Monday, November 09, 2015

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
ஈழத்தின் நெருக்கடி காலத்து இலக்கிய ஆளுமை

அன்பும் அறநெறியும் ஆன்மீக வாழ்வும் இணைந்ததோர் அற்புதமான ஊர் இணுவையூர். போட்டதெல்லாம் பொன்னாக மிளிரும் வளங்கொழிக்கும் செந்நிறப் பூமி-- மனிதனதும் மண்ணினதும் தாகம் தீர்க்கும் வற்றாத இனிக்கும் கிணறுகள்-- பணம் பண்ணுவதற்கு புகையிலைக் கண்டு-- பதமாக உண்பதற்கு மரவள்ளிக் கிழங்கு--  வீட்டு நிகழ்வோ ஊர்ப் பொது நிகழ்வோ  அடுத்த ஊருக்கு உதவி தேடிப் போகத் தேவையில்லை என்னுமளவிற்கு மாலை கட்டவா, மங்கல முழக்கம் செய்யவா, மணங்கமிழச் சமைக்கவா, அபிஷேகம் செய்ய இளநீர் பறிக்கவா என தொழிலுக்கொரு தெருவென மக்களைக் கொண்ட நல்லதொரு பொருளாதாரச் சூழல்--
முகங்கழுவி உடுத்த உடுப்புடனேயே கும்பிட்டு வந்து தேத்தண்ணி குடிக்க வாகாய்,  வீட்டு வளவுக்குள் வயிரவர், கையொழுங்கைகளின் முகப்பில், தெருவோரங்களில்; கல்லுப்பிள்ளையார்கள், கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கு என்று அனைத்துத் திசையிலும் சமூக ஒருங்கிணைப்பு மையங்களாய் தேரோடும் வீதியுடன் கூடிய ஆகம விதிக்குட்பட்ட அம்மன் பிள்ளையார், முருகன் ஆலயங்கள், கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது என்ற வகையில் மச்சம் அளையாதவர்களையும் தமது சக்தியால் மடை வைக்கத் தூண்டுகின்ற பத்திர காளி என்று, தடுக்கி விழுந்து எழும்பிப் பார்த்தால் முன்னே ஒரு தெய்வம் அமர்ந்திருக்கும் என்று சொல்லுமளவிற்கு நல்லதொரு ஆன்மீகச் சூழல்---
சமய ஞானத்துடன் தாய்மொழி, அயல்மொழி இரண்டிலும் பாண்டித்தியம் பெறும் வகையில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது இந்து மகளிர் கல்லூரி என்ற பெருமையைச் சுமக்கின்ற இராமநாதன் கல்லூரி என்னும் முதலாம்தர பாடசாலை, இலங்கைத் தீவில் வயதில் மூத்த இரண்டாவது சைவப் பாடசாலை என்ற பெயர் தரித்த அன்றைய சைவப்பிரகாச வித்தியாசாலை, சைவம் தழைக்கவென உருவாக்கப்பட்ட சைவமகாஜன வித்தியாசாலை என்று பள்ளிப் படிப்புக்கென இந்தச் சிறிய ஊருக்கு மூன்று பாடசாலைகள், சாதிக்கு மட்டுமன்றி குறிச்சிகளுக்கென்றும் வாசிகசாலைகளாய் இயங்கும் ஏழெட்டுப்பத்து சனசமூக நிலையங்கள்,  பாடசாலைப் பக்கம் எட்டிப்பார்க்காதவர்கள் அல்லது எட்டிப்பார்க்கும் வசதியற்றவர்கள் கூட திருக்குறள் போன்ற நீதி நூல்களையும் பாரதம் போன்ற காப்பியங்களையும் கந்த புராணம் போன்ற சமய நூல்களையும் செவிவழி பெறுவதற்கான சிறந்த சொற்பொழிவுக் கூடங்களாக அமைகின்ற கோவில் மண்டபங்கள், சுருட்டுக் கொட்டில்கள், அரசியல் முதற்கொண்டு அடுத்தவரின் அந்தரங்கங்கள் வரை அலசப்படும் வீட்டுத் திண்ணைகள், வேலிப் பொட்டுகள், கௌரவிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்த பின்னர்தான்  கல்விப் பின்னணியை அறிய ஓடுமளவிற்கு அறிவில் சிறந்த அறிஞர்கள், பேரறிஞர்கள், சித்தர்கள், சாத்திர விற்பன்னர்கள், பரியாரிகள், விஷக்கடி வைத்தியர்கள், விவசாய விஞ்ஞானிகள், கலைஞர்கள், கைப்பணி செய்வோர் என்று அறிவு சார்ந்தவர்களும் கல்வித் தகைமையின் அடிப்படையில் மட்டும் கௌரவம் பெறும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், எனப் பல தொழில் சார்ந்தவர்களும் ஒருங்கே வசிக்கின்ற பேறு பெற்ற நல்லதொரு பட்டறிவும் பகுத்தறிவும் நிரம்பிய சூழல்.
ஒரு காலத்தில் தூர இடங்களில் இருந்து வந்து பிள்ளை பெற்றுத் துடக்குக் கழிவும் செய்துவிட்டு திரும்பும் வசதி படைத்த புகழ் பூத்த மகப்பேற்று ஆஸ்பத்திரி,  இட்ட இடைஞ்சல்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் விழுந்தடித்து ஓடிவரப்பண்ணுமளவிற்கு சக்தி வாய்ந்த சாத்திர விற்பன்னர்கள், உள வைத்தியத்துக்குப் பேர் போன காரைக்கால் சுவாமியார், விஷக் கடிக்கு பேர் போன முருகையா வாத்தியார், ஆயுள் வேத வைத்தியத்துக்குப் பேர் போன செல்லப்பாப் பரியாரியார் என்று நல்லதொரு மருத்துவச் சூழல்---
தூங்கி எழுந்தால் பண்ணிசையோ பாட்டிசையோ வாத்தியக் கருவிகளின் ஓசையோ என்று கலைகளின் சங்கமமம், நாடகக் கலைஞர்கள், சங்கீத விற்பன்னர்கள், புலவர்கள், கவிஞர்கள், பல்கலை வேந்தர்கள் என இயல் இசை, நாடகம் என முத்தமிழ் சார்ந்த அறிஞர்கள், கலைகளைக் கற்பிக்க ஒரு நுண்கலைப்பீடம், கலைகளை வளர்க்க கோவில் விழாக்கள், ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை போதிக்காமல் செயற்படுத்திக் காட்டுமளவிற்கு வேட்டியும் நசனலுமாக இன்றும் உலாவிக் கொண்டிருக்கின்ற எமது அன்றைய வாத்தியார்கள், இன்றைய அம்மாக்களின் கோலம் கணிசமாக மாறிவிட்டபோதும் ஒரு அம்மா எப்படி இருந்தா, இருப்பா என்பதற்கு அத்தாட்சியாக தட்டுடுப்பும் வகிடெடுத்த குடும்பியுமாக இன்றும் உலவும் அம்மாக்கள், என்னதான் தொலைக்காட்சியின் ஊடுருவல் இருந்தாலும் ஊர்ப் பொது நிகழ்வில்  தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்கள் அனைத்தையும் பேணும் வகையில் பட்டுப் புடவை, தலை நிறைய மாலை, என்று ஒன்று கூடும் மக்கள் என  நல்லதொரு கலாசார சூழல்--
இணுவை மண் உண்மையில் இணையிலி தான். உலகப் புகழ் பெற்ற இணுவில் கந்தனின் மஞ்சம் இந்த மண்ணுக்குரியது. சுடலையுடன் இணைந்த வகையில் மூலஸ்தானத்தில் பஞ்சலிங்க வடிவில் அமர்ந்திருக்கும் காரைக்கால் சிவன் காலத்தால் முந்தியது.  வேதத்தில் சேர்க்கவென்று வலிது முயன்றும் பயனடையாது தோல்வியின் சின்னங்களாக இன்றும் இருக்கும் அன்றைய அமெரிக்கன்மிசன் பாடசாலைக் கட்டிடமும் ஆஸ்பத்திரி வளவிலுள்ள தேவாலயமும்... இது மட்டுமா! பட்டறிவும் படிப்பறிவும் இணைந்து உருவாகின்ற ஞானம் (றளைனழஅ) என்ற சொல்லின் அத்தாட்சிகளாக  பல ஞானிகளை கொண்ட பெருமை பெற்றது இந்த மண்.
இந்த மண் பற்றி இத்தனை பீடிகை ஏன்?. ஒரு மனிதனைச் செதுக்குவதில் அவன் வாழும் சூழல் மிக முக்கியமானது. இந்த மண்ணுக்குரிய சகல அம்சங்களதும் வார்ப்பாகத் தான் நான் இருக்கின்றேன். இருக்கவும் விரும்புகின்றேன். நீங்களும் கூட விரும்பியோ விரும்பாமலோ உங்கள் சூழலிடமிருந்து தப்பிக்கவே முடியாது. பொதுவாகவே தமிழ்ச் சமூகத்தில் போதனைகள் எடுபடுவதில்லை. முக்கியமாக இணுவை மண்ணில் இந்த எடுபடாத தன்மை சற்று அதிகம். இங்கு ஒவ்வொருவரும் தாம் நடந்து கொள்ளும் முறையினு10டாக அடுத்தவருக்கு வழிகாட்டலை மேற்கொள்ளலாமே தவிர வேறு எந்த வகையிலும் அறிவூட்டலை மேற்கொள்வது சாத்தியமில்லை. நான் பிறந்து வளர்ந்த இச் சூழல், இச்சூழலுடன் அடிக்கடி நான் முரண்படும் சந்தர்ப்பங்கள், இந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள், மீண்டும் இந்தச் சூழல் என்னை தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலுடன் நான் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே இன்னொருவர் பற்றிய எமது பார்வையில் செல்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.  ஏனெனில் அடுத்தவரை அளப்பதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் அளவுகோல் நாமேயன்றி வேறெதுவும் இல்லை. இணுவையூரில் அதிகம் பார்த்து வன்னி மண்ணில் அதிகம் பழகிய ஒரு இலக்கியவாதி, ஊடகவியலாளன், திறனாய்வாளன் என்ற பல்பரிமாணத் திறன் மிக்க சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களைப் பற்றிய எனது மதிப்பீடும் கூட இவற்றை அடிப்படையாககக் கொண்டே அமையும் என்பது தவிர்க்கமுடியாதது.
ஜேம்ஸ்பொண்ட் பாணியில் அல்லது அன்றைய முன்னணி நடிகர் ஸ்ரீகாந்தை நினைப்பூட்டும் வகையில் டிங்டொங் பெல்பொட்டம், சகிகட்டோ, ஹிப்பியோ-- இந்திய பாஷையில் சொல்வதானால் பாகவதர் கால கிராப்பு முடி, பெரிய கறுத்தக்கண்ணாடி என இணுவில் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத ஒரு உருவமாகவே எழுபதுகளின் பிற்பகுதியில் இவரைப் பார்த்திருக்கின்றேன். இவரது தந்தையுடன் ஸ்நேகம் கொண்ட அளவிற்கு இவரைப் பார்த்து சிரிக்கக்கூட எண்ணாத பருவம் அது. எழுபதுகளின் ஆரம்பத்திலேயே எழுத்துத் துறையில் இவர் பிரவேசித்துவிட்டபோதும், கதைப்புத்தகமே கண்ணாக எனது பருவம் இருந்தபோதும் இவரை இலக்கியவாதியாக அறிவதற்கான எந்தவொரு சூழலும் எனக்கு இருக்கவில்லை என்பதை நான் ஒத்துக்கொண்டேயாகவேண்டும். சிறுகதை உலகில் இவருடன் பழகக்கூடிய வாய்ப்பு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தான் ஏற்பட்டது எனினும் இவரை ஒரு ஊடகவியலாளனாகவே முதலில் சந்தித்திருக்கின்றேன். இந்தச் சந்திப்பானது இவரது வாரிசுகளில் முதன்மையானவர் என்று சொல்லக்கூடிய பு.சத்தியமூர்த்தியால் மேலும் வலுவூட்டப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று அறிவூட்டல் நிகழ்வுகளை மேற்கொண்ட அந்தக்காலப்பகுதியில் இவரின் சமூகப்பணிகளை இவருடன் இணைந்து பணிபுரிந்த பல இளம் படைப்பாளிகள் ஊடாக இனங்கண்டிருக்கின்றேன்.
எல்லாச் செயற்பாடுகளிலும் மூக்கை நுழைத்து தனக்குத் தானே கிரீடம் சூட்டிக்கொள்ளும் பண்போ அல்லது தனது வால்களை தூண்டிவிட்டு தனக்கு முகமன் தேடும் பண்போ இவரிடம் நான் கண்டதில்லை என்பதற்கு நானே சாட்சியாக அமைந்திருப்பது விந்தை தான். மூன்று சந்தர்ப்பங்கள் இவரை எடைபோடுவதற்கு போதுமானது என நினைக்கின்றேன். முதலாவது சந்தர்ப்பம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளில் பல இடங்களில் கலந்துரையாடலில் பங்கேற்றிருக்கின்றேன்.  தாம் முன்பே அறிந்திராத மனிதர்களின் ஆற்றலை ஒருவருக்கு எடுத்துரைத்து அவரை அம்மனிதர்களிடம் சுயமாக அணுகச் செய்து அவர்களை ஒரு  நிகழ்வில் பங்கேற்றச் செய்வது பொதுவாக சராசரி மனிதரிடம் காணமுடியாததொன்று. சமூகப் பணி ஆற்றுவதற்கும் 'பெரிசுகள்' வந்துதான் அழைக்கவேண்டும் என்ற வர்க்கத்தில் நான் இல்லை என்பதை உணர்ந்து சிறிசுகளை என்னிடம் அனுப்பினாரா அல்லது சிறிசுகளிடம் தலைமைத்துவப் பாங்கை வளர்த்துவிடுவது என்ற நோக்கில் திரைமறைவில் இருந்துகொண்டே அனைத்தையும் செயற்படுத்தினாரா என்பதை மதிப்பிடும் முதிர்ச்சி அந்த நேரத்தில் என்னிடம் இருக்கவில்லை. எனினும்கூட முகத்துக்குப் புன்னகைத்து முதுகுக்குப் புறங்கூறும் பண்பினராக அன்றி இன்றுவரை என்னுடன் அதே அன்புடனும் மதிப்புடனும் இருக்கக்கூடிய ஒரு இளைய தலைமுறையொன்று அவரால் வளர்க்கப்பட்டிருப்பது அவர் இந்த மண்ணுக்கு விட்டுச்செல்லப்போகும் சொத்து என்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு.
 மற்றிரு சந்தர்ப்பங்களும் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்டவை. பொதுவாகவே இலக்கியச் சூழலில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்கமுடியாததது. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மாற்றுக்கட்சியைப்பற்றிய பிரலாபமே மேலாங்கியிருக்கும். புதுக்குடியிருப்புக்கு வரும்போதெல்லாம் அவருடன் அடிக்கடி கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடுத்தவரை விமர்சிக்கும் பண்பை நான் இவரிடம் கண்டதில்லை. பார்த்தவுடன் ஒரு சிரிப்பு. மாதமலருக்குரிய படைப்பை நேரத்திற்குள் தந்துவிடுமாறு பணிவான ஒரு வேண்டுகோள். அத்துடன் நாம் திரும்பவேண்டியது தான். மாதமலரை விமர்சிப்பவர்கள் தொடர்பாக ஏதாவது கேட்டால் ஒரு சிறுசிரிப்புடன் பதில் முடிந்துவிடும். மனிதர்களை விமர்சிப்பதை  விடுத்து விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் எனது பண்பை உணர்ந்து தான் இத்தகைய போக்கை இந்த இலக்கியவாதி பின்பற்றுகின்றார் என்று தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இவர் பற்றிய எனது தேடலில் நான் சந்தித்த அனைவரிடமும் இக்கேள்வியை எழுப்பியிருந்தபோதும் அடுத்தவர் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் பண்பு இவரிடம் இல்லை என்பதை அனைவருமே வலியுறுத்தியிருந்தனர். தான் பார்ப்பது, நினைப்பது அனைத்தையும் தனது படைப்பில் புகுத்திவிடுவதாலோ என்னவோ இவரிடம் அலட்டல் குறைவு அல்லது இல்லை.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் என்னை ஒரு இலக்கியத் திறனாய்வாளராக சமூகத்திற்கு இனங்காட்டிய நிகழ்வின் பின்னணியிலும் திருச்செந்திநாதனது பங்கு அளப்பரியது. தனது கவிதைத் தொகுதிக்கு மதிப்பீட்டுரை தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் என்னிடம் வந்த அந்த இளைஞனை இப்போதும் நினைவு கூருகின்றேன். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றும் அரைகுறையாகத் தன்னும் கிடைக்கப்பெற்றவனுக்குத்தான் கலை இலக்கியத்திற்கு நேரம் இருக்கும் என்ற ஆழமான நம்பிக்கை உடையவளாகத்தான் இன்றும் இருக்கின்றேன். இந்த எண்ணத்தை எனக்குள் உருவாக்கிவர் இணுவிலிலேயே மிக வசதி படைத்தவர்களில் ஒருவராக இருந்த எனது தந்தைதான். 'புக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பவன்தான் தேவாரம் பாடுவான். இல்லையேல் தனது வயிற்றுப்பாட்டுக்கு வழியைத் தேடுவதே அவன் முதல் பணியாக இருக்கும்' என்று நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டே அடுத்தவருக்கு உதவுவதில் முன்னிற்கும் அவரது பண்பு இத்தகைய ஒரு சிந்தையை எனக்குள் ஏற்படுத்தியதோ தெரியவில்லை. இலக்கியத்தை சுவைப்பது என்ற ஒன்றைத்தவிர ஏழ்மையில் உழல்வோருக்கு என்ன செய்யலாம் என்று பெண்கள் புனர்வாழ்வு நிலையம் ஒன்றின் தலைவராக இருந்து அவர்களின் அடிப்படை வசிகளுக்கு எங்கே போய் எப்படி இறைஞ்சலாம் அங்கலாத்துக்கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் வந்தது தான்  முல்லைக்கமல் என்ற அந்த இளைய கவிஞனின் இந்த வேண்டுகோள். வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணில் எங்கள் அனைவரையும் முகஞ்சுழிக்காது உள்வாங்கிய அந்த மண்ணின் வாரிசு ஒன்றை ஊக்குவிக்கவேண்டிய அனைவருமே? கைவிரித்தநிலையில் முகந் தெரியாத அந்த கவிஞனுக்கு நம்பிக்கையூட்டி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அவனை என்னிடம் அனுப்பியவர் இந்த மனிதர். போராட்ட சூழல் ஒன்றில், வயிற்றுப்பாட்டுக்கு வழியற்றவர்களுக்கு வழிதேடுவதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டிருந்த எனக்கு இலக்கிய விமர்சனத்தில் எனக்கு இருந்த ஆர்வமின்மையை எடுத்துக்கூறினேன். கவிதை சரியில்லை என்றால் மேடையிலேயே வேண்டிக்கட்டுவாய் எனப் பயமுறுத்தியும் பார்த்தேன் அவன் மசிந்து கொடுக்காமல் நீங்கள் வந்தாற் போதும் என சிறு பிள்ளை போல் கண்கள் கலங்க வேண்டியது இன்றும் பசுமையாக இருக்கிறது. இறுதில் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்துவிட்டு யார் உன்னை என்னிடம் அனுப்பியது எனக் கேட்டேன். 'மிஸ்ஸிடம் போ 'அவர் சம்மதிக்காவிட்டால் யார் போய்க் கேட்டாலும் சரிவராது. அவரைச் சம்மதிக்கச் செய்வது உனது கெட்டித்தனத்தில் தான் உண்டு. எனக்கூறி 'அண்ணை' தான் அனுப்பியவர் என்று சிறு புன்னகையுடன் கூறினான். அந்த வெளியீட்டு நிகழ்வில் எவ்வளவிற்கு அவனது கவிதை வெற்றியீட்டியதோ அதைவிட மேலாக நடுநிலைவாய்ந்த ஒரு திறனாய்வாளராக சமூகம் என்னைக் கொண்டாடியது. அந்தத் தருணத்தில் கூட 'என்னால் தானே எல்லாம்' என்ற மிடுக்கோ, மிதப்பான பார்வையோ இன்றி அல்லது 'எப்படி என்ரை விளையாட்டு' என்று இன்றைய இலக்கியவாதிகளின் பாணியில் தனது காலில் விழுந்து கும்பிடப்பண்ணும் மனிதராக அவரது வாரிசுகள் அவரை இனங்காணவில்லை என்றே படுகின்றது. பள்ளிப்பருவத்தில் நான் படித்த முதல் நாவலான பார்த்தசாரதியின் பொன்விலங்கில் தொடங்கி, ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் சமூக எழுத்துக்களில் மனதைப் பறிகொடுத்து மேத்தாவின் கவிதைகளில் முக்குளித்து ஒரு சிறுவட்டத்துக்குள் திருப்திப்பட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு பெரிய வட்டத்துக்குள் தள்ளி உலக இலக்கியத்தின் நெழிவு சுழிவுகளை ஆழ ஆராயத் தூண்டிய ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இதனைப் பார்க்கின்றேன்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தங்கள் படைப்புகளுக்கு சரியான தளமின்றி வாய்ப்புகள் கிடைக்காது விரக்திநிலையில் இருந்த இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் விரக்தியும் சமூக எழுத்துக்களைப் புறந்தள்ளி தன்னுணர்வு எழுத்துக்களை மோகிக்கும் சூழலுக்கு ஒரு எதிர்ச்சூழல் உருவாக வேண்டும் என்ற வேகமும் இணைந்து தோற்றம் பெற்ற 'எழு' கலை இலக்கியப் பேரவையின் காப்பாளர்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்ற இவரது விருப்பத்தைக்கூட இவரது வாரிசுகளை விட்டே செயற்படுத்தினார். நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலும் மனந்தளராது ஆற்றல்மிக்க புதிய படைப்பாளர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி வெளிவந்த எழு சிறுகதைகள், முல்லைக் கமரின் மனதும் மனதின் பாடலும் கவிதைத் தொகுப்பு இந்த எழு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடுகளே.
 'ஒருவனின் எழுத்து அவனது செயற்பாடு, சமூகம் மீதான அவனது கரிசனை எல்லாவற்றும் நெருங்கிய தொடர்புண்டு. இவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரித்துப் பார்க்கமுடியாது' என வெட்டுமுகம் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவர் கூறிய  கூற்றுக்கு முரணாக  இவரது எந்தவொரு படைப்பும் இல்லை என்பதை இவரது படைப்புகளை வாசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர் என நினைக்கின்றேன். தனது சுற்றாடலை, தனது சமூகத்தை, தனது இனத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு விடயமும் தன்னை எழுதத் தூண்டுகிறது என்ற இவரது கூற்றுக்கமையவே இவரது படைப்புகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த அவதானிப்பும் அனைத்து நடவடிக்கைகளில் கைகொடுக்கும் மனப்பான்மையுமின்றி மக்கள் எழுத்து சாத்தியப்படாது.
'நவீன தமிழிலக்கியத்துறைகளில் சமூகப் பொறுப்புணர்வுடனும் அயரா ஊக்கத்துடனும் செயற்பட்டு வரும் ஈழத்து எழுத்தாளர்களில் தனிக்கவனத்துக்குரியவர்களுள் ஒருவராக திகழ்பவர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் என கூறும் கலாநிதி நா. சுப்பிரமணியன் (வெட்டுமுகம் அணிந்துரை), திருச்செந்திநாதனின் படைப்பாற்றலின் முனைப்பு தன்னைச் சூழ உள்ள மக்கள் திரளின் நலனை முதன்மைப்படுத்தும் ஒன்று என்பது பற்றி யாருக்கும் ஐயத்துக்கு இடமில்லை எனக்கூறும் பேராசிரியர் சி.சிவசேகரம் (மணல்வெளி அரங்கு மதிப்பீட்டுரை), இந்த மண்ணில் நடைபெறும் வாழ்க்கைச் சிதறல்களுக்கு இதற்குள் நின்றுகொண்டே முகங்கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்துணிபு திருச்செந்திநாதனிடத்து துல்லியமாக காணப்படுகின்றது எனக் கூறும் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகிய மூன்று திறனாய்வாளர்களது கூற்றுகளுக்கிடையிலான ஒற்றுமை இதற்கு மேலும் வலுவூட்டுகின்றது.
சிதம்பர திருச்செந்திநாதன் என்ற மனிதர்
சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் இணுவை மண்ணின் சராசரி வார்ப்பில் ஒன்று. என்னைப் போன்றே இவரது வாழ்நிலையிலும் இவர் பிறந்து வளர்ந்த இணுவை மண்ணின்; சூழல், இச்சூழலுடன் அடிக்கடி இவர் முரண்படும் சந்தர்ப்பங்கள், இந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள், மீண்டும் இந்தச் சூழல் இவரை தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலுடன் இவர் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றன அதிக செலுத்துகின்றன என்பதை இவரது படைப்புகள் வெளிக்கொணர்கின்றன. கோவில்களால் நிரம்பப்பெற்ற இணுவை மண்ணின் கோவில் உற்சவங்களில் இறை நம்பிக்கை அதிக உள்ள இவரைக் காண்பது மிக அரிது. சமூக ஒன்றிணைப்பு மையங்கள் என்ற பணியிலிருந்து விலகி சமூகத்தின் செல்வாக்கு மிக்க ஒருசிலரின் ஆட்சி மையங்களாக கோவில்கள் இருப்பதில் இவருக்கு சம்மதமில்லை. எனினும் யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்ற வகையில் இவர்களுடன் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கட்டாமல் மௌனமாக ஒதுங்கிவிடும் சுபாவம் இவருடையது. படைப்புலகம் என்று வரும்போது கூட எதிரும் புதிருமான இலக்கியவாதிகள் அனைவருடனும் ஒரேமாதிரியான உறவு வைத்திருக்கக்கூடிய மனதராகவே இவரை இனங்காண முடிகிறது. 'பல்வேறு பிரச்சினைகளுடன் கூடிய சமூகத்தின் வெட்டுமுகத்தைக் காட்டும் சிதம்பரதிருச்செந்திநாதன் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் போதகராக தம்மைக்காட்டிக்கொள்ளவில்லை. இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள் என வாசகர்களை அழைக்கும் அளவோடு நிற்கின்றார் என வெட்டும் முகம் சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கிய அணிந்துரையில் நா.சுப்பிரமணியன் கூறுவதில் மிகையேதுமில்லை.
கிட்ட இருந்து பழகியவர்களுக்கு திருச்செந்திநாதன் ஒரு மனிதத்;தன்மை மிக்க மனிதர். அளவோடு பேசி அன்போடு உபசரித்து அதிகமாக ஊக்குவிக்கும் ஒரு பண்பாளர். இலைமறை காயாக இருந்து இளைய தலைமுறையின் படைப்பாற்றலை ஊக்குவித்தது மட்டுமன்றி அதற்கு களமமைத்தும் கொடுத்த ஒரு பண்பாளர் என்பது வன்னி மண்ணில் இவரோடு பழகும் வாய்ப்புக் கிட்டிய 'பெரிசுகள்' பலரினதும் ஒருமித்த கருத்து.
 'காய்தல்' இன்றி 'உவத்தலை' மட்டும் மூலமாகக் கொண்டு இவரால் உருவாக்கப்பட்ட இளைய தலைமுறைப்படைப்பாளிகள் மிக அதிகம். சிறுகதை என்றால் இது தான் இலக்கணம். கவிதைக்கு இலக்கணம் இது என்று குருகுலக்கல்வியின் மனப்பாடம் செய்விக்கும் போக்குக்கு மாறாக இன்றைய குழந்தைக்கல்வி போல் எதையும் எந்தவடிவத்திலும் உருவாக்குவதை ஊக்குவிப்பவர் இவர் என்பது இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளது ஒருமித்த கருத்து.
'அவரது கதைகள் ஒவ்வொன்றும் கவனமாகச் செதுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கும் போது தான் சொல்வது வாசகரைத் தெளிவாகச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகின்ற படைப்பாளிகள் நடுவே அவரை அமர்த்துகின்றது'.
நெருக்கடிக்கால ஊடகவியல் பங்களிப்பு
நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளடக்கத்தைவிட வடிவமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய மேலைத்தேய பாணியிலான  வெளியீட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகள் நொடிந்து போன நிலையில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்துக்கு முதன்மை கொடுத்து  வெளியீட்டு முயற்சிகளை மேற்கொண்ட ஒருசிலரில் சிதம்பர திருச்செந்திநாதனின் பங்கு அளப்பரியது. 80 களிலேயே வெளியீட்டு முயற்சிகளில் இணைந்து பணியாற்றிய அனுபவத்துடன் 90களில் வெளிவந்த ஈழத்து வெளியீடுகள் அனைத்தினது வடிவமைப்பிலும்; முற்றுமுழுதாக இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. கற்றறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வெளியீட்டின் உருவமைப்பில் அக்கறை செலுத்திய ஊடகவியலாளர்கள் உணவு மருந்து மட்டுமன்றி புத்தகத் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்பட்ட நெருக்கடி காலத்தில் சோர்ந்து ஒதுங்கியபோது கொப்பித் தாள்களில் உள்ளுர் கறுப்பு மைகளைப் பயன்படுத்தி ஏராளமான வெளியீடுகளை உருவாக்க அயராது பாடுபட்டவர் என்ற பெருமையை ஈழத்தின் கடந்த முப்பது ஆண்டு கால போராட்ட வாழ்வியலை ஆவணப்படுத்த முயலும் எவருமே பதிவர்.
தேர்ந்த திறனாய்வாளர்

மக்கள் இலக்கியத்தின் சார்பாளர்
இவரது இலக்கியப் பயணத்தினூடாக இவரைப் பார்க்க முனையும்போது தனது சூழல் மீதான ஆழ்ந்த அவதானிப்பு இவரது படைப்புகளுக்கு ஆதாரம். அடுத்தவர் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளாக நினைத்து அதனை அனுபவித்து சேர்த்த அனுபவங்கள் இன்னொரு முதலீடு. பொய்மை, பொறாமை, பொருளாசை, சீதன வழக்கம், இனப்பிரச்சினையின் கொதிநிலைச் சூழலின் அவலங்கள் முதலியன சமூகத்தில் நிகழ்த்தி வந்துள்ள பாதிப்புகளைச் சிதம்பரநாதனின் கதைகள் சித்தரிக்கின்றன என்ற நா. சுப்பிரமணியன் அவர்களின் கூற்றுக்கேற்ப
 'சூழவும் வாழ்வியல் தொடர்பான பல்வேறு நெருக்கடிகளும் பொருண்மியச் சுமைகளும் இருந்தாலும் எங்கள் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுள் ஒருவனாக நானும் இருப்பதையிட்டு சந்தோசப்பட முடிகின்றது என என்னுடையதும் அம்மாவினுடையதும் என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவரது கூற்றின் எதிரொலிகளுக்கான ஓரிரு எடுத்துக்காட்டுகள் இவை.
'நிவாரண வெட்டால் ஒடுங்கிப்போன பொதுசனம் போல விளக்கு வெளிச்சம் துடித்துக் கொண்டிருந்தது'
 'மேலே பாரத்தால் வானம் எங்கள் எதிர்காலம் போல் இருக்கவில்லை. துலக்கமாகப் பிரகாசித்தது'.
'சமகால நிகழ்வுகளைப் போலவே வெய்யில் அகோரமாக எறித்தது' என்றெல்லாம் எழுதுவதற்கு சூழலுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே உண்டு. அக்கறையின்றி சீர்கெட்டுப்போன வளவுப் பயிர்களை ஆட்சியில் உள்ளவர்கள் மறந்து போன தமிழ்ப்பிரதேசங்களுக்கு ஒப்பிடவும், 'வேலைக்குப் போட்ட அப்ளிகேஷனை கவனிப்பாரற்றுக் கிடக்கும் அரசாங்கத்துக்கு அனுப்பும் மகஜருக்கு ஒப்பிடவும் முடியும்.
'நகரத்து அழுக்கினை கையில் தாங்கிக் கொண்டிருந்த பெண்மணி' என பிச்சைக்காரியை வர்ணிப்பதற்கும் நமது செம்பாட்டு மண்ணை ரத்தம் ஊறிய மண் என்று சொல்வதற்கும் சூழல் தொடர்பான சமூகப் பிரக்ஞை அவசியமானது. மினிபஸ் நெரிசலிலிருந்து விடுபடும் குதூகலத்தை பாடசாலை முடிந்து வெளியேறும் சிறுபிள்ளைகளின் குதூகலத்திற்கு ஒப்பிடுவதற்கு அது தொடர்பான ஆழ்ந்த அனுபவம் வேண்டும். 'உடல் களைக்க, மனம் களைக்க, தாகமும் பசியும் இணைந்து இம்சைப்படுத்த கிளாலிக்கடற்கரையில் படகுக்காகக் காத்திருந்த வன்னி இடப்பெயர்வைக்கூட இனிமையான பயணம் என்று சொல்வதற்கு நான்கு தசாப்தங்களைக் கடந்த ஒருவருக்கு முடிகிறது எனில் சூழலுடன் பொருந்தி வாழும் மனப்பாங்குக்கும் மேல் சூழலை நேசிப்பும் தன்மையால் மட்டுமே சாத்தியமாகும்.
'எதிரில் வருவோர் எல்லோரையும் விழியாலே எறிந்து கலைத்து, அந்தக்கணத்தில் அவர்களிடம் ஏற்படும் அதிர்வுகளை ரசிக்கும் பெண்ணின் பருவத்தை (எனக்காக?) வெறும் அவதானிப்பால் மட்டும் வெளிக்கொண்டு வரமுடியாது. அந்த அவதானிப்பை தனக்குள் போட்டுப்பார்த்து தனது அனுபவமாக்கினால் மட்டுமே அவ்வாறு எழுத வரும்.
'செம்மண் தரை தோசைக்கல்லாய் சுட்டது' என்று எழுதுவதற்கு அம்மாவிற்கு கூடமாட ஒத்தாசை புரியும் மகனின் அனுபவமாகவோ அல்லது வேலைக்குப் போகும் மனைவிக்கு ஒத்தாசை புரியும் வேலைக்குப் போகும் ஒரு கணவனின் அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியாது. சூழலை தனக்குள் முழுமையாக உள்வாங்கி, அதனுடன் ஒன்றிணைந்து அதனுடன் இரண்டறக் கலந்து வாழும் தன்மையின் ஊடாக பெற்ற அனுபவத்தின் மூலமே இத்தகைய உவமைகளை எழுத்தில் படைக்க முடியும்.
'வெறுமனே விரக்தியும் புலம்பலும், இருப்புத் தொடர்பான அச்சமும் அதனால் எழும் அகமனத்து உளைவுகளுமே நல்ல இலக்கியங்களாக அமைந்துவிடுவதில்லை. வாழ்வு பற்றிய தேடலும், அக்கறையும், எதிர்கால நம்பிக்கையுமே இலக்கியத்தின் கருப்பொருளாக அமைவது சிறப்பானது என்பதுடன் இவையே மனிதனை சூழலுடனும் சக மனிதர்களுடனும் பிரக்ஞை பூர்வமான உறவுகளை பேணத் தூண்டுகின்றன' என்பது இலக்கியம் தொடர்பான சிதம்பரநாதனது கருத்தியல்.  நான் வேறு எனது படைப்பு வேறு என்றோ, ஒரு இலக்கியவாதியின் படைப்பை மட்டும் மதிப்பிடுங்கள் அவரின் பின்னணியைப்பற்றி ஏன் அலட்டிக்கொள்கின்றீர்கள் என்றோ கோஷமெழுப்பும் இலக்கியப் பரம்பரையினராக சிதம்பர திருச்செந்திநாதன் இருந்திருப்பாராயின்  இந்த எழுத்துக்களை எழுத வேண்டிய தேவையே எனக்கு இருந்திருக்காது. ஓரிரு எழுத்துக்களைப் படைத்தவுடனேயே முதுகு சொறிவதற்கும், முகஸ்துதிக்கும் ஆள் தேடி அலையும் வேகத்தில் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற சத்திய வாக்கை காற்றில் பறக்கவிடும் பச்சோந்தி எழுத்தாளர்கள் மத்தியில் இவர் மிக வித்தியாசமானவர். எழுதின ஒரு எழுத்துக்கு சுவீப் அடித்தமாதிரி பவுசு வந்த கையுடனேயே தம்மைத் தாமே மூத்த எழுத்தாளராக பிரகடனப்படுத்தி இளைய தலைமுறையை தமக்கேற்ற வகையில் முது சொறிவதற்குப் பழக்கும் எழுத்தாளர் வட்டத்துக்குள் அடங்காமல் எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டபின்னரும் குடத்திலிட்ட விளக்காக ஆரவாரமின்றி அணையாத தீபமாக இன்றும் இருப்பவர். எமது எழுத்தும் எமது தனிப்பட்ட வாழ்வியலும் ஒன்றிலொன்று பிரிக்கமுடியாதளவிற்கு நெருக்கமாகப் பிணைந்திருப்பவை எனத் தீர்க்கமான முடிவுடன் வாழும் இந்த மனிதரை இவரது எழுத்துக்கள் தான் அறிமுகப்படுத்துகின்றது. இவரின் வாழ்வியலுக்கும் எழுத்துக்குமிடையிலான பிணைப்பை ஊரவள் என்ற முறையில் உறுதிப்படுத்தவேண்டிய அவசியமில்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

No comments: