Sunday, March 02, 2014

அழைப்பு மடல்?



உங்கள் அப்பாவின் புகுந்த ஊர்
அதிசயங்களை
அவர்கள் சொத்தெனக் கொள்ளும்
பாரம்பரியங்களை
அருங்காட்சியகங்களில்; கண்டு
விழிமலர்த்தி ஆச்சரியப்படும்
உங்கள் விம்பங்களை
முகநூலில் காண்கிறேன்.

நாளுக்கு நாலு தரமாவது
வெத்திலை போடாவிட்டால்
'பொச்சம்'  தீராத
தன் அம்மாவின் இடுப்புச் சீலைக்குள்
எப்போதும் இருந்ததாம் என்று
என் மாமா பத்திரமாய்  தந்த
உங்கள் கொள்ளுப் பாட்டியின்
வெத்திலைப் பணிக்கமும்
வெத்திலைச் செல்லமும்

பக்கத்து வீட்டு மணிக் குஞ்சியிடம்
கெஞ்சிக் கூத்தாடி அப்பிக் கொண்டு வந்த
அந்தப் பித்தளைப் பாக்குரலும்;

சித்தி வீட்டு கோடிக் கிளுவையில்
அனாதரவாகத் தொங்கி
'மம்மல்' பொழுதொன்றில்
யாருமறியாது என் வசமாகிய
உங்கள்; பூட்டியின் தூக்குவாளியும்

அயலட்டைக்கு பால் அளக்கவென
உங்கள் பூட்டன் வைத்திருந்த
அரையடி உயர மூக்குப் பேணியும்

பாரம்பரியங்களை பத்திரப்படுத்தும் நோக்கில்
எங்களுர் பழைய பாத்திரக்கடையில்
பேரம் பேசி பாதி விலையில் அமுக்கிய
பழங்கால தூண்டாமணி விளக்கும்
பேரம் பேசும் திராணியற்று
ஆமர் வீதிச் சந்தியில் அறாவிலையில் வாங்கிய
அலங்கார வெத்திலைத் தட்டமும்

எங்களுர் கோவில் திருவிழாவுக்கென
வருடம் தோறும் வருகை தந்து
சரஸ்வதி ரீச்சர் வீட்டில் சிரம பரிகாரம் செய்யும்
யானை உண்ட விளாங்கனியில்
அற்புதமாய் என் சித்தப்பன் செய்து
ஆசையுடன் உங்கள் அப்பன்
உருட்டி விளையாடிய பம்பரமும்

அநாகரிகம் என்று நினைத்து
'பழையகோட்' காரனுக்கு
'அடிமாட்டு' விலையில் தள்ள எண்ணி
உங்கள் அம்மா கோடியில் தூக்கிப் போட்ட
பித்தளைக்குடமும் குத்துவிளக்கும்
அரியண்டம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட நானும்

பத்திரமாகத்தான் இருக்கின்றோம்;
அநாதரவான இந்த வீட்டின் அதிசயங்களாய்
எப்போது வருகின்றீர்கள்
இந்த அதிசயங்களைப் பார்ப்பதற்கு?

No comments: