'உலா'
அம்மாவின் மடியில் தலையும் சீமெந்து நிலத்தில் உடலுமாக கால்மேல் கால் போட்டுக் கொண்டு பெரிய மனிசத்தனத்துடன் புத்தகம் படிப்பதில் தான் அந்த 6 வயதுப் பாலகனுக்கு எத்தனை விருப்பம். முறுக்;கு மீசையும் முரட்டுத் தோற்றமுமாய், நெருங்கவே அச்சமூட்டும் மாமன் திடீரென அவனைப் பார்த்து 'நாளைக்கு மாரியம்மன் கோவில் தேருக்கு போவமா? எனக் கேட்ட போது அவனுக்கு ஏற்படும் அதிர்ச்சி, ஆச்சரியம், பின் குதூகலம்.....
தேருக்குப் போகும் தனது குதூகலத்;தை தனக்கு தெரிந்தவர் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் மாமாவின் மகன் ஸ்ரீக்கு கூற அவன் நம்பாத போது மனஞ் சோர்ந்து-----
காதும் கண்ணும் மங்கிப் போன பெத்தாச்சிக்கு புரிய வைக்க முயன்று ஏற்பட்ட தோல்வியில் மனம் அலுத்து-------
ரதி அக்காவிடம் சொல்லி அவளின் முத்தத்தையும், 5 ரூபா காசையும் பெற்ற போது குதூகலித்து--------
யோகு அன்ரியிடம் சொல்லப் போய் அவளும் மாமாவும் பட்டப்பகலில் கட்டிலில் கிடந்த அலங்கோலத்தைப் பார்த்து மனம் வெறுத்து------
இறுதியில் தயா மச்சாளுக்குச் சொல்லி மூவரும் இருந்து அடுத்த நாள் உடுத்தப் போகும் உடை பற்றி அலசி, உண்டியல் காசை மாறி மாறி எண்ணிப் பார்த்து கோவிலில் பார்க்கப் போவதையும் வாங்கப் போவதையும் அட்டவணைப்படு;த்தி---
அந்த ஒரு பொழுதுக்குள் அந்தக் குழந்தை மனசுக்குள் தான் எத்தனை ஆசைகள், ஏக்கங்கள், கனவுகள், உணர்வு மாற்றங்கள்... நெஞ்சம் நிறைந்த கனவுகளுடன் சாமி உலா பார்க்கக் கிளம்பிய அந்தப் பிஞ்சுகளின்
றோட்டுப் புதினங்களை அறியும் ஆவல்---
தீர்த்தக் கேணியில் கால் நனைக்கும் ஆசை----
தேரை சுற்றிப் பார்க்கவும் தேரின் அழகைப் பக்கத்தில் நெருங்கி நின்று பார்க்கவுமான உந்துதல்------
கோபுர வாசலின் படியைத் தொட்டு, கண்ணில் ஒற்றி, நாலு தெரிந்த முகத்தைப் பார்த்துச் சிரித்து, செல்லக் கதை பேசி, சந்தோசமாக உள்ளே போகும் கனவு------
அனைத்துமே மாமனின் ஒர் அதட்டலில், கனல் தெறிக்கும் பார்வையில் முரட்டுத்தனமாக, அநியாயமாகச் சிதைக்கப்பட்ட போது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் கருக்கொள்ளும் வெறுப்பு, வன்மம், ஏக்கம்---- பெரியவனாக வந்து இவரை இந்த மாமாவை நெஞ்சிலை ஏறியிருந்து கழுத்தை நெரித்து மூச்சுத் திணற----
கனவுகள் நொருங்கிய போது குரூரமாகக் காயப்பட்ட அந்த மனத்தின் உள்ளே கொப்பளித்த உணர்ச்சிப் பிழம்புகள் தனக்கென ஒரு வடிகாலைத் தேடவே செய்தன. உடனுக்குடன் உணர்வுகளை அடக்கிவைத்து சமயம் பார்த்து பழிதீர்க்க நினைக்குமாயின் அது குழந்தையல்லவே –
வாகனங்களுடன் வாகனமாக தம்மை இருத்திவிட்ட மாமனை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்ற வன்மம், வாகன சாலையில் இருந்த யோகு அன்ரியை நினைப்பூட்டிக் கொண்டிருந்த 'காராம் பசு' வின் மீது 'ஒண்டுக்கு' இருக்க வைக்கிறது.
மாமா வாங்கிக் கொடுத்த கடலைப் பொட்டலத்தை அவர் காணாத சமயம் தூர வீசி எறியச் செய்கிறது.
மாமனை நிமிர்ந்து நின்று விறைப்புடன் அம்மனை, கொடிமரத்தை, அபிஷேகத்தைப் பார்க்க வேணும் என்று அசட்டுத் துணிச்சலுடன் கேட்கவைத்து குட்டு வாங்கச் செய்கிறது.
தன்னைப் புறக்கணித்து தனது மகனை மட்டும் தோளில் தூக்கி சாமி காட்டிய போது இந்த வன்மம் கோபம் எல்லாம் வடிந்து மனம் ஒடுங்கி வெம்பி, வீதி உலா, பச்சை சாத்தல், வசந்த மண்டப அபிஷேகம் பார்க்கும் கனவுகளும், ஒட்டுப்பொட்டு, அம்மம்மாக் குழல், சூப்புத்தடி வாங்கும் கனவுகளும் பொய்த்துப் போக ஆற்றாமையுடன் அடுத்த முறை அம்மாவுடன் தான் வரவேணும்' என்று நினைத்துக் கொண்டு திரும்பச் செய்கிறது.
குழந்தை மனத்தின் மென்மையான உணர்வுகளை, அவற்றின் ஏற்ற இறக்கங்களை வெளிக்கொணரும் உத்வேகத்துடன் அவர்களின் அகஉலகிற்குள் பிரவேசித்து வெற்றிகரமாக 'உலா' வந்த திரு க. சட்டநாதன் 'கனக்க' எழுதாமல் கனதியாக எழுதி ஈழத்துக் கதை இலக்கிய உலகிற்கு உரமூட்டியவர்.
ஈழநாடு 1998
No comments:
Post a Comment