Tuesday, February 04, 2014

விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள்


அறிமுகம்;

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள். தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித்தெரியும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின் இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு தன்மீது வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக்கொள்ளப் போராடுதல்;: மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல். பெண் தனக்குத்தானே விரும்பி அணிபவை, பெண்ணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அணிவித்துவிடுபவை என ஆணாதிக்க சமூக அமைப்பால் பெண்ணைச் சுற்றியிருக்கும் விலங்குகள் அனைத்திலிருந்தும் விடுபடவேண்டிய அவசியம் பெண்ணுக்கு உண்டு. இவ்விலங்குகளில் பல அறிவின் துணைகொண்டு பலமாக அகற்றப்படக் கூடியவை. சில அதிகப் பிரயத்தனத்துடன் அகற்றப்பட வேண்டியவை. இன்னும் சில கூட்டு முயற்சிகளினூடாக மட்டுமே அகற்றப்படக் கூடியவை. வேறும் சிலவோ அடித்து நொருக்கித்தான் அகற்றப்படக் கூடியவை. இதில் பெண்ணின் ஆளுமையை மிக மோசமாகச் சிதைக்கக்கூடிய வல்லமையுள்ள அதேசமயம் அறிவின் துணைகொண்டு மிகச்சுலபமாக அகற்றக்கூடிய ஒரு விலங்கு தொடர்பான ஒரு பொதுப்பார்வையை தர்க்கரீதியாக ஆராயும் முயற்சியே இக்கட்டுரையாகும்.    

சாமத்தியச் சடங்கு

வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல்மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெருசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சு வழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப்பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத்தில் பெண் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்குத் தயாராகி விட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.


பழையன கழிதலும் புதியன புகுதலும் 

துஷ்ட ஆவிகள் தீண்டாதிருக்கும் பொருட்டு குப்பை, விளக்குமாறு போன்றவற்றில் இருத்தி நீராட்டுதல், வேப்பிலை சுற்றுதல், கழிப்புக் கழித்தல் என்பனவும், இவள் என் மகனுக்கு உரியவள் என்ற உரிமையைத் தக்கவைக்கும் பொருட்டு தாய் மாமனுக்கு சடங்கில் முதல் முக்கியத்துவம் கொடுப்பதும், 'தீட்டு' சீலையை சலவைத் தொழிலாளியிடம் ஒப்படைப்பதன் மூலம் பெண் பருவமடைந்த செய்தியை ஊருக்கு உறுதிப்படுத்தும் பொருட்டு ஊர்முழுவதும் தொடர்பு பேணும் சலவைத் தொழிலாளிக்கு முக்கிய இடம் கொடுத்தல் என்பனவும் காலம் காலமாக இச்சடங்கின் முக்கிய அம்சங்களாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.

பருவமடைந்த நாளிலிருந்து வீடுதவிர வேறு இடங்களிற்குப் போவதைத் தடுத்தல், பள்ளி வாழ்வைத் தடை செய்தல், கூடப்பிறந்த ஆண் சகோதரத்துடன்கூட நெருங்கி நின்று கதைப்பதைத் தடுத்தல் போன்ற இருநூற்றாண்டுப் பழைமைகள் இன்றைய காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று சுட்டிக்காட்டிப் பேசுமளவிற்கு அரிதான நிகழ்வுகளாகிவிட்டன.

'அனைவரிற்கும் கல்வி' என்ற சுலோகம் அயலவனின், வகுப்புத் தோழனின் தொழில் செய்யும் இடங்களில் உள்ள சமூகத்;தின் பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொள்ள உதவியது போல், பண்பாட்டுப் படையெடுப்புகளும், பத்திரிகை போன்ற பொதுசனத் தொடர்பு சாதனங்களும் உலக வாழ்நிலையை அறிந்து கொள்ளவும் அதைப் பின்பற்றவும் தூண்டியமையானது வேப்பிலை சுற்றுதல், பருவமடைந்த தினத்திலிருந்து ஒரு மாதமோ அதற்கு கூடிய நாளோ வீட்டு மூலைக்குள் முடக்கி வைத்தல், இரும்புத்துண்டும் கையுமாய் திரிதல் போன்ற மூடப்பழக்கங்களை இல்லாமல் செய்துவிட்டது மட்டுமன்றி, பருவமடைதல் கடவுள் செயல் என்ற நம்பிக்கையையும் போக்கடித்துவிட்டது.

ஆனால், இன்று கண்முன்னே நடைபெறும் சில அலங்கோலங்களைப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களே பரவாயில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதிலும் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தமிழ்; மண்ணில்; நுழைந்த வீடியோ தொழில்நுட்பம் ஈழத்து அறிவுசார் வளர்ச்சிகளை உலகெங்கும் பரப்;ப முயன்றதை விடவும் காரண காரியத் தொடர்பற்ற, மனம்போனபோக்கின்படி செய்யப்படுகின்ற, மூட நம்பிக்கைகளை விடவும் மோசமான புதிய புதிய சடங்குகள் புதிது புதிதாக மனித மூளையில் உதிக்கக் காரணமாக மாறியிருக்கிறது. சமூக விழிப்புணர்வு, அறிவூட்டல், பண்பாட்டுக்கலப்பு எது வந்தாலுங்கூட மாற்றமடையாது பேய் பூதங்களில் நம்பிக்கை வைத்து உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படும் எத்தனையோ சடங்குகளை, ஆட்டங்காண வைத்து வெறும் சம்பிரதாயங்களாக மாற்றிய வல்லமை இந்த வீடியோ தொழில்நுட்பத்திற்கு உண்டு. இதன் வருகையுடன் சடங்குகளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பரவலாக இடம்பெறத் தொடங்கியதுடன் இந்தக் கண்மூடித்தனமான புதிய சடங்குகள் பெரும்பாலும் படித்த, நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே அதாவது மூடப்பழக்கங்களின் மூலத்தை அறிவுத்தேடலின் வழி கண்டறியும் வாய்ப்பு அனைத்தும் டாம்பீக வாழ்வுக்குள் அமுங்கிப் போய்க்கிடக்கும் குடும்பங்களிலேயே அதிகம் கடைப்பிடிக்கப்படும் அவலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.


புதுப்புது நுட்பங்கள்   

ஆளுயரத்திற்கும் அரையடி மேலாவது வேலியடைத்துக் குளிக்கும் பண்பாடு, நெருங்கிய உறவுகளுடன் மட்டுமே பால் அறுகு வைத்து நீராட்டும் பண்பாடு ஊர் முழுவதையும் கூட்டி ஊர்ப் பொதுக் கிணற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்று நீராட்டும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கன்னிப்பெண்கள் தவிர்க்கப்பட்டு வயதுவந்த பெரியவர்கள் மட்டுமே அதிகம் கலந்து கொள்ளும் நிகழ்வு, விதவிதமான நிறங்களில் நீர் நிறைத்து, ஒற்றை விழ ஒன்பதோ, பதினொன்றோ அதற்கும் மேலோ செம்பெடு;த்துச் சென்று பிள்ளையின் தலையில் நீர் ஊற்றுதல், குத்துவிளக்கு எடுத்தல், பூப்போடுதல் என்று சிறுமியரையும், இளம் பெண்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் ஒரேவித ஆடை அலங்காரங்கள் முக்கியம் பெறுவதன் காரணமாக மனமகிழ்வுக்கு உரிய இந்த நிகழ்வு ஏழைப்பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தேவையற்ற மன உளைச்சலையும், சங்கடங்களையும், வரவுக்கு மீறிய செலவையும் ஏற்படுத்துவது தான்.

தொட்டிக்குள் நீர் நிரப்பிப் பூக்கள் போட்டுப் பிள்ளை நீராடுவது போல் படம்; பிடிக்கும் நிகழ்வு கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களிடையே பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்பமாகும். இடப்பெயர்வால் ஏற்பட்ட வாழ்நிலைச் சூழலுக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை  தொட்டி வாய்ப்புகள் மிகவும் குறைந்த வன்னி மண் தோற்றுவிக்க, நிலத்தில் கிடங்கு வெட்டி மண் கரையாமல் அதன் மேல் தரப்பாள் (வுநுNவு) போட்டு அதற்குள் நீர் நிறைத்துப் பூக்கள் நிரப்பி நீராட்டு விழா நடத்துவது புதியதோர் பாணியாக மாறியிருக்கிறது.

பிள்ளையை நன்கு அலங்கரித்து மணவறை கட்டி வீட்டுச்சடங்குகளை முடித்த பின்னர் கோயில் கும்பிடுவதற்கு பிரதான பாதையால் ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்துச் செல்லுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.

'வெளிநாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்து வைக்க வேண்டி வந்தால், பிள்ளையை அலங்கரித்து ஆசை தீரப்பார்க்க முடியாமல் போய்விடும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கின்றோம்' என்று செய்யும் செயல் எல்லாவற்றுக்கும் ஒரு சப்;பைக்கட்டு கட்டிவிடுவது பொதுவாகி விட்டது.

ஒன்றையொன்று வெல்லும் கேலித்தனங்கள்

'உன்னை விரும்புகிறேன்' என்று கடிதம் போட்டாலோ, நேரில் கேட்டாலோ உள்ளத் தெளிவுடன் பதில் சொல்வதை விட்டுவிட்டு கத்தி பொல்லுடன் கிளம்பி விடும் இரத்த உறவுகள், 'என் பிள்ளை கருத்தரிக்கும் தகுதி பெற்றுவிட்டாள்' என்று மேளதாளங்களுடன் ஊர்கூட்டிப் பறை சாற்ற எப்படிச் சம்மதிக்கின்றனர்?

வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொது இடங்களிலோ தவறுதலாக கைகால் பட்டு விட்டால், முறைத்துப் பார்த்துச், சிலசமயம் செருப்புக் கழற்றும் அளவுக்கே கோபப்படும் நாம் வெட்க உணர்வு எதுவுமின்றி பலர் முன்னிலையில் குளியல் காட்சிக்குத் தயாராக எப்படிச் சம்மதிக்கின்றோம்?

மாதக்கணக்கில் வீட்டு மூலைக்குள் முடக்கி, காலை மாலை என்று முட்டை, நல்லெண்ணெய், உழுத்தங்களி, சரக்கரைப்பு என்று ஊட்டமுள்ள உணவுகளின் அளவுக்கதிகமான திணிப்புக்கு எதிராக முரண்டு பிடித்து இன்று அவற்றை முற்றாக ஒழிக்கும் வல்லமையை பெற்ற எமக்கு, கழிப்புக்கழிக்கும் வரை இரும்புத் துண்டும், வேப்பிலையுமாய்த் திரிவதை இல்லாதொழித்து இரண்டு கிழமைக்கு முன்னதாகவே பாடசாலை, ரியூசன் என்று பறந்தோடும் வல்லமை பெற்ற எமக்கு, 'நான் கருத்தரிக்கத் தயார்' என ஊர் கூட்டிப் பறைசாற்றும் இந்த அசிங்க நிகழ்வை மட்டும் ஏன் இல்லாமல் செய்ய முடியவில்லை? அதிலும் பொருளாதார வசதி குறைந்த பெற்றோரைப் பிடிவாதம் பிடித்தோ அல்லது பயமுறுத்தியோ வகுப்புத் தோழிக்கு எப்படி எப்படியெல்லாம் கொண்டாடினார்களோ அதேபோல் எனக்கும் செய் என்று நிர்ப்பந்தி;க்கும் அளவுக்கு நாம் வந்தது ஏன்....?

வேப்பிலை சுற்றுவதையும், இரும்புத்துண்டும் கையுமாய் திரிவதையும் மூடத்தனம் என்று உணர்ந்து கைவிடும் அளவுக்குச் சமூகவிழிப்புணர்வு பெற்ற, படித்த பெற்றோர், அதைவிடவும் மோசமாக 'பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் உடற்தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான மாற்றம்' என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்ட பின்புங்கூட இத்தகைய காரியங்களில் கவனம் செலுத்துவது எப்படி?

தலைமுறை இடைவெளி

மனித வாழ்க்கைக் காலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளி நீண்டதாகவும் சிக்கல் வாய்ந்தாகவுமே இருந்திருக்கின்றது. எனினும் அறிவியல் தொழில்நுட்ப வழி உருவான தொடர்பு சாதனப் பயன்பாடும், பண்பாட்டுக் கலப்புகளும் இந்த முரண்பாட்டை ஒருசில தசாப்தங்களாக மிகவும் சிக்கலாக்கியிருக்கிறது. மனிதநடத்தைக் கோலங்களோ, வாழ்க்கைப் பாணியோ, சமூகப் பழக்க வழக்கங்களோ துரித மாற்றத்திற்கு உட்படும் அளவுக்கு தனிநபர் அனுபவங்களை – குறிப்பாகப் பெற்றோரின் வாழ்வியல் அனுபவங்கள் - நடைமுறை வாழ்வுக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உலகளாவிய ரீதியில் மிகவும் குறைவாகவே உள்ளது. எந்தவொரு சமூகத்திலும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்திற்கும் தலைமுறை இடைவெளியின் அளவுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு. அதாவது இறுக்கமான பண்பாட்டு விதிகளைக்கொண்ட நம்மைப் போன்ற கீழைத்தேய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் சமூகப்பங்களிப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் வாழ்க்கைமுறை தலைமுறைக்குத் தலைமுறை எவ்வித சிக்கலுமின்றி கடத்தப்படுவதால் தலைமுறை இடைவெளி குறைவு என்றும் நவீன சமூகங்களில் தனிநபர் ஒருவருக்குப் பல தெரிவுகள் இருப்பதால் அங்கு தலைமுறை இடைவெளி அதிகம் என்றும் மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எமக்கு முந்திய தலைமுறையில் பருவம் அடைந்த காலப்பகுதியிலிருந்தே சிறியவர் பெரியவர் ஆகிவிடுவர். குறிப்பாக பெண்பிள்ளைகள் திருமணம் செய்து தாய்மைப் பருவத்தை 20 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் அடைந்துவிடுவர். ஆண்குழந்தைகள் தோட்டங்களில், தொழிற்சாலைகளில், வீடுகளில் மேலதிகப் பொறுப்பை எடுத்துவிடுவர். ஆனால் இன்று அப்படியல்ல.


இரண்டும் கெட்டான் பருவம்

நவீன கைத்தொழில் சமூகம் ஒன்றின் உருவாக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் இவர்களின் பொறுப்புக்களைச் சற்று பின்தள்ளிப்போட, சிறியவராகவும் இல்லாமல் பெரியவராகவும் மாறாமல் இருக்கும் 12-18 க்கு இடைப்பட்ட இரண்டும் கெட்டான் பருவமானது வளரிளம்பருவம் (யுனுழுடுநுளுநுNஊநு) என 1904 இல் பு.ளுவுயுNடுநுலு ர்யுடுடு என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டு இன்று தனிக்கவனம் எடுக்கப்படவேண்டிய ஒரு பிள்ளைப் பராயமாகக் கருதப்படுகிறது.

மனித வாழ்வின் ஏனைய பருவங்களை விடவும் அதிகம் கவனத்தில்கொள்ளவேண்டிய ஒரு பருவமாக, வாழ்க்கைப் போக்கையே திசைதிருப்பக்கூடிய அபாயங்கள் நிறைந்த ஒரு பருவமாக வளரிளம்பருவம் கருதப்படுகிறது. சூழலில் காணப்படும் பொருட்களைத் தோண்டித்துருவி ஆயிரம் கேள்விகள்கேட்டு விடை கூறமுடியாமல் பெரியோரைச் சங்கடப்படு;த்தும் குழந்தைப் பருவத்தில் இருந்து 'நான் யார்? எனக்கும் என் குடும்பத்திற்கும், எனக்கும் என் பாடசாலைக்கும், எனக்கும் என் சமூகத்திற்கும் தொடர்பு என்ன? என்று தன்னைத்தானே தோண்டித் துருவும் நிலைக்கு மாறும் ஒரு பருவம் இது. தான் யார் என்ற குழந்தையின் சிந்தனையும், குழந்தை யார் என்ற பெற்றோரின் சிந்தனையும், தன்னை அளப்பதற்கு குழந்தை தெரிவு செய்யும் இலட்சிய நபரும் இணைந்த ஒரு கலவையே வளரிளம்பருவ சிறுவனோ, சிறுமியோ ஆகும். மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதிக்குள் தன் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (மார்பக வளர்ச்சி, ஆண்களின் உயர அளவின் வேகம், முடி வளர்தல்) தன் உடல் தொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம் (மாதவிடாய் வட்டம் தொடங்குதலும், ஆணுக்கு விந்து வெளியேறுதலும்) தன் உளப்போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை இப்பருவத்திற்கு உண்டு.

மிகவும் அபாயம் நிறைந்த இப்பருவத்தில் ஆளுமையையே சிதறடிக்கும் இந்தச் சாமத்தியச்சடங்கு ஆக்கபூர்வமான சமூகப்பிரசைகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு பதில் ஆளுமை சிதைந்த, அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை மீண்டும் வழிநடத்திச் செல்லும்.
எங்கே நிற்கின்றோம்...?

வாங்கப்படவும் விற்கப்படவும் கூடிய ஒரு பொருள்தான் பெண். பிள்ளை பெறும் பிரதான கருவியான இப்பொருள் கருவளம் அடைந்துவிட்டது என்பதை ஊரறியச் செய்ய வேண்டிய தேவையும், இப்பொருளை எவ்வித தீங்கும் வராமல் பாதுகாக்கும் வகையில் சடங்குகள் செய்வதும் அறியாமை மிகுந்த எமது மூத்த தலைமுறைக்கு அவசியமானதாக இருந்திருக்கக்கூடும். அதேபோன்று வெளியுலகம் தெரியாது அறிவூட்டல் வாய்ப்புக்கள் எதுவுமற்று சமையலறைக்கள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு பருவமடைதலும் அதன் வழி திருமணத்திற்குத் தயாராதலும் மகிழ்வூட்டக் கூடியதொன்றாகவும் இருந்திருக்கக் கூடும்.

ஆனால் இன்று அப்படியல்ல, அறியாமை இருளில் மூழ்கிக்கொண்டே எம்மை வழிநடத்திச்சென்ற எம்முன்னோரின் தடங்களைப் பின்பற்றிச்சென்ற காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி அறிவின் வாசல் அனைவரிற்கும் திறந்து விடப்பட்டிருக்கும் காலத்தில் நாம் நுழைந்து நீண்ட காலமாகி விட்டது. எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் உலக நடப்பைப் பக்கத்து வீட்டு வானொலி, தொலைக்காட்சி வழியாகவோ அல்லது சந்திக்குச்சந்தி நடக்கும் சங்கதி அலசல் மூலமோ பார்க்கிறோம், கேட்கிறோம், தாம் நேரே பார்த்து அறியாத பொருட்களில் அதீத நம்பிக்கை வைத்து அதையே கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மூடத்தன வாழ்க்கையில் இருந்து தர்க்க ரீதியாக காரண காரியத் தொடர்பைக் கண்டறிந்து அதன் வழி நடக்கத் தொடங்கிய வாழ்நிலைக்கு நாம் நுழைந்து நூற்றாண்டுகள் இரண்டைக் கடந்த பின்பும் புதுப்புது மூடத்தனத்துக்கு ஆளாவதைப் பார்க்கும்போது இன்று வளர்ந்துவிட்ட அறிவியல், மூடப் பழக்கவழக்கங்களை களைவதற்குப் பதிலாக மூடப்பழக்கத்தை மேலும் நவீன வடிவில் வெளிக்கொணர்வதற்கு உதவியிருக்கிறதல்லவா?

காட்டுமிராண்டிக் காலகட்டத்திலிருந்து இன்றைய அதி உச்சகட்ட நாகரீக வளர்ச்சிவரை எத்தனையோ இடர்பாடுகளை, வளர்ச்சிக் கட்டங்களை சந்தித்திருக்கின்ற மனித சமூகத்தின் சிந்தனை, வாழ்வைப் பண்படுத்தும் அம்சத்தில் ஏறுநிலையிலும் மனதைப் பண்படுத்தும் அம்சத்தில் இறங்குநிலை நோக்கியும் நகர்ந்திருக்கின்றமையே வரலாறு தெளிவாக எடுத்துக் காட்டுவதுடன் பொது நலத்தை மையப்படுத்திய வாழ்நிலை சுயநல நோக்குகளுக்குத் தாவிய காலம் முதற்கொண்டே மனப் பண்பாடு தேய்மானம் அடையத் தொடங்கி விட்டது. சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம், நுண்ணறிவு என்பன நினைத்துப் பார்;க்க முடியாத மனித சாதனைகளுக்கு அடித்தளமிடும் அதேசமயம் மனதைப் பண்படுத்தும் முயற்சியைக் 'கண்;டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற வாசகம் ஆக்கிரமித்துவிட்டது.

புதுப்புது மூடத்தனங்களை உருவாக்கும் இத்தகைய ஆபத்தான நிலை அபிவிருத்தி நோக்கிய பாதையில் ஏற்கனவே நுழைந்துவிட்ட, நுழைந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தை மீண்டும் அடிமைத்தன சமூக அமைப்புக்குள் நிச்சயம் குப்புறத்தள்ளி விழுத்தும். இத்தகைய ஆபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் ஒரு சமூகப் பொறுப்புணர்வை அறிவூட்டல் வாய்ப்பும், பொருளாதார வாய்ப்பும் ஒருங்கிணைந்த பெண்கள் சமூகமாவது சுமக்க இனியாவது முன் வருமா?













No comments: