Sunday, September 11, 2005

நான் ஒரு புதினம்......

என் வீட்டு மாட்டுக்கும்
தன் மானம் பெரிது
கழுநீர் என்றாலும்
தன் வீட்டுத் தண்ணீரே குடிப்பதாய்.....

என் வீட்டு நாய்க்கும்
பண்பு அதிகம்
படலை திறந்தாலும்
பக்கத்து வீட்டுள் நுழைவதில்லையென்று.....

என் வீட்டுத் திண்ணைக்கும்
அத்தனை பெருமிதம்
இன்முகங் காட்டி
இருப்பதைக் கொடுத்து உபசரிப்பதாய்......

என் எழுதுகோலுக்கும்
சற்றே தலைக்கனம்
நல்லதை மட்டுமே
தான் எப்போதும் பேசுவதாய்........

போகுமிடமெல்லாம்
என்னுடன் மிதிபடும்
என் செருப்புக்கும் கூட
கர்வம் அதிகம்
மதியாதார் முற்றம் தானும் மிதிப்பதில்லையென......

என் மனைவிக்கும் கூட
நான் ஒரு புதினம்
பிழைக்க தெரியாதவன் என்று.....

உயிர்க் கூடொன்றுள் உறுதியாய் ஒரு வீடு

அவளுக்குள் இருக்கும்
அந்த வீடு
அப்பனின் சீதனமோ
ஆத்தாளின் முதுசமோ அன்று
அது......
அவளே அவளுக்காய்
அவளே கட்டியது.
அழகு நிறைந்தது
அளவில் பெரியது
எனினும்.....
எளிமையானது
எவரையும் ஈர்ப்பது.



மெத்தப் படித்தவர்
மேதினிக்காகாதவர்
செப்படி வித்தையில்
தேர்ந்த விற்பன்னர்
திரிசங்கு சொர்க்கமாய்
தினமும் திரிபவர்
ஏட்டுப் படிப்பதில்
கோட்டை விட்டவர்

ஏனென்று கேட்கவும்
நாதியற்றவர்
அத்தனை பேரும்
எத்தனமின்றி
எப்போதும் நுழைய
ஏற்றத் தாழ்வின்றி
எவருடனும் அமர
அன்பெனும் தேனீர்
அளவின்றி அருந்த
அறிவெனும் அமுதை
தெளிவுடன் புசிக்க
அளவறிந்து பழக
ஆறுதலாய் உரையாட
அளவில் பெரிதாய்
வரவேற்கும் அறையொன்று.



சம்பாசனைச் சந்தையில்
சகஜமாய் கிடைக்கும்
சங்கதி அனைத்தையும்
தனியனாய் தரம் பிரித்து
வேண்டியது எடுத்து
வேண்டாதது தவிர்த்து
அழுகல் நீக்கி
அழுக்கைத் துடைத்து
அறுசுவை உணவாக்கி
அடுத்தவருக்குக் கொடுக்க
அழகாய், அடக்கமாய்
அடுக்களையும் அதற்குண்டு.



அவனும் அவளும்
அவர்களின் வாரிசும்
அடுத்தவர் இடைஞ்சலின்றி
அமைதியாய் பள்ளிகொள்ள
குடும்ப உலகமதில்
குது}கலமாய் விளையாட
நாளுபேர் அறியாமல்
நாலும் கதைக்க
தொந்தரவின்றி
அந்தரங்கம் பேச
பள்ளியறை யொன்றும்
பாங்காய் அதற்குண்டு.



அடுத்தவர் அறியாமல்
அடிக்கடி வந்துபோக
தனிமையில் தன்னை
கூறுபோட்டு ஆராய
அறிந்தவர் கருத்தனைத்தும்
ஆழமுடன் பகுத்துணர
கற்பனை வானில்
களிப்புடன் சிறகசைக்க
அவளுக்கே அவளுக்கென
அந்தரங்க அறையொன்று
அடக்கமாய் அதற்குண்டு.



அப்பனின் ஆக்கிரமிப்பில்
ஆத்தாளின் அறிவீனத்தில்
அடுத்துப் பிறந்தவரின்
அசண்டையீனத்தில்
தேடுவாரின்றி
தினந்தினம் வரண்டு
காரைக்கும் நெருஞ்சிக்கும்
தொட்டவுடன் முகஞ்சுருக்கும்
தொட்டாற் சுருங்கிக்கும்
கட்டின்றி உள்நுழையும்
கட்டாக் காலிகளுக்கும்
களமாய் இருந்த
அவளது நிலத்தில்
இப்படி வீடெழுப்ப
எப்படி முடிந்ததோ...?



கட்டற்ற காணிக்கு
பட்டறிவால் வேலியிட்டு
கண்டவரும் நுழையாமல்
கண்ணியத்தால் கதவுசெய்து
முற்போக்குத் தனத்தால்
முட்கள் அகற்றி
தன் மான உணர்வே
நல் உரமாக
கண்ணுங் கருத்துமாய்
மண்ணைப் பண்படுத்தி
பக்குவமாய் அதை
பசுந் தோட்டமாக்கி
அறிவு வேட்டையில்
அங்கங்கே கிடைத்ததெல்லாம்
அடித்தளமாய் அமைய
வாழ்க்கைப் பாதையில்
விழுத்திய கற்களெல்லாம்
கற்சுவராய் எழும்ப
தன்னம்பிக்கையால் ஒரு
வன் கூரையிட்டு
இத்தனை உறுதியாய்
இல்லம் எழுப்பிவிட்டாள்.



தன்னினிய தாய் மண்ணை
அன்னியனின் கணைகள்
சன்னமாய் துளைத்தபோதும்
அங்கத்தை இழந்துவிட்டு
அவலத்தை சுமந்தபோதும்
தளராது நின்று
இத்தனை உறுதியாய்
தன் வீட்டைக் காத்த அவள்
இப்போதும் கூட
சக்குப் பிடிதத்து வரும்
சமுதாய சகதிதனில்
சரிந்து விடுமோ....?
வக்கிர மனங்களின்
துக்கிரிப் போக்கினால்
ஆட்டங் காணுமோவென
நித்தங் கலங்கி
கண்ணும் கருத்துமாய்
காக்கும் பணியதில்
நாளும் பொழுதும்
வாழ்வே அதுவாக.......

ஏக்கமும் தாக்கமும்-----

பக்கத்து வீட்டு எலுமிச்சை மரத்திற்கும்
எனக்கும் வயது பத்துக்குள் தான்.
மினுமினுத்த மேனியும் மேதகு வாழ்வுமாய்
அதுவோ வீட்டின் முற்றத்தில்……
குட்டை சொறியுடன் கோலங்கெட்டு
நானோ ஒதுக்குப் புறத்தில்…….
வேலி ஓட்டைக்குள் தினமும் அதைப் பார்த்து
பொங்கும் என் மனது -
அதனுடன் உறவாட அதுவாகவே நானாக
ஏங்கும் பல பொழுது -

வேண்டும் போது பசிதீர்க்க
விரும்பும் போது தாகந் தணிக்க
வட்டில் பாத்தி தனில்
வளமாய் உணவு
நிதமும் தயாராக…..
சிந்தாமல் சிதறாமல்
அடுத்தவர் தீண்டாமல்
கதியால் கூடொன்றோ
மிகவும் கவனமாக…..

காதல் து}துக்கு
எறும்புத் து}தர்களை
எளிதாய் வரவழைக்க
சக்கைத் தேங்காய்ப் ப10
குளியல் இடையிடையே
வந்த து}தர்
தங்கி ஓய்வெடுக்க
மட்டை மாளிகைகள் அங்கங்கே

நான் மட்டும் இங்கு
உணவளிக்க யாருமின்றி
அரவணைப்புக்கு தினமேங்கி
விதைத்து மட்டும் விட்டுவிட்டு
விட்டேற்றியாக
விலகும் மனத்திடம்
விடியலைத் தேடி….

அடுத்த வீட்டு வாய்க்கால்
பல பொழுது மனமிரங்கித்
தன் வரம்பை மீறி
என் தாகம் தணிக்கும்
வானம் சிலசமயம்
குமுறிக் கொந்தளித்து
எனக்காக விடுங் கண்ணீர்
எனக்குத் தெம்ப10ட்டும்.
தெம்படையும் போதெல்லாம்
பக்கத்து வேலியால்
எட்டியே நிதம் பார்ப்பேன்
நித்தமும் மனங் குமைவேன்.
விதைப்புடன் நின்றுவிட்டு
விளைச்சலுக்காக மட்டும்
வெறித்து வெறித்து நோக்கும்
ஈரமற்ற இதயங் கண்டு
வெட்கித் தலைகுனிவேன்.