Monday, August 01, 2005

எத்தனமின்றி ஏது வாழ்வு...?

வேரொன்று தன் விழுதை
வேண்டாது விலக்கிவிட
தனியனாய் நின்று
தழைத்தோங்கும் வலுவின்றி
விழுந்து பின் எழுந்து...


அறியாச் சிறுவயதில்
அடைக்கலந் தந்த மாமன்
தன் வேட்கை தீர்க்க வர
விவரம் தெரியாது
விழுந்து பின் எழுந்து...


போதிக்கும் மனங்களின்
பட்சபாதப் போக்கினால்
கற்கும் வித்தைதனில்
காலு}ன்றும் திறனின்றி
விழுந்து பின் எழுந்து...


காலச் சுழலில்
கோலம் அழிந்ததும்
விரும்பிப் படுத்தவன்
விரைந்து விலகிவிட
விழுந்து பின் எழுந்து...


உழைத்துச் சேர்த்ததை
உறுஞ்சித் தீர்த்துவிட்டு
நயவஞ்சக உறவுகள்
நாசூக்காய் விலக
விழுந்து பின் எழுந்து...


தன் உதிரங் குடித்து
தளிர்த்த தன் விழுதும்
தன் வாழ்வு வேண்டி
தன் வேரை விலக்கிவிட
விழுந்து பின் எழுந்து...

ஓ...
விழுவதும் பின் எழுவதும்
வாழ்வாகிப் போனதால் தான்
உரமேறி உரமேறி
அவள் உறுதியாய் நிற்பதுவோ..?

No comments: