Sunday, February 23, 2014
அழகு
கூனல் விழுந்த கூட்டுக்குள்
கூனலற்ற மனம் அழகு
மனதின் மூலை முடுக்கெல்லாம்
மனிதம் என்றொரு குணம் அழகு.
வற்றிச் சுருங்கிய தேகமதில் - மனதை
வெற்றி கொள்ளும் தீரம் அழகு
அனுபவமற்ற அறிவுதனை – என்றும்
அலட்சியப்படுத்தும் வீரம் அழகு.
நெடுத்து மெலிந்த கரங்களுக்கு
கொடுத்து உண்ணும் அறம் அழகு.
ஆதரவற்றுத் திரிபவரை – என்றும்
அணைத்துக் காக்கும் திறம் அழகு.
வளைந்து நெளிந்த கால்களுக்கு
வாழத்துடிக்கும் வேகம் அழகு.
சீராய் என்றும் நாம் வாழ – எம்மை
நேராய் நடத்தும் தாகம் அழகு.
கோழி முட்டைக் கண்களுக்குள்
ஆழி போல் பெருகும் ஈரம் அழகு.
சூழ்ந்து வருத்தும் கொடுமைகளை
ஆழ்ந்து நோக்கும் போதம் அழகு.
உருவில் பெருத்த உதடுகளுக்கு
உண்மையே பேசும் உரம் அழகு.
அடுத்துக் கெடுக்கும் வஞ்சகரை
என்றும் தடுத்துப் பேசும் தரம் அழகு.
அழகு அழகு அத்தனையும் அழகு
அவளைக் கவர்ந்திடும் ஆணழகு அது
ஜன 1996
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment