உணர்ச்சிக் கடல்கள்
மனித சாதனைகளுக்கெல்லாம் அடிப்படையானது அறிவுத் திறன்களல்ல. மனவெழுச்சிகளே என்பதை நாம் எமது நடைமுறை அனுபவங்களில் கண்டு கொள்கின்றோம். மகிழ்ச்சி, அன்பு, பாசம், ஆர்வம் போன்ற மகிழ்வூட்டும் மனவெழுச்சிகளும், கோபம், விரக்தி, கவலை போன்ற வெறுப்பூட்டும் மனவெழுச்சிகளும் மனித வளர்ச்சிக்கட்டங்கள் அனைத்திலும் இடம் பெறுவதெனினும் இவை முழுமையாக ஆக்கிரமித்து நிற்கும் பருவம் வளரிளம் பருவம் என்றே இனங்காணப்பட்டிருக்கின்றது. வளரிளம் பருவத்தினரை ஷமனவெழுச்சிகளின் சங்கமம்ஷ என்று அழைக்கலாம்;. இப்பருவத்தில் அதிகமாக ஏற்படும் உடல் மாற்றங்களே மனவெழுச்சிகளுக்குக் காரணமென்று ஆரம்ப கால ஆய்வுகள் முடிவுக்கு வந்திருந்தன. உடல் வளர்ச்சியானது குழந்தைப்பருவம் முதற் கொண்டே நிகழ்ந்தாலும் கூட வளரிளம் பருவத்தில் உடல் வளர்ச்சியானது மிகத் தீவிரமடைகின்றது. நாளாந்தம் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கும். வெளி உறுப்புகள் மட்டுமன்றி இதயம், குடல், சுவாசப்பை போன்ற உள்ளுறுப்புகளும் இப் பருவத்தில் தீவிர வளர்ச்சியடைகின்றன. குறிப்பாகப் பாலுறுப்புகளின் வளர்ச்சியானது அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி விரும்பத்தகாத மனவெழுச்சிகளை ஏற்படுத்தவல்லது எனக் காரணங் கூறப்பட்டது. இதனடிப்படையில் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உடல் மாற்றத்தின் அடிப்படையில் வளரிளம்பருவமானது அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாக[Period of Storm and stress] ஸ்ரான்லி ஹோல் என்பவரால் அடையாளங் காணப்பட்டது. ஆனால் மனிதன் என்பவன் உடல் உள்ளம் என்ற இரு கூறுகளும் நெருங்கி இசைந்து இயங்கும் உயிரி என்பதும் இவ்விரு கூறுகளும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவை என்பதும் உடலில் ஏற்படும் களைப்பு சிந்தனையைப் பாதிப்பது போன்று உளப் போராட்டங்கள் மனிதனது உடல்நிலையை வெகுவாகப் பாதிக்கும் என்பதும் அனுபவத்தில் காணும் உண்மையாகும். எனவே உடல் மாற்றங்களுக்கு மட்டுமன்றி உள மாற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் நாளமில் சுரப்பிகளே Endoctrine glands மனவெழுச்சிகளுக்குக் காரணமென அண்மைக்கால மருத்துவ ஆய்வகள் கண்டுபிடித்திருக்கின்றன. இச்சுரப்பிகள் சுரக்கும் ஹோர்மோன் என்னும் சுரப்பு நீரானது இரத்த ஓட்டத்தில் கலந்து உடலெங்கும் பரவி உடலின் அனைத்துப் பிரிவுகளின் தொழிற்பாட்டைப் பாதிக்கின்றது. ஒரு தொகுதியாகச் சுரக்கப்படும் இச் சுரப்பிகள் தனது அளவிலிருந்து கூடியோ அல்லது குறைவாகவோ சுரக்குமாயின் உடல், உளச் சமநிலை பாதிக்கப்படும். இதனடிப்படையில் 1970ல் நியூயோர்க் சஞ்சிகையில் வெளியிடப்பட்டE.Nemy
என்பவரின் ஆய்வு முயற்சியானது அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவத்தை 'தீவிர மனவெழுச்சிப்' பருவமாக [Period of heightened emotionality] மாற்றிவிட்டிருக்கின்றது.
மன உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் [Feelings & Emotions]
மனவெழுச்சிகளைச் சாதாரணமாக நாம் அனுபவிக்கும் மனவுணர்ச்சிகளுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. மனவுணர்ச்சிகள் சாதாரண நேரங்களில் ஏற்படுபவை. மனவெழுச்சிகளோ நெருக்கடி நிலைகளில் தோன்றுபவை. மனவுணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் ஒரு நிலையே மனவெழுச்சியாகும். இது நேர்க்கணிய, எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது. செயற்பாடொன்று சிலரால் பாராட்டப்படும் போது செயற்பாட்டை மேற்கொண்டவருக்கு ஏற்படுவது மகிழ்ச்சி என்ற மனவுணர்வு. இது சட்டெனத் தோன்றி மறையலாம். அல்லது சில காலமாவது மகிழ்ச்சியுணர்வைத் தக்கவைத்து உடல் ரீதியான சுறுசுறுப்பை ஏற்படுத்தலாம். இதுவே தன்னால் நேசிக்கப்படும் ஒருவரின் பாராட்டுதலாக இருக்கும்போது அது மனவெழுச்சியாக மாறி மேலும் மேலும் பாராட்டைத் தேடும் செயற்பாடுகளைச் செய்யத் தூண்டும். இயல்பிலேயே நன்கு எழுதக்கூடிய திறன் உள்ள பெண் ஒருவரிடம் 'அம்மா கதை சுப்பர்' என்ற பாராட்டு மகிழ்ச்சி என்ற மனவுணர்ச்சியைப் பெரிதாகத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, சின்னச் சின்னக் கதைகளில் கவனம் செலுத்தும்; வளரிளம் பருவத்து மகளின் கதை ஒன்றை வீட்டிலுள்ளோர் பாராட்டும் போது அது மகிழ்ச்சி என்ற மனவுணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றது. இதுவே சகபாடிகள் மத்தியில் அவரது கதைகள் பாராட்டப்படும் போது மேலும் மேலும் புதிய புதிய கதைகளை எழுதத் தூண்டும்; மனவெழுச்சியை அது தோற்றுவிக்கின்றது. இந்த மனவெழுச்சியானது எழுத்துத் துறையில்; புதுப்புது உத்திகளை கையாளும் ஆவலைத் தூண்டுவதுடன் சில சமயங்களில் எழுத்துத் துறை தொடர்பான புதிய ஆய்வுகளைக் கூட இச் சமூகத்துக்கு விட்டுச் செல்லும் அளவுக்கு உள ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது மனவுணர்ச்சிகள் சட்டெனத் தோன்றி மறைபவை. உடல் உள மாற்றங்களை அவை ஏற்படுத்துவதில்லை. மனவெழுச்சிகள் அப்படிப்பட்டவையல்ல அவை உடல் ரீதியாக மட்டுமன்றி உள மாற்றங்களையும் ஏற்படுத்தவல்லவை. ஒருவரின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஏற்படக் கூடிய கண்ணீர் வெளிப்பாடு துக்கம் என்ற மனவுணர்ச்சியின் வெளிப்பாடே. இதுவே மயக்க நிலையை ஏற்படுத்தவல்லதாயின் அது மனவெழுச்சியின் பாற்பட்டதே. உடல் நடுக்கம் அல்லது மயக்கம் என்பது உடல்நிலைப்பட்டதாகவும், சாப்பாட்டை வெறுத்தல், விட்டத்தை வெறித்து நோக்குதல் போன்ற செயற்பாடுகள் உளநிலைப்பட்டதாகவும் இருக்கும். மனவெழுச்சிகள் சில சமயம் மிகவும் தீவிரமடைந்து மனவெழுச்சிப் போராட்டமாகவும் மாறுவதுண்டு.
காரணம் இது தான்
பூப்படைதலுடன் ஒரு குழந்தையின் குழந்தைப் பருவம் முடிவுக்கு வந்து விடுகின்றது. வயதுக்கு வருதல், பக்குவப் படுதல், பெரிய மனுசியாதல் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் வெறும் உடல் மாற்றத்தை மட்டுமே கருத்தில் எடுக்கின்றன. அதன் உள ரீதியான மாற்றம் பற்றி யாருமே சிந்திப்பது கிடையாது. உடல் மாறினால் உள்ளமும் மாறிவிடும் தானே என்று பெரியோர்கள் எண்ணி விடுகின்றனர். குழந்தைகள் உலகுக்கென்றே தனித்துவமான உளப்பாங்கில் மாற்றம் எதுவுமின்றியே வளரிளம்பருவ உலகுக்குள் பிரவேசிக்கும் குழந்தை ஷசூழலுக்குத் தன்னைச் சரி செய்து கொள்ளாத எதுவுமே நிலைப்பதில்லைஷ என்ற இயற்கையின் நியதிக்கமைய அவ்வுலகுடன் பொருத்தப்பாட்டைப் பேண வேண்டிய நிலையிலுள்ளது. ஷபெரிய மனுஷிஷ அல்லது மனுஷன் என்ற தனது புதிய பதவிக்குத் தயாராகாத எந்தக் குழந்தையும் வழக்கத்துக்கு மாறான உணர்வை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. வளர்ந்தோருக்குரிய உடலமைப்பைப் பெற்ற கையுடனேயே அவர்களைப்போன்றே நடத்தையும் இருக்க வேண்டும் என்ற சமூகததின் எதிர்பார்ப்பும் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான அழுத்தமும் கவலை விரக்தி போன்ற அழுத்தமிக்க மனவெழச்சிகளை அல்லது கோபம் போன்ற அமைதியற்ற மனவெழுச்சியைத் தரக் கூடியது. குழந்தைப் பருவ விருப்பங்கள் பொதுவாக யதார்த்தத்துக்கு ஒவ்வாதவை. இந்த விருப்பங்களை வளரிளம் பருவத்தினர் அடையத் தவறும்போது அது அவர்களிடம் விரக்தி நிலையைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது. பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது, எதிர்ப்பாலாரின் முன்னிலையில் எவ்வாறு பிரபல்யமாவது போன்ற சிந்தனைகள் பெரும்பாலும் மனவெழச்சியைத் தோற்றுவிப்பவை.
மகிழ்வூட்டும் மனவெழுச்சிகள்
தனது உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களைத் துடிப்புடன் அவதானிக்கச் செய்வது ஆர்வம் என்ற மனவெழுச்;சியே. ஒருசிலரே பாலியல் தொடர்பான முழு அறிவுடன் வளரிளம் பருவத்துக்குள் பிரவேசிக்கின்றனர். பாலியல் அறிவு நடைமுறை வாழ்வின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியடைந்த மேலைத்தேய நாடுகளில் வளரிளம் பருவத்தின் தேடல் அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக விவகாரங்களில் அக்கறை போன்றவற்றில் அதிகம் திசைதிருப்பப்படுவதாக இருக்க கலாச்சார விழுமியங்களை இறுக்கமாகப் பேணும் கீழைத்தேய சமூகங்களில் வளரிளம்பருவம் முழுமையும் சிலசமயம் அதற்குமப்பால் சென்று திருமணம் முடிக்கும் வரை பாலியல் தொடர்பான தேடல் தொடருகின்றது.
உடல் நலம், சுய திருப்தி, தான் வாழும் சூழலுடன் சரிவரப் பொருந்தி நிற்கும் தன்மை, தனது செயற்பாடுகளில் தான் அடையும் வெற்றி காரணமாகத் தனக்குள் உருவாகும் உயர் உணர்ச்சி. மன உளைவுச் சூழலில் ஏற்படக் கூடிய நகைச்சுவை உண்ச்சி, போன்றன மகிழ்ச்சி என்ற உயர்நிலை மனவெழுச்சிக்கு அடிப்படையாகும்.
பாசம் என்பது மகிழ்வூட்டும் மனவெழுச்சி. தாயிடம் ஆரம்பித்து, குடும்ப உறுப்பினர்கள், விளையாட்டுப் பொருட்கள,; செல்லப் பிராணிகள் என குடும்பம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழியும் குழந்தைப் பருவப் பாசம் வளரிளம் பருவத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறி மிக அதிகளவில் சகபாடிகளுடனும் சிறு அளவில் செல்லப் பிராணிகளுடனும் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது. அதுமட்டுமன்றி வளரிளம் பருவத்தில் பாசத்தின் தீவிரத்தன்மையை இனங்காண முடியும். பாசத்தையும் அன்பையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வோரும் உண்டு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. பாசத்தின் உச்சக்கட்டமே அன்பாகப் பரிணமிக்கின்றது. அன்பு என்பது பாசத்தை விடத் தீவிரமிக்கது. பொதுவாக எதிர்பாலாரிடம் ஏற்படுவது. பாலியல் விருப்பத்தின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. பாசம் அப்படிப்பட்டதல்ல. இது தீவிரத் தன்மையற்றது. எதிர்ப்பாலாரிடம் ஏற்படுவதென்றாலும் கூட பாலியல் விருப்பத்தின் கூறுகளை இது உள்ளடக்குவதில்லை. ஓரினப் பாலாரிடம் மட்டுமன்றி எதிர்பாலாரிடமும் இது தோற்றம் பெறும்;.
வெறுப்பூட்டும் மனவெழுச்சிகள்
பாம்புகள் பல்லி, கரப்பான் பூச்சி போன்ற உயிரிகள்;, சகபாடிகள் முன்னே நல்ல பேர் எடுக்க வேண்டும் என்ற உணர்வு, இயலாமை, போன்றவை அச்சம் என்ற மனவெழுச்சியைத் தோற்றுவிப்பவை. தன்னால் நேசிக்கப்படுவோரின் முன் தனது அந்தஸ்து, பாதுகாப்பு போன்றவை அச்சுறுத்தலுக்குட்படும் என்ற அச்ச உணர்வு பொறாமையாக உருக் கொள்ளும். அதிக வயது இடைவெளி விட்டும் பிறக்கும் பிள்ளைகளில் மூத்த பிள்ளையிடம் பொறாமையுணர்வு அதிகம் நிரம்பிக் கிடக்கும்.
மற்றவர்களால் பரிகசிக்கப்படல், முறைகேடாக நடத்தப்படல், குத்தல் கதைகளை கேட்டல், தனக்குரிய பொருளை தனக்கிளையோர் களவெடுத்தல், பொய் சொல்லுதல், அதிகாரம் செய்தல், தான் நினைத்தபடி காரியங்கள் நடவாதிருத்தல் போன்றன கோபம் என்ற மனவெழுச்சியைத் தோற்றுவிக்கும். எரிச்சலுணர்வும் விரக்தியும் கோபத்தின் இரு வேறுபட்ட வடிவங்களே. அடுத்தவரது பேச்சு, நடத்தை, பழக்க வழக்கங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு எரிச்சலுணர்வைத் தோற்றுவிக்கவல்லது. அது போல் குறிப்பிட்ட நாளில் நடைபெறத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி இறுதி நேரத்தில் கைவிடப்படல், நாள் முழுவதும் செலவழித்துத் திருத்தப்பட்ட பொருள் திடீரெனக் கைதவறி விழுந்து விரயமாதல் போன்றவையும் எரிச்சலுணர்வைத் தோற்றுவிக்கவல்லது. பொதுவாக இது சமூகச் சூழலை மையப்படுத்தி எழுவது. ஆனால் விரக்தி உணர்வானது தன்னை மையப்படுத்தி எழுவது. உடல் அமைப்பு தனக்கு சரிவரப் பொருந்தியிருக்கவில்லை, எதிர்ப்பாலாரை ஈர்க்கக் கூடிய வகையில் தான் கவர்ச்சியாக இல்லை, சக தோழருடன் ஆடிப்பாடும் அளவுக்கு தனது உடல் ஆரோக்கியமாக இல்லை, தனது நண்பர்கள் போல் செலவழிப்பதற்கு பணம் இல்லை, தனது விருப்பத்திற்கமைய படிக்கும் ஆற்றல் தனக்கு இல்லை என்ற உணர்வு விரக்தி என்ற மனவெழுச்சிக்கு அடிப்படையாகும். தான் நேசிப்போரின் மரணம், மண முறிவு, நீண்ட நாள் பிரிவு, உயிர் நண்பருடனான மன முறிவு, செல்லப் பிராணியின் மரணம் அல்லது மறைவு போன்றன துக்கம் என்ற மனவெழுச்சியைத் தோற்றுவிக்கக்கூடியது.
No comments:
Post a Comment