நூலகமும் கல்வி அபிவிருத்தியும்
திரு. எம்.எஸ். இராசரத்தினம் நினைவுப் பேருரை
வட்டு மத்திய கல்லூரி பரிசளிப்பு விழா
சாதனைகள் செய்த பூரிப்பும் களிப்பும் நிரம்ப சாதனைகளுக்கான பரிசுகளைத் தட்டிச் செல்லக் காத்திருக்கும் மாணவர்கள், தமது இரத்தத்தில் உதித்த வாரிசுகளின் இந்தச் சாதனைகளுக்கான உழைப்பில் கணிசமான பங்கு தமக்கே உரியது என்ற பெருமிதத்தில் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள், சாதனைகளுக்குக் களம் தந்த பெருமையில் உரிமையெடுக்கவெனக் காத்திருக்கும் இக்கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள், மற்றும் வட்டு மண்ணின் அறிஞர்கள் பெற்றோர்கள் நிறைந்திருக்கும் இவ்வவையிலே எனது வணக்கத்துக்குரியவர்களான அறிஞர்கள், பெரியோர்கள், பேராசிரியப் பெருந்தகைகள், மதிப்பிற்குரியவர்களான பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், எனது தோழமைக்குரிய நண்பர்கள், நூலக சமூகத்தினர், எனது பேரன்புக்கும் பாசத்துக்குமுரிய மாணவர்கள், குழந்தைகள் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வட்டுமண் எனக்கு சிறியளவில் பரிச்சியமான ஒரு மண். என்னைச் சுற்றியிருப்பவைகளை அவதானிக்கும் அறிவு இல்லாத ஒரு காலத்தில் எட்டிப்பிடித்து கட்டி அணைத்துக், கன்னத்தைக் கிள்ளி, எமது அழுகையில் ரசனை காணும் எனது சித்தப்பா வட்டு மண்ணின் வாரிசு. 60 களின் இறுதிப் பகுதியில் இருக்கும் அவரை இன்றும் நாம் அழைப்பது வட்டுக்கோட்டைச் சித்தப்பா என்று தான். எட்ட நின்று வே வே காட்டும் எனக்கு வட்டு மண்ணை அவரிடமிருந்து அறிவது எவ்வாறு? அவரைத் தவிர அவரின் உறவுகள் கூட சரியாக ஞாபகமில்லை..
தொழிலுக்குள் நுழைந்த காலத்தில் சக ஊழியர்களாக இந்த மண்ணைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் ஏனோ வட்டு மண்ணை அவர்கள் நினைவூட்டவில்லை. அறியும் அவாவும் எனக்கு இருந்ததில்லை.
நூலகத் துறை விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் கீழ்ப்படிவும் புதியதை அறியும் ஆர்வம் மட்டுமல்ல அதை அதற்குரிய அற, ஆன்மீக ஒழுக்க விதிமுறைகளுடன் பெற விரும்பிய ஒரு மாணவி. வட்டு தொழினுட்பக் கல்லூரியில் நூலக உதவியாளர் என நினைக்கிறேன். பத்மாசனி என்பது பெயர். கிராமியம் இன்னமும் கைவிட்டு விடாத அல்லது கைவிட விரும்பாத உண்மை, நேர்மை, அன்பு, ஆன்மீகம், கீழ்ப்படிவு போன்ற உயரிய பண்புகளைக் கொண்ட மாணவி ஒருவர் எனது கருத்தை அதிகம் ஈர்த்த போது தான் அவருக்கூடாக அவர் வாழும் மண் தொடர்பான எனது நேயம் முதன்முதல் கருக்கொண்டது.
2003ம் ஆண்டு என நினைக்கிறேன். வட்டு மத்திய கல்லூரியின் நூலக வாரத்தின் சிறப்புச் சொற்பொழிவாளராக திடீர் அழைப்பு. நான் இல்லாமலேயே எனது உதவியாளருடன் சாதுரியமாகப் பேசி எனது வருகையை உறுதிப்படுத்தி நான் இல்லாமலேயே அழைப்பிதழும் என்னை வந்தடைந்துவிட்டது. கல்வி அமைச்சின் ஆணைக்கு மட்டும் அடிபணியும் கல்விக்கூடங்களில் நூலகத்தில் வேலை செய்பவரை அழைக்கும் புதிய ஞானம் எப்படிப் பிறந்தது?. இதுவும் நிர்ப்பந்தமா அல்லது நியாயமான விருப்பமா? தடல்புடல் வரவேற்புடன் இந்தக் கல்லூரியில் நுழைந்தபோதும் கூட என்னைத் தெரிவு செய்தது யார் என்ற தேடலுடன் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்கிறது. பார்த்தால் மேடையில் நான் ஓரிரு தடைவை மட்டும் பார்த்த ஒரு முகம் என்னை எப்போது எப்படிச் சந்தித்தேன் என்பது பற்றி அசலான உணர்;வுடன் என்னை உங்கள் முன் அறிமுகப்படுத்துகின்றது. கடுமையான ஆசிரியராகப் பலருக்குத் தென்படும் நான் அவரின் விருப்பிற்குரிய ஆசிரியராக எப்படி மாறினேன் தெரியவில்லை. நூலகத் துறை சார்ந்து குமுதினி லோகநாதன் என்ற அந்த ஆசிரியரின் ஆர்வமும், அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் தான் முதன்முதலில் இந்த வட்டு மண் தொடர்பாக நூலகத் துறையின் இன்றைய நிலை சார்ந்து எனது ஆழமான சிந்தனைக்கு வழிகோலியிருக்கவேண்டும் என நினைக்கிறேன். அவர் மட்டுமல்ல அவரது அதிபர் திரு சபாரத்தினசிங்கி காட்டிய ஆர்வமும் துடிப்பும் கூட அடிக்கடி இந்தக் கல்லூரி எனது நினைவுகளில் வந்து போகத் தூண்டும் ஒன்று.
அண்மையில் பாடசாலை நூலக அபிவிருத்தி சார்ந்த ஒரு கருத்தரங்கில் வட்டு மண்ணின் அதிபர்கள், ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புக்கு அடிகோலியவர் அன்றைய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த திரு. ரவிச்சந்திரன் அவர்கள். வலிகாமம் வலய அதிபர் ஆசிரிய நூலகர்கள் அனைவரையும் ஓரிடத்துக்கு அழைக்கும் எனது தீர்மானத்தை தனது சாதுரியமான பேச்சால் திசை மாற்றி வட்டு இந்துக் கல்லூரியில் அதனை நடத்த அயராது பாடுபட்ட அவரது முயற்சி இந்த மண் சார்ந்து அவருக்கு இருந்த பற்றைத் தான் கோடிகாட்டியிருக்கிறது.
நினைவுப் பேருரைக்கும் வட்டு மண் தொடர்பான எனது பரிச்சியத்துக்கும் என்ன சம்பந்தம்.? சம்பந்தம் இருக்கிறது. அது கருத்துப் பரிமாற்றம்----- . சுவரை நோக்கி ஏவப்படும் பந்து ஏவப்படும் இடத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எறிந்தவருக்கே திரும்ப வந்து அறைவது போன்று ஒரு வழிப் பாதிப்பாக எனது கருத்து இருப்பதில் எனக்கு எப்போதுமே சம்மதமில்லை. எந்த ஒரு நிகழ்விலும் நான் கலந்து கொள்ள ஒத்துக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ இந்த அடிப்படையில் மட்டும் தான். கருத்துப் பரிமாற்றத்தின் போது கருத்தை பெறுபவர் தொடர்பான ஒரு பொது மதிப்பீட்டுடன் தான் எனது கருத்துப் பரிமாற்றத்தின் போக்கை மாற்றியமைப்பது எனது வழமை. எனவே இந்த அவை தொடர்பான எனது நோக்கு பற்றி உங்களுடனான எனது பகிர்வு இந்த மண் தொடர்பான எனது நோக்கினடிப்படையில் அமைந்ததொன்று.
சரியான தகவல் சரியான நேரத்தில் சரியான வாசகனிடம் போய்ச் சேருவதை உறுதிப்படுத்துவதே நூலகசேவையின் நோக்கம் என்பதன் அடிப்படையில் நூலகம் சார்ந்து பதிவுகளைத் தேடி உங்கள் பவளவிழா மலரில் பார்வையை ஓடவிட்டபோது வட்டு மத்திய கல்லூரியின் நூலகம் சார்ந்து பதிவு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நூலகம் சார்ந்த எனது உரைக்கு ஒரு கரு கிடைத்தது. ஈழத்துக் கவி உலகின் மூவேந்தர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவரான திரு. முருகையன் அவர்களின் பின்வரும் கவி வரிகள்
புத்துயிர்ப்பின் ஒத்துழைப்பினால்
கொள்கைத் தெளிவின் கூட்டியக்கத்தால்
அடாக் கொடுஞ் சுரண்டல், அழுத்தல்,
ஒடுக்கல், வெட்டுக்கொத்து, வெடி
கழுத்தறுப்புகள்
சற்றும் இல்லாத சுகாதாரமான
நீதிச்சூழலை ஏற்படுத்த முடியாதென்று
யார் சொன்னது?
கல்விக்கூடங்களாவது
முழு மலர்ச்சிக்குக் கைகொடுக்கக் கூடாதா?
என்ன நினைக்கிறீர்கள் பெரியோர்களே?
என்ற வினாவுடன் உங்கள் பவள விழா மலரில் முருகையன் தனது கவிதையை முடிக்கிறார் அதிலிருந்து நான் ஆரம்பிக்கின்றேன்
கல்விக் கூடங்கள் நிச்சயம் கைகொடுக்க முடியும்.
எதற்கு? மனிதசமூகத்தின் முழு மலர்ச்சிக்கு
எவ்வாறு.? இது தான் இன்றைய நினைவுப் பேருரையின் கருவாக அமைகிறது.
மனித சமூகத்தின் முழு மலர்ச்சிக்கு இந்த மண் கைகொடுப்பதற்கு நாம் முதலில் எம்மைப் பற்றி அறிதல் மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் பொதுப் பண்பாக இருப்பது என்ன?
நாம்
தமிழ் இலக்கணத்தில் செய்வினை செயற்பாட்டு வினை என இரு வினைகள் உண்டு நாம் பெரும்பாலும் செயற்பாட்டு வினையாகத் தான் இருக்கின்றோம். செய்வினையில் அதாவது 'இந்தச் செய்வினையில்' எமக்கு ஆர்வமும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. சமூக ரீதியில் பார்த்தால் நாம் இயக்குபவர்கள் அல்ல. இயக்குவிக்கப்படுபவர்கள். அரசியல் ரீதியில் சிந்தித்தால் நாம் ஆள்பவர்கள் அல்ல. ஆட்படுபவர்கள். பொருளாதார ரீதியில் சிந்தித்தால் அடுத்தவரைத் தாங்குபவர்கள் அல்ல வளர்முக நாடுகளுக்குரிய பொதுப் பண்பான தங்கியிருப்பவர்கள் அல்லது உதவிக்குரியர்கள். கல்வி சார்ந்து பார்த்தால் மனித வளமாக தாமே உருவாகின்றவர்கள் அல்ல. பெற்றோரின் விருப்பிற்கமைய வலிந்து உருவாக்கப்படுபவர்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இழுத்துப் பிடிக்கும் தன்மையை விட இழுபட்டுப் போகும் தன்மை எங்களிடம் அதிகம். இதில் மன ஆறுதல் தரும் விடயம் எதுவென்றால் சுயசார்பு, தனித்துவம் போன்ற பண்புகளை இன்னமும் வைத்துக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கின்ற கிராமங்கள் எம்மிடம் அதிகம் உண்டு. இத்தகைய பண்புகளில் இருந்து கிராமியம் சற்றே தூர நிற்பது மட்டும் தான் ஆறுதல் தரும் ஒரு விடயம். வட்டு மண்ணும் கூட இந்த கிராமியப் பண்பு இன்னமும் மாறாத ஒரு மண்ணாகவே எனக்குப் படுகின்றது.
நாம் வாழும் சூழல்
மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் புதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது.
கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உண்மையான பயன்பாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.
போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும்.
எமது புரிதல்கள் தொடர்பாக எம்மிடையே மாற்றம் வேண்டும். மிக நீண்ட காலமாகவே கல்விக்கும் அறிவுக்குமிடையிலான இடைவெளியின் அளவு தொடர்பான தேடல் என்னிடம் ஆழமாக நிலைகொண்டிருந்திருக்கிறது. படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட கல்வியா அறிவா பெரிது என்ற வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில்; கல்வியைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கல்விக்கு அத்திவாரத்தை இட்டு என்னைச் செப்பனிட்ட பாடசாலையினையும் இன்றுவரை எனது மனதில் பூசிக்கும் பேறு பெற்ற எழுத்தறிவித்த இறைவர்களையும் அடியோடு ஒதுக்கிவிடவோ அல்லது அறிவை ஆழமாகப் பூசித்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் அறிவுக்கு ஆணிவேராக இருந்த நூலகத்தை ஒதுக்கிவிடவோ நான் தயாராக இல்லை. எனவே இரண்டுக்குமிடையிலான சமநிலையைத் தேடி ஓடிய எனது முயற்சி வீண் போகவில்லை.
'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகிறது.
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள் கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' என்னும் நாலடியார், 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு'என்னும் திருக்குறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது கல்வியின் முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே
கல்வியின் நோக்கங்களை குறுங்காலப் பயன்கள், நீண்டகாலப் பயன்கள், உடனடிப்பயன்கள் என மூவகைப்படுத்துகிறார் இந்திய கல்வியியல் சிந்தனையாளரில் ஒருவரான எஸ் சந்தானம் அவர்கள். ஓவ்வொரு மாணவனும் அன்றாடம் கற்கும் பாடங்களின் முடிவில் அவனிடம் எதிர்பார்க்கப்படுபவை உடனடிப்பயன்கள் எனவும், குறிப்பட்ட பாடம் ஒன்றை மாணவன் கற்பதனூடாக ஏற்படும் பயன்கள் குறுங்காலப் பயன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. குறுங்காலப் பயன்களே கல்வியின் குறிக்கோள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் நிறைவேறும்போது நீண்டகாலப் போக்கில் ஏற்படுபவை நீண்டகாலப் பயன்கள் எனப்படுகின்றன.
கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையும் மனித நேயமுமிக்க மனிதனை உருவாக்குதல் ஆகும். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. ஷஎதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்ஷ என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது. 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாது விடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக்கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்துமுரண்பாட்டுக்கும் இடம் இருக்காது.
பாடசாலைகள்.... மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனம். மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. எந்தவொரு கல்விசார் நிறுவனத்தினதும் முதுகெலும்பாகத் தொழிற்படுவது என்ற வகையில் பாடசாலை நூலகங்கள் கல்விச்செயற்பாடு முழுமையடைவதற்கான ஆதார நிறுவனமாகத் தொழிற்படும் கடப்பாடுடையவை. மனித ஆளுமையின் ஆத்மீக, ஒழுக்க, சமூக கலாசார அம்சங்களின் விருத்திக்கு பாடசாலை நூலகம் மிக அவசியமானதொன்று. இது ஒரு தேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறது. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு கல்விசார் நிறுவனமும் சிறப்புடன் இயங்குவதற்கும் மாணவர்களின் கல்வி கலாச்சார ஆர்வங்களை ஊக்குவிப்பதற்கும் பாடசாலை நூலகம் முக்கிய கருவியாக இருப்பதனால் ஒவ்வொரு முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலைப் பாடசாலைகளுக்கும் பாடசாலை நூலகம் இருத்தல் மிக அவசியமானது. பாடல்கள், கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது. வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதியதோர் அணுகுமுறையாக 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 5நு-மாதிரியானது (5நு- ஆழனநட) கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முழுமைப்படுத்துவதற்கான காரணி என்ற வகையில் பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது. 'கடலைப் போன்றது நூலகம். மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்;;;. சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்;. குளிப்போர் குளிக்கலாம்;. காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்;. மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்;. வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்;. முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.;; செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்கிறார் தேர்ந்த வாசகர்களுள் ஒருவரான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள்.
பொதுவான பொருட்துறைகளில் ஆர்வமுள்ளோரை ஒன்று சேர்த்து அவர்களுக்கென வாசிப்பு வட்டங்களை உருவாக்குதல், வாசிப்பு வட்டங்களுக்குத் தேவையான நூல்களையும் வாசிப்பு வட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வாசிப்பு வட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்கலாம். வாராந்த மாதாந்த ரீதியில் நடைபெறும் இத்தகைய கருத்தூட்டல்களுக்கு உதவுமுகமாக நூலகங்கள் தமக்கென சிறியளவிலாவது கருத்தரங்கு மண்டபம் ஒன்றையும் கொண்டிருக்குமாயின் வாசிப்பு வட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பேயே அவற்றுடன் தொடர்பான நூல்களை அம் மண்டபத்தின் ஒரு பகுதியிலேயே காட்சிப்படுத்தின் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும். பெரும்பாலான பொதுநூலகங்கள் வாசகர் வட்டங்களை சிறப்பாக நடத்திவருவதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் இந்த நினைவுப் பேருரையை நிறைவு செய்யலாம் என விரும்புகின்றேன். நூலகத் துறை நான் விரும்பி வரித்துக் கொண்ட துறை. பதவி உயர்வுக்கு மட்டும் படிக்கவென நூலகத் துறை கருதப்பட்ட 80களில் பதவியை நாடாது மாணவ நூலகராக அன்றி நூலகத்துறையில் வெறும் மாணவியாக நுழைந்த காலத்தில் நூலகவியல் துறையில் முதலாவது மாணவி என்ற பெருமையை இந்திய மண் எனக்குத் தந்தது. தொழில் சார்ந்து நான் அனுப்பும் ஒரு விண்ணப்படிவமே முதலாவதும் இறுதியுமானதுமாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் தொழிலுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தகுதியை விட கூடுதலான தகுதியுடன் இத்துறைக்குள் தற்போதைய வேலைக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தியது. பதவிக்கு வந்த பின்னர் அன்றிலிருந்து இன்றுவரை ஆசிரியராக, ஆலோசகராக, சொற்பொழிவாளராக, விரிவுரையாளராக, சிறப்புரையாளராக, முதன்மை விருந்தினராக, சிறப்பு விருந்தினராக, என்று எத்தனையோ நிகழ்வுகளில் என்னைக் கௌரவப்படுத்தியதனூடாக அறிவு ஊறுவதற்கு உதவுகின்ற நூலக சமூகத்தைக் எமது தமிழ்ச் சமூகம் கௌரவப்படுத்தியிருக்கின்றது. இதிலிருந்து இன்னொரு படி மேற்சென்று சைவமும் தமிழும் தம் இரு கண்ணெனப் போற்றிய ஒரு அறிஞர், தமது மண் பெருமை பெற வேண்டும் என உழைத்த சமூகத் தொண்டர், தாம் பிறந்த மண் கல்வியில் தழைத்தோங்க வேண்டும் என நினைத்த உத்தமர், திரு எம். எஸ் இராசரத்தினம் அவர்களது நினைவுப் பேருரைக்கு அழைத்து என்னையும் எனது நூலக சமூகத்தினரையும் கௌரவப்படுத்திய இந்த வட்டு மண்ணுக்கும் அதற்கான முயற்சியெடுத்த அதிபர் திரு சபாரட்ணசிங்கி அவர்களுக்கும் இந்த அவையிலே நன்றி கூறி எனது இந்த உரையை முடித்துக் கொள்கின்றேன்.
27-06-2008
No comments:
Post a Comment