சூரியப் புதல்விகள்:
பாடல்கள் பற்றிய ஒரு பார்வை
மனிதனுக்கு உயிர்ப்பூட்டும் ஜீவசக்திகளில் முதன்மையானது இசை. தாயின் கருப்பையில் தொடங்கி கல்லறைக்கு போகும் வரை மனிதவாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் இசை வகிக்கும் பங்கு அளப்பரியது.எழுத்து வடிவ ஊடகங்களோ அல்லது கட்புல ஊடகங்களோ ஆற்றமுடியாத பணியை இசையால் ஆற்றமுடியும். பார்வைப்புலனற்றவர், படிப்பறிவு அற்றவர், பணவசதியற்றவர் என பல்வேறு சமூக மட்டத்தினால் பயன்படுத்தப்படக் கூடியதும், குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை என பரந்துபட்ட சமூகத்தை சென்றடையக் கூடியதும், சமூகத்தின் சமூக, சமய, கலை, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களில் பரவலாக பயன்படுத்தப்படக் கூடியதுமான ஊடகமாக இசை அமைந்துவிடுகிறது.
மனித மனத்தின் உணர்வுகளும் மானுட வாழ்வின் அனுபவங்களும் கவிஞனின் கைவண்ணத்தில் வரிவடிவம் பெற்று இசைமழையில் குளித்து உயிர்ப்பூட்டும் குரல்கள் மூலமாக மீண்டும் சமூகத்திடமே பாடல்களாக சென்றடையும் போது இவை ஒரு காலத்தின் குரலாய் மாறி நிரந்தர இடத்தைப் பெற்றுவிடுகின்றன. மக்களிடையே சென்று மக்கள் மனதை ஊடுருவி, அவர்களின் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை செயலூக்கம் புரியச் செய்யும் வல்லமை இசைப்பாடல்களுக்கு உண்டு என்பதை நன்குணர்ந்துதான் மக்களை எழுச்சி கொள்ளச் செய்ய, குதூகலித்து மகிழ, சிந்திக்க, சிந்தனைக்குத் தெளிவூட்ட, வெட்கித் தலைகுனிய வைக்க, விழிப்புணர்வூட்ட, பெருமைப்பட, பெருமிதங் கொள்ளச் செய்ய, எதிரியை கேலி செய்ய, தன் உணர்வை வெளிப்படுத்தவென நூற்றுக்கணக்கான பாடல்களை இந்த மண்ணின் மக்கள் உருவாக்கினர். இன்றைய எமது சமூகத்தின் அடிநிலையை ஊடுருவி நிற்கும் போராட்ட வாழ்வின் யதார்த்தங்களை தமக்கென்றுள்ள தனித்துவ கலைபண்பாட்டு அம்சங்களினூடாக மக்கள் மனங்களில் பதியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி, விடுதலைப்புலிகள் மகளிர் படையினரால் வெளியிடப்பட்ட 'சூரியப்புதல்விகள்' ஒலிப்பேழை நாடா இன்றைய போராட்ட நிலையினை, போராட்ட வாழ்வில் பெண்களின் பங்களிப்பை இசையில் வடித்தெடுக்கும் ஒரு கலை முயற்சியாகவே கருதப்படுகின்றது. 'நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்த எம்மண்ணின் புதல்வியர் பற்றிய கானங்கள் இவை. விடுதலை வேண்டி உயர்ந்த இவர்களின் கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன. பெண்மை புதியதோர் அர்த்தமானது. நிலவுக்கும் மலருக்கும் காதல் செய். கவிதைக்கும் உவமைகளாய் உணர்த்தப்பட்டவர்கள் வீரத்தின் பொருளாகினர். எமது தேசத்தின் விடுதலை எமது இனத்தின் விடிவு என்ற உயரிய குறிக்கோளை நெஞ்சில் ஏற்றி நடத்து வந்த இந்தப் புதல்வியர் சுமக்கின்ற சுமைகள், அவற்றுக்காய் கொடுக்கின்ற விலைகள், தியாகங்கள், சாதனைகள் என்பவற்றைப் பாடுபொருளாக்கிய இக்கானங்கள் புதிய வீச்சும் எழுச்சியும் கொண்டவை' என்ற அறிமுக உரையுடன் தொடங்கி 10 பாடல்களைத் தாங்கிவரும் இவ்ஒலிப்பேழை விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் 3வது பாடல் ஒலிப்பேழையாகும்.
1993ல் 'விழித்தெழுவோம்' என்ற ஒலிப்பேழை அம்புலி, பாரதி, தமிழவன், வசந்தமதி போன்ற போராளிப் பெண்கவிஞர்களின் உள்ளத்துணர்வுகளைத்; தாங்கி வெளிவந்தது. ஆதன் பின்னர் 1995 இல் 'நெருப்பு நிலவுகள்' என்ற ஒலிப்பேழை 'ஆழவேரோடிய சமுதாய வன்முறைகளைக் கடந்து, வேலித்திரைகளிலிருந்து விடுபட்டு விடுதலை வேண்டி நிற்கும் எமது வளர்ச்சி படிமுறை வளர்ச்சியல்ல, பாய்ச்சல் நிகழ்வு' என்ற அறிமுகத்துடன் விடுதலை கானங்களைச் சுமந்து வந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களாய் மண்மீட்புப் போரில் தம்மை இணைத்துக் கொண்ட சூரியப் புதல்விகள் தமது பாதையில் எதிர்கொண்ட சவால்கள், சாதனைகளைப் பதியும் முயற்சியில் இந்த ஒலிப்பேழை ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றது. ஐந்து பாடல்கள் சூரியப் புதல்வியின் சாதனைகளை, தியாகங்களை பதிவு செய்திருக்க மீதிப்பாடல்கள் சமூகத்தின் இன்றைய வாழ்நிலையை பதியும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
பொதுவாக பாடல்களை பாராட்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவை, பாடுபவரை மெய்மறக்கச் செய்பவை, சிறிது காலத்திற்கு நிலைத்து நிற்பவை, தலைமுறை கடந்தும் வாழ்பவை எனப் பலவாறாக வகைப்படுத்தலாம். பாடலின் வரிகளை திரும்பத் திரும்ப மீட்கும் சந்தர்ப்பங்களில் பாடலாசிரியன் வெற்றி பெறுகின்றான். பாட்டின் கருப்பொருளையும் மீறி வெறும் மெட்டுகளை அசைபோடும் நிலைக்கு பாடலைக் கேட்பவன் வரும் நிலையில் இசையமைப்பாளன் வெற்றியைத் தனதாக்கிக் கொள்கின்றான். கவிதையும் இசையும் இணைந்த கலவையை உயிர்ப்பூட்டும் குரலால் வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகன் மனதில் இடம் பிடிக்கும் நிலையில் அங்கு வெற்றி பாடகனிடம் போய் சேர்ந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக பாடலாசிரியரை, இசையமைப்பாளரை, பாகரை என பட்டிமன்றம் நடத்தப்போய் முடிவு தெரியாது குழம்பும் நேரங்களில் பாடல் சிரஞ்சீவித் தன்மையைப் பெற்று விடுகின்றது.
இவ்வாறு காலத்தால் அழியாத கானங்கள் என்ற வகையில் பெண்களின் சாதனைகளைப் பாடுபொருளாக்கி நிற்கும் ஐந்து அற்புதமான பாடல்களை இவ்ஒலிப்பேழை தாங்கி வந்திருக்கின்றது.
காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்து விடு;ம் பூங்கொடிகள் என்ற மூடக்கொள்கைகளால் முடையப்பெற்ற தத்துவம் 15 வருட கால போராட்ட வாழ்வில் தகர்க்கப்பட்டுவிட்ட செய்தியை இப்பாடல்கள் வெளிக்காட்டுகின்றன.
'வேலிப்பொட்டுக்கள் வெடித்து சரிந்தன. அடுக்களை சுவர்களின் இடுக்கண் தொலைந்தது' என்றும் 'நாளை மலர்ந்திடும் ஈழம் காத்திட நாமும் எழுந்ததனாலே, எம் தாழ்வு மனப்பள்ளத்தாக்குகள் எல்லாம் தலைநிமிர்ந்தே மலையாச்சு' என்றும் பெண்போராளிகளின் இன்றைய வாழ்நிலையை நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது போராளி தமிழ்க்கவி எழுதிய 'அந்த வானத்து நிலவை' என்று தொடங்கும் பாடல். மரபுகளால் இறுக்கமாக சூழப்பட்ட சமூக வாழ்நிலையை உடைத்தெறிந்து இளைய தலைமுறையுடன் இணைந்து போராடப் புறப்பட்டுவிட்ட, பேரக்குழந்தைகளையும் கண்டுவிட்ட ஒரு பெண் போராளியின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடே இப்பாடல். பாடகியையோ பாடலையோ குழப்பாமல் இங்கிதமாக நுழைந்து நெளிந்து வரும் இசை எம்மை துள்ளிக் குதிக்கச் செய்கின்றது. வயல் சூழ்ந்த கிராமமொன்றின் வயல் வரப்புகளில் உற்சாகமாக வாய் திறந்து பாட ஊக்குவிக்கின்றது.
பாடலும் இசையும் குரலும் சரிவரப் பொருந்தி கேட்பவர் மனத்தில் துக்கமா, சந்தோசமா, பெருமிதமா என்று இணங்காண முடியாமல் உள்ளம் முழுவதும்; நிறைந்திருக்கும் இன்னொரு பாடல் 'வீரமுடன் களமாடி வருகின்ற' எனத் தொடங்கும் ஒரு போராளிக் கவிஞனின் பாடல். தன்கண் முன்னே தனது தங்கையர் புரியும் சாதனைகளைப் பார்த்து அதன் மூலம் ஏற்பட்ட உணர்வின் வெளிப்பாடுகளை இசைமாலையாக்கி அதனை ஒரு அற்புதமான குரல் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் வேவுப்பெண் புலிகள் பற்றி வெளிவந்த முதலாவது பாடல் என்ற பெருமையைப் பெறுகின்றது.
'கண்ணி வயல்களில் ஏறி நடக்கையில் கால்கள் தவறிடக்கூடுமே
உம்மைக் கட்டியணைத்தழ தேகமுமின்றியே காலச் சருகுகள் மூடுமே'
'நிலமும் அதிராமல் நீரும் விலகாமல் நிழலெனப் போய் வருகின்றீர்
இந்த உலகம் உணராத சுமைகளைத் தாங்கவே
உங்களின் தோள்களைத் தருகின்றீர்'
என்ற வரிகள் அனுபவங்கள் பேசுகின்ற ஒரு கவிதையே. ஒரு பெண்ணின் சாதனையை ஆண் கவிஞன் ஏற்றிச் சொல்வதும், பெண் குரல் ஒன்று இப்பாடலின் உட்பொருளை தனது அகக்கண்ணால் உய்த்துணர்ந்து தனது அற்புதமான குரலால் இப்பாடலுக்கு மேன்மையும் புனிதத்தன்மையும் அளிப்பதுமே இப்பாடலின் சிறப்பம்சம். பாடலின் கருப்பொருளை, வரிவடிவத்தை முறிக்காது அதனை மென்மையாக சூழ்ந்து நிற்கும் இசையால் தனது ஆளுமையை இசையமைப்பாளர் வெளிப்படுத்தியிருப்பதும் இப்பாடலின் சிறப்பம்சமாகும்.
பெண்ணின் சாதனைகளை ஆண் ஏற்றி சொல்லும் இன்னொரு பாடல் 'நிலவுக்குள் நிலவொன்று' எனத் தொடங்கும் பாடல். பெண் போராளிகளை தங்கையாகப் பாவித்து அவளின் பெருமைகளை பாடும் ஒரு சகோதரனது உணர்வின் வெளிப்பாடாகவே இப்பாடல் அமைகிறது. 'பெண்ணுக்கு பெருமை தந்து பண்புக்கு உயிர்தந்து மண்ணிற்கும் விடிவைத் தேடும் என்னுயிரே' என்ற வரிகள் மூலம் தனது பண்பாட்டு அம்சங்களுக்குள் நின்று கொண்டு, தாயக மீட்புக்கும் உதவிசெய்து கொண்டு வாழும் சராசரி தமிழீழ பெண்ணை எமக்கு காட்டுகின்றான் பாடலாசிரியன். பாடலின் ஆரம்பத்தில் தனது உலகில் சஞ்சாரம் செய்யும் இசை மெல்ல மெல்ல இறங்கி பாடகனின் குரலுக்கு மெல்ல வழிவிடுகின்றது. தங்கையின் புகழ்பாடும் தமையனின் குரல் கேட்டு இசையும் கூட பெருமிதமும் குதூகலமும் அடைகிறது.
பெண்ணின் சாதனைகளை பெண்ணோ அல்லது ஆணோ ஏற்றி சொல்வதுடன் நின்றுவிடாது இயற்கையும் எவ்வாறு பெருமிதப்படுகின்றது என்பதை வெளிக்காட்டி நிற்கின்றது இன்னொரு பாடல். போராடப் புறப்பட்டு காவியமாகி தனது மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற பெண் போராளிகளை கடலன்னை எவ்வாறு தாலாட்டுகின்றாள் என்பதை அற்புதமாக வெளிப்படுத்தி நிற்கும் இப்பாடல் விடுதலைப் போராட்டத்தின் சுமைகளைத் தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழ் மகனின் உள்ளத்து வெளிப்பாடுகளாக இருக்கின்றது.
அது போல் கரும்புலிகளின் சாதனைகளை, அவர்களின் மன உரத்தை வெளிப்படுத்தி இருக்கும் இன்னொரு பாடல் 'உருக்கில் மனம் வரித்து' என்று தொடங்கும் ஒரு பாடல். மூன்று ஆண்கவிஞர்களும் இரு பெண்கவிஞர்களும் இணைந்து சூரியப்புதல்வியின் சாதனைகளை, தியாகங்களை பாடுபொருளாக்கி உலவவிட்டிருக்கின்றனர்.
இலக்கியங்கள் காலத்தின் குரலாய் ஒலிப்பவை. அந்தவகையில் போராடப் புறப்பட்டுவிட்ட சமூகத்தின் தற்போதைய வாழ்நிலையை தெட்டத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன இரு பாடல்கள். இந்த மண்ணில் தாய் தந்தை பிள்ளைகள் என்று குடும்பமே மண் மீட்புக்காக கிளம்பியிருக்கும் நேரம் இது. கிளம்ப மனமில்லாது தயங்கி நிற்பவர்களைக்கூட தமது உச்சக்கட்ட ஆற்றல்களைப் பயன்படுத்தி தாயக விடிவுக்கு தோள் கொடுக்க வாருங்கள் என கூவியழைக்கும் நேரமும் இதுதான். அடுக்களையே அகிலம் என இருந்தவர்கள் இந்த 15 வருட குறுகிய போராட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியவையாக, கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தும், இன்றைய போராட்ட சுமையை சரிநிகர் சமானமாக அல்லது அதற்கும் கூடுதலாக தாங்கி நிற்கும் வளர்ச்சி பெற்றவையாக இருந்தும் ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் கூவியழைக்கும் தகுதியைப் பெற்றிருந்தும் கூட பெண் இனத்தை மட்டுமே போராட வாருங்கள் என இவர்கள் அழைப்பதன் மூலம் ஏதோ ஒரு விதத்தில் தமக்குள் ஒதுங்கி நிற்கி;ன்ற ஒரு போக்கு இப்பாடல் ஒலிப்பேழையில் வெளிப்படுவது யதார்த்தத்திற்கு புறம்பான ஒன்றாகவே தெரிகின்றது. 'தேசத்தின் விடுதலை' என்று தொடங்கும் முதலாவது பாடல் பெண் போராளி அம்புலியுடையது. அற்புதமான இசையும் உயிர்ப்பூட்டும் குரல்களும் இணைந்து கேட்பவரின் மனத்தில் விடுதலைப் போராட்டம் தொடர்பான சமூகத்தி;ன் உணர்வலைகளை சுமந்து நிற்கும் இப்பாடல் பெண்களின் பங்களிப்பை மட்டும் வேண்டுவதுடன் நின்றுவிடாது ஆண் பெண் இணைந்த பொதுச்சமூகத்தின் பங்களிப்பை வேண்டி நின்றிருந்தால் மிகவும் அற்புதமான பாடலாக அமைந்திருக்கும்.
ஆண் பெண் பேதத்தைக் கடந்து ஒட்டுமொத்த சமூகமே விடுதலைப் போராட்டத்தின் சுமையை தாங்கி நிற்கும் இன்றைய யதார்த்தத்திற்கு மாறாக அரைத்த மாவையே திருப்பி அரைப்பது போல் பெண்ணை விழித்தெழக்கோரும் பாடல்களும் இப்பாடல் ஒலிப்பேழையில் உள்ளடங்கி இருப்பதானது புறச்சூழல்கள் எவ்வளவுதான் மாறினாலும் அகமாற்றம் ஒன்றிற்கு மனித மனம் உட்படுவதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என்ற யதார்த்தத்தை கோடிகாட்டி நிற்கின்றது. பாடல்கள் எழுதப்பட்ட காலப்பகுதிக்கும் வெளியிட்ட காலப்பகுதிக்கும் இடையிலான இடைவெளியும் இக்குறைபாட்டுக்கு காரணமாக இருக்கக்கூடும். போராளிகளுக்கு சமதையாக பொதுமக்களும் எல்லைப்படையாக, சிறப்பு எல்லைப்படையாக, கிராமியப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டு சாதனைகள் படைக்கும் இக்காலப்பகுதியில் அவர்கள் பற்றிய ஒரு பாடலாவது இல்லாது இருப்பது இந்த ஒலிப்பேழையின் இன்னொரு பிரதான குறைபாடாகும்.
இன்றைய வாழ்வு நாளைய வரலாறு. எனவே வெறும் எதுகை மோனைகளிலும், உணர்ச்சியூட்டுவதிலும் கவனம் செலுத்துவதை கைவிட்டு இன்றைய சமூகத்தின் வாழ்நிலையை, அவர்களின் சுமைகளை, தியாகங்களை, அர்ப்பணிப்புகளை அப்படியப்படியே ஆவணப்படுத்த வேண்டிய தேவை எமது சமூகத்திற்கு உண்டு.
No comments:
Post a Comment