Sunday, February 23, 2014
கொடுத்துதவு........
என் எருமைக் கன்றுக் குட்டிக்கு
அன்புடன் ஒரு விண்ணப்பம்.
அறிவுப் பூமிதனில் அடுத்தவன் பாடுபட
அறுவடையை மட்டும் தனதாக்கிக் கொள்ளும்
தகவிலார் கண்டு மனம் அழலுறாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.
விநயமாய் வந்துநின்று வேண்டியது பெற்று
வேளைவரும் போதோ தூக்கியெறிந்து விடும்
துக்கிரிகள் கண்டு மனம் துவளாது இருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.
பசித்தவன் நாடிவர பாரா முகங்காட்டி
ருசிப்பவரைத் தேடி முழுமனதாய் விருந்தளிக்கும்
வித்தகர் கண்டு மனம் விசனமடையாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.
தன்வீட்டுக்குணவூட்ட தன்னையே உருக்கியவரை
தாம் வளர வேண்டி தயங்காமல் உதறிவிடும்
உடன் பிறந்தோர் கண்டு மனம் உருவேறாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.
அறிவுப் பயிர் வளர அத்திவாரம் போட்டவரை
திரும்பியே பாராது திமிராய் நடந்துவிடும்
தருக்குடையார் கண்டு மனம் எரிவடையாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.
ஆடையில்லா ஊரில் அரைகுறையாத்தானும்
உடுத்திருக்க வேண்டில்
உன் குணத்தில் சிறிதை
உடமையாக்கிக் கொள்வதே உத்தமமானது.
மே 1992
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment