Tuesday, February 04, 2014
சத்திய மனமொன்றின் நித்திய வேள்வி------
முகத்துக்குப் புன்னகைத்து
முதுகுக்குப் புறங்கூறும்,
ஏறிச் சென்ற ஏணியை
எட்டியே உதையும்,
வளமான வாழ்விற்கு
வழி தவறி அலையும்,
தன்னலத்தின் பொருட்டு
பிறர் நலனைப் பலியாக்கும்,
தனிமனித வக்கிரங் கண்டு – மனம்
உருவேறிச் சன்னதமாடும்.
வாழ்க்கைச் சுழலுக்குள்
ஆதாரம் இன்றி
அரவணைக்க யாருமின்றி
அல்லலுறும் மனங் கண்டு,
சுத்துமாத்துக் கும்பலுக்குள்
சிக்கிச் சுழன்று நிதம்
திசையின்றி அலையும்
சூதில்லா நெஞ்சங் கண்டு,
ஏனிந்த வாழ்வு என
ஏங்கி நிதம் உருகும்
பொய்யுக்குள் மெய் தேடி
புல்லுக்குள் நெல் தேடி
அலைந்து அலைக்கழிந்து
உளஞ் சோரும் வேளைதனில்,
ஆதரவுக் கரம் நீட்டும்
ஒன்றிரண்டைக் கண்டு
இதமடைந்து மீண்டும்
தன் இலக்கை நோக்கி
உயிர்ப்புடன் நடக்கும்
உளவுரத்தைப் பாசனஞ் செய்யும்.
ஆக்கிரமிப்பாளனை
ஆவேசமாய் எதிர்த்து
அவல வாழ்வு தனை
அசையாது தாங்கி
உறவுகளைத் தொலைத்த பின்பும்
உறுதியைத் தொலைக்காது
உரமான உள்ளங்களால்
உரமேறி நிற்கும்
இம் மண் பார்த்து
உவகையும் கொள்ளும்.
தன் மண்ணில் என்றும்
தலை நிமிர்ந்து வாழ
தன்னையே வித்தாக்கும்
தாய் மண்ணின் புதல்வருக்கும்
தளராது, தம் வரம்பை மீறாது
தம் வழியில் நடக்கும்
தனிப் பெரு மக்களுக்கும்
தலை வணங்கும் வேளைதனில்
பொங்கும் மனது பொசுக்கென தணிந்து
நம்பிக்கை துளிர் விட
மெல்ல அமைதி கொள்ளும்.
யூலை 1992
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment