Sunday, February 23, 2014

சிலைகளும் சிற்பிகளும்

அண்ணி

அண்ணி அழகானவள் மட்டுமல்ல தனது கூரிய பார்வையால் எவரையும் பணியவைக்கும் ஆளுமை கொண்டவள்; அன்பானவள். அதிகம் படிக்காதவள் ஆனாலும் அடுத்தவர் மனங்களை எளிதில் படித்துவிடும் ஆற்றல் கொண்டவள்.

அதனால்தான் திருமணம் முடித்த பின்னரும் கூட தன்னை விஷமாக வெறுத்து அண்ணனை, இழந்து விட்ட எதையோ தேடி அலைவது போல் வானத்து மீன்களை வெறுத்து நோக்கிக் கொண்டிருந்த அண்ணனை ஒரு இரவிற்குள் மாற்ற அவளால் முடிந்தது. குடும்பப் பாரத்தில் சோர்ந்து விரக்தியின் விளிம்பில் நின்றவரிடம் எவ்வித பதட்டமுமின்றித் தனது தசைகளைக் கழற்றிக் கொடு;த்து, கடை போடவைத்து, செல்வம் கொழிக்கும் நிலைக்கு வழிகாட்ட முடிந்தது. சாகவேண்டும் என அடிக்கடி விரும்பியவரில் வாழும் ஆசையை, வாழ்க்கையைக் காதலிக்கும் வெறியை ஊட்ட முடிந்தது.

ஆனால் அவளோ யாழ்ப்பாணத்து சராசரி பெண்ணுக்கு இருக்கும் நகைமோகமோ, ஆடம்பர மோகமோ இல்லாதவள். செல்வம் புரளும் வீட்டிலும் எளிமையை நேசிப்பவள். சுhதாரண ஒரு தோடு. நெற்றியில் பெரிய தொரு குங்குமப் பொட்டும் உதட்டில் சதா புன்முறுவலும் வளையவருபவள்.

அவளுக்கு மிரண்டு ஓடிய அண்ணாவை தன்னைச் சுற்றிச் சுற்றி வரப்பண்ணும் ஆற்றல், தனது புகழ், செல்வம், அந்தஸ்து, ஊராரின் மரியாதை அனைத்தும் மனைவியால் தான் என்று மானசிகமாக அவளை வணங்கச் செய்யும் ஆளுமை, ஊராரின் மரியாதையைத் தன்பக்கம் ஈர்க்க வைக்கும் நற்பண்பு, அண்ணி அண்ணி என நாங்கள் உயிரை விடுமளவிற்கு எங்கள் மீது பாசம். இத்தனையும் அந்த எளிமையான உருவத்திற்குள் இருந்து எங்களை பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் அன்று மட்டும் வழக்கத்திற்கு மாறாய் - முகத்தில் சோகம்...., நடையில் தளர்வு...ஏன்? உயிருக்குயிராய் வளர்த்த தன் மைத்துனி அவனைப் பிரிந்து வெளிநாடு செல்லும் சோகம் அவளை மிக மிக பாதித்து விட்டது. அவனைப் பலவீனப்படுத்தி அவளிற்குள்ளே கனிந்து கனன்று கொண்டிருந்த எரிமலை ஒன்றிற்கு வடிகால் தேடிக் கொடுக்கும் மளவிற்கு அந்தப்பிரிவு அவளைப் பாதித்து விட்டது.

தங்கையை பிரிந்த சோகத்தை மனைவியின் அருகாமையில் மறக்க வந்த அண்ணனுக்கு, 'என்னை விட்டு என்னவோ கழண்டு போனது போல் இருக்கு' என பிரிவுத்துயரை வெளிப்படுத்தியவருக்கு கழற்றி எவளிட்டை கொடுத்தனீங்கள்....? உங்கட அவளிட்டையோ....? அவளை  ஏன் ஏமாத்தினீங்கள் என்ரை காசுக்காகத்தானே? அவளிலை தானே உங்களுக்கு விருப்பம். போங்கோ உங்கடை அவளிட்டை போங்கோ.

ஆம்! அன்புக்கு ஏங்குகின்ற கணவன் தனக்கு மட்டும் சொந்தம் என எண்ணுகின்ற இன்னொரு அண்ணி அன்று வெளிப்பட்டாள்.

அண்ணாவின் கோபம், இயலாமை, அவமானம் எல்லாம் சேர்ந்து முதல் தடவையாக அவளின் உடலில் தடம் பதித்தது.

முதல் தடவையாக கண்கள் கலங்க, கண்ணீர் துளிகள் சிந்தி, ஆனால் அவள் அழவில்லை – உறுதியும் ஆளுமையும் கொண்டவர்கள் அப்படித்தான் இருப்பார்களோ?

எல்லாம் சிறிது நேரத்திற்குள் தான். மீண்டும் அவன் பழைய அண்ணியாக மாறிவிட்டாள். தனது கொதிப்பை குளிர்விக்கவோ, என்னவோ நீண்ட நேரம் தலை குனிந்தான். வானத்தை மீண்டும் வெறித்து நோக்கத் தொடங்கிய அண்ணனை அன்புடன் அணைத்து, தனது பார்வையால் அவனை மன்னித்துவிட்ட சேதியை சொல்லி ....... 'உங்களுக்கு நான் இருக்கிறன் என தெம்பூட்டி......

அட! இப்படியும் ஒருத்தி இருப்பாளா? கணவனின் உள்ளம் இன்னொருத்திக்கு சொந்தமானது என தெரிந்தும் கூட அவனின் உயர்விற்குப் பாடுபட, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பலம் வேண்டும். அவனைத் தனக்குள் சிறைப்படு;த்தும் ஆற்றலை, கனவிலும் அவளை நினைத்து உருக வைக்கும் பரிசத்தை எங்கிருந்து பெற்றாள். முகத்தில் ஒரு கவலை, ஏக்கம், வெறுப்பு இன்றி இவ்வளவு காலமும் உற்சாகமாக புத்துணர்ச்சியுடன், முறுவல் காட்டி நடமாடும் மன உறுதியை எங்கிருந்து பெற்றாள்.

உண்மையில் அவள் சாதாரணமானவளில்லை. ஈழத்து தமிழ் இலக்கிய வானில் சட்டென மின்னிய ரஞ்சகுமார் என்ற அற்புத சிற்பியின் கைவண்ணத்தில் உருவான இவள் எமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும் யாசிக்க வேண்டிய பெண்.

No comments: