Thursday, May 11, 2017

உப்புக்கரிக்கும் உதடுகள்

உப்புக்கரிக்கும் உதடுகள்
அணிந்துரை

கவிஞர் பற்றி----
அமைதியும் அடக்கமும் எளிமையும் பொருந்திய உருவம். பாசத்துக்கான ஏக்கமும் வாழ்க்கை பற்றிய நிச்சயமின்மையும், சமூகம் மீதான அக்கறையும் நிரம்பிய உள்ளம். அறிவுலகமும் உணர்வுலகமும் அடிக்கடி மோதும் போது வெளிக்கிளர்பவை தான் இவரின் கவிதைகள். இரு உலகிற்குள்ளும் தன்னிச்சையாக அலைபவர் இவர். தனி மனித உணர்வுகளுக்குள் நிற்கின்றார் என உணரும் முன்னமே சமூக உலகிற்குள் பாய்ந்து விடும் வேகம் இவருடையது.
சிறிது காலம் ஆங்கில ஆசிரியராக இருந்திருக்கின்றேன். க.பொ.த உயர்தரப் பிரிவில் நான்கு பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளை (4 யு) அதிலும் கலைப் பிரிவில் அத்தகையதொரு சாதனையை ஏற்படுத்திய பின்னரும் கூட 'ஆங்கிலம் தெரியாதவன் அறிவிலி' என்ற ஆழமான கருத்துநிலைக்குள் சிக்குப்பட்டு, தனக்கு அது வரவில்லையே என்பதற்காகத் தனது சாதனையே அர்த்தமற்றது என்ற விரக்தி நிலையில் அவர் இருந்த ஒரு காலத்தில் ஏற்பட்ட எனது அறிமுகம். அன்னிய மொழி. ஏன்பது உதட்டு நுனியில், ஆங்கிலப் பாணியில் பேசுவதற்கல்ல அம்மொழிலயிலுள்ள அரிய தகவல்களை எமது மொழிக்குக் கொண்டு வந்து எமக்கும் எமது சமூகத்துக்கும் பயன்படுத்துவதற்கே அந்த அறிவு என்ற எனது கருத்துநிலையை மிகக் கஷ்டப்பட்டு அவருக்குள் ஏற்படுத்தி அந்தத் தாழ்வுணர்ச்சியை மெல்ல மெல்ல நீக்கியதன் நன்றி வெளிப்பாடோ அல்லது கவிதை பற்றிய எனது நோக்கும் ஒரு சில மேடைகளில் அவை பற்றிய எனது கருத்து வெளிப்பாடுகளும், அச்சுருவம் பெற்ற எனது ஒரு சில கவிதைகளும், விமர்சனங்களும் தான் என்னை நோக்கி இழுத்ததோ என்னவோ அவரது ஆக்கங்களுக்கு அணிந்துரை வேண்டும் என்ற ஆழமான சுமையை ஏற்றும்  அன்பான அவரது வேண்டுகோளுடன்---

கவிதை பற்றி---
புதுக் கவிதை---  'சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மா கவிதை'  என்ற பாரதியின் வரிகளால் உரம் பெற்ற கவிதை. கவிதை தொடர்பான அச்சத்தைத் தூக்கியெறிந்து சிவதர்சினியைப் போன்று தனக்குச் சொந்தமான அனுபவங்களை அப்படியே ஒப்பனையின்றி வெளிப்படுத்தும் துணிவைக் கொடுத்த கவிதை.  அதே சமயம் வெட்டி எழுதும் வசனங்களுக்கும்  கவிதை எனப் பெயரிடும் அசண்டையீனத்தையும் கொடுத்த கவிதை.
எனது உணர்வின் வெளிப்பாடுகள் கட்டாயம் பதியப்பட்டே ஆக வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாட்டுக்கு ஆரம்பத்தில் பத்திரிகைகள் களம் கொடுத்தன. அந்த அங்கீகாரம் ஏற்படுத்திய நம்பிக்கை தந்த வலு இப்போது உப்புக் கரிக்கும் உதடுகள் என்ற தலைப்பில் ஏற்கனவே பதியப்பட்டவையும் புதிதாக உருவம் பெற்றவையும் இணைந்து அச்சுருவம் பெறுகின்றன.

கவிதையின் உள்ளடக்கம் பற்றி---
எனது உணர்வுகள் அப்பட்டமானவை. உணர்வுகளுக்கு ஒப்பனையிடும் எண்ணம் எனக்கு இல்லை. என் கவிதைகள் சொல்ல விழைவது எது என்பதை அறிவதற்கு சிரமப்பட வேண்டிய தேவையில்லை என்பது தான இவரது எண்ணப்பாடு.
யாரிடம் சொல்லியழ என்ற கவிதையே இவரின் முழு உணர்வையும் பிரதிபலிக்கப் போதுமானது.

உருக்குலைந்த என்னிதயத்தின்
உறைந்து போன குருதியே
என் கவியின் மையாகையில்---
குளிர்ச்சியும் கனிவும்
அருமையான சந்தமும்
எப்படி எனக்கு வரும்?

என்ற வினவலிலேயே  உணர்வின் வரிகளுக்கு உருவ அலங்காரம்  இருக்காது என்பது தெளிவாகிறது. உள்ளத்திலிருந்து அவ்வப்போது பீறிடும் உணர்வுகள் அடுத்தவர் மத்தியில் சிரிப்பை, கோபத்தை, கேலித் தனத்தை, வியப்பை, ஏளனத்தை  உண்டு பண்ணுமோ என்ற அச்சத்தில் வெட்டிக் கொட்டி, வேலி கட்டி, முடிந்தால் வித்துவத் தனத்தால் ஒரு படலையுங் கட்டி வெளியே பார்ப்பவருக்குப் பிரமையையும் உள்ளே புகுந்தவருக்குப் பரவசத்தையும் கொடுக்கும் முன்னெச்சரிக்கை உணர்வு பற்றியெல்லாம் வீணாக அலட்டிக் கொள்ளாது எனக்குரிய உணர்வுகள் இது. எந்தெந்தச் சூழலில் அவை வெளிக்கிளர்ந்தனவோ- காலையில் துயில் கலைந்த கையுடன் சில ---  குளித்து முடித்துச் சில -- சீவிச் சிங்காரித்துச் சில -- அழுது வடித்து ஆற்றில் இழந்து சில --- உணர்வுகள் வற்றி சடமாகச் சில--  என்று அத்தனை உணர்வுகளையும் அப்படியே சமூகத்தைப் போய்ச் சேர விட்டுள்ளமை தான் இக்கவிதைகளுக்குள்ள தனித்துவம்.
எனினும் கூட கவிதைகள் முழவதும் ஆக்கிரமித்திருக்கும் தவித்தல், தேடுதல், ஏங்குதல், இதயம் வெடித்தல், குருதி உறைதல் போன்ற சொல்லாட்சிகள் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பாலான பெண்களுக்கு  வீட்டுச் சூழலும் சமூகச் சூழலும் அளித்த பரிசு.
இவர் சொல்ல விழையும் இரு பிரதான கருப் பொருளில் முக்கியமானது முதன்மையானது தூய அன்புக்கான ஏக்கம் --- முத்தமே சொத்தாக, முடியும் நேரத்தில் அழுத்தி முத்தமிட்ட அன்னையின் பிரிவு தந்த ஏக்கம்--- தன்னையே மட்டும் நேசிக்கும் அன்பிற்கான ஏக்கம்.--- தூய நட்பிற்கான ஏக்கம்--- அதற்கும் மேலே சமூகத்தின் நலன் மீதான ஏக்கம்---
இந்த ஏக்கம் இயல்பாகவே விரக்தி நிலைக்கு இட்டுச் செல்கின்ற போதும் கூட இவரால் வெகுண்டெழ முடியவில்லை. அன்பு பொய்யென்று உணர்ந்த பின்னரும் வெகுண்டெழ முடியாது தனக்குள்ளேயே குமைந்து, குழைந்து வெளிப்படும் உணர்வுகளுக்குரியவர் இவர்

அனைத்திலுமே நீ வெற்றுச் சொல்லாகி
உள்ளமதில் ரணத்தை ஏற்படுத்தினாலும்
உடைக்காதே என் மனதை என்று
சொல்ல முடியவில்லை என்னால்.

இடையிடையே கட்டளைக் கவிதைகள் மூலம் வாழ்வு பற்றிய நேர்க்கணிய அணுகுமுறை வெளிப்பட்ட போதும் கூட இவரது சூழலும், இவரது சமூகச் சூழலும் இணைந்து நம்பிக்கையீனம் என்ற வட்டத்துக்குள்ளேயே இவரைச் சுழல விடுகின்றன. சமூகம் பற்றிய இவரது நம்பிக்கையீனம் இவரது எதிர்பார்ப்பு என்ற கவிதையில் ஆழமாக வெளிப்படுகின்றது. இது இவரது தவறல்ல. போர் மலிந்த, போலிகளும் பகட்டுகளும் அரியணையில் வீற்றிருக்கின்ற இன்றைய சூழலில் போலியற்ற தூய வாழ்க்கைக்காக ஏங்கும் எவருக்கும் ஏற்படக் கூடிய நம்பிக்கையீனம் தான் இது. வேண்டுவது இது தான என்ற கவிதையில்

சின்னத் திரைகளின் சிற்றின்பத்துள்
சிலையாகிப் போகும் சீர் கெட்ட வாழ்வு
இனி எமக்கு வேண்டாம்
சன்னங்கள் உமிழ்ந்து உடலைச்
சல்லடையாக்கும் துப்பாக்கிகள்
மனித நேயத்துக்கு புதைகுழி தோண்டும் போலி மனிதர்கள் வேண்டாம்

என்று சற்று அழுத்திக் கூறும் வல்லமை இருந்தாலும்,

விடியும் எனக் காத்திருந்த வேளையில்
இருள் விடையாயமைந்தது
முடியும் எனக் காத்திருந்த வேளையில்
இடைவெளி அதிகரித்து நீண்டது.

ஞாபகங்கள் சேரத் தொடங்கிய
அந்த நாள் தொடங்கியே
இயந்துபோய்விட்டதாக
என்னுள்ளே உணர்ந்து கொள்கின்றேன்

என இறுதியில் எதிர்பார்ப்பு என்ற கவிதையில்; நம்பிக்கையீனத்தில் முடிவடைகின்றன எல்லாமே.

இவரது கவிதைகளில் இரண்டாவது பிரதான கருப்பொருள் சமூக நலன் மீதான அக்கறை.

மூடிய சிறைச்சாலை
உன் ஆயுள் வரை---
திறந்தவெளிச் சிறைச்சாலையே

எங்கள் ஆயுள் வரை என்று அடக்குமுறையின் அவலத்தை மட்டும்  பதிவுசெய்யவில்லை இவர்.

யாருமே இல்லாததால்
இப்போதெல்லாம்
தனக்குள்ளே கதைத்துக்கொள்கின்றாள்'

என்ற வரிகளில் அறியாமைச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்கும் பெண்ணின் அவலத்தையம்  ஆழமாகப் பதிவு செய்கிறார். தன்னைச் சுற்றியுள்ள அவலங்களை மட்டும் பதிவு செய்வதுடன் தனது பணியை மட்டுப்படுத்தாது அதற்குமப்பால் உலகைப் பார்க்கும் பண்பு இவருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது அரவாணியின் கதறல் என்ற கவிதை. அரவாணிகளின் உணர்வுகள் சோகங்களை நூல்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருந்தபோதும் கூட

எங்கள் வாழ்க்கை அகராதியில்
நாங்கள் தேடும் ஒவ்வொரு சொற்களுமே
விபரீதமாகச் சிரிக்கிறது
நெருஞ்சி முட்களாக

என்று அவர்களின் உணர்வுகளை ஆழமாகப் பதிந்து செல்வதற்கான அறிவைக் கொடுத்தது சமூக நலன் மீதான இவரது அக்கறையே.
இயற்கையின் அனர்த்தங்கள், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பதிவு செய்கிறது 'உப்புக் கரிக்கும் உதடுகள்' என்ற கவிதை. போர் அனர்த்தங்கள் தனி மனிதனில் குறிப்பாக பெண்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்கிறது 'சிறையிருக்கும் நண்பிக்கு'என்ற கவிதை. சீதனக்கொடுமையை அழகாகப் பதிவு செய்கிறது ' மரண சாசனம்'

பொதுவாகவே பெண்களின் படைப்புகள் தன்னை, தனது சோகங்களை, அச்சோகங்களுக்குக் காரணமான ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை சாடுவதையோ அல்லது அதனை ஒழிப்பதற்கான அதுவுமன்றி உடைப்பதற்கான வழிவகைகளை தேடுவதையோ இலக்காகக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து சற்று மேலுயர்ந்து ஆண்பெண் என்ற பேதத்துக்குமப்பால் பொது மனிதனாக நின்று சமூகத்தைப் பார்க்கும் படைப்பாளியாக சிவதர்ஷினியைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.

கவிதைத் தொகுப்பு முழுவதையும் படித்து முடித்தவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளில் முக்கியமானது சமாதானம், வேலைநிறுத்தம், கலாசாரச் சீரழிவு, சீதனக் கொடுமை, பாதிப்புற்றோர் நட்பு என்று பன்முகப் பார்வையைக் கொண்டவர் சிவதர்ஷினி என்ற உணர்வே. தன்னுணர்வுக்குள் சிக்குப்பட்டு நிற்பவர்களுக்கு உருவ உத்தித் திறன்கள் இருக்குமளவிற்கு பன்முகப் பார்வை இருப்பதில்லை. சமூக நலன் மீதான உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கெ தமமைச்சுற்றி நடப்பதை ஆழ ஆராய்ந்து படைப்பிலக்கியம் வாயிலாக சமூகத்திற்கு அனுப்பும் வல்லமை உண்டு என்ற யதார்த்தத்திற்குள் தான் இவரும் நிற்கிறார் என்பது மனதுக்குள் ஆறுதல் தரும் ஒன்று. இவர் பணி தொடர என்றும் என் நல்லாசிகள்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி
01-07-2005



No comments: