Tuesday, February 04, 2014
உன்மீதான என் நேசிப்பு
அன்புத் தோழி!
ஒடுக்கப்பட்டவர்களுக்காய்
ஓங்கி ஒலிக்கையில்
உன் குரலின் கட்டவிழ்ப்பும்
ஓங்கி அறையப்பட்டவர்களுக்காய்
துடித்து எழுகையில்
துயரம் தேக்கி நிற்கும்
உன் விழிகளின் கட்டமைப்பும் பார்த்து
உன் மீதான என் நேசிப்பு
மெல்ல கருக்கொண்டது.
உயிர்ப்பிழந்து நிற்கும்
உயிர்க்கூடுகள் மீதான
உன் நாட்டமும்
இயற்கையின் வியாபகத்தில்
ஊறிய உன் மனவிம்பமும் பார்த்து
உன்மீதான என் நேசிப்பு முகை வெடித்தது
எடுத்த பணியதை
விடாது முடித்துவிடும் உன்
பாதச்சுவடுகளின் வேகத்தை
பலமிழந்து சோர்ந்து கிடக்கும்
என் கால்களுக்குள்
நீ நுழைத்த காலமுதற்கொண்டு
உன்மீதான நேசிப்பு கிளைவிட்டுப் படர்ந்தது.
பழிவாங்கல் சுழலுக்குள் திணறி
தவித்த என் கரம்பற்றி
காப்பாற்றியபோது
உன் மீதான என் நேசிப்பு
எனக்குள் நிரந்தரமாயிற்று.
வெற்றியை நிச்சயித்து வலிந்து விளையாடிய
ஆண்டவன் முன்பும் அயர்ந்து போகாது
உன் பணி தொடர்ந்த உளவுரம் அறிகையில்
உன்மீதான என் நேசிப்பு நித்தியமாயிற்று.
டிசம்பர் 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment