உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள் மனங்களில்!
• மனித சமுதாயத்தின் இறுதி இலக்கு தான் விரும்பியதை அடைதல். இவ்வுலகிலுள்ள படைப்புகள் அனைத்திலும் மனிதன் மாத்திரமே இறுதி இலக்கை அடைபவன். சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்து கள்ளர், பொய்யர், வஞ்சகர் போன்ற பலதரப்பட்ட மனித வர்க்கங்களைக் கடந்து நேரிய வழியில் நீதி, அன்பு, ஓழுக்கம் என்பவற்றைப் பின்பற்றி தனது இலக்கை அடைய விரும்பும் மனிதனுக்குத் தேவைப்படுபவை தன்னம்பிக்கை திறமை நிதானம் என்ற மூன்று பண்புகளுமே. இந்தப் பண்புகளைப் பெறுவதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அழகு அல்ல-- ஆளுமை என்ற அம்சமே என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களேயானால் உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் ---------
• நிமிர்ந்த நடை, நேரிய பார்வை, அமைதியும் எளிமையும் இயைந்த தோற்றம், ஆழமான பேச்சு இவையே ஆளுமையின் வெளிப்பாடுகள். எமது தோற்றத்தினால், எமது உயரிய பண்பினால், எமது செயல்களினால் எம்மைச் சூழ இருப்பவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், எமது சிந்தனைகளை அவர்கள் ஏற்று, அதனை மதித்து நடக்கத் தூண்டும் ஆற்றல்-- இது தான் மனித ஆளுமை. ஆறடி உயரத்திலும் துவண்டு, கூனிக் குழைந்து நடப்பதை விட ஐந்தடி உயரத்திலும் கம்பீரமாக நிற்க முனைவது ஆளுமை. உதடுகள் அழகற்றதாக இருப்பினும் தமது அறிவுபூர்வமான பேச்சால் அடுத்தவர் கவனத்தை தம்மீது திருப்ப முனைவது ஆளுமை. காலால் நிலத்தில் கோலம் வரைந்து கொண்டு அல்லது கண்கறை அங்குமிங்கும் அலைய விட்டுக் கொண்டு எதிரிலிருப்பவரிடம்; கதை கேட்பது அல்லது கதை சொல்வது ஆளுமையைச் சிதைத்து முன்னேற்றத்தின் தடைக்கற்களாக்கிவிடுகின்றது. அழகுக்கும் ஆளுமைக்குமிடையிலான பேதத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போது உங்கள் விடுதலைக்கான அடித்தளம் இடப்படுகின்றது. -------
• பெண் என்பவள் போகத்துக்குரியவள் என்ற அசைக்க முடியாத கருத்துநிலை பள்ளிப் பக்கமே எட்டிப்பார்க்காத பாமரப் பெண்ணைவிட பட்டப்படிப்பை முடித்துப் பதவியிலிருக்கும் பெண்ணிடம் அதிகம் என்பது கசப்பான உண்மை. அறிவுக் கண் திறந்து அறிவுப் பாதையில் நடைபயிலத் தொடங்குபவள் கூட அழகுக் கவசங்களைக் கைவிட விரும்புவதில்லை. மனித வாழ்க்கைப் பாதையில் இச்சைகளுக்கு அடிமையாகும் ஒரு குறுகிய காலப் பகுதிக்கு மட்டுமே அழகும் அலங்காரமும் ஆக்கிரமிக்க முடியும். அழகுப் பதுமைகளாக மட்டுமே இதுவரை உங்களைப் பார்த்துப் பழகிய கண்களை உங்கள் ஆளுமையால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்ற யதார்த்தம் எப்போது உங்களுக்கு உறைக்கின்றதோ அங்குதான் உங்கள் முன்னேற்றத்திற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கப்பெறுகின்றன.
• அறிவுக் கண்களால் அறியாமை என்னும் இருளைப் போக்கும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். ஒப்பீட்டளவில் நீங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கும் இடமும் இதுவாகவே இருக்கின்றது. நாளைய சமூகத்தை வடிவமைக்கப்போகும் சிற்பிகளைத் தயார்படுத்தும் உன்னத இடம் வகுப்பறை. அறிவுக் கவசமிட்டு, ஆளுமையின் மூலம் கவர்ந்திழுத்து, தோற்றம், ஒழுக்கம், உயரிய செயற்பாடுகள் மூலம் உங்களில் மரியாதையை, மதிப்பை, பக்தியை ஏற்படுத்தி உங்கள் அறிவை அவர்களிடம் பதிய வைக்கும் உன்னதமான இடம். தனது குருவிடம் பக்தியும் மரியாதையும் கொள்வதற்கு தடையாக இருப்பவை கண்ணைப் பறிக்கும் ஆடையும், கழுத்து நிறைந்த ஆபரணங்களும் அமைதியைப் பறிக்கும் கொலுசுச் சத்தமுமே. வெள்ளைச் சீருடை, சீரான தலையலங்காரம், ஆபரணத் தடை என்று பிஞ்சு மனங்களில் புறத்தூய்மையை சட்டம் போட்டு ஏற்படுத்தும் நல்ல பண்பை வகுத்திருக்கும் நீங்களே உங்கள் கோலங்களால் அவர்களின் அகத்தை அழுக்காக்குகின்றீர்கள் என்ற யதார்த்தத்தை உணருங்காலம் எப்போது வருகின்றதோ அங்கே உங்கள் முன்னேற்றத்திற்கான படிக்கற்களை நீங்களே எழுப்புகின்றீர்கள்.
• அறிவும் ஆளுமையும் போட்டி போட்டுப் பரிணமிக்க வேண்டிய இடம் நிர்வாகப் பதவிகள். கம்பீரம் பொருந்திய காலடிச் சத்தத்தில், ஆழ்ந்த அமைதியான பார்வையில், உதடு பிரியாத புன்னகையில், இலேசான தலையசைப்பில், பெரிய நிறுவனத்தையே கட்டியிழுக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. அழகு விம்பம் ஒன்று தனக்குச் சமமான வகையில் அல்லது தன்னைவிடவும் சிறந்த வகையில் கருத்துகளை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே தயங்கும் இச் சமூகத்தின் மனத்தில் உங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிப்பதற்கு உங்கள் அகப் புறத் தோற்றங்கள் மாறவேண்டும். நகப்பூச்சின் தரம், ஆபரணங்களின் கன பரிமாணம், வாசனைத் திரவியங்களின் உற்பத்தி மையம் என்பவற்றை ஆராயும் இடமாக வன்றி ஆழ்ந்த நோக்கு, அளவான பேச்சு, அறிவார்ந்த கருத்து என்பவற்றின் மூலம் உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் மதிப்பையும் மரியாதையையும் பெறும் விருப்பம் உங்களிடம் எப்போது தலைதூக்குகின்றதோ அப்போது உங்கள் விடுதலை உங்கள் கண்ணெதிரில்.-----
• புதிய உயிரொன்றின் உருவாக்கத்துக்கு வேண்டிய இரு அடிப்படை மூலப் பொருட்களும் ஆணுக்கும் பெண்ணுக்குமுரியவை. ஆனால் இந்த மூலக்கூறுகளினின்றும் முழுமையான உருவத்தைச் சமைக்கும் மேலதிகப் பொறுப்பு கருப்பைக்கு மட்டுமே உரியது. கருவைச் சுமந்த இரண்டாவது மாதத்திலிருந்தே தாயின் உணர்வுகள் கருவைப் பாதிக்கின்றன என அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையானால் ஆணின் கருவைச் சுமக்கும் வெறும் கருவியே தான் என்ற கருத்துநிலை தகர்ந்து ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு உயிரை உற்பத்தி செய்யும் உற்பத்திச் சக்தியே தான் என்ற கருத்துநிலைக்கு ணெ; மாறுதல் வேண்டும். நீங்களே விரும்பி ஆணுடன் இணைந்து குழந்தையும் பெற்றுவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்ற முறைப்பாட்டுடன் அடுத்தவர் முன்னே போய் நிற்காது கருப்பையில் ஆணின் உயிரணுவை உள்வாங்கத் தயார்படுத்தும்போதே உருவாகப்போகும் புதிய உயிருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை எப்போது உருவாக்கிக் கொள்ளுகின்றீர்களோ அன்றே உங்கள் முன்னேற்றம் உங்கள் காலடியில்-----
'தனது மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களை மனிதனால் மாற்ற முடியும் என்பதே மனித வர்க்கத்தின் முதன்மையானதும் முதல்தரமானதுமான கண்டுபிடிப்பாகும்' என்கிறார் உளவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ். 'உயிரைக் காக்கும்! உயிரினைச் சேர்த்திடும்! உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்! உயிரிலும் இந்தப் பெண்மை இனிது! எனவே பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா' என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில் நீங்கள் மாறவேண்டும் உங்கள் மனம் மாறவேண்டும். மனமாற்றம் மானுட விடுதலையை வென்றெடுக்கும் என்பது உண்மையானால்
உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள் மனங்களில்!
ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்
08-03-2006
No comments:
Post a Comment