Sunday, July 31, 2005

புனிதங்களிலிருந்து...

புனிதங்களிலிருந்து...


சாணம் புனிதமானது
என்ற
தனது நம்பிக்கை ஒன்றைத் தவிர
அம்மாவுக்கு
அது பற்றி வேறெதுவும் தெரியாது.
தெரிந்து கொள்ளவும் அவள் விரும்புவதில்லை
புனிதமும் புது மண்ணும்
ஒன்றாகக் கலந்து மெழுகாத வரை
புனிதம்
ஒரு போதும்
மண்ணுடன் ஒட்டாது
என்ற உண்மையை
நான் தெரிந்து கொண்ட பின்னரும்
அம்மா மாறத் தயாராய் இல்லை
பொருக்காய் வெடித்துக் கிளம்பும் புனிதத்தின் மீது
புனிதத்தால்
மீண்டும் மீண்டும் பூசிக் கொண்டே இருப்பாள்
அம்மா மாறவே மாட்டாள்
ஆனால்---
என்னைப் போல்
என் பிள்ளைகளும்
அவர்களின் பிள்ளைகளும்
புனிதங்களிலிருந்து
புதிது புதிதாய்
கற்றுக் கொள்வர்

தேடலுடன்...

பறந்தது சிறகசைத்து
என்
முதற் பத்து வருடங்கள்
வண்ணத்துப் பூச்சியின் வாழ்வாய்....

அலைந்தது திசையின்றி
என்
இரண்டாவது பத்துக்கள்
பொய்மைகளே உண்மைகளாய்...
போர்வைகளே நிஜங்களாய்...
வாடகைக் கூடுகளே எனது கூடுகளாய்;...

உருண்டது முனைப்புடன்
என்
மூன்றாவது பத்துக்கள்
சுமைகளின் அழுத்தங்களுக்குள்
தப்பிப் பிழைத்தலுக்கான
உபாயங்களைத் தேடுவதில்...

கழிகின்றது மெல்ல மெல்ல
என்
நாலாவது பத்துக்கள்
ஒவ்வாமைகளை விலக்கிக் கொள்வதில்...
ஒத்ததுகளைப் பிணைத்துக் கொள்வதில்
எனக்குள் என்னைத் தேடுவதில்...
எனக்கென்று ஒரு கூடு கட்டுவதில்...

உழைத்துக் களைத்த போது
மடியில் தாங்கவும்
உணர்வில் களைத்த போது
மனதில் ஏந்தவும்
எனக்காயும் தனக்காயும்
என்னுள் நுழையவும்
எனக்கென்று ஒரு துணையைத் தேடுவதில்...

கழற்றும் நாளுக்காய்...

தனக்கு
ஒரே புழுக்கமாய் இருப்பதாய்
அவள் தான் சொல்கிறாள்
கழற்றிவிடு
உன் போர்வைகளை என்றேன்
உதடுகளின் சிரிப்பில்
உண்மை வலி இருந்தது.
அடக்கம் போனதென்று
அம்மா பாய்வாளாம்---
தெருவில் தலைகாட்ட வழியில்லை என்று
தம்பி குதிப்பானாம்---
வேலை செய்யும் இடத்தில் கூட
வேதம் மாறவில்லையாம்---
சற்று நேரம் கழற்றி வைக்க
இருட்டுக் கூட
தன் பக்கம் இல்லை என்ற
அவள் குமுறலில் சிந்திய
நீர்த்திவலைகள்
நிலம் நோக்கிய விழிகளிலிருந்து
மண்ணை முத்தமிட்டன.

மனதின் மூலையில்
சிறு ஒளிக்கீற்று---
வண்ண வண்ணமாய்---
வகைவகையாய்---
போர்த்திக் கொண்டு
புழுக்கமே புண்ணியம் என்றானோர்க்குள்ளும்---
புழுக்கத்தின் காரணம் புரியாமல் தவிப்போர்க்குள்ளும்---
புழுக்கம் போர்வைகளால் தான்
என்பதை
அவள் உணர்ந்து கொண்டதற்காய்----


நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
போர்வைகளை
அவளாகவே கழற்றும் நாளுக்காய்---