Sunday, March 02, 2014

விடலைகள் என்னும் விசித்திர உலகில் - 3


நீங்கள் எந்த ரகம்?

அன்பானவர்களா?
அன்பு என்ற மனவெழுச்சி தீவிரமடையும் போது வலியைத் கைகளால் தடவித் தணிக்கக் கூட வாய்ப்புக் கொடுக்காது சக தோழன் அல்லது தோழிக்கு நடு முதுகில் அழுத்தமாய்; ஒரு போடு போடச் சொல்லும். குழந்தையாயின் குழந்தை அழும் அளவுக்கு நெருக்கி அணைத்து முத்தம் கொடுக்கும். கொஞ்சம் வளர்ந்த குழந்தையாயின் குளறக் குளற உயரமான இடங்களில் இருத்தி வைக்கும். அல்லது தலை கீழாகத் தூக்கிப் பிடிக்கும். செல்லப்பிராணியாயின் வாலில் தூக்கிக் கொண்டு திரியத் தூண்டும் அல்லது படுக்கையறையில் கூட அணைத்துக் கொண்டு படுக்கச் சொல்லும். எதிர்ப்பாலாராயின் தனது இருப்பை உணர்த்தும் பொருட்டு அவர்களின் கண் படும் வகையில் ஓடித் திரியும். கத்தல்கள் சிணுங்கல்கள் வெடிச் சிரிப்புகள், மூலம் அவர்களது கவனத்தைத் திசை திருப்பும்.  சொல்லாத வேலையைக் கூட இழுத்துப் போட்டுக் கொண்டு விழுந்து விழுந்து  செய்யும்.
பாசம் என்ற மனவெழுச்சி சின்னச் சின்ன உதவிகள் மூலம் தான் நேசிப்பவரை மகிழ்வூட்டும். தான் நேசிப்பவர் சொல்லும் அல்லது செய்யும் ஒவ்வொன்றிலும் அதிக கவனம் செலுத்தும்., தான் நேசிப்பவருக்கு உண்மையாக இருக்கும்.

மகிழ்ச்சியுணர்வானது தனக்குப் பிடித்தவர் தன்னுடன் கதைத்தவை, நடந்து கொண்டவை அனைத்தையும் அவர்கள் இல்லாத போது நினைவில் கொண்டு கொடுப்புச் சிரிப்புடன் உலவ வைக்கும்.  தன்னை அடிக்கடி அழகுபடுத்தும்;, தனக்குள் பாட்டொன்றை முணுமுணுத்துக் கொண்டிருக்க வைக்கும். காரணமின்றிச் சிரித்துச் சிலசமயம் பித்துக்குளி என்றும் பேரெடுக்க வைக்கும். தீவிர முனைப்புடன் பணி செய்து கொண்டிருப்பவரை வெடிச்சிரிப்பால் குழப்பி அவரின்; முறைப்பையும் வாங்கிக் கட்டும். மகிழ்ச்சியுணர்வு தீவிரமாகும் போது அது களிப்பாக மாறி அவர்களை அந்தரத்தில் மிதப்பவர்களாக மாற்றுவதுமுண்டு..

சகல அம்சங்களையும் எப்படியாவது அறிய வேண்டும் என்று அங்கலாய்ப்பைத் தருவது ஆர்வம் என்ற மனவெழுச்சியே.  நண்பர்களோ அல்லது வயது வந்தவர்களோ பாலியல் தொடர்பான கதைகளை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பர். பாலுணர்வைத் தூண்டும் கதைப்புத்தகங்கள் சினிமா என்பன இவர்களை மகிழ்விப்பது போன்று வேறு எதுவுமே கிடையாது.; அறிவியல் சம்பவங்களோ, நடைமுறை விவகாரங்களோ எதையெடுத்தாலும் ஆர்வம் கொப்பளிக்க வலம் வரும் குழந்தைப் பருவத்தினரின் தேடல்கள் வளரிளம்பருவத்தில் வெறுமனே பாலியல் விவகாரங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது.

அடிபிடிக்காரரா? 
கொந்தளிக்கும் உணர்வுள்ளோரிடம் உருவாகும் உச்சக் கட்டக் கோபம்;; கையில் கிடைத்தவற்றைத் தூக்கி எறியச் செய்யும், கண்டதையும் போட்டு நொருக்கச் செய்யும், போகும் போதும் வரும்போதும் கதவைப் படீரென அடிக்கச் செய்யும்;. ஆவேசம் மிகக் கொண்டு ருத்திர தாண்டவமாடச் செய்யும். குளறி அழப் பண்ணும். மாறாக, அழுத்த உணர்வுள்ளோராயின் புறுபுறுக்க அல்லது வாய் காட்டத் தூண்டும். கதைக்கும் மனோநிலையைச் சிதைக்கும். கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு உள்ளே அடைந்து கிடக்கச் சொல்லும். குத்தல் மொழியால் அடுத்தவரை நோகச் செய்யும். கோபத்தை அடக்கி வைத்துக்கொண்டு பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு திரியும். கோபத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் அது விரக்தியாக மாறி கோபத்தை அப்பாவிகளிடம் தீர்த்துக் கொள்வதுமுண்டு.
கோபத்தின் வெளிப்பாட்டுக்கு மாறாக எரிச்சலுணர்வானது அடுத்தவரை ஒரு பொருட்டாக மதிப்பதைத் தவிர்க்கும். பெரும்பாலும் தனக்கு எரிச்சல் ஏற்படுத்துபவர்களிடமிருந்து கூடுதலாக விலகியிருக்கத் தூண்டும்.
விரக்தி என்ற மனவெழுச்சி இயலாமையை ஏற்படுத்தி பகற்கனவைத் தூண்டும். கதைப்புத்தகங்களில் தனக்கு பொருத்தமானவர்களைத் தேடும். சிலசமயங்களில் ஒன்றின் இல்லாமை தொடர்பான  விரக்தி நிலையானது தனக்கு பொருத்தமான செயற்பாடொன்றைத் தேர்வு செய்து அதில் பலத்த வெற்றியீட்டும் மன ஓர்மத்தை வளர்த்துவிடும்.

துக்கம் என்ற மனவெழுச்சி உணர்ச்சிப் பிழம்புகளாக இருப்போரைக் குளறி அழச் செய்யும். அழுகை கோழைத்தனமானது, பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைப்பவராயின் வாய் பொத்தி விம்மச் செய்யும். விட்டத்தை நோக்கி வெறித்தபடி அமரச் செய்யும். எதையோ பறிகொடுத்தது போன்று நாடியில் முண்டு கொடுத்தபடி அல்லது தலையைத் தாங்கியபடி இருக்கச் செய்யும்;. சாப்பாட்டை ஒறுக்கச் செய்யும். தூக்கமின்றித் தவிக்கச் செய்யும். செய்யும் பணியில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் அல்லல்பட வைக்கும். நேசத்துக்குரியவரின் இழப்புக்கு தானும் ஒருவகையில் காரணம் என்று நினைத்து விட்டால் இழப்பைத் தனக்குக் கிடைத்த தண்டனையாகக் கருதி மனங் குமையச் செய்யும். சிலசமயம் இம்மனோநிலை தீவிரமடைந்து உள நோயாக மாறக் கூடும் அதற்கும் மேலே சென்று தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்வதுமுண்டு.

தான் மிகமிக நேசிக்கும் நபர் முன்னே தனது சில்மிஷங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாக எழும் வெட்கம் காலால் நிலத்தில் கோலம் போடச் செய்யும், மறைவில் நின்று எட்டிப் பார்க்கத் தூண்டும், தனது செயற்பாடு தனது சூழலில் விரும்பத் தகாத மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற வெட்கம் அல்லது மன உளைச்சல் எதுவுமே நடக்காதது போன்று புத்தகத்துக்குள் முகத்தைப் புதைக்கச் சொல்லும், தூங்குவது போன்று பாவனை காட்டும். இயல்பிலேயே  நகம் கடிக்கும் பழக்கம் உள்ளோரை இரத்தம் வருமளவுக்கு நகத்தைப் பற்களால் பிய்த்து எறியச் செய்யும்;.  இறைச்சி; என்றால் மூக்குப் பிடிக்கப் போடும் சாப்பாட்டு ராமரைக் கூட மனதுக்குப் பிடித்த சாப்பாட்டைப் பிசைந்து கொண்டிருக்கச் செய்யும்.

முரண்டுபிடிப்புகள்
வளரிளம் பருவ உலகின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று இவ்வுலகிற்குள் கருக்கொள்ளும் எதிர்ப்புணர்வு அல்லது முரண்டுபிடிப்பு. சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளை மாற்றியமைத்தல் முடிந்தால் கதையையே முடித்துவிடுதல் என்ற வகையில் பழையனவற்றை முற்றாகக் கழித்து புதியவற்றை மட்டும் புகுத்த முனையும் இவர்கள் சமூகத்தைப் பொறுத்து 'பிரம்படி வாத்தியார்கள்' ஆக இருக்க விரும்புபவர்கள். மரபை மீறுதல் என்ற இந்தப் பண்பு காலங்காலமாகவே - குறிப்பாக கிரேக்க காலத்தி லிருந்தே -  இவர்களிடம் இனங்காணப்பட்டிருப்பினுங் கூட தற்காலம் வரை தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் விசேட அம்சங்களில் ஒன்றாக---, உலகளாவிய ரீதியில் பொதுசனத் தொடர்பு ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒன்றாக---, கணிசமானளவுக்குப் பிரபல்யம் பெற்று வரும் ஒன்றாக---, இருப்பதானது மானுடவியலாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள்; இந்த 'மறக்கப்பட்டவர்கள்'மீது தனிக் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

பொதுவாக வளரிளம் பருவத்தினரை இருவகையாகப் பாகுபடுத்தலாம். தாம் வாழும் சமூகம் ஒன்றின் விழுமியங்கள், நடத்தைகள் போன்றவற்றை --- அவை பிழையானதாக இருப்பினும் கூட 'ஆட்கள் என்ன நினைப்பினம்' என்று --- அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் ஒரு வகையினர். சமூகத்தின் விழுமியங்கள், மரபுகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மீற முயல்பவர்கள் இன்னொரு வகையினர். முன்னவர் சமூகத்தின் பார்வையில் 'அச்சாப்' பிள்ளைகள். பின்னவர் குழப்பன்காசிகள்.


'அச்சாப் ' பிள்ளைகள்.
தமது கருத்து வேறானதாக இருப்பினும் கூட சமூகத்தின் பெரும்பாலானவர்களின் கருத்துடன் ஒத்துப் போகின்றவர்கள் இவர்கள். தோற்ற அமைவிலும் நடத்தையிலும் ஒத்துப் போகும் தன்மையானது தனது சகபாடிகள் மத்தியில் மட்டுமன்றிச் சமூகத்திலும் அங்கீகாரத்தை வழங்குகின்றது. தமது குழுவின் இலட்சியங்கள், நியமங்கள், கொள்கைகள், ஏன் சில சமயங்களில் ஒழுக்க நியமங்கள் கூட குழவின் ஒவ்வொரு உறுப்பினரும் பின்பற்றக் கூடிய வகையில் இருக்கும். தோற்ற அமைவில் ஒத்துப் போகும் அதேசமயம் மனதளவில் சமூகத்தின் விழுமியங்கள் மீது கேள்வியெழுப்புபவர்கள் கூட, தமது மனதில் ஏற்படும் கருத்து முரண்பாட்டை வெளியே சொல்லாத வரைக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் சமூக அங்கீகாரத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பில்லை. சிலசமயங்களில் சிலரிடம் இந்த அச்சாப் பிள்ளைத்தனம் அளவுக்கதிகமாகிச் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிக அச்சத்துடன் ஷஅவை என்ன நினைப்பினமோ---! இவை என்ன நினைப்பினமோ---! ஷ என்று நித்தம் செத்துச் செத்துப் பிழைக்கும் தன்மைக்கும் இட்டுச் செல்லும். எமது சமூகத்தில் இன்னொரு பிரிவினரையும் இனங்காண முடியும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் பொதுசனத் தொடர்பு ஊடகங்களில் வரும் புதுப்புதுப் பாணிகளை அவை தமக்கு ஒவ்வாது விடினுங் கூட கைக்கொள்பவர்கள். ஒற்றைத் தோட்டுடன், தலை முடியை நீளமாக வளர்த்துக் கொண்டு வலம் வரும் ஆண் பிள்ளைகள், அங்கங்கள் அச்சொட்டாக அல்லது அசிங்கமாக வெளித் தெரியும் வகையில் இறுக்கமாக உடையணியும் பெண் பிள்ளைகள் கூட சமூகத்தின பார்வையில் அச்சாப் பிள்ளைகளே சீர்திருத்தச் சிந்தனைகளை நினைக்காத வரை---!

குழப்பன்காசிகள் 
சீர்திருத்தவாதிகள், புரட்சிக்காரர், தீவிரவாதிகள், ஹிப்பீஸ், குற்றவாளிகள், திருடர்கள் எனப் பலதரப்பட்டவர்களாக இனங்காணப்படும் இவர்களை இரு பெரும் பிரிவினராக வகைப்படுத்த முடியும். எதையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் சீர்திருத்தவாதிகள் செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். மாறாக எதையும் சிதைத்து விடுபவர்கள் கிளர்ச்சிக்காரர், குற்றவாளிகள், மனமுறிவாளர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். சமூகம் ஏன் திருந்த வேண்டும் என்ற தமது நியாயப்பாட்டுக்கு காரணம் சொல்லும் வல்லமையுள்ளவர்கள் சீர்திருத்தவாதிகள் எனப்படுகின்றனர். அகிம்சை வழிக்கே முன்னுரிமை வழங்கும் இவர்கள் எதுவும் முடியாத போதே மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். அதைவிடச் சற்று மேலே போய் ஷஅடி உதையே அண்ணன் தம்பி திருந்த வழிஷ என்று தீர்வுகளுக்கு வன்முறைகளையும் வழிமுறையாகப் பிரயோகிப்பவர்கள் செயற்பாட்டாளர் எனப்படுகின்றனர். சமூகம் திருந்த வழிவகைகளைக் கூறும் திராணியற்ற அதேசமயம் கண்மூடித் தனமாகக் கண்டதையும் நொருக்குபவர்கள் கிளர்ச்சிக்காரர்கள் எனப்படுகின்றனர். சமூகத்தை 'திருத்த முடியாத கழுதைகள்' என முடிவெடுத்து விரக்தியடைந்து அதன்மூலம்   எதையும் சாதிக்கும் வல்லமையிழந்து துர்ப்பழக்கங்களுக்கு ஆளாகுபவர்கள் மனமுறிவாளர் எனப்படுகின்றனர். இவர்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சீர்திருத்தவாதிகள்---(Reformers)
பேச்சும் தோற்றமும் மரபுக்கு உட்படும் அதேசமயம் சிந்தனைகளும் நடத்தையும் புரட்சிகரமாக இருப்பவர்கள் சீர்திருத்தவாதிகள் எனப்படுகின்றனர். புரட்சிக்காரர், தீவிரவாதிகள், போராளிகள் போன்ற சொற்பதங்கள் இத்தகையோருக்கெனத் தோன்றியவையே. தனது வாழ்க்கையை மட்டுமன்றி சமூக உறுப்பினர்களின் வாழ்க்கையையும் முன்னேற்ற, திருத்தியமைக்க, செப்பனிட விரும்புபவர்கள் இவர்கள். வளரிளம் பருவத்தினரிடம் காணப்படும் காணப்படும் எதிர்ப்புணர்வை நேர்க்கணியமாக நோக்கின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்கும் ஆற்றல், நிலைமைகளைச் சீர்திருத்திவிடும் ஆற்றல், முன்னேற்றமடையச் செய்யும் ஆற்றல் மற்றவர்களிலும் பார்க்க  தனக்கு உண்டு என்ற உண்மையான நம்பிக்கை இவர்களை சீர்திருத்தவாதி என்ற நிலைக்கு இ.ட்டுச் செல்கின்றது. சமூகத்தின்; ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களில் பிழை கண்டுபிடிப்பதுடன் நின்று விடாது  வடிவங்களைச் சீர்;ப்படுத்துவதற்கு ஆலோசனை சொல்லும் வல்லமையும் இவர்களுக்கு உண்டு. பொதுவாகவே சீர்திருத்தவாதிகள் அமைதியும் ஆழமும் மிக்கவர்கள். சிறுவயதில் ஷஅமசடக்கிஷ எனப் பெயரெடுப்பவர்கள். எதையும் கண்டும் காணாதது போல் காட்டிக் கொள்ளும் இவர்களின் பார்வையிலிருந்து எதுவுமே தப்புவதில்லை. உலகமே இடிந்து விழுந்தாலும் பதட்டப்படாதவர்கள் போன்று புத்தகத்துக்குள் தலையை நுழைத்துக் கொள்ளும் போக்கை இவர்களிடம் சிறுவயது முதலே அவதானிக்கலாம். ஆக மிஞசிப் போனால் தமது எதிர்ப்புணர்வை மூஞ்சியை நீட்டுதலுடன், சிறு முணுமுணுப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்ளும் இவர்கள் வாய்த்தர்க்கங்களைக் கூட மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கைக்கொள்வர்

ஆரம்ப காலங்களில் 'உதவாக்கரை' களின் பட்டியலில் இவர்களைச் சமூகம் உள்ளடக்கி ஒதுக்கி வைத்தாலும்; இவர்களது சீர்திருத்தச் சிந்தனைகள் சமூகத்தை ஆரோக்கிய பாதையில் இட்டுச் செல்லும் ஒரு சந்தர்ப்பத்தில்;  சமூகத்தால் மாலையிட்டுக் கௌரவிக்கப்படுபவர்களும் இவர்கள் தான். இவர்களது சிந்தனைகள் ஏனையோரைப் பொறுத்து நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக உணரப்பட்டாலும் கூட தற்போது சமூகத்தில் நிலை கொண்டிருக்கும் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி சமூகத்தில் மாற்றம் தேவை என்று இவர்கள் மற்றவர்களில்  ஏற்படுத்தும் விழிப்புணர்வு பலவீனங்களை இல்லாதொழித்து முன்னேற்றத்தை கொண்டு வர பெரிதும் உதவக் கூடியதொன்று. ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கெர்டுத்து போராடிய இராஜாராம் மேகன்ராய், அம்பேத்கார், பெண் சுதந்திரம் வேண்டி நின்ற பெரியார் போன்றவர்களை இவர்களுக்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்..

செயற்பாட்டாளர் ( Activists)
சீர்திருத்தவாதிகளைப் போலன்றி மாற்றங்களைக் கொண்டுவருவதற்குச் சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளப்படாத ஆக்கிரமிப்புச் சார்ந்த வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் இவர்கள்;. எல்லாச் செயற்பாட்டாளரும் சீர்திருத்தவாதிகளாக இருக்கலாம். ஆனால் எல்லாச் சீர்திருத்தவாதிகளும் செயற்பாட்டாளராக இருப்பதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம். வளரிளம் பருவத்துப் பிள்ளையின் செயற்பாடு அதன் நண்பர் குழாமினால் ஏற்றுக்கொள்ளப்படும் போது சமூக ரீதியில் அவர் செயற்பாட்டாளராக மாறும் தன்மையை வலுப்படுத்துகின்றது. சமூகத்தின் 'பத்தாம்பசலித்தன' த்தை நீக்கி சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஒரே வழி செயற்படுவாதம் தான் என்ற நம்பிக்கையே சமூகம் சார்ந்து ஏற்படும் விரக்திகளிலிருந்து இவர்களை விடுபட  வழி சமைக்கும். மாறாக  தனது சுயதிருப்திக்காக மட்டும் செயற்படுவாதத்தை இவர்கள் பின்பற்றினால் செயற்பாட்டாளர்களினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றுதலானது இவர்களுக்குத் தற்காலிக திருப்தியையே தரும். பெரும்பாலான பெண்ணிய இயக்கங்கள் சீர்திருத்தவாதிகளை விட செயற்பாட்டாளரையே அதிகம் கொண்டிருப்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று. தமது சிந்தனைகளுக்கு ஆர்ப்பாட்டங்கள் மூலம் செயல் வடிவம் கொடுக்க விரும்பும் இவர்கள் விரும்பிய பலனைப் பெறாத பட்சத்தில் மேலும் தீவிரமாகிப் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

கிளர்ச்சிக்காரர் (Rebels)
இத்தகையோர் தமது எதிர்ப்பணர்வுக்கான சரியான காரணத்தைத் தெளிவுபடுத்துவதில்லை. ஷஇது சரியில்லைஷ ஷஎன்னால் முடியாதுஷ என்ற கூற்றுக்கள் மூலம் சமூக எதிர்பார்ப்பை மறுத்துவிடுவதைத் தவிர மேலதிகமாக இவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஒழுங்குகள் நியமங்களை மொட்டையாக மறுத்துவிடும் போக்குக் காரணமாக ஷசகிக்க முடியாததுஷ ஷஏற்றுக்கொள்ள முடியாததுஷ எனக் கருதும் எந்தவொரு நிலைமைக்கும் பரிகாரம் காணும் வல்லமையை இவர்கள் இழந்துவிடுகின்றனர். வால் இருக்கத் தும்பியைப் பிடித்த கதையாக வேலை நிறுத்தங்கள், பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் கண்ணாடிகள், மேசை, கதிரை போன்றவற்றை அடித்து நொருக்குதல் இத்தகைய மனோபாவத்தின் வெளிப்பாடுகளே. இக் கிளர்ச்சி மனோபாவம் உச்சக்கட்டமடையும் போது ஷஏவல் பேய் கூரையைப் பிடுங்கியஷ கதையாகக் கண்டதையும் அடித்து நொருக்குதல், தீயிட்டுக் கொழுத்துதல் போன்ற செயற்பாடுகளை இவர்கள் மேற்கொள்வர். இவர்களது செயற்பாடுகள் மேலும் தீவிரமடையும் போது தன் மீது தனக்கே நம்பிக்கையீனம், எடுத்ததற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் மனோபாவம் போன்றவற்றால் மனமுறிவாளராக இவர்கள் மாறிவிடுகின்றனர.;

மனமுறிவாளர் Alienators)

இவர்களுக்கு ஆதரவான காரணங்களை விட எதிரான காரணங்களே மிக அதிகம். சமூகத்தைத் திருத்துவதற்கு தமது சொந்த அனுபங்களிலிருந்து அர்த்தம் காண முயல்பவர்கள் இவர்கள். சமூக ரீதியில் நல்லது கெட்டதைப் பற்றிச் சிந்திக்கும் தன்மையற்ற, தன்முனைப்புள்ள இவர்கள் தமது தனித்துவம், சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எதையும் மதிப்பிட முயல்கின்றனர். அதன் மூலம் எதையும் சாதிக்கும் திராணியற்றுக் குடிப்பழக்கங்களுக்கு அடிமையாகிக் குற்றவாளிகளாக மாறும் தன்மை இவர்களிடம் அதிகமாகும். தான் வாழும் சமூகத்திற்கு எந்தவிதப் பங்களிப்பும் செலுத்த முயற்சிக்காத இவர்கள் சமூகம் தனக்கு உதவவேண்டும், தன்னில் அனுதாபப் படவேண்டும் என் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள். விதிகள், ஒழுங்குமுறைகள் சட்டங்கள் போன்றவை அடுத்தவர்கள் மதிப்பதற்காகவேயன்றி  அவற்றை மதிக்க வேண்டிய அவசியம் தமக்கில்லை என்பதை நியாயப்படுத்துபவர்கள். சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளாதபோது அதற்காகக் கொதித்தெழும் இவர்கள் தமது கட்டுமீறிய நடத்தை காரணமாக மேலும் சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றனர். காலப்போக்கில் எட்டாப் பழம் புளிக்கும் என்ற கருத்துநிலைக்கு மாறும் இவர்கள் இதனால் மேலும் பாதிக்கப்பட்டு விரக்திநிலைக்கு மாறுகின்றனர்.

கோலங்களின் மூலங்கள்
கண்ணில் எதிர்ப்படுவோரைக் கேள்வி மேல் கேள்வியால் துளைத்தெடுக்கும் பருவம்  குழந்தைப்பருவம் என்பதைப் புரிந்து கொள்ளாது வாழ்க்கையைப் பற்றியோ நாட்டு நடப்புகளைப் பற்றியோ குழந்தையிடம் கருக்கொள்ளும்; வினவல்களைக் ஷகிழட்டுக்கதைஷ யாக்கிக் குழந்தைப்பருவத்தின் ஆராய்வூக்கத்துக்கு பூட்டுப் போடும் பத்தாம்பசலிப் பெற்றோருக்கு பிள்ளையாகப் பிறப்பவர்கள் அறிவு வளர்ச்சி தடைப்பட்ட மிகப்பெரும்; பாதிப்பானது வெளித்தெரியும் வாய்ப்பின்றி ஒன்றில் பெற்றோரைக் கனம் பண்ணும் ஷநல்லஷ பிள்ளைகள் என்ற தகுதிப் பத்திரத்துடன் வளர்ந்தோர் உலகிற்குள் நுழைந்துவிடுகின்றனர். அல்லது ஷ அப்படிச் செய்யாதே--- இப்படிச் செய்யாதே--- என்று போடும் கட்டுப்பாடுகளின் பயனை அவர்களையே திரும்ப அனுபவிக்கச் செய்யும் ஓர்மத்துடன் கட்டுப்படுத்த முடியாதவர்களாகத் தலையிடிக்குரியவர்களாக மாறுகின்றனர்.
பெற்றோர் அல்லது ஆசிரியர் விடும் தவறுகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுவதில் ஏற்படும் சுய திருப்தி, அடுத்தவர்களின் கவனத்தைத் தன்பால் திருப்பும் நோக்கில் முற்போக்கான கருத்தையோ அல்லது தீவிரமான கருத்தையோ முன் வைக்கும் தன்மை, தமது சகபாடிகள் முன்னே தனது தரத்தை உயர்த்தும் நோக்கில் கொம்புத் தேனைக் கொண்டு வருவேன் என்ற சூளுரைப்புகள்--- குழப்பன்காசிகளின் உருவாக்கத்துக்கு இப்படிப் பல காரணங்களைக் கூறமுடியும்
.
உடல் சார்ந்த அதீத வளர்ச்சியும் முதிர்ச்சியும், பாடசாலைச் சுழல்கள், வீட்டுச்; சுழல்கள்  பொதுசனத் தொடர்பு ஊடகங்களின் தாக்கங்கள் போன்றன மேற் கூறப்பட்ட நான்கு வகை குழப்பன்காசிகளின் உருவாக்கத்துக்கு மூல காரணங்களாகக் கொள்ளப்படுகின்றன எனினும் இதற்கு அதுதான் காரணம் என்று அறுதியிட்டுக் கூறமுடியாதவாறு அனைத்துக் காரணிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதானது இது தொடர்பான சமூகவியலாளர், உளவியலாளர் மானுடவியலாளர் போன்றோர் ஒன்றிணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

ஆட்டங்காணும் அத்திவாரம்
மனமுறிவுகள் எதிர்ப்புணர்வுகள் முதலில் வீட்டிலேயே கருக்கொள்கின்றன.
குழந்தையின் ஆராய்வூக்கத்துக்குக் காரண காரியத் தொடர்புடன் தீனி போடக்கூடிய, ஒரு செயற்பாட்டை ஏன், எப்படி, எங்கே, எப்போது, யார் செய்தால் நன்று என்பதில் தெளிவைத் தரக் கூடிய கருத்தியல்; முழுமை கிடைக்கும் வாய்ப்புள்ள குடும்பங்களில் வாழும் பிள்ளையிடம்  தன்னுணர்வை விடவும் சமூக உணர்வு மேலோங்கிச் சமூகத்தின் ஒவ்வாமைகளை விலக்கிக் கொள்வதற்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யவேண்டும் என்று மனதில் ஏற்படும் உத்வேகம் அவர்களைச் சீர்திருத்தவாதியாக்குகின்றது.

குழந்தையின் கேள்விகளுக்குக் காரண காரியத் தொடர்புடன் பதில் சொல்லும் வகையில் தனது அறிவுத் தளத்தை மாற்றியமைக்கவோ அல்லது செப்பனிடவோ முயலாது தாம் பத்தாம் பசலிகள் இல்லை என்பதை மட்டும்  வெளிப்படுத்தும் ஒரே எண்ணத்துடன்; குழந்தையை அதன் போக்கில் விட்டு வளர்க்கும் நவீன மேலைத்தேய முறைகளின் சாதக பாதகங்களை விளங்கிக்கொள்ளாது கண்மூடித்தனமாக அவற்றை அட்சரம் பிசகாது அப்படியே கைக்கொள்வதன் மூலம் குழந்தையின் வினவல்களுக்கு பதில் சொல்லும் வகையற்று ஒன்றில் ஷதிருதிருஷவென்று முழிக்க அல்லது ஏதாவது சொல்லி மழுப்ப குழந்தை ஒன்றில் இவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பைக் குறைக்கிறது. அல்லது இவர்களைவிட தனக்கு ஷகனக்கஷத் தெரியும் என்ற உயர்வு மனப்பாங்குக்குச் சென்று இவர்களைக் கண்டபடி கட்டுப்படுத்த விழைகிறது.

குழந்தையை அதன்போக்கில் விட்டு வளர்க்கும் மேலைத்தேய முறையைத் தவறாக விளங்கிக்கொண்டு தன்விருப்பப்படியே சாப்பிட, விளையாட, தூங்கப், படிக்க வசதி செய்து தரும் குடும்பங்களில் வாழும் பிள்ளை வீட்டுக்கு உள்ளே இருப்பது போன்று வீட்டுக்கு வெளியேயும் தன் விருப்பப்படி உலகத்தை வளைக்க முயல்கிறது. முயற்சி வீணாகும் போது கிளர்ச்சி செய்கிறது. கிளர்ச்சி பலனற்றதாக மாறும் நிலையில் விரக்தியடைந்து வீணாகிப் போகின்றது.

நேரில் பார்த்த வீதிச் சண்டையையோ அல்லது சினிமாப் படத்தின் அடிதடியையோ பிள்ளைகளுக்கெதிரே நியாயப்படுத்தும் பெற்றோருக்கு வன்முறையே வழி என்ற சிந்தையுள்ள பிள்ளை உருவாகுதல் தவிர்க்க முடியாததாகின்றது. ஷ அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் முன்வரிசையில் இருந்து---ஷ என்று அரசியல் கட்சிக் கூட்டங்களில் தான் ஈடுபட்டது பற்றி கதையாக அளக்கும் தகப்பனமார் மாணவர் போராட்டம் என்றவுடன் மட்டும் வீட்டுக்குள் தம்மைச் சிறைப்படுத்தும் மர்மம் என்ன என்று பிள்ளையிடம் இயல்பாக எழும் வினவல் தரும் எதிர்ப்புணர்வு ஆரம்பத்தில் முணுமுணுப்பாகத் தொடங்கி வாய்த்தர்க்கமாக நீளுகின்றது. பொய் சொல்லித் தன் காரியத்தைத் தொடரும் மனப்பாங்கை உருவாக்குகின்றது. கண்டதற்கெல்லாம் முதுகுத் Nதூல் உரிக்கும் தகப்பன் முன்னே தனது எதிர்ப்புணர்வைக் காட்டும் வலுவின்றிக் கூழைக் கும்புடு போட்டுவிட்டு தமக்கு இளைய சகோதரர்களைக் கண்டபடி நொருக்குதல் வீட்டுக்கு வெளியே சண்டித்தனம் செய்து பேரெடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது.

அனைத்தையும் மாற்றும் சகவாசம்
கூட்டாளிகள் என்று வரும் போது இப்பருவத்தினரின் பிரதான நோக்கம் தமது கூட்டாளிகளின் மத்தியில் தமக்கென அங்கீகாரம் ஒன்றைப் பெறும் வகையில் நடையுடை பாவனையில் மட்டுமன்றிக் கதை பேச்சிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது தான். கூட்டாளிகள் மத்தியில் நிரந்தர இருப்பை ஏற்படுத்தும் வல்லமை பொருளாதார வசதியில் அதிகம் தங்கியுள்ளது. அரச உத்தியோகம் பார்க்கும் தனது தோழனின் அப்பா போன்று இல்லாமல் தனது அப்பன் கூலித் தொழில் செய்பவராக அல்லது தோட்டம் செய்பவராக இருக்கிறாரே என்ற கவலை அடிக்கடி மனதை வாட்டும். வீட்டின் அமைப்புத் தொடக்கம் அதன் பரிமாணம் அது உள்ளடக்கும் தளபாடங்கள், அவற்றின் பெறுமதி, நேர்த்தி, ஒழுங்கமைப்பு, சமையலறை, குளியலறை வசதிகள் போன்றவை தொடர்பான அதிக சிரத்தை எல்லாப் பருவத்தினரையும் விட இவர்களுக்கே அதிகமாகும். தம்மிடம் உள்ள வசதிகள் ஒவ்வொன்றும் சகபாடிகள் வட்டத்தில் உள்ளவர்களின் வசதிகளுடன் ஒப்பிடப்பட்டு குறைகளே அதிக கவனத்தில் எடுக்கப்பட்டு இவற்றின் வெளிப்பாடுகள் சிணுங்கல்கள், முணுமுணுப்புகள், விரக்திகள் எனப் பல வடிவங்கள் எடுக்கின்றன.
மதிய உணவாகப் பிட்டும் முட்டைப் பொரியலும் சமைத்துக் கட்டிக் கொடுக்கக் கூடிய பொருளாதார வசதியும் சுவையாகச் சமைக்கும் அம்மாவும் இருந்தாலும் சக தோழி கொண்டு வரும் ஷசான்விச்ஷ மாதிரி அம்மாவுக்குச் செய்யத் தெரியவில்லையே என்ற ஏக்கம் முதலில் முகத்தைக் கோணலாக்கி வீட்டை அலங்கோலமாக்கி இறுதியில்; முழமையாக மனதைக் கோணலாக்கும். இதுவே மாறி சகதோழன் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவது பொறுக்காது தானும் மதிய உணவை ஒறுக்கும் தன்மையை வளர்க்கும்.

தலைமுறை இடைவெளி
இரண்டு தலைமுறைகளுக்கிடையில் மனப்பாங்கு தொடர்பாக ஏற்படும் வேறுபாடு அல்லது புரிந்துணர்வின்மையே தலைமுறை இடைவெளி எனப்படுகிறது. இன்னும் விரிவாகச் சொல்வதாயின் மனப்பாங்கு, நடத்தை போன்ற அம்சங்களில் வயதில் மூத்தோருக்கும் இளையோருக்கும் இடையில் ஏற்படுகின்ற கருத்து பேதங்கள், தர்க்கங்கள் போன்றவற்றின் வெளிப்பாடுகளைக் குறிப்பதற்கு இப் பதம் பயன்படுத்தப்படுகின்றது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையிலான வயது வேறுபாட்டின் அடிப்படையிலேயே இத்தகைய பேதங்கள் உருவாகின்றது எனினும்; மரபு ரீதியான சமூகங்களில் வயதினடிப்படையிலான தலைமுறை இடைவெளியானது இன்றும் குறைவானதாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. 30 வயதுக்குப் பின்னர் தாய்மையடையும் கல்வி வாய்ப்பைப் பெற்ற நடுத்தர வர்க்கப் பெண்ணை விடவும் கல்வி பெறும் வாய்ப்பற்ற 15 வயதில் தாய்மையடையும் தொழிலாள வர்க்கப் பெண்ணுக்கும் அதன் குழந்தைக்குமிடையிலான வயது இடைவெளி சரிபாதி குறைவானதாகும். எனினும் நடுத்தரவர்க்கப் பெண் எதிர்கொள்ளும் தலைமுறை இடைவெளி சார்ந்த பாதிப்புக்களை அப் பெண் பெற்றுக் கொள்ளும் கல்வியறிவின் துணை கொண்டு குறைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு. எனவே வயது அடிப்படையிலான தலைமுறை இடைவெளி பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாத போதும் வளரிளம் பருவத்தினர் தமது பெற்றோரை எதிர்ப்பதற்கான காரணம் எது என்பதை கண்டறிதல் முக்கியமானதொன்றாகும். இங்கு தான் பண்பாடு சார்ந்த தலைமுறை இடைவெளி என்ற கருத்துநிலையின் தோற்றப்பாட்டை  இனங் காணும் வாய்ப்பு எமக்கு உண்டாகிறது. எந்தவொரு சமூகத்திலும் தலைமுறைகளுக்கிடையிலுள்ள பதற்ற நிலையின் அளவு சமூக தொழினுட்ப வேகத்துடனும் சிக்கல் தன்மையுடனும் நெருங்கிய தொடர்புடையது.  அறிவியல் தொழினுட்ப மாற்றங்களினால் அண்மைக்காலங்களில் உலக சமூகங்களின்; முழு வாழ்க்கை வடிவங்களும் புதிய விழுமியங்கள் புதிய ஆர்வங்களுடன் துரித மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதே பண்பாடு சார் தலைமுறை இடைவெளி என்ற கருத்துநிலையின் தோற்றத்துக்கு பிரதான காரணமாகும். புலமைப் பரிசில்கள், புலம்பெயர் வாழ்வு போன்றவற்றின் காரணமாக வெளிநாடுகளில் உயர் கல்வி பெறும் வாய்ப்பு, பொது சனத் தொடர்பு ஊடகங்களின் உலகளாவிய பாவனை, மிகக் குறைந்த செலவுடன் கூடிய உலகச் சுற்றுலாக்கள் போன்றன பெற்றோரும் அவர்களது குழந்தைகளும் தத்தமது ஆர்வங்களையும் விழுமியங்களையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையைச் சிக்கலாக்கி விட்டிருக்கின்றன.

பாதிப்புக் குறைந்தவர்கள்
நிலையான சமூகக் கட்டமைப்பும், இறுக்கமான விதிகளும் நிலை கொண்டிருக்கின்ற சாதாரண கிராமிய சமூகங்களில் உள்ள வளரிளம் பருவத்தினரைப் பொறுத்து இவர்கள் ஸ்ரான்லி ஹோல் குறிப்பிடுவது போன்று எந்தவொரு அமைதியற்ற சிக்கல் நிறைந்த காலகட்டம்ஜீநசழைன ழக ளவழசஅ யனெ ளவசநளளஸ எதனையும் எதிர் கொள்ளாமலேயே முதிர் பருவத்துக்குள் நுழைந்து விடுகின்றனர். இத்தகைய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைப் பங்கும், அதன் தொடர்புத் தன்மைகளும் தெளிவாக வரையறைப் படுத்தப்படுவதுடன்  வாழ்க்கையானது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஒரு தொடர்புத் தன்மையுடனேயே நகர்கிறது. எனவே தலைமுறை இடைவெளி என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவோ, பாதிப்பு தெளிவாக இனங்காணப்படாத தொன்றாகவோ தான் இருக்கிறது. எமது சமூகத்தைப் பொறுத்தவரைக்கும் கல்வி அறிவில் உலகின் வளர்ச்சியடைந்த சமூகங்களுக்கு இணையானதாகக் கருதப்படினும் கூட இறுக்கமான பண்பாட்டு விழுமியங்களால் அரண் செய்யப்பட்டிருக்கும் வாழ்க்கையமைப்புக் காரணமாக தலைமுறை இடைவெளி தொடர்பான தாக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இனங்காணப்பட்டிருக்கின்றன. பெற்றோரின் தோற்றம், உரையாடும் பாங்கு, உணவு உட்கொள்ளும் போது கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள், ஒருவரையொருவர் உபசரிக்கும் விதம், சமூக விவகாரங்களில் பங்களிப்பு செய்யக்கூடிய ஆற்றலின்மை, தமது செயற்பாடுகளுக்கு அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் என்பன  மாற்றியமைக்கப்படவேண்டும் போன்ற விருப்பங்கள் இத்தகைய சமூகங்களில் தலைமுறை இடைவெளி தொடர்பாக ஏற்படும் தாக்கங்களில் சிலவாகும்.. குடும்ப ரீதியில் அழுக்கு வேட்டியும், நைந்த சால்வையுமாகத் தெருவோரத் திண்ணையில் அரட்டையடிக்கும் தகப்பனை அவமானமாகக் கருதுதல், தமது தோழர்களைச் சரியான வகையில் வரவேற்கத் தெரியாது திண்டாடும் தாயைச் சாடுதல,;  வெளிறிய, அழுக்கான ஆடைகளுடனும், கலைந்த தலையுடனும் திரியும் சகோதர்களைச் சாடுதல் , பாடசாலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான திருப்தியின்மை  போன்ற சிறுசிறு எரிச்சல்கள், வாய்த் தர்க்கங்களுடன் தலைமுறை இடைவெளியின் தாக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன. அழுக்காகத் திரியும் சகோதரர்களை இழுத்து வைத்துத் தலை வாரிவிடுதல், குளிப்பாட்டி விடுதல், அடிக்கடி வீட்டைக் கூட்டுதல், தளபாடங்களை அடிக்கடி இடம் மாற்றி வைத்தல், மத அனுட்டானங்கள்  தொடர்பான மாற்றங்களை அவாவி நிற்றல் போன்றவற்றை இவர்களிடம் காண முடியும்.

பரிதாபத்துக்குரியவர்கள்---
மாறாக, தொடர்ச்சியான முறையில் மாற்றங்களைச் சந்திக்கின்ற , உள்வாங்குகின்ற, சரிப்படுத்த விழைகின்ற,, திருத்தம் மேற்கொள்கின்ற நவீன சமூகங்கள்pல் தலைமுறை இடைவெளி மிக அதிகமானதாகும். உண்ணுதல், உறங்குதல், பொழுது போக்குதல்,; என்பவற்றுக்குக்கூட நேர அட்டவணை தயாரித்து அதன்படி வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை முறையில் பம்பரமாகச் சுழலும்; நகரமயமாக்க சமூகங்களில் வாழும் பெற்றோர்கள், உடன்பிறப்புகளின் கவனத்திலிருந்து பெரும்பாலும் விடுபட்டுப் போகும் வளரிளம்பருவத்தினர் தமக்கெனச் சொந்தமாக ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொள்ளும் போக்கும், இச் சமூகமானது வெறியெழுச்சி கொண்டதாக, தமக்கெனச் சொந்தமான கட்டமைப்பை, நியமங்களை, ஒழுங்குமுறைகளை, சடங்குகளை, தாம் பின்பற்றக்கூடிய குழுக்களை, தமக்கென ஒரு அந்தஸ்தை, தண்டனைகளை கொண்டதாக இருப்பதும் தவிர்க்கமுடியாததாகின்றது. மரபு ரீதியான சமூகங்களில் வறுமை, போசாக்கின்மை, கல்வியின்மை, சடங்கு சார்ந்த வன்முறைகள், குழந்தைத் திருமணம் போன்றவை வளரிளம் பருவத்தினரைப் பாதிப்பனவாக இருக்கும் அதேசமயம் நவீன சமூகங்களில் போதைப்பொருள் பாவனை, கொலை, கொள்ளை, முறைகேடான பாலுறவு போன்ற நெறிபிறழ் நடத்தைகள் போன்றவற்றுக்குள் இலகுவாக ஈர்க்கப்படுபவர்களாக இவர்கள்  மாறுகின்றனர்.. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான இடைவெளியானது எதிர்ப்புணர்வாகத் தோற்றங் கொள்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் தாம் நினைத்தபடி வீட்டை விட்டு; வெளியேறுதல்;, வீட்டுக்குத் திரும்புதல், சகோதரர்களுடன் கடுமையான வாய்த் தர்க்கங்களில் ஈடுபடுதல், கண்டபடி கூச்சலிடுதல், பொருட்களை வேண்டுமென்றே உடைத்தல், உறவினர்களுடன் கடுமையாக நடத்தல் போன்ற அசாதாரண நடத்தைக்கோலங்களிலிருந்து படிப்படியாகத் தொடங்கும் நெறி பிறழ் நடத்தையானது சில சமயம் தாக்குதல் , கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு போன்ற தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டுச் சிறை செல்லும் நிலைமைக்கும் இட்டுச் செல்கிறது. வளரிளம் பருவத்தின் ஆரம்பக் கட்டத்தினரான 13-14 வயதுக்குரியோர் களவு, கொள்ளை, ஏமாற்றுதல் போன்ற சொத்துக்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடும் அதே சமயம் முடிவுக் கட்டத்துக்குரியவர்கள் பாலியல் வல்லுறவு, பாலியல் ஒழுங்கீனங்கள், தற்கொலை முயற்சி போன்ற மனிதர்;களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆண்களைப் பொறுத்து இத்தகைய குற்றங்கள் களவு, ஒழுங்கற்ற நடத்தை, கொள்ளை, சொத்துகளை அழித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல், போதைப்பொருள் பாவனை, மனிதர்களுக்கு தீங்கு விளைவித்தல் போன்றவையாக இருக்கும் அதேசமயம் பாலியல் ஒழுங்கீனங்கள் , வீட்டை விட்டு ஓடுதல், சிறு சிறு களவுகள், சீர் கேடுகள் போன்றவை பெண்கள் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

No comments: