Tuesday, February 04, 2014

கருப்பை உறவு



அறிமுகம்

மனிதனின் வாழ்க்கைக் காலம் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என்ற நான்கு பிரதான பருவங்களைக் கொண்டது. இந்த வாழ்க்கைக் காலத்தில் முதல் 18 வருடங்கள் குழந்தைப்பருவம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிமனித நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான ஆணிவேருக்கும் இந்தக் குழந்தைப்பருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனடிப்படையில்தான் குழந்தை வளர்ப்பு, குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் இன்று தீவிர கவனம் பெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வில் இறங்கும்போது குழந்தைப் பருவத்திற்கு முந்திய 10 மாதங்கள் தாயின் கருப்பையில் வளரும் ஒரு உயிரின் வாழ்நிலை தொடர்பான கேள்விகளும் ஆய்வுகளும் மனித சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்பியாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது. ஆற்றலும் ஆளுமையும்மிக்க ஒரு மனிதனை உருவாக்குவதற்கான அடித்தளம் இந்த கருப்பை வாழ்விலேயே போடப்படுவதை ஆய்வுகள் வெளிக்கொணர தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான கருப்பை உறவுநிலை பற்றிய தீவிர அக்கறை எடுக்கவேண்டியது அவசியமாகும். இந்த வகையில் கருப்பை உறவு தொடர்பான கருத்தியல் அம்சங்கள் தொடர்பாகவும், இந்த உறவு நிலையைப் பாதிக்கும் சூழல் காரணிகள் தொடர்பாகவும் ஒரு பொதுப் பார்வையை இக்கட்டுரை தர முயல்கிறது.


பரம்பரையா சூழலா ? 

குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் முனைப்புப்பெற்ற காலத்திலேயே மானுட வளர்ச்சியைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகளா? சூழல் காரணிகளா? என்ற விவாதமும் தொடங்கிவிட்டது. ஒரு குழந்தை பிறப்புக் காரணிகளின் அடிப்படையில் அதாவது தகப்பனை அல்லது தாயை அல்லது இருவரின் அம்சங்களையும் கொண்டுதான் பிறக்கின்றது என ஒரு சாராரும் சூழல் காரணிகள்தான் குழந்தை வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றது என இன்னொரு சாராருமாக இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. ஆனாலும் கூட அண்மைக்கால ஆய்வு முடிவுகளின் படி சூழலா, பரம்பரையா என்ற தனிக்கட்சி விவாதங்களுக்கான கருத்துநிலை தகர்ந்து இரு காரணிகளதும் பரஸ்பர செல்வாக்குத் தொடர்பான கருத்தொற்றுமை நிலை ஆய்வாளர்களிடையே ஏற்பட்டுவிட்டது. ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழக உளநோயியல் ஆய்வாளரான ஸ்ரான்லி கிரீன்ஸ்பான் (ளுவயடெநல புசநநnளியn) இது தொடர்பாகக் கூறுகையில் 'சூழலுக்கும் பரம்பரை அலகுகளுக்கு மிடையிலான தொடர்பு போட்டித்தன்மை அதாவது ஒன்றை ஒன்று அழித்தல் வாய்ந்ததல்ல. இது நடனம் போன்ற நேர்த்தியான அசைவுத் தன்மை வாய்ந்தது. இந்த அசைவானது கரு உருவாகி மூன்றாவது வாரத்திலிருந்தே தோன்றிவிடுகின்றதெனவும் சூழல் காரணமாக கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள் ஆளுமைமிக்க பரம்பரை அலகுகளின் வழி உருவாகிக்கொண்டுவரும் கருவின் போக்கிலேயே திசை திருப்பிவிடும்' எனக் கூறுகின்றார். எடுத்துக் காட்டாக மூளைத்திறன் அதிகம் வாய்த்த பெற்றோரின் மரபணுக்களின் வழி உருவான குழந்தையை தாய் எதிர்கொள்ளும் சூழல் பாதிப்புகள் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக மாற்றும் வல்லமை வாய்ந்தவையாகும்.

குறிப்பாக கரு உருவாகிய நாளிலிருந்து 2-6 வார காலங்களில்தான் குழந்தையின் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தையின் இருதயம் துடிப்பதும் கைகள், கால்கள், விரல்கள் என்பன தோன்றுவதும் உள்ளுறுப்புகள், நரம்பமைப்புகள் உருவாவதும் இக்காலப்பகுதியிலேயேதான். இக்காலத்தில் தாயின் உடலில், மனநிலையில், உணர்வுநிலையில் எற்படும் மாற்றமானது கருவை நேரடியாகவே தாக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.


பாதிப்புகள்: ஊருக்கொருவிதம்   

வறுமையை அடிப்படைப் பண்பாகக்கொண்ட சமூகங்களில் போசாக்கின்மையால் ஏற்படும் நோய்கள் கருப்பை உறவுநிலையை பாதிக்கிறது. செல்வச் செழிப்பைப் பிரதான பண்பாகக் கொண்ட, உடலுழைப்புக் குறைந்த பெண்ணுக்கு சலரோகம், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. 'தீவிர பெண்ணிய' சிந்தனைகளுக்கு உட்பட்டு மதுப்பழக்கம், புகைபிடித்தல், போதைப் பொருள் பாவனை போன்றவற்றை பின்பற்றும் பெண்ணின் கருப்பையானது மூளை, எலும்பு வளர்ச்சியற்ற குழந்தையையே உற்பத்தி செய்யும் அபாயம் உண்டு.

ஈழத்தமிழ்ப் பெண்களைப்போன்று இன ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் பெண்ணுக்கு உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்பும் அதிகமாகும். அகதி வாழ்வு, சொத்துக்களின் இழப்பு, பொருளாதார கஷ்டங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு, திடீர் மரணங்களால் ஏற்படும் அதிர்ச்சி, எறிகணைத் தாக்கங்கள் என்பன பாரிய உடல் உளத் தாக்கத்தை ஏற்படுத்தும்.


கருப்பை உறவு நிலை: அன்றும் இன்றும் 

இன்றைய தந்தைவழிச் சமூக அமைப்பிலும் சரி இதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த தாய் வழிச் சமூக அமைப்பிலும் சரி தாய்மைநிலை என்பது கொண்டாடப்; படுவதற்குரியதாகவே இருந்து வருகிறது. தம்மிடம் இருக்கும் பொருளாதார வசதிகளுக்கமைய கருவுற்றிருக்கும் பெண்ணின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவதும், உடல், உள ஆரோக்கியத்தில் குடும்பத்தவர் அதிக கவனம் எடுப்பதும், சடங்குகள் மூலம் தாய்மைநிலை கொண்டாடப்படுவதும் இயல்பாகவே இருந்து வருகிறது. ஆனால் கலாச்சார வரம்பை மீறிய தாய்மை நிலையை இழிவுபடுத்தும் கருத்துப் போக்குகள் தந்தைவழி சமூக அமைப்பின் கருத்தியல் அச்சுக்களில் கச்சிதமாக பொருந்திவரும் பெண்ணின் தாய்மைநிலையே கொண்டாடப்படுகிறது என்ற யதார்த்தத்தை கோடி காட்டி நிற்பதனால் கருப்பை உறவுநிலை  தொடர்பான ஆரம்ப கருத்தியல் பற்றிய தெளிவான புரிந்து கொள்ளல் ஒன்று அனைவருக்கும் அவசியமானதாகும்.

காலங்காலமாக மனித சமூகத்தினால் பின்பற்றப்பட்டு வந்த சமூக அமைப்புகள் (நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்றன) வழி உச்சம் பெற்றுள்ள சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகள், இந்த சமூக அமைப்புகளுக்கு எதிர்ப்பியக்கங்கள், சமூக விஞ்ஞான ஆய்வுகளின் வழி தோற்றம் பெற்ற பெண்ணிலைச் சிந்தனைகள் என்ற ஒரு சிக்கல் வாய்ந்த தற்கால சமூக அமைப்பு ஒன்றுக்குள் நுழையமுதல் இருந்த சமூக அமைப்பில் காணி, வீடு போன்று பெண்ணும் முழுக்க முழுக்க ஆணின் சொத்தாகவே கருதப்பட்டாள். இந்தச் சொத்தின் உடலுக்கோ, உணர்வுக்கோ பங்கம் ஏற்படாத வகையில் மிகவும் நுணுக்கமாகவும் திட்டமிட்ட வகையிலும் ஆண் உருவாக்கிய கருத்தியல்கள் பெண்ணே 'தன்னை ஒரு சொத்தாக' கருதுமளவிற்கு வளர்த்துவிட்டது. ஆணின் வாரிசை சுமக்கின்றோம் என்ற பொறுப்புணர்ச்சியில் பெண்ணும், தனது வாரிசை சுமக்கின்றாள்;: என்ற அதிக அக்கறையில் ஆணும் இருந்த நிலையில் கருப்பை உறவுநிலையில் சிக்கல் எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. பெண்ணின் உடல், உள ஆரோக்கியமானது மத, கலாச்சார, பண்பாட்டு தளைகளால் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது. குழந்தை உருவாக்கத்துக்கு வேண்டிய மூலப்பொருள்களில் ஒன்றை வழங்குவதுடன் ஆணின் பணிமுடிவடைந்து விடுகிறது. மிகுதி முழுக்க தன் பொறுப்பில் தான் என்ற அறிவோ, அதற்கான சூழலோ அன்றைய பெண்ணுக்கு இருக்கவில்லை.

ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. சொத்து என்ற தெளிவான நிலை உருக்குலைந்து இன்றைய பெண்ணின் விம்பம் சரியான வகையில் அடையாளப்படுத்த முடியாத வகையில் தெளிவற்று நிற்கிறது. தான் யார்? என்று தன்னைத்தானே கேள்விகேட்டு தனது இருப்பை உறுதிப்படுத்த தடையானவற்றுக்கெதிராக சாம, பேத, தான, தண்ட நிலைகள் அனைத்தையுமே பிரயோகிக்கும் சமூகப் பிரஜையாக பெண்ணை மாற்றிக் கொண்டிருக்கின்றது. தீவிரமாகிக் கொண்டுவரும் பெண்ணிலைச் சிந்தனைகள், ஒருபுறம் ஏற்கனவே சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் கருத்தியல்களுக்கும் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளுக்கு மிடையிலான மோதல், மற்றொருபுறம் பக்கத்து வீட்டுச் செல்வச் செழிப்பைப் பார்த்தோ அல்லது தொலைக்காட்;சிப்பெட்டி வழி உலகைப் பார்த்தோ அதன்படி தானும் வாழவிரும்பும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற உச்சமடைந்து கொண்டு செல்லும் சமூக, பொருளாதார, கலாச்சார ஏற்றத் தாழ்வுகள், இன்னொரு புறமோ உயிர், உடல், உடைமை இழப்புகள,; அகதிவாழ்வு, பொருளாதார கஷ்டங்கள் என்பவற்றின் மூலம் மனிதனின் இருப்பையே கேள்விக்குரியதாக மாற்றியிருக்கின்றன. மண் ஆக்கிரமிப்பும், இன ஒடு;க்குமுறையும் சார்ந்த யுத்தங்கள், இத்தகைய சூழல் பாதிப்பு பெண்ணின் மன உலகத்தை உலைக்களமாக மாற்றியிருக்கிறது. சில மரபை மீறும் வலுவற்று எரிமலை போல் உள்ளுக்குள்ளேயே குமுற சில காட்டாற்று வெள்ளம் போல் தன்னிச்சையாக ஓடிக்கொண்டிருக்க இன்னும் சில இவ்விரண்டுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற தொரு நிலையில் கருப்பை உறவுநிலை சிக்கல் வாய்ந்ததாக மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை.


உற்பத்திக் கருவியா  உற்பத்திச் சக்தியா ?      

உற்பத்திக்கருவி என்பது எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் கருவியாகும். (உ-ம் மாவரைக்கும் இயந்திரம்) உற்பத்திக் கருவியும் அதை இயக்குவதற்கான அறிவும் அனுபவமுமுடைய மனிதனும் இணைந்து உற்பத்திச் சக்தியாக மாறுகிறது. இதனடிப்படையில் பார்க்கும்போது பெண்ணின் கருப்பை என்பது இயந்திரம் போன்று வெறுமனே ஆணின் கருவை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு கருவியல்ல. தந்தையின் உயிரணுவானது (விந்து) தாயின் உயிரணுச் சுவருக்குள் (முட்டை) அதை கரு வளமுடையதாக மாற்றுவதுடன் ஆணின் பணி முடிவடைந்து விடுகின்றது. கரு உருவான காலம் முதற்கொண்டு 10 மாதங்கள் வரையும் தாயின் கருப்பையே புதிய உயிரொன்றின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்கின்றது.

புதிய உயிரொன்றின் உருவாக்கத்திற்கு வேண்டிய இரு அடிப்படை மூலக்கூறுகளும் ஆணுக்கும் பெண்ணுக்குமுரியவை. ஆனால் இந்த மூலக்கூறுகளினின்றும் முழுமையான உருவத்தை சமைக்கும் மேலதிகப் பொறுப்பு தாயிற்கே முழுக்க முழுக்க உரியது. எனவே இங்கு ஆணின் கருவைச் சுமக்கும் வெறும் உற்பத்திக் கருவிதான் பெண் என்ற கருத்துநிலை தகர்ந்து ஆற்றலும் ஆளுமையும்மிக்க ஒரு உயிரை உற்பத்தி செய்யும் ஒரு உற்பத்திச் சக்தியாக பெண் இருக்கவேண்டிய யதார்த்தத்தை கருப்பை உறவு தொடர்பான அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துக்கொண்டே வருகின்றன. ஆனாலுங்கூட பெண்ணை உடைமையாக்கி, அவளின் உணர்வையும், அறிவையும் ஒடுக்கி, தேவையான எரிபொருள் நிரப்பி, அடிக்கடி பழுதுபார்த்து, எண்ணையிட்டு பராமரித்து தனக்கு வேண்டிய வாரிசை நூற்றாண்டு நூற்றாண்டுகளாக உற்பத்தி செய்து கொண்டிருக்கும் மனித மூளையை மெச்சத்தான் வேண்டும்.

கருத்தியலில் இன்னோர் புரட்சி தேவை 

'நாம் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல' காதில் அடிக்கடி விழும் இந்த பெண்ணியக் கோஷம் கருப்பை ஒரு உற்பத்திக் கருவி என்ற ஆணாதிக்க கருத்தியலில் விழும் ஓர் அடியாகவே பார்க்க வேண்டும். எனினும் கருப்பை தொடர்பான மாற்றுக் கருத்தியல் ஒன்றை பெண்கள் சமூகம் தெளிவாக முன்வைக்கவில்லை என்றே தோன்றுகிறது. கருப்பை வெறும் உற்பத்திக்கருவி அல்ல என்ற விழிப்புணர்வு ஆக்கபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும் அதேசமயம் கருப்பை என்பது ஆற்றல் மிக்க உற்பத்திச் சக்தி என்ற கருத்தியல் சரியான முறையில் வேரூன்றவில்லையோ என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது.

வெளியே ஆணாதிக்க போக்குக்கு எதிரான பெண்ணிய சிந்தனைகள் தனிமனித திருப்தியை நோக்கி செல்கின்றதேயன்றி சமூகப் பொறுப்புணர்வு என்ற அம்சத்தை முற்றாக மறந்துவிட்டனவோ என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது. 'கருப்பை ஒரு சுமை', 'கருப்பபையை கழற்றி வீசுங்கள்' என்ற கோஷங்கள், பாலியல் சுதந்திரம் தேவை என்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஒரு புறமும், தானே விரும்பி உடலுறவு கொண்டு குழந்தையை பெற்றுவிட்டு 'என்னை ஏமாற்றிவிட்டார்' என்ற முறைப்பாட்டுடன் நிற்கும் பெண்கள் இன்னொரு புறமுமாக இந்த சந்தேகங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஆற்றலும் ஆளுமையும்மிக்க ஒரு சமூக பிரஜையை உற்பத்தி செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க தன்னில்தான் தங்கியிருக்கின்றது என்ற அறிவும் உணர்வும் இன்றைய பெண்ணுக்கு நிறையவே இருக்கிறது. இருக்கவும் வேண்டும். தனது கருப்பையில் ஆணின் உயிரணுவை உள்வாங்க தன்னைத் தயார்படுத்தும்போதே உருவாகப்போகும் புதிய உயிருக்கான முழுப்பொறுப்பையும் பெண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை இயற்கை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்ற யதாhர்த்தத்தை ஆண்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ பெண்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இது ஆணைவிட பெண்ணுக்கு சமூகப் பொறுப்பு இருப்பதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. சமூகத்தின் வாரிசை உருவாக்கும் தயார் நிலையில் உடல், உள, உணர்வு, ஒழுக்கநிலைகளில் கூடுதல் கவனம் வேண்டியுள்ளது. தனது வாரிசை சுமக்கின்றமையால் பெண் ஒழுக்கமுள்ளவளாக இருக்கவேண்டுமென்ற ஆணாதிக்க சிந்தனை வழிப்பட்டதல்ல இக்கருத்து நிலை. மாறாக இயற்கை இயல்பாகவே பெண்ணுக்கு வழங்கியிருக்கும் மேன்மை நிலையை உய்த்துணர்ந்து அதற்கமைய சமூகப் பொறுப்புடன் இயங்க வேண்டிய தார்மீகக் கடமைக்குத் தயாராக வேண்டும் என்ற பெண்ணிலை நோக்கின் வழிப்பட்டதே இது.

ஆனால் இந்த அறிவு நிலைக்குப் பதில் தனிமனித திருப்தியை நோக்கி பெண் நடை பயில்வதானது பெண்ணிலைச் சிந்தனைகளில் மீள்பார்வை ஒன்று தேவை என்பதையே உணர்த்தி நிற்கிறது. ஒரு வேளை தன்மீதான தளைகளை அகற்றுவதில் இன்றைய பெண்ணுக்கு இருக்கும் தீவிர முனைப்புத்தான் கருப்பை ஒரு சுமை என்ற தனிமனித திருப்தியில் இருந்து விலகி கருப்பை ஒரு ஆற்றல் மிக்க சக்தி என்ற அபிவிருத்தி நோக்கிய அவளின் சிந்தனைக் கதவை திறக்கும் வாய்ப்பை தள்ளிப்போடுகின்றதோ?



















No comments: