Friday, March 14, 2014

வரம்



உன் காட்டில் இன்று விசேட மழை
உனது கண்மூடித்தனமான வேண்டுதலை
புறக்கணிக்க முடியவில்லை மழையின் வேந்தனுக்கு
வந்துவிட்டான் மேளதாளங்கள் வாணவேடிக்கைகளுடன்
.
பேய்க்காற்றின் ஒருதலைக்காமத்தால்
மானபங்கப்பட்டு சிதைவுற்ற போதிலும்
'யாமார்க்கும் குடியல்லோம்
எமனை அஞ்சோம்' என்று
தலைநிமிர்த்தி நிற்கின்றன
உன் நீண்ட நெடுமரங்கள்

தப்பிப் பிழைக்கும் தந்திரோபாயத்தில்
எம்மூர்ப் புத்திஜீவிகளுக்கு
நாம் சளைத்தவர்கள் அல்ல என
வெள்ளத்தின் திசையில்
முதுகு வளைத்துப் படுத்திருக்கின்றன
புல் பூண்டு, செடி கொடிகள்

அள்ளுண்டு போன வெள்ளத்தில்
உறவுகளைப் பலிகொடுத்து
ஏங்கித் தவிக்கின்றன
முடிவெடுக்க முடியாது
முழிப்பதே வாழ்வாகிப் போன
உன் பிரஜைகள்

பேய்க்காற்றில் சிக்கி
பெருவெள்ளத்தில் அகப்பட்டு
உயிர் பிழைத்த அதிசயத்தை
கதை கதையாய் சொல்கின்றனர்
எதேச்சையாய் உன் காட்டை
கடக்க நேர்ந்தவர்கள்

பக்தனின் வேண்டுதலுக்கு ஒரு படி மேல் 
தலைசாய்த்த திருப்தி மழையின் வேந்தனுக்கு

பக்தா உனக்கு எதில் திருப்தி?

2009

No comments: