Tuesday, February 04, 2014

தமிழ்ச் சமூகமும் பெண்களும் அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகள் வழியான சமூக நோக்கு




சமூகம்

மனித வாழ்வின் இன்றைய போக்கைத் தர்க்கரீதியில் விளங்கிக்கொள்ள விழைபவர்கள் அல்லது வாழ்வில் எதிர்கொள்ளும் தனிநபர் பிரச்சினைகளுக்கோ அல்லது சமூகப்பிரச்சனைகளுக்கோ அறிவியல்ரீதியில் தீர்வுகண்டு சமூக நலனுக்கு உழைக்க முனைபவர்கள் அனைவருக்குமே சமூகம் என்ற கருத்துநிலை தொடர்பான தெளிவான புரிதல் மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகள், பகைமைகள், போராட்டங்கள் பெரிதாக இல்லாமல், ஒட்டுமொத்த சமூகமுமே ஒரு குடும்பமாக இருந்த ஆதிகால சாதாரண சமூக அமைப்புக்கோ அல்லது ஆபிரிக்க, அமெரிக்க, தென் மற்றும் தென்கிழக்காசியப் பிரதேசங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றும் நிலைகொண்டிருக்கும் ஆதிகால சமூகங்களின் எச்சங்களான பழங்குடிச் சமூகங்களுக்கோ பொருந்தக் கூடிய 'கூடிவாழும் மக்கள் குழு' என்ற சுருக்கமான வரைவிலக்கணமானது வரலாற்றுப் படிநிலை வளர்ச்சிகளின் ஒத்திசைவுகளையும் முரண்களையும் உள்வாங்கி, மாற்றங்கள்;, அழிவுகள் மற்றும் வளர்ச்சிகளை மாறிமாறிச் சந்தித்து சிக்கல் வாய்ந்த சமூகம் (Complex society) என அழைக்கப்படும் இன்றைய சமூக அமைப்பில் 'தனித்துவ வாழ்விடம், இனம், மதம், நிறம், மொழி, பண்பாட்டு அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களின் அடிப்படையில் தனித்துவமானதாக இருக்கும் அதேசமயம் தொழில்கள், சாதியமைப்பு போன்ற பல உட்பிளவுகளையும் கொண்டிருக்கின்ற, ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழுகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழு' என பரந்து விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்டதாக மாறியிருக்கிறது. எல்லைக்கோடு தெளிவாக இனங்காணப்படக்கூடிய எளிய சாதாரண நிலையிலிருந்து வேகத்தை நோக்கி வேகமாய் ஓடி வேகத்துக்குள் வேகமாய் கரைந்து எங்கே போகின்றோம் என்று நின்று நிதானிக்க வழியின்றி சிந்தைக்குள் நுழைபவற்றையெல்லாம் முன்பின் யோசியாது செயலுக்குட்படுத்தும் துரித மாற்றச் செல்நெறியில் மனித சமூகம் நிலைகொண்டிருக்கிறது.

சமூக அமைப்பும் பெண்களும்

இவ்வுலகில் நிலைகொண்டிருக்கும் அனைத்துச் சமூகங்களும் தேவைகளின் அடிப்படையில் மட்டுமல்ல மனித வேட்கைகளின் வழியாகவும் உருவானதொன்று. இச்சமூக அமைப்புகள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தனித்துவமான வரலாற்றை, பண்பாட்டை, தேசிய அடையாளத்தைக் கொண்டவை. பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் வேறுபட்டவையாக இருப்பது போன்றே இச்சமூகங்களின் தேவைகள், அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகள் என்பவையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. பழமைக்குள் நிற்பவர்கள், முற்றிலும் புதுமைக்குத் தாவியவர்கள், பழமையுமின்றி புதுமையுமின்றி இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள் என முரண்பட்ட மக்கள் கூட்டத்தைக் கொண்டிருக்கும் தற்போதைய சமூக அமைப்பானது தந்தை வழிச் சமூக அமைப்பு (Patriarchal society) ) எனப்படுகிறது. பிறக்கின்ற  குழந்தை தகப்பன் பெயரால் அறியப்படுவதும், குடும்பத்தின் சொத்துகளுக்கு தகப்பனே சொந்தக்காரனாய் இருப்பதும், குடும்ப, சமூக, நாட்டின் வளர்ச்சி தொடர்பான தீர்மானம் எடுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் ஆணின் ஆதிக்கம் இருப்பதும் தந்தைவழிச் சமூக அமைப்பின் ஒரு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். மனிதனின் சிந்தனை, மொழி, நம்பிக்கைகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டங்கள், கட்டியமைக்கும் நிறுவன அமைப்புகள், கலை இலக்கிய வடிவங்கள், தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் இவ்வமைப்பு ஆழவேரோடி இருக்கின்றது.

உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின், இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப் போராடுதல்; மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல். இந்த இரண்டு பணிகளையும் சரிவர ஆற்றுவதற்கு பெண்ணுக்குத் தேவையானது தம்மைத்தாமே பிணைத்துக்கொண்டிருக்கும்; தளைகளிலிருந்து அறிவார்ந்த ரீதியில் விடுபடுதல். அபிவிருத்தியடையவிரும்பும் எந்தவொரு சமூகமும்  அறிவுசார் ரீதியில் தம்மைத் தயார்படுத்தும் பெண்களிடமிருந்தே மேற்குறிப்பட்ட பிரயத்தனங்களை எதிர்பார்க்கும் வாய்ப்புண்டு.

சமூக நிறுவனங்கள்

சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். சமூக அமைப்புகள் ஒவ்வொன்றும்; தனிநபர்களைவிட தமது தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாகத் தனிநபர்களால் தோற்றுவிக்கப்பட்ட, ஒன்றுடனொன்று தங்கியிருக்கும் பல நிறுவனங்களதும் ஆதிக்கத்தில் உள்ளதொன்றாகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். மனிதரின் தேவையைப் பூர்த்தி செய்யவென மனிதரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்கள் இன்று சமூக உறுப்பினர்கள் மீது தமது விருப்பங்களை அமுல்படுத்துகின்ற ஒரு கருவியாக வளர்ந்தது மட்டுமன்றி, இவற்றில் சில தமது சமூகத்தின் பரப்பெல்லைக்கும் அப்பால் சென்று ஏனைய சமூகங்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு பாரிய சக்திகளாகவும் உருவெடுத்திருக்கின்றன.

சமூக  நிறுவனங்களின்  ஆதார (Primary) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே முழுக்க முழுக்க நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை (Intermediate) நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை (Secondary) நிறுவனங்கள் எனக் கூறப்படுகின்றன. கருவறை தொடங்கி கல்லறைவரை மனித வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச்சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச்சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.

தமிழ்ச் சமூகத்தின் அமைப்பு

மனிதன் தனித்த ஒரு அடையாளத்தை கொண்டவனல்ல. தமிழ் மொழியைப் பேசுபவன் என்ற வகையில் தமிழன் அல்லது தமிழச்சி என்ற ஒரு அடையாளத்தை மட்டும் கொண்டு தமிழ் சமூகத்தின் ஒரு ஆணையோ பெண்ணையோ அடையாளப்படுத்திவிடுதல் சாத்தியமல்ல. பிரதேச வேறுபாடு, சாதியினதும் சாதியின் உட்பிரிவுகளதும் வேறுபாடு, வர்க்க வேறுபாடு, மத வேறுபாடு, பால் வேறுபாடு, தொழில் வேறுபாடு என்று பரந்த அடையாளங்களின் வலைப்பின்னலுக்குள்ளே நின்றுகொண்டுதான் ஒரு குறித்த சமூகத்தில் வாழும் மனிதனை அடையாளப்படுத்த முடிகிறது. இதற்கு பத்திரிகையில் வரும் மணமகன் மணமகள் தேவை விளம்பரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

'கொழும்பு இந்து உயர் வேளாள குலத்தைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய தனியார் வங்கியொன்றில் அதிகாரி தரத்தில் தொழில் புரியும் பட்டதாரி மகனுக்கு பெற்றோர் மணமகளை தேடுகின்றனர்.' இதையே சர்வதேசரீதியில் தகவல் இணையம் மூலமாக மணமகள் தேட விழைவோராயின், 'இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் சிறுபான்மை இன' என்ற மேலதிக சொற்றொடரையும் இணைக்க வேண்டியிருக்கும். பெண் என்று வரும்போது தகவல் மேலும் விரிவடைந்து  எடுப்பான தோற்றமும் மெல்லிய உடல்வாகும் வெள்ளை நிறமுடைய அழகும் குடும்பப்பாங்கும் நிறைந்த..............' என்று தொடரும்.

மொழிக் குழுமம் என்ற அடிப்படையில் இலங்கைத் தீவின் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வாழும்; இலங்கைத் தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரை இனங்காண முடியும்.  தமிழ்மொழியைப் பேசியபோதும் பேச்சு வழக்குத் தமிழில் யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்புத்தமிழ், மலையகத்தமிழ், முஸ்லிம் தமிழ் என்று பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட சமூகமாகவே இது காணப்படுகின்றது. மதம் சார்ந்து நோக்கும்போது இந்துசமயம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்பன பிரதான சமயங்களாக பின்பற்றப்படுகின்றன.

சாதியமைப்பு எனப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் உள்ளது போன்று பிராமண சமூகத்தை உள்ளடக்கிய உயர்வகுப்பு, கள்ளர், தேவர் போன்றோரை உள்ளடக்கி பின்தங்கியவகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கிய தலித் எனப்படும் ஒதுக்கப்பட்டோர் என மூன்றுவகையான சாதியமைப்பு நிலைகொண்டிருப்பது போலன்றி இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் சாதியமைப்பில் பிராமண சமூகம் உயர் தாழ் வகுப்பு என்ற எந்த அடைமொழியுமின்றி மிகச்சிறு அளவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேசமயம் நிலப்பிரதேசங்களில் உழவுத்தொழிலைப் பாரம்பரியத் தொழிலாகக் கொண்ட வேளாள வகுப்பும் கரையோரப்பகுதிகளில் மீன்பிடியைப் பாரம்பரியத் தொழிலாகக் கொண்ட  கரையார் வகுப்பும் தம்மை மேம்பட்ட வகுப்பாகவும் ஏனையோரை தாழ்த்தப்பட்ட வகுப்பாகவும் கருதும் தன்மை மிக ஆழமாக வேரோடிப்போயிருக்கிறது. 'நாங்கள் அந்தப் பகுதிக்குள் கை நனைப்பதில்லை, சம்பந்தம் பண்ணுவதில்லை' என்று பேசிக்கொள்ளுமளவிற்கு ஒவ்வொரு வகுப்பும் தனக்குள் பல உட்பிரிவுகளையும் உட்பிளவுகளையும் கொண்டிருக்கும் சமூகமாகவே தமிழ்ச்சமூகம் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது.
 
பொருளாதார நிலைகளின் அடிப்படையில் பாகுபடுத்தின் அரச உத்தியோகப் பாரம்பரியங்களைக் கொண்ட நடவைந எனப்படும் சிறுபான்மைப் படித்த உயர்வர்க்கம், விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்டு படிப்படியாக அரச உத்தியோகங்களுக்கு மாறிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை நடுத்தரவர்க்கம், கூலித் தொழில்களை அடிப்படைத் தொழிலாகக் கொண்டு இலவசக் கல்வியின் அனுகூலங்களால் மெல்லமெல்ல முன்னேறிக்கொண்டிருக்கும் தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட அல்லது பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்க்கம் என மூன்று பிரதான வர்க்கங்களை இங்கு இனங்காணமுடியும். உணவுமுறைகளிலும் கூட அரிசியே பிரதான உணவாக இருப்பினும் வன்னி வாழ் மக்களின் தவிடு கலந்த பச்சையரிசி, மட்டக்களப்புவாழ் தமிழ் மக்களின் வெள்ளைப் புழுங்கலரிசி, யாழ்ப்பாண மக்களின் தவிட்டுப் புழுங்கலரிசி என அரிசியின் வகைகள் மாறுவதும் கறிப் பக்குவங்கள் மற்றும்  கலாசார நிகழ்வுகளில் பரிமாறப்படும் பலகார வகைகளில் பிரதேச மணம் கமழ்வதும்  குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
 
ஏனைய சமூக அமைப்புகளைப் போன்றே தமிழ்ச்சமூகத்திலும்; தந்தை வழிச்சமூக அமைப்பே நிலைகொண்டிருக்கின்றபோதிலும் குடும்பத்தில் வீடு பெண்ணுக்கே சீதனமாகப் போய்ச்சேருதல்,  திருமணத்தின் பின்னர் ஆண் பெண்ணின் வீட்டில் வசித்தல் போன்ற ஆதித் தாயுரிமைச் சமூகத்தின் எச்சங்கள் இன்றும் நிலைகொண்டிருக்கும் சமூக அமைப்பாகவும் இது உள்ளது. இன்று பேரன் பேத்தி ஸ்தானத்தில் இருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் எந்தவித எழுத்துப் பதிவுமின்றி 'சோறு கொடுப்பித்தல்' என்ற சடங்கின் மூலம் திருமணத்தை முடித்துக்கொண்டவர்களே.

தமிழ்ச் சமூகமும் பெண்களும்;

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித் தெரியும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்;.

அடக்குமுறையின் உச்சக் கட்டத்தில் அணிதிரண்டு உரிமைப் போராட்டம் நடத்தும் தொழிலாளி வர்க்கப் பெண்ணோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகூடிய சலுகைகளுக்காகக் கொடி உயர்த்தும் மேற்தட்டு வர்க்கப் பெண்ணோ அல்ல இலங்கைத் தமிழ்ப்பெண். 'எத்தனை தான் எண்ணுக்கணக்கற்ற தகுதிகளைப் பெற்றிருக்கும் பெண்ணும் திருமணத்தின் மூலம் ஆணுடன் இணைக்கப்படும்போது அது சமுத்திரத்துடன் கலந்த ஆறு போன்றது' எனக்கூறும் மனுநீதி சாத்திரம் இன்றும் ஆழமாய் வேரோடியிருக்கும் சமூகத்தின் வார்ப்பு இவள். கல்விச் சுதந்திரமோ, திறமையின் அடிப்படையில் தொழில் பார்க்கும் சுதந்திரமோ மறுக்கப்படாதபோதும் தகப்பன், சகோதரன், கணவன், பிள்ளை என்று படிநிலையில் தங்கிவாழப் பயிற்றுவிக்கப்பட்டவள்.

இலங்கைத் தமிழ்ச்சமூகமானது இனத்தால், மொழியால், பண்பாட்டால் ஒன்றுபட்டபோதும் பொருளாதார அந்தஸ்து, கல்வி அறிவு, சாதிக்கட்டமைப்பு, மற்றும் சமூகப் பாரம்பரியங்களால் வேறுபட்ட வாழ்க்கை நிலையை, சிந்தனைப் போக்கைக் கொண்டுள்ள மூன்று நிலைப்பட்ட பெண்களை இனங்காட்டியிருக்கிறது.

தமிழ்ப் பெண் சமூகத்தின் வகை மாதிரிகள்

வாழ்தார வசதிகளைக் குவிமுனைப்படுத்தும் பண்பினர்;

வாழ்க்கையின் போக்கை உணவை மையப்படுத்தியே சிந்திப்பவர்கள். கல்வியின் முக்கியத்துவம், சுகாதாரத்தின் அவசியம் எதுவுமே புரியாதவர்கள். அறியாமை, பசி, பட்டினி, வறுமை, போசாக்கின்மை, எழுத்தறிவின்மை இவர்களைப் பீடித்திருக்கும் கொடுமையான நோய்கள். இவர்களுக்கு எமது அறிவுரைகள், கருத்தரங்குகள், எழுத்துவடிவ ஊடகங்கள் எதுவுமே பலனளிக்காது. எமது பேச்சுத்தரும் மாற்றத்தைவிடவும் எமது உருவ அமைப்பு, புறத்தோற்ற அமைப்பு, நடையுடைபாவனை அவர்களுக்கு பிரமிப்பையும் எம்மிலிருந்து ஒரு அன்னியத்தன்மையையும் ஏற்படுத்திவிடுகின்றன. உணவு தேடுவது அதற்காக உழைப்புத்தேடி அலைவது இதுதான் இவர்களின் முன்னுரிமை. கற்புநிலைக் கோட்பாடு, கணவன் மனைவி உறவில் மகோன்னதம், கல்வி கற்பதன் பலாபலன், சுகாதாரமாக வாழ்வதன் அவசியம் இவை அனைத்துமே இங்கு தாக்கம் ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு மிகமிகக் குறைவு. உழைப்பே இல்லாமல் அல்லற்படும் குடும்பங்கள், உழைப்பு மட்டுமன்றி மனைவியின் உழைப்பையும் சேர்த்து சுரண்டிக் குடித்து செலவழிக்கும் குடும்பங்கள் என்று இவர்கள் பலதரப்படுவர். வறுமை புதுப்புது ஏக்கங்களையும், கற்பனைகளையும் இவர்களிடம் உருவாக்குவது தவிர்க்க முடியாதது.  இங்குதான் கற்பனையை மையப்படுத்தும் சினிமா முதல்தர தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக அந்தஸ்தை மையப்படுத்தும் பண்பினர்

இவர்களுக்குப் போதிய உணவு இருக்கிறது. கல்வி கற்பதற்கு வசதியும் இருக்கிறது. உணவு. உடை, உறையுள் மூன்றும் போதியளவு கிடைக்கப்பெறும் இந்தப் பெண்கள் அடுத்து விரும்புவது சுகமான, சுலபமான வாழ்க்கையைத்தான். கல்வி இவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. பெண்தான் குடும்பத்தின் ஆணிவேர் அச்சாணி என்பதெல்லாம் இந்தப் படித்தவர்களுக்கு தெரியாது. அழகாக இருப்பது எப்படி? அந்தஸ்துடன் வாழ்வது எப்படி? வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிப்பது எப்படி? இவைதான் இவர்களின் மனத்தை எந்நேரமும் ஆக்கிரமித்திருப்பவை. பெண்ணைப் பொத்திப் பொத்தி வளர்த்து ஒழுக்கமுள்ளவளாக, முடிந்தால் உழைப்பதனூடாக தட்டிலொரு பெரும் செல்வத்தை அள்ளித் தருபவளாக அல்லது இருக்கிறதை வித்துவிட்டாவது நல்ல மாப்பிளைக்கு கட்டிக்கொடுக்கும் வகையில் வளர்க்கப்படுபவளாக...... சூழல், வளர்ப்புமுறை, சிந்தனை அனைத்துமே இத்தகையதொரு வாழ்க்கைக்கு அடிகோலும் வகையிலே மையப்படுத்தப்படுகிறது. அடுத்தவர்களுடன் தம்மை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காணும் ஒப்பீட்டு வாழ்க்கை இங்கு பரவலாகக் காணப்படுகிறது. காதல் மனங்கள் அதிகமாகக் கருக்கொள்வதும், சினிமாவில் வரும் கதாநாயகனை, அல்லது உணர்வுகளைத் தூண்டும் நாவல்களின் கதாபாத்திரங்களைப் பார்த்து அப்படியொரு வாழ்க்கைக்கு ஏங்கித் தோற்றப் பொலிவிற்கும் செய்யும் தொழிலுக்கும் மனதைப் பறிகொடுப்பவர்கள் இவர்கள். இவர்களில் கல்வி கற்பது குடும்ப கௌரவத்தைப் பேணும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கல்வி கற்பவர்கள், தொழில்பார்க்க வேண்டும் என்பதற்காகக் கற்பவர்கள், அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கற்பவர்கள், எந்த நோக்கமும் அற்று எல்லோரும் படிக்கிறார்கள் நாமும் படிப்போம் என்று கற்பவர்கள் எனப் பலவகைப்படுவர். இலக்கியங்களில் இவர்கள் விரும்பிப் படிப்பது கதைகள் மட்டுமே. கருத்துமாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் கனவுகள், கற்பனைகள், ஏக்கங்கள், விரக்தியைத் தூண்டிவிடும் இலக்கியங்களை மட்டுமே விரும்பிப் படிப்பது இவர்களுக்கொரு சாபக்கேடு. வாழ்க்கை வேண்டும் அதிலும் அந்தஸ்தான வாழ்க்கை வேண்டும், குடும்ப கௌரவம், சாதிமதம் அனைத்திற்கும் ஒத்துவரக்கூடிய வரன் வேண்டும். இந்தத் வரையறைக்குள் நின்றுகொண்டு உணர்ச்சிகளுக்குத் தீனி போடும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். மனிதனுக்குள் இருந்து இயல்பாகவே கிளர்ந்தெழும் பாலுணர்வு பண்பாட்டு அம்சங்களால் கட்டுப்படுத்தப்படும் போது ஒழுக்கப்போர்வைக்குள் நின்றுகொண்டு உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள முனைபவர்களும் இவர்கள்தான்.... இங்கும் கூட கருத்து மாற்றத்தை ஏற்படுத்துவதில் அறிவுசார் கருத்தரங்குகள், பேச்சுக்கள், எழுத்து ஊடகங்கள் தோல்வியடைந்து போகின்றன.

அறிவை முதன்மைப்படுத்தும் பண்பினர்

வாழ்க்கைப் போக்கை அறிவுசார் ரீதியில் உற்றுணர்ந்து அதன் ஓட்டத்திற்கமைய வாழ முனையும் சிறுபகுதி பெண்கள் இவர்கள். உலகில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களை உலக இலக்கியங்கள் வாயிலாகத் தேடி அறிந்து அதை சமூகத்துக்கு  வெளிப்படுத்த நினைப்பவர்கள், அறிவியல் கண்கொண்டு நோக்கி அனைத்தையும் அறிவால் பகுத்து அதன் சாதகபாதகங்களை சமூகத்திற்கு எடுத்துக்காட்ட முனைபவர்கள், ஒரு பெண்ணின் இயலாற்றல் எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டு அதனைச் செயற்படுத்தும் நோக்கில் சமூகத்திலிருந்து அன்னியப்பட்டுப் போய் நிற்பவர்கள், தனது அறிவுடமையை மூலதனமாக வைத்து சமூகத்தில் தளம் பதிக்க நினைத்து புரியாத மொழியில் இலக்கியம் படைக்க முனைபவர்கள், யதார்த்தம் சரியாகப் புரிந்தாலும் கட்டுக்கோப்புக்களைக் களைந்தெறிந்து தனித்து நடமாடும் வல்லமை இழந்தவர்கள், கைவிட்டுப்போன கணவனை, கைகால் இழந்தவனை தனியே நின்று குடும்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றவர்கள், எமது கலாச்சாரம், சமூகச்சூழல் என்பவற்றுக்குள் நின்றுகொண்டு தாம் பெற்ற அறிவைப் பகுத்தாராய முனையாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் அதை அப்படியே இங்கு பிரதிபலிக்க முயன்று தமது இனப் பெண்களின் ஏன் ஆண்களின் கேலிக்கும் இலக்காகின்றவர்கள் என இவர்கள் பலவகைப்படுவர்.

தமிழ்ப் பெண் சமூகத்தின் பண்புரு மாதிரிகள்

மாற்றம் நாடாப் பண்பு

'பட்டினி கிடந்தாலும் நல்லநாள் பெருநாளில் நாலுபேர் 'நாக்கு வளைக்காமல்' நல்லதாய் உடுத்துக் கொண்டு நிற்கவேண்டும்; வாயைக்கட்டி வயிற்றைக் கட்டியாவது நகைநட்டுச் சேர்க்க வேண்டும்; குடிகாரனோ, கூத்தியார் வீட்டுக்குப் போறவனோ, மாப்பிள்ளை எவனாக இருந்தாலும் இருப்பதை வித்துச் சுட்டாவது பிள்ளையைக் 'கரை' சேர்க்க வேண்டும்; ஆழமாய்ப் படித்து அதிகமாய் உழைத்தாலும், அடியுதை வாங்கிக்கொண்டு கணவனுடனேயே இருக்கவேண்டும்' என்ற சிந்தனைகள் ஆழமாய் புரையோடிப் போயிருக்கும் தமிழ்ப்; பெண்ணில் ஏற்படும் மாற்றம் சாதாரணமாக நோக்கப்படக்கூடியதல்ல. அறியாமையில் உழல்பவர்களை அறிவுசார் நடவடிக்கையால் மாற்ற முனையலாம். அதிகம்  படித்துவிட்டும் தன்னைச் சுற்றி விலங்குகளைத் தானே போட்டுக் கொள்பவளை கருத்தரங்குகளோ, கண்டனப் பேரணிகளோ மாற்றுவதென்பது இலேசானதொன்றல்ல. போதனைகள் தமிழ்ப் பெண்ணிடம் எடுபடுவதை விட அடுத்தவரின் கோலங்கள் எடுபடுவது அதிகம். இதற்கமையவே சமூகத்தில் பெண்களின் இருப்புநிலை பற்றிய தேடலையும் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது.

பெண்ணுரிமைச் சிறைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பண்பு

தனக்கெனத் தனித்துவ வரலாற்றையும் உயர்ந்த பண்பாட்டையும் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பெண்கள்; ஏனைய பெண்களுடன் ஒப்பிடுமிடத்து வெளிப்படையான உரிமை மறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பினும், அறிவுசார் ரீதியில் ஆண்களுக்கு இணையாக வளர்ந்திருப்பினும் பிற்போக்குத்தனங்கள் மற்றும் மூடப் பழக்கவழக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடுவது தமிழ்ச்சமூகத்தின் பாமரப் பெண்ணுக்கு மட்டுமன்றி படித்த பெண்ணுக்கும் முடியவில்லை. ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ்ப் பெண்களை விடவும் ஈழத்துத் தமிழ்;ப் பெண்கள் சுதந்திரம் உடையவர்கள் என்ற கருத்துநிலை பலரிடையேயும் காணப்படுகிறது. கருவில் இருக்கும் போதே ஆணா பெண்ணா என்று கண்டுபிடித்து பெண்ணாயின் அதனை அழித்துவிட நிர்ப்பந்திக்கும் கணவனோ, அல்லது சாப்பாட்டில், வாழ்க்கை வசதிகளில், கல்வியறிவில் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அப்பாக்களோ, அதுவுமன்றி திருமணம் செய்த பின்பும் அடிக்கொருதரம் பணம் கேட்டு அனுப்பும் மாமியார்களோ, அண்ணாவிடம் கோள்மூட்டிக் கொடுத்து அண்ணிக்கு அடிவாங்கிக் கொடுக்கும் மைத்துனிகளோ தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவு என்பதைப் பார்க்கும் போது அப்படி ஒரு கருத்து நிலை உண்மைதான் என்ற மயக்கநிலை இருக்கத்தான் செய்யும். இலவசக் கல்வி, சம வாய்ப்பு, சட்டத்தின் ஆதரவு போன்றவற்றால் ஏனைய தமிழ்ப் பெண்களுடன் ஒப்பிடுமிடத்து வெளிப்படையான உரிமை மறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் எனினும் உலகிலுள்ள ஏனைய சமூகங்களிலுள்ளதைப் போன்று  பிற்போக்குத்தனங்களின் ஆக்கிரமிப்புக்குள்  பல நூற்றாண்டுகள் சிக்குப்பட்டிருப்பவர்களாகவே இவர்கள் இனங்காணப்படுகின்றனர்.

ஒடுக்குமுறைச் சிறைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பண்பு

ஒரு இனத்துக்குள்ளேயே பிரதேச வேறுபாடும், சாதி, மத, வர்க்கம், பால் என்ற அடையாளங்களுடன் பெண் என வரும்போது புறத்தோற்ற அம்சங்களும் முக்கியம் பெற்றுவிடுகின்றன. இந்த அடையாளங்களின் வலைப்பின்னலுக்குள்ளே நின்றுகொண்டு தான் பெண்ணொடுக்குமுறை என்ற அம்சத்தையும் கருத்தில் கொள்ள முடியும். குடும்பம், சமூகம், அரசு என்ற மூன்று வலுவான நிறுவனங்களின் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்த அடையாளங்களின் நேரடியான, மறைமுகமான தாக்கங்களுக்கு உட்பட்டவளாகவே இன்றைய பெண்ணின் விம்பத்தை பார்க்க முடிகிறது. குடும்பம், சமூகம், அரசு என்ற இந்த மூன்று வலுவான சட்டங்களும் உலகின் எந்தவொரு பெண்ணையும் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்தச் சிறைக்குள் நின்றுகொண்டே தான், தாம் வாழும் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சூழலுக்கூடாக மத, சாதிய, வர்க்க, பால் ஒடுக்கு முறைகளின் தீவிரத் தன்மையோ, மிதவாதத் தன்மையோ பெண் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானிய, பங்களாதேசிய முஸ்லிம் பெண்ணொருத்தி மதரீதியான ஒடுக்குமுறைக்கு உட்படும் தாக்கமளவுக்கு இலங்கை இந்திய முஸ்லிம் பெண்கள் உட்படுவதில்லை. உயர்சாதிப் பெண்ணளவுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண், பால் ஒடுக்குமுறைக்கு உட்படுவதில்லை.
இலகுவான எடுத்துக்காட்டு ஒன்றின் மூலம் பத்திரிகை விளம்பர பாணியில் இந்த முக்கோண கூண்டொன்றிற்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்ணை அடையாளப்படுத்திப் பார்க்கலாம்.

வன்னிப் பிரதேசத்தில் ஒட்டங்;குளம் என்னும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான 30 வயது இந்துக் கூலிப்பெண்.
'இந்தப்பெண் மதுபோதையில் வந்து அடித்து நொருக்கும் கணவனைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு ஒரு வயிற்றுக் கஞ்சிக்காக நாள் முழுதும் மாவிடித்தோ, தோட்டவேலை செய்தோ உழைக்க வேண்டியிருக்கிறது. தனது சாதிக்குள்ளேயே 'திடீர்' பணக்காரராகித் தம்மை ஒதுக்கும் தமது உறவினரின் புறக்கணிப்பைத் தாங்க வேண்டியிருக்கிறது. உயர்சாதியின் எடுபிடியாகித் தமது உழைப்பை உறுஞ்சும்; தன் சாதிச் சண்டியரையும், குறைந்த கூலியில் தமது உழைப்பை சுரண்டும் அதேசமயம் பாலியல் ரீதியாக சுரண்டும் தமது முதலாளியையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பாடசாலையில் ஓரங்கட்டப்பட்டு முறிந்த மனதுடன் வரும் பிள்ளைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் தமிழ்ச்சமூகம் முன்னெடுத்துவரும் போராட்ட வாழ்வியலால் மோசமடைந்திருக்கும் வறுமை, பசி, பட்டினி, இடம்பெயர்வு, பொருளாதாரத் தடை என்பவற்றுடன் இராணுவ ஆக்கிரமிப்பு அபாயம் வருமிடத்து பாலியல் ரீதியாகவும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'.

பெண்ணிய ஆளுமைப் பண்பு

இத்தனை ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்ட போதும் கூட இந்தப்பெண் படித்த உயர்சாதிப் பெண்ணொருத்தியைவிடக் கூடுதலான சுதந்திரத்தை அனுபவிக்கின்றாள் என்பது தான். உயர்வர்க்கப் பெண்ணுக்கு இருப்பது போன்று கற்புடைமைக் கோட்பாடு, விதவைநிலை, சீதனப் பிரச்சினை போன்ற அம்சங்களின் பாதிப்பு இங்கு மிகக்குறைவு. தனித்;தியங்கும் ஆற்றல், முடிவெடுக்கும் ஆற்றல் இருப்பதைக்கொண்டு திருப்தியடையும் ஆற்றல், பாரிய பிரச்சனைகளையும் தாங்கி நிற்கும் ஆற்றல் இவளிடம் மிகவும் அதிகம். உழைப்பு, சுறுசுறுப்பு, நீண்ட ஆயுள் இவர்களின் சிறப்பம்சங்கள்.

'அந்த பெண்மணிக்கு வயது 65 இற்கு மேல் இருக்கும். ஆறும் ஆண்பிள்ளைகள். பிள்ளைகளிடம் கடமைப்படக்கூடாது என்ற சிந்தனையும் உடலில் சக்தியிருக்கும் வரை தனது உழைப்பில் தான் வாழவேண்டும் என்ற மனவுரமும் இணைந்து இந்தவயதிலும் மாவிடித்தல், வீடு மெழுகுதல் என்று தினமும் தேனீயின் சுறுசுறுப்புடன் ஓடித்திரிபவர். வேலை கிடைக்காத போது ஒரு சுருட்டும், ஒரு கோப்பை தேனீரும் உடலை ஆற்றும். கையில் கொஞ்சம் பணம் புரண்டால் பேரப்பிள்ளைகளுக்கு அது உடனே போய்விடும். எழுதப் படிக்கவோ, இன்றைய உழைப்பை சேமித்து வேலையில்லாதபோது பயன்படுத்தும் அறிவோ, ஆண் பிள்ளைகளைப் பெற்றபடியால்  உரிமையோடு சாப்பிடலாம்தானே என்ற எண்ணமோ அறவே கிடையாது. உயர் வர்க்;கப் பெண்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உண்டு.

நடத்தைசார் வன்முறையின் தாக்கத்தை குடும்ப வன்முறையூடாக மிகவும் மோசமாக அனுபவிப்பவர்கள் இவர்கள். அதேசமயம் பசி, பட்டினி, அறியாமை போன்ற அமைப்பியல் வன்முறையின் நேரடி இலக்கும் இவர்களே. ஆனால் அரச வன்முறை வடிவங்களில் ஒன்றான இடப்பெயர்வு நடுத்தர வர்க்கத்தினரை பாதித்த அளவுக்கு இவர்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். இத்தனை கால ஒடுக்குமுறைகளையும் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளுமளவிற்கு அறியாமைக்குள் முடக்கப்பட்ட நடுத்தர வர்க்கப்பெண்கள் ஒடுக்குமுறையின் அழுத்தங்களில் தப்பிப் பிழைக்க முடியாமையின் வெளிப்பாடாக மரபுகளை மீறும் கட்டங்களில் அல்லது விழித்தெழும் கட்டங்களில் சாதி, பணம், படிப்பு, அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில் துச்சமாக மதித்து கீழே தாம் தள்ளிய இந்த தாழ்த்தப்பட்ட  சமூகத்தினர் தம்மைவிடவும் சுதந்திர உணர்வுடன் வாழ்கின்றார்கள் என்பதையும், தனிச் சொத்துடைமை குறைந்த அல்லது அறவே இல்லாத இம்மக்கள்தான் ஆதிகால தாயுரிமைச் சமூக அமைப்பின் எச்சங்களை சுமந்து நிற்பவர்கள் என்பதையும் வியப்புடனே பார்க்க வேண்டியிருக்கிறது. இளவயதுத் திருமணங்கள், கட்டுப்பாடுகள் குறைந்த குடும்ப உறவுகள், குடும்பத் திட்டமிடலின்மை, ஆரோக்கியக்கேடு, சுகாதாரச் சீர்கேடு, அறியாமை போன்றவை பிரதான பண்புகளாக இருக்கும் இத்தகைய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகங்களில் படிப்பால், பணத்தால் முன்னுக்கு வருபவர்கள் தமது சமூகத்திலிருந்து மெல்ல விலகி உயர்மட்ட குடும்பங்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்ற கசப்பான யதார்த்தத்தை இங்கு உள்வாங்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி அப்படி வாழ்பவர்கள் மூலம் வெளிவரும் இலக்கியங்கள்கூட மீண்டும் ஆணாதிக்கச் சக்கரத்துள் நுழைந்து விடுகின்றன.

சாதியமைப்புடன் போராடி வாழும் பண்பு

இலங்கைத் தமிழ்ச் சமுகத்தின் நடுத்தரவர்க்கத்தினரில் பெரும்பாலானோர் நிலப்பிரபுத்துவ சிந்தனையும் முதலாளித்துவ வாழ்;நிலையும் கொண்டவர்கள். இதைச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டுமூலம் பார்க்க முடியும்.

'அந்த இளம் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். இருவருமே தொழில் பார்ப்பவர்கள். இடப்பெயர்வு தமது அந்தஸ்தின் வெளிப்பாடுகளை கணிசமாய் காட்டுவதற்கு தடங்கலாகிவிட்டதே என்ற மனப்புழுக்கம் கணிசமாக இருந்தாலுங்கூட முடிந்தவரை தமது வசதிகளை வெளிக்காட்ட முனைப்புடன் நிற்பவர்கள். இடப்பெயர்விற்கு முன்னரான தமது ஊரின் வாழ்நிலையில் தமது வீட்டில் தொழில் செய்பவர்கள் தமது தகப்பனாரைக் கண்டதும் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கொள்வர் என்று அடிக்கடி பெருமைப்படும் வர்க்கத்தினர் இவர்கள். குழந்தைகள்; பிறக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. பின்புதான் எல்லாமே தொடங்கியது. இருவருமே வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலைக்கு ஆள் தேவை. ஆரம்பத்தில் இருப்பதில் உயர்சாதியினரைத் தேடி அலைந்து களைத்துப்போய் இப்போது வேலைசெய்ய ஆள் கிடைத்தால் போதும் என்ற நிலை. போடும் உடுப்பு, சாப்பிடும் சாப்பாடு, இருப்பிடம் எல்லாம் வேலையாள் கைபட்டுத்தான் நகரும். வீட்டுப் பாவனைக்கு கிணற்றில் தண்ணீர் அள்ள வேலையாளுக்கு அனுமதி உண்டு. ஆனால் அவர் அதில் குளிப்பதற்கு அனுமதியில்லை. சமைப்பது, கறி ருசி பார்ப்பது, குழந்தைக்கு கையால் நன்கு பிசைந்து சோறு ஊட்டுவது அனைத்தும் அவர் பணி. ஆனால் சாப்பிடும் பாத்திரமும், குடிக்கும் பாத்திரமும் அவருக்கு புறம்பு.

உயர் நடுத்தர வர்க்கம் எனச் சொல்லிக்கொள்பவரின் வீட்டுக்கு வெளியே கூட்டுவதும், ஆடு, மாடு, கோழி பராமரிப்பதுவுமே ஒதுக்கப்பட்ட இந்த மக்களுக்கு இடப்பெயர்வின் பின்னரான வாழ்நிலை இவர்களின் வீட்டுக்குள்ளேயே எந்நேரமும் தங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதில் ஒரு முரண்நகை எதுவெனில் சாதித்தடிப்புமிக்க குடும்பத் தலைவனின் பெற்றோர் இருவரும் ஊரிலிருந்து வன்னிக்கு வந்த சமயம் வேலையாளின் கைவண்ணத்தில் உருவான சமையலை மௌனமாய் ஒரு கை பார்த்துவிட்டு எழும்பிப்போக வேண்டியிருந்தமை தான். அதேசமயம் வேலை செய்பவரின் உறவினர்கள் யாராவது இவரைச் சந்திக்க வந்தால் தீண்டாமையின் சகல பண்புகளுடனும் தான் அவர்கள் இன்றும் உபசரிக்கப்படுகின்றனர்.

இந்தச் சமூகப்பெண்களிடம் காணப்படும் மிகப்பெரும் பலவீனம் வாழ்வின் அரைப்பகுதி நல்ல மனைவியாக இருப்பதற்கான தயார்படுத்தல்களிலும் மீதிப்பகுதி தனது பெண் குழந்தைகளை தயார்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதுமேயாகும். இவர்களைப் பொறுத்து வாழ்க்கையே திருமணம். திருமணம் வாழ்வின் ஒரு அங்கம் மட்டும் அல்ல. பள்ளிப்படிப்புப் பெண்ணிலிருந்து பட்டதாரிப் பெண்வரை இதுதான்.

புதுப்புதுப் பாணிகளில் மாறிக்கொண்டிருக்கும் ஆடை அலங்காரங்களின் நவீன மாதிரிகளாய் நடமாடுவதற்கும், வீதி முழுவதையும் நிறைத்துக்கொண்டு சைக்கிள் சவாரி செய்வதற்கும், விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் தனியார் கல்விக் கூடங்களில் கற்கவும், விரும்பிய பாடநெறியை தெரிவு செய்வதற்கும் முழுச்சுதந்திரம் உடையவர்கள் இவர்கள். இத்தனை வாய்ப்புகளும் கிடைத்த போதிலும் இவர்களில் கணிசமானோர் பரீட்சையில் சித்தியடைவதற்கான நேர்த்தி, தொழில் வாய்ப்பு பெறுவதற்கான நேர்த்தி என்று கோவிலில் தவம் கிடப்பவர்கள். உடற்சுத்தி, இதய சுத்தி, சொல் சுத்தி மூன்றும் இறைவனைத் தொழ மிக அடிப்படையானவை என்ற மதநியமங்களை மறந்து கோவில் சுற்றாடலை களியாட்ட விழாவாக மாற்றும் வகையிலான ஆடை அலங்கார வகைகளுடன் நடமாடுபவர்களும் இவர்கள் தான். ஓப்பீட்டு ரீதியில் கணிசமானளவு ஆண்களைவிடப் பெண்களே அதிகம் படித்தவர்களாகவும் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

முடிவுரை

பெண்ணினத்தின் மிகமிகச் சிறுபகுதியினரே பெண்ணொடுக்குமுறை வடிவங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் அதேசமயம் பெரும்பகுதி பெண்ணினமோ இதுபற்றிய எந்தவொரு அறிவோ, உணர்வோ இன்றி ஒடுக்குமுறைகளுக்குப் பழக்கப்பட்டு வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிப்பது கண்கூடாகத் தெரிகிறது. குவாட்டமாலாவைச் சேர்ந்த ஆ.டுரபயசனந என்பவரின் பின்வரும் கருத்து லத்தீன் அமெரிக்கப் பெண்களுக்கு மட்டுமன்றி எமது பெண்களுக்கும் பொருந்தும்.

'எமது சொந்த வரலாறு தொடர்பாகவோ எமது அடையாளம் தொடர்பாகவோ பெண்களாகிய எமக்கு அதிகம் தெரியாது. எம்மைப்பற்றி எமக்கே தெரியாது. எம்மைப்பற்றி அறியும் வழிவகைகளும் எமக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. யதார்த்த நிலையுடன் நாம் மோதும் கட்டங்களிளெல்லாம் பெண்கள் பற்றிய புராணக் கதைகளை நம்ப நாம் தலைப்படுகின்றோம். எம்மை நாம் தெளிவாகப் பார்ப்பதிலிருந்து தடுக்கப்படுகின்றோம். அடுத்தவர்களைப் பார்ப்பதிலேயே எமது முழுநேரத்தையும் நாம் செலவிடுகின்றோம். அடுத்தவர் நிழலிலேயே நாம் தொடர்ந்தும் வாழ்கின்றோம். அடுத்தவர் எம்மைப் பார்க்கும் முறையே எமது வாழ்வுக்குப் போதுமானது என எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.'

எமது மண்ணில் பெண்விடுதலை பற்றி சிந்திக்கும் பெண்ணோ, பெண்விடுதலையே தெரியாத பெண்ணோ எல்லோர் மனதின் மூலையிலும் இந்த உணர்வே நிறைந்திருக்கிறது என்பதை எம்மால் மறுக்க முடியாது.






















No comments: