Tuesday, February 04, 2014

இணையம் Vs நூலகம்


தகவல் வளங்களின் தொகை, தரம், ஒழுங்கமைப்பு, அணுகுகை, முகாமைத்துவம் ஆகிய ஐந்து பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் இணையத்துக்கும் நூலகத்துக்குமான வேறுபாட்டை ஆராய முடியும்.

தொகை
தகவல் வெடிப்பு என்ற கருத்துநிலையானது நூலகங்களைவிட இணையத்தளங்களையே அதிகம் பாதித்திருக்கின்றது. நூலகங்கள் அவை பணிபுரியும் தாய் நிறுவனத்தின் தேவைக்கமைய பலதரப்பட்டதாக இருப்பதும், வரையறுக்கப்பட்ட நிதி, ஆளணி போன்ற அம்சங்களின் ஆதிக்கத்தில் இருப்பதன் காரணமாக உலகின் வெளியீடுகளில் தமக்குப் பொருத்தமானவற்றை மட்டுமே தெரிவு செய்து தமது இருப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டியிருப்பதன் காரணமாக தகவல் வெடிப்பின் தாக்கத்திற்கு பெரிதும் உட்படவில்லை என்றே கூறவேண்டும். மாறாக இணையத்தளங்களில் தகவலின் தொகை ரீதியான அதிகரிப்புக்கு எந்தவொரு காரணியும் தடையாக இல்லாததன் காரணமாக  தகவற் சுமையின் தாக்கத்திற்கு பயனர் உட்படும் அளவு அதிகமாகவே உணரப்பட்டிருக்கிறது.

தகவல் வளங்களின் தரம்
நூலகத்துக்கென்றே வடிவமைக்கப்பட்ட தெரிவுப் பிரமாணங்களின் அடிப்படையில்,  வெளியிடப்படுவதற்கு முதலே திருத்தப்பட்டு மீளாய்வு செய்யப்பட்ட தகவல் வளங்களின் கொள்;வனவை பின்பற்றுவனவாகவே நூலகங்களின் ஈட்டற் பணி அமைந்திருக்கிறது.  நூலகத்தின் இலத்திரனியல் தரவுத்தளங்களிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் புலமைத்துவம் சார்ந்தவை என்பதுடன் தொடர்ச்சியான மீளாய்விலிருந்து உருவானவை. மாறாக தகவலின் துல்லியத்தன்மையை பரிசோதிப்பதற்கான வாய்ப்பு இணையத்தளங்களில் வெகு குறைவு. இணைய வசதியுள்ள எவருமே வலைத்தளத்தை உருவாக்கலாம். தகவலின் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.  ஒரே பாடத்துறையில் மாணவன் ஒருவனால் எழுதப்படும் கட்டுரையும் நோபல் பரிசு பெற்ற புலமையாளரின் கட்டுரையும் ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். பெருமளவு தகவல் உருவாக்கப்படுவதாலும் வர்த்தக ரீதியில் போட்டி அடிப்படையில் குறைவான பணப்பெறுமதியில் உருவாக்கப்படுவதாலும் தகவலின் தரம் குறித்து ஐயமேற்படுகிறது. பெரும்பாலான தளங்கள் இற்றைப்படுத்தப்படும்போது நடப்புத் தகவல்களை மாத்திரம் உள்ளடக்கி பழைய தகவல்களை அனுமதிக்க பின் நிற்கும் நிலை காணப்படுவதுடன் பயனாளி முதலில் தேடிப் பெற்ற தகவலை மீண்டும் சில காலம் பெற்ற பின் தேடும் போது கிடைக்காமற் போகின்ற நிலை உள்ளது. அது மட்டுமன்றி கிடைக்கும் தகவல் தொடர்பாக அல்லது அதன் வழங்குனர் தொடர்பாக தகவல் பயனாளி தவறான தகவல்களை இணையத்தில் பரப்புரை செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் மதிப்பளிக்கும் பண்பும் குறைவடைகிறது. நூலக ஒழுக்க நெறி முறைகள் இணையத்திற்கும் உள்ளன இணையத்திலுள்ள தகவல்களை மாற்றியமைத்தல், மாற்றியமைக்கும் வைரசு செய்நிரல்களை உருவாக்குதல் முதலியன குறிப்பிடத்தக்க ஒழுக்க நெறி மீறல்களாகும்.

தகவல் வள ஒழுங்கமைப்பு
உலகளாவிய ரீதியில் விருத்திசெய்யப்பட்ட நியம பகுப்பாக்க ஒழுங்கமைப்பை நூலகங்கள் கொண்டிருக்கும் அதேசமயம் வலைத்தளங்களின் ஒழுங்கமைப்பு நியமமற்ற ஒழுங்கமைப்பாக வெறும் அகரவரிசை ஒழுங்கமைப்பே இன்றும் பின்பற்றப்படுகின்றது. தகவல் தேடுகையை மேற்கொள்பவர் தமக்குத் தேவைப்படும் தகவலை கண்டுபிடிப்பதற்கு  ஏற்ற வகையில் ஒழுங்குமுறைப்பட்ட வழியில் பகுப்பாக்கம் மற்றும் பட்டியலாக்க ஒழுங்கமைப்பை நூலகம் கொண்டிருக்கிறது. தூயி தசமப்பகப்புத் திட்டம், காங்கிரஸ் நூலகப்பகுப்புத் திட்டம் போன்ற உலகளாவிய ரீதியில் புலமையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பகுப்பாக்கத்திட்டங்களை நூலகங்கள் பின்பற்றுகின்றன. அதேபோன்று தேவைப்படும் தகவலை ஆசரியர், தலைப்பு, பொருட்துறை போன்ற பலதரப்பட்ட வகையிலும் தேடிக்கண்டுபிடிப்பதற்கான தேடுகைப் பொறிமுறைகளை நூலகம் கொண்டிருக்கிறது. மாறாக வலைத்தளங்களின் தகவல் தேடுகையில் கொள்கைமாறாத்தன்மையை பேணுவதற்கான எந்தவொரு வழிமுறையும் பின்பற்றப்படுவதில்லை. வௌ;வேறுபட்ட தேடுகைப் பொறிகள் வௌ;வேறுபட்ட வகையில் தமது தரவுத்தளங்களில் தகவலைச் சேர்த்துக்கொள்கின்றன.  1997இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கல்வியிற் தொழில்நுட்பம் என்ற பொருட்துறைசார்ந்த தகவலைத் தேடுவதற்கு யாகூ, இன்வோசீக், வெப்குறோளர் ஆகிய மூன்று தேடுகைப் பொறிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுகையின் போது யாகூ பொருத்தப்பாட்டையும் தரவில்லை. இன்வோசீக் 100 பொருத்தப்பாடுகளையும் வெப்குறொளர் 87,987 பொருத்தப்பாடுகளையும் தந்திருந்தது.
நூலக தரவுத்தளங்கள் ஆசிரியர், தலைப்பு, பொருள் சார் தேடுதலை மேற்கொள்ளக்கூடிய வகையில் முன்ஒருங்கிணைவுச் சொல்லடைவுகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும். தலைச்சொல் அடிப்படையிலான தேடுகை ஒன்றுமட்டுமே இணையத் தள தேடுகைப் பொறிகளினூடான மேற்கொள்ளப்பட முடியும் என்பதுடன் இது பொருத்தமற்ற தகவல்களை தள்ளிவிடுவதற்கான ஆற்றலை மட்டுப்படுத்துகிறது. கிரடாரோவின் கருத்துப்படி பொது அணுகுகைக்கு அமைவான நாலு பில்லியனுக்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் இன்று காணப்படுகின்றன. இவற்றில் 6 வீதமானவை மட்டுமே கல்விசார் பொருளடக்கங்களைக் கொண்டுள்ளன. ஒரு வலைப்பக்கத்தின் சராசரி ஆயுள் 75 நாட்கள் மட்டுமே. மிகப் பெரிய தேடுகைப் பொறியான கூகுல் தேடுகைப்பொறியானது வலைப்பக்கங்களின் 18 வீதத்தை மட்டுமே சொல்லடைவுபடுத்தியிருக்கிறது. மரபுரீதியான தேடுகைப் பொறிகளினூடாக இணையத்தை சொல்லடைவுபடுத்தமுடியாது. வலைப்பக்கமொன்றை எவரும் வெளியிடலாம். அதேசமயம் அதிலுள்ள தகவல்களின் நம்பகத்தன்மையை அளவிடமுடியாது.

தகவல் அணுகுகை 
நூலகம் அல்லது வலைத்தளமொன்றில் வாசகன் ஒருவன் தனக்;குத் தேவையான ஆக்கம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அல்லது தகவல் சேமிப்பு வழிமுறைகளான பட்டியல்கள், சொல்லடைவுகள், நூல்விவரப்பட்டியல்கள், கணினி மின்முனைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான அல்லது சேமிப்பதற்கான அனுமதி, திறன்;, வாய்ப்பு போன்றவை தகவல் அணுகுகை என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.   தகவல் சாதனங்களை நூலக அலுவலர்களின் உதவியுடன் அணுகுவதற்கான வாய்ப்பும் ஆய்வின் தரத்தை கூட்டும் வாய்ப்பும் நூலகங்களில் உண்டு. ஆகக் குறைந்தளவு கணினி அறிவுடன் நூலகத்தைப் பயன்படுத்தமுடியும். மாறாக படங்கள் மற்றும் பாடங்களை பதிவிறக்கம் செய்து திருத்தக்கூடிய மின்னணுவியல் அணுகுகையை இணையத்தளங்கள் கொண்டிருக்கின்றன. சுய உதவியை மட்டுமே கொண்ட இணையத் தேடலானது தேவையற்ற தேடல்களுக்கு இட்டுச்செல்லக்கூடிய நிர்ப்பந்தத்தை பயனருக்கு ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.. அதிகார பூர்வ தளங்களின் தகவல்களைத் ஒத்த தவறான தகவற் தளங்கள் பயனரைப் பிழையான  வழியில் இட்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலும் பிரதேச ரீதியான அனுமதி நடைமுறைகளிலும் காணப்படும் வரையறுக்கப்பட்ட தகவற் பகிர்வு தகவலின் சுதந்திர பெறுகைக்கு தடையாகிறது.
நூலகங்கள் தரம் வாய்ந்த தகவல்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் அதேசமயம் மிகப்பழைய தகவல்களையும் கொண்டிருக்கின்றன. சில தகவல்களை அச்சுவடிவத்திலேயே பெறப்படக்கூடிய வாய்ப்பு இங்கு உண்டு.   இணையத்தளங்களோ புதிய தகவல்களைக் கொண்டிருப்பதுடன் சிறுபான்மை நோக்குகளுக்கு சம இடம் வழங்குகின்றன. சில வலைத்தளங்கள் அண்மைக்காலத் தகவல்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. வலைத்தளங்களின் பெரும்பாலான தகவல்கள் கடந்த 20 வருடங்களுக்குட்பட்டவை. தகவல் தேடலில் குறித்த தகவல் தொடர்பான மிகச் சிறிய தகவலையும் மிகப் பெரிய தகவலையும் ஒன்றாகத் தருவதால் தேடல் செய்வதிலும் தகவலைக் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
நூலகங்கள் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் வகையில் சிறந்த நூல் நீக்கக் கொள்கையைக் கொண்டிருக்கும். உலகளாவியரீதியில் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை கொண்டிருப்பினும் நீக்கற் கொள்கை இல்லாத காரணத்தால் பெரும்பாலான வலைத்தளங்கள் சேமிப்புக் குதங்களாகவே இருப்பது தவிர்க்கமுடியாததாக உள்ளது. வரலாற்றுரீதியான தகவல் வளங்களை நூலகத்திலேயே பெறப்படக்கூடிய தன்மை உண்டு. அதேசமயம் பிரதேச ரீதியான ஆய்வு முயற்சிகளை உள்ளடக்கிய தகவல் இணையத்தில் மிகக் குறைவு.

முகாமைத்துவம்
தகவல் முறைமை ஒன்றிலிருந்து வாசகர் மிக உயர்ந்த நன்மையையும் பயன்பாட்டையும் பெறுவதற்கு ஏற்ற வகையில் பொருத்தமான தகவல் வளங்களைக் கட்டியெழுப்புதல் அவற்றைப் பராமரித்தல் ஆகிய இரு பெரும் தொழில்நுட்பங்களின் செயல்திறன் தகவல்வள முகாமைத்துவம் எனப்படுகிறது. தகவல் வள அபிவிருத்தி, தகவல் வள பராமரிப்பு ஆகிய இருபெறும் கூறுகளை இது உள்ளடக்குகின்றது. தகவல் வள அபிவிருத்தியானது தகவல் வள ஈட்டல், தகவல் வள நீக்கம் ஆகிய இருபெரும் நடவடிக்கைகளை உள்ளடக்கும் அதே சமயம் தகவல் வளப் பராமரிப்பானது தகவல் வளப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றது.
நூலகம் என்பது திட்டமிட்ட கொள்கையின் அடிப்படையிலான ஈட்டற் செயற்பாடுகளைக் கொண்டது. பொதுவாக நூலகம் ஒன்று தனக்குத் தேவையான தகவல் சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவைப்படும் செயல்முறைகளே ஈட்டல் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டபோதும் உண்மையில் நூலகம் ஒன்றிற்கு கொள்வனவு, அன்பளிப்பு, பரிமாற்றம், அங்கத்துவம் போன்ற வழிமுறைகளுடாகத் தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான செயல்முறைகள் அனைத்தையும் குறிக்கும் பொதுப்பதமாகவே ஈட்டல் என்ற பதம் கருதப்படுகின்றது. தகவல் வள அபிவிருத்தி சிறப்பான முறையில் அமுல்படுத்தபட வேண்டுமாயின்; தகவல் வள ஈட்டலுக்கு நூலகத்தின்  பலதரப்பட்ட துணைப்பிரிவுகளின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். அதே சமயம் புகழ் பெற்ற அல்லது இலாபம் தரக்கூடிய தகவல்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் கொள்கையற்ற ஈட்டற் செயற்பாட்டை இணையம் கொண்டிருக்கிறது.
நூலகம் திறந்திருக்கும் நேரம் மற்றும் கடன் வழங்கும் கால எல்லை என்பவற்றுக்கு அமைவான மட்டுப்படுத்தப்பட்ட அணுகுகையை நூலகங்கள் கொண்டிருக்கின்றன. ஆனால் கம்பியில்லாக் கருவிகள் மூலமான அணுகுகை மூலம் வீடு வேலைத்தலம், பொது இடங்கள் என்று எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அணுகுகை செய்யக்கூடிய வாய்ப்பை இணையத்தளங்கள் கொண்டிருக்கின்றன எனினும் நூலகத்தில் இணைய வசதியை ஏற்படுத்தலாம். ஆனால் இணையத்தில் நூலக வசதியை ஏற்படுத்த முடியாது என்பதையும் கருத்திற் கொள்ளுதல் அவசியமானது. நூலகத்தின் பொது ஈட்டற் கொள்கையில் அணுகுகைக்கு கட்டணம் இல்லை. விசேட தகவல்களுக்கு கட்டணம் அறவிடுந்தன்மை இணையத்தில் உண்டு.


பரந்த நோக்கில் நூலகத்துடன் ஒப்பிடுமிடத்து இணையத்தை நூலகத்திலுள்ள மிகப்பெரிய தகவல் தரவுத்தளமாகக் கொள்ளலாம். இணையம் என்பது மிகப் பெருமளவு தகவலை தன்னிடத்தே கொண்டிருக்கின்றதென்பதையோ அது காலத்துக்கேற்றவாறு இற்றைப்படுத்தப்படுகிறது என்பதையோ யாரும் மறுக்கமுடியாது. எனினும் நூலகம் போன்று இலகுவான தகவல் அணுகுகைக்கென தர்க்கரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்டதொன்றாக இணையம் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். வலைத்தளம்; என்பது தொடர்பாடலுக்கான ஒரு வழிமுறையேயன்றி அது ஒரு நூலகம் அன்று. வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தப்படாத நூலகங்களுக்குச் சமமாகக் கொள்வதென்றாலும் கூட நூலகங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட தெளிவான வரையறுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் வலைத்தளத் தகவல்களின் ஈட்டலைக் கொள்ளமுடியாது.
பெரும்பாலான எமது நூலகங்கள் இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றன. வாசிப்பற்ற சமூகத்தின் உருவாக்கத்திற்கு கடந்த முப்பது ஆண்டு காலப் போர் ஒரு பிரதான காரணமாகக் பேசப்படுகிறது. போர் காரணமா அல்லது தொழில்நோக்கத்தைப் பிரதான காரணமாகக் கொண்டு ஓடும் எமது மனப்பாங்கு காரணமா என்பது விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படவேண்டியதொன்று.
இதற்கிடையில் இணையம் இருக்க நூலகம் எதற்கு? எமது ஆய்வை எந்தவொரு சிரமமுமின்றி இணையத்தினூடாகவே மேற்கொள்ளமுடியும் என்ற மனப்பாங்கு ஆய்வாளரிடையே ஆழமாக வோரோடுவது துல்லியமாகத் தெரிகிறது. சர்வதேச ரீதியில் நன்கு விருத்திசெய்யப்பட்ட ஒழுங்கமைப்புமுறைக்கு அமைவாக நூலக சாதனங்களை ஒழுங்குபடுத்தியும் கூட தேவைப்படும் தகவலைச் சரியான முறையில் அணுகுகை செய்வதற்கான தகவல் அறிதிறனை வளர்த்துக்கொள்ளாத எமது ஆய்வாளர்கள்   எந்தவித ஒழுங்கமைப்புமற்ற ஒரு வலைத்தளத்திலிருந்து வேண்டிய நேரத்தில் வேண்டிய தகவலை பெறக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது முரண்நகைக்குரியது.

28-03-2012

No comments: