ஆற்றல் என்ற புது வாசகம் மூன்றாவது ஆயிரியத்தின் நுழைவாயிலுக்குப் பொருத்தமானது. 1980களில் கருக்கொண்ட தகவல் யுகத்தின் தோற்றப்பாடு 1990களில் வீச்சடைந்து இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஊடுருவியுள்ளது. மின்னாமல் முழங்காமல் ஓய்ந்த விவசாயப் புரட்சிக்கும,; மின்னி முழங்கி ஓய்ந்த கைத்தொழில் புரட்சிக்கும் அடுத்ததாக மனித சமூகம் சந்திக்கும் மாபெரும் புரட்சியாகக் கருதப்படுவது தகவல் புரட்சியாகும்.

தகவல் புரட்சிக்கு அடித்தளமாக அமைபவை கணினிகள். கணித்தல் செயற்பாடுகளுக்;கு உதவுவதற்கான கருவியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கணினி இன்று தனது ஐந்தாவது தலைமுறையில் உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கக்கூடிய சர்வ வல்லமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. கணினித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கட்புல செவிப்புல தொழினுட்பம், நுண்பிரதியாக்கத் தொழினுட்பம் என்பன இணைந்த தகவல் தொழினுட்பச் சூழல் ஒன்று உருவாகியுள்ளது. வீடுகள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை எங்கும் கணினி மயம். வீதிகள் தோறும் கணினிப் பயிற்சி நிலையங்கள். வேலைக்;கு உதவும் கருவியாக, அடுத்தவருடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசியாக, செய்தி அறிய உதவும் செய்தித் தாள்களாக,, அறிவைப் பெருக்க உதவும் நூலகமாக, பொருட்களை விற்க வாங்க உதவும் விற்பனைப் பிரதிநிதியாக, பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சியாக என்று மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகுதல் பகிர்தல் பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற ஓரு உலகில் நாம் வாழ்கிறோம்.

மனித இனம் தோன்றிய காலம் முதற் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவை மீதான அவதானிப்புகளும், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றலும், தான் பெற்ற அறிவை அடுத்துவரும் பயன்படுத்தும் வகையில் காலத்துக்குக் காலம் கிடைத்த எழுது பொருட்களில் பதிந்து வைக்கும் மனித சிந்தனையும் இணைந்ததால் தோற்றம் பெற்ற எண்ணற்ற மனித சிந்தனைப் பதிவேடுகளை அனைவரும் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் சேகரித்து ஒழுங்கமைத்து பாதுகாத்து பாவனைப்படுத்தும் பணியில் பல தகவல் நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே நூல்களின் பாதுகாத்தல் அதற்கும் சற்று மேலே சென்று நூல்களை இரவல் கொடுத்து வாங்கும் பணியை செய்தல் என்ற நிலையிலிருந்து மாறி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிக்கல் வாய்ந்த கட்டமைப்;பைக் கொண்டதாக மாறியுள்ள தகவல் சாதனங்களை சிறந்த முறையில் கையாளும் பணிக்கு நூலகங்கள் மாறவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறன. அந்த வகையில் புதுயுகத்தின் பரிமாணங்களை உள் வாங்கவேண்டிய தேவை பாடசாலை நூலகங்களுக்கும் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.




புதிய போக்குகள்

ஆகக் குறைந்து வகுப்பறை ஒன்றையே நூலகமாக கொண்ட பெரும்பாலான பாடசாலைகளில் மட்டுமன்றி நூலக வசதியை ஓரளவு கொண்ட தரம் கூடிய பாடசாலைகளிலும் கூட புதிய கட்டடம் ஒன்று அவசர அவசரமாக எழும்பிக் கொண்;டிருக்கிறது. சிலது பூரணப்படுத்தப்பட்டுள்ளது. சில முடியும் தறுவாயிலுள்ளது. சிலவற்றுக்கு அடித்தளம் போடப்படுகிறது... பாடசாலையில் கற்றல் இலக்குகளையும் செயல்முறைப்படுத்தக்கூடிய நோக்கங்களையும் பூர்த்தி செய்வதற்கான முக்கிய மூலக்கூறாக பாடசாலை நூலக கற்றல் வள நிலையம ஒன்றின் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் கல்வி உயர்கல்வி அமைச்சானது உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே இவை. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு கிட்டவாக நிற்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா பயிற்சி நெறியை கல்வியியல் கல்லூரிகள் தொடங்கியிருக்கின்றன. பயிற்சி முடித்து வெளியேறியுள்ள முதல் தொகுதி மாணவர்கள் பாடசாலைகளுக்குள் புகுந்து நூலகவியல் கற்பிப்பதற்கான வாய்ப்பின்றி ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். பாடசாலைகளுக்குள் நூலக உணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி நூலகக் கல்வியை பாடத் திட்டத்தில் புகுத்துவதற்கான தயார்நிலையின் சின்னங்களாக இவர்கள் விளங்குகின்றனர். பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர் அல்லது நீண்ட கால சேவை அனுபவம் உள்ள ஒருவர் ஆசிரிய நூலகராக நியமிக்கப்பட்டு அவர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வுகளை நூலக தகவல் விஞ்ஞானத்துக்கான தேசிய நிறுவனமும் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து பிரதேச ரீதியாக நடத்தியதைத் தொடர்ந்து பாடசாலை நூலகங்களை புனரமைக்கும் முயற்சிகள் துரிதமாக நடக்கின்றன. 2002 ல் கொழும்பில் நடத்திய ஷபாடசாலை நூலகத்தை ஒழுங்கமைத்தலும் முகாமை செய்தலும்ஷ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஐந்து நாள் செயலமர்வின் வெளிப்பாடாக, இது தொடர்பான கைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. சர்வதேச நூலக தினதத்தை முன்னிட்டு கடந்த ஒக்டோபர் 21-27 வரை அனைத்து பாடசாலைகளிலும் நூலக வாரம் கொண்டாடப்பட்டு கருத்தரங்குகள் கண்காட்சிகள் சொற்பொழிவுகள் என நூலக செயற்பாடுகள் களைகட்டியிருந்தது மட்டுமன்றி சிறந்த முறையில் நூலக வாரத்தை கொண்டாடியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கல்வித்திணைக்களம் கௌரவித்த நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.




புதிய பொறுப்புகள்

தானங்களில் சிறந்தது வித்தியாதானம் எனப்படும் கல்வி.. கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குதல். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. ஷஎதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்ஷ என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது; நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை பாடசாலைகள். பாடல்கள் கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது.. இத்தகைய பின்னணியில்; புது யுகம் ஒன்றில் பாடசாலை நூலகங்கள் ஆற்றவேண்டிய பெரும் பொறுப்புகளை வாசகர் நூல்கள் நூலகர்; என்ற அம்சங்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானது.




வாசகர்

பாடசாலை நூலகத்தின் வாசகர் குழு இரண்டு. ஒன்று அறிவுத் தேடலுக்கும் ஆக்கத்துக்கும் உரிய மாணவ சமூகம். மற்றது கற்பிப்பதற்காக கற்கும் ஆசிரிய சமூகம். மாணவர்களை படிக்கும் தரத்தின் அடிப்படையில் ஆரம்பநிலை,இடைநிலை,உயர்நிலை என மூன்றாக வகைப்படுத்த முடியும். மனித வளர்ச்சிக்கட்டங்களின் அடிப்படையில் ஆரம்ப நிலை மாணவர்கள் பிள்ளைப்பருவத்துக்கும் இடைநிலை உயரநிலை மாணவர்கள் கட்டிளம் பருவத்துக்கும் உரியவர்கள். சர்வதேச நியமத்தின் அடிப்படையில் அனைவருமே சிறுவர்கள்.

பிள்ளைப்பருவம் என்பது 5-12 வயது வரையான பருவம். வீட்டுச்சூழலையும் விட்டுவிடாமல் பள்ளிச்சூழலுக்குள்ளும் முழுதும் அகப்பட்டுப்போகாமல் இருக்கும் இப்பருவத்தினரின் பிரதான தன்மை ஆராய்வூக்கமாகும். அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையானது ஆராய்வூக்கமாகும். மூன்று வயதில் முன்னிலைக்கு வரும் ஆராய்வூக்கமானது எட்டாவது வயது வரும்போது தீவிரமாக செயற்படத் தொடங்கி ஆக்கவூக்கத்துக்கும் அதன்பின்னர் பலவகைப் பொருட்களைத் தேடிச் சேர்க்கும் சேகரிப்பூக்கத்துக்கும் இட்டுச் செல்கிறது.. இந்த ஊக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாமல் அதை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் முதலாவது காரணி குடும்பச் சூழல் ஆகும். மற்றய காரணி பாடசாலைச்சூழல். குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஆற்றல் பெற்றோருக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் சாத்தியமற்றது. எனவே கடிவாளக் கல்விமுறையை விட்டு சுயமாக கற்றலுக்கு வழிமுறை காணுதல் அவசியமானது இதையே புதிய கல்வித்திட்டங்கள் தற்போது கவனத்தில் எடுக்கின்றன சிந்தனா சக்தியும் நினைவாற்றலும் மிக்க இப்பருவத்தனரே நூலகரின் முதல் இலக்காக இருத்தல் அவசியம். தம்மைச் சுற்றியுள்ளவைகளை அவதானித்து அவை தொடர்பான உண்மை அறிவைப் பெற ஆர்வம் கொண்டிருக்கும் இப்பருவத்தினர் தான் வாசிப்புப் பழக்கத்துக்கும் சுயமாகக் கற்றலுக்குமான இலக்குகள்.

12 வயதில் தொடங்கி 18 அல்லது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் கட்டிளம் பருவம் 20ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பாகும். அதுவரை இப்பருவத்தினர் வளந்தோராகக் கருதப்பட்டு பொறுப்புமிக்க பணிகளில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டனர் ஓர் அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாக இது கருதப்படுகின்றது.; முழுக்க முழுக்க வீட்டுச்சூழலிலிருந்து விடுபட்டு தனித்தியங்கும் விருப்பு அதிகமாக உள்ள இப்பருவத்தினரிடம் காணப்படும் பிரதான அம்சம் பாலுணர்வு. போதனைகளோ தண்டனைகளோ இவர்களிடம் எடுபடாது. தமது உணர்வுகளுக்கு தீனி போடும் எதையும் தேடி எடுக்கும் ஆற்றல் இவர்களிடம் உண்டு என்பதை யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே - இளவயதில் வாசிப்புப் பழக்கம் அற்றவர்கள் கூட- இவர்கள் பார்க்கும் படங்களிலிருந்தும் படிக்கும் கதைப்புத்தகங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் பிள்ளைப்பருவத்தினரைப் பொறுத்து பொழுதுபோக்குப்புத்தகமோ அல்லது பொது அறிவுப் புத்தகமோ வழிகாட்டினால் தான் உண்டு. இல்லாவிடில் வெறும் விளையாட்டுகளிலேயே அவர்கள் ஈடுபடுவர் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும். எனவே பிள்ளைப்பருவத்தில் காட்டப்படும் சரியான வழிகாட்டுதலே கட்டிளம் பருவத்து தனித்தியங்கும் ஆற்றலை அறிவு சார் பாதை நோக்கி செப்பனிட உதவும்.

நூலகத்தின் மற்றொரு வாசகர் குழு பாடசாலையின் ஆசிரியர் சமூகமாகும். அடிக்கடி மாறும் சமூகச்சூழலுக்கு ஏற்ப கற்பிப்பதற்கு, கற்றல் என்பது அவரது அன்றாட நடவடிக்கையாக மாறவேண்டியது அவசியம். புதிய பாடத்திட்டமும் கல்வியின் நோக்கங்களும் ஆசிரியர்களை மாணவர்களாகும்படி நிர்ப்பந்திக்கின்றன என்றால் அவர்கள் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம் நூலகமே. புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால் ஆசிரியர் என்பவர் நிரம்பிய கல்வி,,ஆழமான அறிவு விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல் தேசிய நோக்கம் முதலிய பலகருத்துக்களை உள்ளடக்கிய ஷசூழ்ந்த பார்வை கொண்டவர்ஷ இத்தகைய சூழ்ந்த பார்வைக்கு அவர் நூலகத்தின நிரந்தர வாசகராக மாறவேண்டியது அவசியமாகும். ஷ21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்கு தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல் விமர்சனப்பாங்கு, பிரச்சனைகளை இனங்காணல் மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்ஷ என்ற யுனெஸ்கோவின் அறிக்கையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்;கது.




நூல்கள்

நூல்களை உள்ளடக்கம் உருவமைப்பு என்ற இரு பிரதான பிரிவுகளுக்குள் நோக்குதல் பொருத்தமானது.




உள்ளடக்கம்.

• மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறைகளை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது. எமது முதல் தலைமுறையினருக்கு கணினி அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழினுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழினுட்பவியல் துறையோ தெரியாது.

• ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதன் காரணமாக இன்று நூல்கள் என்ற பதத்துக்குள் அறிக்கைகள் ஆராய்ச்சி நூல்கள்,நியமங்கள் காப்புரிமைகள்,சிறுநூல்கள் செய்திக்கடிதங்கள் பருவ இதழ்கள் தொடர் வெளியீடுகள் என நூல்களின் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கும் அறிவு நூலகரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

• மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு நூலகருக்கும் வாசகருக்கும் இன்றியமையாததாகிறது.

• அச்சுப் பொறி தொடங்கி இன்றைய கணினித் தொழினுட்பம் வரை மனிதனின் அச்சிடுதல் தொழினுட்ப வளர்ச்சி தொகை ரீதியான அதிகரிப்புக்கு வழிகோலி நூல்களைத் தேடும் பணியை சிக்கலாக்கியுள்ளது.

• நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிந்து வைக்க வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிடலாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் கோரி நிற்கிறது.

• நூல்கள் பலதரப்பட்ட மொழிகளில் வெளியிடப்படும் அதேசமயம் வாசகர் ஒன்றிரண்டு மொழிகளிலேயே பரிச்சயமாக இருத்தல் சாத்தியம் என்பதால் உலக அறிவை அனைவரும் அணுகத் தக்க வகையிலான பொது திட்டம் ஒன்று நூலகம் சார்ந்து உருவாக்கப்பட வேண்டியதாகிறது.




உருவமைப்பு

• பார்த்தல் கேட்டல் படித்தல் சிந்தித்தல் கற்றல் என்ற ஒழுங்குமுறையில் பாடத்திட்டத்துக்கு பொருத்தமான நூல்கள் மட்டுமன்றி மாணவப் பருவத்தின் தேடலூக்கத்துக்கு உதவுக்கூடிய அனைத்து சாதனங்களையும் கட்டியெழுப்பவேண்டிய பணி நூலகத்துக்குண்டு.

• ஏன் எதற்கு எப்படி யார் போன்ற கேள்விகளுக்கு விடை தரக்கூடிய கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள், அகராதிகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்றவை பாடசாலை நூலகம் ஒன்றின் பிரதான சாதனங்களாக இருத்தல் இன்றியமையாததாகும்.

• படித்தல் என்பதைவிட பார்த்துச் செய்தல் என்பதே மாணவப்பருவத்தின் இயல்பு என்பதற்கமைய மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய படத்துணுக்குகள் காட்சி வில்லைகள் ஒலி,ஒளிப் பதிவுகள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்களும், தேசப்படங்கள் படங்கள் ஒளிப்படங்கள் வரைபுகள் மாதிரி உருவமைப்புகள் சுவரொட்டிகள் போன்ற வரையுருவ சாதனங்களும் நூலக சேர்க்கையில் இருப்பது மிக முக்கியமானதாகும்..

• இன்றைய தகவல் சமூகத்துடன் இணைந்து போகக்கூடிய வகையில் கணினி அறிவு, இணையப் பயன்பாடு பல்லூடக வசதிகள் உள்ளடங்கிய இலத்திரனியல் சாதனங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்




நூலகர்

நூலகம் என்பது நூல்கள் நூலகர்,வாசகர் என்பதன மூவுரு என்றால் இங்கு நூல்களையும் வாசகனையும் பொருத்தமான முறையில் இணைத்து விடுதல் என்னும் பணி நூலகரைச் சார்ந்தது. இங்கு இணைத்து விடுதல் என்பது ஷபொருத்தமான நூலை அதற்கு பொருத்தமான வாசகனிடம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் இணைத்துவிடுதல்ஷ என்னும் உட்பொருள் கொண்டது. இதற்கு வாசகனது வயது, அவனது தேவைகள், வாசகனது மனப்பாங்கு என்பனவும் நூல்களின் உருவமைப்பு முதற் கொண்டு உள்ளடக்கம் வரையிலான அறிவும் அவருக்கு அவசியமானது. வாசகனுக்கு தேவைப்படும் நூலை அவனுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுப்பதற்கு நூலக சாதனங்கள் அனைத்தும் தொட்டவுடன் எடுக்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். மாணவர்களது வயது அறிவுத் தரம் ஆர்வம் என்பவற்றின் அடிப்படையிலும் ஆசிரியர்களது தேவைகளது அடிப்படையிலும் மேற்கொள்ளப்படக்கூடிய பாரபட்சமற்ற நூல் தெரிவு, தன்னலமற்ற சேவை, பலதரப்பட்ட வாசகனது தகவல் தேவைகளையும் நினைவில் இருத்திக் கொள்ளக் கூடிய பல்பரிமாண நினைவாற்றல், வாசகர்களது குணநலன்களின் அடிப்படையில் எல்லோரையும் கருத்தில் கொள்ளக்கூடிய வகையிலான அநுதாப மனப்பாங்கு, பலதரப்பட்ட வாசகர்களது சுபாவங்களையும் எதிர் கொள்வதற்கான சாமர்த்தியம்,, வாசகனது அறிவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய புலமைத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக கடும் உமைப்பு ஆகிய ஏழு அம்சங்களும் ஒரு நூலகருக்கு இருக்க வேண்டிய சப்த ஒழுக்க தீபங்கள் என இந்திய நூலகவியல் அறிஞர் மிற்றல் கூறுவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக நூலகப்பணி என்பது வேலை தேடுவோரின் இறுதி வாய்ப்பாகவே இன்றும் கருதப்படுகிறது. நுண்ணறிவு மிக்க வாசகனை திருப்திப்படுத்தும் அறிவாளியாக,எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கும் தாழ்வுணர்ச்சியுள்ள வாசகனிடம் நல்லதோர் உளவியலாளராக, கூச்ச சுபாவமுள்ள வாசகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாக, ஷஎன்னை விட இவருக்கென்ன தெரியும்ஷ என நினைக்கும் எல்லாம் தெரிந்தவரையும்(?) பொறுத்துப்போகும் தத்துவவியலாளராக நூலகர்கள் புதிய யுகத்தில் மாறவேண்டிய தேவை உண்டு.

நூலகர் தானாக மாறாது விடின் புதிய தகவல் யுகமானது அவர்களை மாறும்படி நிர்ப்பந்திக்கும். அல்லது மாற்றும். ஏனெனில் புதிய யுகம் வேண்டுவது நுவலும் நூலகரையே அன்றித் தூங்கும் நூலகரை அல்ல.




குறிப்புதவு நூல்கள்









MITTAL,R,L. Library Administration:Theory and Pratice.-Delhi:Metrapolitan,1978
ANGRILLI,Albert and HELFAT,Lucile. Child Phychology.-Newyork:Barnes,1981.
RAY,Colin.Library services to school and children.-Paris:Unesco,1979.

No comments: