நடத்தைக் கோலங்கள் 6
'கீதாவின்ரை வீட்டுக்கு விளையாடப் போகவேண்டாம் என்று நிஷாந்திக்கு அம்மா எத்தனை தரம் சொன்னனான்'.
'ஏன் போகக்கூடாது அம்மா?' ஆண்டு இரண்டு படிக்கும் நிஷாந்தியின் கேள்வி இது.
'அவையளோடை நாங்க பழகிறது இல்லை அவை எங்கடை ஆக்கள் இல்லை, அவையளோடை பழகிறது எங்கடை அப்பாவின்ரை உத்தியோகத்திற்கு கௌரவமில்லை'.
காலையில் தனக்கும் தாய்கும் நடந்த உரையாடலை நிஷாந்தி மறந்து விட்டு சாப்பிட்டதும் விளையாட ஓடிப்போய்விட்டாள்.
தகப்பனின் தொழில் இதுதான் என்று அறுதியிட்டு கூறமுடியாத ஏழை கீதா. ஆனால் உயர்வு தாழ்வு என்ற பேதம் இந்த இளம் தளிர்களுடன் ஊடுருவ முடியாத பருவம் இது. விளையாட்டு ஒன்றுதான் அந்த மனங்களை ஆக்கிரமித்து நிற்கும் பருவம். கீதாவின் குடிசை முன்னின்ற வேப்பமரத்து முன்றலில் அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது. திடீரென கையில் பூரவசம் கம்புடன் ஆவேசமாக வந்த நிஷாந்தியின் அம்மா 'உன்னை எத்தனை தரம் சொன்னான் அந்தச் சனியங்களோடை விளையாட வேண்டாமென்று'. அடித்து இழுத்துக் கொண்டு தாய் போக ஏன் விளையாடக் கூடாது என்ற காரணம் கொஞ்சம் கூட தெரியாததால் இரு இளம் தளிர்களும் பரிதாபம் விழிகளில் கக்க நின்றன.
No comments:
Post a Comment