அணிந்துரை
தன்னைச் சுற்றியுள்ளவை மீதான மனிதனின் அவதானிப்புகள், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றல், தான் பெற்ற அறிவை அடுத்துவரும் பயன்படுத்தும் வகையில் ஆவணப்படுத்தும் மனித விருப்பு, தனது விருப்பங்களை செயலுருப்படுத்துவதற்கு அவ்வப்போது மனிதன் உருவாக்கிய கருவிகளின் அபரிமித வளர்ச்சி - இன்றைய உலகின் வியத்தகு அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது இவற்றின் இணைப்பே. 18ம் 19ம் நூற்றாண்டுகளின் கைத்தொழில் புரட்சி தகவல் பதிவேடுகளின் பௌதிக ரீதியான வளர்ச்சிக்கு வேகமூட்ட 19ம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியானது பெருக்கத்தை அபரிமிதமாக்கி பின்னரைப்பாதியில் தகவல் யுகமொன்றின் தோற்றப்பாட்டிற்கு வித்திட்டு கைத்தொழில் சமூகமாயிருந்த மனித சமூகத்தை தகவல் சமூகமாய் மாற்றுவதற்கான நிர்ப்பத்தத்தை உருவாக்கியது. பிரித்தானிய அறிவியலாளரான ரிம் பேணர்ஸ் லீ 1989இல் இவ்வுலகிற்கு அளித்த உலகளாவிய வலைத்தளமும் 1991இல் அதன் அறிமுகமும் மனித சமூகத்தின் இதுநாள் வரையிலான தகவல் பதிவேடுகளை தன்னால் முடிந்தவரை ஓரங்கட்ட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகுதல் பகிர்தல் பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற ஓரு உலகில் நாம் வாழ்கிறோம்.தகவல் குறித்த தேடல் ஆவணப்படுத்தல் என்ற சிந்தனையை நோக்கி இயல்பாகப் பயணிக்கின்றது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வெள்வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது.
கடந்த காலத்தை பதிவு செய்வதற்கென 19ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப யுகம் இந்த உலகிற்கு பரிசளி;த்த மிகச் சிறந்த ஊடகம் ஒளிப்படங்கள். சொற்களைவிட உரத்துப் பேசும் ஆற்றல் படங்களுக்குண்டு என்பதால் எந்தவொரு ஊடகத்தினதும்; - அது பத்திரிகையோ அல்லது பருவ இதழோ – ஆயுளைக் கூட்டவோ குறைக்கக்கூடிய ஆற்றல் விம்பங்களுக்கு உண்டு. மனித வரலாற்றின் ஆரம்பக் கட்டங்களிலிருந்து இன்றைய தகவல் யுகம் வரை ஆற்றல் மிக்க ஊடகமாகவும் அதிக கவனிப்பைப் பெற்ற ஊடகமாகவும் இருப்பது விம்பங்களே. தன்னைச் சூழவுள்ள உலகை மீள உருவாக்கும் மனித விருப்பமானது குகை ஒவியங்களிலிருந்து ஆரம்பித்து இன்றைய இணைய விம்பங்கள் வரை நீடித்து எங்கும் வியாபித்திருக்கிறது. மனித வாழ்வின் பெறுமதிமிக்க கணங்களை விம்பங்களாக வடித்தெடுக்க எண்ணும்; மனித விருப்பும் அவ்வாறு பதியப்பட்ட நினைவுகளை சேமித்து பாதுகாப்பதற்கான மனிதனுடைய உளத்தூண்டலும் ஒளிப்படங்கள் மனித வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை உய்த்துணரப் போதுமானது.
மனிதர்கள், நிகழ்வுகள், மற்றும் இடங்களின் அழகையோ அல்லது துயரத்தையோ எவ்வித கலப்படமுமின்றி வெளிக்காட்டும் ஆற்றல் ஒளிப்படங்களுக்கு உண்டு. ஒளிப்படங்கள் ஏற்கனவே பகிரப்பட்ட தகவல்களின் பயன்பாட்டிற்கு மேலும் வலு சேர்க்கக்ககூடியது. வாசிப்பதையும்; கேட்பதையும் விட உணர்வும் சதையுமாக ஒன்றைப் பார்ப்பதற்கு வலு அதிகமென்பதால் தான் வரி வடிவங்களை விடவும் ஒளிப்படங்கள் ஆற்றல் மிக்க ஊடகமாக உலகை ஆக்கிரமிக்கக்கூடியதாக உள்ளது. வாசகனைச் சென்றடைவதில் வரி வடிவங்களைவிட வரைபுகளுக்கு ஆற்றல் அதிகம் என்பதால் தான் இணையத்தின் அதிக பக்கங்கள் இன்று நிரப்பப்பட்டிருப்பது விம்பங்களினால் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். வெறும் வரி வடிவத்தைவிட இடையிடையே விம்பங்களுடன் கூடிய புத்தகங்கள் வாசகனை அதிகம் ஈர்க்கும் சக்தி வாய்ந்தவை. ஏனைய கட்புல ஊடகங்களை விடவும் ஒளிப்படங்கள் துல்லியத்தன்மை மிக்கவை. ஓவியமொன்றின் நம்பகத்தன்மையானது அதனை வரையும் கலைஞனின் திறனில் தங்கியுள்ளது. ஓவியத்தில் எதைச் சேர்ப்பது எதை விலக்குவது என்பதன் தீர்மானமும் ஓவியனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் ஒளிப்படங்கள் அப்படியன்று. ஒளிப்படக்கருவி எதை மையப்படுத்துகின்றதோ அது எவ்வித கலப்படமும் இன்றி உள்ளதை உள்ளபடியே உலகிற்கு தரும்.
நிச்சயமற்ற வாழ்வியலை அடிப்படைப் பண்பாகக் கொண்ட எந்தவொரு சமூகத்தினதும் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஊடகமாகக் கருதத்தக்கது அத்தகைய சமூகத்தினது வாழ்வியலை விம்ப முறையில் ஆவணப்படுத்தலாகும். கணினித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கட்புல செவிப்புல தொழினுட்பம், நுண்பிரதியாக்கத் தொழினுட்பம் என்பன இணைந்த தகவல் தொழினுட்பச் சூழல் ஒன்று விம்ப ஆவணப்படுத்தலுக்கான அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையே இன்றைய உலகளாவிய வலைத்தளத்தின் பெரும்பகுதி விம்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெளிவாக்குகின்றது. பார்ப்பதற்கும் தேடுவதற்கும் விம்ப ஆவணவாக்கத்திற்கு அதிக பங்குண்டு. இங்கு விம்பங்கள் என்னும் பதம் படங்கள், வரைபுகள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என்பவற்றுக்கான ஒரு பொதுப்பதமாக விளங்குகின்றது.
1937இல் விமானப் பேரழிவை உலகிற்கு கொண்டுவந்த சாம் சேரா, 1945இல் நாகசாகியில் வெடித்த அணுகுண்டின் வானளாவிய புகைப்படலத்தை படம் பிடித்த சார்ள்ஸ் லெவி, 1972இல் வியட்னாமில் யுத்தத்தின் பயங்கரத்தை வெளிக்கொணர்ந்த நிக் யூட், 1993இல் சூடானில் வறுமையின் கோரத்தைப் படம் பிடித்த கெவின் காட்டர், 2001இல் தகர்ந்து கொண்டிருந்த உலகின் அதியுயர உலக வர்த்த மையத்திலிருந்து வெளியே பாய்ந்த நபரை படம் பிடித்த ரிச்சர்ட் ட்ரு, 2004இல் ஒஸ்விச் நச்சு வாயுக்கூடத்தின் சுவர்களிலுள்ள நகக்கீறல்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டிய சைமன் றொபேட்சன் என காலத்துக்குக் காலம் உலகின் கவனத்தை ஒற்றை விம்பத்தினூடாக திசைதிருப்பும் வல்லமையை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஒளிப்படவியலாளர்கள். வாழ்வின் இனிய கணங்களை, இயற்கையின் அழகை மட்டுமன்றி பேரழிவின் அவலத்தை, வறுமையின் கோரத்தை, யுத்தத்தின் பயங்கரத்தை, விபத்தின்; அதிர்வினை உள்ளது உள்ளபடியே உணர்வுகளுடன் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது விம்ப உலகம்.
உலகின் பல சமூகங்கள் போன்றே நீண்ட காலமாக யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி தொலைந்த புத்தகமாகிப் போன ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இன்றைய வாழ்வியலில் தற்போது இருப்பதை விடவும் இழந்தவை மிக அதிகம். உலகின் மனச்சாட்சியை உலுக்கிய எத்தனையோ விம்பங்களின் வரிசையில் இடம்பிடிக்கும் வல்லமையை தருமளவிற்கு யுத்தத்தின் கோர முகங்களை சந்தித்திருக்கிறது இந்த மண். இனக்கலவரத்தின் இரத்தக்கறைகள், ஆக்கிரமிப்பின் கோரப்பற்கள், இடப்பெயர்வின் அவலங்கள், யுத்தத்தின் அழிவுகள், பண்பாட்டுத் தொலைப்புகள், சிதைந்த கட்டிடங்கள், சீரழிந்த வாழ்வு, விடிவிலாக் காலைகள், வீரத்தின் விளைநிலங்கள், இருள் கிழித்த அதிர்வுகள், உயிரின் நாற்றுமேடைகள், கடலலையின் தவிப்புகள், கானகத்தின் தீ வரிகள், உறங்காத கண்மணிகள், சமர்க்களத்தின் சரித்திரங்கள், அலை கிழித்த குருவிகள், கார்த்திகையின் பூமுகங்கள், தீயெரித்த புத்தகங்கள், மண் புதைந்த மழலைகள், மௌனித்த உயிர்கள், தியாகத்தின் மூச்சொலிகள் போன்ற ஈழத்தமிழரின் வாழ்வியற் கோலங்களை ஒற்றை விம்பத்திற்குள் சிறைப்பிடித்த உன்னத படைப்பாளிகளையும் அவர்களின் அற்புதப் படைப்புகளையும் இந்த மண் கொண்டிருந்தபோதும் அவற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் வல்லமையைத் தேடியவாறே வழுக்கிச் செல்லும் ஈழ வரலாற்றின் இறுதிப்பக்கங்களில் அவை இல்லை என்றே நினைத்திருக்க வரலாறு தானே நிரப்பிச்சென்ற வல்லுறவின் விம்பம் ஒன்று 2009 இல் இசைப்பிரியா என்ற வடிவில் வையகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமன்றி உலகெங்கணுமுள்ள அசையும் அசையா ஊடகங்களின் அதிக பக்கங்களை நிரப்பியது. எஞ்சியிருந்தவையும் புனர் வாழ்வு, புனருத்தாரணம் என்ற பெயரில் உருமாறிப் போக உரு மாறிய வேகத்திற்;கு ஏற்ப ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணப்படுத்தும் ஆர்வம் ஈடுகொடுக்காமையால் எம்மிடம் எஞ்சியிருப்பவை மிகமிகச் சொற்பமே. இந்தச் சொற்பங்களை ஏதோ ஒரு வேகத்திலும் ஓர்மத்திலும் குருவி சேர்க்கும் குறுணிபோல் சிறுகச் சிறுக சேகரித்து உருவாக்கப்பட்டதே 'யாழ்ப்பாணப் பெட்டகம்' என்ற அரிய விம்பங்களின் கருவூலமாகும்.
மரபுரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையிலிருந்து 2005 ஆம் ஆண்டு கருக்கொண்ட 'யாழ்ப்பாணப் பெட்டகம்' என்ற வரலாற்றுக் கருவூலத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட 1000 விம்பங்களும் அவற்றி;ன் விபரங்களும் ஆளுமைகள், மற்றும் வணக்கஸ்தலங்கள் என்ற இரு தொகுதிகளாக நூலுருவம் பெறுகின்றன. நூலாக்க முயற்சியின் ஆரம்ப கட்டங்களில் ஆளுமைகள், வணக்கஸ்தலங்கள், ஏனைய மரபுரிமைகள் ஆகிய மூன்று தலைப்புகளின் மூன்று தொகுதிகளை வெளியிடும் நூலாசிரியரின் திட்டம் நிதிப்பற்றாக்குறையை முன்னிட்டு இரு தொகுதிகளாக மாற்றப்பட்டிருப்பது இங்கு கவனத்தில் கொள்ளற்பாலது. யுத்தத்தால் சிதைவடைந்து அனைத்தையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலை விம்ப வடிவில் ஆவணப்படுத்தும் அருள்சந்திரனின் முயற்சியானது காலத்தின் மிக அவசியமான தேவையாகும்.
அறிவின் வழி விரியும் கற்பனைகளின் புலக்காட்சியும் உருக்களின் வழி விரியும் உண்மைகளின் புறக்காட்சியும்; என மனிதனைச் சூழ்ந்துகொள்ளும் சமூகஊடகங்களின் தகவற் சுனாமியில் ஒவ்வொரு தமிழனும் வாசிக்கவேண்டிய வரலாற்றின் பக்கங்களும் படிமங்களும் தப்பிப்பிழைத்திடல் கடினம். அதிலும் போரும் இழப்பும் வாழ்வாகிப்போன தமிழின இருப்பினையும் இல்லாமற்போன அதன் உண்மைகளின் புறக்காட்சிகளையும் கண்களில் சேகரித்து, மேவிப்பாயும் வரலாற்று வெள்ளத்தில் வழிந்தோடிவிடாமல் தூக்கிநிறுத்திப் பாதுகாப்பது அதைவிடக் கடினம்.
பண்பாடுமிக்க மனிதர்களாக உலகில் தலைநிமிர்ந்து தமிழ் மக்கள் வாழவும், தம்மொழி, தம்மதம், தம்நிலம் என்பவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் ஓவ்வொரு தமிழனும் வரலாற்றைப் பேணும் பெரும் பொறுப்புடையவனாகிறான். இவன் இயல்பாகக் காணவேண்டிய காட்சிகளை, அறிவோடு இயைந்திட்ட வரலாறுகளை செயற்கையாக கண்காட்சிகளாக காட்டவேண்டிய காலகட்டமே இன்று நீண்டுசெல்கிறது. இந்நிலையில் மனிதனை ஆக்கிரமித்திருக்கும் சமூகஊடகங்களின் அதேபாணியில் எம்தமிழின் ஆளுமைகளையும் வழிபாட்டிடங்களையும் காட்டிடத் துடிக்கின்ற இத்தொகுப்புகளின் துடிப்பும் போக்கும் இயல்பாகவே ஈர்ப்புச்சக்தியைக் கொண்டிருக்கிறது. இதுவே முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெருமையும் பெறுகிறது.
தொகுதி ஒன்று யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இதுவரை வாழ்ந்து மண்ணுக்குப் பெருமை சேர்த்து மறைந்து போன ஆளுமைகளை ஆவணப்படுத்துகின்றது. பிரதேசரீதியாக இனமொன்றின் மனித ஆளுமைகளை ஆவணப்படுத்தலென்பது தனித்துவமான சவால்கள்மிக்க வரலாற்றுப் பணியாகிறது. வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களின் துல்லியத்தன்மை தகவல் சேகரிப்பவரின் கைகளிலேயே அதிகம் தங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அவரது தகவற் திறன்களிலும் மொழியாற்றலிலும் குறித்த சமுகத்தின் மீதான அக்கறையிலும் தங்கியுள்ளது. ஏற்கனவே நூலகங்களில் இருக்கின்ற முதலாம் நிலைத் தகவல் வளங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், மலர்கள், கல்வெட்டுக்கள் போன்றவை ஆளுமைகள் சார்ந்த விம்பங்களை ஆவணப்படுத்துவதற்கான மூலாதாரங்களாக இருப்பினும் விம்பங்களின் துல்லியத்தன்மை கேள்விக்குள்ளாகும்போது மேலதிக தேடலை நோக்கி ஆய்வாளனை நகர நிர்ப்பந்திக்கும் என்ற யதார்த்தம் கணிசமானளவு விம்பங்களை முதல்நிலைத் தரவுகளாக இந்நூலில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வாளனுக்கு ஏற்படுத்தியிருப்பது புலனாகின்றது. கணிசமான விம்பங்கள் குறித்த ஆளுமைகளின் உறவினர்களிடம் நேரே சென்று அவர்களிடமிருக்கும் தரவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.
தொகுதி இரண்டு யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட வணக்கஸ்தலங்களை ஆவணப்படுத்துகின்றது. வணக்கஸ்தலங்களில் 200 சைவாலயங்கள்;, 75 கத்தோலிக்க ஆலயங்களினதும், 15 பள்ளிவாசல்களும், 3 விகாரைகளினதும் சுருக்க வரலாறும் அவற்றின் ஆரம்ப மற்றும் தற்போதைய நிலையிலுள்ள வர்ணப் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. இத்தொகுதியிலும் கணிசமான விம்பங்கள் நூலாசிரியரால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரே சென்று எடுக்கப்பட்டவையாகும்.
பொதுவாகவே இத்தகைய தொகுப்பாக்கங்கள் இரண்டாம்நிலைத் தரவுகளிலேயே பெரிதும் தங்கியிருப்பவை என்பதனால் உசாத்துணை நூல்களாகக் கருதப்படுபவை. இதிலிருந்து சற்று மாறுபட்டு இத் தொகுப்பாக்கங்கள் முதலாம் நிலைத் தரவுகளை கணிசமானளவில் கொண்டிருப்பதனால் உசாத்துணைப் பண்பு கொண்டதாக அமையக்கூடிய தொகுப்பாக்கங்களிலிருந்து சற்று வேறுபட்டு முதல்நிலைத் தகவல் வளங்கள் என்ற பண்பையும் இத்தொகுப்புகள் கொண்டிருக்கின்றன. இலகுவான தேடுகையை கருத்தில் கொண்டு இத்தகைய ஆக்கங்கள் அகர வரிசையில் உள்ள ஒழுங்கமைப்பையே தமக்குள் கொண்டிருக்கும் இதிலிருந்து சற்று மாறுபட்டு தேர்ந்த வாசகனது உயர்திறன்மிக்க தேடுகைக்கு உதவும் பொருட்டு ஒன்றுடனொன்று தொடர்புடைய ஒரே துறை சார்ந்த ஆளுமைகளை ஒன்றாக குழுமப்படுத்தி முறை சார்ந்த ஒழுங்கமைப்பை பேணும் புதிய முயற்சி ஒன்றை இங்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்கமைய ஆளுமைகள் சார்ந்த பதிவுகள் அகர வரிசையிலமைந்த பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது.
சமுகவியல் நோக்கில் சமூகமொன்றின் வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிக்கவல்ல காரணிகளாக சமுகவியலாளர்கள் கூறுகின்ற நிலைபேறாக்கம், புதுமையாக்கம், ஆவணவாக்கம் போன்ற சிந்தனைகள் செயலுருப்பெறுகின்ற இன்றைய சூழலில் இவ்வாக்கம் சமுக அசைவியக்கத்திற்கான புதியபாதையொன்றினை இனங்காட்டிநிற்கிறது. நூலகவியல் நோக்கில் தேசியநூலகமொன்றினை ஒத்த நிறுவனங்களால் தேசியரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய ஆவணப்படுத்தலுக்கான செயலூக்கத்தைத் தரவல்ல சிறுநகர்வாக இதனைக் கணிக்கவேண்டியுள்ளது. வரலாற்று நோக்கில் பாவலர் சரித்திர தீபகம், ஈழத்துத் தமிழ்ப்புலவர் சரித்திரம் போன்ற வாழ்க்கை வரலாற்று நூல்களுடன் ஒரே இறாக்கையில் அமைவிடம் பெறுவதற்கான தகுதிப்பாட்டை இந்நூல் கொண்டிருக்கின்றது. உளவியல் நோக்கில் சமுதாயத்தில் ஆக்கத்துடன் தொடர்புடைய அனைத்து சமூகத்தினரோடும் நெருக்கமான தொடர்பினைப் பேணிநிற்பதுடன் ஆக்கத்தில் இடம்பெறும் ஆளுமைகளின் சந்ததியினர்க்கு மனத்திருப்தியையும் நிறைவையும் தரும் உளத்தூண்டலுக்குரிய ஆவணமாகவும் செல்வாக்குச் செலுத்துகிறது.
அருள்சந்திரனின் அர்ப்பணிப்பு, சமூகநேசம் என்பவற்றைவிட ஆவணப்படுத்தலுக்கான தயார்ப்படுத்தலில் அவரது செம்மைத்தன்மை ஆக்கத்தின் மற்றோர் தரமான குறியீடாகிறது. மேலும் இடையறாத அவரது தேடலின் விளைவாய் தொகுப்பில் இடம் பெறும் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆளுமைப்பதிவுகளும் முந்நூறுக்கும் மேற்பட்ட வணக்கஸ்தலங்களும் எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கான இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை. இப்பாரிய பணிச்சுமையினைத் தாங்கி அதன் முடிவுறுத்தி தொகுத்து தயக்கங்களின் தாக்கத்திலிருந்து மேலெழுந்து ஆக்கமொன்றை வெளிக்கொணர்தலென்பது வெறும் பாராட்டுதல்களுக்காகவன்றி அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளையும் இடர்ப்பாடுகளையும் தாங்கி முளைத்தெழும் வல்லமை படைத்த விருட்சமொன்றிற்கான விதையின் புறப்பாடாகிறது.
ஈழத்து வரலாற்றின் இன்றைய பக்கங்களை நிரப்பிச்செல்லும் அருட்சந்திரனின் பெறுமதிமிக்க இந்த நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
விருட்சமாய் நிமிர வாழ்த்துக்களுடன்
அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி
பிரதம நூலகர்
யாழ் பல்கலைக்கழகம்
01-12-2016
No comments:
Post a Comment