Tuesday, February 04, 2014

தலையை நிமிர்த்தாமலே தலைவிதியை நோகலாமோ?



நாம்...

மனிதன் - தனித்து வாழ முடியாத ஒரு சமூகப்பிராணி. தான் வாழும் சூழல்களுக்கு ஏற்பத் தன்னை சரிசெய்து கொள்ளாத எதுவுமே இவ்வுலகில் நிலைத்து நிற்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து அதற்கமைய தன்னை, தனது குடும்பத்தை, அயலவனை, நண்பனை, இச்சமூகத்தை, ஏன் இவ்வுலகத்தையே சரிவரப் புரிந்து அதனுடன் இணைந்து வாழ வேண்டியவன். தனக்கெனச் சிறப்பாக அமைந்த பகுத்தறிவின் துணைகொண்டு இயற்கையையே போட்டிக்கழைத்து அளப்பரிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருப்பவன். அன்பு, நட்பு, காதல், பாசம், மரியாதை, பக்தி என்ற உயரிய பண்புகளைத் தன்னகத்தே கொண்டமைந்தவன். அதேநேரம் அச்சம், கோபம், வெறுப்பு, குரோதம் போன்ற கீழ்த்தர உணர்ச்சிகளுக்கும் சுலபமாக ஆட்படுபவன். சிறுமுகமலர்ச்சியில், கண்களின் பாவத்தில், இலேசான தலையசைப்பில் கூட தனது மன உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தத் தெரிந்தவன். தனக்கென்றே ஒரு தனித்துவத்தை, குணவியல்புகளை, விருப்பு வெறுப்புக்களைக் கொண்டமைந்தவன்.


எமது பாதை...  

வாழ்க்கைப்பாதை மேடு பள்ளம் நிறைந்தது. கற்களும், முட்களும் நிரம்பியது. இவ்வுலகில் நிலைத்து வாழ்வதற்கு இப்பாதையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுடன் இயைந்து, அறிஞர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், கள்ளர், பொய்யர், கொலைஞர். கோழைகள் என்ற பலதரப்பட்ட மனித ஜீவன்களைக் கடந்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்ல வேண்டும். நேரிய வழியில் நீதி, அன்பு, ஒழுக்கம் போன்றவற்றைப் பின்பற்றி தனது வாழ்க்கைப் பயணத்தின் இறுதிக் குறிக்கோளை அடைய விரும்பும் மனிதனுக்குத் தேவைப்படுபவை தன்னம்பிக்கை, திறமை, நிதானம் என்;ற மூன்று பண்புகளும் தான். வாழ்க்கைப் பாதையின் அனைத்துச் சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய மனோபலத்தைப் பெறுவதற்கு எமக்கு உதவும் இந்தப் பண்புகள் மனித ஆளுமையை விருத்தி செய்வதன் மூலமே பெறப்பட முடியும்.

ஆளுமை என்பது...

நல்ல தோற்ற அமைவு, உளப்பக்குவம், உயரிய நடத்தை என்ற பண்புகளின் தொகுப்புத்தான் ஆளுமை எனப்படுவது. எம்மைச் சூழ இருப்பவர்களை எமது தோற்றத்தினால் எமது உயரிய பண்பினால், எமது செயல்களினால் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், எமது சிந்தனைகளை அவர்கள் ஏற்று, அதனை மதித்து நடக்கத் தூண்டும் ஆற்றல். இது தான் மனித ஆளுமை. மனித ஆளுமையின் அதி முக்கிய அம்சமாக கருதப்படும் எமது தோற்ற அமைவு எம்முன்னே இருப்பவரை எம்மை நோக்கி ஈர்ப்பதற்கோ, எமது கருத்துக்கள் மூலம் அவர்களில் தாக்கம் விளைவிப்பதற்கோ எமக்கு அனுசரணையாகவுள்ளது. ஆளுமையுடன்கூடிய எமது தோற்றம்தான் நிமிர்ந்த நடை, நேரியபார்வை, அமைதியும் எளிமையும் இணைந்த தோற்றம், ஆழமான பேச்சு, இவைதான் ஆளுமையின் வெளிப்பாடுகள். ஆளுமை என்பது அழகிய தோற்றம் என்ற ஒரு தவறான சிந்தனை எம்மவரிடையே, குறிப்பாக பெண்களிடையே காணப்படுகிறது.

அழகு என்பது...

அழகு வேறு ஆளுமை வேறு. அங்கங்கள் அதற்குரிய லட்சணங்களுடன் அமைந்திருத்தல் அழகு என கூறப்படுகிறது. பிறைநுதல், கயல்விழி, சங்குக் கழுத்து, நேரிய நாசி, நீண்ட கூந்தல் என்று அழகை வர்ணிப்பவர்கள் அழகுக்கு இலக்கணம் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் காண்பவர் கருத்தைக் கவர்வதும் மெய்மறந்து அதில் லயிப்பதும் அழகின் பண்புகள். மனிதனின் பார்வைக்குப்பார்வை அழகு என்ற அம்சம் வேறுபட்டது. ஒருவருக்கு அழகானதாகத் தெரிவது இன்னொருவருக்கு அவலட்சணமாக இருக்கிறது. சிலருக்கு சிவந்த நிறம் அழகாகத் தெரிந்தால், சிலருக்கு கரிய கட்டுடல் அழகாகத் தெரிகிறது. சிலருக்கு சிரிப்பு அழகென்றால் சிலருக்கு சிரிக்கும் கண்கள் அதைவிட அழகு. சிலருக்கு இடை அழகென்றால் சிலருக்கு எடுப்பான நடை அழகு. எல்லா அழகும் ஒருவரிடம் பொருந்தி இருப்பதில்லை. அவ்வாறு பொருத்தி இருப்பவர்களும் உள்ளத்தளவில் தலைக்கனம் பிடித்தவர்களாக இருந்தால் அங்கு அக அழகு புற அழகை மறைத்து விடுகிறது. அதுபோல் அவலட்சணமான முகங்கூட மென்மையும், அமைதியும், அழகும்மிக்க பேச்சினால் பல அழகிகளையும், அழகர்களையும் சுண்டி இழுத்துவிடுகின்றது. எம்முன் நடமாடும் எதிரும் புதிருமான தோற்றங்கொண்ட எத்தனையோ காதல் தம்பதியர் இதற்கு எடுத்துக்காட்டு. அழகின் ரசனை வெறும் கண்களிலோ அல்லது அவயவங்களிலோ அல்ல. மாறாக அது ஆழமான உறவுகளில் உள்ளத் தூய்மையில் தங்கியுள்ளது. எனவே 'அழகு என்பது இது தான்' என எதையுமே வரையறுத்துக் கூறிவிட முடியாது. 'எது எமக்கு நிறைவையும் சந்தோசத்தையும் தருகின்றதோ அதுதான் அழகு' என்கிறார் ஒரு ஆங்கில கவிஞர். ஆழமான அன்பு அவலட்சணத்தையும் கூட அழகாக்கிவிடும்.

மாறாக ஆளுமை என்பது அங்கங்களின் அமைப்பைவிட அதன் சரியான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டது. ஆறடி உயரம்தான் அழகென்றால் ஐந்தடி உயரத்திலுங்கூட நிமிர்ந்து கம்பீரமாக நிற்கமுனைவது ஆளுமை. உதடுகள் அழகற்றவையாக இருப்பினும் தனது மென்மையான அறிவுபூர்வமான பேச்சினால் அடுத்தவரின் கவனத்தைத் தன்மீது திருப்ப முனைவது ஆளுமை. தமது ஆளுமை மூலம் வரலாறு படைத்த எத்தனையோ அவலட்சண முகங்களை வரலாறு எமக்குக் காட்டியிருக்கிறது. அழகைக்காட்டி வியாபாரந்தான் செய்ய முடியுமே தவிர, சாதனை படைக்க முடியாது.

எமது இலக்கு...

மனித சமுதாயத்தின்; இறுதி இலக்கு தான் விரும்பியதைப் பெறுதல், இவ்வுலகிலுள்ள படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் மாத்திரமே இறுதி இலக்கை அடைபவன். நாம் எப்படி வாழ விரும்புகின்றோமோ, அதன்படியே வாழ்க்கையும் அமையும். நாம் விரும்பியதை அடையும் போது அதன் மூலம் நிறைவும் மகிழ்வும் கிடைக்கிறது. அதையும் நேரியவழியில் அடைய எத்தனித்து, அதனால் அளப்பரிய இடர்களை எதிர்கொண்டு, இடர்களைச் சமாளிக்கும் தன்னம்பிக்கை, துணிவு என்பவற்றைப் பெற்று, அதன்மூலம் எமக்கென ஒரு ஆளுமையை விருத்தி செய்து நாம் விரும்பிய இலக்கை அடையும் போது எமது மகிழ்ச்சி இரட்டிப்பாகின்றது. மனிதவாழ்வின் நிறைவானது மனித ஆளுமையில்தான் தங்கியிருக்கின்றதேயன்றி அழகில் அல்ல. ஆனால் அடுத்தவர் கவனத்தைத் தம்மீது திருப்ப அழகை ஆயுதமாகப் பயன்படுத்தும் மனிதர்கள் குறிப்பாக பெண்கள் தமது பாதையில் அதிகமான தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இலக்கின் தடைகள்... 

உடல் அழகுக்கும் ஆளுமைக்கும் இடையிலான வேறுபாட்டை சரிவரப் புரிந்து கொள்ளாது அடுத்தவரின் கவனத்தைத் தம்மீது திருப்ப தமது அழகை ஆயுதமாக பயன்படுத்துபவர் யார்? பெண்கள் சமூகத்தை நோக்கித்தான் இந்த வினா எழுப்பப்படுகின்றது. காலம் காலமாகப் பெண்களை அழகுப் பதுமைகளாக்கி வேடிக்கை பார்த்த ஆண்களின் தனித்துவப் பண்பாகவே இந்த ஆளுமை என்ற அம்சம் நோக்கப்பட்டது. அல்லும் பகலும் ஆண்களை மகிழ்விப்பது எப்படி என்ற கலையைத்தான் முதலாளித்துவப் பெண்களுக்குப் பயிற்றுவித்ததேயன்றி அவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து, தனித்து இயங்க அவர்களை அது அனுமதிக்கவில்லை. பெண்களுங்கூட தமது தனித்துவத்தை, அடையாளத்தை இழந்து, நாம் அடக்கப்படுகின்றோம் என்ற உண்மையைக்கூட அறிய முடியாத அல்லது அறியவிரும்பாதவர்களாக, போகப் பொருளாக மட்டுமே பயன்பட்டார்கள். ஒருவேளை சோற்றுக்குக்கூட அடுத்தவரை நம்பியிருக்குமாறு பெண்களை வளர்த்தமை ஆயிரமாயிரம் அழகுப் பதுமைகளின் முன்பு போட்டி போட்டுக்கொண்டு கணவனின் கருத்தைக் கவர்வதற்குத் தமது அழகை ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவல நிலைக்குப் பெண்களை இட்டுச்சென்றது. அடுத்த பெண்களைக் கணவன் நாடினால் தமது வாழ்விற்கே ஆபத்து என உணர்ந்து அழகினால் அவனை – சிறை பிடிக்கும் எண்ணத்தைப் பெண்களில் வேரூன்றச் செய்தது. அறிவும் ஆளுமையும் நிறைந்த பல அரசகுல மங்கையரையும், பெண் பாவலர்களையும் வரலாறு எமக்குக் கோடிகாட்டி நிற்கின்றதெனினும் அவை அங்கங்கே இலைமறை காயாக இருந்த ஒரு சில நிகழ்வுகள் மட்டும் தான். ஆணைக் கவரும் போட்டியில் தங்கள் அழகை மிகைப்படுத்திக் காட்டும் கலையில் பெண்களின் கவனமும், அலங்காரப் பதுமைகளாக்கும் ஆண்களின் ஆர்வமும் இணைந்து –அலங்காரக்கலையில் பெண்களைத் தேர்ந்த விற்பன்னர்களாக்கிவிட்டது. வாழ்க்கையில் அடுத்தவரின் கவனத்தை அழகால், அலங்காரத்தால், ஆடை அணிகளால் மட்டுமே கவர நினைக்கும் ஓர் இழிவான, விபச்சாரத்திற் கொப்பான மனோநிலையை மிக ஆழமாகப் பெண் மனத்தில் வேரோடுவதற்கு முதலாளித்துவம் வழி செய்துவிட்டது.

ஆனால் இன்றைய காலம் பெண்களுடைய அறிவுக்கண் திறந்து அவர்கள் தமக்கென ஒரு பாதையை வகுத்து வீறுநடை போடுங்காலம். அடுக்களையே வேதம் என்றிருந்தவர்கள் அவனியில் பவனி வரும் காலம். அழகே உலகம் என்றிருந்தவர்கள் அகிலத்தையே மாற்றியமைப்பதில் வரலாறு படைக்கும் காலம். முன்னேற்றப் பாதைக்கு அழகையும், ஆடை அலங்காரங்களையும் ஒருபுறம் வைத்;துவிட்டு ஆளுமையை அடித்தளமாக்கும் காலம். ஆனால் அந்தோ பரிதாபம்! முதலாளித்துவத்தின் எச்ச சொச்சங்கள் இன்னமும் பெண்களை விட்டுப் போகவில்லை. தனது திட்டத்தை மிக ஆழமாகவே பெண்கள் மனத்தில் பரம்பரை பரம்பரையாக அது பதித்துவிட்டது.  ஆளுமையைக் காட்டும் இடங்களில் கூட இந்த அலங்காரங்கள் பெண்களின்; திறமையை, ஆளுமையை குழியில் போட்டு மூடிவிடுகின்றன. ஏன்?

அடுத்தவர் பார்வையில்...  

இன்றும் நீங்கள் அழகுப்பதுமைகள். அறியாமை என்னும் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு எங்கே, ஏன் போகின்றோம் என எண்ணிப்பார்க்கக்கூட முனையாமல் ஆண்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்கள். அறிவுக்கண் திறந்து அறிவுப்பாதையில் நடைபயிலத் தொடங்குபவர் கூட அறியாமையில்; எம்மை உழலவைத்த அழகுக்கவசங்களை இன்னமும் கைவிட விருப்பமின்றி அதனையும் அணிந்து கொண்டே நடைபயில முனைபவர்கள். ஆளுமையை வெளிக்கொணர வேண்டிய முக்கிய இடங்களில்கூட கண்ணைப்பறிக்கும் அலங்காரங்களுடன் நின்று 'பெட்டைக்குட்டி கதைக்கவும் பழகிட்டுது' என்று அடுத்தவரின்  ஏளனத்திற்கு அடிக்கடி இலக்காகின்றவர்கள், இன்றுவரை அழகுப்பதுமைகளாகவே உங்களைப் பார்த்துப் பழகிவிட்ட ஆணின் கண்களை எமது தோற்றத்தால், உயரிய நடத்தையால் மாற்றி அவர்களுக்கு அறிவுத்தெளிவை ஊட்டுவதற்குப் பதில் எமது அழகை இன்னமும் ரசிக்க வழிசெய்து கொடுப்பவர்கள். வீட்டுக்குள் இருந்த உங்கள் அழகை தூரத்தே மட்டும் பார்த்து பெருமூச்சு விட்ட ஆண் இனத்திற்கு 'கருத்துச் சொல்கின்றேன் பேர்வழி' என்று பெண் விடுதலை உணர்வைச் சாட்டாக வைத்;து கிட்ட நெருங்கி வந்து உங்கள் அழகை கிட்ட ரசிக்கும் பாக்கியத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் பெண் விடுதலை என்ற மேன்மையான உணர்வையே கொச்சப்படுத்துபவர்கள்.


உங்கள் ஆற்றல்... 

தமது ஆற்றல் எத்தகையது என்பதை இன்னமுங்கூட பெண்கள் அறியவில்லையா? இவ்வுலகின் ஆதார மையம், அச்சாணி பெண்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரியாதா? எமது அறிவு, எமது திறமை, எமது மனோதிடம் என்பன உலகத்தை எமது காலடியில் தலைசாய்க்கக்கூடிய ஆளுமையை எமக்கு அளித்திருக்கும் போது கேவலம் அழகை வியாபாரமாக்கி அடுத்தவரை கவரநினைக்கும் இழிநிலையை முதலாளித்துவம் எம்மில் பதித்துவிட்டது என இன்னமுமே, உணரமுடியாத அறிவிலிகள் தான் பெண்களா?

உங்கள் பணி...

இன்றைய உலக அமைப்பில் பெண்கள் வகிக்கும் பணி ஆணைவிடவும் அளப்பரியது. பெண்மைக்கே உரிய சிறப்பம்சங்களான அன்பு, கருணை, பாசம், இரக்கம், தாய்மை என்பன இச்சமுதாய முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்து அதைக் கைவிட்டுவிடாமல் அதேசமயம் ஆணுக்கு நிகராக அல்லது அதையும்விட அதிகமாக அறிவுத்துறையில், நிர்வாகப்பதவியில், தொழில்நுட்பத்திறனில், உடற்பலத்தை காண்பிக்கும் யுத்தகளத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது பெண்ணினம். ஆணின் பாதை ஒரே சீரான பாதை. ஆனால் பெண் செல்லும் பாதையோ பலதரப்பட்ட ஆற்றலும் தேவைப்படும் பாதை.

எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏற்ப தமது ஆளுமைத் திறனையும் மாற்றி வைக்கும் தேவை பெண்ணிற்கு உண்டு. குடும்பச்சுமை, வேலைச்சுமை என்ற இரட்டைச்சுமையில் திண்டாடும் இவர்களுக்கு ஆணைவிடவும் அதிகளவு ஆளுமை அவசியம். அதுமட்டுமல்ல. இதுவரை ஆணுக்கு மட்டுமே உரியதாக இருந்த ஆளுமைப்பண்பை பெண்கள் புதிதாக உருவாக்கி அதை தம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அனைத்துச் சுமைகளையும் தாங்கி நேரம் இல்லாது சிரமப்படும் பெண்கள் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் வீணாக்கக் கூடாது. இதுவரை எந்தக் கோலத்தில் நீங்கள் மற்றவர்களால் பார்க்கப்பட்டீர்களோ அதிலிருந்து அவர்களை மாற்ற உழைக்க வேண்டும். அன்பு சொரியவேண்டிய நேரத்தில் அன்பைக் காட்டி, ஆளுமையைக் காட்டவேண்டிய இடத்தில் ஆளுமையைக் காட்டி, அன்பை சொரிபவர்களாக, அழுகுப் பதுமைகளாக, ஆறுதலளிப்பவளாக, ஆலோசனை தெரிவிப்பவளாக, அடக்கி அதிகாரம் செய்பவளாக எல்லாவற்றிலும் மேலாக உலகிற்கு உயிர் கொடுப்பவளாக, சந்ததி விருத்திக்கு உதவுபவளாக, அடக்குமுறைக்கெதிராக, கிளர்த்தெழுந்து ஆயுதம் தாங்குபவளாக, கணத்திற்குக்கணம் ஆளுமைத்திறன்களை மாற்றியமைத்து சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அளப்பரிய பணி உங்களுக்குண்டு. ஆனால் பெண்களோ.... இன்னமும் உதட்டு அலங்காரங்களி;ல்தான் முழுநேரத்தையும் வீணாக்குகின்றார்கள். முக அழகுக்கு மஞ்சளா, எலுமிச்சம்பழமா, கிறீமா, நக அழகுக்கு மருதாணியா, கியூடெக்ஸா, உடல் அழகுக்கு சேலையா, பாவாடை சட்டையா, என்ற விவாதத்திலேயே இவர்களின் முழுப்பொழுதும் போகின்றது. வேலையற்று வீட்டிலிருக்கும் பெண் என்றாலும் சரி, வேலைக்குப் போகும் படித்த பெண் என்றாலும் சரி இந்த நகப்பூச்சுப்பவுடர் கலாச்சாரத்திலோ அல்லது ஆடை அணிகலன்களிலோதான் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அறிவும் ஆளுமையும் பரிணமிக்க வேண்டிய கல்விக்கூடங்கள், நிர்வாகத்துறைகள், வேலைத்தளங்கள், போன்றவற்றையெல்லாம் அழகு வியாபார நிலையங்கள் ஆக்கியிருப்பது பெண்கள் சமுதாயந்தான் என்பது எத்தனை வேதனைக்கும் வெட்கத்திற்குமுரிய ஓர் உண்மைநிலை.

கல்விக்கூடங்களில்...

உங்கள் அறிவுக்கண்களால் மாணவர்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கும் இடம் வகுப்பறை. நாளைய சமூகத்தை வடிவமைக்கப் போகும் சிற்பிகளை தயார்படுத்தும் ஓர்; உன்னத இடம் அது. அறிவுக் கவசமிட்டு ஆளுமையின் மூலம் மாணவர்களை உங்களை நோக்கி கவர்ந்திழுத்து உங்கள்; தோற்றம், ஒழுக்கம், செயற்பாடுமூலம் உங்களில் மரியாதையை, மதிப்பை, பக்தியை ஏற்படுத்தி உங்கள் அறிவை அவர்களில் பதிய வைக்கும் உயர்வான இடம். தனது குருவிடம் பக்தியும், மரியாதையும், கொள்வதற்கு கண்;ணைப்பறிக்கும் ஆடையும், கழுத்துத் தெரியும் சட்டையும், அமைதியைப் பறிக்கும் கொலுசுச்சத்தமும் உதவுமா? உங்கள் அழகை மற்றவர்கள் ரசிப்பதற்கான இடம் வகுப்பறையல்ல. உங்கள் அறிவு விருந்தை சுவைப்பதற்கான இடம் அது. உங்கள் ஆடையின், நகப்பூச்சின், முகப்பவுடரின், ஆபரணங்களின் தரத்தை அலசும் இடம் அதுவல்ல. உங்கள் அறிவை, ஆளுமையை, எளிமையைக் கண்டு வியந்து போற்றி உங்கள் மீது மதிப்புக்கொள்ள வைக்கும் இடம் அது. ஆனால் உங்களில் சிலர் செய்வது, அறிவைப் பரப்பவேண்டிய இடத்தில் கழுத்தழகை, இடுப்பழகைக் காட்டும் இடமாக மாற்றிவிட்டார்களே? வெள்ளைச்சீருடை, ஒரே மாதிரியான தலையலங்காரம், ஆபரணத்தடை என்று மாணவர்களின் புறத்தூய்மைக்கு சட்டம்போட்டு நடைமுறைப்படுத்தும் நீங்கள் உங்கள் அலங்காரத்தால், டாம்பீகத்தால், அகத்தூய்மையை அழுக்காக்கி விடுகின்றீர்களே? இச்சமூகத்திற்கு எனது பணி, கடமை என்ன என்று சிந்தனை செய்யவேண்டிய இளம் மனங்களில் அழகுப் பொருட்களிலும், ஆபரணங்களிலும் மூழ்கிக் கிடக்கும் ஆவலை, ஏக்கத்தை விதைத்து விடுகின்றீர்களே? ஏழைகளின் மத்தியில் இயலாமையை, விரக்தியை, சோர்வை தூண்டுகின்றீர்களே?

வேலைத்தளங்களில்... 

அறிவும் ஆளுமையும் போட்டி போட்டு பரிணமிக்க வேண்டிய இடம். நிர்வாகப் பதவிகள், நிதானமான, கம்பீரம் பொருந்திய உங்களி;ன் காலடிச் சத்தத்தில், ஆழ்ந்த அமைதியான பார்வையில், உதடுபிரியாத புன்னகையில், இலேசான தலையசைப்பில் ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டி இழுக்கும் ஆற்றல் பெற்ற நீங்கள் கேவலம் கண்ணைப்பறிக்கும் ஆடையும், கழுத்தை நிறைக்கும் ஆபரணமுமாக உலாவருகின்றீர்கள். ஆழ்ந்த நோக்கு, அளவான பேச்சு, அறிவார்ந்த கருத்து என்பவற்றின் மூலம் உங்களின் கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் மதிப்பையும், மரியாதையும் பெற வேண்டிய நீங்கள், உங்கள் நகப்பூச்சின் தரத்தை, ஆபரணங்களின் கனபரிமாணத்தை, வாசனைத் திரவியங்களின் உற்பத்தி மையத்தை ஆராயும் இடமாக தயார்படுத்துகின்றீர்கள். உங்களைப் போகவிட்டு முதுகுக்குப் பின்னால் உங்களை பெண்களே விமர்சிக்கும் இழிநிலைக்கு ஆளாகின்றீர்கள். உங்களின் தோற்றத்தைப் பார்த்து பெண்களே அறிவுசார் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தயங்குவது உங்களுக்குப் புரியவில்லை. வேலைத்தளங்களில் தேவைப்படுவது நிர்வாகத்திறன். மனிதனின் வெளித்தோற்ற அலங்காரங்களையும் விட, மனித ஆளுமையை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் இங்கு பிரதானமாகத் தேவைப்படுகின்றது.

அழகு விம்பம் ஒன்றுக்குள் தனக்கு சமமான வகையில் அல்லது தன்னை விடவும் சிறந்தமுறையில் கருத்துக்களை உருவாக்கும் திறன் இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கவே தயங்கும் இச்சமூகத்தின் மனத்தில் உங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிப்பதற்கு முதலில் உங்கள் தோற்றம் மாறவேண்டும். இரசனைக்கு இடமுள்ளதாக இல்லாது கம்பீரமும், ஆளுமையும் வெளித்தெரியும் வகையில் உங்கள் வெளித்தோற்றம் அமைய வேண்டும்.

பொது இடங்களில்...

உங்கள் அலங்காரத்தையும், டாம்பீகத்தையும் காட்டுவதற்கு மரணவீடுகள், மருத்துவ மனைகள், அநாதை இல்லங்கள் என்பவற்றைக்கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை. கையை இழந்து கிடப்பவனிடமா உங்கள் கைவளையலையும்;, மோதிரத்தையும் காட்டுவது. ஒரு வேளை சோற்றுக்கே ஆலாய்ப் பறக்கும் குடும்பத்தில் உங்கள் அழகு சாதனங்களின், ஆபரணங்களின் விளம்பரங்கள் ஒன்றில் உங்கள் மீது அவர்களை வெறுப்புக் கொள்ள வைக்கின்றது. அல்லது தமது இயலாமை, ஏக்கம், விரக்தி என்பவற்றின் மூலம் தங்கள் மீதே வெறுப்புக் கொள்ள வைத்து சமுதாய சீர்கேடுகளை உருவாக்குகிறது.


அழகாக இருப்பதே குற்றமா...?

அவ்வாறாயின் அழகாக இருப்பதே குற்றமா? மனிதனுக்கு அழகுணர்ச்சியே இருக்கக் கூடாதா? என நீங்கள் பொருமுவது கேட்கிறது. அழகுணர்ச்சி என்பது மனித முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது. மனித ஜீவன்கள் அனைத்திற்குமே பொதுவானது. ஒவ்வொரு ஜீவனிடமுமே அழகுணர்ச்சியின் தன்மை வேறுபட்டது. நாம் முகஞ்சுழிக்கும் பழங்குடி மக்களின் ஆடை அணிகலன்களோ அல்லது எம்மைத் திகைக்க வைக்கும் ஆபிரிக்க குடிகளின் மூக்கு, காது, கழுத்தில் தொங்கும் பிரமாண்டமான வளையங்களோ எமக்கு புரிய வைப்பது எதுவெனில் அழகுணர்ச்சி என்பது இனத்திற்கு இனம், மனத்திற்கு மனம் வேறுபட்டது என்பதைத்தான்.

இன்றைய உலகின் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சிக்கு மனித வாழ்க்கையின் அளப்பரிய தேவைகள் எந்தளவிற்கு காரணமாக இருந்ததோ அதைவிட அதிகம் காரணமாக இருந்தது இந்த அழகுணர்;ச்சிதான். இயற்கையின் அழகை கண்ணால் பருகியதுடன் நிற்காது அதை நிரந்தரமாக்கிப் பார்க்க எழுந்தவைதான் ஓவிய, சிற்ப, புகைப்பட கலைகள். வெப்பம் குளிரிலிருந்து எம்மைப் பாதுகாக்க மட்டும் தான் வீடு என்றால் இலட்சக்கணக்கில் உழைப்பின் பெரும்பகுதியை மனிதன் வீட்டிற்குள் முடக்கியிருப்பானா? இருப்பதற்கு மட்டுந்தான் இருக்கை என மனிதன் நினைத்திருந்தால் இன்று விதம் விதமான சோபாக்களை நாம் கண்டிருக்க முடியுமா?

அழகுக்கு அழகூட்டுவது அலங்காரம். நீண்ட கூந்தல், அழகு என்பதற்காக அதனை விரித்துவிட்டுத் திரியமுடியாது. அழகான உடல் என்பதற்காக அசுத்தமாக, ஆடை இன்றி இருக்க முடியாது. கறிக்கு வாசனை ஊட்டும் கறிவேப்பிலை போன்றதுதான் இந்த அலங்காரம். ஆனால் இன்று நாம் காண்பது கறிவேப்பிலையே கறியாக மாறுவதைத்தான். அளவுடன் இருக்கும்போது அழகுக்கு அழகு செய்யும் ஆடை அலங்காரங்களால் அளவு மீறும்போது அவை மனித ஆளுமையைச் சிதைத்து முன்னேற்றத்தின் தடைக்கற்களாக அமைந்துவிடுகின்றன.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் உலகத்தை ஆக்கப்பாதையில் இட்டுச் செல்வதற்கென மனிதனால் மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு கட்டத்தின்பின் உலகையே அழிப்பவையாக மாறிக்கொண்டிருக்கின்றன. மானுடத்தைப் போதித்த இலக்கியங்கள் இன்று வக்கிர உணர்வைத் தூண்டுவதற்கும் படைக்கப் படுகின்றன. அதுபோல்தான் மனிதனை மேம்படுத்தும் அழகுணர்ச்சியுங்கூட காலமாற்றத்தால் விகாரமடைந்து தனது எளிமையை, தூய்மையை மேன்மையை மறந்து பகட்டு ஆடம்பரப் போக்குக்குத் தன்னைப் பலிகொடுத்து நிற்கின்றது.

அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதுதான் பெண்ணின் நோக்கம் என்றால் ஆடம்பரத்தாலும், அலங்காரத்தாலும் அதைச் சாதிக்க முடியாது. மனிதரை ஈர்ப்பது எளிமையான அழகு. நிலவும், மலரும், அருவிகளும் மனித மனத்தை ஆக்கிரமித்த அளவிற்கு மனிதனின் அளப்பரிய கண்டுபிடிப்புக்களான வானுயர்ந்த கோபுரங்களோ, மாடிக் கட்டடங்களோ ஆக்கிரமிக்கவில்லை. மலரின் மென்மை, நிலவின் குளிர்மை, மரங்களின் பசுமை, மழலைகளின் பேச்சு போன்றவை மனிதனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது போல் எதுவுமே கொடுக்கவில்லை. கண்ணைப் பறிக்கும் இரத்தச் சிவப்புநிற முள்முருக்கம்பூ கூட எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆனால் மென்மை, தூய்மை, வாசனை மிக்க மல்லிகை மலர் மனித மனத்தை ஆக்கிரமித்தளவிற்கு இதனால் முடியவில்லையே ஏன்?

அதுபோல்தான் உங்கள் அக அழகும், புற அழகும் இணைந்துதான் மனிதனை உங்களால் ஆக்கிரமிக்க, ஆளுமைப்படுத்த முடியும் என்பதை பெண்ணினம் புரிந்து கொள்வது அவசியம். மனித வாழ்க்கைப் பாதையில் இச்சைகளுக்கு மனிதன் அடிமையாகும் ஒரு குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே பெண்கள் தமது அழகால், அலங்காரத்தால் அவனை ஆட்கொள்ள முடியும் அல்லது மேன்மையான எண்ணம் எதுவுமற்ற, பாலியல் வெறிகொண்டவர்களிடம் மட்டுமே உங்கள் அழகும் அலங்காரமும் சாதனைபுரிய முடியும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்து அதன்படி நடக்க விழையும் மனிதனுக்குத் தேவைப்படுவது அறிவும், ஆலோசனையும் மட்டுமே? ஆண்களை கவனித்துப் பாருங்கள். அறிவும் ஆளுமையும்மிக்க பெண்ணிடம் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டையும், அவர்கள் வழங்கும் மரியாதையையும். அழகுதான் வாழ்க்கைக்கு அடிப்படையெனில், இவ்வுலகில் அழகில் சிறந்த பலருக்கு ஏன் வாழ்க்கை இனி;க்கவில்லை? என்பதை பெண் சமூகம் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை?

முடிவாக...    

'தனது மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களை மனிதனால் மாற்ற முடியும்' என்பதே மனித வர்க்கத்தின் முதன்மையானதும், முதல்தரமானதுமான கண்டுபிடிப்பாகும்' என்கிறார் உளவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ். உங்களை மாற்றியமைக்க உங்களால் முடியும்.

உங்களின் ஆற்றலை வீணான அலங்காரங்களில் செலவிடாது ஆளுமையை விருத்தி செய்ய பயன்படுத்துங்கள். உங்கள் உன்னத திறமைகளால், இவ்வுலகத்தை வழிநடத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அழகு சாதனங்கள்;, ஆடம்பரப் பொருட்களும், முதலாளித்துவம் உங்களுக்கு இட்ட அடிமைத்தளைகள். உங்களை அடிமைச்சிறையில் உழலவைக்கும் விலங்குகளை உங்களின் விருப்புக்குரிய பொருளாக மாற்றி நீங்களே உங்களுக்கு விலங்குகளை பூட்டிக்கொள்ளும்படி முதலாளித்துவம் எவ்வளவு திறனுடன் செயல்பட்டிருக்கிறது. நாடு விடுதலையடைய நீங்கள் விடுதலையடைய வேண்டும். நீங்கள் அடுத்தவர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டுமெனில் முதலில் உங்களிடமிருந்து விடுதலையடைய முயற்சிக்க வேண்டும்.

1998














No comments: