Sunday, February 23, 2014

எங்கிருந்து கற்றாய் நீ ?



என் இனிய தோழி !

எண்ணிரண்டு வயதில்
கண்ணிரண்டால் தூதனுப்பி
காதல் கதை பேசும்
கன்னியர் கூட்டத்துள்
கட்டவிழ்த்து அலையும்
கண்ணின் மணிகளுக்கு
கடிவாளம் போட்டு
கண்ணியமாய்க் கதைபேச
எங்கிருந்து கற்றாய் நீ?

கைகால் அழகுகாட்ட
கருத்துடனே விலங்குபூட்டும்
கண்ணுக்கும் உதட்டுக்கும்
கோடிழுத்துக் கோலமிடும்
கோதையர் பலருக்குள்
முழுநிலவாய் முகம் மலர்த்தி
புன்னகையே  அணியாக
புதுமலர் போல் நீயிருக்க
எங்கிருந்து கற்றாய்....?


அறிவுக் கடல்தனில்
அங்கங்கே படகோட்டி
அத்தனையும் தெரியுமென
ஆரவாரம் காட்டும்
அரைகுறைகள் பலரிருக்க
புத்தறிவுக் கடலுக்குள்
புகுந்து முக்குளித்து
முத்தெடுத்த பின்பும் நீ
முகந்தெரியாதிருக்க
எங்கிருந்து கற்றாய்...?


பார்வையால் பசிதூண்டி
பலசுவையும் காட்டிவிட்டு
நாசூக்காய் நழுவும்
நயவஞ்சக கூட்டத்தின்
பாயும் விழி அம்புகளை
பார்வையால் விரட்டி
பணிந்தணுகும் பாதகரை
பக்குவமாய் கதை பேசி
எட்டியே நிற்கவைக்கும்
கலை எப்போ கற்றாய் நீ....?


குடும்பக் கோவிலிலே
அன்பெனும் விளக்கேற்ற
மென்மைக் கோலமுடன்
மேதினியில் உலவும் நீ
வேளை வரும் போதோ
வீறுகொண்ட வேங்கையாய்
வல்லசுரர் வதம் செய்யும்
கொற்றவைத் தாயாய்
நிதமொரு கோலங்காட்டும்
விந்தைதான் எங்கு பெற்றாய்...?

ஜன 1993

No comments: