Friday, March 14, 2014

வரம்



உன் காட்டில் இன்று விசேட மழை
உனது கண்மூடித்தனமான வேண்டுதலை
புறக்கணிக்க முடியவில்லை மழையின் வேந்தனுக்கு
வந்துவிட்டான் மேளதாளங்கள் வாணவேடிக்கைகளுடன்
.
பேய்க்காற்றின் ஒருதலைக்காமத்தால்
மானபங்கப்பட்டு சிதைவுற்ற போதிலும்
'யாமார்க்கும் குடியல்லோம்
எமனை அஞ்சோம்' என்று
தலைநிமிர்த்தி நிற்கின்றன
உன் நீண்ட நெடுமரங்கள்

தப்பிப் பிழைக்கும் தந்திரோபாயத்தில்
எம்மூர்ப் புத்திஜீவிகளுக்கு
நாம் சளைத்தவர்கள் அல்ல என
வெள்ளத்தின் திசையில்
முதுகு வளைத்துப் படுத்திருக்கின்றன
புல் பூண்டு, செடி கொடிகள்

அள்ளுண்டு போன வெள்ளத்தில்
உறவுகளைப் பலிகொடுத்து
ஏங்கித் தவிக்கின்றன
முடிவெடுக்க முடியாது
முழிப்பதே வாழ்வாகிப் போன
உன் பிரஜைகள்

பேய்க்காற்றில் சிக்கி
பெருவெள்ளத்தில் அகப்பட்டு
உயிர் பிழைத்த அதிசயத்தை
கதை கதையாய் சொல்கின்றனர்
எதேச்சையாய் உன் காட்டை
கடக்க நேர்ந்தவர்கள்

பக்தனின் வேண்டுதலுக்கு ஒரு படி மேல் 
தலைசாய்த்த திருப்தி மழையின் வேந்தனுக்கு

பக்தா உனக்கு எதில் திருப்தி?

2009

மாறியது எப்போ?


உனது இதயம்
நான் மட்டும் உறையும்
கருப்பக் கிரகம் உள்ள
சிறு கோவில்
என்றல்லவா இறுமாந்திருந்தேன்

பரிவார மூர்த்தங்கள் சூழ்ந்த
பெருங்கோவிலாக
அதை நீ மாற்றியது எப்போது?

Sunday, March 09, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்


'என்னடி! கொக்காள் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லைப் போல கிடக்கு. ஏழு மணியாவிட்டுது. இன்னும் எழும்பாமல் படுத்திருக்கிறாள்'.

தன்னுடைய செல்ல மகளைக் கேட்டபடியே தேத்தண்ணி வைக்க அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தாள் பூமணி. இவள் வேலைக்கு வெளிக்கிட்ட காலம் தொடக்கம் அம்மாவுக்கு இவளுடனான அந்நியோன்னியம் மெல்ல மெல்ல விலகிக் கொண்டதும் ஆரம்பத்தில் காரணம் புரியாமல் குழம்பினவளுக்கு, காரணம் தெரிய வேண்டும் என்ற விருப்பம் மெல்ல இல்லாமல் போய்விட்டதும் நடந்து வருடங்கள் பல.

மாதத்தில் வரும் இந்த மூன்று நாட்களும் அவளுக்கு உபத்திரவ நாட்களாகி இப்போது இருபத்தைஞ்சு வருசமாச்சு. வயிற்றுக் குத்துடன் தொடங்கும்   உபாதை இறுதியில் வாந்தியாக வெளிவந்து தான் மெல்ல அடங்கும். இதில் வினோதம் என்னவென்றால் குத்துக்குச் சரிசமமாக அவளுக்கு இந்தக் காலங்களில் அதிக பசியெடுக்கும். குறைந்தது இருநாட்களாவது லீவு போட்டுவிடுவாள்.

'டாக்குத்தர் மாரிட்டை காட்டினால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்டு சொல்லுகினம். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கலியாணம் கட்டி ஒரு பிள்ளை பிறக்க இந்தக் குத்து நிண்டுவிடும் எண'டு சொல்றான்கள்' அம்மா பக்கத்து வீட்டுக் கமலம் அக்காவுக்கு அன்றொருநாள் பிரலாபித்தது நினைவுக்கு வந்தது.

'கலியாணம் கட்ட நான் என்ன--? மாட்டன் எண்டே நிக்கிறன்;. அதுவும் வரவேணுமே' மனத்திற்குள் குமைந்து கொண்டே தன் முன்னே தாய் கொண்டு வந்து வைத்த சாப்பாட்டை பார்த்தாள் வசந்தி. பசி, வயித்துக்குத்துடன் அம்மாவின் அலட்சியமும் சேர்ந்து கோபம் தலைக்கேறியது.  

எணை!. இந்த நேரங்களிலையாவது குளிர்ச்சாப்பாட்டை  குடுக்கக்கூடாது எண்டு யோசிக்கமாட்டியோ?'

'நான் என்ன செய்யிறது! கொண்ணை திருக்கை மட்டுந் தான் வேண்டியந்தவன்.'

அம்மாவுடன் இவள் ஏதும் கதைக்க வெளிக்கிட்டால் அது சண்டைதான் எண்டு முதலே முடிவெடுத்து கவர் எடுக்க வந்து விடுவாள் அம்மாவின் செல்ல மகள். வேலையின்றி வீட்டில் இருக்கின்ற தனக்கு அம்மாவை ‘காக்காய்‘ பிடித்து அதன் மூலம்  கிடைக்கிற மேல்மிச்சங்களுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்கு.

ஒரு பொட்டச்சி உழைச்சுக் குடுக்க வீட்டிலை சும்மா இருந்துகொண்டு அவருக்குப் பிடிச்ச சாமான் தான் வேண்டுவாராக்கும். மனசிலை வந்ததை வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை அவளால். 'மாதம் முழுக்க உழைச்சுப் போடுறன். ஒரு முட்டையாவது பொரிச்சுத் தர இந்த மனிசிக்கு ஏன் மனம் வரமாட்டுதாம்' புறுபுறுத்தபடி அந்த ஓலைப் பாயில் மீண்டும் சரிந்து படுக்க முனைந்தவளின் கவனத்தை தங்கையின் குரல் திருப்பியது.


கண்ணாடியின் முன் நின்று கொண்டு கடலை மாவும் முட்டை வெள்ளைக் கருவும் கலந்த கலவையை முகத்துக்குப் பூசியபடியே தங்கை புறுபுறுப்பது அட்சரசுத்தமாகக் கேட்டது.

 'மனிசர் படுகிற இந்தக் கஷ்டத்துக்கை இவவுக்கு முட்டைப் பொரியல் கேட்குதாக்கும்.'


Friday, March 07, 2014

அனைத்துலகப் பெண்கள் தினம்



இனம், மதம், நிறம், மொழி, கலாசாரம், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றால் வேறுபட்டபோதும் பெண் என்ற அடையாளத்தால் ஒன்றுபட்டு நிற்கும் பெண்ணினம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமூக நீதி, சம உரிமை, சமத்துவம் போன்றவற்றுக்காகவும் ஒன்று திரண்டு அகிலம் எங்கணும் குரல் கொடுக்கும் நாள் இது. நாளொன்றுக்குப் பத்துமணி நேர வேலையும், ஆண்களுக்கு இணையான ஊதியமும் கோரி பெண் நெசவுத் தொழிலாளர்கள் இற்றைக்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1857ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி தொழிற்சங்க ரீதியாக ஒன்று திரண்டு முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்க மண்ணில் உரிமைப் போராட்டத்தில் குதித்த நாள் இது. உலக சனத்தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்ட தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பெண்கள். அதேசமயம் உலக மொத்த வருமானத்தில் பத்திலொரு பகுதியை மட்டுமே பெறும் பரிதாபத்துக்குரியவர்களும் இவர்கள் தான். எமது பிரதேசத்தில் அரச உத்தியோகங்களில் இந்த பாரபட்சநிலை இல்லாதிருப்பினும் கூலித்தொழில்களில் இப் பாரபட்சம் அதிகமாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. குறைந்த கூலியில் கொள்ளை இலாபம் அடிக்கும் நோக்குடன் தமது உமைப்பை சுரண்டுபவர்களுக்கு எதிராக முதன்முதல் அணிதிரண்டு போர்க்கொடி தூக்கிய நாள் இது.

உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

மனித சமுதாயத்தின் இறுதி இலக்கு தான் விரும்பியதை அடைதல். இவ்வுலகிலுள்ள படைப்புகள் அனைத்திலும் மனிதன் மாத்திரமே இறுதி இலக்கை அடைபவன். சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்து கள்ளர், பொய்யர், வஞ்சகர் போன்ற பலதரப்பட்ட மனித வர்க்கங்களைக் கடந்து நேரிய வழியில் நீதி, அன்பு, ஓழுக்கம் என்பவற்றைப் பின்பற்றி தனது இலக்கை அடைய விரும்பும் மனிதனுக்குத் தேவைப்படுபவை தன்னம்பிக்கை திறமை நிதானம் என்ற மூன்று பண்புகளுமே. இந்த பண்புகளை பெறுவதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அழகு அல்ல-- ஆளுமை என்ற அம்சமே என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களேயானால் உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் ---------

நிமிர்ந்த நடை, நேரிய பார்வை, அமைதியும் எளிமையும் இயைந்த தோற்றம், ஆழமான பேச்சு இவையே ஆளுமையின் வெளிப்பாடுகள். எமது தோற்றத்தினால், எமது உயரிய பண்பினால், எமது செயல்களினால் எம்மைச் சூழ இருப்பவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், எமது சிந்தனைகளை அவர்கள் ஏற்று, அதனை மதித்து நடக்கத் தூண்டும் ஆற்றல்-- இது தான் மனித ஆளுமை. ஆறடி உயரத்திலும் துவண்டு, கூனிக் குழைந்து நடப்பதை விட ஐந்தடி உயரத்திலும் கம்பீரமாக நிற்க முனைவது ஆளுமை. உதடுகள் அழகற்றதாக இருப்பினும் தமது அறிவுபூர்வமான பேச்சால் அடுத்தவர் கவனத்தை தம்மீது திருப்ப முனைவது ஆளுமை. காலால் நிலத்தில் கோலம் வரைந்து கொண்டு அல்லது கண்கறை அங்குமிங்கும் அலைய விட்டுக் கொண்டு  எதிரிலிருப்பவரிடம்; கதை கேட்பது அல்லது கதை சொல்வது ஆளுமையைச் சிதைத்து முன்னேற்றத்தின் தடைக்கற்களாக்கிவிடுகின்றது. அழகுக்கும் ஆளுமைக்குமிடையிலான பேதத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போது உங்கள் விடுதலைக்கான அடித்தளம் இடப்படுகின்றது. -------

பெண் என்பவள் போகத்துக்குரியவள் என்ற அசைக்க முடியாத கருத்துநிலை பள்ளிப் பக்கமே எட்டிப்பார்க்காத பாமரப் பெண்ணைவிட பட்டப்படிப்பை முடித்துப் பதவியிலிருக்கும் பெண்ணிடம் அதிகம் என்பது கசப்பான உண்மை. அறிவுக் கண் திறந்து அறிவுப் பாதையில் நடைபயிலத் தொடங்குபவள் கூட அழகுக் கவசங்களைக் கைவிட விரும்புவதில்லை. மனித வாழ்க்கைப் பாதையில் இச்சைகளுக்கு அடிமையாகும் ஒரு குறுகிய காலப் பகுதிக்கு மட்டுமே அழகும் அலங்காரமும் ஆக்கிரமிக்க முடியும்.  அழகுப் பதுமைகளாக மட்டுமே இதுவரை உங்களைப் பார்த்துப் பழகிய கண்களை உங்கள் ஆளுமையால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்ற யதார்த்தம் எப்போது உங்களுக்கு உறைக்கின்றதோ அங்குதான் உங்கள் முன்னேற்றத்திற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கப்பெறுகின்றன.

அறிவுக் கண்களால் அறியாமை என்னும் இருளைப் போக்கும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். ஒப்பீட்டளவில் நீங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கும் இடமும் இதுவாகவே இருக்கின்றது. நாளைய சமூகத்தை வடிவமைக்கப் போகும் சிற்பிகளைத் தயார்படுத்தும் உன்னத இடம் வகுப்பறை. அறிவுக் கவசமிட்டு, ஆளுமையின் மூலம் கவர்ந்திழுத்து, தோற்றம், ஒழுக்கம், உயரிய செயற்பாடுகள் மூலம் உங்களில் மரியாதையை, மதிப்பை, பக்தியை ஏற்படுத்தி உங்கள் அறிவை அவர்களிடம் பதிய வைக்கும் உன்னதமான இடம். தனது குருவிடம் பக்தியும் மரியாதையும் கொள்வதற்கு தடையாக இருப்பவை கண்ணைப் பறிக்கும் ஆடையும், கழுத்து நிறைந்த ஆபரணங்களும் அமைதியைப் பறிக்கும் கொலுசுச் சத்தமுமே. வெள்ளைச் சீருடை, சீரான தலையலங்காரம், ஆபரணத் தடை என்று பிஞ்சு மனங்களில் புறத்தூய்மையை சட்டம் போட்டு ஏற்படுத்தும் நல்ல பண்பை வகுத்திருக்கும் நீங்களே உங்கள் கோலங்களால் அவர்களின் அகத்தை அழுக்காக்குகின்றீர்கள் என்ற யதார்த்தத்தை உணருங்காலம் எப்போது வருகின்றதோ அங்கே உங்கள் முன்னேற்றத்திற்கான படிக்கற்களை நீங்களே எழுப்புகின்றீர்கள்.

அறிவும் ஆளுமையும் போட்டி போட்டுப் பரிணமிக்க வேண்டிய இடம் நிர்வாகப் பதவிகள். கம்பீரம் பொருந்திய காலடிச் சத்தத்தில், ஆழ்ந்த அமைதியான பார்வையில், உதடு பிரியாத புன்னகையில், இலேசான தலையசைப்பில், பெரிய நிறுவனத்தையே கட்டியிழுக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. அழகு விம்பம் ஒன்று தனக்குச் சமமான வகையில் அல்லது தன்னைவிடவும் சிறந்த வகையில் கருத்துகளை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே தயங்கும் இச் சமூகத்தின் மனத்தில் உங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிப்பதற்கு உங்கள் அகப் புறத் தோற்றங்கள் மாறவேண்டும். நகப்பூச்சின் தரம், ஆபரணங்களின் கன பரிமாணம், வாசனைத் திரவியங்களின் உற்பத்தி மையம் என்பவற்றை ஆராயும் இடமாக வன்றி ஆழ்ந்த நோக்கு, அளவான பேச்சு, அறிவார்ந்த கருத்து என்பவற்றின் மூலம் உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் மதிப்பையும் மரியாதையையும் பெறும் விருப்பம் உங்களிடம் எப்போது தலைதூக்குகின்றதோ அப்போது உங்கள் விடுதலை உங்கள் கண்ணெதிரில்.-----

புதிய உயிரொன்றின் உருவாக்கத்துக்கு வேண்டிய இரு அடிப்படை மூலப் பொருட்களும் ஆணுக்கும் பெண்ணுக்குமுரியவை. ஆனால் இந்த மூலக்கூறுகளினின்றும் முழுமையான உருவத்தைச் சமைக்கும் மேலதிகப் பொறுப்பு கருப்பைக்கு மட்டுமே உரியது. கருவைச் சுமந்த இரண்டாவது மாதத்திலிருந்தே தாயின் உணர்வுகள் கருவைப் பாதிக்கின்றன என அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையானால் ஆணின் கருவைச் சுமக்கும் வெறும் கருவியே தான்  என்ற கருத்துநிலை தகர்ந்து ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு உயிரை உற்பத்தி செய்யும் உற்பத்திச் சக்தியே தான் என்ற கருத்துநிலைக்கு ணெ; மாறுதல் வேண்டும். நீங்களே விரும்பி ஆணுடன் இணைந்து குழந்தையும் பெற்றுவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்ற முறைப்பாட்டுடன் அடுத்தவர் முன்னே போய் நிற்காது கருப்பையில் ஆணின் உயிரணுவை உள்வாங்கத்  தயார்படுத்தும்போதே உருவாகப்போகும் புதிய உயிருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை எப்போது உருவாக்கிக் கொள்ளுகின்றீர்களோ அன்றே உங்கள் முன்னேற்றம் உங்கள் காலடியில்-----

'தனது மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களை மனிதனால் மாற்ற முடியும் என்பதே மனித வர்க்கத்தின் முதன்மையானதும் முதல்தரமானதுமான கண்டுபிடிப்பாகும்' என்கிறார் உளவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ். 'உயிரைக் காக்கும்! உயிரினைச் சேர்த்திடும்! உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்! உயிரிலும் இந்தப் பெண்மை இனிது! எனவே பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா' என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில் நீங்கள் மாறவேண்டும் உங்கள் மனம் மாறவேண்டும். மனமாற்றம் மானுட விடுதலையை வென்றெடுக்கும் என்பது உண்மையானால் 

உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

ஸ்ரீகாந்தலட்சுமி
08-03-2006

எப்படி வந்தது?



பெண்ணுக்கு விடுதலை
பெரும்படிப்பால் தான் என்றபோது
பெருமையுடன் பட்டங்களை
எண்ணத் தொடங்கினேன்

பெண்மைக்குள் பொதிந்திருக்கும்
பேராற்றல்களை
பெரும் பெரும் புத்தகங்களின்
சொல்லாட்சிக்குள் தேடினேன்

கீழுழைப்பைக் கற்றுக்கொடுத்த
முதலாளியத்தின் சுரண்டல்களை
பெண்விடுதலை என முழக்கமிட்டோர் கூட்டத்தில்
முண்டியடித்து முன்னணியில் வந்தேன்

அரசியலில் அதிசயம் படைத்தோருக்கும்
அதிசயமாய் அரசியலில் நுழைந்தோருக்கும்
பேதம் புரியாது அத்தனை பேரையும்
பெருமைமிகு பெண்மணிகள் பட்டியலில்
தேடித் தேடிச் சேர்த்தேன்

ரஷ்ய மண்ணில் ஒரு கொலன்ரோயை
காலனித்துவ சாம்ராஜ்யத்தின் இரும்புப் பெண்மணியை
இஸ்ரவேல் பெற்ற கோல்டா மேயரை
இந்திய மண்ணில் நேருவின் புதல்வியை
இந்த மண் பெற்ற உலகின் முதற் பெண் பிரதமரை
தேடித் தேடிப் படித்தபோது
கிடைக்காத நிறைவும் பெருமையும்
இவளிடம் மட்டும் எப்படி வந்தது?

ஏழ்மையுடன் எதிர்நீச்சல் போடும்
எழுத்தறிவின்மையை சமாளிக்கும்
எவரதும் ஆதரவற்றதன்மையை சகித்துக் கொள்ளும்
'கைநீட்டுதல்'கௌரவக் குறைவு என்று
தனது காலில் நிமிர்ந்து நிற்கும் இத்துணிவை
கைக்கெட்டிய தூரத்தில் தரிசித்ததனாலா?

Sunday, March 02, 2014

அழைப்பு மடல்?



உங்கள் அப்பாவின் புகுந்த ஊர்
அதிசயங்களை
அவர்கள் சொத்தெனக் கொள்ளும்
பாரம்பரியங்களை
அருங்காட்சியகங்களில்; கண்டு
விழிமலர்த்தி ஆச்சரியப்படும்
உங்கள் விம்பங்களை
முகநூலில் காண்கிறேன்.

நாளுக்கு நாலு தரமாவது
வெத்திலை போடாவிட்டால்
'பொச்சம்'  தீராத
தன் அம்மாவின் இடுப்புச் சீலைக்குள்
எப்போதும் இருந்ததாம் என்று
என் மாமா பத்திரமாய்  தந்த
உங்கள் கொள்ளுப் பாட்டியின்
வெத்திலைப் பணிக்கமும்
வெத்திலைச் செல்லமும்

பக்கத்து வீட்டு மணிக் குஞ்சியிடம்
கெஞ்சிக் கூத்தாடி அப்பிக் கொண்டு வந்த
அந்தப் பித்தளைப் பாக்குரலும்;

சித்தி வீட்டு கோடிக் கிளுவையில்
அனாதரவாகத் தொங்கி
'மம்மல்' பொழுதொன்றில்
யாருமறியாது என் வசமாகிய
உங்கள்; பூட்டியின் தூக்குவாளியும்

அயலட்டைக்கு பால் அளக்கவென
உங்கள் பூட்டன் வைத்திருந்த
அரையடி உயர மூக்குப் பேணியும்

பாரம்பரியங்களை பத்திரப்படுத்தும் நோக்கில்
எங்களுர் பழைய பாத்திரக்கடையில்
பேரம் பேசி பாதி விலையில் அமுக்கிய
பழங்கால தூண்டாமணி விளக்கும்
பேரம் பேசும் திராணியற்று
ஆமர் வீதிச் சந்தியில் அறாவிலையில் வாங்கிய
அலங்கார வெத்திலைத் தட்டமும்

எங்களுர் கோவில் திருவிழாவுக்கென
வருடம் தோறும் வருகை தந்து
சரஸ்வதி ரீச்சர் வீட்டில் சிரம பரிகாரம் செய்யும்
யானை உண்ட விளாங்கனியில்
அற்புதமாய் என் சித்தப்பன் செய்து
ஆசையுடன் உங்கள் அப்பன்
உருட்டி விளையாடிய பம்பரமும்

அநாகரிகம் என்று நினைத்து
'பழையகோட்' காரனுக்கு
'அடிமாட்டு' விலையில் தள்ள எண்ணி
உங்கள் அம்மா கோடியில் தூக்கிப் போட்ட
பித்தளைக்குடமும் குத்துவிளக்கும்
அரியண்டம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட நானும்

பத்திரமாகத்தான் இருக்கின்றோம்;
அநாதரவான இந்த வீட்டின் அதிசயங்களாய்
எப்போது வருகின்றீர்கள்
இந்த அதிசயங்களைப் பார்ப்பதற்கு?

விடலைகள் என்னும் விசித்திர உலகில் - 3


நீங்கள் எந்த ரகம்?

அன்பானவர்களா?
அன்பு என்ற மனவெழுச்சி தீவிரமடையும் போது வலியைத் கைகளால் தடவித் தணிக்கக் கூட வாய்ப்புக் கொடுக்காது சக தோழன் அல்லது தோழிக்கு நடு முதுகில் அழுத்தமாய்; ஒரு போடு போடச் சொல்லும். குழந்தையாயின் குழந்தை அழும் அளவுக்கு நெருக்கி அணைத்து முத்தம் கொடுக்கும். கொஞ்சம் வளர்ந்த குழந்தையாயின் குளறக் குளற உயரமான இடங்களில் இருத்தி வைக்கும். அல்லது தலை கீழாகத் தூக்கிப் பிடிக்கும். செல்லப்பிராணியாயின் வாலில் தூக்கிக் கொண்டு திரியத் தூண்டும் அல்லது படுக்கையறையில் கூட அணைத்துக் கொண்டு படுக்கச் சொல்லும். எதிர்ப்பாலாராயின் தனது இருப்பை உணர்த்தும் பொருட்டு அவர்களின் கண் படும் வகையில் ஓடித் திரியும். கத்தல்கள் சிணுங்கல்கள் வெடிச் சிரிப்புகள், மூலம் அவர்களது கவனத்தைத் திசை திருப்பும்.  சொல்லாத வேலையைக் கூட இழுத்துப் போட்டுக் கொண்டு விழுந்து விழுந்து  செய்யும்.
பாசம் என்ற மனவெழுச்சி சின்னச் சின்ன உதவிகள் மூலம் தான் நேசிப்பவரை மகிழ்வூட்டும். தான் நேசிப்பவர் சொல்லும் அல்லது செய்யும் ஒவ்வொன்றிலும் அதிக கவனம் செலுத்தும்., தான் நேசிப்பவருக்கு உண்மையாக இருக்கும்.

மகிழ்ச்சியுணர்வானது தனக்குப் பிடித்தவர் தன்னுடன் கதைத்தவை, நடந்து கொண்டவை அனைத்தையும் அவர்கள் இல்லாத போது நினைவில் கொண்டு கொடுப்புச் சிரிப்புடன் உலவ வைக்கும்.  தன்னை அடிக்கடி அழகுபடுத்தும்;, தனக்குள் பாட்டொன்றை முணுமுணுத்துக் கொண்டிருக்க வைக்கும். காரணமின்றிச் சிரித்துச் சிலசமயம் பித்துக்குளி என்றும் பேரெடுக்க வைக்கும். தீவிர முனைப்புடன் பணி செய்து கொண்டிருப்பவரை வெடிச்சிரிப்பால் குழப்பி அவரின்; முறைப்பையும் வாங்கிக் கட்டும். மகிழ்ச்சியுணர்வு தீவிரமாகும் போது அது களிப்பாக மாறி அவர்களை அந்தரத்தில் மிதப்பவர்களாக மாற்றுவதுமுண்டு..

சகல அம்சங்களையும் எப்படியாவது அறிய வேண்டும் என்று அங்கலாய்ப்பைத் தருவது ஆர்வம் என்ற மனவெழுச்சியே.  நண்பர்களோ அல்லது வயது வந்தவர்களோ பாலியல் தொடர்பான கதைகளை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பர். பாலுணர்வைத் தூண்டும் கதைப்புத்தகங்கள் சினிமா என்பன இவர்களை மகிழ்விப்பது போன்று வேறு எதுவுமே கிடையாது.; அறிவியல் சம்பவங்களோ, நடைமுறை விவகாரங்களோ எதையெடுத்தாலும் ஆர்வம் கொப்பளிக்க வலம் வரும் குழந்தைப் பருவத்தினரின் தேடல்கள் வளரிளம்பருவத்தில் வெறுமனே பாலியல் விவகாரங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது.

அடிபிடிக்காரரா? 
கொந்தளிக்கும் உணர்வுள்ளோரிடம் உருவாகும் உச்சக் கட்டக் கோபம்;; கையில் கிடைத்தவற்றைத் தூக்கி எறியச் செய்யும், கண்டதையும் போட்டு நொருக்கச் செய்யும், போகும் போதும் வரும்போதும் கதவைப் படீரென அடிக்கச் செய்யும்;. ஆவேசம் மிகக் கொண்டு ருத்திர தாண்டவமாடச் செய்யும். குளறி அழப் பண்ணும். மாறாக, அழுத்த உணர்வுள்ளோராயின் புறுபுறுக்க அல்லது வாய் காட்டத் தூண்டும். கதைக்கும் மனோநிலையைச் சிதைக்கும். கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு உள்ளே அடைந்து கிடக்கச் சொல்லும். குத்தல் மொழியால் அடுத்தவரை நோகச் செய்யும். கோபத்தை அடக்கி வைத்துக்கொண்டு பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு திரியும். கோபத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் அது விரக்தியாக மாறி கோபத்தை அப்பாவிகளிடம் தீர்த்துக் கொள்வதுமுண்டு.
கோபத்தின் வெளிப்பாட்டுக்கு மாறாக எரிச்சலுணர்வானது அடுத்தவரை ஒரு பொருட்டாக மதிப்பதைத் தவிர்க்கும். பெரும்பாலும் தனக்கு எரிச்சல் ஏற்படுத்துபவர்களிடமிருந்து கூடுதலாக விலகியிருக்கத் தூண்டும்.
விரக்தி என்ற மனவெழுச்சி இயலாமையை ஏற்படுத்தி பகற்கனவைத் தூண்டும். கதைப்புத்தகங்களில் தனக்கு பொருத்தமானவர்களைத் தேடும். சிலசமயங்களில் ஒன்றின் இல்லாமை தொடர்பான  விரக்தி நிலையானது தனக்கு பொருத்தமான செயற்பாடொன்றைத் தேர்வு செய்து அதில் பலத்த வெற்றியீட்டும் மன ஓர்மத்தை வளர்த்துவிடும்.

துக்கம் என்ற மனவெழுச்சி உணர்ச்சிப் பிழம்புகளாக இருப்போரைக் குளறி அழச் செய்யும். அழுகை கோழைத்தனமானது, பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைப்பவராயின் வாய் பொத்தி விம்மச் செய்யும். விட்டத்தை நோக்கி வெறித்தபடி அமரச் செய்யும். எதையோ பறிகொடுத்தது போன்று நாடியில் முண்டு கொடுத்தபடி அல்லது தலையைத் தாங்கியபடி இருக்கச் செய்யும்;. சாப்பாட்டை ஒறுக்கச் செய்யும். தூக்கமின்றித் தவிக்கச் செய்யும். செய்யும் பணியில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் அல்லல்பட வைக்கும். நேசத்துக்குரியவரின் இழப்புக்கு தானும் ஒருவகையில் காரணம் என்று நினைத்து விட்டால் இழப்பைத் தனக்குக் கிடைத்த தண்டனையாகக் கருதி மனங் குமையச் செய்யும். சிலசமயம் இம்மனோநிலை தீவிரமடைந்து உள நோயாக மாறக் கூடும் அதற்கும் மேலே சென்று தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்வதுமுண்டு.

தான் மிகமிக நேசிக்கும் நபர் முன்னே தனது சில்மிஷங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாக எழும் வெட்கம் காலால் நிலத்தில் கோலம் போடச் செய்யும், மறைவில் நின்று எட்டிப் பார்க்கத் தூண்டும், தனது செயற்பாடு தனது சூழலில் விரும்பத் தகாத மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற வெட்கம் அல்லது மன உளைச்சல் எதுவுமே நடக்காதது போன்று புத்தகத்துக்குள் முகத்தைப் புதைக்கச் சொல்லும், தூங்குவது போன்று பாவனை காட்டும். இயல்பிலேயே  நகம் கடிக்கும் பழக்கம் உள்ளோரை இரத்தம் வருமளவுக்கு நகத்தைப் பற்களால் பிய்த்து எறியச் செய்யும்;.  இறைச்சி; என்றால் மூக்குப் பிடிக்கப் போடும் சாப்பாட்டு ராமரைக் கூட மனதுக்குப் பிடித்த சாப்பாட்டைப் பிசைந்து கொண்டிருக்கச் செய்யும்.

முரண்டுபிடிப்புகள்
வளரிளம் பருவ உலகின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று இவ்வுலகிற்குள் கருக்கொள்ளும் எதிர்ப்புணர்வு அல்லது முரண்டுபிடிப்பு. சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளை மாற்றியமைத்தல் முடிந்தால் கதையையே முடித்துவிடுதல் என்ற வகையில் பழையனவற்றை முற்றாகக் கழித்து புதியவற்றை மட்டும் புகுத்த முனையும் இவர்கள் சமூகத்தைப் பொறுத்து 'பிரம்படி வாத்தியார்கள்' ஆக இருக்க விரும்புபவர்கள். மரபை மீறுதல் என்ற இந்தப் பண்பு காலங்காலமாகவே - குறிப்பாக கிரேக்க காலத்தி லிருந்தே -  இவர்களிடம் இனங்காணப்பட்டிருப்பினுங் கூட தற்காலம் வரை தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் விசேட அம்சங்களில் ஒன்றாக---, உலகளாவிய ரீதியில் பொதுசனத் தொடர்பு ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒன்றாக---, கணிசமானளவுக்குப் பிரபல்யம் பெற்று வரும் ஒன்றாக---, இருப்பதானது மானுடவியலாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள்; இந்த 'மறக்கப்பட்டவர்கள்'மீது தனிக் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

பொதுவாக வளரிளம் பருவத்தினரை இருவகையாகப் பாகுபடுத்தலாம். தாம் வாழும் சமூகம் ஒன்றின் விழுமியங்கள், நடத்தைகள் போன்றவற்றை --- அவை பிழையானதாக இருப்பினும் கூட 'ஆட்கள் என்ன நினைப்பினம்' என்று --- அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் ஒரு வகையினர். சமூகத்தின் விழுமியங்கள், மரபுகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மீற முயல்பவர்கள் இன்னொரு வகையினர். முன்னவர் சமூகத்தின் பார்வையில் 'அச்சாப்' பிள்ளைகள். பின்னவர் குழப்பன்காசிகள்.


'அச்சாப் ' பிள்ளைகள்.
தமது கருத்து வேறானதாக இருப்பினும் கூட சமூகத்தின் பெரும்பாலானவர்களின் கருத்துடன் ஒத்துப் போகின்றவர்கள் இவர்கள். தோற்ற அமைவிலும் நடத்தையிலும் ஒத்துப் போகும் தன்மையானது தனது சகபாடிகள் மத்தியில் மட்டுமன்றிச் சமூகத்திலும் அங்கீகாரத்தை வழங்குகின்றது. தமது குழுவின் இலட்சியங்கள், நியமங்கள், கொள்கைகள், ஏன் சில சமயங்களில் ஒழுக்க நியமங்கள் கூட குழவின் ஒவ்வொரு உறுப்பினரும் பின்பற்றக் கூடிய வகையில் இருக்கும். தோற்ற அமைவில் ஒத்துப் போகும் அதேசமயம் மனதளவில் சமூகத்தின் விழுமியங்கள் மீது கேள்வியெழுப்புபவர்கள் கூட, தமது மனதில் ஏற்படும் கருத்து முரண்பாட்டை வெளியே சொல்லாத வரைக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் சமூக அங்கீகாரத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பில்லை. சிலசமயங்களில் சிலரிடம் இந்த அச்சாப் பிள்ளைத்தனம் அளவுக்கதிகமாகிச் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிக அச்சத்துடன் ஷஅவை என்ன நினைப்பினமோ---! இவை என்ன நினைப்பினமோ---! ஷ என்று நித்தம் செத்துச் செத்துப் பிழைக்கும் தன்மைக்கும் இட்டுச் செல்லும். எமது சமூகத்தில் இன்னொரு பிரிவினரையும் இனங்காண முடியும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் பொதுசனத் தொடர்பு ஊடகங்களில் வரும் புதுப்புதுப் பாணிகளை அவை தமக்கு ஒவ்வாது விடினுங் கூட கைக்கொள்பவர்கள். ஒற்றைத் தோட்டுடன், தலை முடியை நீளமாக வளர்த்துக் கொண்டு வலம் வரும் ஆண் பிள்ளைகள், அங்கங்கள் அச்சொட்டாக அல்லது அசிங்கமாக வெளித் தெரியும் வகையில் இறுக்கமாக உடையணியும் பெண் பிள்ளைகள் கூட சமூகத்தின பார்வையில் அச்சாப் பிள்ளைகளே சீர்திருத்தச் சிந்தனைகளை நினைக்காத வரை---!

குழப்பன்காசிகள் 
சீர்திருத்தவாதிகள், புரட்சிக்காரர், தீவிரவாதிகள், ஹிப்பீஸ், குற்றவாளிகள், திருடர்கள் எனப் பலதரப்பட்டவர்களாக இனங்காணப்படும் இவர்களை இரு பெரும் பிரிவினராக வகைப்படுத்த முடியும். எதையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் சீர்திருத்தவாதிகள் செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். மாறாக எதையும் சிதைத்து விடுபவர்கள் கிளர்ச்சிக்காரர், குற்றவாளிகள், மனமுறிவாளர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். சமூகம் ஏன் திருந்த வேண்டும் என்ற தமது நியாயப்பாட்டுக்கு காரணம் சொல்லும் வல்லமையுள்ளவர்கள் சீர்திருத்தவாதிகள் எனப்படுகின்றனர். அகிம்சை வழிக்கே முன்னுரிமை வழங்கும் இவர்கள் எதுவும் முடியாத போதே மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். அதைவிடச் சற்று மேலே போய் ஷஅடி உதையே அண்ணன் தம்பி திருந்த வழிஷ என்று தீர்வுகளுக்கு வன்முறைகளையும் வழிமுறையாகப் பிரயோகிப்பவர்கள் செயற்பாட்டாளர் எனப்படுகின்றனர். சமூகம் திருந்த வழிவகைகளைக் கூறும் திராணியற்ற அதேசமயம் கண்மூடித் தனமாகக் கண்டதையும் நொருக்குபவர்கள் கிளர்ச்சிக்காரர்கள் எனப்படுகின்றனர். சமூகத்தை 'திருத்த முடியாத கழுதைகள்' என முடிவெடுத்து விரக்தியடைந்து அதன்மூலம்   எதையும் சாதிக்கும் வல்லமையிழந்து துர்ப்பழக்கங்களுக்கு ஆளாகுபவர்கள் மனமுறிவாளர் எனப்படுகின்றனர். இவர்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சீர்திருத்தவாதிகள்---(Reformers)
பேச்சும் தோற்றமும் மரபுக்கு உட்படும் அதேசமயம் சிந்தனைகளும் நடத்தையும் புரட்சிகரமாக இருப்பவர்கள் சீர்திருத்தவாதிகள் எனப்படுகின்றனர். புரட்சிக்காரர், தீவிரவாதிகள், போராளிகள் போன்ற சொற்பதங்கள் இத்தகையோருக்கெனத் தோன்றியவையே. தனது வாழ்க்கையை மட்டுமன்றி சமூக உறுப்பினர்களின் வாழ்க்கையையும் முன்னேற்ற, திருத்தியமைக்க, செப்பனிட விரும்புபவர்கள் இவர்கள். வளரிளம் பருவத்தினரிடம் காணப்படும் காணப்படும் எதிர்ப்புணர்வை நேர்க்கணியமாக நோக்கின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்கும் ஆற்றல், நிலைமைகளைச் சீர்திருத்திவிடும் ஆற்றல், முன்னேற்றமடையச் செய்யும் ஆற்றல் மற்றவர்களிலும் பார்க்க  தனக்கு உண்டு என்ற உண்மையான நம்பிக்கை இவர்களை சீர்திருத்தவாதி என்ற நிலைக்கு இ.ட்டுச் செல்கின்றது. சமூகத்தின்; ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களில் பிழை கண்டுபிடிப்பதுடன் நின்று விடாது  வடிவங்களைச் சீர்;ப்படுத்துவதற்கு ஆலோசனை சொல்லும் வல்லமையும் இவர்களுக்கு உண்டு. பொதுவாகவே சீர்திருத்தவாதிகள் அமைதியும் ஆழமும் மிக்கவர்கள். சிறுவயதில் ஷஅமசடக்கிஷ எனப் பெயரெடுப்பவர்கள். எதையும் கண்டும் காணாதது போல் காட்டிக் கொள்ளும் இவர்களின் பார்வையிலிருந்து எதுவுமே தப்புவதில்லை. உலகமே இடிந்து விழுந்தாலும் பதட்டப்படாதவர்கள் போன்று புத்தகத்துக்குள் தலையை நுழைத்துக் கொள்ளும் போக்கை இவர்களிடம் சிறுவயது முதலே அவதானிக்கலாம். ஆக மிஞசிப் போனால் தமது எதிர்ப்புணர்வை மூஞ்சியை நீட்டுதலுடன், சிறு முணுமுணுப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்ளும் இவர்கள் வாய்த்தர்க்கங்களைக் கூட மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கைக்கொள்வர்

ஆரம்ப காலங்களில் 'உதவாக்கரை' களின் பட்டியலில் இவர்களைச் சமூகம் உள்ளடக்கி ஒதுக்கி வைத்தாலும்; இவர்களது சீர்திருத்தச் சிந்தனைகள் சமூகத்தை ஆரோக்கிய பாதையில் இட்டுச் செல்லும் ஒரு சந்தர்ப்பத்தில்;  சமூகத்தால் மாலையிட்டுக் கௌரவிக்கப்படுபவர்களும் இவர்கள் தான். இவர்களது சிந்தனைகள் ஏனையோரைப் பொறுத்து நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக உணரப்பட்டாலும் கூட தற்போது சமூகத்தில் நிலை கொண்டிருக்கும் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி சமூகத்தில் மாற்றம் தேவை என்று இவர்கள் மற்றவர்களில்  ஏற்படுத்தும் விழிப்புணர்வு பலவீனங்களை இல்லாதொழித்து முன்னேற்றத்தை கொண்டு வர பெரிதும் உதவக் கூடியதொன்று. ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கெர்டுத்து போராடிய இராஜாராம் மேகன்ராய், அம்பேத்கார், பெண் சுதந்திரம் வேண்டி நின்ற பெரியார் போன்றவர்களை இவர்களுக்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்..

செயற்பாட்டாளர் ( Activists)
சீர்திருத்தவாதிகளைப் போலன்றி மாற்றங்களைக் கொண்டுவருவதற்குச் சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளப்படாத ஆக்கிரமிப்புச் சார்ந்த வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் இவர்கள்;. எல்லாச் செயற்பாட்டாளரும் சீர்திருத்தவாதிகளாக இருக்கலாம். ஆனால் எல்லாச் சீர்திருத்தவாதிகளும் செயற்பாட்டாளராக இருப்பதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம். வளரிளம் பருவத்துப் பிள்ளையின் செயற்பாடு அதன் நண்பர் குழாமினால் ஏற்றுக்கொள்ளப்படும் போது சமூக ரீதியில் அவர் செயற்பாட்டாளராக மாறும் தன்மையை வலுப்படுத்துகின்றது. சமூகத்தின் 'பத்தாம்பசலித்தன' த்தை நீக்கி சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஒரே வழி செயற்படுவாதம் தான் என்ற நம்பிக்கையே சமூகம் சார்ந்து ஏற்படும் விரக்திகளிலிருந்து இவர்களை விடுபட  வழி சமைக்கும். மாறாக  தனது சுயதிருப்திக்காக மட்டும் செயற்படுவாதத்தை இவர்கள் பின்பற்றினால் செயற்பாட்டாளர்களினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றுதலானது இவர்களுக்குத் தற்காலிக திருப்தியையே தரும். பெரும்பாலான பெண்ணிய இயக்கங்கள் சீர்திருத்தவாதிகளை விட செயற்பாட்டாளரையே அதிகம் கொண்டிருப்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று. தமது சிந்தனைகளுக்கு ஆர்ப்பாட்டங்கள் மூலம் செயல் வடிவம் கொடுக்க விரும்பும் இவர்கள் விரும்பிய பலனைப் பெறாத பட்சத்தில் மேலும் தீவிரமாகிப் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

கிளர்ச்சிக்காரர் (Rebels)
இத்தகையோர் தமது எதிர்ப்பணர்வுக்கான சரியான காரணத்தைத் தெளிவுபடுத்துவதில்லை. ஷஇது சரியில்லைஷ ஷஎன்னால் முடியாதுஷ என்ற கூற்றுக்கள் மூலம் சமூக எதிர்பார்ப்பை மறுத்துவிடுவதைத் தவிர மேலதிகமாக இவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஒழுங்குகள் நியமங்களை மொட்டையாக மறுத்துவிடும் போக்குக் காரணமாக ஷசகிக்க முடியாததுஷ ஷஏற்றுக்கொள்ள முடியாததுஷ எனக் கருதும் எந்தவொரு நிலைமைக்கும் பரிகாரம் காணும் வல்லமையை இவர்கள் இழந்துவிடுகின்றனர். வால் இருக்கத் தும்பியைப் பிடித்த கதையாக வேலை நிறுத்தங்கள், பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் கண்ணாடிகள், மேசை, கதிரை போன்றவற்றை அடித்து நொருக்குதல் இத்தகைய மனோபாவத்தின் வெளிப்பாடுகளே. இக் கிளர்ச்சி மனோபாவம் உச்சக்கட்டமடையும் போது ஷஏவல் பேய் கூரையைப் பிடுங்கியஷ கதையாகக் கண்டதையும் அடித்து நொருக்குதல், தீயிட்டுக் கொழுத்துதல் போன்ற செயற்பாடுகளை இவர்கள் மேற்கொள்வர். இவர்களது செயற்பாடுகள் மேலும் தீவிரமடையும் போது தன் மீது தனக்கே நம்பிக்கையீனம், எடுத்ததற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் மனோபாவம் போன்றவற்றால் மனமுறிவாளராக இவர்கள் மாறிவிடுகின்றனர.;

மனமுறிவாளர் Alienators)

இவர்களுக்கு ஆதரவான காரணங்களை விட எதிரான காரணங்களே மிக அதிகம். சமூகத்தைத் திருத்துவதற்கு தமது சொந்த அனுபங்களிலிருந்து அர்த்தம் காண முயல்பவர்கள் இவர்கள். சமூக ரீதியில் நல்லது கெட்டதைப் பற்றிச் சிந்திக்கும் தன்மையற்ற, தன்முனைப்புள்ள இவர்கள் தமது தனித்துவம், சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எதையும் மதிப்பிட முயல்கின்றனர். அதன் மூலம் எதையும் சாதிக்கும் திராணியற்றுக் குடிப்பழக்கங்களுக்கு அடிமையாகிக் குற்றவாளிகளாக மாறும் தன்மை இவர்களிடம் அதிகமாகும். தான் வாழும் சமூகத்திற்கு எந்தவிதப் பங்களிப்பும் செலுத்த முயற்சிக்காத இவர்கள் சமூகம் தனக்கு உதவவேண்டும், தன்னில் அனுதாபப் படவேண்டும் என் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள். விதிகள், ஒழுங்குமுறைகள் சட்டங்கள் போன்றவை அடுத்தவர்கள் மதிப்பதற்காகவேயன்றி  அவற்றை மதிக்க வேண்டிய அவசியம் தமக்கில்லை என்பதை நியாயப்படுத்துபவர்கள். சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளாதபோது அதற்காகக் கொதித்தெழும் இவர்கள் தமது கட்டுமீறிய நடத்தை காரணமாக மேலும் சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றனர். காலப்போக்கில் எட்டாப் பழம் புளிக்கும் என்ற கருத்துநிலைக்கு மாறும் இவர்கள் இதனால் மேலும் பாதிக்கப்பட்டு விரக்திநிலைக்கு மாறுகின்றனர்.

கோலங்களின் மூலங்கள்
கண்ணில் எதிர்ப்படுவோரைக் கேள்வி மேல் கேள்வியால் துளைத்தெடுக்கும் பருவம்  குழந்தைப்பருவம் என்பதைப் புரிந்து கொள்ளாது வாழ்க்கையைப் பற்றியோ நாட்டு நடப்புகளைப் பற்றியோ குழந்தையிடம் கருக்கொள்ளும்; வினவல்களைக் ஷகிழட்டுக்கதைஷ யாக்கிக் குழந்தைப்பருவத்தின் ஆராய்வூக்கத்துக்கு பூட்டுப் போடும் பத்தாம்பசலிப் பெற்றோருக்கு பிள்ளையாகப் பிறப்பவர்கள் அறிவு வளர்ச்சி தடைப்பட்ட மிகப்பெரும்; பாதிப்பானது வெளித்தெரியும் வாய்ப்பின்றி ஒன்றில் பெற்றோரைக் கனம் பண்ணும் ஷநல்லஷ பிள்ளைகள் என்ற தகுதிப் பத்திரத்துடன் வளர்ந்தோர் உலகிற்குள் நுழைந்துவிடுகின்றனர். அல்லது ஷ அப்படிச் செய்யாதே--- இப்படிச் செய்யாதே--- என்று போடும் கட்டுப்பாடுகளின் பயனை அவர்களையே திரும்ப அனுபவிக்கச் செய்யும் ஓர்மத்துடன் கட்டுப்படுத்த முடியாதவர்களாகத் தலையிடிக்குரியவர்களாக மாறுகின்றனர்.
பெற்றோர் அல்லது ஆசிரியர் விடும் தவறுகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுவதில் ஏற்படும் சுய திருப்தி, அடுத்தவர்களின் கவனத்தைத் தன்பால் திருப்பும் நோக்கில் முற்போக்கான கருத்தையோ அல்லது தீவிரமான கருத்தையோ முன் வைக்கும் தன்மை, தமது சகபாடிகள் முன்னே தனது தரத்தை உயர்த்தும் நோக்கில் கொம்புத் தேனைக் கொண்டு வருவேன் என்ற சூளுரைப்புகள்--- குழப்பன்காசிகளின் உருவாக்கத்துக்கு இப்படிப் பல காரணங்களைக் கூறமுடியும்
.
உடல் சார்ந்த அதீத வளர்ச்சியும் முதிர்ச்சியும், பாடசாலைச் சுழல்கள், வீட்டுச்; சுழல்கள்  பொதுசனத் தொடர்பு ஊடகங்களின் தாக்கங்கள் போன்றன மேற் கூறப்பட்ட நான்கு வகை குழப்பன்காசிகளின் உருவாக்கத்துக்கு மூல காரணங்களாகக் கொள்ளப்படுகின்றன எனினும் இதற்கு அதுதான் காரணம் என்று அறுதியிட்டுக் கூறமுடியாதவாறு அனைத்துக் காரணிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதானது இது தொடர்பான சமூகவியலாளர், உளவியலாளர் மானுடவியலாளர் போன்றோர் ஒன்றிணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

ஆட்டங்காணும் அத்திவாரம்
மனமுறிவுகள் எதிர்ப்புணர்வுகள் முதலில் வீட்டிலேயே கருக்கொள்கின்றன.
குழந்தையின் ஆராய்வூக்கத்துக்குக் காரண காரியத் தொடர்புடன் தீனி போடக்கூடிய, ஒரு செயற்பாட்டை ஏன், எப்படி, எங்கே, எப்போது, யார் செய்தால் நன்று என்பதில் தெளிவைத் தரக் கூடிய கருத்தியல்; முழுமை கிடைக்கும் வாய்ப்புள்ள குடும்பங்களில் வாழும் பிள்ளையிடம்  தன்னுணர்வை விடவும் சமூக உணர்வு மேலோங்கிச் சமூகத்தின் ஒவ்வாமைகளை விலக்கிக் கொள்வதற்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யவேண்டும் என்று மனதில் ஏற்படும் உத்வேகம் அவர்களைச் சீர்திருத்தவாதியாக்குகின்றது.

குழந்தையின் கேள்விகளுக்குக் காரண காரியத் தொடர்புடன் பதில் சொல்லும் வகையில் தனது அறிவுத் தளத்தை மாற்றியமைக்கவோ அல்லது செப்பனிடவோ முயலாது தாம் பத்தாம் பசலிகள் இல்லை என்பதை மட்டும்  வெளிப்படுத்தும் ஒரே எண்ணத்துடன்; குழந்தையை அதன் போக்கில் விட்டு வளர்க்கும் நவீன மேலைத்தேய முறைகளின் சாதக பாதகங்களை விளங்கிக்கொள்ளாது கண்மூடித்தனமாக அவற்றை அட்சரம் பிசகாது அப்படியே கைக்கொள்வதன் மூலம் குழந்தையின் வினவல்களுக்கு பதில் சொல்லும் வகையற்று ஒன்றில் ஷதிருதிருஷவென்று முழிக்க அல்லது ஏதாவது சொல்லி மழுப்ப குழந்தை ஒன்றில் இவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பைக் குறைக்கிறது. அல்லது இவர்களைவிட தனக்கு ஷகனக்கஷத் தெரியும் என்ற உயர்வு மனப்பாங்குக்குச் சென்று இவர்களைக் கண்டபடி கட்டுப்படுத்த விழைகிறது.

குழந்தையை அதன்போக்கில் விட்டு வளர்க்கும் மேலைத்தேய முறையைத் தவறாக விளங்கிக்கொண்டு தன்விருப்பப்படியே சாப்பிட, விளையாட, தூங்கப், படிக்க வசதி செய்து தரும் குடும்பங்களில் வாழும் பிள்ளை வீட்டுக்கு உள்ளே இருப்பது போன்று வீட்டுக்கு வெளியேயும் தன் விருப்பப்படி உலகத்தை வளைக்க முயல்கிறது. முயற்சி வீணாகும் போது கிளர்ச்சி செய்கிறது. கிளர்ச்சி பலனற்றதாக மாறும் நிலையில் விரக்தியடைந்து வீணாகிப் போகின்றது.

நேரில் பார்த்த வீதிச் சண்டையையோ அல்லது சினிமாப் படத்தின் அடிதடியையோ பிள்ளைகளுக்கெதிரே நியாயப்படுத்தும் பெற்றோருக்கு வன்முறையே வழி என்ற சிந்தையுள்ள பிள்ளை உருவாகுதல் தவிர்க்க முடியாததாகின்றது. ஷ அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் முன்வரிசையில் இருந்து---ஷ என்று அரசியல் கட்சிக் கூட்டங்களில் தான் ஈடுபட்டது பற்றி கதையாக அளக்கும் தகப்பனமார் மாணவர் போராட்டம் என்றவுடன் மட்டும் வீட்டுக்குள் தம்மைச் சிறைப்படுத்தும் மர்மம் என்ன என்று பிள்ளையிடம் இயல்பாக எழும் வினவல் தரும் எதிர்ப்புணர்வு ஆரம்பத்தில் முணுமுணுப்பாகத் தொடங்கி வாய்த்தர்க்கமாக நீளுகின்றது. பொய் சொல்லித் தன் காரியத்தைத் தொடரும் மனப்பாங்கை உருவாக்குகின்றது. கண்டதற்கெல்லாம் முதுகுத் Nதூல் உரிக்கும் தகப்பன் முன்னே தனது எதிர்ப்புணர்வைக் காட்டும் வலுவின்றிக் கூழைக் கும்புடு போட்டுவிட்டு தமக்கு இளைய சகோதரர்களைக் கண்டபடி நொருக்குதல் வீட்டுக்கு வெளியே சண்டித்தனம் செய்து பேரெடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது.

அனைத்தையும் மாற்றும் சகவாசம்
கூட்டாளிகள் என்று வரும் போது இப்பருவத்தினரின் பிரதான நோக்கம் தமது கூட்டாளிகளின் மத்தியில் தமக்கென அங்கீகாரம் ஒன்றைப் பெறும் வகையில் நடையுடை பாவனையில் மட்டுமன்றிக் கதை பேச்சிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது தான். கூட்டாளிகள் மத்தியில் நிரந்தர இருப்பை ஏற்படுத்தும் வல்லமை பொருளாதார வசதியில் அதிகம் தங்கியுள்ளது. அரச உத்தியோகம் பார்க்கும் தனது தோழனின் அப்பா போன்று இல்லாமல் தனது அப்பன் கூலித் தொழில் செய்பவராக அல்லது தோட்டம் செய்பவராக இருக்கிறாரே என்ற கவலை அடிக்கடி மனதை வாட்டும். வீட்டின் அமைப்புத் தொடக்கம் அதன் பரிமாணம் அது உள்ளடக்கும் தளபாடங்கள், அவற்றின் பெறுமதி, நேர்த்தி, ஒழுங்கமைப்பு, சமையலறை, குளியலறை வசதிகள் போன்றவை தொடர்பான அதிக சிரத்தை எல்லாப் பருவத்தினரையும் விட இவர்களுக்கே அதிகமாகும். தம்மிடம் உள்ள வசதிகள் ஒவ்வொன்றும் சகபாடிகள் வட்டத்தில் உள்ளவர்களின் வசதிகளுடன் ஒப்பிடப்பட்டு குறைகளே அதிக கவனத்தில் எடுக்கப்பட்டு இவற்றின் வெளிப்பாடுகள் சிணுங்கல்கள், முணுமுணுப்புகள், விரக்திகள் எனப் பல வடிவங்கள் எடுக்கின்றன.
மதிய உணவாகப் பிட்டும் முட்டைப் பொரியலும் சமைத்துக் கட்டிக் கொடுக்கக் கூடிய பொருளாதார வசதியும் சுவையாகச் சமைக்கும் அம்மாவும் இருந்தாலும் சக தோழி கொண்டு வரும் ஷசான்விச்ஷ மாதிரி அம்மாவுக்குச் செய்யத் தெரியவில்லையே என்ற ஏக்கம் முதலில் முகத்தைக் கோணலாக்கி வீட்டை அலங்கோலமாக்கி இறுதியில்; முழமையாக மனதைக் கோணலாக்கும். இதுவே மாறி சகதோழன் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவது பொறுக்காது தானும் மதிய உணவை ஒறுக்கும் தன்மையை வளர்க்கும்.

தலைமுறை இடைவெளி
இரண்டு தலைமுறைகளுக்கிடையில் மனப்பாங்கு தொடர்பாக ஏற்படும் வேறுபாடு அல்லது புரிந்துணர்வின்மையே தலைமுறை இடைவெளி எனப்படுகிறது. இன்னும் விரிவாகச் சொல்வதாயின் மனப்பாங்கு, நடத்தை போன்ற அம்சங்களில் வயதில் மூத்தோருக்கும் இளையோருக்கும் இடையில் ஏற்படுகின்ற கருத்து பேதங்கள், தர்க்கங்கள் போன்றவற்றின் வெளிப்பாடுகளைக் குறிப்பதற்கு இப் பதம் பயன்படுத்தப்படுகின்றது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையிலான வயது வேறுபாட்டின் அடிப்படையிலேயே இத்தகைய பேதங்கள் உருவாகின்றது எனினும்; மரபு ரீதியான சமூகங்களில் வயதினடிப்படையிலான தலைமுறை இடைவெளியானது இன்றும் குறைவானதாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. 30 வயதுக்குப் பின்னர் தாய்மையடையும் கல்வி வாய்ப்பைப் பெற்ற நடுத்தர வர்க்கப் பெண்ணை விடவும் கல்வி பெறும் வாய்ப்பற்ற 15 வயதில் தாய்மையடையும் தொழிலாள வர்க்கப் பெண்ணுக்கும் அதன் குழந்தைக்குமிடையிலான வயது இடைவெளி சரிபாதி குறைவானதாகும். எனினும் நடுத்தரவர்க்கப் பெண் எதிர்கொள்ளும் தலைமுறை இடைவெளி சார்ந்த பாதிப்புக்களை அப் பெண் பெற்றுக் கொள்ளும் கல்வியறிவின் துணை கொண்டு குறைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு. எனவே வயது அடிப்படையிலான தலைமுறை இடைவெளி பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாத போதும் வளரிளம் பருவத்தினர் தமது பெற்றோரை எதிர்ப்பதற்கான காரணம் எது என்பதை கண்டறிதல் முக்கியமானதொன்றாகும். இங்கு தான் பண்பாடு சார்ந்த தலைமுறை இடைவெளி என்ற கருத்துநிலையின் தோற்றப்பாட்டை  இனங் காணும் வாய்ப்பு எமக்கு உண்டாகிறது. எந்தவொரு சமூகத்திலும் தலைமுறைகளுக்கிடையிலுள்ள பதற்ற நிலையின் அளவு சமூக தொழினுட்ப வேகத்துடனும் சிக்கல் தன்மையுடனும் நெருங்கிய தொடர்புடையது.  அறிவியல் தொழினுட்ப மாற்றங்களினால் அண்மைக்காலங்களில் உலக சமூகங்களின்; முழு வாழ்க்கை வடிவங்களும் புதிய விழுமியங்கள் புதிய ஆர்வங்களுடன் துரித மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதே பண்பாடு சார் தலைமுறை இடைவெளி என்ற கருத்துநிலையின் தோற்றத்துக்கு பிரதான காரணமாகும். புலமைப் பரிசில்கள், புலம்பெயர் வாழ்வு போன்றவற்றின் காரணமாக வெளிநாடுகளில் உயர் கல்வி பெறும் வாய்ப்பு, பொது சனத் தொடர்பு ஊடகங்களின் உலகளாவிய பாவனை, மிகக் குறைந்த செலவுடன் கூடிய உலகச் சுற்றுலாக்கள் போன்றன பெற்றோரும் அவர்களது குழந்தைகளும் தத்தமது ஆர்வங்களையும் விழுமியங்களையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையைச் சிக்கலாக்கி விட்டிருக்கின்றன.

பாதிப்புக் குறைந்தவர்கள்
நிலையான சமூகக் கட்டமைப்பும், இறுக்கமான விதிகளும் நிலை கொண்டிருக்கின்ற சாதாரண கிராமிய சமூகங்களில் உள்ள வளரிளம் பருவத்தினரைப் பொறுத்து இவர்கள் ஸ்ரான்லி ஹோல் குறிப்பிடுவது போன்று எந்தவொரு அமைதியற்ற சிக்கல் நிறைந்த காலகட்டம்ஜீநசழைன ழக ளவழசஅ யனெ ளவசநளளஸ எதனையும் எதிர் கொள்ளாமலேயே முதிர் பருவத்துக்குள் நுழைந்து விடுகின்றனர். இத்தகைய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைப் பங்கும், அதன் தொடர்புத் தன்மைகளும் தெளிவாக வரையறைப் படுத்தப்படுவதுடன்  வாழ்க்கையானது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஒரு தொடர்புத் தன்மையுடனேயே நகர்கிறது. எனவே தலைமுறை இடைவெளி என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவோ, பாதிப்பு தெளிவாக இனங்காணப்படாத தொன்றாகவோ தான் இருக்கிறது. எமது சமூகத்தைப் பொறுத்தவரைக்கும் கல்வி அறிவில் உலகின் வளர்ச்சியடைந்த சமூகங்களுக்கு இணையானதாகக் கருதப்படினும் கூட இறுக்கமான பண்பாட்டு விழுமியங்களால் அரண் செய்யப்பட்டிருக்கும் வாழ்க்கையமைப்புக் காரணமாக தலைமுறை இடைவெளி தொடர்பான தாக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இனங்காணப்பட்டிருக்கின்றன. பெற்றோரின் தோற்றம், உரையாடும் பாங்கு, உணவு உட்கொள்ளும் போது கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள், ஒருவரையொருவர் உபசரிக்கும் விதம், சமூக விவகாரங்களில் பங்களிப்பு செய்யக்கூடிய ஆற்றலின்மை, தமது செயற்பாடுகளுக்கு அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் என்பன  மாற்றியமைக்கப்படவேண்டும் போன்ற விருப்பங்கள் இத்தகைய சமூகங்களில் தலைமுறை இடைவெளி தொடர்பாக ஏற்படும் தாக்கங்களில் சிலவாகும்.. குடும்ப ரீதியில் அழுக்கு வேட்டியும், நைந்த சால்வையுமாகத் தெருவோரத் திண்ணையில் அரட்டையடிக்கும் தகப்பனை அவமானமாகக் கருதுதல், தமது தோழர்களைச் சரியான வகையில் வரவேற்கத் தெரியாது திண்டாடும் தாயைச் சாடுதல,;  வெளிறிய, அழுக்கான ஆடைகளுடனும், கலைந்த தலையுடனும் திரியும் சகோதர்களைச் சாடுதல் , பாடசாலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான திருப்தியின்மை  போன்ற சிறுசிறு எரிச்சல்கள், வாய்த் தர்க்கங்களுடன் தலைமுறை இடைவெளியின் தாக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன. அழுக்காகத் திரியும் சகோதரர்களை இழுத்து வைத்துத் தலை வாரிவிடுதல், குளிப்பாட்டி விடுதல், அடிக்கடி வீட்டைக் கூட்டுதல், தளபாடங்களை அடிக்கடி இடம் மாற்றி வைத்தல், மத அனுட்டானங்கள்  தொடர்பான மாற்றங்களை அவாவி நிற்றல் போன்றவற்றை இவர்களிடம் காண முடியும்.

பரிதாபத்துக்குரியவர்கள்---
மாறாக, தொடர்ச்சியான முறையில் மாற்றங்களைச் சந்திக்கின்ற , உள்வாங்குகின்ற, சரிப்படுத்த விழைகின்ற,, திருத்தம் மேற்கொள்கின்ற நவீன சமூகங்கள்pல் தலைமுறை இடைவெளி மிக அதிகமானதாகும். உண்ணுதல், உறங்குதல், பொழுது போக்குதல்,; என்பவற்றுக்குக்கூட நேர அட்டவணை தயாரித்து அதன்படி வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை முறையில் பம்பரமாகச் சுழலும்; நகரமயமாக்க சமூகங்களில் வாழும் பெற்றோர்கள், உடன்பிறப்புகளின் கவனத்திலிருந்து பெரும்பாலும் விடுபட்டுப் போகும் வளரிளம்பருவத்தினர் தமக்கெனச் சொந்தமாக ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொள்ளும் போக்கும், இச் சமூகமானது வெறியெழுச்சி கொண்டதாக, தமக்கெனச் சொந்தமான கட்டமைப்பை, நியமங்களை, ஒழுங்குமுறைகளை, சடங்குகளை, தாம் பின்பற்றக்கூடிய குழுக்களை, தமக்கென ஒரு அந்தஸ்தை, தண்டனைகளை கொண்டதாக இருப்பதும் தவிர்க்கமுடியாததாகின்றது. மரபு ரீதியான சமூகங்களில் வறுமை, போசாக்கின்மை, கல்வியின்மை, சடங்கு சார்ந்த வன்முறைகள், குழந்தைத் திருமணம் போன்றவை வளரிளம் பருவத்தினரைப் பாதிப்பனவாக இருக்கும் அதேசமயம் நவீன சமூகங்களில் போதைப்பொருள் பாவனை, கொலை, கொள்ளை, முறைகேடான பாலுறவு போன்ற நெறிபிறழ் நடத்தைகள் போன்றவற்றுக்குள் இலகுவாக ஈர்க்கப்படுபவர்களாக இவர்கள்  மாறுகின்றனர்.. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான இடைவெளியானது எதிர்ப்புணர்வாகத் தோற்றங் கொள்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் தாம் நினைத்தபடி வீட்டை விட்டு; வெளியேறுதல்;, வீட்டுக்குத் திரும்புதல், சகோதரர்களுடன் கடுமையான வாய்த் தர்க்கங்களில் ஈடுபடுதல், கண்டபடி கூச்சலிடுதல், பொருட்களை வேண்டுமென்றே உடைத்தல், உறவினர்களுடன் கடுமையாக நடத்தல் போன்ற அசாதாரண நடத்தைக்கோலங்களிலிருந்து படிப்படியாகத் தொடங்கும் நெறி பிறழ் நடத்தையானது சில சமயம் தாக்குதல் , கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு போன்ற தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டுச் சிறை செல்லும் நிலைமைக்கும் இட்டுச் செல்கிறது. வளரிளம் பருவத்தின் ஆரம்பக் கட்டத்தினரான 13-14 வயதுக்குரியோர் களவு, கொள்ளை, ஏமாற்றுதல் போன்ற சொத்துக்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடும் அதே சமயம் முடிவுக் கட்டத்துக்குரியவர்கள் பாலியல் வல்லுறவு, பாலியல் ஒழுங்கீனங்கள், தற்கொலை முயற்சி போன்ற மனிதர்;களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆண்களைப் பொறுத்து இத்தகைய குற்றங்கள் களவு, ஒழுங்கற்ற நடத்தை, கொள்ளை, சொத்துகளை அழித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல், போதைப்பொருள் பாவனை, மனிதர்களுக்கு தீங்கு விளைவித்தல் போன்றவையாக இருக்கும் அதேசமயம் பாலியல் ஒழுங்கீனங்கள் , வீட்டை விட்டு ஓடுதல், சிறு சிறு களவுகள், சீர் கேடுகள் போன்றவை பெண்கள் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

விடலைகள் என்னும் விசித்திர உலகில் - 2


உணர்ச்சிக் கடல்கள்
மனித சாதனைகளுக்கெல்லாம் அடிப்படையானது அறிவுத் திறன்களல்ல. மனவெழுச்சிகளே என்பதை நாம் எமது நடைமுறை அனுபவங்களில் கண்டு கொள்கின்றோம். மகிழ்ச்சி, அன்பு, பாசம், ஆர்வம் போன்ற மகிழ்வூட்டும் மனவெழுச்சிகளும், கோபம், விரக்தி, கவலை போன்ற வெறுப்பூட்டும் மனவெழுச்சிகளும் மனித வளர்ச்சிக்கட்டங்கள் அனைத்திலும் இடம் பெறுவதெனினும் இவை முழுமையாக ஆக்கிரமித்து நிற்கும் பருவம் வளரிளம் பருவம் என்றே இனங்காணப்பட்டிருக்கின்றது. வளரிளம் பருவத்தினரை ஷமனவெழுச்சிகளின் சங்கமம்ஷ என்று அழைக்கலாம்;. இப்பருவத்தில் அதிகமாக ஏற்படும் உடல் மாற்றங்களே மனவெழுச்சிகளுக்குக் காரணமென்று ஆரம்ப கால ஆய்வுகள் முடிவுக்கு வந்திருந்தன. உடல் வளர்ச்சியானது குழந்தைப்பருவம் முதற் கொண்டே நிகழ்ந்தாலும் கூட வளரிளம் பருவத்தில் உடல் வளர்ச்சியானது மிகத் தீவிரமடைகின்றது. நாளாந்தம் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கும். வெளி உறுப்புகள் மட்டுமன்றி இதயம், குடல், சுவாசப்பை போன்ற உள்ளுறுப்புகளும் இப் பருவத்தில் தீவிர வளர்ச்சியடைகின்றன. குறிப்பாகப் பாலுறுப்புகளின் வளர்ச்சியானது அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி விரும்பத்தகாத மனவெழுச்சிகளை ஏற்படுத்தவல்லது எனக் காரணங் கூறப்பட்டது. இதனடிப்படையில் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உடல் மாற்றத்தின் அடிப்படையில்  வளரிளம்பருவமானது அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாக[Period of Storm and stress] ஸ்ரான்லி ஹோல் என்பவரால் அடையாளங் காணப்பட்டது.  ஆனால் மனிதன் என்பவன் உடல் உள்ளம் என்ற இரு கூறுகளும் நெருங்கி இசைந்து இயங்கும் உயிரி என்பதும் இவ்விரு கூறுகளும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவை என்பதும் உடலில் ஏற்படும் களைப்பு சிந்தனையைப் பாதிப்பது போன்று உளப் போராட்டங்கள் மனிதனது உடல்நிலையை வெகுவாகப் பாதிக்கும் என்பதும் அனுபவத்தில் காணும் உண்மையாகும். எனவே உடல் மாற்றங்களுக்கு மட்டுமன்றி உள மாற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் நாளமில் சுரப்பிகளே Endoctrine glands  மனவெழுச்சிகளுக்குக் காரணமென அண்மைக்கால மருத்துவ ஆய்வகள் கண்டுபிடித்திருக்கின்றன. இச்சுரப்பிகள் சுரக்கும் ஹோர்மோன் என்னும் சுரப்பு நீரானது இரத்த ஓட்டத்தில் கலந்து உடலெங்கும் பரவி உடலின் அனைத்துப் பிரிவுகளின் தொழிற்பாட்டைப் பாதிக்கின்றது. ஒரு தொகுதியாகச் சுரக்கப்படும் இச் சுரப்பிகள் தனது அளவிலிருந்து கூடியோ அல்லது குறைவாகவோ சுரக்குமாயின் உடல், உளச் சமநிலை பாதிக்கப்படும். இதனடிப்படையில் 1970ல் நியூயோர்க் சஞ்சிகையில் வெளியிடப்பட்டE.Nemy
என்பவரின் ஆய்வு முயற்சியானது  அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவத்தை 'தீவிர மனவெழுச்சிப்' பருவமாக [Period of heightened emotionality]  மாற்றிவிட்டிருக்கின்றது.

மன உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் [Feelings & Emotions]

மனவெழுச்சிகளைச் சாதாரணமாக நாம் அனுபவிக்கும் மனவுணர்ச்சிகளுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. மனவுணர்ச்சிகள் சாதாரண நேரங்களில் ஏற்படுபவை. மனவெழுச்சிகளோ நெருக்கடி நிலைகளில் தோன்றுபவை. மனவுணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் ஒரு நிலையே மனவெழுச்சியாகும். இது நேர்க்கணிய, எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது. செயற்பாடொன்று சிலரால் பாராட்டப்படும் போது செயற்பாட்டை மேற்கொண்டவருக்கு ஏற்படுவது மகிழ்ச்சி என்ற மனவுணர்வு. இது சட்டெனத் தோன்றி மறையலாம். அல்லது சில காலமாவது மகிழ்ச்சியுணர்வைத் தக்கவைத்து உடல் ரீதியான சுறுசுறுப்பை ஏற்படுத்தலாம். இதுவே தன்னால் நேசிக்கப்படும் ஒருவரின் பாராட்டுதலாக இருக்கும்போது அது மனவெழுச்சியாக மாறி மேலும் மேலும் பாராட்டைத் தேடும் செயற்பாடுகளைச் செய்யத் தூண்டும்.  இயல்பிலேயே நன்கு எழுதக்கூடிய திறன் உள்ள பெண் ஒருவரிடம் 'அம்மா கதை சுப்பர்' என்ற பாராட்டு மகிழ்ச்சி என்ற மனவுணர்ச்சியைப் பெரிதாகத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, சின்னச் சின்னக் கதைகளில் கவனம் செலுத்தும்; வளரிளம் பருவத்து மகளின் கதை ஒன்றை வீட்டிலுள்ளோர் பாராட்டும் போது அது மகிழ்ச்சி என்ற மனவுணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றது. இதுவே சகபாடிகள் மத்தியில் அவரது கதைகள் பாராட்டப்படும் போது மேலும் மேலும்  புதிய புதிய கதைகளை எழுதத் தூண்டும்; மனவெழுச்சியை அது தோற்றுவிக்கின்றது.  இந்த மனவெழுச்சியானது எழுத்துத் துறையில்; புதுப்புது உத்திகளை கையாளும் ஆவலைத் தூண்டுவதுடன் சில சமயங்களில் எழுத்துத் துறை தொடர்பான புதிய ஆய்வுகளைக் கூட இச் சமூகத்துக்கு விட்டுச் செல்லும் அளவுக்கு உள ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது மனவுணர்ச்சிகள் சட்டெனத் தோன்றி மறைபவை. உடல் உள மாற்றங்களை அவை ஏற்படுத்துவதில்லை. மனவெழுச்சிகள் அப்படிப்பட்டவையல்ல அவை உடல் ரீதியாக மட்டுமன்றி உள மாற்றங்களையும் ஏற்படுத்தவல்லவை. ஒருவரின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஏற்படக் கூடிய கண்ணீர் வெளிப்பாடு துக்கம் என்ற மனவுணர்ச்சியின் வெளிப்பாடே. இதுவே மயக்க நிலையை ஏற்படுத்தவல்லதாயின் அது மனவெழுச்சியின் பாற்பட்டதே. உடல் நடுக்கம் அல்லது மயக்கம் என்பது உடல்நிலைப்பட்டதாகவும், சாப்பாட்டை வெறுத்தல், விட்டத்தை வெறித்து நோக்குதல் போன்ற செயற்பாடுகள் உளநிலைப்பட்டதாகவும் இருக்கும். மனவெழுச்சிகள் சில சமயம் மிகவும் தீவிரமடைந்து மனவெழுச்சிப் போராட்டமாகவும் மாறுவதுண்டு.

காரணம் இது தான்
பூப்படைதலுடன் ஒரு குழந்தையின் குழந்தைப் பருவம் முடிவுக்கு வந்து விடுகின்றது. வயதுக்கு வருதல், பக்குவப் படுதல், பெரிய மனுசியாதல் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் வெறும் உடல் மாற்றத்தை மட்டுமே கருத்தில் எடுக்கின்றன.  அதன் உள ரீதியான மாற்றம் பற்றி யாருமே சிந்திப்பது கிடையாது. உடல் மாறினால் உள்ளமும் மாறிவிடும் தானே என்று பெரியோர்கள் எண்ணி விடுகின்றனர். குழந்தைகள் உலகுக்கென்றே தனித்துவமான உளப்பாங்கில் மாற்றம் எதுவுமின்றியே வளரிளம்பருவ உலகுக்குள் பிரவேசிக்கும் குழந்தை ஷசூழலுக்குத் தன்னைச் சரி செய்து கொள்ளாத எதுவுமே நிலைப்பதில்லைஷ என்ற இயற்கையின் நியதிக்கமைய அவ்வுலகுடன் பொருத்தப்பாட்டைப் பேண வேண்டிய நிலையிலுள்ளது. ஷபெரிய மனுஷிஷ அல்லது மனுஷன் என்ற தனது புதிய பதவிக்குத் தயாராகாத எந்தக் குழந்தையும் வழக்கத்துக்கு மாறான உணர்வை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. வளர்ந்தோருக்குரிய உடலமைப்பைப் பெற்ற கையுடனேயே அவர்களைப்போன்றே நடத்தையும் இருக்க வேண்டும் என்ற சமூகததின் எதிர்பார்ப்பும் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான அழுத்தமும் கவலை விரக்தி போன்ற அழுத்தமிக்க மனவெழச்சிகளை அல்லது கோபம் போன்ற அமைதியற்ற மனவெழுச்சியைத் தரக் கூடியது. குழந்தைப் பருவ விருப்பங்கள் பொதுவாக யதார்த்தத்துக்கு ஒவ்வாதவை. இந்த விருப்பங்களை வளரிளம் பருவத்தினர் அடையத் தவறும்போது அது அவர்களிடம் விரக்தி நிலையைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது. பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது, எதிர்ப்பாலாரின் முன்னிலையில் எவ்வாறு பிரபல்யமாவது போன்ற சிந்தனைகள் பெரும்பாலும் மனவெழச்சியைத் தோற்றுவிப்பவை.

மகிழ்வூட்டும் மனவெழுச்சிகள் 
தனது உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களைத் துடிப்புடன் அவதானிக்கச் செய்வது ஆர்வம் என்ற மனவெழுச்;சியே. ஒருசிலரே பாலியல் தொடர்பான முழு அறிவுடன் வளரிளம் பருவத்துக்குள் பிரவேசிக்கின்றனர். பாலியல் அறிவு  நடைமுறை வாழ்வின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியடைந்த மேலைத்தேய நாடுகளில் வளரிளம் பருவத்தின் தேடல் அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக விவகாரங்களில் அக்கறை போன்றவற்றில் அதிகம் திசைதிருப்பப்படுவதாக இருக்க கலாச்சார விழுமியங்களை இறுக்கமாகப் பேணும் கீழைத்தேய சமூகங்களில் வளரிளம்பருவம் முழுமையும் சிலசமயம்  அதற்குமப்பால் சென்று திருமணம் முடிக்கும் வரை பாலியல் தொடர்பான தேடல் தொடருகின்றது.
உடல் நலம், சுய திருப்தி, தான் வாழும் சூழலுடன் சரிவரப் பொருந்தி நிற்கும் தன்மை, தனது செயற்பாடுகளில் தான் அடையும் வெற்றி காரணமாகத் தனக்குள் உருவாகும் உயர் உணர்ச்சி. மன உளைவுச் சூழலில் ஏற்படக் கூடிய நகைச்சுவை உண்ச்சி,  போன்றன மகிழ்ச்சி என்ற உயர்நிலை மனவெழுச்சிக்கு அடிப்படையாகும்.

பாசம் என்பது மகிழ்வூட்டும் மனவெழுச்சி. தாயிடம் ஆரம்பித்து,  குடும்ப உறுப்பினர்கள், விளையாட்டுப் பொருட்கள,; செல்லப் பிராணிகள் என குடும்பம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழியும் குழந்தைப் பருவப் பாசம் வளரிளம் பருவத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறி மிக அதிகளவில் சகபாடிகளுடனும்  சிறு அளவில் செல்லப் பிராணிகளுடனும் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது.  அதுமட்டுமன்றி வளரிளம் பருவத்தில் பாசத்தின் தீவிரத்தன்மையை இனங்காண முடியும். பாசத்தையும் அன்பையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வோரும் உண்டு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. பாசத்தின் உச்சக்கட்டமே அன்பாகப் பரிணமிக்கின்றது. அன்பு என்பது பாசத்தை விடத் தீவிரமிக்கது. பொதுவாக எதிர்பாலாரிடம் ஏற்படுவது. பாலியல் விருப்பத்தின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. பாசம் அப்படிப்பட்டதல்ல. இது தீவிரத் தன்மையற்றது. எதிர்ப்பாலாரிடம் ஏற்படுவதென்றாலும் கூட பாலியல் விருப்பத்தின் கூறுகளை இது உள்ளடக்குவதில்லை. ஓரினப் பாலாரிடம் மட்டுமன்றி எதிர்பாலாரிடமும் இது தோற்றம் பெறும்;.

வெறுப்பூட்டும் மனவெழுச்சிகள்
பாம்புகள் பல்லி, கரப்பான் பூச்சி போன்ற உயிரிகள்;, சகபாடிகள் முன்னே நல்ல பேர் எடுக்க வேண்டும் என்ற உணர்வு,  இயலாமை, போன்றவை அச்சம் என்ற மனவெழுச்சியைத் தோற்றுவிப்பவை. தன்னால் நேசிக்கப்படுவோரின் முன் தனது அந்தஸ்து, பாதுகாப்பு போன்றவை அச்சுறுத்தலுக்குட்படும் என்ற அச்ச உணர்வு பொறாமையாக உருக் கொள்ளும். அதிக வயது இடைவெளி விட்டும் பிறக்கும் பிள்ளைகளில் மூத்த பிள்ளையிடம் பொறாமையுணர்வு அதிகம் நிரம்பிக் கிடக்கும்.

மற்றவர்களால் பரிகசிக்கப்படல், முறைகேடாக நடத்தப்படல், குத்தல் கதைகளை கேட்டல், தனக்குரிய பொருளை தனக்கிளையோர் களவெடுத்தல், பொய் சொல்லுதல், அதிகாரம் செய்தல், தான் நினைத்தபடி காரியங்கள் நடவாதிருத்தல் போன்றன கோபம் என்ற மனவெழுச்சியைத் தோற்றுவிக்கும். எரிச்சலுணர்வும் விரக்தியும் கோபத்தின் இரு வேறுபட்ட வடிவங்களே. அடுத்தவரது பேச்சு, நடத்தை, பழக்க வழக்கங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு எரிச்சலுணர்வைத் தோற்றுவிக்கவல்லது. அது போல் குறிப்பிட்ட நாளில் நடைபெறத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி இறுதி நேரத்தில் கைவிடப்படல், நாள் முழுவதும் செலவழித்துத் திருத்தப்பட்ட பொருள் திடீரெனக் கைதவறி விழுந்து விரயமாதல் போன்றவையும் எரிச்சலுணர்வைத் தோற்றுவிக்கவல்லது. பொதுவாக இது சமூகச் சூழலை மையப்படுத்தி எழுவது. ஆனால் விரக்தி உணர்வானது தன்னை மையப்படுத்தி எழுவது. உடல் அமைப்பு  தனக்கு சரிவரப் பொருந்தியிருக்கவில்லை, எதிர்ப்பாலாரை ஈர்க்கக் கூடிய வகையில் தான் கவர்ச்சியாக இல்லை, சக தோழருடன் ஆடிப்பாடும் அளவுக்கு தனது உடல் ஆரோக்கியமாக இல்லை, தனது நண்பர்கள் போல் செலவழிப்பதற்கு பணம் இல்லை, தனது விருப்பத்திற்கமைய படிக்கும் ஆற்றல் தனக்கு இல்லை என்ற உணர்வு விரக்தி என்ற மனவெழுச்சிக்கு அடிப்படையாகும். தான் நேசிப்போரின் மரணம், மண முறிவு, நீண்ட நாள் பிரிவு, உயிர் நண்பருடனான மன முறிவு, செல்லப் பிராணியின் மரணம் அல்லது மறைவு போன்றன துக்கம் என்ற மனவெழுச்சியைத் தோற்றுவிக்கக்கூடியது.

விடலைகள் என்னும் விசித்திர உலகில்-1


புதிய கண்டுபிடிப்பு
வளரிளம் பருவம் - இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்று. முதிர்ச்சிநிலை நோக்கி வளர்தல் என்னும் பொருள் கொண்ட Adolescence என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே தமிழில் வளரிளம் பருவம் எனக் குறிக்கப்படுகிறது. கட்டிளம் பருவம், குமரப் பருவம், விடலைப் பருவம், காளைப் பருவம் முதலிய பலதரப்பட்ட பெயர்களால்  இது அழைக்கப்படுகிறது. 12-18 வயதுக்கிடைப்படடோர் வளரிளம் பருவத்தினர் என அடையாளப்படுத்தப்படினும் இப்பருவம் எப்போது தொடங்குகின்றது என்பதையோ எப்போது முடிகின்றது  என்பதையோ அறுதியிட்டுக் கூற முடியாது. காலநிலை, மரபு நிலை, குடும்ப நிலை, பொருளாதார நிலை, பால், தனிப்பட்ட பண்புகள், கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் என்பவற்றுக்கேற்ப இது மாறுபடும். உடலியல் மாற்றங்களை வைத்து வளரிளம் பருவத்தின் தொடக்கத்தைக் கணிப்பதில் ஓரளவு வெற்றியடைந்தாலும் கூட கலாச்சாரம், சமூக வகுப்புகள், தனிநபரின் தன்மை என்பவற்றைப் பொறுத்து இதன் முடிவை சரியாக கணிப்பிட முடியாதுள்ளது.

வளந்தோர் பருவத்திலிருந்து குழந்தைப் பருவத்தை வேறுபடுத்திக் காட்டும் அபிவிருத்திக் கட்டமாகவும் இப்பருவத்தைக் கருத முடியும். பிள்ளைப் பருவத்திலுள்ள குழந்தை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வளர்ந்தோர் பருவத்தை நோக்கி வளர்ச்சியடைகின்ற ஒரு நிலை மாறல் கட்டமாகவே [period of transition]  இதனைக் கருத முடியும்.  வளந்தோராகவுமின்றி குழந்தைகளாகவுமின்றி இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள் இவர்களே. பெண்பாலாரைப் பொறுத்து மார்பக வளர்ச்சி, பெண் உறுப்புப் பிரதேசத்தில் மாறுதல், மாதவிலக்கின் தொடக்கம் போன்றவையும், ஆண்பாலாரைப் பொறுத்து உரோமங்களின் வளர்ச்சி, குரல் மாற்றம், சிறுநீருடன் விந்து வெளிப்படும் காலம் போன்றவையும் இவர்கள் வளரிளம் பருவத்துக்குள் நுழைந்து விட்டார்கள் என்பதை உணர.;த்;தும் உடலியல் மாற்றங்களாகக் கருதப்படுகின்றன. எனினும் வெறுமனே உடலியல் மாற்றங்கள் மட்டும் வளரிளம் பருவத்தை வெளிப்படுத்த போதுமானதல்ல. தோற்ற மாற்றம் மட்டுமன்றி நடத்தை மாற்றங்களும் வளரிளம் பருவத்தைத் தெளிவாக வெளிக்காட்ட உதவுபவை.

உலக சனத் தொகையில் ஐந்தில் ஒரு பகுதிக்கு அதிகமானவர்கள் 10-19 வயதுக்கிடைப்பட்ட பதின் வயதினரான Teen age வளரிளம் பருவத்தினரே என ஐ.நாவின் சனத்தொகைப் பிரிவு குறிப்பிடுகிறது. இதில் கவலைக்குரிய விடயம் எதுவெனில் வளரிளம் பருவத்தினரில் 85 வீதமானோர் ஆயுட்காலம் மிகக் குறைவாக உள்ள வளர்முக நாடுகளிலே வாழ்வது தான். அதிலும் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளின் மொத்தச் சனத்தொகையில் 50 வீதத்துக்கு மேற்பட்டோர் வளரிளம் பருவத்தினரே. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் சிறுவர்க்கான சமவாயம் 18 வயதுக்குட்பட்டோர் அனைவரையும் சிறுவர் என வரைவிலக்கணப்படுத்தினும் கூட உலக மொத்த சிறுவர்களில் மூன்றிலொரு பகுதியைத் தமதாக்கிக் கொண்டுள்ள வளரிளம் பருவத்தினர்; தொடர்பாக அதிக கவனம் செலுத்தவில்லை என்றே கூறமுடியும்.

விடுபட்டது இவ்வாறு தான் !
கைத்தொழில் சமூகத்தின் வளர்ச்சி காரணமாக வெளித்தெரிய வந்த  மனித வளர்ச்சிக் கட்டமாகவே வளரிளம் பருவம் கருதப்படுகிறது. அதுவரை இப்பருவத்தினர் வளந்தோராகக் கருதப்பட்டு பொறுப்புமிக்க பணிகளில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டனர் நிலவுடமைச் சமூகம் ஒன்றில் முதிர்ச்சி நிலையானது  maturity பாலின முதிர்ச்சியின் தொடக்க காலமாகக் கருதப்படுகின்ற பூப்புப் பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. ஆணாயின் குடும்பச் சுமையில் பங்கெடுக்கும் பொருட்டு உழைப்பில் ஈடுபடுதல் அல்லது குடும்பச் சுமையை தனித்து நின்று தாங்குதல், தன் தேவையைத் தானே தனித்து நின்று பூர்த்தி செய்தல், பெண்ணாயின் கரு வளத்துக்கு தயாரான கையுடனேயே தாய்மைப் பொறுப்பை வலிந்து திணித்தல் போன்றவை மூலம் இவர்கள் வளர்ந்தோராகவே கணிக்கப்பட்டனர். 19ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் நவீன கைத்தொழில் சமூகமும், சமூக நிலைமைகளும் உருவாக்கிய சமூக பொருளாதார மாற்றங்கள் உழைப்புச் சக்தியில் வளரிளம்பருவத்தினரின் தேவையைக் கணிசமானளவுக்கு இல்லாமல் செய்து விட்டது. நிலவுடமைச் சமூகத்தில் வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்த உடல் உள வளர்ச்சி பெற்ற பெண்களை பெண் விடுதலை என்ற பெயரில் முதலாளித்துவம் வெளியே கொண்டு வந்து குறைந்த கூலியில் உழைப்புச் சக்தியில் இணைத்த போது அதுவரை உழைப்புப் படையில் இருந்த உடல் உள முதிர்ச்சியற்ற ஒரு பருவத்தினரின் தேவை குறைவடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. வளர்ந்தோரின் வேலையில் பங்கு கொள்ளவும் முடியாமல் தமது இளைய சகோதரர்களுடன் இணைந்து குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளுமின்றி இரண்டும் கெட்டான் நிலையில் விடப்பட்ட இப் பருவத்தினர்  மனித வளர்ச்சி கட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக வெளித்தெரிய ஆரம்பித்தனர். சமூகத்தின் உருவாக்கமாக கருதப்படும் வளரிளம் பருவமானது அமெரிக்காவின் குழந்தைக் கல்வியின் தந்தை எனக் கருதப்படும் ஸ்ரான்லி ஹோல் [Stanley Hall]   என்பவரின் கண்டுபிடிப்பாக 1904ம் ஆண்டு அவர் எழுதிய நூல் வாயிலாக கருதப்படுகிறது. வளரிளம் பருவத்தை தனிநபர் ஆளுமையின் புதிய பிறப்பாகவே கருதும் இவர் ஓர் அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாகவே இப்பருவத்தை வரையறைப்படுத்துகின்றார். மனித வளர்ச்சிக் கட்டங்களின் ஒவ்வொரு நிலையிலும் சிக்கல்கள் தோன்றுமெனினும் வளரிளம் பருவத்து சிக்கல்கள் தனித்துவமானவை. இவர்களுக்கென்றே தனித்துவமாக அமைந்த உடற் பண்புகள், மனவெழுச்சிகள், சமூகப் பண்புகள், ஒழுக்கப் பண்புகள் போன்றவை இவர்களை ஏனைய பருவத்தினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.. இவற்றில் சிலவற்றை இங்கு நோக்குதல் பொருத்தமானது.

முதற்பார்வையே முழுப்பார்வை
முதற் பார்வையிலேயே தன்னைப் பற்றி அடுத்தவர்கள் போடும் கணிப்பே மிகப் பிரதானமானது என்பதையும் இந்தக் கணிப்பைத் தீர்மானிப்பதில் தோற்ற அமைவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதையும் நன்கு அறிந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர். ஆண்களை விடவும் பெண் பிள்ளைகளே தோற்ற அமைவு தொடர்பாக அதிக கவனம் செலுத்துகின்றனர். வளரிளம் பருவத்தை அதிகம் ஆக்கிரமிக்கும் ஒரு பொருள் கண்ணாடி. இவர்களுக்குப் பயன்படும் அளவுக்கு இது வேறு எந்தப் பருவத்தினருக்கும் பயன்படுவதில்லை. ஒரு ரூபா நாணயத்தின் அளவுள்ள கண்ணாடியே இவர்களின் அதிக பட்சத் தேவையைப் பூர்த்தி செய்துவிடும் வல்லமை கொண்டது. ஆண்கள் கூடுதலாக உடலமைப்பில் கவனம் செலுத்த, பெண்களைப் பொறுத்து முக அழகும் தலைமுடியும் கூடுதல் கவனம் பெறுகின்றது.  தோற்ற அமைவில் பிரதானமாகக் கவனத்தில் கொள்ளப்படுவது உடலமைப்பின் அளவும் வடிவமுமாகும். பொதுசனத் தொடர்பு ஊடகங்கள் உடலமைப்பின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆண்களைப் பொறுத்து தசை நார்களை விரிவடையச் செய்து ஆண்மைத் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பு உணவுகளை அவர்கள் விரும்புகின்றனர். முக்கோண வடிவ உடலமைப்பு இல்லாவிட்டாலும் கூட சளைக்காது தோளுக்கு தடித்த உட்பட்டி வைத்து மேலாடையை அணிவதன் மூலம் வெளிப் பார்வைக்கு அத்தகையதொரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் தீவிர கவனம் உள்ளவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர் பெண்களைப் பொறுத்து மெல்லிய உடல்வாகைப் பெற அவர்கள் ஆலாய்ப் பறக்கின்றனர். உடலமைப்பைத் தீர்மானிப்பதில் பரம்பரை அலகுக்கு பெரும் பங்கு உண்டு என்பதைப் பெரும்பாலானோர் அறிவதில்லை அல்லது ஏற்றுக்கொள்வதில்லை. நகர்ப்புற சமூகங்களில் உடற்பயிற்சி, சம விகித உணவு போன்ற வழிமுறைகளைப் பயனபடுத்தி தமது உடலைக் கட்டாக வைத்திருக்கும் முயற்சி ஒரளவுக்கேனும் வெற்றி பெற்றிருக்கிறது. மாறாக கிராமிய சமூகங்களில் உணவைக் குறைத்தால்; உடலை வாட்டலாம் என்ற தவறான கணிப்பினால்  கட்டாய பட்டினி கிடப்போரும் பட்டினியின் பின்னர் உடலைப் பெருக்க உதவும் மாப்பொருள் உணவின் அதிக பயன்பாடும் உடல் கட்டமைவுக்கு உதவி செய்வதற்கு பதில் உடல் பெருக்கவே உதவுகின்றன. மாப்பொருளை நீக்கி நார்ப்பொருள் உணவை வேண்டியளவு சேர்த்து வயிறு நிறைய உண்பதுடன் உடலையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை இவர்கள் அறிவதற்கான வாய்ப்புகள் இல்லை.

முடியின்றி முடிவேது
ஆண்களைப் பொறுத்து அண்மைக்காலங்களில் தலை முடி அதிக கவனத்துக்குரிய தொன்றாகியிருக்கிறது.  இவர்களின் முடியலங்காரத்தைத் தீர்மானிப்பதில் சினிமா பெரும் பங்கு வகிக்கிறது. வெற்றிப்படக் கதாநாயகர்கள் தமது ஒவ்வொரு படத்திலும் பின்பற்றும் பாணி படம் வெளியான கையுடன் கிராமப் புற முடியலங்கார நிலையங்களைக் கூட வந்தடைந்து விடுகிறது.. ஆனாலும்; தலைமுடியை நீளமாக வளர்க்கும் மேலை நாட்டு மோகம் நகர்ப்புறங்களை ஓரளவுக்கு ஆக்கிரமித்தாலும் கிராமப்புறங்களை அது இதுவரை எட்டியும் பார்க்கவில்லை என்றே கூற வேண்டும். பெண்களைப் பொறுத்து கிராமப்புறங்களில் தலைமுடியின் நீளம் பிரதான அம்சமாகக் கருதப்படும் அதேசமயம் நகரப்புறங்களில் அதன் வடிவமே பிரதானமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. 'குட்டை முடி நாகரீகம்'; என்ற நகர்ப்புறச் சிந்தனைக்கு  கிராமங்களுக்குள்; வலுவாக ஊடுருவும் வல்லமை இல்லை என்றே சொல்ல வேண்டும். அழகுணர்ச்சியினால் தன்னை அழகுபடுத்தும் தன்மையை விடவும் திருமணத்துக்குத் தன்னை தயார்படுத்தும் தன்மையே அதிகமாக இருப்பதனால் பெண்களின் அலங்காரங்களில் ஆண்களுக்குப் பிடித்தமான அம்சங்கள் கருத்தில் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  நாகரீக மாறுதலுக்கேற்ப எவ்வளவு தான் தலை முடியைச் சுருட்டிக் குட்டையாகக் கட்டினாலும் களியாட்ட விழாக்கள் சடங்குகளின் போது அடர்த்தியாகவும் நீளமாகவும் தோற்றமளிப்பதற்கான சிறந்த உத்தியாக முதல் நாட் பொழுதே தலை முடியை வரிந்து பின்னி அடுத்த நாள் அதனைக் கவனமாகப் பிரித்தெடுத்து, விரித்து ,தளரத் தளரப் பின்னி எவ்வளவு நீளமாக இருக்க முடியுமோ அவ்வளவு நீளமான தோற்றமாக்குவதற்கான சகல உத்திகளையும் மேற்கொள்ளும் பாங்கு பரிதாபத்துக்குரியது மட்டுமல்ல ரசிக்கக கூடியதும் தான்..  உடலைக் காயப்போடுதலுக்கும் தலை முடி உதிர்தலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்ற அறிவு பெரும்பாலான பெண்களுக்குத் தெரியாது. இதனால் உடலைக் குறைக்கும் நோக்குடன் உணவைக் குறைக்கும் செயற்பாட்டில் இறங்கி முடி வளர்வதற்குத் தேவையான சத்துக்களை இழப்பது தெரியாமல் 'கரை சேரும் வரையிலாவது பிள்ளைக்கு முடி கொட்டக் கூடாது' என்று தாய்மார் கடவுளை வேண்டுமளவுக்கு முடி தொடர்பான கவனம் எமது சமூகத்தில் சற்று அதிகமாகவே உள்ளது. வளரிளம் பருவத்தின் ஆரம்பக் கட்டங்களில் தலைமுடியை அழகுபடுத்தும் கவனமே இருப்பதன் காரணமாக 'பறக்கப் பறக்கத் திரியும் விருப்பத்தில்' அடிக்கொருதரம் தலைமுடியைச் செயற்கைச் சுத்தமாக்கிகளினால் ((zampoo ) குளிப்பாட்டுவதும் இதன் தாக்கம் கூடி தலைமுடி தன்னிச்சையாக உதிரத் தொடங்கவும் இயற்கைச் சுத்தமாக்கிகளை – விருப்பம் இல்லாவிடினும் கூட –நாடுவதும் இங்கு இயல்பானதாகும்.

அழகுக்கு அழகூட்டி---
அழகு சாதனங்களைத் தன்னுணர்வுடன்  பயன்படுத்தத் தொடங்கும் காலப் பகுதியாக வளரிளம் பருவம் அமைகிறது. நகர்ப்புறக் கடைகளில் பெரும்பாலானவை பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை விற்பவையாகவே உள்ளன. அழகுப் பொருட்களின் பாவனையானது 'நான் குழந்தைப் பருவத்தைத் தாண்டிவிட்டேன். என்னை இனிப் பெண்ணாகக் கருதுங்கள்' என்பதைச் சொல்லாமல் சொல்வதேயாகும். எமது சமூகத்தைப் பொறுத்தவரை அதி கூடிய பாவனையில் இருப்பது முகப்பூச்சுக்கெனப் பயன்படுத்தப்படும் பவுடர் கிறீம் வகைகள். அது ஏற்படுத்தும் இரசாயனத் தாக்கங்கள் பற்றிய தூர நோக்கு எவருக்குமே இல்லை. எனினும் இவற்றைப் பயன்படுத்துவதில் ஒரு ஒருமைப்பாட்டை உருவாக்குவதில் எமது சமூகம் வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆரம்ப காலங்களில் முகத்தை வெள்ளையாகவும் ஒளியுடையதாகவும் ஆக்கும் கிறீம் எது என்பது தொடர்பாக கருத்துக் குழப்பம் ஒன்றுக்குள் சமூகம் உட்பட்டிருந்தபோது விளம்பரங்களை நம்பி ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு அடிக்கடி மாறும் போக்கினால் எண்ணற்ற வகையில் இந்திய உற்பத்திப் பொருட்கள் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்தன.. ஆனால் தற்போது முக அழகுக்கு உடனடி நிவாரணி கயசை யனெ டுழஎடல என்ற கிறீம் மட்டுமே என ஆண் பெண் இருபாலாரையும்; நம்பச் செய்வதில், பாவித்த சொற்ப காலத்துக்குள்ளேயே முகத்தில் ஏற்படும் நிறமாற்றமும், தொலைக் காட்சி ஊடகம் மூலமான விளம்பரமும்; வெற்றி பெற்றிருக்கின்றன. நகரம் கிராமம் என்ற பேதமின்றி மூலை முடுக்கெல்லாம் இந்தக் கிறீம் பரவி விட்டது. வளரிளம்பருவத்தையும் கடந்து முதிர்பருவம் முழுமையும் இதன் பாவனை வேரோடியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.; முகத்துக்கு அழகூட்டுவதற்குப் பதில் தனக்குள்ளே உள்ள இரசாயனச் சேர்க்கையினால் முகத்தை வெளிறச் செய்வதனூடாகவே இந்த வெள்ளை நிறம் பெறப்படுகின்றது என்பதையோ இதன் பாவனையை முற்றாக நிறுத்தும் ஒரு காலப்பகுதியில் முகத்தின் தோல் முற்றாகச் சுருங்கி, கறுத்துப் புள்ளிகள் முகம் முழுவதும் பரவும் என்பதையோ சிந்திப்பதற்கு எவருமே தயாராக இல்லை பயற்றம்மா, கடலை மா, எலுமிச்சம் பழம், பாலாடை, தயிர் போன்ற தீங்கு விளைவிக்காத இயற்கையான அழகுப் பொருட்கள் கிராமங்களிலிருந்து எப்போதோ விடை பெற்று விட்டன. 'இயற்கையான எலுமிச்சம் பழத்திலிருந்து உருவாக்கப்பட்ட----' என்ற வாசகங்களைப் பயன்படுத்தி தமது பொருட்களைச் சந்தைப்படுத்தும் விற்பனையாளர்களின் யுக்தி கிறீம் வகைகளில் காணப்படும் இரசாயனத் தாக்கம் பற்றிய கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. நகர்ப் புறங்களில் உதட்டுச் சாயம் முக்கிய அழகுப் பொருளாகக் கருதப்படுகிறது. கிராமங்களை நோக்கி இதன் நகர்வு குறைவு எனினும் அண்மைக் காலங்களில் பண்டிகைகள்;, சடங்குகள், விசேட நிகழ்வுகள் போன்றவற்றில் அதன் பாவனை அதிகரித்திருப்பது அண்மைக் கால மாற்றங்களாகவே கொள்ள முடியும். அதிலும் புலம் பெயர் மக்கள் தமது உறவுகளை நாடி இங்கு வரும்போது இவற்றையும் காவிக் கொண்டு வருவது இத்தகைய மாற்றத்திற்கான பிரதான காரணமாகக் கொள்ள முடியும்.

ஆள்பாதி ஆடை பாதி
ஆள்பாதி ஆடைபாதி என்ற முதுமொழியே ஆடையின் முக்கியத்துவத்தை விளக்கப் போதுமானதெனினும் வளரிளம் பருவத்தினரைப் பொறுத்து அவர்கள் ஆடையின் நேர்த்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிடவும் அதன் பெறுமதிக்கும் நவீனபாணிக்கும் கொடுக்கும் முக்கியத்துவமே அதிகமாகும். 'நான் இன்னும் சின்னப்பிள்ளை அல்ல' என்பதை வெளிப்படுத்தும் ஆவலை அவர்களது ஆடைத் தெரிவில் கண்டு கொள்ள முடியும். இங்கும் கூட சிந்தனைக்கும் செயற்பாட்டுக்குமிடையில் ஒரு முரண்பாட்டை நாம் அவதானிக்கலாம்.; வளரிளம் பருவம் முழுமையும் பாலூக்கம் உச்சமாக இருப்பதன் காரணமாக தோற்ற அமைவு. உறவுகளைத் தீர்மானிப்பதில் கணிசமான பங்கினை ஆற்றுகிறது  இதனடிப்படையில் உடலமைப்பைச் சரியாக வெளிக்காட்டும் ஆடைகள் இவர்களின் விருப்பத்துக்குரியவையாக இருக்கும் அதேசமயம் குடும்பச் சூழலிலிருந்து முற்றாக விடுபட்டு, தமது தனித்தியங்கும் ஆற்றலுக்கு உறுதுணையாக அமையும் சகபாடிகள் வட்டத்திலிருந்து தம்மை அன்னியப்படுத்தும் எதனையும் - தமக்கு விருப்பமாக இருப்பினும் கூட- பின்பற்ற விரும்பாது அவர்கள் அணியும் ஆடைகளையே –தமது உடலுக்கு அவை பொருந்தாவிடினும் கூட- தெரிவு செய்யும் போக்குக் காரணமாக உடலுக்குப் பொருத்தப்பாடா அல்லது பெறுமதியும் நவீனமுமா என்ற குழப்பத்தில் மிகச் சிலரே இவை இரண்டிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது. எமது சமூகத்தைப் பொறுத்து சமூக பொருளாதார அந்தஸ்தை எடுத்துக் காட்டுவதற்கான குறியீடாகவே  ஆடையணிகள் கருதப்படுகின்றன எனினும் வளரிளம் பருவம் இது தொடர்பாக சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. கட்டடவேலை, தோட்ட வேலைக்குப் போகும் இப்பருவத்தினர் கூட மண் கல் என்பவற்றுடன் மல்லுக் கட்டுவதற்கான பழைய ஆடைகளைப் பையில் வைத்துக்கொண்டு மிக அழகாகவும் நவீனபாணியிலும் அலுவலகத்தில் பணி செய்பவரின் தோற்றத்தில் உடையணிந்து செல்வதை நாம் பார்க்க முடியும். தன்னைப் போல் தனது பிள்ளையும் உடலுழைப்பில் கிடந்து மாயக்கூடாது என்ற அவாவில் பெற்றோரால் மிகக் கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பப்படும் பிள்ளையும் கூட தானும் சமூக பொருளாதார அந்தஸதில் சற்றும் குறைந்தவன் அல்ல என்று தனது சகபாடிகள் மத்தியில் எடுத்துக்காட்டும் ஒரே நோக்குடன் இந்த நவீன பாணி ஆடைகளை எப்பாடுபட்டாவது அணிவதனையும் நாம் காண முடியும். வளரிளம் பருவத்தின் ஆரம்பக் கட்டங்களில் அதிகமாக விரும்பப்படும் கண்ணைப்பறிக்கும் நிறங்களும் அணிகலன்களும காலம் செல்லச் செல்ல குறைந்து கொண்டு செல்லும போக்கு உண்டு. முதிர்பருவ ஆண்கள் ஆடையின் நேர்த்தியில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி புகழ்பெற்ற உற்பத்தியாளரின் ஆடைகளை வாங்குதலை அந்தஸ்தின் சின்னமாகக் கருதுகின்றனர். பெண்கள் இதற்கு மாறாகத் தமது பொருளாதார அந்தஸ்தை வெளிப்படுத்தும் பிரதான குறியீடாக ஆடையணிகளைப் பயன்படுத்துகின்றனர்.