Saturday, August 13, 2011

ஏ.ஜே. நான் கண்ட முகங்கள்





ஏ.ஜே.....

மனக்கண்ணில் அதிகம் வருவது பெண்மையின் சாயல் அதிகம் நிரம்பிய அந்த அழகிய பெரிய விழிகள். காலை வேளைகளில் வெள்ளைவெளேரென்று இருக்கும் அந்த விழிகளை மட்டுமல்ல! மீதிநேரங்களில் செம்மை அதிகம் படர்ந்திருக்கும் அந்த விழிகளையும் அவருக்குத் தெரியாமல் தூர இருந்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று. ஆங்கிலம் என்றாலே அலறியடித்துக்கொண்டு ஓடும் மாணவப்பருவத்தில், ஆங்கிலம் கற்பிக்கும் அனைவரையும் அச்சத்தின் பாற்பட்டு அதிதூரத்தில் நின்று அதிசயிக்கும்போதுகூட, அந்தக் கூட்டத்தில் நிறத்தால், உருவத்தால், கால்களை அகலப் பரப்பி விரைந்து நடக்கும் அந்த நடையால், அவரைச்சுற்றி எப்போதும் நிற்கும் கூட்டத்தால் தனிப்படத் தெரியும் அவரை பல்கலைக்கழக விரிவுரையாளர் பொது அறைக்கு முன்பாகப் போடப்பட்டிருக்கும் கல் இருக்கையில் அமர்ந்தபடி எனது விழிகள் ஆர்வமுடன் தேடிப் பார்க்கும். இது ஆங்கில ஆசிரியனாக ஏ.ஜே என்ற மனிதனிடம் நான் கண்ட முதலாவது முகம். 


1989இல் படிப்பறிவு மட்டும் துணையாகப் பல்கலைக்கழக நூலகத்தில் வேலை கிடைத்து நுழைந்த காலத்தில்  பல்கலைக்கழகப் பொது அறையில் அவரும் அவரைச்சுற்றி நிற்கும் கூட்டமும் பேசிக்கொள்ளும் விடயங்களை அரைகுறையாகச் செவிமடுக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நூலகத்தின் நூல் அடுக்குகளிடையே குடு குடுவென ஓடித்திரியும் ஏ.ஜேயையும் அன்றாடம் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆங்கிலம் கற்பிக்கும் ஒருவர் ஆங்கில நூல்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியில்  நிற்பதற்கு மாறாக நூல் அடுக்குகளின் ஒவ்வொரு பிரிவிலும் அவரைப் பார்க்கும் போது  ஆங்கில விரிவுரையாளர் என்ற அச்சத்துடன் அதிகம் வாசிப்பவர் என்ற பிரேமையும் அதிகரித்தது. தராதரப்பத்திரப் படிப்பை மட்டும் கொண்ட குடும்பச் சூழலும் படித்தவர்கள் அரிதாக உள்ள சுற்றுச்சூழலும் கொண்ட என்னுள் 'மதிப்புக்குரியவர்களுடன் சரிசமமாக நின்று உரையாடுவது அழகல்ல' எனச் சிறுவயதிலிருந்தே வேரோடிப்போயிருந்த, ஆழமான கருத்துநிலை அவரது ஆற்றலை அறிந்து கொள்வதற்கான கால இடைவெளியை நீடித்ததை மறுப்பதற்கில்லை. எனினும் ஏ.ஜே ஒரு ஆங்கில ஆசிரியன் என்ற எனது ஆரம்பத் தோற்றப்பாட்டை அடித்து மேவிக்கொண்டு உருவான வாசகன் என்ற தோற்றப்பாடுதான்  அவரைப் பற்றிய தேடலுக்கான அடித்தளமாக உருவாகியது. உலக அறிவுப் பிரபஞ்சத்தை பொருட்துறைவாரியாகப் பிரிக்க உதவும் நூலக தகவல் அறிவியல் துறையை மூன்று வருடங்கள் முயன்று கற்றதன் பயனாக ஒவ்வொரு பொருட்துறைக்குமுரிய வாசகர்களை இலகுவாக அடையாளங் காணத் தெரிந்த எனக்கு ஏ.ஜே எந்தப் பொருட்துறைக்குரிய வாசகர் என்று இனங்காணுவது ஆரம்பத்தில் குழப்பமாகவே இருந்தது.  அரசியல் துறை சார்ந்த நூல் அடுக்குகளில் அவரை அடிக்கடி பார்த்து சமூக அறிவியல் துறை சார்ந்தவர் எனப் பெரும்போக்காக முடிவெடுக்கும் மறுகணம் சினிமா பற்றிய நூல் அடுக்குகளிலிருந்து வெளிவருவார். ஏநசயஉழைரள சுநயனநச என்ற சொல்லுக்கு மிகப்பொருத்தமான மனிதன் அவர் தான்.  ஒரு வாசகனாக என்னை அதிகம் ஈர்த்த முகம் இது


ஒருவரைப்பற்றி  அடுத்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதை விடவும் அவர்களின் ஆக்கங்கள் மூலமாக அவர்களின் ஆற்றல்களை அறிந்து கொள்வதிலேயே அதிக நாட்டம் கொண்ட எனக்கு அவரது ஆக்கங்களை தேடிப் பிடிப்பதில் அதிக சிரமம் ஏற்படவில்லை. அவரது ஆக்கங்கள் அனைத்திலும் ஏனையவர்களது ஆக்கங்களிலிருந்து அவர் ரசித்துச் சுவைத்தது மட்டுமன்றி வெறுத்து ஒதுக்கியதுகளும் நிரம்பிக் கிடக்கும். 1967ம் ஆண்டு தொடக்கம்  மல்லிகையைத் தளமாகக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட திரைப்படம், மாக்சியம், இலக்கியம் போன்ற பொருட்துறைகள் சார்ந்த பல்பரிமாண எழுத்துக்கள் மட்டுமன்றி, கவிதைகள், அரசியல் உட்பட அவரது மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், பதிப்பு தொகுப்பு  வேலைகள் அனைத்தும் தீவிர வாசிப்புத்தன்மையிலிருந்து தோற்றம் பெற்ற பல்துறைப்புலமையாளன் என்ற புதிய தோற்றப்பாடென்றே கொள்ளமுடியும். பல்துறைப் புலமைமையாளர்கள் எம்மிடையே அன்றும் இன்றும் கணிசமாக இருந்தபோதிலும்கூட ஏ.ஜேயின் உருவாக்கங்கள்  தேர்ந்த சிற்பி ஒருவனின் சிந்தனையிலிருந்து இந்த சமூகத்துக்குக் கிடைத்த சிரஞ்சீவித்தனம் மிக்க ஓவியங்கள் என்பதில் அறிவுஜீவிகளிடம் எந்தவொரு கருத்துமுரண்பாடும் இருக்கமடியாது. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே அவரது கணிசமான நேரங்கள் செலவிடப்பட்டமை இச்சமூகத்துக்கு அவர் விட்டுச் செல்லும் பதிவுகளின் அளவைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது என்ற நெருடலும் மனதில் எழாமல் இல்லை. இது திறனாய்வாளன் என்ற வகையில் ஏ.ஜேயிடம் நான் கண்ட அதிசயிக்கத்தக்க ஒரு முகம்.


 கற்பிப்பவர்களுடன்  தோளுக்குமேல் கைபோடும் அல்லது கால் தொட்டுக் கும்பிடும் தற்கால உறவுநிலையை அருவருத்து ஒதுக்கி, மதிப்புக்குரியவர்களைத் தூர இருந்து பிரேமிப்பதையும்; எதிர்பாராமல் எதிரில் காண நேர்ந்தால்  தலைசரித்துச் சிறுநகையொன்றால்  அவர்கள் மீதான எனது மதிப்பை வெளிப்படுத்துவதையும் எப்போதும் கடைப்பிடிக்கும் எனக்கு ஏ.ஜேயுடன் ஏற்பட்ட முதலாவது தொடர்பு மிகவும் சுவாரஸ்யமானது. 90களின் ஆரம்பத்தில் தொழில் புரியும் இடத்தில் நான் பெற்ற அறிவை அமுல்படுத்துவதற்குத் தடையாக உள்ள அகப்புறச் சூழல்கள் தொடர்பாக எனக்குள் ஏற்பட்டிருந்த விரக்திநிலையை வெளிப்படுத்துகின்ற ஒரு கடிதத்தை நூலகவியல் துறை சார்ந்து எனக்கு அறிவையும் ஆர்வத்தையும் ஊட்டிய பேராசிரியர் ஒருவருக்கு  அனுப்பும் பொருட்டு ஆங்கிலத்தில் எவரது உதவியுமின்றி நானே முயன்று வடிவமைத்துவிட்டபோதும் அது சரியாக எழுதப்பட்டுள்ளதுதானா என்று எப்படி பரிசோதிப்பது எனத் திணறிக்கொண்டிருந்தபோது என்னுடன் பணிபுரியும் சக நண்பர் சிவபாதம் 'ஏ.ஜேயிடம் ஒருதடவை கொடுத்துத் திருத்துவோம்' எனப் பரிந்துரைத்தது மட்டுமன்றி அவருடன் தொடர்பையும் ஏற்படுத்தித் தந்தார். ஆங்கிலத்தில் பேரறிஞர் எனப்படும் ஏ.ஜேயிடம் கடிதம் போகப்போகின்றது என்பது தீர்மானிக்கப்பட்டவுடன் அந்த நேரத்து முதிர்ச்சியின்மை காரணமாகவோ என்னைப் பற்றி அவர் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்ற சிந்தனையாலோ, எனது வித்துவத்தனத்தை ஒருதடவை நானே பரிசோதிப்போம் எனத் தீர்மானித்து இலகுமொழியில் எழுதப்பட்ட அந்த மூன்று பக்கக் கடிதத்தை மிக கடினமான உயர்சொல்லாட்சிகளைப் பயன்படுத்தி மீள வடிவமைத்துக்கொண்டு, அதற்காக என்னை நானே மெச்சிக்கொண்டு அவரிடம் கொண்டு போய்க் கொடுத்தாகிவிட்டது. கடிதத்தை ஒருதடவை முழுமையாகப் படித்துவிட்டு 'ம்...ம் மிக நன்றாக இருக்கின்றது' எனப் பொதுவாக அவரது பாணியில் கூறிய ஏ.ஜே மிக மென்மையாக, மனதை நோகடிக்காத வகையில் 


'மொழி என்பது ஒரு தொடர்பு கொள் ஊடகம். எனவே தொடர்புகொள்பவருடன் அருகிலிருந்து கதைப்பது போன்ற உணர்வு கடிதத்தைப் படிப்பவருக்கு இருக்கவேண்டுமென்றால் அது மிகமிக எளிமையாக எழுதப்படவேண்டும். நீங்களும் அதை விரும்பினால் நாம் சிறு திருத்தம் செய்வோமா'

எனக் கூறியபடி  எனது பதிலை எதிர்பாராமலேயே உயர் சொல்லாட்சிகள் அனைத்தையும் வெட்டிவிட்டு அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்லாட்சிகளைப் போட்டுவிட்டு 'இப்போது மிக நன்றாக இருக்கிறது' என்றபடி திருப்பிக்கொடுத்தார். அவரது அதே எளிமையான சொல்லாட்சிகளைப் பயன்படுத்தி நான் ஏற்கனவே எழுதிய கடிதத்தின் நினைவு வர வெட்கம் பிடுங்கித் தின்ன எழுந்து வந்தபோதும் சரியான பாதையில் தான் நானும் செல்கின்றேன் என்ற நிறைவும் என்னுடன் கூடவே வந்தது. இந்த அறிவின் எளிமை ஏ.ஜேயின் அடுத்த முகம். 


அடிக்கடி நூலகத்தில் உலவும் ஏ.ஜேயை ஒழுங்கான வாசகனாக மட்டும் நான் பார்க்கவில்லை. எமது நூலகத்தின் முன்னாள் நூலகர் அறையில் அவரை அடிக்கடி காணும் வாய்ப்பு அடுத்த அறையில் பணிபுரிந்த எனக்கு மிக அதிகமாகவே கிடைத்திருக்கிறது.  நூலகவியல் துறையின் முதுகெலும்பாகக் கருதப்படும் நூல் தெரிவு என்ற அம்சத்தில், சமூக அறிவியல் துறைசார்ந்து  யாழ் பல்கலைக்கழக நூலகத்துக்கு ஏ.ஜே யின் பங்களிப்பு அதிகம் இருந்திருக்கிறது.  சமூக விஞ்ஞானம், மனிதப்பண்பியல் தொடர்பான நூல்களின் விமர்சனங்களை உள்ளடக்கிய சிறந்த ஒரு நூல் தேர்வுக்கருவியாக 1902ம் ஆண்டைத் தொடக்க ஆண்டாகக் கொண்டு பிரித்தானியாவிலுள்ள வுiஅநள னயடைல நெறளியிநச ஆல் வெளியிடப்படுகின்ற செய்தித்தாள் வடிவில் அமைந்த வுiஅந டுவைநசயசல ளுரிpடநஅநவெ என்ற வார இதழுக்கு எங்கள் நூலகத்தில் நிரந்தர வாசகர் இருவர் மட்டுமே. ஒன்று ஏ.ஜே மற்றது யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் முன்னாள் நூலகர் திரு சி. முருகவேள் அவர்கள். யு3 அளவைவிட சற்றுப் பெரிதாக கிட்டத்தட்ட 36 பக்கங்களில் வெளிவருகின்ற இந்த இதழ் உள்ளடக்கும் பல நூல்களுக்கான விமர்சனங்கள் சிலசமயம் இரு முழுப்பக்கங்களையும் தாண்டுவதுண்டு. இந்த விமர்சன இதழிலிருந்து கணிசமான நூல்களை யாழ் பல்கலைக்கழகத்துக்கு ஏ.ஜே தெரிந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார் இலக்கியம் மட்டுமல்ல—அரசியல், வரலாறு, சமயம், கலை, பொருளியல் என்று அனைத்துப் பொருட்துறை சார்ந்தும் அவரது கரங்களால் சரி() அடையாளமிடப்பட்ட பல இதழ்கள் இன்றும் இங்கு இருக்கின்றன. அதுமட்டுமல்ல சமூக அறிவியல் துறை சார்ந்த கணிசமான நூல்கள் ஏ.ஜே என்ற ஒருவாசகனின் கைமட்டும் பட்டதொன்றாகவே இருந்திருக்கின்றன. ஏ.ஜேயைத் தவிர இதை யாருமே வாசிக்கப்போவது கிடையாது எனச் சிரித்துக் கொண்டே திரு முருகவேள் அவர்கள் கூறுவது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.  'இலங்கையிலேயே சமூக அறிவியல் துறை சார்ந்து மிகச் சிறந்த நூல்களின் தொகுதி தொடர்பாக  யாழ் பல்கலைக்கழக நூலகத்துக்குள்ள தனித்துவத்தை அடிக்க வேறெதனாலும் முடியாது' என இற்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட  பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது கூற்று உண்மையெனில் அந்தப் பெருமையில்  கணிசமானளவு பங்கு ஏ.ஜேக்கும் உண்டு. திரு முருகவேள் காலத்தில் தொடங்கிய இந்தப் பங்களிப்பு முருகவேளுக்குப் பின்னரும்  நூலக உதவியாளராகக் கடமையாற்றும் திரு. சிவபாதத்தினூடாக கணிசமானளவு தொடர்ந்திருக்கிறது. கடைந்தெடுத்த பல்வேறு துறைப்பட்ட 11 நூல்களின் தேர்ந்த திறனாய்வு நூலான 'மத்து'  உம் கூட நூலகத் துறை சார்ந்து நோக்கும் போது நூல் தெரிவுக்கான ஒரு சிறந்த மூலமே.  வெறும் வாசகனாக மட்டுமன்றி சிறந்த நூல் தேர்வாளனாகவும் இவரை ஆக்கியது எது என்ற எனது நீண்டகாலத் தேடலுக்கு விடை கிடைத்தது இவரது பதிப்புப் பணியின் பெறுபேறாக அண்மையில் உருவான றெஜி சிறிவர்த்தனாவின் தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் என்ற நூலில் தான். 


'டெயிலி நியூஸ் என்ற பத்திரிகையின் வண்ணப்பக்கங்களில் வெளிவருகின்ற றெஜி சிறிவர்த்தனாவின் நூல்கள், திரைப்படங்கள், அரங்கு சம்பந்தமான  விமரிசனங்களை  1950 ம் ஆண்டு தொடக்கம், நான் ளு.ளு.ஊ படித்துக் கொண்டிருந்த காலத்தில், படித்து வந்திருக்கின்றேன்'

என இந்நூலின் முன்னுரையில் நான் வாசித்த ஏ.ஜேயின் வரிகள் நூலை அறிதல், ஆய்வு செய்தல், அழகாக அடுத்தவர் அறியும்படி செய்தல் என்ற கலைக்கு அத்திவாரம் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரேயே அதிலும் 16 வயதுப் பள்ளிபருவத்திலேயே போடப்பட்டபடியால் தான் நல்ல நூல்களின் தெரிவுக்கு சிறிது காலமாவது யாழ். பல்கலைக்கழக நூலகம் கொடுத்து வைத்திருக்கிறது. இது நூலக அறிஞராக நான் அறிந்த ஏ.ஜேயின் அடுத்த முகம். 


மொழிபெயர்ப்புத் துறையில் சிலகாலம் ஆழமாக ஊடுருவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தமிழ் மொழி நூல்களின் பற்றாக்குறை காரணமாக ஆங்கில நூல்களைக் கட்டியழவேண்டிய நிர்ப்பந்தமும், விரிவுரைகளுக்குக் குறிப்புகளைத் தரும் நாட்டமில்லாத ஒருசில விரிவுரையாளர்களும் இணைந்து பல்கலைக்கழக மாணவப் பருவத்திலேயே அடிநுனி தெரியாமல் இதற்குள் நுழையும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான் மட்டும் புரிந்துகொள்வதற்கான ஒன்றாக எனது மொழிபெயர்ப்பு இருந்தவரை இது தொடர்பான தேடலும் எனக்குள் கருக்கொள்ளவில்லை.  மொழிபெயர்ப்புச் சேவையானது ஆய்வு நூலகமொன்றின் முக்கிய சேவை என நூலகவியல் கல்வி போதித்த பின்னர்; நானாகவே விரும்பி இதற்குள் நுழைந்த காலத்தில் மொழிபெயர்ப்பின் பண்புகள் பற்றிய தேடலில் ஏ.ஜேயின் மொழிபெயர்ப்புகள் தட்டுப்பட்டபோதும் 'ஆங்கிலம் தெரியும் ஒருவருக்கு மொழிபெயர்ப்பதில் என்ன கஷ்டம்: வெளுத்துக் கட்டவேண்டியதுதானே' என்று அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பெரும்போக்காக விட்டிருக்கின்றேன். ஆனால் இத்துறைக்குள் மிக ஆழமாக ஊடுருவும் வாய்ப்புக் கிடைத்த ஒரு காலத்தில் எனது பணி அடுத்தவரின் பயன்பாட்டுக்குப் போகப்போகின்றது என்பது அடிமனதில் உறைத்தபோதுதான் மொழிபெயர்ப்பின் நுட்பங்கள் பற்றிய தேடல் எனக்குள் கருக்கொண்டது. நல்லதொரு தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆங்கில அறிவை விட தமிழ் அறிவு அதிகம் தேவை என எனது அனுபவ அறிவு இடித்துரைக்க, அதன்வழி ஏ.ஜேயின் மொழிபெயர்ப்பாக்கங்களை நோக்கி மீண்டும் படையெடுத்தபோது தான் அவரது தமிழ்ப்புலமையின் ஆற்றல் என்னைப் பார்த்து நகைத்தது. ஹென்றி கீசிங்கரின் 'டிப்புளோமசி' என்ற நூலின் சில பகுதிகளை மொழிபெயர்த்த காலத்தில் ஆசிரியரின் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த அந்த எழுத்துகளுக்கும் உயர் சொல்லாட்சிகளுக்குமிடையில் சிக்குப்பட்டு நான் திணறியபோது ஏ.ஜேயின் இருமொழிப் புலமைக்கு குறிப்பாக அந்தத் தமிழ்ப்புலமைக்குப்  பலதடவைகள் மானசீகமாக வணக்கம் செலுத்தியிருக்கின்றேன். இது சிறந்த மொழிபெயர்ப்பாளராக நான் தரிசித்த ஏ.ஜேயின் இன்னொரு முகம்.. 


'ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆய்வு தமிழில் எழுதினால் அது அலட்டல்' என்று ஆங்கிலத்தை அரைகுறையாகப் படித்தவர்களே ஆங்கிலமோகம் கொண்டு திரியும் இச்சமூகத்தில் ஆங்கிலச் சூழலில் பிறந்து அதில் வளர்ந்து அதையே பட்டப்படிப்பாகவும் தேர்ந்ததெடுத்த ஏ.ஜே  தனது மொழியைத் தலையில் வைத்தக்கொண்டு கூத்தாடினால் அது இயல்பு. மாறாக 

' ஆங்கிலம் உலகமொழி என்றும், அதனைக் கைவிட்டால் நமது அறிவு வளர்ச்சி தடைப்பட்டுவிடும் என்றும் தமிழ் சிங்களம் ஆகிய சுயமொழிகள் மூலம் நவீன விஞ்ஞானக் கருத்துக்களை உணர்த்தமுடியாதென்றும், ஆங்கிலத்தைப்புறக்கணித்தால் நாம் கிணற்றுத்தவளைகள் போலாகிவிடுவோம் என்றும் காரணம் காட்டும் இந்த ஆங்கில தாசர்கள் ஆர்.எவ்.ஜோன்ஸ் எழுதிய ஆங்கில மொழி வெற்றிவாகை சூடிய வரலாறு என்னும் நூலை வாசித்தார்களேயானால் நிச்சயமாக வியப்படைவதுடன் தங்கள் தவறான கருத்துக்களையும் களைந்தெறிவர்'


என்று மேற்படி நூலின் முன்னுரையாக ஏ.ஜே தரும் அவரது சொந்தக் கருத்தானது தாய் மொழிக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டப் போதுமானது. இதற்கு மகுடம் வைத்தாற்போன்று 


'சிங்களச் சட்டத்தின் அநுகூலங்கள்-பிரதிகூங்கள் பற்றிய விசாரணை தேவையில்லை. ஆனால் அச்சட்டம் காரணமாகத் தமிழ் அபிமானம் மீதூரப்பெற்றவர்களுள் நானும் ஒருவன் அந்த அபிமானமே தமிழில் எழுதவேண்டும் என்ற எனது முனைப்பின் ஊக்கமாகவும் அமைந்தது'


என மத்து என்ற நூலின் என்னுரையிலேயே தமிழ்மொழியின் மீதான பற்றை அவரே வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த தமிழ் அபிமானியாக மட்டுமன்றி தமிழ்ப்புலமையாளனாகவும் நான் தரிசித்த ஏ.ஜேயின் இன்னொரு முகம் இது.  


அகிம்சாவாதிகள், அடிதடிக்கு ஒதுங்குபவர்கள் மட்டுமல்ல புரட்சிகரமாகச் சிந்திப்பவர்கள் அனைவருமே ஏ.ஜேயில் அதிக மதிப்பு வைத்திருக்கின்றனர். இதை நான் எனது பல்கலைக்கழக மாணவப் பருவத்திலேயே இனங்கண்டிருக்கின்றேன். பல்கலைக்கழகப் படிப்புக்கும் மேலாகச் சமூக அக்கறையுடன் ஓடித் திரியும் எனது சக தோழர்களின் உதடுகள் மிக மரியாதையுடன் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக ஏ.ஜே என்ற வார்த்தை அமைந்திருந்ததை மிக ஆச்சரியத்துடன் அவதானித்திருக்கின்றேன். பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மாறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட அனைவரும் ஏ.ஜேயிடம் செல்வதைப் பார்த்திருக்கின்றேன். அதிலும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் சிம்மசொப்பனமாகக் கருதப்படும் திரு உதயகுமார் அவர்களுக்கும் ஏ.ஜேக்குமிடையில் நீண்ட கால தொடர்பு இருப்பதையும் அவதானித்திருக்கின்றேன். மானுடத்தின் மேம்பாட்டில் அவருக்குள்ள அக்கறையை அவரது எழுத்துக்கள் தௌ;ளத் தெளிவாகவே வெளிக்காட்டுகின்றமையையும் உணர்ந்திருக்கின்றேன். அப்படியாயின் ஏ.ஜே ஒரு புரட்சிவாதியா? புரட்சிகரமாக இருப்பவர்களால் எவ்வாறு அமைதியாக அனைவருக்கும் நல்லவராக இருக்கமுடியும்.? சிந்தனையில் புரட்சியும் செயலில் சாத்வீகமும் எவ்வாறு சாத்தியமாகும்? இந்தக் கேள்விகள் தொடர்ந்து மனதைக் குடைந்தபோது அதுநோக்கிய எனது தேடலில் தட்டுப்பட்டது தான் ஏ.ஜேயின் சில திறனாய்வுக் கட்டுரைகள். கட்டுரையில் கணிசமாகவே புரட்சி செய்திருக்கிறார் ஏ.ஜே. இதில் முக்கியமானவை, அடுத்தவர் மனதைக் கவர்ந்தவை சரஸ்வதியில் வந்த 'மௌனி வழிபாடு', மல்லிகையில் வந்த 'எல்லாம் தெரிந்தவர்' ஆகிய இரண்டு கட்டுரைகளும். 'விமரிசனத்தில் நக்கீரர் ஏ.ஜே. 1960ம் ஆண்டளவில் திடீரென மௌனியின் பெயர் இலக்கிய உலகில் அடிபடலாயிற்ற. அவரது எழுத்தில் ஒன்றைக்கூடிப் படித்தறியாத சில பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட தங்கள் .இலக்கியவரலாற்று நூல்களில் யாரோ எப்போதோ எங்கோ கூறிய வார்த்தைகளைத் தேவமொழியாகக் கொண்டு மௌனி சிறுகதையின் திருமூலர், விக்கிரகம் அது இது என்று எழுதிக்கொண்டும் தமிழ் இலக்கிய உலகில் இன்றைய முன்னணி எழுத்தாளர்களான க.நா.சு, சி.க.செல்லப்பா, தர்மு சிவராமு போன்றோர் மௌனியை தலையில் வைத்துக் கூத்தாடிக்கொண்டும் நின்றவேளையிலே மௌனியின் எமுத்தைப் பற்றி துணிவாகவும், சிந்திக்க வைக்கவும் ஏற்றதான முதல் விமரிசனக் கட்டுரையை மௌனி வழிபாடு என்ற தலைப்பில் சரஸ்வதியில் எழுதிப் பரபரப்பூட்டியவர் இந்த ஏ.ஜே' என ஏ.ஜேயின் எழுத்துலகப் புரட்சி பற்றி ஏ.ஜேயின் அட்டைப்படத்துடன் வெளிவந்த 1971ம் ஆண்டின் யூலை மாத மல்லிகை இதழில் செம்பியன் செல்வன் அவர்களின் மேற்கண்ட வரிகள் இதை மேலும் உறுதி செய்கின்றன. 


சிந்தனையில் புரட்சியைக் கணிசமாகக் காணக்கூடியதாக இருந்த எனக்கு செயலில் புரட்சி பற்றி அதிகம் அறியமுடியவில்லை. அனைவருக்கும் நல்லவர் என்பதிலுள்ள 'அனைவருக்கும்' என்பதன் ஆழ அகலம் தெரியாமல் குழம்பி, உண்மையை நேசிக்கும் ஒருவனால் எவ்வாறு பொய்மையைக் கண்டு கொதித்தெழாமல் இருக்கமுடியும் என்றும், ஒரு மனிதன் நேர்மையாக வாழவேண்டுமெனில் நித்தமும் மனவதைப்படுதல் தவிர்க்கமுடியாததல்லவா? என்றெல்லாம் எனக்குள் ஏற்பட்ட அவஸ்தையை நீக்கியது நண்பர் சூரி அவர்கள் கொண்டு வந்து கொடுத்த 2002 'காலம்' ஏ.ஜே சிறப்பிதழில் அவருடன் பத்து வருடங்களுக்கும் மேலாக இணைந்து பணியாற்றிய திரு நடேசன் அவர்களின் கட்டுரை தான். ஏ.ஜே தொடர்பாக வருகின்ற சிறியன சிந்தியாதான், நூலறி புலவன், அவிழ்ந்த அன்பினன் போன்ற சொற்களுடன் இணைந்து வருகின்ற 'உருத்திரமூர்த்தி', 'ஊழித்தீ', 'வார்த்தைகளில் இடிமுழக்கம் மின்னல்கள்' 'கர்ஜனை' போன்ற சொற்கள் அநீதியைக் கண்டு கொதித்தெழும் நேர்மையாளனது அடைமொழியாகவே எனக்குத் தெரிகின்றது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று 'கோப்பரேற்றர்' இதழின் பத்திராதிபர் குழுக்கூட்டங்களில் அதன் தலைவராக செயற்பட்ட பல்கலைக்கழக முன்னாள்  பேராசிரியர் நேசையாவுடன் தனது நேர்மையின் கோட்டிலே நின்று இவர் கர்ஜித்திருக்கிறார். இவை அறிவுபூர்வமானவையாக நிதானத்தின் வழியில் பண்பு தவறாதவையாகவே இருந்தன'.


செயல் புரட்சியும் பார்த்தாகிவிட்டது. மனம் திருப்தியடையவில்லை. உளவியல் ரீதியில் அவரின் வெளிப்பாடு பற்றியும் அறியும் ஆவல்.   உள்ளத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி ஒளி மிகுந்த அவரது விழிகள் தான் எனினும் கூட நேரிய பாதையை என்றும் நேசிக்கும் ஏ.ஜேயிடம் குறுக்கு வழியில் செல்பவர்கள் பற்றிய பேச்சு எழும் சமயங்களிலெல்லாம்   ஏற்படும் கோப உணர்வை திடீரெனச் செம்மை அதிகம் படர்ந்ததாக மாறிவிடும் அந்த முகம் பொதுவாகக் காட்டிவிடும்.  கருத்துக்கள் பற்றி அலசும் சந்தர்ப்பங்களில் அவரிடம் எழும் ஒருவித சிரிப்பு அக்கருத்துக்கள் தொடர்பான அவரது உடன்பாடின்மையை அப்பட்டமாகக் காட்டிவிடும். அந்தச் செம்மை படர்ந்த விழிகளின் 'ஒருவித'அசைவிலிருந்தே ஒன்றைப்பற்றிய அவரது உடன்பாட்டையும் உடன்பாடின்மையையும் இனங்காணும் வல்லமை அவருடன் நெருங்கிப்பழகும் ஓரிருவருக்கு மட்டுமே உண்டு  மற்றும்படி வார்த்தைகளால் காயப்படுத்தும் அளவுக்கு ஏ.ஜே குறைகுடம் அல்ல. 60 வயதுப் பராயத்தின் நடுப்பகுதியில் இருக்கும் அறிவும், அனுபவமும், முதிர்ச்சியுமிக்க ஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் இந்த உணர்வுகள் அவரது நடுத்தர பருவத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று எனக்குள் எழுந்த வினோதமான ஆவல் 
' சோக முகபாவத் தோற்றம் அவருக்கு இருந்தபோதிலும் ஏ.ஜே ஹாஸ்ய உணர்வுள்ளவர். கல்விக்கழகங்களில் கால் மிதிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த ஒண்டிப் பிழைப்போர், இலக்கியப் போலிகள். பகட்டுப்போலிகள், சுயமுன்னேற்றவாதிகள், சுத்த முட்டாள்கள் அனைவருமே அவரின் நுண்ணாய்வுக்கோ நகைப்புக்கோ தப்ப முடியாது. முட்டாள்களை சந்தோசமாக அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது'


 என இவருடன் 70களில் பழகி, 20 வருடங்கள் தொடர்பற்றுப்போய், மீண்டும் 2002 பாதை திறப்புடன் தொடர்பைப் புதிப்பித்த 'ஹர்ஷா குணவர்த்தனா'வின் வரிகளில் அதிகம் தரித்து நிற்க விரும்புகின்றமையை மறுக்கமுடியாது. ஏனெனில் யாழ்ப்பாணத்தின் வைகறை மெல்லொளியில் மதுச்சாலைகள் ஊடாக இவருக்கு வழிகாட்டிச் சென்றவராக ஏ.ஜே இருக்க 'உள்ளே தள்ளினால்' உள்ளதெல்லாம் வரும் என்ற யதார்த்தத்தை உள்வாங்க விரும்பும் எவருமே இந்த வரிகளில் திரிபு இருக்கும் என தள்ளி வைக்க மாட்டார்கள். கருத்தோ செயலோ சரியற்றதை துணிவுடன் எதிர்கொள்ளும் புரட்சியாளராக நான் விரும்பிக் கஸ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்த  ஏ.ஜேயின் அடுத்த முகம் இது.


வெளிநாட்டில் வதிகின்ற இணுவையூர் அன்பர்களின் ஆதரவில் உருவான நூலகமும் அரும்பொருளகமும் இணைந்த அறிவாலயம் என்ற அமைப்பின் திறப்புவிழா நிகழ்வை முன்னிட்டு மலர் உருவாக்கம் ஒன்றில் நான் முனைப்புடன் ஈடுபட்டிருந்த சமயத்தில் மலருக்கு கட்டுரையொன்றை ஏ.ஜேயிடம் இருந்து எடுத்துப் போட வேண்டும் என்ற எனது விருப்பை சிரமேற் கொண்டு நண்பர் சூரி அவர்கள் எடுத்த முயற்சியானது 'மெச்சத்தக்க முன்னுதாரணம்' என்ற தலைப்பில் அவரிடமிருந்து இருபக்கக் கட்டுரையாக வந்தபோது சரியான முயற்சிக்குத் தான் நானும் பாடுபடுகின்றேன் என்ற மகிழ்வையும் நிறைவையும் கொடுத்தது. 


 'அரும்பொருட் காட்சியகங்களை அமைப்பதன் மூலமாக, அடிமட்டக் குடியாட்சி போன்று, சாதாரண, பாமரமக்களின் அடிமட்ட வரலாற்றினையும் உய்த்துணரமுடியும். இதன் மூலம் வரலாறு என்றால் அரச வம்சங்களினதும், உயர் வர்க்கத்தினரினதும் வரலாறு என்னும் மாயையைக் கலைத்து, வங்காள வரலாற்று ஆசிரியர் ரணஜித்குகா போன்றோர் தொடங்கி வைத்த கீழ்மட்டங்களின் வரலாற்றாய்வுகள் என்ற மார்க்கத்தில் எம்மைச் செல்வதற்கு உந்தும். அப்பொழுது இதுகாறும் நாம் படித்த, படித்துவரும் 'வரலாறு' என்ற பாடம் அடித்துச் செல்லப்படும். இது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை'.


 அவரது கட்டுரையிலிருந்து என்னை ஈர்த்த மேற்குறிப்பிட்ட வரிகள் புதிய சமூக உருவாக்கத்தை அவாவும் ஏ.ஜேயின் இன்னொரு முகம்.


இறுதியாக, ஏ.ஜே என்ற அறிவுத் துறைமுகத்தைத் தேடிப் பல தோணிகள் வந்து இளைப்பாறிப் பலன் பெற்றுப் போனமையை அனைவரும் எற்றுக்கொள்கின்றனர். ஆனால் இந்தத் துறைமுகத்துக்குரிய சரியான கௌரவத்தை அளிக்க ஒரு தோணியாலும் ஏன் முடியவில்லை ? கௌரவிக்க விரும்பியவர்களுக்கு அதிகாரமும் ஆற்றலுமில்லை. அதிகாரமும் ஆற்றலும் இருந்தவர்களுக்குக் கௌரவிக்கும் எண்ணம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது தனிச்சிங்களச் சட்டத்தால் தான் ஏ.ஜே என்ற தமிழ்ப்புலமையாளன் இச்சமூகத்துக்குக் கிடைத்தது போன்று இந்த அசண்டையீனத்தால் தான் முதுகு சொறிதல்களுக்கும் முகம் மழுப்பல்களுக்கும் தலைவணங்காத அறிவின் நிமிர்வை, அள்ள அள்ளக் குறையாக அறிவூற்றை, இறுதிவரை தாய்மண்ணையும் மொழியையும் நேசித்த மனிதனை, அறிவால், எளிமையால், குணத்தால், பண்பட்ட நடத்தையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய மானுடத்தை இந்த மண் இனங்காணும் வாய்ப்பும் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது என்று ஏ.ஜேயின் பாணியிலேயே இவர்களுக்கும் ஏதாவது சமர்ப்பணம் செய்துவிடலாமா?  


கடந்த ஒக்டோபர் 18ம் திகதி புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக புவியியல் மண்டபத்தில் அவரது நினைவு அஞ்சலி நடைபெற்றது. அவரைப் பற்றி எவ்வளவோ பேசினார்கள். அவர் ஒரு சிறந்த வாசகன் என்பதால் தான் அவரைப் பற்றி இவ்வளவு கதைப்பதற்கு இருந்தது என்றோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்தகாலத்திலும் சரி ஓய்வு பெற்று யாழ் மண்ணில் இறுதி வரை இருந்த காலத்திலும் சரி அவரது நேரத்தில் கணிசமானளவு யாழ் பல்கலைக்கழக நூலகத்தில்  தான் கழிந்தது என்பதோ அங்கு வெளிப்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் அவரை நல்லதொரு மனிதனாகத் தரிசித்த எத்தனையோ உள்ளங்களின் நினைவுரைகளில் மனதைக் கவர்ந்தவை இவை:


திருமதி சாந்தி விக்னராஜா: ஏ.ஜே திருமணம் செய்திருந்தால், குழந்தைகளைப் பெற்றிருந்தால் இந்த தனித்துவ ஆளுமையை பெற்றிருப்பாரோ தெரியாது. எனவே  இவ்வாறு தனித்திருந்ததுதான் ஏ.ஜே என்ற முழு மனிதனை எமக்குப் பெற்றுக் கொடுத்தது.


 திரு சோ.பத்மநாதன்: திரு ஏ.ஜே அவர்களுக்கும் அவரது பெருமதிப்பைப் பெற்ற சிங்கள அறிஞர் றெஜி சிறிவர்த்தனாவுக்கும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் தரநிலை( class ) இல்லை. எனவே அறிஞர்களாக இருக்கவேண்டுமெனில் அவர்களுக்கு class இருக்கக்கூடாது என முடிவெடுக்கலாமா?. 

பேராசிரியர் வி.பி சிவநாதன்: 'அனைத்திலும் முழுமைத்தன்மை நிறைந்த ஒரு  மனிதனை குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான உயிரணுவைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் யாருடைய உயிரணுவைச் சிபார்சு செய்யலாம் என்று என்னைக் கேட்டால் அது ஏ.ஜே மட்டும் தான் என்றே நான் கூறுவேன்.'





No comments: