Sunday, February 23, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள்  5

இன்று வெள்ளிக்கிழமை.
'எட நல்லா விடிஞ்சு போச்சு போலை கிடக்கு. இவள் அடுத்த வளவு கமலம் வந்து இப்ப முழுச்சாணியையும் வழிச்செடுத்துக் கொண்டு போப்போறாள். அதுக்கு முதல் நான் முந்த வேணும், என்ற முணு முணுப்புடன் அந்த மூன்று ஏக்கர் வளவு முழுவதும் அலைந்து ஒரு மாதிரி சாணி அள்ளிக் கொண்டு வந்து வீடு முழுவதும் மெழுகுவதில் ஈடுபட்டாள் அம்மா.

இன்றைக்கு காலமை எல்லோரும் சிவபட்டினி தான்.

'மா முடிஞ்சு போச்சு. பாண் வாங்க காசில்லை. நிவாரண அரிசியும் திண்டு தீர்த்தாச்சு. அரிசி வாங்கினால் தான் மத்தியானச் சமையல். சும்மா உதிலை குந்தி கொண்டிருந்தால் வயிறு நிரம்புமே'. 

மெழுக்கு வேலையை கை துரிதமாகச் செய்ய வாய் அந்த வேகத்திலையே மனுஷன் மேல் சரமாரியான அம்பை விட்டுக் கொண்டிருந்தது. மனுஷன் தான் என்ன செய்யும். ஆரன் வேலைக்குக் கூப்பிட்டால் தானே கையிலை மடியிலை ஏதாவது வாறதுக்கு.

எப்படியோ மனுஷன் அரிசியும் பருப்பும் கொண்டு வந்து போட்டு விட்டுது. தேங்காய் வாங்க காசு போதவில்லை. அவளும் சளைத்தவளா! என்ன? சோறு காய்ச்சி தேங்காய் போடாமல் பருப்புக்கறியும் வைத்தவள் பர பரவென்று கோயிலுக்கு ஆயத்தமாகி விட்டாள்.

'எட மோனை இந்தா இந்தக் காசை கொண்டு போய் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக் கொண்டு வா' 

சீலைத் தலைப்பில் முடிந்திருந்த காசு மூத்தவன் கைக்கு மாறியது. சமைக்கிறதுக்கு காசில்லை என்று புறு புறுத்தவளுக்கு இப்ப என்னண்டு இது வந்தது. கேட்பதற்கு எல்லோருக்குமே வாய்க்கு இருந்தது. ஆனால் நாள் முழுக்க அருச்சனை வாங்க ஒருத்தருக்கும் தைரியம் இல்லை.

அதுசரி! அவளுக்கு காசு எங்காலை? பிள்ளையாருக்கு கொடுக்க வெண்டே நாலைஞ்சு கோழிகள் வளர்க்கிறாள். வீட்டுச் செலவுக்கு ஒரு சதமும் தொடுவதில்லை.

'பிள்ளையள் பசியிலை அந்தரிக்க பூசைக்கு பார்த்துப் பாராமல் செலவழிக்கிறதை பொறுக்காமல் தானோ இந்த சுவாமிகளும் மூடின கண்ணை திறக்குதுகள் இல்லை.

No comments: