Tuesday, February 04, 2014
விதைகளும் விதைப்புகளும்
அறிமுகம்
மனிதசமூகத்தின் இத்தனை நூற்றாண்டு கால வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் மனித சிந்தனையை விடவும் மனவெழுச்சிகளே கூடிய பங்காற்றியிருக்கின்றன. ஒரு செயலில் காரண காரிய தொடர்பறிந்து அதன் வழி செயலாற்றும் அறிவுத்திறனை விடவும் மனிதரிடம் இயல்பாகவே நிலைகொண்டிருக்கும் இயல்பூக்கங்களதும் அதன்வழி உருவாகும் மனவெழுச்சிகளதும் முதிர்ச்சித்தன்மையும் சமநிலையுமே பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்ற உளவியலாளர்களின் கருத்தை அறிவியல் சமூகம் ஏற்றுக்கொண்டு பலகாலமாகி விட்டது. இந்தவகையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகப் போரை வாழ்வியலாக ஏற்று இன்றும் சோர்வடையாமல் போராடிவரும் தமிழ்ச்சமூகத்தின் போராட்ட உணர்வுக்கும் உறுதிக்கும் மனவெழுச்சிகள் எத்துணை பங்காற்றியிருக்கின்றன என்பது தொடர்பான சில நேரடி அனுபவப் பகிர்வுகள் உங்கள் முன் கட்டுரையாக வடிவம் பெற்றிருக்கின்றன.
மனவெழுச்சிகள்
மனித நடத்தைக் கோலங்களை ஆராயப் புகுந்தவர்கள் இந் நடத்தைக் கோலங்கள் மனிதனிடம் இயல்பாய் அமைந்திருக்கும் மனநிலைகளான ஆராய்தல், உணவு தேடுதல், குழந்தை பெறுதல், போரிடுதல் போன்;ற இயல்பூக்கங்களதும் (instint) மனிதனிடம் பிறப்பிலிருந்தே காணப்படும் கோபம், வியப்பு, வெறுப்பு, அன்பு, பாசம், மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகளதும் (Emotions) உந்துதலினால் ஏற்படுபவை எனக் கூறுகின்றனர். இவை குழந்தைப் பருவம் முதற்கொண்டு மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சிப்படி நிலைகளுடனும் பின்னிப்பிணைந்து சூழலுக்கேற்ப மாறுபட்டு திரிபடைந்தோ, அல்லது சிதைந்தோ அதுவுமன்றி செப்பனிடப்பட்டோ கூர்ப்படைந்தோ தீவிர விருப்பார்வங்களாக (Sentiments) மாறுகின்றன. எடுத்துக்காட்டாக தம்மைச் சூழவுள்ள பொருட்களைத் தோண்டித்துருவி ஆராயும் இயல்பூக்கமும் அப்பொருள் பார்த்து ஏற்படும் வியப்பு என்ற மனவெழுச்சியும் குழந்தைப்பருவ நடத்தைக் கோலங்களில் பெரிதும் காணப்படுபவை. குடும்ப உறவுகளும், சூழலும் கொடுக்கப்படும் கல்விவாய்ப்பும் சரிவரப் பொருந்தி அமையும்போது இந்த ஆராய்வூக்கம் செப்பனிடப்பட்டு பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஏதுவாக மாறும். அது போன்றே வளரிளம்பருவத்தை ஆக்கிரமித்திருக்கும் பாலுணர்வூக்கத்தின் வழி ஏற்படும் உணர்ச்சி வேகமானது தாய்மை அல்லது தந்தைமை நிலையில் குழந்தை பெறும் ஊக்கமாக மாறி அதன் வழி குழந்தை மீதான அன்பு, பாசம், பரிவு போன்ற மனவெழுச்சிகளை மேலோங்கச் செய்கிறது.
மனவெழுச்சிகளும் மனவுணர்ச்சிகளும்
மனித செயற்பாடுகளில் பெரும்பங்கு மனவெழுச்சிகளின் உந்துதலினால் ஏற்படுபவை. ஆரம்பகட்டங்களில் மனித சிந்தனையின் பங்கு குறைந்தளவிலேயே இருக்கும். மழலை மொழியில் முதன் முதல் தன் தாயை அழைக்கும் குழந்தையை வாரி அணைத்துக் கொஞ்சும் தாய், பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற தன் பிள்ளையை தோள் மீது வைத்துக் கூத்தாடும் தந்தை, கொடுத்த வேலையைத் திறம்படச் செய்துமுடித்த பணியாளனை முதுகில் தட்டி மனதாரப் பாராட்டுத் தெரிவிக்கும் ஒரு மேலதிகாரி - இவைகள் மனவெழுச்சிகளின் உந்துதல் தரும் வெளிப்பாடுகள், மனதிற்கு மகிழ்ச்சி தருபவற்றைச் செய்யத் தூண்டுவதும், அச்சமும் அருவருப்பும் தருபவற்றை ஒதுக்கித் தள்ளுவதும், இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டைத் தூண்டுவதும், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளில் தம்மை மறந்து இலயிக்கச் செய்வதும் இந்த மனவெழுச்சிகளின் உந்துதல் செய்யும் காரியங்களே. சாதாரண நிலைகளில் தன்னால் செய்துமுடிக்க முடியாது என்று நினைத்திருப்பவற்றை நெருக்கடியான நிலைகளில் செய்து முடிப்பதற்குத் தேவையான துணிவுங்கூட இந்த மனவெழுச்சிகளின் வழி ஏற்பட்டவையே. எடுத்துக்காட்டாக 4 அடி உயரத்தைப் பாய்ந்து கடக்க முடியாது என நினைத்திருக்கும் ஒருவனுக்கு இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பும் பொருட்டு மதிலேறிப்பாயும் வலுவும், இருளுக்குப் பயந்து அம்மாவின் துணைதேடும் பிள்ளைக்கு நடுநிசியில் காவற்கடமையில் ஈடுபடும் துணிவும் அறிவுத்திறனால் ஏற்பட்டவை அல்ல. இவை மனவெழுச்சிகளின் துணைகொண்டு சாதிக்கப்படுபவை.
இந்த மனவெழுச்சிகளை மனிதனிடம் எப்போதும் காணப்படும் சாதாரண மனவுணர்ச்சிகளுடன் (feelings) குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. எந்தவொரு எதிர்பார்ப்புகளும் இன்றி சமைப்பது தனது கடமை என்ற சாதாரண மனவுணர்ச்சியில் இருக்கும் மனைவிக்கோ அல்லது மகிழ்வற்ற சூழலில் அடுத்த வீட்டில் கடன்வாங்கிச் சமைத்து வைக்கும் தாய்க்கோ சாப்பாட்டின் சுவை தொடர்பான பாராட்டுரைகள் எந்தவொரு மனவெழுச்சியையும் தருவதில்லை. மாறாக தனது சமையலை மற்றவர் ரசித்து உண்ண வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதற்குள் நன்றாகச் சமைத்துக் கொடுத்துவிட்டு கணவனின் முகம்பார்த்து நிற்கும் மனைவிக்கு கணவனது பாராட்டுரைகள் அதிக மகிழ்ச்சி என்ற மனவெழுச்சியைத் தோற்றுவித்து வாழ்வு தொடர்பான பிடிப்பை மேலும் கூட்டும். சாதாரண மனவுணர்ச்சிகளின் மேலோங்கிய தன்மையே மனவெழுச்சிகளாகும். இருட்டுக்குப் பயப்படுதல் என்ற சாதாரண மனவுணர்ச்சி போராட்ட சூழல் ஒன்றில் குண்டுவீச்சு விமானங்களைக் கண்டதும் தீவிர நடுக்கமாகி சில சமயம் உடனடி மருத்துவ கவனிப்புக்குக் கொண்டு செல்லும் அதேசமயம் இன்னொருவருக்கோ ஆராய்வூக்கமாகி விமான ஓட்டங்களை அண்ணாந்து பார்க்கும் அதிக ஆவலாக மாறும்.
தன்மீது தான் கொண்டிருக்கும் பிணைப்பு
இயல்பூக்கங்களும் மனவெழுச்சிகளும் மனிதன் வாழும் சூழல், அவனது குடும்ப உறவுகளின் தன்மை, அவன் பெறும் அறிவுத்திறன் என்பவற்றின் தாக்கங்களுக்குட்பட்டு நாளடைவில் விருப்பார்வமாக மாறுகின்றது. இவை விருப்பு, வெறுப்பு என்ற இருவகையில் தோன்றுகின்றன. சமயப்பற்று, சமூகப்பற்று, தேசப்பற்று போன்றவை சூழலின் நேர்முகத் தாக்கங்கள் வழியாகவும் களவு, பொய், கொலைகளில் ஈடுபாடு, விரக்தி, ஏமாற்றம் போன்றவை எதிர்மறைத் தாக்கங்கள் வழியாகவும் ஏற்படுகின்றன.
மனிதனிடம் காணப்படும் விருப்பார்வங்கள் அனைத்திலும் முதன்மையானது ஒருவன் தன்மீது தான் கொண்டிருக்கும் விருப்பமே என்பதைப் பல உளவியல் ஆய்வுகளும், நேரடி அனுபவங்களும் உணர்த்தியிருக்கின்றன. ஒவ்வொரு மனித மனமும் மற்றவர் தம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக, மற்றவரிடம் பாராட்டுப் பெறவேண்டும் என்பதற்காக அதிகம் உழைக்கக் கூடியதொன்று. இத்தகைய மனப்போக்கு சிலசமயம் தன்னைத் தனக்காக, தனது திறமைகளுக்காக மதிக்க வேண்டும் அல்லது நேசிக்கவேண்டும் என்ற யதார்த்தத்திற்கும் அப்பால் சென்று தனது அழகுக்காக, பேச்சுத்திறன், அந்தஸ்து, பதவி, செல்வம் போன்ற ஏதாவது ஒன்றால் மற்றவரின் மதிப்பைப் பெறவிரும்பும் மனோபாவத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இந்தச் சுயபற்று என்பது ஏனையவர்களை விடச்சற்று அதிகப்படியானது என்றுதான் சொல்லவேண்டும். காலத்தால் முந்திய குடி என்பதிலும், தொன்மை வாய்ந்த மொழியைப் பேசுபவன் என்ற வகையிலும், தொன்மை வாய்ந்த கலாச்சாரத்திற்கு உரித்துடையவன் என்ற வகையிலும் மட்டுமன்றி தமது நீண்டகால வீரம் செறிந்த வரலாறுக்காக, தான் படித்தவன் என்பதற்காக, அடுத்தவர்களுக்குத் தலைமை தாங்கியே பழக்கப்பட்டவன் என்பதற்கான அனைத்து உணர்வுகளும் ஒவ்வொரு தமிழனிடமும் ஊறிக்கிடக்கிறது. இது அவர்களது நடையுடை பாவனை, சிந்தனை அனைத்திலும் தெளிவாகக் காணக்கூடிய ஒரு அம்சமாகும்.
முக்கியமான விடயங்களைப் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் தன்மீதான கவனிப்பு விடுபட்டதை உணர்ந்து மெல்லச் சுரண்டி கவனத்தைத் தன்மீது திருப்ப எத்தனி;க்கும் குழந்தை, வகுப்பில் முதற்பிள்ளையாக வரவேண்டும் என்பதற்காக கஸ்ரப்பட்டுப் படிக்கும் மாணவன், அதிகாரியின் பாராட்டுதலுக்காக விழுந்து விழுந்து உழைக்கும் பணியாளர் - இவர்கள் எங்குமே காணப்படக்கூடிய எடுத்துக்காட்டுகள். தன்மீது தான் கொண்டிருக்கும் பற்று நம்பத்தகாத எத்தனையோ பெரிய சாதனைகளுக்கு அடித்தளமிடுகிறது. இந்தச் சுயமதிப்புக்கு இழுக்குவரும் எவ்வித செயற்பாடுகளும் அச்செயற்பாடுகளுக் கெதிரான மனித நடத்தையைத் தூண்டும் என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளை இம்மண்ணில் அவதானிக்க முடியும்.
பதவியுயர்வுக்கு சிங்களம் படித்தேயாக வேண்டும் என்ற சட்டத்திற்கு அடிபணியச் சுயமதிப்பு இடங்கொடுக்க மறுத்ததன் விளைவு பதவி விலகச்செய்து பலரை வியாபாரத்திலும் விவசாயத்திலும் ஈடுபடத்தூண்டியிருக்கிறது. சோதனைச் சாவடிகளில் சுயமரியாதைக்கு இழுக்குவரும் மனித நடத்தைகளுக்கு முகங்கொடுக்க விருப்பம் இல்லாமை பெற்ற பிள்ளையுடன் தொடர்பு கொள்ளவோ, சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பும் எண்ணத்தையோ கைவிட்டு குடிசை வீடுகளில் கூட வாழும் வல்லமையை தந்திருக்கிறது.
1958, 77, 83 கலவரங்களில் தமது குழந்தைப் பருவத்தில் இருந்தவர்கள் இன்று நடுத்தரவயதைத் தாண்டிய பின்னருங்கூட அந்த வெறுப்புநிலை மாறாமல் இருக்கின்றனர். 1981 யாழ் நூலக எரிப்பையும் 1990 இந்திய இராணுவக் கெடுபிடிகளையும் நேரில் பார்த்த பல வளரிளம் பருவத்தினருக்கு இந்த அனுபவம் தமக்கு ஒரு தாயகம் வேண்டும்தான் என்ற மனவுணர்வை மேலும் அதிகமாக்கி போராட்டத்தின் உந்துசக்தியாக மாற்றியிருக்கிறது. இதற்குமப்பால் இராணுவ கெடுபிடிகளுக்குள் நேரடியாக அகப்பட்டவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இராணுவத்திற்கெதிரான எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் உதவத்தயாராக இருப்பதை கண்கூடாகக் காணமுடியும்.
குடும்ப உறவுகள் மீதான பிணைப்பு
பொதுவாகவே அன்புக்குரியவர்களின் இழப்புகள் பெரியவர்களைவிட குழந்தைகளைத் தாக்குவது மிகவும் அதிகமாகும். பிள்ளையை இழந்த தாயைவிட தாயை இழந்துவிட்ட பிள்ளையின் பாதிப்பு மிகவும் அதிகம். நோய், எதிர்பாராத மரணம் போன்ற சாதாரண உயிரிழப்புகளை விட வலிந்து பறித்தெடுக்கப்பட்ட உயிரிழப்புகள் மிகவும் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தவல்லன. யுத்தத்தின் நேரடிப்பாதிப்புகளான குண்டுவீச்சுகள், இராணுவத்தின் சித்திரவதைகளால் தனது தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவருக்கோ அல்லது யுத்தத்தின் மறைமுகப் பாதிப்புகளான வறுமை, போசாக்கின்மை, மருந்துத்தடை போன்றவற்றில் ஏதாவதொன்றால் தன் அன்புத்தம்பியை அல்லது தங்கையை இழந்தவர்களுக்கோ பழிவாங்கும் உணர்வும் வெறுப்பும் தீவிரமாவது இயல்பானது. இது இவர்களை இயல்பாகவே தமது அழிவுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகப் போராடத் தூண்டும் அதேசமயம் இராணுவச் சுற்றிவளைப்புக்குள் அகப்பட்ட குழந்தைக்கோ அல்லது குண்டுத்தாக்குதலை நேரடியாக அனுபவித்த குழந்தைக்கோ பழிவாங்கும் உணர்வுக்கும் மேலாக அச்ச உணர்வு தீவிரமாகும். எனினும் தன்னால் காட்டமுடியாத எதிர்ப்பை இன்னொருவர் மேற்கொள்ளும்போது மகிழ்வும் திருப்தியும் ஏற்படும். குண்டுத்தாக்கத்தினால் ஏற்பட்ட உயிர், உடல் அழிவுகளுக்கு யாழ்மண் முகங்கொடுத்ததுபோல் தம் கண்முன்னே தம் உறவுகள் வெட்டப்பட்டும் சுடப்பட்டும் இழுத்துச் செல்லப்பட்டும் உயிருடன் எரிக்கப்பட்டும் இருந்ததை நேரில் பார்த்த எத்தனையோ பேரை மட்டக்களப்பு மண் போராட்டத்தின் உந்து விசையாகத் தந்திருக்கிறது.
தன் வாழ்விடத்துடனான பிணைப்பு
வீடுவாசல், நகைநட்டு, காணிபூமி என்ற பதங்கள் நடுத்தர வயதைத்தாண்டி வெளிப்படும் தமிழ்ச் சிந்தனைகளில் ஒன்று. வாழ்விடம் என்பது ஒவ்வொரு தமிழனைப் பொறுத்தும் வெறும் மழைக்கும் குளிருக்கும் பாதுகாப்புக் கொடுக்கும் இடம் அல்ல. அவனது அந்தஸ்தை வெளிக்காட்டும் பிரதான குறியீடு அது. அதிலும் நடுத்தர வாழ்நிலையைக்கொண்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்விடத்துடனான பிணைப்பைக் கிட்டத்தட்ட நோய் என்றே சொல்லிவிடலாம்.
வீட்டை அழகுபடுத்துவதற்காக ஆடம்பரத் தளபாடம் செய்வதற்காகச் சம்பலும் சோறுங்கூட சாப்பிட்ட எத்தனையோ குடும்பங்கள் அங்குண்டு. பெண்களின் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகைநட்டுக்கள் கூட வீட்டைப் பூரணப்படுத்த மனமுவந்து விற்கப்பட அல்லது அடைவு வைக்கப்படத் தயாராகும் அளவுக்கு வாழ்விடம் தமிழன் வாழ்வில் பின்னிப்பிணைத்துள்ளது. 'கையில மடியில இருந்ததை எல்லாம் வீட்டு;க்குள்ள முடக்கிப் போட்டன்' என்ற புலம்பலில் கையில் என்பது பணத்தையும், மடி என்பது நகை நட்டையுமே பெரும்பாலும் குறிக்கும். இந்த வாழ்விடத்தை தனது பெண்பிள்ளையின் எதிர்காலச் சீதனத்திற்காக மட்டும் கட்டியது என்ற குறுகிய எல்லைக்குள் இதை மலினப்படுத்திவிட முடியாது. மற்றவரிடம் இல்லாத ஒன்று தன்னிடம் இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கு இங்கு பொதுமையாகவே உண்டு. வீட்டில் வளர்க்கும் பூஞ்செடிகளில் கூட இது வெளிப்படும்.
இந்த மக்களின் வாழ்விடங்கள் பறித்தெடுக்கப்பட்ட போது இவர்களிடம் ஏற்பட்ட கொதிப்பும் வெறுப்பும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதவை. தன் வீட்டின் மீதான காதல் பலரை மனப்பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. தானும் தன் குடும்பமும் எவ்வித சேதமுமின்றித் தப்பிவிட்டோம் என்ற யதார்த்தத்தை உணர்ந்து ஆறுதல்பட முடியாதளவுக்கு இப்பாதிப்பு அதிகமாயிருக்கிறது. அன்புக்குரியவர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பைவிட வாழ்விடத்தை இழத்தல் இங்கு பல மறைமுக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. காணிபூமி, அணிகலன்கள் அனைத்தையும் முடக்கிய குடும்பங்கள் அது தொடர்பான விரக்தி நிலையைத் திரும்பத் திரும்ப மீட்கும்போது வீட்டின் சமூகச் சூழலை அது கடுமையாகப் பாதித்திருக்கிறது. அம்மாவின், அன்பு அக்காவின், தந்தையின் ஏக்கங்களும் அதனால் ஏற்படும் உடல் உளப்பாதிப்புகளும் எத்தனையோ பிள்ளைகளின் மகிழ்ச்சியான சூழலை பறித்தெடுத்திருக்கிறது. மீளாவறுமைக்குள் தள்ளி ஆதார வாழ்வுக்கே அல்லல்படும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாய்ப்பு நலன்கள் மீதான பிணைப்பு
வாய்ப்பு நலன்களில் பிரதானமானது கல்வி, காணி பூமியை வித்தாவது பிள்ளையைப் படிப்பித்து நல்ல நிலைக்கு ஆளாக்கிவிட வேண்டும் என்ற தவனம் தமிழனுக்குள் ஊறிக்கிடக்கும் ஒன்றாகும். வாழ்வைக் கொண்டுநடத்த உதவும் தொழில்சார் கல்வியைவிடவும் அந்தஸ்தின் குறியீடுகளாக விளங்கும் கல்வி வாய்ப்பை நோக்கி பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்களே எம்மிடம் அதிகமாகும். தமது பிள்ளைகளின் கல்வி, தரப்படுத்தல் மூலமோ யுத்தத்தின் நேரடி மறைமுக அழிவுகள் மூலமோ மறுக்கப்படும்போது தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வு, போராட்டத்தின் பலமிக்க உந்துசக்தியாக மாறியதை எவருக்குமே புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. 'கற்பதற்காய் போராடுவோம் - போராடுவதற்காய் கற்போம்' என்ற சுலோகமே இதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான்.
முடிவாக...
யுத்தத்தை நிரந்தர வாழ்வியலாக ஏற்று தமிழ்மண் மூன்று தசாப்தங்களை நெருங்கிவிட்டது. அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுதவழியிலுமாக அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி அரைநூற்றாண்டை நெருங்கிவிட்டது. அதேசமயம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் போர்ப்பண்புகளும் வீர வாழ்வுமோ பல நூற்றாண்டுகளையும் தாண்டியதொன்று. தன்நிலை தாழ்ந்தாலும் தன் தலைகுனிய தமிழ்மகன் எப்போதுமே தயாராக இல்லை. படிப்பில், பதவியில், வாழ்க்கை முறையில், மற்றவரைவிடத் தன்னை உயர்ந்;தவனாகக் கருதும் மனப்பாங்குள்ள தமிழனுக்கு அடுத்தவருக்குப் புத்தி சொல்லி, அடுத்தவரைக்கொண்டு வேலை செய்வித்து, அடுத்தவருக்காகவே தன்னைத் தியாகம் செய்து வாழப் பழக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தின் அடிப்படை ஆதார வசதிகளை மறுப்பதன் மூலமோ, உடல் உளச்சேதத்தை ஏற்படுத்துவதன் மூலமோ வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமற்றது. மாறாக அது மேலும் மேலும் இந்த மண்ணுக்காகப் போராடும் ஆரோக்கியம் மிக்க விதைகளை உருவாக்கவே வழிகோலும்.
யுத்தம் மனப்பாதிப்புகளை நிச்சயம் அதிகரிக்கத்தான் செய்யும் என்பதில் எவருக்குமே கருத்து முரண்பாடு இருக்கமுடியாது. ஆனால் இந்த மனப்பாதிப்புகள் சுயமரியாதையில் தீவிரபற்றுள்ள தமிழனை அடுத்தவருக்குப் பாரமாக, அடையாளத்தையே தொலைத்தவனாக அவனை மாற்றுவதற்குப் பதிலாக அல்லது மேலை நாடுகளில் உள்ளதுபோல் கூப்பிடு தூரத்திற்கு ஒரு உள ஆலோசனை நிலையங்களை உருவாக்குவதாக இருப்பதற்குப் பதிலாக பிடிவாதமும், பழிவாங்கும் உணர்வும், உரிமைக்கான உத்வேகமும்பெற்ற சமூகத்தையே உருவாக்கும்;: உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது என்பதே இத்தனை கால உயிரிழப்புகள், உடமை இழப்பகள், உரிமை மறுப்புகள் மத்தியிலும் சோர்வடையாத உரிமைக்குரல்களும், எதிர்ப்புணர்வும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment