Sunday, March 02, 2014

விடலைகள் என்னும் விசித்திர உலகில்-1


புதிய கண்டுபிடிப்பு
வளரிளம் பருவம் - இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்று. முதிர்ச்சிநிலை நோக்கி வளர்தல் என்னும் பொருள் கொண்ட Adolescence என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே தமிழில் வளரிளம் பருவம் எனக் குறிக்கப்படுகிறது. கட்டிளம் பருவம், குமரப் பருவம், விடலைப் பருவம், காளைப் பருவம் முதலிய பலதரப்பட்ட பெயர்களால்  இது அழைக்கப்படுகிறது. 12-18 வயதுக்கிடைப்படடோர் வளரிளம் பருவத்தினர் என அடையாளப்படுத்தப்படினும் இப்பருவம் எப்போது தொடங்குகின்றது என்பதையோ எப்போது முடிகின்றது  என்பதையோ அறுதியிட்டுக் கூற முடியாது. காலநிலை, மரபு நிலை, குடும்ப நிலை, பொருளாதார நிலை, பால், தனிப்பட்ட பண்புகள், கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் என்பவற்றுக்கேற்ப இது மாறுபடும். உடலியல் மாற்றங்களை வைத்து வளரிளம் பருவத்தின் தொடக்கத்தைக் கணிப்பதில் ஓரளவு வெற்றியடைந்தாலும் கூட கலாச்சாரம், சமூக வகுப்புகள், தனிநபரின் தன்மை என்பவற்றைப் பொறுத்து இதன் முடிவை சரியாக கணிப்பிட முடியாதுள்ளது.

வளந்தோர் பருவத்திலிருந்து குழந்தைப் பருவத்தை வேறுபடுத்திக் காட்டும் அபிவிருத்திக் கட்டமாகவும் இப்பருவத்தைக் கருத முடியும். பிள்ளைப் பருவத்திலுள்ள குழந்தை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வளர்ந்தோர் பருவத்தை நோக்கி வளர்ச்சியடைகின்ற ஒரு நிலை மாறல் கட்டமாகவே [period of transition]  இதனைக் கருத முடியும்.  வளந்தோராகவுமின்றி குழந்தைகளாகவுமின்றி இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள் இவர்களே. பெண்பாலாரைப் பொறுத்து மார்பக வளர்ச்சி, பெண் உறுப்புப் பிரதேசத்தில் மாறுதல், மாதவிலக்கின் தொடக்கம் போன்றவையும், ஆண்பாலாரைப் பொறுத்து உரோமங்களின் வளர்ச்சி, குரல் மாற்றம், சிறுநீருடன் விந்து வெளிப்படும் காலம் போன்றவையும் இவர்கள் வளரிளம் பருவத்துக்குள் நுழைந்து விட்டார்கள் என்பதை உணர.;த்;தும் உடலியல் மாற்றங்களாகக் கருதப்படுகின்றன. எனினும் வெறுமனே உடலியல் மாற்றங்கள் மட்டும் வளரிளம் பருவத்தை வெளிப்படுத்த போதுமானதல்ல. தோற்ற மாற்றம் மட்டுமன்றி நடத்தை மாற்றங்களும் வளரிளம் பருவத்தைத் தெளிவாக வெளிக்காட்ட உதவுபவை.

உலக சனத் தொகையில் ஐந்தில் ஒரு பகுதிக்கு அதிகமானவர்கள் 10-19 வயதுக்கிடைப்பட்ட பதின் வயதினரான Teen age வளரிளம் பருவத்தினரே என ஐ.நாவின் சனத்தொகைப் பிரிவு குறிப்பிடுகிறது. இதில் கவலைக்குரிய விடயம் எதுவெனில் வளரிளம் பருவத்தினரில் 85 வீதமானோர் ஆயுட்காலம் மிகக் குறைவாக உள்ள வளர்முக நாடுகளிலே வாழ்வது தான். அதிலும் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளின் மொத்தச் சனத்தொகையில் 50 வீதத்துக்கு மேற்பட்டோர் வளரிளம் பருவத்தினரே. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் சிறுவர்க்கான சமவாயம் 18 வயதுக்குட்பட்டோர் அனைவரையும் சிறுவர் என வரைவிலக்கணப்படுத்தினும் கூட உலக மொத்த சிறுவர்களில் மூன்றிலொரு பகுதியைத் தமதாக்கிக் கொண்டுள்ள வளரிளம் பருவத்தினர்; தொடர்பாக அதிக கவனம் செலுத்தவில்லை என்றே கூறமுடியும்.

விடுபட்டது இவ்வாறு தான் !
கைத்தொழில் சமூகத்தின் வளர்ச்சி காரணமாக வெளித்தெரிய வந்த  மனித வளர்ச்சிக் கட்டமாகவே வளரிளம் பருவம் கருதப்படுகிறது. அதுவரை இப்பருவத்தினர் வளந்தோராகக் கருதப்பட்டு பொறுப்புமிக்க பணிகளில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டனர் நிலவுடமைச் சமூகம் ஒன்றில் முதிர்ச்சி நிலையானது  maturity பாலின முதிர்ச்சியின் தொடக்க காலமாகக் கருதப்படுகின்ற பூப்புப் பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. ஆணாயின் குடும்பச் சுமையில் பங்கெடுக்கும் பொருட்டு உழைப்பில் ஈடுபடுதல் அல்லது குடும்பச் சுமையை தனித்து நின்று தாங்குதல், தன் தேவையைத் தானே தனித்து நின்று பூர்த்தி செய்தல், பெண்ணாயின் கரு வளத்துக்கு தயாரான கையுடனேயே தாய்மைப் பொறுப்பை வலிந்து திணித்தல் போன்றவை மூலம் இவர்கள் வளர்ந்தோராகவே கணிக்கப்பட்டனர். 19ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் நவீன கைத்தொழில் சமூகமும், சமூக நிலைமைகளும் உருவாக்கிய சமூக பொருளாதார மாற்றங்கள் உழைப்புச் சக்தியில் வளரிளம்பருவத்தினரின் தேவையைக் கணிசமானளவுக்கு இல்லாமல் செய்து விட்டது. நிலவுடமைச் சமூகத்தில் வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்த உடல் உள வளர்ச்சி பெற்ற பெண்களை பெண் விடுதலை என்ற பெயரில் முதலாளித்துவம் வெளியே கொண்டு வந்து குறைந்த கூலியில் உழைப்புச் சக்தியில் இணைத்த போது அதுவரை உழைப்புப் படையில் இருந்த உடல் உள முதிர்ச்சியற்ற ஒரு பருவத்தினரின் தேவை குறைவடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. வளர்ந்தோரின் வேலையில் பங்கு கொள்ளவும் முடியாமல் தமது இளைய சகோதரர்களுடன் இணைந்து குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளுமின்றி இரண்டும் கெட்டான் நிலையில் விடப்பட்ட இப் பருவத்தினர்  மனித வளர்ச்சி கட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக வெளித்தெரிய ஆரம்பித்தனர். சமூகத்தின் உருவாக்கமாக கருதப்படும் வளரிளம் பருவமானது அமெரிக்காவின் குழந்தைக் கல்வியின் தந்தை எனக் கருதப்படும் ஸ்ரான்லி ஹோல் [Stanley Hall]   என்பவரின் கண்டுபிடிப்பாக 1904ம் ஆண்டு அவர் எழுதிய நூல் வாயிலாக கருதப்படுகிறது. வளரிளம் பருவத்தை தனிநபர் ஆளுமையின் புதிய பிறப்பாகவே கருதும் இவர் ஓர் அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாகவே இப்பருவத்தை வரையறைப்படுத்துகின்றார். மனித வளர்ச்சிக் கட்டங்களின் ஒவ்வொரு நிலையிலும் சிக்கல்கள் தோன்றுமெனினும் வளரிளம் பருவத்து சிக்கல்கள் தனித்துவமானவை. இவர்களுக்கென்றே தனித்துவமாக அமைந்த உடற் பண்புகள், மனவெழுச்சிகள், சமூகப் பண்புகள், ஒழுக்கப் பண்புகள் போன்றவை இவர்களை ஏனைய பருவத்தினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.. இவற்றில் சிலவற்றை இங்கு நோக்குதல் பொருத்தமானது.

முதற்பார்வையே முழுப்பார்வை
முதற் பார்வையிலேயே தன்னைப் பற்றி அடுத்தவர்கள் போடும் கணிப்பே மிகப் பிரதானமானது என்பதையும் இந்தக் கணிப்பைத் தீர்மானிப்பதில் தோற்ற அமைவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதையும் நன்கு அறிந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர். ஆண்களை விடவும் பெண் பிள்ளைகளே தோற்ற அமைவு தொடர்பாக அதிக கவனம் செலுத்துகின்றனர். வளரிளம் பருவத்தை அதிகம் ஆக்கிரமிக்கும் ஒரு பொருள் கண்ணாடி. இவர்களுக்குப் பயன்படும் அளவுக்கு இது வேறு எந்தப் பருவத்தினருக்கும் பயன்படுவதில்லை. ஒரு ரூபா நாணயத்தின் அளவுள்ள கண்ணாடியே இவர்களின் அதிக பட்சத் தேவையைப் பூர்த்தி செய்துவிடும் வல்லமை கொண்டது. ஆண்கள் கூடுதலாக உடலமைப்பில் கவனம் செலுத்த, பெண்களைப் பொறுத்து முக அழகும் தலைமுடியும் கூடுதல் கவனம் பெறுகின்றது.  தோற்ற அமைவில் பிரதானமாகக் கவனத்தில் கொள்ளப்படுவது உடலமைப்பின் அளவும் வடிவமுமாகும். பொதுசனத் தொடர்பு ஊடகங்கள் உடலமைப்பின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆண்களைப் பொறுத்து தசை நார்களை விரிவடையச் செய்து ஆண்மைத் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பு உணவுகளை அவர்கள் விரும்புகின்றனர். முக்கோண வடிவ உடலமைப்பு இல்லாவிட்டாலும் கூட சளைக்காது தோளுக்கு தடித்த உட்பட்டி வைத்து மேலாடையை அணிவதன் மூலம் வெளிப் பார்வைக்கு அத்தகையதொரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் தீவிர கவனம் உள்ளவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர் பெண்களைப் பொறுத்து மெல்லிய உடல்வாகைப் பெற அவர்கள் ஆலாய்ப் பறக்கின்றனர். உடலமைப்பைத் தீர்மானிப்பதில் பரம்பரை அலகுக்கு பெரும் பங்கு உண்டு என்பதைப் பெரும்பாலானோர் அறிவதில்லை அல்லது ஏற்றுக்கொள்வதில்லை. நகர்ப்புற சமூகங்களில் உடற்பயிற்சி, சம விகித உணவு போன்ற வழிமுறைகளைப் பயனபடுத்தி தமது உடலைக் கட்டாக வைத்திருக்கும் முயற்சி ஒரளவுக்கேனும் வெற்றி பெற்றிருக்கிறது. மாறாக கிராமிய சமூகங்களில் உணவைக் குறைத்தால்; உடலை வாட்டலாம் என்ற தவறான கணிப்பினால்  கட்டாய பட்டினி கிடப்போரும் பட்டினியின் பின்னர் உடலைப் பெருக்க உதவும் மாப்பொருள் உணவின் அதிக பயன்பாடும் உடல் கட்டமைவுக்கு உதவி செய்வதற்கு பதில் உடல் பெருக்கவே உதவுகின்றன. மாப்பொருளை நீக்கி நார்ப்பொருள் உணவை வேண்டியளவு சேர்த்து வயிறு நிறைய உண்பதுடன் உடலையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை இவர்கள் அறிவதற்கான வாய்ப்புகள் இல்லை.

முடியின்றி முடிவேது
ஆண்களைப் பொறுத்து அண்மைக்காலங்களில் தலை முடி அதிக கவனத்துக்குரிய தொன்றாகியிருக்கிறது.  இவர்களின் முடியலங்காரத்தைத் தீர்மானிப்பதில் சினிமா பெரும் பங்கு வகிக்கிறது. வெற்றிப்படக் கதாநாயகர்கள் தமது ஒவ்வொரு படத்திலும் பின்பற்றும் பாணி படம் வெளியான கையுடன் கிராமப் புற முடியலங்கார நிலையங்களைக் கூட வந்தடைந்து விடுகிறது.. ஆனாலும்; தலைமுடியை நீளமாக வளர்க்கும் மேலை நாட்டு மோகம் நகர்ப்புறங்களை ஓரளவுக்கு ஆக்கிரமித்தாலும் கிராமப்புறங்களை அது இதுவரை எட்டியும் பார்க்கவில்லை என்றே கூற வேண்டும். பெண்களைப் பொறுத்து கிராமப்புறங்களில் தலைமுடியின் நீளம் பிரதான அம்சமாகக் கருதப்படும் அதேசமயம் நகரப்புறங்களில் அதன் வடிவமே பிரதானமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. 'குட்டை முடி நாகரீகம்'; என்ற நகர்ப்புறச் சிந்தனைக்கு  கிராமங்களுக்குள்; வலுவாக ஊடுருவும் வல்லமை இல்லை என்றே சொல்ல வேண்டும். அழகுணர்ச்சியினால் தன்னை அழகுபடுத்தும் தன்மையை விடவும் திருமணத்துக்குத் தன்னை தயார்படுத்தும் தன்மையே அதிகமாக இருப்பதனால் பெண்களின் அலங்காரங்களில் ஆண்களுக்குப் பிடித்தமான அம்சங்கள் கருத்தில் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  நாகரீக மாறுதலுக்கேற்ப எவ்வளவு தான் தலை முடியைச் சுருட்டிக் குட்டையாகக் கட்டினாலும் களியாட்ட விழாக்கள் சடங்குகளின் போது அடர்த்தியாகவும் நீளமாகவும் தோற்றமளிப்பதற்கான சிறந்த உத்தியாக முதல் நாட் பொழுதே தலை முடியை வரிந்து பின்னி அடுத்த நாள் அதனைக் கவனமாகப் பிரித்தெடுத்து, விரித்து ,தளரத் தளரப் பின்னி எவ்வளவு நீளமாக இருக்க முடியுமோ அவ்வளவு நீளமான தோற்றமாக்குவதற்கான சகல உத்திகளையும் மேற்கொள்ளும் பாங்கு பரிதாபத்துக்குரியது மட்டுமல்ல ரசிக்கக கூடியதும் தான்..  உடலைக் காயப்போடுதலுக்கும் தலை முடி உதிர்தலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்ற அறிவு பெரும்பாலான பெண்களுக்குத் தெரியாது. இதனால் உடலைக் குறைக்கும் நோக்குடன் உணவைக் குறைக்கும் செயற்பாட்டில் இறங்கி முடி வளர்வதற்குத் தேவையான சத்துக்களை இழப்பது தெரியாமல் 'கரை சேரும் வரையிலாவது பிள்ளைக்கு முடி கொட்டக் கூடாது' என்று தாய்மார் கடவுளை வேண்டுமளவுக்கு முடி தொடர்பான கவனம் எமது சமூகத்தில் சற்று அதிகமாகவே உள்ளது. வளரிளம் பருவத்தின் ஆரம்பக் கட்டங்களில் தலைமுடியை அழகுபடுத்தும் கவனமே இருப்பதன் காரணமாக 'பறக்கப் பறக்கத் திரியும் விருப்பத்தில்' அடிக்கொருதரம் தலைமுடியைச் செயற்கைச் சுத்தமாக்கிகளினால் ((zampoo ) குளிப்பாட்டுவதும் இதன் தாக்கம் கூடி தலைமுடி தன்னிச்சையாக உதிரத் தொடங்கவும் இயற்கைச் சுத்தமாக்கிகளை – விருப்பம் இல்லாவிடினும் கூட –நாடுவதும் இங்கு இயல்பானதாகும்.

அழகுக்கு அழகூட்டி---
அழகு சாதனங்களைத் தன்னுணர்வுடன்  பயன்படுத்தத் தொடங்கும் காலப் பகுதியாக வளரிளம் பருவம் அமைகிறது. நகர்ப்புறக் கடைகளில் பெரும்பாலானவை பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை விற்பவையாகவே உள்ளன. அழகுப் பொருட்களின் பாவனையானது 'நான் குழந்தைப் பருவத்தைத் தாண்டிவிட்டேன். என்னை இனிப் பெண்ணாகக் கருதுங்கள்' என்பதைச் சொல்லாமல் சொல்வதேயாகும். எமது சமூகத்தைப் பொறுத்தவரை அதி கூடிய பாவனையில் இருப்பது முகப்பூச்சுக்கெனப் பயன்படுத்தப்படும் பவுடர் கிறீம் வகைகள். அது ஏற்படுத்தும் இரசாயனத் தாக்கங்கள் பற்றிய தூர நோக்கு எவருக்குமே இல்லை. எனினும் இவற்றைப் பயன்படுத்துவதில் ஒரு ஒருமைப்பாட்டை உருவாக்குவதில் எமது சமூகம் வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆரம்ப காலங்களில் முகத்தை வெள்ளையாகவும் ஒளியுடையதாகவும் ஆக்கும் கிறீம் எது என்பது தொடர்பாக கருத்துக் குழப்பம் ஒன்றுக்குள் சமூகம் உட்பட்டிருந்தபோது விளம்பரங்களை நம்பி ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு அடிக்கடி மாறும் போக்கினால் எண்ணற்ற வகையில் இந்திய உற்பத்திப் பொருட்கள் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்தன.. ஆனால் தற்போது முக அழகுக்கு உடனடி நிவாரணி கயசை யனெ டுழஎடல என்ற கிறீம் மட்டுமே என ஆண் பெண் இருபாலாரையும்; நம்பச் செய்வதில், பாவித்த சொற்ப காலத்துக்குள்ளேயே முகத்தில் ஏற்படும் நிறமாற்றமும், தொலைக் காட்சி ஊடகம் மூலமான விளம்பரமும்; வெற்றி பெற்றிருக்கின்றன. நகரம் கிராமம் என்ற பேதமின்றி மூலை முடுக்கெல்லாம் இந்தக் கிறீம் பரவி விட்டது. வளரிளம்பருவத்தையும் கடந்து முதிர்பருவம் முழுமையும் இதன் பாவனை வேரோடியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.; முகத்துக்கு அழகூட்டுவதற்குப் பதில் தனக்குள்ளே உள்ள இரசாயனச் சேர்க்கையினால் முகத்தை வெளிறச் செய்வதனூடாகவே இந்த வெள்ளை நிறம் பெறப்படுகின்றது என்பதையோ இதன் பாவனையை முற்றாக நிறுத்தும் ஒரு காலப்பகுதியில் முகத்தின் தோல் முற்றாகச் சுருங்கி, கறுத்துப் புள்ளிகள் முகம் முழுவதும் பரவும் என்பதையோ சிந்திப்பதற்கு எவருமே தயாராக இல்லை பயற்றம்மா, கடலை மா, எலுமிச்சம் பழம், பாலாடை, தயிர் போன்ற தீங்கு விளைவிக்காத இயற்கையான அழகுப் பொருட்கள் கிராமங்களிலிருந்து எப்போதோ விடை பெற்று விட்டன. 'இயற்கையான எலுமிச்சம் பழத்திலிருந்து உருவாக்கப்பட்ட----' என்ற வாசகங்களைப் பயன்படுத்தி தமது பொருட்களைச் சந்தைப்படுத்தும் விற்பனையாளர்களின் யுக்தி கிறீம் வகைகளில் காணப்படும் இரசாயனத் தாக்கம் பற்றிய கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. நகர்ப் புறங்களில் உதட்டுச் சாயம் முக்கிய அழகுப் பொருளாகக் கருதப்படுகிறது. கிராமங்களை நோக்கி இதன் நகர்வு குறைவு எனினும் அண்மைக் காலங்களில் பண்டிகைகள்;, சடங்குகள், விசேட நிகழ்வுகள் போன்றவற்றில் அதன் பாவனை அதிகரித்திருப்பது அண்மைக் கால மாற்றங்களாகவே கொள்ள முடியும். அதிலும் புலம் பெயர் மக்கள் தமது உறவுகளை நாடி இங்கு வரும்போது இவற்றையும் காவிக் கொண்டு வருவது இத்தகைய மாற்றத்திற்கான பிரதான காரணமாகக் கொள்ள முடியும்.

ஆள்பாதி ஆடை பாதி
ஆள்பாதி ஆடைபாதி என்ற முதுமொழியே ஆடையின் முக்கியத்துவத்தை விளக்கப் போதுமானதெனினும் வளரிளம் பருவத்தினரைப் பொறுத்து அவர்கள் ஆடையின் நேர்த்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிடவும் அதன் பெறுமதிக்கும் நவீனபாணிக்கும் கொடுக்கும் முக்கியத்துவமே அதிகமாகும். 'நான் இன்னும் சின்னப்பிள்ளை அல்ல' என்பதை வெளிப்படுத்தும் ஆவலை அவர்களது ஆடைத் தெரிவில் கண்டு கொள்ள முடியும். இங்கும் கூட சிந்தனைக்கும் செயற்பாட்டுக்குமிடையில் ஒரு முரண்பாட்டை நாம் அவதானிக்கலாம்.; வளரிளம் பருவம் முழுமையும் பாலூக்கம் உச்சமாக இருப்பதன் காரணமாக தோற்ற அமைவு. உறவுகளைத் தீர்மானிப்பதில் கணிசமான பங்கினை ஆற்றுகிறது  இதனடிப்படையில் உடலமைப்பைச் சரியாக வெளிக்காட்டும் ஆடைகள் இவர்களின் விருப்பத்துக்குரியவையாக இருக்கும் அதேசமயம் குடும்பச் சூழலிலிருந்து முற்றாக விடுபட்டு, தமது தனித்தியங்கும் ஆற்றலுக்கு உறுதுணையாக அமையும் சகபாடிகள் வட்டத்திலிருந்து தம்மை அன்னியப்படுத்தும் எதனையும் - தமக்கு விருப்பமாக இருப்பினும் கூட- பின்பற்ற விரும்பாது அவர்கள் அணியும் ஆடைகளையே –தமது உடலுக்கு அவை பொருந்தாவிடினும் கூட- தெரிவு செய்யும் போக்குக் காரணமாக உடலுக்குப் பொருத்தப்பாடா அல்லது பெறுமதியும் நவீனமுமா என்ற குழப்பத்தில் மிகச் சிலரே இவை இரண்டிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது. எமது சமூகத்தைப் பொறுத்து சமூக பொருளாதார அந்தஸ்தை எடுத்துக் காட்டுவதற்கான குறியீடாகவே  ஆடையணிகள் கருதப்படுகின்றன எனினும் வளரிளம் பருவம் இது தொடர்பாக சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. கட்டடவேலை, தோட்ட வேலைக்குப் போகும் இப்பருவத்தினர் கூட மண் கல் என்பவற்றுடன் மல்லுக் கட்டுவதற்கான பழைய ஆடைகளைப் பையில் வைத்துக்கொண்டு மிக அழகாகவும் நவீனபாணியிலும் அலுவலகத்தில் பணி செய்பவரின் தோற்றத்தில் உடையணிந்து செல்வதை நாம் பார்க்க முடியும். தன்னைப் போல் தனது பிள்ளையும் உடலுழைப்பில் கிடந்து மாயக்கூடாது என்ற அவாவில் பெற்றோரால் மிகக் கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பப்படும் பிள்ளையும் கூட தானும் சமூக பொருளாதார அந்தஸதில் சற்றும் குறைந்தவன் அல்ல என்று தனது சகபாடிகள் மத்தியில் எடுத்துக்காட்டும் ஒரே நோக்குடன் இந்த நவீன பாணி ஆடைகளை எப்பாடுபட்டாவது அணிவதனையும் நாம் காண முடியும். வளரிளம் பருவத்தின் ஆரம்பக் கட்டங்களில் அதிகமாக விரும்பப்படும் கண்ணைப்பறிக்கும் நிறங்களும் அணிகலன்களும காலம் செல்லச் செல்ல குறைந்து கொண்டு செல்லும போக்கு உண்டு. முதிர்பருவ ஆண்கள் ஆடையின் நேர்த்தியில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி புகழ்பெற்ற உற்பத்தியாளரின் ஆடைகளை வாங்குதலை அந்தஸ்தின் சின்னமாகக் கருதுகின்றனர். பெண்கள் இதற்கு மாறாகத் தமது பொருளாதார அந்தஸ்தை வெளிப்படுத்தும் பிரதான குறியீடாக ஆடையணிகளைப் பயன்படுத்துகின்றனர்.


No comments: