Sunday, March 09, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்


'என்னடி! கொக்காள் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லைப் போல கிடக்கு. ஏழு மணியாவிட்டுது. இன்னும் எழும்பாமல் படுத்திருக்கிறாள்'.

தன்னுடைய செல்ல மகளைக் கேட்டபடியே தேத்தண்ணி வைக்க அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தாள் பூமணி. இவள் வேலைக்கு வெளிக்கிட்ட காலம் தொடக்கம் அம்மாவுக்கு இவளுடனான அந்நியோன்னியம் மெல்ல மெல்ல விலகிக் கொண்டதும் ஆரம்பத்தில் காரணம் புரியாமல் குழம்பினவளுக்கு, காரணம் தெரிய வேண்டும் என்ற விருப்பம் மெல்ல இல்லாமல் போய்விட்டதும் நடந்து வருடங்கள் பல.

மாதத்தில் வரும் இந்த மூன்று நாட்களும் அவளுக்கு உபத்திரவ நாட்களாகி இப்போது இருபத்தைஞ்சு வருசமாச்சு. வயிற்றுக் குத்துடன் தொடங்கும்   உபாதை இறுதியில் வாந்தியாக வெளிவந்து தான் மெல்ல அடங்கும். இதில் வினோதம் என்னவென்றால் குத்துக்குச் சரிசமமாக அவளுக்கு இந்தக் காலங்களில் அதிக பசியெடுக்கும். குறைந்தது இருநாட்களாவது லீவு போட்டுவிடுவாள்.

'டாக்குத்தர் மாரிட்டை காட்டினால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்டு சொல்லுகினம். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கலியாணம் கட்டி ஒரு பிள்ளை பிறக்க இந்தக் குத்து நிண்டுவிடும் எண'டு சொல்றான்கள்' அம்மா பக்கத்து வீட்டுக் கமலம் அக்காவுக்கு அன்றொருநாள் பிரலாபித்தது நினைவுக்கு வந்தது.

'கலியாணம் கட்ட நான் என்ன--? மாட்டன் எண்டே நிக்கிறன்;. அதுவும் வரவேணுமே' மனத்திற்குள் குமைந்து கொண்டே தன் முன்னே தாய் கொண்டு வந்து வைத்த சாப்பாட்டை பார்த்தாள் வசந்தி. பசி, வயித்துக்குத்துடன் அம்மாவின் அலட்சியமும் சேர்ந்து கோபம் தலைக்கேறியது.  

எணை!. இந்த நேரங்களிலையாவது குளிர்ச்சாப்பாட்டை  குடுக்கக்கூடாது எண்டு யோசிக்கமாட்டியோ?'

'நான் என்ன செய்யிறது! கொண்ணை திருக்கை மட்டுந் தான் வேண்டியந்தவன்.'

அம்மாவுடன் இவள் ஏதும் கதைக்க வெளிக்கிட்டால் அது சண்டைதான் எண்டு முதலே முடிவெடுத்து கவர் எடுக்க வந்து விடுவாள் அம்மாவின் செல்ல மகள். வேலையின்றி வீட்டில் இருக்கின்ற தனக்கு அம்மாவை ‘காக்காய்‘ பிடித்து அதன் மூலம்  கிடைக்கிற மேல்மிச்சங்களுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்கு.

ஒரு பொட்டச்சி உழைச்சுக் குடுக்க வீட்டிலை சும்மா இருந்துகொண்டு அவருக்குப் பிடிச்ச சாமான் தான் வேண்டுவாராக்கும். மனசிலை வந்ததை வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை அவளால். 'மாதம் முழுக்க உழைச்சுப் போடுறன். ஒரு முட்டையாவது பொரிச்சுத் தர இந்த மனிசிக்கு ஏன் மனம் வரமாட்டுதாம்' புறுபுறுத்தபடி அந்த ஓலைப் பாயில் மீண்டும் சரிந்து படுக்க முனைந்தவளின் கவனத்தை தங்கையின் குரல் திருப்பியது.


கண்ணாடியின் முன் நின்று கொண்டு கடலை மாவும் முட்டை வெள்ளைக் கருவும் கலந்த கலவையை முகத்துக்குப் பூசியபடியே தங்கை புறுபுறுப்பது அட்சரசுத்தமாகக் கேட்டது.

 'மனிசர் படுகிற இந்தக் கஷ்டத்துக்கை இவவுக்கு முட்டைப் பொரியல் கேட்குதாக்கும்.'


2 comments:

Unknown said...

மனசு கனக்கும் பதிவு. உழைக்கும் பெண்களில் பலருக்கு வீட்டில் கிடைக்கும் சாட்டையடிகள் பல. திமிரே காட்டாவிட்டாலும் அவள் உழைக்கிறன் என்ற திமிர் என்று சொல்லியும் அவளின் மனசில் விழுகின்ற அடிகளால்தான் அவள் வாயடைத்துப் போகிறாள். பெண்களின் வாய்களைக்கட்டிவைத்து வயிறு வளர்க்கும் ஆண்கள் ஆயிரம்பேர் என்றால் உடனிருந்து உயிரை உறிஞ்சும் பெண்களும் ஆயிரம்தான். அதேன் மிஸ் உழைக்கும் பெண்ணோ உழைக்காத பெண்ணோ பெண்ணுகன்கு மட்டும் இத்தனை வலி?

சோதிதாசன் said...

பெண்களுடைய பிரச்சனையை பெண்கள் எழுதும் போது அதில் யதார்த்த பண்பு கூடுதலாக இருக்கும். இன்று இதை பெண்மொழி என்று அடிக்கடி விவாதிக்கிறார்கள் மனதைத்தொட்ட பதிவு நன்றி சிறீ.