Showing posts with label மனதின் பக்கங்கள். Show all posts
Showing posts with label மனதின் பக்கங்கள். Show all posts

Sunday, March 09, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்


'என்னடி! கொக்காள் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லைப் போல கிடக்கு. ஏழு மணியாவிட்டுது. இன்னும் எழும்பாமல் படுத்திருக்கிறாள்'.

தன்னுடைய செல்ல மகளைக் கேட்டபடியே தேத்தண்ணி வைக்க அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தாள் பூமணி. இவள் வேலைக்கு வெளிக்கிட்ட காலம் தொடக்கம் அம்மாவுக்கு இவளுடனான அந்நியோன்னியம் மெல்ல மெல்ல விலகிக் கொண்டதும் ஆரம்பத்தில் காரணம் புரியாமல் குழம்பினவளுக்கு, காரணம் தெரிய வேண்டும் என்ற விருப்பம் மெல்ல இல்லாமல் போய்விட்டதும் நடந்து வருடங்கள் பல.

மாதத்தில் வரும் இந்த மூன்று நாட்களும் அவளுக்கு உபத்திரவ நாட்களாகி இப்போது இருபத்தைஞ்சு வருசமாச்சு. வயிற்றுக் குத்துடன் தொடங்கும்   உபாதை இறுதியில் வாந்தியாக வெளிவந்து தான் மெல்ல அடங்கும். இதில் வினோதம் என்னவென்றால் குத்துக்குச் சரிசமமாக அவளுக்கு இந்தக் காலங்களில் அதிக பசியெடுக்கும். குறைந்தது இருநாட்களாவது லீவு போட்டுவிடுவாள்.

'டாக்குத்தர் மாரிட்டை காட்டினால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்டு சொல்லுகினம். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கலியாணம் கட்டி ஒரு பிள்ளை பிறக்க இந்தக் குத்து நிண்டுவிடும் எண'டு சொல்றான்கள்' அம்மா பக்கத்து வீட்டுக் கமலம் அக்காவுக்கு அன்றொருநாள் பிரலாபித்தது நினைவுக்கு வந்தது.

'கலியாணம் கட்ட நான் என்ன--? மாட்டன் எண்டே நிக்கிறன்;. அதுவும் வரவேணுமே' மனத்திற்குள் குமைந்து கொண்டே தன் முன்னே தாய் கொண்டு வந்து வைத்த சாப்பாட்டை பார்த்தாள் வசந்தி. பசி, வயித்துக்குத்துடன் அம்மாவின் அலட்சியமும் சேர்ந்து கோபம் தலைக்கேறியது.  

எணை!. இந்த நேரங்களிலையாவது குளிர்ச்சாப்பாட்டை  குடுக்கக்கூடாது எண்டு யோசிக்கமாட்டியோ?'

'நான் என்ன செய்யிறது! கொண்ணை திருக்கை மட்டுந் தான் வேண்டியந்தவன்.'

அம்மாவுடன் இவள் ஏதும் கதைக்க வெளிக்கிட்டால் அது சண்டைதான் எண்டு முதலே முடிவெடுத்து கவர் எடுக்க வந்து விடுவாள் அம்மாவின் செல்ல மகள். வேலையின்றி வீட்டில் இருக்கின்ற தனக்கு அம்மாவை ‘காக்காய்‘ பிடித்து அதன் மூலம்  கிடைக்கிற மேல்மிச்சங்களுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்கு.

ஒரு பொட்டச்சி உழைச்சுக் குடுக்க வீட்டிலை சும்மா இருந்துகொண்டு அவருக்குப் பிடிச்ச சாமான் தான் வேண்டுவாராக்கும். மனசிலை வந்ததை வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை அவளால். 'மாதம் முழுக்க உழைச்சுப் போடுறன். ஒரு முட்டையாவது பொரிச்சுத் தர இந்த மனிசிக்கு ஏன் மனம் வரமாட்டுதாம்' புறுபுறுத்தபடி அந்த ஓலைப் பாயில் மீண்டும் சரிந்து படுக்க முனைந்தவளின் கவனத்தை தங்கையின் குரல் திருப்பியது.


கண்ணாடியின் முன் நின்று கொண்டு கடலை மாவும் முட்டை வெள்ளைக் கருவும் கலந்த கலவையை முகத்துக்குப் பூசியபடியே தங்கை புறுபுறுப்பது அட்சரசுத்தமாகக் கேட்டது.

 'மனிசர் படுகிற இந்தக் கஷ்டத்துக்கை இவவுக்கு முட்டைப் பொரியல் கேட்குதாக்கும்.'


Sunday, February 23, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள்  6

'கீதாவின்ரை வீட்டுக்கு விளையாடப் போகவேண்டாம் என்று நிஷாந்திக்கு அம்மா எத்தனை தரம் சொன்னனான்'.

'ஏன் போகக்கூடாது அம்மா?' ஆண்டு இரண்டு படிக்கும் நிஷாந்தியின் கேள்வி இது.

'அவையளோடை நாங்க பழகிறது இல்லை அவை எங்கடை ஆக்கள் இல்லை, அவையளோடை பழகிறது எங்கடை அப்பாவின்ரை உத்தியோகத்திற்கு கௌரவமில்லை'.

காலையில் தனக்கும் தாய்கும் நடந்த உரையாடலை நிஷாந்தி மறந்து விட்டு சாப்பிட்டதும் விளையாட ஓடிப்போய்விட்டாள்.


தகப்பனின் தொழில் இதுதான் என்று அறுதியிட்டு கூறமுடியாத ஏழை கீதா. ஆனால் உயர்வு தாழ்வு என்ற பேதம் இந்த இளம் தளிர்களுடன் ஊடுருவ முடியாத பருவம் இது. விளையாட்டு ஒன்றுதான் அந்த மனங்களை ஆக்கிரமித்து நிற்கும் பருவம்.  கீதாவின் குடிசை முன்னின்ற வேப்பமரத்து முன்றலில் அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது. திடீரென கையில் பூரவசம் கம்புடன் ஆவேசமாக வந்த நிஷாந்தியின் அம்மா 'உன்னை எத்தனை தரம் சொன்னான் அந்தச் சனியங்களோடை விளையாட வேண்டாமென்று'. அடித்து இழுத்துக் கொண்டு தாய் போக ஏன் விளையாடக் கூடாது என்ற காரணம் கொஞ்சம் கூட தெரியாததால் இரு இளம் தளிர்களும் பரிதாபம் விழிகளில் கக்க நின்றன.



யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள்  5

இன்று வெள்ளிக்கிழமை.
'எட நல்லா விடிஞ்சு போச்சு போலை கிடக்கு. இவள் அடுத்த வளவு கமலம் வந்து இப்ப முழுச்சாணியையும் வழிச்செடுத்துக் கொண்டு போப்போறாள். அதுக்கு முதல் நான் முந்த வேணும், என்ற முணு முணுப்புடன் அந்த மூன்று ஏக்கர் வளவு முழுவதும் அலைந்து ஒரு மாதிரி சாணி அள்ளிக் கொண்டு வந்து வீடு முழுவதும் மெழுகுவதில் ஈடுபட்டாள் அம்மா.

இன்றைக்கு காலமை எல்லோரும் சிவபட்டினி தான்.

'மா முடிஞ்சு போச்சு. பாண் வாங்க காசில்லை. நிவாரண அரிசியும் திண்டு தீர்த்தாச்சு. அரிசி வாங்கினால் தான் மத்தியானச் சமையல். சும்மா உதிலை குந்தி கொண்டிருந்தால் வயிறு நிரம்புமே'. 

மெழுக்கு வேலையை கை துரிதமாகச் செய்ய வாய் அந்த வேகத்திலையே மனுஷன் மேல் சரமாரியான அம்பை விட்டுக் கொண்டிருந்தது. மனுஷன் தான் என்ன செய்யும். ஆரன் வேலைக்குக் கூப்பிட்டால் தானே கையிலை மடியிலை ஏதாவது வாறதுக்கு.

எப்படியோ மனுஷன் அரிசியும் பருப்பும் கொண்டு வந்து போட்டு விட்டுது. தேங்காய் வாங்க காசு போதவில்லை. அவளும் சளைத்தவளா! என்ன? சோறு காய்ச்சி தேங்காய் போடாமல் பருப்புக்கறியும் வைத்தவள் பர பரவென்று கோயிலுக்கு ஆயத்தமாகி விட்டாள்.

'எட மோனை இந்தா இந்தக் காசை கொண்டு போய் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக் கொண்டு வா' 

சீலைத் தலைப்பில் முடிந்திருந்த காசு மூத்தவன் கைக்கு மாறியது. சமைக்கிறதுக்கு காசில்லை என்று புறு புறுத்தவளுக்கு இப்ப என்னண்டு இது வந்தது. கேட்பதற்கு எல்லோருக்குமே வாய்க்கு இருந்தது. ஆனால் நாள் முழுக்க அருச்சனை வாங்க ஒருத்தருக்கும் தைரியம் இல்லை.

அதுசரி! அவளுக்கு காசு எங்காலை? பிள்ளையாருக்கு கொடுக்க வெண்டே நாலைஞ்சு கோழிகள் வளர்க்கிறாள். வீட்டுச் செலவுக்கு ஒரு சதமும் தொடுவதில்லை.

'பிள்ளையள் பசியிலை அந்தரிக்க பூசைக்கு பார்த்துப் பாராமல் செலவழிக்கிறதை பொறுக்காமல் தானோ இந்த சுவாமிகளும் மூடின கண்ணை திறக்குதுகள் இல்லை.

Wednesday, February 05, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'


நடத்தைக் கோலங்கள்  4

தம்பையரின்ரை மூன்றாவது பெடிச்சிக்கு சுவிசிலை மாப்பிள்ளையாம். ஏழு லட்சம் சீதனம். இதைக் கேட்ட அதிர்ச்சியில் தலை விறைச்சுப் போச்சு. அதிர்ச்சிக்கு காரணம்!

வீட்டிலை ஆன வேளைக்கு தின்னச் சாப்பாடு இல்லை. நிவாரணத்தை மட்டும் நம்பின சீவியம். மனுஷனுக்கு உழைப்பெண்டு எதுவும் இல்லை. மூத்;த இரண்டு பெடிச்சிகளும்  ஊரிலை இருக்கேக்கையே மனுஷனுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் தான், தான் விரும்பியபடி கரை சேர்ந்து விட்டினம். இப்ப வெளிலை போறவளுக்குக் கீழை இன்னும் இரண்டு குமர் இருக்குது. நிலைமை இப்படி இருக்கேக்கை இதுகள் என்னவெண்டு ஏழு இலட்சம் புரட்டப் போகுதுகள்.

என்னெண்டு விசாரிச்சுக் கொண்டு போனால் மனுஷியின்ரை ஒன்றுவிட்ட சகோதரி முடிச்ச மாப்பிள்ளையின்ரை நாலு தம்பிகாரன்கள் வெளிநாட்டிலை இருக்கின்றாங்களாம். அவை தான் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து ஏழு லட்சமாக்கினவை. மனுஷி இப்ப பெட்டையை கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போயிருக்கு  வெளியிலை அனுப்புறதுக்கு.

அதுசரி ஒன்டுக்கும் வழியில்லாமல் இருக்கிறதுகளை நம்பி இவ்வளவு தொகையைக் கொடுக்க எப்படி சம்மதிச்சவை. அவவின்ரை 13 வயதுப் பெடியனை இரண்டு வருசத்தாலை வெளிநாட்டுக்கு அனுப்பி அவன் வட்டியுடன் கடனைக் கட்டுவான் என்ற ஒப்பந்தத்தின் பேரில் தான் இவ்வளவு தொகையும் வாங்கினதாம்.

இப்படியொரு துணிச்சல் யாருக்கு வரும்?. 'நகைநட்டு, காணி உறுதி மாதிரி இப்ப அடைவ வைக்க சுலபமான வழி இந்த இளம் ஆண்புரசுகள் போலை'.

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'



நடத்தைக் கோலங்கள் 3

பரமசிவத்தின் மனைவி பவளத்துக்கு இது நான்காவது பிரசவம். உறவுகளின் சுத்துமாத்துக் குணங்கள் பிள்ளைகளுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற அதீத கவனத்தில் மனைவியின் வீட்டாரை மட்டுமன்றி தன்வீட்டாரையும் அண்டவிடாமல் சொந்தபந்தத்துக்கு எட்டவாக ஒரு வீடு கட்டி தனிக்குடித்தனம் வந்து இப்ப எட்டு வருசமாச்சு. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மூத்தவள் ஆரபிதான். இந்தக் கார்த்திகையுடன் அவளுக்கு எட்டு வயது பூர்த்தியாகிறது. குதுர்கலம் பொங்கவேண்டிய அவளின் குழந்தமைப் பருவம் குழந்தைகளைப் பராமரிக்கும் துயர நிகழ்வாக மாறிவிட்டது. பிரசவத்தைக்கூட ஆள் வைத்துப் பராமரிப்பதில் நாட்டமில்லாத மனிசன் அவர்.

தேநீர் வைத்தல், தேங்காய் துருவுதல், காய்கறி நறுக்குதல் போன்ற துணை வேலைகள் மட்டுமன்றி தாய் குளிப்பதற்கு இலை குழை தேடிப் பிடுங்கிக்கொண்டு வருதல், தம்பி தங்கைகளின் ஆடைகளைத் துவைத்தல் போன்ற பெருவேலைகளையும் செய்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போகவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.

பிள்ளை பெற்ற பெண் ஓடியாடித் திரிவது உடலுக்கு நோக்காடு என்று பரமசிவம் மட்டுமன்றி பவளமும் ஆழமாக நம்புபவள். அதனால் அவள் அதிகம் எழும்புவதில்லை. எனினும் சமையல் வேலைகளில் ஆலோசனை சொல்லும் பொருட்டு குசினியை அடுத்துள்ள அறையைத்தான் பிரசவத்தின் பின்னர் அவள் பயன்படுத்தினாள்.

அன்று மாலை நேரம். அப்பாவை இன்னும் காணவில்லை. அம்மா பசிக்குது என்ற அழுகையுடன் தம்பி வண்ணனும், தங்கை கீதாவும் அம்மாவை அரியண்டப்படுத்திக் கொண்டிருப்பதைப் பொறுக்காத ஆரபி,
'அம்மா நான் புட்டு அவிக்கிறன். நீங்கள் எப்படியென்று காட்டித் தாங்கோ' என்று தாயின் சம்மதம் கேட்காமலேயே களத்தில் இறங்கிவிட்டாள்.

அடுப்பில் தண்ணீர் சுட வைத்தாள் ஆரபி. அம்மாவின் ஆலோசனைப்படி ஐந்து பேருக்கு அளவான மாவை பாத்திரத்தில் போட்டுக் கொண்டுபோய் அம்மாவின் அருகில் வைத்தாள். நீர் கொதித்ததும் கைத்துணியைப் பயன்படுத்தி கேத்திலையும் கொண்டுபோய் அருகில் வைத்தாள். மாவிற்குள் அளவாக அம்மாவைக்கொண்டு சுடுநீர் விட்டு, புட்டு மா குழைத்தாகிவிட்டது. இப்போது அதனைக் கொத்த வேண்டும்.

நிலத்தில் அமர்ந்தபடி தனது இரு கால்களையும் அகலப் பரப்பி கால்களின் நடுவில் சுளகை வைத்து பேணிச் சுண்டைக் கவிட்டுப் பிடித்தபடி தனக்குத் தெரிந்தமாதிரி கொத்தத் தொடங்கினாள் ஆரபி. புட்டு கொத்துப்படுவதைவிட மிக அதிகமாக அவளது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வடிவதை கண்கள் கலங்க அந்தத் தாயுள்ளம் பார்த்துக் கொண்டிருந்தது.  குதுகலித்து விளையாட வேண்டிய இந்தப் பருவத்தில் இப்படி கடினப்படுகின்றேனே என்ற கவலை ஆரபியின் முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக தாய்மைக்குரிய பொறுப்பு இருந்தது. செய்யும் பணியில் நேசம் இருந்தது. தம்பி தங்கைகளுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற வேகமும் இருந்தது.

'பிள்ளை அம்மான்ரை துவாயால் நெற்றியைத் துடையுங்கோ', சொல்லிக்கொண்டே துண்டை பிள்ளையின் அருகில் எறிந்தாள் தாய். துவாயால் தனது நெற்றியைத் துடைத்துக்கொண்டே தாயை பெருமிதம் பொங்கப் பார்த்தாள் ஆரபி. பெரிய பொறுப்புள்ள பணியில் தான் ஈடுபடுகின்றேன் என்ற மகிழ்வு அவள் கண்களில். பணி மீண்டும் தொடர்ந்தது. நெற்றி வியர்வை ஓடுமளவிற்கு புட்டு கொத்துப்படவில்லை. குழந்தையை உற்றுப் பார்த்தாள் தாய். குழந்தை முழுதாகக் களைத்துவிட்டாள். ஆனாலும் கை கொத்துவதை நிறுத்தவில்லை. கைகளில் தளர்ச்சி மட்டும் தெரிந்தது.; வாயிலிருந்து வாய்நீர் ஒழுகிப் புட்டின்மீது விழுவதைக்கூட உணர முடியாதளவிற்கு மகள் களைத்துவிட்டதும் தெரிந்தது.

' அம்மா.. குஞ்சு.... கொத்தினது காணும். தேங்காய்பூவைக் கலந்து  நீத்துப் பெட்டியிலை புட்டை வைத்து அடுப்பில வையுங்கோ'.

'என்ர பிள்ளையின்ரை வாய்நீர் அம்மன் கோவில் தீர்த்தத்தை விட மேல்' மனதிற்குள்  சொல்லிக் கொண்டே கலங்கிய கண்களை மகளுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள் பவளம்.

"யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள் 2

பக்கத்து வீட்டுப் பூமணியின் மூன்று வயது மாறனுக்கு கொஞ்ச நாளாய் உடல், உள நிலையில் கோளாறு. இரவில் தூக்கம் அடியோடு இல்லை. சிரித்து விளையாடிக்கொண்டு இருப்பவன் திடீரென வீரிட்டுக் கத்துவான். பயத்தில் தேகம் பதறும். எதைக்கண்டு இப்படிப் பதறுகிறான் என்று எல்லோருக்கும் ஒரே கவலை.

'அம்புலி' யைக் காட்டி சோறு தீத்தும் தந்திரம் இவனிடம் மட்டும் நடக்கவில்லை. நிலவைக் கண்டாலே வீரிட்டுக் கத்தத் தொடங்குவான். அதுவும் வளர்பிறை தொடங்கிவிட்டால் இது ஒரு பிரச்சனை. அன்பாகச் சொல்லி அரவணைத்துக் கேட்டும் எதுவுமே விளங்கவில்லை.கடைசியில் மிரட்டியும் தூங்க வைக்க முயற்சித்தாகிவிட்டது.

நடு இரவு 'அம்மா யன்னலை மூடுங்கோ' பயத்தில் குளறிய குரல். யன்னல் ஊடாக பூரண நிலவு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்ததை பார்த்த பூமணிக்கு நிலைமை விளங்க யன்னலை மூடிவிட்டு குழந்தையை அணைத்துக் கொண்டவள் நிலா நிலா ஓடி வா எனக் குதூகலிக்கும் குழந்தை இப்படி அலறக் காரணம் என்ன? என்பது புரிய மறுக்க யோசனையுடன் கிடந்தாள். சில நிமிடம் கழிந்த பின்
'அம்மா நாளைக்கும் இப்படி பரா லைற் வருமே' -  மெல்ல காதில் கிசுகிசுத்தான் குழந்தை.

பரா லைற் அடிக்குது ஆமி வரப்போறான் என்று அலறித்துடித்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் பூமணியும் அவள் மகன் மாறனும் அடங்குவர்.


யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்

நடத்தைக் கோலங்கள் 1

'அம்மா தம்பி எனக்கு விஸ்கற் தரமாட்டானாம்' இது 8 வயது குமணனின் ஏக்கம் தொனிக்கும் குரல்.

'அவற்றை படிப்பின்ரை வள்ளல்லை அவருக்கு விஸ்கற்'. 'தம்பி முதலாம் பிள்ளை. அதுதான் வாங்கிக் கொடுத்தது' ' நீ முதலாம் பிள்ளையாய் வந்தால் உனக்கும் வாங்கித்தரலாம்'. இது தாய் மாதவியின் குரல்.

பிஸ்கற் மட்டுமல்ல வீட்டில் சமையல், விருப்பமான இனிப்புப் பண்டங்கள் , வெளியில் உலாத்து எல்லாமே இளையவன் ரமணன் விருப்பப்படிதான். இத்தனை செல்வாக்கும் அவனுக்கு இருக்கக் காரணம் வகுப்பில் முதலாம் பிள்ளையாக இருத்தல் என்ற தாயின் அபிலாசையை நிறைவேற்றியமைதான்.

திறமைக்கு அதிக கவனம் கொடுத்த அந்தத் தாய்மை பகிர்ந்துண்ணும் பழக்கத்தை மட்டும் தனது பிள்ளைக்கு கற்றுக் கொடுக்க மறந்தது ஏன்? அன்பையும் மனித நேயத்தையும் வளர்க்க வேண்டிய தாய்மை அந்தஸ்து எனும் போர்வைக்குள் ஏன் முடங்க வேண்டும்?.

எனக்குத் தா என்று அழுது அடம்பிடித்து தனக்குரியதை மூத்தவன் பெற்றிருந்தால் இங்கு கலங்க வேண்டிய தேவை இல்லை. அல்லது குழந்தைமைக் குணங்களில் ஏதோ ஒன்றாவது அவனிடம் இருந்தாலும் வருந்த வேண்டியதில்லை. ஆனால் அந்த முகம் என்ன சொல்கிறது?.

ஆழமான அமைதியும் ஏக்கமும் விரவிக் கிடக்கும் அந்தத் தளிர் அப்படி ஒன்றும் மொக்கன் இல்லை. வகுப்பில் பத்துக்குள் வருவான். பள்ளிக்கூடத்தில் போடும் புள்ளிகள் திறமையை நிர்ணயிக்க முடியுமா?.

வெரித்தாஸ், பி.பி.சி என்றால் எங்கிருந்தாலும் ரேடியோ முன்வந்து செய்தி கேட்பவன்.
மை முடிந்த ரெனோல்ட் பேனையில் ' ஏவுகணை' விடத் தெரிந்தவன்.
யார் எது கொடுத்தாலும் தம்பிக்கு கொடுத்து தின்பவன்.
விழுந்து அடிபட்டு அழும் பக்கத்து வீட்டுச் சிறுவனை சமாதானப்படுத்தி சிரிக்க வைப்பவன்.
விளையாட்டு, பேச்சு என்று எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்பவன் மொக்கன் என்றா அந்தத் தாய்மை நினைக்கிறது. தனது அலுவலக நண்பர்கள் முன் பெருமையடித்துக் கொள்வதற்கு அந்தக் குணங்களை விடவும் ' முதல் இடம்' என்ற முத்திரை அவசியமாய்ப் போய்விட்டதா?.